
இது “ஸ்டான்லி எல் கோஹேன்” ஆல் எழுதப்பட்டு 29.12.2016 அன்று அல்ஜஷீராவில் வெளியாகிய கட்டுரையின் ஒரு தொகுப்பு. “ஸ்டான்லி எல் கோஹேன்” ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர். இவர் மத்திய கிழக்கு மாற்றும் ஆபிரிக்காவில் தனது மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டவர்.
இஸ்ரேல் தனது இனவழிப்பு நடவடிக்கைகளை மிக வெளிப்படையாகவே நடத்துகின்றது
பாரிய இனவழிப்புக்குள்ளான, இன்னும் கட்டங் கட்டமாக இனவழிப்பிற்கு உட்படுகின்ற இனமாக எமது தமிழினம் இருப்பதனால் எமக்கான முக்கிய சில அறிவூட்டல்களை இப்பத்தி எடுத்தியம்புவதை கண்ணுற்ற காகம் இணையம் காலத்தின் தேவை கருதி இதை தமிழாக்கம் செய்து தொகுத்து வழங்குகின்றது.
கடந்த இரு கிழமைகளுக்கு முன்னர் ஒட்டு மொத்த பன்னாட்டுச் சமூகமும், பலஸ்தீனியத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேல் உருவாக்கிய அத்துமீறிய குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய நாடுகள் சபையால் மொழியப்பட்ட தீர்மானத்தில் தம் கவனத்தை பதித்திருந்தன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தாலும் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது தெளிவற்ற மிகத்துல்லியமான சட்ட நுணுக்கங்களைக் கொண்டுள்ளதால் இது அனுபவம் நிறைந்த அரசியல் ஆய்வாளர்களால் விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.
சிலர் இத்தீர்மானமானது 1967 முதல் இஸ்ரேல் ஆனது அரபு, பலஸ்தீனிய கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு ஜெருசலம் உள்ளடங்கலாக மேற்குக்கரை வரை அபகரித்த அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் புறந்தள்ளும் திறன் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
ஏனையோர் இதை செயற்றன்மையற்ற ஒரு ஆலோசனை மொழியாகவே பார்க்கின்றனர். இது ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட இரு மாநில உருவாக்கம் ( யூதர்களுக்கு ஒரு மாநிலம், பலஸ்தீனர்களுக்கு ஒரு மாநிலம் ) சம்பந்தமான தீர்மானத்திற்கு துணை புரிவதாக இருப்பதனால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு செல்வதற்கான ஒரு அழைப்பாகவும் பார்க்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் 60% இற்கு குறைவாகவே மேற்குக் கரையை ஆக்கிரமித்திருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக இத்தீர்மானமானது நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்த ஒரு உந்துதல் பொறிமுறையையும் உள்ளடக்கவில்லை. இத்தீர்மானத்தின் திறனானது முக்கியமாக இஸ்ரேலின் மனச்சாட்சியில் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டு இத்தனை காலமும் பன்னாட்டுச்சமூக சட்ட திட்டங்களை மீறி பயணித்த தன் பாதையிலிருந்து திரும்பிச் செல்வதிலேயே தங்கியுள்ளது. இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பலஸ்தீனத்திலிருந்து களவாடிய பிரதேசத்தை மையப்படுத்தி தன்னை உருவாக்கிக் கொண்ட முதல் நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.
