மெழுகுவர்த்திகள் – நிலா தமிழ் #போராளியின் குறிப்பேடு

        வெள்ளைப் பறவைகள் அன்னநடை போடும் அந்தக் கல்லூரி வாசலில் தினமும் அவளுக்காகக் காத்திருப்பான் அவன். யாழ் நகரின் பிரபல பெண்கள் கல்லூரியில் அவளும் பிரபல ஆண்கள் கல்லூரியில் அவனும் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அவள் பெயர் நிலா. அவன் பெயர் நித்யன். தினமும் நிலாவின் வீட்டு வீதியில் இருந்து அவளது பாடசாலை வரை அவளைப் பாதுகாப்பாக பின்தொடர்ந்து விட்டுச் செல்வான் நித்யன். நிலாவும் நித்யனும் ஒரு நாளும் நேரடியாகக் கதைத்தது இல்லை. ஆனால் நிலாவுக்குத் தெரியும் நித்யன் அவளுக்காகத் தான் தினமும் காத்திருக்கிறான் என்று.

        நிலாவின் குடும்பத்தில் நிலா தான் மூத்தவள். அவளுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் என்று அளவான குடும்பம். அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. அவளது அப்பh நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலையில் இருந்தார். நிலாவினது அப்பா நாட்டுப்பற்று மிகுந்தவர். தினமும் வீட்டில் போராட்டம் பற்றியும் போராளிகளின் தியாகங்கள் பற்றியும் கதைப்பார். அதைக்கேட்டுக் கேட்டு நிலாவுக்கும் ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஒரு பற்றும் பாசமும் வந்தது. தினமும் தனக்கு அடுத்த தங்கையுடனும் பக்கத்து வீட்டு அக்காவுடனும் இயக்கத்துக்குப் போறதைப் பற்றிக் கதைப்பார்.

      1995 காலப்பகுதி, எமது ஈழ விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற காலப்பகுதி அது. வலிகாமப் பகுதியினை எதிரியானவன் கைப்பற்றி வந்தபோது எமது போராளிகள் முன்னேறிப் பாய்ச்சலூடாக சமரிட்ட காலம். எதிரியானவன் எம் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.

        காலவோட்டத்தில் எதிரி எம் மக்களுக்கு அளித்த இன்னல்களைக் கண்டு அவற்றைக் களைய நிலாவும் போராளியாகினாள். அடிப்படைப் பயிற்சி முகாமில் புடம்போடப்பட்டு, நஞ்சுமாலை அணிந்த வரிப்புலியாகினாள்.  திறமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எமது இயக்கத்தில் அவளது திறமையும் இனங்காணப்பட்டு போராளிகளின் உயிர் காக்கும் மருத்துவப் போராளியாக உள்வாங்கப்பட்டாள்.

        அன்றும் வழமை போல காயப்பட்ட போராளிகளுக்கு தாயாக அவள் தனது பணியினை மேற்கொண்டு இருந்தபோது, சக தோழி ஒருத்தி, “வயிற்றுக் காய கேஸ் ஒன்று வந்திருக்கு அவசரமாக தியேட்டருக்கு வரட்டாம்” என்று அறிவிப்பு வந்திருக்கு என்று கூறினாள். நிலாவும் அவசரமாக தனக்கிடப்பட்ட பணிக்கு விரைந்து சென்றாள்.

        அங்கே அவளது நித்யன் மயக்க நிலையில் இருந்தான். நிலாவுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது போல இருந்தது. அவன் காயப்பட்டு வெகு நேரமாகி, கொண்டு வர நீண்ட நேரமாகி விட்டமையினால் உள்ளக குருதிப்பெருக்கம் ஏற்பட்டு மிகவும் கடுமையான நிலையில் இருந்தான். இவனைக் காப்பாற்றுவதே கடினம் போல இருந்தது. அவளும் சக மருத்துவ போராளிகளும் நித்யனைக் காப்பாற்ற கடுமையாக பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தார்கள். அது பலனளிக்காமல் போய்விட்டது. நாட்டுக்காக தம்முயிரை ஈய்ந்த ஆயிரமாயிரம் மாவீரச் செல்வங்களின் வரிசையில் நித்யனும் மீளாத் துயில் கொண்டு விட்டான்.

         நிலாவின் பள்ளிக் காதலும் முளையிலேயே கருகிவிட்டது. அவளும் நித்யன் விட்டுச்சென்ற பாதையில் போராட்டத்தின் தேவை கருதி களத்திற்குச் சென்று இப்போது இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில், உறவுகளும் கைவிட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்நாளைக் கழித்துக்கொண்டு இருக்கிறாள்.

“மக்களுக்காக தங்களை உருக்கிய இந்த மெழுகுவர்த்திகளுக்கு விடிவு காலம் இனி எப்போது?”

நிலா தமிழ்

07-01-2017

 5,809 total views,  3 views today

(Visited 25 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply