
கடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இவ்வாரப் பத்தியைத் தொடருவோம்.
போரியலையே வாழ்வியலாக்கி எமது விடுதலையை எமது கைகளாலேயே வென்றெடுப்போம் என்ற திடத்துடன் விடுதலைப் புலிகளின் தலைமையில் உறுதியுடன் போராடிய எம்மக்கள், கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட, எஞ்சியோர் உறவுகளை இழந்தும் அவயவங்களை இழந்தும் அரசியல் ஏதிலிகளாக ஒரு வெறிதான உளவியலுடன் முட்கம்பி வேலிக்குள் தமது மீளாத்துன்ப வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் சென்ற மணித்துளிகளுடன் போரின் பிந்தைய காலம் தனது இருண்மையான பக்கங்களை வரலாற்றிற் பதிவு செய்யத் தொடங்கியது.
விடுதலையை வென்றெடுக்கும் இறுதிக் கணம் வரை சென்று விட்டதாக மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திருந்த எமது மக்கள், தமது விடுதலையை வென்றெடுக்கும் கடைசிப் போரை எதிர்கொண்டு தமிழீழம் அமைக்கப் போகும் ஒரு வித வீரப் பெருமிதத்துடன் தம்மை அணியணியாக்கி நில மீட்புப்போரிற்காக கடும் பயிற்சி பெற்றுக் காத்திருந்து எதிர்கொண்ட நான்காம் கட்ட ஈழப்போரானது தம்மை அழித்தொழிக்கும் இனப்படுகொலையின் உச்சமாகப் போய் ஈற்றில் எல்லாமுமாகி ஆத்மார்த்தமாகத் தமிழர் நெஞ்சில் நிறைந்திருந்த தலைமையும் இல்லாமல், நாதியற்று நட்டாற்றில் விடப்பட்டு அவல வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் இன்னொரு வடிவிலான ஒடுக்கலிற்கு உள்ளாக்கப்படுவதான அவலச் சூழலிற்குள் தள்ளிவிடப்படப்போகின்றோமென்று சிறிதும் நினைத்திராத எம்மக்கள், தேற்றுவாரின்றித் தவித்துவிடப்பட்டு, தமது காணாமற்போன உறவுகளைத் தேடும் வலி நிறைந்த அடுத்த படலத்தை ஆரம்பித்தார்கள்.
சிறிலங்கா அரச படைகளினதும் அதன் புலனாய்வு அமைப்புகளினதும் கழுகுக் கண்களிற்குள்ளும் அவர்களது தேடல்களிற்குள்ளும் சிக்கிய எமது மக்களும் போராளிகளும் சிறையிலடைக்கப்பட்டார்கள் அன்றேல் காணாமலாக்கப்பட்டார்கள். இந்நிலையில், சிறிலங்காவில் ஐ.நா செயற்படக் கூடிய செயற்பாட்டுவெளி இல்லை என்றும் நீதி மற்றும் விசாரணை தொடர்பான விடையங்களில் ஐ.நா வின் திட்டமிடலும் வழிகாட்டலும் தேவையென்றும் குறிப்பிட்டு, 2009 ஆம் ஆண்டு வைகாசி 26 ஆம் நாள் ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையர் நவிப்பிள்ளை சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை கோரினார். ஐ.நாவின் சட்ட விதி 99 இன் படி, சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணைக்கு செயலுறுத்தும் பணிநிலை வலு ஐ.நாவின் பொதுச் செயலாளர் பன்கி மூனுக்கு இருந்தும், 2009 ஆடி மாதம் 30 ஆம் நாள் ஐ.நா தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் பன்னாட்டு விசாரணையை அவர் முற்றிலுமாக மறுதலித்துக் கருத்தினைப் பதிவு செய்தமை, நவிப்பிள்ளை தலைமை வகித்த ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகம் ஒரு செயலுறுத்தும் வலுவற்ற ஒரு கண்துடைப்புக் கட்டமைப்பு என்பதை மறைமுகமாகத் தமிழரிற்கு உணர்த்தியது. அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசியல் வெளியை சிறிலங்கா அரசிற்கு வழங்க வேண்டும் என்று கூறி, இனப்படுகொலையாளியான சிறிலங்கா அரசை அதன் தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்து முடிப்பதற்குக் கால இடைவெளியை வழங்க முனைந்தார் பான்கி மூன் என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியும் இனப்படுகொலைப் பங்காளியான இந்திய இராணுவத்தினைச் சேர்ந்தவனது மாமனாருமாகிய பன்கி மூன்.
