
தொன்மங்களின் இருப்பியலுக்கான போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் இருப்பியல்கள் கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருத்தலியத்திற்கான முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை கருக்களாக்கி, எமக்கான அரசியல் வெளியினை வெறும் வார்த்தைக் காற்றுகளால் நிரப்புவதை விடுத்து, தோல்விகளின் பாடங்களிலிருந்து வெற்றிக்கான பாடத்திட்டங்களை வரைந்து, எமது வரலாற்றை மீள எழுதவேண்டிய தேவை எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வெற்றுவெளியில் வெறும் சொற்கோலங்களைப் போடவேண்டிய திண்மையான வரலாறு இல்லாத இனமல்ல நாம். போர்க்களங்களின் தடங்கள் விரவிக்கிடக்கின்ற நீண்ட நெடிய வீர வரலாறு எமக்கென்று பதியப்பட்டிருக்கிறது. போரின் விளைவுகளின் நிகழ்தகவுகள் வெற்றிக்கும் தோல்விக்கும் சமமாக பகிரப்பட்டிருக்கின்றபோதிலும், வெற்றி தான் கொண்டாடுவதற்குரியதாக இருக்கின்றது. வீரமென்பது வெற்றிபெறுதலை மட்டுமே குறிப்பதாகாது. தோல்வியின் வீழ்ச்சியிலிருந்து எழுவதும் வீரம் தான். எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியிடம் விழுந்துவிடாததும் வீரமாகவே கருதப்படுகிறது. வரலாற்றின் வெளிகளில் எம் இனம் மண்டியிடாத தடங்களை இப்பத்தி பதிவுசெய்கின்றது.
புறநானூறு என்கின்ற சங்கத் தமிழரின் வரலாற்றியலானது, போரியலை மட்டும் பேசவில்லை. போர் சார்ந்த ஒழுக்கவியலையும் தமிழரின் மறத்தினையும் போராற்றலையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கின்றது. மொழியின் இலக்கணங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியங்கள் கருத்தியலின் களங்களாகவும் இருந்திருக்கின்றன. படைப்பின் வெளியீட்டுத்தன்மையானது படைப்பாளியின் பிரதியை அதன் கால பரிமாணங்கள் கடந்தும் நுகர்வோன் நகலெடுப்பதிலேயே புலப்படும். தமிழர் வரலாற்றின் பிரதிகள் மறத்தை பேசுபொருளாகக் கொண்டவை. வெற்றிக்கும் வீரமரணத்திற்குமிடையிலான வெளியில் எந்தவொரு உப பிரிவும் இருக்கவில்லை. போரில் தோற்றானாயினும் தோற்பதற்குரிய அறிகுறிகள் வருமிடத்தும் அந்த வீரன் தன்னைத்தான் மாய்த்துக்கொள்கிறான். வீரனுடைய இறப்பும் அவனுடைய வீரமும் அவனைச் சார்ந்தோராலும் மன்னனாலும் கொண்டாடப்படும் விடயங்களாக இருந்திருக்கின்றன. மாறாக, புறமுதுகிட்டாலோ, அல்லது தோற்றுப்போய் திரும்பினாலோ இனத்தின் சாபக்கேடாக நோக்கப்படுகிறான்.
தொன்மங்களின் புனைவுகளை நியமங்களாகக் கருதமுடியாதெனினும் சம்பவங்களாகக் கருதலாம். மறத்தினாலும் மறத்தின் இயங்கியலாலும் கட்டியமைக்கப்பட்டிருக்கும் தமிழர் வாழ்வியலில் போர் என்பது மகிழ்வான கருத்தாக்கத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது. போருக்குப் போகும்பொழுதே எதிரிக்கு வஞ்சினம் உரைப்பதான பாடல்கள் பல காணப்படுகின்றன. வஞ்சினம் உரைத்தலென்பதன் உளவியலின் பின்னால், தீராக்கோபமும் பழிவாங்கும் உணர்ச்சியுமே இருந்திருக்க முடியும். மன்னன் வஞ்சினமுரைப்பதன் பின்னாலுள்ள அரசியல் அவன் தன்னையும் தன்சார்ந்த படையையும் வெற்றி என்ற இலக்கை நோக்கி செலுத்த விளைகின்ற ஆழ் உளவியலே ஆகும். பகைவனால் தன்னுடைய வீரமும் படைப்பலமும் கேள்விக்குள்ளாக்கப்படுதல் கண்ட அரசனுக்கு தனது படைத்திறத்தையும் வெற்றி என்ற ஓர்மத்தையும் முரசறைவிக்கவேண்டிய தேவை இருந்திருக்கிறது. போரில் பகைவரை வெல்லமுடியாதவிடத்து களத்திலேயே தங்கள் உயிரை விட்டு வரலாற்றில் நிலையாகிவிடுவார்கள். இவ்வாறு போர்க்களத்தில் உயிரை மாய்த்துக்கொள்வது அவிப்பவி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் வீரத்திற்கு குறியீடாகச் சுட்டப்படும் புலியானது அதன் வீரத்தினால் மட்டுமல்லாது, வெஞ்சினம் கொண்டு பகைமுடிப்பதிலும் தமிழர்களை ஒத்திருக்கின்றதென்ற வீரம் சார் வகைப்பாடு புலவர்களால் முன்நிறுத்தப்பட்டிருக்கின்றது. வீரம் என்பது வெற்றி என்பதையும் தாண்டி, மானத்தைச் சார்ந்ததாகவும் பதியப்பட்டிருக்கிறது.
“கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவன் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் “ ( புறம். 190)
ஒரு புலி தான் தாக்கிய பன்றியொன்று இடப்பக்கம் வீழ்ந்ததால் மான உணர்ச்சியால் தன் செயலுக்கு நாணி அதனை உணவாகக் கொள்ளாமல் யானை ஒன்றைத் தாக்கி வலப்பக்கத்தில் வீழச்செய்து பசியாறியது என உவமையாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்தப் புலி போன்ற ஒருவனையே தன் தோழனாக வரிக்கமுடியும் என பொருண்மொழிக்காஞ்சி கூறுகிறது. எதிர்ப்புக்கு மட்டுமல்ல நட்புக்கும் வீரத்தினை அளவுகோல்களாக வைத்திருந்தது எம் இனம்.
போருக்குச் செல்லக் கூடிய அரசன் ஓா் இலக்கை முன்மொழிந்து தனக்கான காலக்கோட்டையும் தானே தீர்மானித்து, அந்த காலக்கட்டுப்பாட்டினுள் நின்று அதனை அடையாத நிலையில் தான் பெறவிருக்கும் கெடுதலையும் உடன்மொழிவது வஞ்சினம் ஆகும்.இந்த வஞ்சினத்தைத் தொல்காப்பியர் காஞ்சித்திணையுடன் பொருத்தி வஞ்சினக்காஞ்சி என்னும் துறையாக அமைத்துள்ளார். காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.போரில் தனக்கோ அல்லது தம்மை எதிர்த்து வரும் பகைவருக்கோ ஏதோ ஒரு புறம் அழிவு உண்டு என்னும் நிலையாமையை உணா்த்துவதால் இத்துறை காஞ்சித் திணையின் கீழ் அடங்குகிறது.வஞ்சினக் காஞ்சி குறித்து,
“இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்” ( தொல்.பொருள்.புறத்.நூ – 19 )
என்று தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று பகலோ னிறவாமு னொன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பி–னென்று
மரணவியப் பாயு மடையார்மு னிற்பேன்
முரணவிய முன்முன் மொழிந்து”
அதாவது இன்று இரவு வரும் முன்னர் இந்தப் பகைவனை வெல்லமுடியாமற் போவேனாயின் களத்திலேயே விழுவேன் எனக் கூறும் இப்பாடலின் மூலம் “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்” களான மன்னர்களின் ஓர்மம் சுட்டப்படுகின்றது.“அதிரப்பொருவது” என்னும் அடைமொழியைக் கொண்டு குறிப்பிடப்படும் தும்பைத் திணையிலே பகை மன்னர்கள் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள். அவ்வாறானதொரு போரிலே வீரன் தன்னுயிரை இழந்துவிட்டானாயின் அவன் அழியாக் காவியமாகி விடுகின்றான்.
“மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே “ (புறம்.277:1-4)
என்ற பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது. மீனை உண்ணும் கொக்கினுடைய இறக்கைகளைப் போல வெள்ளையாக நரைத்துவிட்ட கூந்தல் கொண்ட முதிர்ந்த வயதுடைய தாய் தனது சிறிய மகன் யானை எதிர்த்துக் கொன்று மரணித்தான் என்கின்ற செய்தி கேட்டு பெற்றேடுத்த பொழுதை விடப் பெரியதாக மகிழ்ந்தாள் என்பது பதியப்பட்டிருக்கின்றது. இங்கே அந்த வீரனுடைய இறப்பானது அவனது உயிர் இழப்பாக கருதப்படாது வீரத்தின் பிறப்பாக கருதப்பட்டு கொண்டாட்டத்திற்குரியதாகிறது.