இணங்க மறுக்கும் நெதன்யாஹு
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்மின் நெதன்யாஹு மிகவும் கடிந்த சினத்துடன் பன்னட்டுச் சமூகங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது முன்னால் அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமாவால் ஒழுங்கமைக்கப்பட்ட பன்னட்டுச் சமூகங்களின் சதி எனவும் இத்தனை காலமாக இஸ்ரேலின் நலன் கருதி அமெரிக்கா கொண்டிருந்த ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து தன் வழியே ஒபாமா வெளியேறிய பின் திடீரென அமெரிக்கா இஸ்ரேலின் விடயங்களில் சமாளிக்கும் பதில்களைக் கொடுப்பதாகவும் மேலும் அவர் குற்றம் சாட்டினார். (இத்தீர்மானம் தொடர்பாக அமெரிக்கா வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது)
ஆனாலும் இஸ்ரேலின் இராணுவச் செலவுகளுக்கும் அதன் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கும் 38 மில்லியன் டொலர்களைச் செலவழித்த ஒரு நாடு இஸ்ரேல் மீது கொடுக்கும் இந்த அழுத்தத்தை நம்புவது சற்று கடினமாகவுள்ளது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய வறிய நாடுகளில் ஒன்றான சினேகல் மீதும் அவருடைய கண்டனங்கள் தொடர்ந்தன. சினேகல் தன்னுடைய பொருளாதார நெருக்கடிகளிற்காகவே இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்ததாகவும் மற்றும் அதன் குற்றம் என்னவெனில் தற்போது பன்னாட்டளவிலிருக்கும் சட்டதிட்டங்களை அதீதமாக நம்புவதும், இப் பன்னட்டுச் சமூகங்களின் கட்டடத்திற்குள் 193 நாடுகளின் கொடிகளுடனும் மற்றும் நியூயோர்க்கின் கிழக்கு ஆற்றை பார்த்துக் கொண்டிருக்கும் பலஸ்தீனத்துடனும் குடியிருப்பதேயாகும் என இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா தொடர்பாகவும் அதன் தீர்மானம் தொடர்பாகவும் தான் என்ன நினைக்கின்றார் என்பதை குறிப்பாக ஆயிரக்கணக்கான புதிய வீடமைபுத் திட்டத்தை அறிவிக்கும் போதே பன்னட்டுச் சமூகங்களிற்குத் தெரியப்படுத்தினார். இஸ்ரேல் ஒருபோதும் தன்னுடைய மற்ற கன்னத்தைக் காட்டாது என்றும் அத்துடன் ஐநா விற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் பறைசாற்றினார். அத்துடன் உடனடியாக இத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்சியா, சீனா, யப்பான், உக்ரைன், அங்கோலா, எகிப்து, உருகே, ஸ்பெயின், ஸ்நேகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடனான நடப்புறவுகளையும் நிறுத்திவிட்டார்.
பலமுள்ள எதிரியாய்
நெதன்யாஹு மேலும் தொடராது நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரால் அது முடியவில்லை. எந்த விதமான உந்துதலும் இருக்கவில்லை. வெறும் சொற்களில் மட்டுமே அமைந்த இஸ்ரேலின் கொள்கைகளைக் கண்டிக்கத்தக்க நூற்றுக்கணக்கான முன்னைய தீர்மானங்களைப் போல் இறுதியாக வந்த ஐக்கிய நாடுகள் சபையின் இக் கண்டனமும், கொடூரமான இனப்படுகொலைகள் புரிந்து அதன் ஊணிலிருந்து உருவாகிய ஒரு நாடு, நீதி கேட்டு அலறுமளவுக்கு எந்தவிதமான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
நான் “வார்த்தைகளால் மற்றவர்களைத் துன்புறுத்துபவன்”, “திமிர்பிடித்தவன்”, “கொடூரமானவன்”. ஆனாலும் ஒரு இரண்டு கால் மிருகம் உள்ளது. அது அப்பாவிகளை தன் உணவாகவே உண்ணுகின்றது. அது போல் நான் இல்லை. நெதன்யாஹு இந்த வகையான ஒரு மிருகம் தான். இருட்டு சூழ்ந்த ஒரு உலகில் வாழும் கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு அசுரன். தன் நட்புகளுக்கு தன் பொய்யான தோற்றத்தைக் காட்டுபவர். தன் நண்பனுக்கு நேர்மையற்றவர். மரணம் அவரது தூதர். தமது பிரதேசத்தை சூழவுள்ள காற்றைச் சுவாசிப்பதும் ஒரு சுதந்திரமாக நிம்மதியான வாழ்க்கையைத் தேடுவதையும் தவிர எந்த விதமான குற்றமும் புரியாத பல அப்பாவிப் பொதுமக்களை இவரது பயங்கரவாத அரசு பலியுண்டதால் இவர் உலக நாடுகளை அவமரியாதையும் செய்பவர்.
நமது காலப்பகுதியிற்குரிய வரலாறு நேர்மையாக எழுதப்படும் போது சந்தேகம் இல்லாமல் நெதன்யாஹு இன் கொடுமைகளும், அவருக்கு முன்னர் அவர் இடத்தில் இருந்தவர்களின் கொடுமைகளையும், உலகை ஏற்கனவே ஒரு விளையாட்டுத் திடலாகப் பார்த்து கொடுமைகள் புரிந்த கொடியவர்களின் பட்டியலுடன் இணைக்கப்படும்.