தமிழர் வாழ்வியலில் மன்னனும் அவன்சார்ந்த போர் வாழ்க்கையும் படைப்பு வெளிகளை நிரப்பி நிற்கின்றன. தமிழர் நாட்டினை ஒரே நாடாக கனவு கண்ட கரிகால் சோழன் என்னும் மன்னன் தொடர்பான பாடல்களும் கதைகளும் மண்டியிடாத வலுச்சேர்க்கின்றன. அவனது தந்தை இளஞ்சேட் சென்னி இறந்துபட்டபோது கரிகாலன் மிகவும் இளையவனாக இருந்தான். அரசைக் கைப்பற்றும் சூழ்ச்சியுடன் அவனுடைய தாய்வழி மன்னர்கள் அவனைச் சிறைப்பிடித்து வைத்தனர். புலிக்குட்டியானது கூண்டுக்குள்ளே இருந்து தன் வஞ்சினத்தை வளர்ப்பது போல கரிகால்சோழனும் சிறையிலிருந்து எதிரியை அழிப்பதற்கான தன் பலத்தினைப் பன்மடங்காக்கினான். என்று கரிகால் சோழனின் வீரமானது உயர்வு நவிற்சியினூடாக பதியப்பட்டிருப்பதைக் காணலாம்.
“கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்த்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரைக் கவியக் குத்தி குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு” (பட்டின. 221-224)
அதாவது புலிக்குட்டி கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. அதே போல கரிகாலனும் நெஞ்சு நிறைய விடுதலையையும் வெஞ்சினத்தையும் வளர்த்து, சிறை மீள்கிறான். ஆட்சியைப் பிடித்தவுடன் தன் பகைவர்களைக் குறிப்பாகத் தன்னை வஞ்சித்தோருக்குத் துணை நின்றவர்களை இல்லாதொழிக்கிறான்.
“ஆளி நல் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்
கிரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலு
மோங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
விருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
கண் ஆர் கண்ணி கரி கால் வளவன்” (பொரு 138)
“சிங்கத்தின் குட்டியானது தன் வலிமை குறித்து மிகுந்த செருக்கு கொண்டு தன்தாயிடம் முலைப்பால் குடித்தலைக் கைவிடாத இளம் பருவத்திலேயே முதன்முதலில் இரையைக் கொல்லும் தன் கன்னி வேட்டையிலேயே விரைந்து செயல்பட்டு ஆண்யானையைக் கொன்று வெற்றிகரமாக முடித்ததைப் போன்று கரிய பனந்தோட்டு மாலையும் வேப்பமாலையும் முறையே சூடிய இருபெரு வேந்தர்களாம் சேரனையும் பாண்டியனையும் ஒருசேர வெண்ணி என்னும் ஊரிலே போரிட்டுக் கொன்ற அச்சந்தரும் வலிய வீரத்தையும் முயற்சியையும் உடையவன் சோழன் கரிகாலன். என்கிறது பொருநராற்றுப்படை.
சிறையிலடைத்த எதிரிக்கு தன் வேலால் மறுமொழி சொன்ன கரிகாலனின் பரம்பரையில் வந்த எம் இனம் இன்று திறந்தவெளிச் சிறையில் கூட தன் பலத்தினை கூட்டமுடியாத அளவிற்கு வீரத்தின் இலக்கணங்களை மறந்தும் மறக்கடிக்கப்பட்டும் எதிரியின் நிழலில் பாதுகாப்பை தேடுகிறார்கள். தன்னை வஞ்சித்த மன்னர்களை மட்டுமல்லாது, அம்மன்னர்களுக்கு துணைநின்றவர்களையும் போருக்கழைத்து வெட்டிச் சாய்த்து, புலிக்கொடியை நாட்டியவன் கரிகாலன்.
கரிகால் சோழனின் எதிரிகள் அவனை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்திருந்தாலும் அவர்களின் வீரத்தையும் இலக்கியங்கள் பாடத்தவறவில்லை. வீரனுடன் போரிட்டவனின் வீரத்தை கூறுவது அந்த வீரனின் பேராண்மைக்கு இன்னமும் வலுச்சேர்க்கின்ற சாட்சியங்களாகும்.
“கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்” (அகநானூறுஇ 55: 10-11)
கரிகால் சோழனோடு போரிட்டு தோற்றுப்போன மன்னன் போர்க்களத்திலே விழுப்புண் அடைந்து அவிப்பவி ஆகினான் என்ற செய்தியை அகம் பதிவுசெய்திருக்கிறது.
“காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய” (அகநானூறு 246: 8-12.)
கரிகால் சோழன் தன் எதிரியையும் அவன் சார்ந்தோரையும் வலிந்த தாக்குதல் மூலம் வெற்றிகொள்கிறான் . சிறுவயதில் தன்னைச் சிறைப்பிடித்தோரை போர்க்களத்தில் கொன்று குவித்தது கரிகாலன் வீரம். கரிகால் சோழன் சேரமன்னன், பாண்டிய மன்னன், வேளிர் என அனைவரையும் தோற்கடித்து தமிழகத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறான். அத்துடன் அமைதியடையாத அவனது வாள் வட நாட்டுக்கும் சென்று இடையில் உள்ள மன்னர்களை எல்லாம் வென்று வந்தது. இமயம் வரை சென்று அங்குத் தன் நாட்டின் புலிக் கொடியை நாட்டியது கரிகாலனின் வாள்.
கரிகால் சோழன் சிறந்ததொரு கப்பற்படையையும் வைத்திருந்தானெனவும் அதன் வழி இலங்கை மேல் போர் தொடுத்து அதில் வெற்றியும் எய்தினான் எனவும் ஊகங்களும் இருக்கின்றன. ஆனால் தெளிவான ஆதாரங்கள் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து அவர்களைக் கொண்டு காவிரியாற்றின் கரையை உயர்த்தி அமைத்தான் என்ற வரலாறு பதியப்பட்டிருக்கின்றது.
தனித்தமிழ்நாடு என்ற கருத்தியலை புலிக்கொடியின் அசைவிலே நனவாக்கி, தமிழர்களை ஒரே குடையின் கீழ் இளைப்பாறச் செய்த பெருமையும் கரிகாலனைச் சார்ந்ததே. தமிழ்ப்பேரரசு ஒன்றினை நிறுவும் அவனுடைய ஓர்மத்தை சிறையும், பகைவன்பால் அவன்கொண்ட வெஞ்சினமுமே கொடுத்தன எனலாம். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மனம் எனும் ஆயுதத்தினை கூர்மையாக வைத்திருக்கும் வெஞ்சினமானது, காலத்திற்காக காத்திருந்து தன் ஆயுதத்தினால் பேசும் திறன் வாய்ந்தது.
“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்”
என்கிறது பொய்யாமொழி.
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். மார்பில் பட்டிருந்த வேலை எடுப்பது தற்கொலைக்கு சமமானது. தன்னுடைய வாழ்வின் இறுதிக்கணங்களிலும் போர் புரிந்து மடிய விரும்பும் வீரத்தை வள்ளுவமும் பதிவு செய்திருக்கிறது.
போர்க்களத்திற்குச் சென்ற வீரன் எந்தக் கணத்திலும் தனது நாட்டிற்காக இறக்கத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்ற வீரத்தத்துவத்தை,
“மருப்புத்தோ ளாக மதர்விடையிற் சீறிச்
செருப்புகன்று செங்கண் மறவன் – நெருப்பிமையாக்
கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி
மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு.” (புறப்பொருள் வெண்பா 140)
சிவந்த கண்ணினை உடையானான மறவன், போரினை விரும்பி, தான் கைக்கொண்ட வேற்படையினைப் பகைவரது கடிய யானையின்மேல் போக்கிவிட்டு, மதர்த்த எருமைக் கடாவைப் போலச் சீறியவனாகத் தன் தோள்களே கொம்புகளாகக் கொண்டு, பின்னரும் பொறிபிறப்ப விழித்தவனாகத் தனது மெய்வலியினாலே போரிட்டு வெற்றி கொண்டான். என்ற பாடல் பதிவு செய்திருக்கிறது.
ஆயுதங்களை இழந்த நிலையில் கூட, தன் வீரத்தின் பண்பில் சிறிதளவும் ஐயம் கொள்ளாது, எதிரியை நேருக்கு நேர் எதிர்கொள்வதே வீரம். இதனை
‘படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம்”
என்பர் தொல்காப்பியர் (புறத். 17).
அதாவது கைப்படையைப் போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கம் என்பது பொருள் ஆகும். அவ்வாறு போர் செய்து அவன் போர்க்களத்தில் இறந்துவிட்டானாயின் அவன் மாவீரனாகப் புகழ் பெறுவான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது ஏம எருமை என்று தொல்காப்பியம் சுட்டுகிறது.
“செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினை.
ஒருவன் மண்டிய நல்லிசை நிலை” (தொல், புறத். சூ.17)
என்பதே இதுவாகும் . இதனைத் தன்னுறு தொழில் என்பர் இளம்பூரணர்.
புறமுதுகிட்டோடல் என்பது சிந்தனையில் வந்தால் கூட வீரம் கேள்விக்குள்ளாகிவிடும் என்ற கருத்தாக்கத்தில், எருமை மறம் ஒரு போரியலில் முக்கியமான விடயமாகச் சுட்டப்படும்.
“வெயர் பொடிப்பச் சினங்கடைஇப்
பெயர் படைக்குப் பின்னின் றன்று”( தொல்காப்பியம் 35)
இத்துறை வியர்வை அரும்பச் சினம் கொண்ட வீரன் ஒருவன் புறமுதுகு காட்டிய தன் சேனைக்குப் பின்னே நின்று தன் வீரத்தை வெளிப்படுத்தியது என்ற குறிப்பிடுவதாகும்.
தொல்காப்பியம் கூறும் இந்த கோட்பாடானது புறநானூற்றில் மெய்ப்பிக்கப்படுவதனை ,
“தன்வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவண்என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே” (புறம் . 275)
என்ற பாடலின் மூலம் நோக்கலாம்.
பகைவர்கள் தங்களுடைய படைகளைச் சூழ்ந்து கொண்டு அழிக்கின்ற நேரத்தில் வீரன் ஒருவன், தடைகள் எல்லாவற்றையும் கடந்து, தோல்வியைக் கண்டு கொண்டிருந்த தன் நண்பனைக் காப்பாற்றக் கன்றை விரும்பும் பசுவைப் போலப் பாய்ந்து சென்று நண்பனைக் காத்தான் என்பது பாடல்தரும் செய்தியாகும். இதில் நண்பன் தோல்வியுற்றுத் திரும்பும் நிலையில் வீரன் ஒருவன் பிணக்குவியல்களாம் தடைகளைக் கடந்து, தன் நண்பனைச் சூழ்ந்திருந்த படைகளை வெற்றி கொண்டுஇ நண்பனின் பக்கத்தில் சென்று அவனைக் காத்தான் என்ற செய்தியானது, ஒவ்வொரு வீரனும் தன் படைசார்ந்த வீரத்தை மட்டுமல்லாது, தன் சுயம் சார்ந்த வீரத்தினையும் போற்றுகின்றவனாக இருந்திருக்கிறான் என்பதை புலப்படுத்துகிறது.
“உடை படை ஒருவன் புக்கு ஒருவனைக்
கூழை தாங்கிய எருமையும்” ( தொல்காப்பியர் (புறத்.17).)
எதிரியின் தாக்குதலால் நிலைகுலைந்து உடைந்து சிதறிய தனது படையின் முன்னே நின்று, எதிரிப்படையினை தனியனாக எதிர்கொண்டு நின்று போராடும் வீரனது தோற்றப்பாடானது, சிலிர்த்து நிற்கும் எருமைக்கு ஒப்பிடப்படுவதால் இது எருமை மறம் என்று கூறப்படுகிறது. புறமுதுகிட்டோடும் படையுடன் வீரனும் புறமுதுகிடுவானாயின் அவனைப் பெற்ற தாய் கூட பழித்து, தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையிலிருந்த மறச் சமூகத்தில் வீரனொருவன் ஒட்டுமொத்த எதிரியையும் தன்னந்தனியனாக எதிர்ப்பதென்பது இலகுவானதல்ல. ஆயினும் மறமும் தன் படைகளை எதிரி ஓடவைத்தான் என்ற வெஞ்சினமும் நெஞ்சிலே வேல் வாங்கும் வீரத்தினை வீரனுக்கு கொடுத்திருக்கின்றன.
“கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் – நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி
வாள்வெள்ளந் தன்மேல் வர” (புறப்பொருள் வெண்பா மாலை)
தனது யானை கண்முன்னே இறந்து கிடக்கவும், படைகள் வெள்ளம் திரும்பி போகவும் எதிரிப்படையினது வாள்கள் வெள்ளம் போல தன்னை நோக்கி வந்ததைக் கண்ணுற்ற போதும் தனது கையிலிருக்கும் வேலை ஊன்றி எழுந்து நின்றான் வீரன் என்று வீரத்தின் உச்சத்தை சொல்லிச் சென்றது புறம்.