யோசப் ஸ்டாலினின் உலகில் “மரணதண்டனையும்”, “நாட்டை விட்டு வெளியேற்றலும்” அவரால் எதிரியாக கருத்தப்பட்டவர்களை அகற்றத் துணை புரிந்தாலும் “பட்டினியிடல்” என்பது தேர்விற்கான (தெரிந்தெடுத்தல்) ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தது.
ஹென்றி கிஸ்ஸிங்கர் இற்கு இந்த உலகம் முக்கியமாக இந்தோசீனா ஒரு சதுரங்கப் பலகையாக இருந்தது. எந்த விலை கொடுத்தும் உலகம் தொடர்பான இவரது மதிப்பிடலை பரீட்சிக்க உயிரியல் மற்றும் வேதியல் போர்க்கூறுகளை உள்ளடக்கிய உயர் தொழிநுட்ப ஆயுதங்கள் மூலம் தம்மை தியாகம் செய்யும் பகடைக்காய்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டனர். இவருடைய இந்த மூளை விளையாட்டிற்காக மில்லியன் கணக்காணோர் தமது வாழ்வைத் தொலைத்துள்ளார்கள்.
போல் பெட் இற்கு போராட்டம் என்பது சுத்திகரிப்பை விட சிறிது அதிகமாக பட்டினி மூலமாகவும், அதீத வேலைத்திணிப்பு மூலமாகவும்,கால்வாசி மக்களை மரண தண்டனை மூலமாகவும் அழித்தல் என பொருள் கொள்ளப்பட்டது. இந்த மக்கள் செய்த ஒரே குற்றம் அவருக்கு முரணாக தமது வாழ்க்கையை பார்த்தது மட்டும் தான். அவர்கள் எவ்வளவு மென்மையானவர்கள் அல்லது இவர் எந்த அளவுக்கு கீழ்த்தரமானவர் என்பதெல்லாம் அங்கு எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ரூவாண்டாவில் அரை மில்லியன் கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாக சிதைக்கப்பட்டு கொல்லப்படடார்கள். இவர்களுடன் சம எண்ணிக்கையான ஹூட்டு மாநிலத்தின் எதிரியாக கருதப்பட்ட ஆண் ருட்ஸிகளும் கொல்லப்பட்டனர்.
மெதுவான இனப்படுகொலை
இவை மெதுவான கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கள். ஆனால் சில, தீவிரமான பாரியளவிலான படுகொலைகள், கற்பழிப்புக்கள், பட்டினியிடல் உள்ளடக்கிய மோசமான இனவழிப்பு நடவடிக்கைகளாகின்றன. பெரும் குவியலான உடல்களை உருவாக்கும் பாரிய பயங்கரமான வெடிகுண்டு அழிவுகளை மட்டும் இனவழிப்பாக கருதுவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைக்கான சட்டரீதியான வரைவிலக்கணம் 1948 இல் (இஸ்ரேல் உருவாகிய அதே ஆண்டு ) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. கீழ்வரும் செயல்கள் ஏதாவது ஒன்றையேனும் ஒரு தேசியத்தை ஒரு இனத்தை மொழியை அல்லது மதக்குழுவை முற்றாகவோ பகுதியாகவோ அழிக்க செயற்படுத்தினால் அது இனப்படுகொலையாகக் கருதப்படுகின்றது.
1) ஒரு குழுவிற்குள் அடங்கும் மக்களைக் கொன்றழித்தல்
2) அக்குழுவில் அடங்கும் மக்களை உடல்ரீதியாக அல்லது உளரீதியாக பாதிப்பிற்குள்ளாக்கி தீங்கு செய்தல்
3) முற்று முழுதாகவோ பகுதியாகவோ அக்குழுக்குள் வாழுகின்ற பெளதீகச் சூழலைப் பாதிப்பிற்குள்ளாக்கி அழிப்பதற்கு தேவையானவற்றைக் கணிப்பிட்டு அதற்குரிய சூழ்நிலையை வேண்டுமென்றே அம்மக்களிடம் திணித்தல்.
இஸ்ரேல் எந்தவொரு பொறுப்பு கூறலும் இல்லாமல் இதிலுள்ள ஒவ்வொரு செயலையும் நடத்தி பெருமையின் உச்சத்திலுள்ளது. 1948 முதலிருந்தே இஸ்ரேல் எண்ணிலடங்கா கொடுமைகளை பலஸ்தீனத்திற்கு எதிராகப் புரிந்துள்ளது.
பாரிய வெளியேற்றம், கற்பழிப்பு மற்றும் படுகொலைகளை நக்பாவின் தொடக்கப்பகுதியில் ஆரம்பித்த இஸ்ரேல் 68 ஆண்டுகளாக இந்த இடைவிடா இனவழிப்பு நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்துள்ளது. காற்று வாங்கப் போவது போல் தனது ஆயுதங்களை சீரமைக்கவும் மாற்றவும் மட்டும் சிறு இடைவெளியை எடுத்துக் கொள்கின்றது.
தம் மூதாதையர்களின் தாயகப்பகுதியிலிருந்து துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்ட ஏழு இலட்சம் பலஸ்தீனியர்கள் அகதிகளாயினர். இந்த இடம்பெயர்வு மேலும் தொடர்ந்து ஏழு மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
முடிவில்லாத வன்முறைகள்
இத்தனை ஆண்டுகாலமாக இஸ்ரேல் நாலு இலட்சதிற்கு மேற்ப்பட்ட பாலஸ்தீனியப் பொது மக்களைக் கொல்லவும் அதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக (பத்தாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்கலாக) மக்களைப் படுகாயத்திற்கு உட்படுத்தி முடமாக்குவதற்காக பல்வேறு வழிகளைக் கண்டு பிடித்துள்ளது. பீரங்கிகள் மூலமாகவோ கொத்துக் குண்டுகள் மூலமாகவோ பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவோ பாதிப்பை உண்டு பண்ணல் என இவை எல்லாம் திட்டமிட்ட கொடூரமான குழுப்படுகொலைகளுக்கான புதிய வரைவிலக்கனத்தைக் கொடுக்கின்றன.
இஸ்ரேலின் அதீத பாலஸ்தீனிய இனவழிப்புத் தாகமானது ஜெனீவா உடன்படிக்கையில் நெறிமுறை 1 இல் கூறப்பட்டவற்றை மீறி பஞ்சம் பட்டினிகளை பாலஸ்தீனிய மக்களிடத்தில் உருவாக்கியது. இந்த வழியிலான போர் ஆனது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள உணவுப்பொருட்கள் , உணவுப்பயிர்கள் மற்றும் கால்நடைகளை இலக்கு வைத்துள்ளது.
மேலும் இந்தப் போர் ஒரு மில்லியன் ஒலிவ் மரங்களை அழித்துள்ளது. இந்த மரங்கள் பாலஸ்தீனிய கலாச்சாரத்தின் முக்கிய தூணாக மட்டுமல்லாது ஏனைய நூறாயிரக்கணக்காக அழிக்கப்பட்ட பழமரங்களுடன் சேர்த்து பாலஸ்தீனியர்களின் தேசிய பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தன.
வரலாற்று குற்றவாளிகளே வெட்கமும் பொறாமையும் கொள்ளுமளவுக்கு இஸ்ரேலானது தனது கொடூர புத்தியுடன் காஸாவிலுள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், மழலைப் பராமரிப்பு நிலையங்கள் , பல அடுக்கு மாடிக்கட்டடங்கள், ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்கள் மற்றும் மனநல மருத்துவ மையங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தாக்கியது.
இந்த வன்முறைகள் ஆயிரக்கணக்கான கடின உழைப்பில் கட்டப்பட்ட வீடுகளை பாழடைந்ததாக மாற்றியுள்ளது. இது பாலஸ்தீனியர்களை உள்நாட்டிலேயே இடம்பெயரவைத்து ஏதிலிகளாக்கி நட்டாற்றில் விட்டுள்ளது.
பாலஸ்தீனம் மீதான ஏற்றுமதித்தடைகளை கடந்த தசாப்தங்களாக ஏற்படுத்தியதன் மூலம் இஸ்ரேலானது காஸாவை வாழ்வதற்குத் தகுதியற்ற ஒரு பிரதேசமாக மாற்றியிருக்கின்றது. இந்த ஏற்றுமதித் தடையானது மக்களுக்கு கலோரிப் பற்றாக்குறை, தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பற்றாக்குறை ஆகியவற்றை மட்டும் ஏற்படுத்தாது 1.8 மில்லியன் உயிர் தப்பிய மக்களிற்கு தேவையான கட்டட புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வேலைகளுக்குரிய பொருட்களுக்கும் தடைகளை ஏற்படுத்தியது.