ஒரு வீரன் தன்னால் கொல்லப் பட்ட யானையுடன் தானும் வீழ்ந்து இறத்தலைக் களிற்றுடனிலை என்னும் ஒரு புறத் துறையாகும்;.
“ஒளிற்றெஃகம் படவீழ்ந்த
களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று”
ஒளி பொருந்திய வேலை உடைய வீரன் ஒருவன் தன்னை எதிர்த்த யானையை வீழ்த்தி அதனோடு தானும் இறந்து பட்ட வீரச் செயலைக் கூறுவதாகும். பின்வரும் புறநானூற்றுச் கூழலினூடாக இதனை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
“ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்
வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலிற் சிறந்தது பிறிதொன்று இல்எனப்
பண்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே”
என்ற இப்பாடலில் போர்க்களத்தில் படைவீரன் ஒருவன் தான் வீழ்த்திய யானையோடு தானும் வீழ்ந்து இறந்து பட்டான். இதனைக் கண்ட அவ்வீரனின் தலைவனாகிய மன்னன் இப்போர்க் களத்தில் தானும் விழுப்புண் பட்டு புலவர்கள் பாடும் வண்ணம் இறந்து போவதே சிறந்தது என்று எண்ணித் தன் உயிரைப் பெரிதாகக் கருதாது இறந்து பட்டான் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. அவ்வாறு போர்க்களத்தில் இறந்த மன்னனை தனது வீரத்தை நிலைநிறுத்தி, தமிழர்களிற்கு தனிநாடு அமைத்த கரிகாலனை விடவும் சிறப்பான இடத்தில் வைத்து புலவர்கள் பாடுகிறார்கள்.
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே!”
காற்றின் இயல்பை அறிந்து நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணிஇ வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?
களத்தில் வெற்றிகொண்டு தன் வீரத்தை பறைசாற்றிய கரிகாலனின் வீரம், போர்க்களத்தில் வடக்கிருந்து இறந்த மன்னனின் மண்டியிடாத வீரத்தின் முன் தோற்றுப் போய்விட்டது.
எமது விடுதலைப்போராட்டத்தின் ஆயுதங்களின் வீச்சம் பன்னாட்டு ஆயுதங்களின் மொழிகளுடன் பேரம்பேசி ஈடுகொடுக்க முடியாமல் மௌனித்துப்போயிருக்கிறது. ஆனால் இந்த மௌனம் எமக்கான, எம் இனத்திற்கான முடிவுரை அல்ல. முடிந்த முடிபும் அல்ல. எங்களுக்கான மொழி இன்னமும் இறந்துவிடவில்லை. எங்கள் விடுதலையை நோக்கிய ஆயுதங்களும் மௌனித்துப் போயிருக்கின்றனவேயொழிய செயலிழந்துபோகவில்லை. எம் அடையாளங்களும் எமக்கான மொழியின் எழுகைக்காக காத்திருக்கின்றன. எம் வரலாற்றின் தடங்களில் பயணிக்கவேண்டிய தேவையும் எமக்கிருக்கிறது. ஆனால் எம் விடுதலைக்கான தடம் சுயநலங்களால் விலங்கிட்டுக் கிடக்கிறது. விலங்கினை உடைத்து வரலாற்றை மீளெழுதவும் மீளெழும் வெளியினைத் தக்கவைக்கும் சோரம்போகாத வீரத்தின் தேவையும் கனத்துக் கிடக்கின்றன. ஆனால், அந்தக் கனதிகளின் பொருள் புரிந்தும் புரியாதவர்களாக சுயமிழந்து நிற்கிறோம். ஏதிலிகளாக எதிரியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் எம் இனத்தின் இழிநிலையை எமக்காக மாண்டுபோன எம் வீரர்களின் மறம் எள்ளிநகையாடும். தோற்றுப்போய் துவண்டுகிடந்தோம் என்று வரலாற்றுப் பதிவில் எம் சுயத்தை நாங்கள் அடகுவைக்கப்போகிறோமா? இல்லையேல் மண்டியிடாத வீரத்தின் எச்சங்கள் இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை எப்போது எதிரிக்கு சொல்லப்போகிறோமா?
“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.”
செல்வி
15-01-2017
4,743 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.