உடல்ரீதியான கொடுமைகள் புரிந்தும் திருப்தியடையாத இஸ்ரேல் உலகில் வேறு எங்கிலும் காண முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தும் மன வியாதிகளைத் தூண்டும் பெரும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்றது. அனைத்து இனவழிப்பு நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்த காஸா 2020 ஆம் ஆண்டளவில் மக்கள் வாழ்வதற்கு உகந்ததல்லாத பிரதேசமாக மாற்றமடையும். இன்னொரு தடவை பல மில்லியன் கணக்கில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி ஏதிலிகளாகி வீதியில் விடப்படும் ஆபத்தான புலப்பெயர்வை எதிர்நோக்குவர்.
1967 இல் நக்பா தொடங்கும் போது ஆரம்பித்து 531 கிராமங்களிலும் மற்றைய ஏனைய இடங்களிலும் மக்களை வெளியேற்றி முற்றாக அழித்ததோடு திருப்தியடையாமல் இஸ்ரேல் பெருமளவில் கிழக்கு ஜெருசேலத்தையும் மேற்குக்கரைப்பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. ஜெனிவா உடன்படிக்கையில் நிபந்தனை 4 ஆனது, ஆக்கிரமித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக தளங்களை உருவாக்குவதற்குத் தடை விதித்துள்ளது. ஆனால் இதையெல்லாம் மீறியே இஸ்ரேல் தன் நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளது. இந்த சட்ட விரோத நில அபகரிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் 800,000 குடியேற்றவாசிகளுக்கு சட்ட விரோதமாக வீடுகளை அமைப்பதற்கு தேவையான நிதி உதவி செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதேவேளை இது 50,000 பாலஸ்தீனிய வீடுகளையும் கட்டடங்களையும் அழித்து பத்தாயிரக்கணக்கான பழங்குடி மக்களை வீடற்றவர்களாக்கி ஏற்கனவே ஆதரவற்றவர்களிற்கு அடைக்கலம் கொடுத்து நிரம்பிவழியும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலேயே இவர்களும் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது
எப்போதும் போலவே எதற்கும் அடங்காத தன்மை
இஸ்ரேலின் இந்த இழிவான கொடூரமான வரலாற்றை மிகைப்படுத்திக் கூறவும் ஆதாரமற்ற வதந்திகளாக பேசப்படுவதற்கும் எந்த காரணிகளும் துணை புரியாது. மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இஸ்ரேலில் நடப்பது இனவழிப்பு நடவடிக்கை என திரட்டப்பட்ட பல ஆதாரங்களுடன் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்காக காலத்திற்குக் காலம் கோரிக்கை விடுத்தாலும் அவை மேற்கொண்டு எந்த வித நடவடிக்கைகளுக்கும் இடமின்றி தொடர்கின்றன.
உண்மையென்னவெனில் இஸ்ரேல் வெளியில் தெரியாத இனவழிப்புக்களை நடத்தவில்லை. வெளிப்படையாகவே அத்தனை கொடூர நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டு உலகிற்கு நாங்கள் தான் இதைச் செய்தோம். நாங்கள் பன்னாட்டுச் சமூகங்களில் தற்போது நடைமுறையிலிருக்கும் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என தம்மை வெளிப்படுத்தி ஆணவத்தோடு நடந்து கொள்கின்றது.
ஆம், பிரதமர் அவர்களே உங்கள் தணல் தெறிக்கும் சினம் கொண்ட உரையை மேலும் தொடராது நிறுத்தியிருக்க வேண்டும். இன்று இஸ்ரேல் சட்டரீதியான ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாளை எல்லாம் சரியாகலாம். ஆனாலும் உண்மையில் இஸ்ரேல் தகுதிவாய்ந்தவர்களைக் கொண்ட பன்னாட்டுச் சமூகங்களின் நீதிக்கூட்டிற்குள் இனப்படுகொலைக்கான விசாரணையை எதிர் நோக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு
முல்லை
08-01-2017
5,973 total views, 2 views today
Leave a Reply
You must be logged in to post a comment.