இந்தச் சூழமைவில், மீள் குடியேற்றம் என்ற போர்வையில் அங்கொன்று இங்கொன்றாக எந்த அடிப்படை வசதியுமில்லாமல் கண்துடைப்பு மீள் குடியேற்றம் செய்தவாறே திட்டமிட்ட அரச ஒத்துழைப்புடனான சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் தாயக நிலப்பரப்பில் செய்து வந்தார் இனப்படுகொலை அரசின் தலைவராயிருந்த மகிந்த ராஜபக்ச. போரின் மூலம் தமிழரை இனப்படுகொலை செய்து அழித்த சிங்கள வெறிபிடித்த வெற்றி மனோநிலையில் நின்றுகொண்டு சிங்களதேசத்தின் போற்றுதலுக்குரியவராகி நின்ற மகிந்த 2010 ஆம் ஆண்டு தை 10 ஆம் நாள் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டித் தனது சிங்கள வெறியாட்டத்தைத் தொடர்ந்தவாறே, அதேயாண்டு சித்திரையில் 14 ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தி தான் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 144 பாராளுமன்ற இருக்கைகளைப் பெற்று 2/3 பெரும்பான்மைக்கு மிகச் சற்றுக் குறைவானதான பெருவெற்றியினை ஈட்டினார். இந்தத் தேர்தலில் அரசியல் வலுவின்றி பரிதவிக்கும் நிலையில் நின்ற தமிழினம், தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இன ஓர்மையை வெளிப்படுத்துவது போல, எந்தப் பேரம் பேசும் வலுவுமின்றி பல சவால்களை எதிர்கொண்டு தேர்தலில் குதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 14 பாராளுமன்ற இருக்கைகள் கிடைக்கச் செய்தது.
பொறுப்புக் கூறல் என்ற விடையத்தில் காலங்கடத்தலை ஏற்படுத்தவும் அந்தக் கால இடைவெளியில் தனது தமிழினம் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்யவும் பன்னாட்டு ஒழுங்குகளிற்கேற்றாற் போல ஏமாற்று வேலை செய்யவும் உவப்பான சித்து விளையாட்டாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை 2010 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மகிந்த ராஜபக்ச நிறுவினார். அவ்வேளையில், “மூவர் குழு” என்ற பெயரில் ஐ.நா அமைத்த நிபுணர் குழு 2011 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில், சிறிலங்கா அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நேர்மையற்றதாக இருப்பதனாலும் அதனால் சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. நிலைமை அப்படியாயிருக்க, குற்றவாளி தன்னைத்தானே விசாரித்துத் தண்டனை அளிக்கும் ஒரு கேலிக்கூத்தான பொறிமுறையைக் கூறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது கேலிக் கூத்தான அறிக்கையை 2011 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டது. ஐ.நாவின் நடைமுறைகளின் படி அதனுடைய செயல்வீச்சு மட்டத்தில் பன்னாட்டு விசாரணை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கேலிக்கிடமான அறிக்கையை அடிப்படையாகவும் சார்பாகவும் கொண்டு 2012 ஆம் ஆண்டு பங்குனியில் ஐ.நாவின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை இனப்படுகொலைப் பங்காளியில் ஒன்றான அமெரிக்கா முன்வைத்தது.
நிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்சவின் சிங்கள இனவெறிக் கொடுங்கோல் ஆட்சியில், எமது மண்ணில் எமது தமிழ் மக்கள் எந்தவொரு தீவிரமான அரசியலிலும் ஈடுபடுவதற்குச் சக்தியற்றவர்களாகவே இருந்தார்கள். அத்துடன் தங்கள் மத்தியில் ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயத்தை தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு, மகிந்த ராஜபக்சவின் இனவெறிக் கொடுங்கோலாட்சியின் உச்சத்தில், எமது தாயக மண்ணில் வாழும் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டவாறு இருக்க, ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தின் வருடாந்த நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் விடியலிற்கான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம் என்றாற் போல போலி விம்பம் எமது மக்களின் மனங்களில் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினரது அரசியல் வறட்சியின் விளைவாக கட்டியமைக்கப்பட, அவர்களும் விடியலை நோக்கி வெளியாருக்குக் காத்திருக்கப் பழக்கப்பட்டார்கள். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பங்குனியில் மேலும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தில் முன்வைத்து, கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை (குற்றவாளி தானே தன்னை விசாரித்து வழங்கிய பரிந்துரைகள்) சிறிலங்கா நிறைவேற்றவில்லை என்று கூறி அறிக்கையளவில் போலியாகக் கடிந்ததோடு, சிறிலங்காவின் சீனச்சார்பு நிலை அதிகரிப்பதை மனதிற் கொண்டு, தனது இராசதந்திரிகள் மூலம் போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு நீதிமன்றில் பொறுப்புக் கூற வேண்டி வரலாம் என்று கூறி சிறிலங்காவிற்கு திரைமறைவில் அழுத்தம் கொடுத்து தனக்கேற்றாற் போல சிறிலங்கா அரசாங்கத்தை மாற்றும் வேலையில் முனைப்புடன் செயற்பட்டது. அவ்வேளையில், வடமாகாண சபைக்கான தேர்தல் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி 21 ஆம் நாள் நடைபெற்றது. தனது முழுவளத்தையும் குவித்து மகிந்த தலைமையிலான அரசு இந்தத் தேர்தலில் களம் இறங்கியும் மொத்தம் 38 இல் 30 இனை பெற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்து ஈழத்தமிழர் தமது ஒற்றுமையை மீண்டும் பறைசாற்றினர்.
விடயம் இவ்வாறிருக்க, 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஜேர்மன் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயமானது சிறிலங்காவில் நடைபெற்றது தமிழர்களின் மீதான இனப்படுகொலை எனவும், தனிநாடு கோரிய வாக்கெடுப்புத் தமிழர்களின் மத்தியில் நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றியது. அதுவரையில் இனப்படுகொலை என்ற சொல்லை முற்றாக மறுதலித்து இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றளவில் பொருட்செறிவைக் குன்றித்துத் தீர்மானங்களை முன்வைத்து வந்த அமெரிக்கா, 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தில், சிறிலங்காவில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிருத்தவர்கள் எனும் மதச் சிறுபான்மையினர் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாகப் பொத்தம் பொதுவாகச் சொல்லி சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றம் செய்து நீர்த்துப்போகச் செய்தது. இருந்தபோதும், 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதத்துடன் தனது பதவியிலிருந்து நவிப்பிள்ளை விடைபெற்றுச் செல்லும் போதும் தான் தலைமை வகித்த செயலுறுத்தும் வலுவற்ற ஐ.நாவின் பொம்மை அமைப்பான ஐநா.மாந்த உரிமைகள் ஆணையத்தின் சார்பாக சிறிலங்காவின் மீதான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திக் கோரினார். மேலும், 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அமெரிக்காவின் உள்த்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளரான நிசா பிஸ்வால் 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சிறிலங்காவுடனான நட்பின் அடிப்படையிலேயே சிறிலங்கா மீதான தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகச் சொல்லித் தமிழர்களின் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் வறட்சிக்கு ஒரு குட்டுக் குட்டினார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஐ.நாவின் தீர்மானம் என்று பொருட்படுத்தி சிற்றின்பம் கண்ட எமது மக்களின் பன்னாடுகள் தொடர்பான அரசியல் வறட்சிக்கு முன்னால் நிசா பிஸ்வால் குட்டிய குட்டும் உணரப்படவில்லை.
தமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கலை, தேசிய இனமொன்றின் மீதான இன ஒடுக்கல்களாகவும், அதற்கெதிரான போராட்டங்களை தன்னாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக மாந்த இனச் சிக்கல்களாகவும், அகதிகள் சிக்கல்களாகவும் எல்லோரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் குறுக்குகின்ற அரசியல் வறட்சியில் ஈழத்தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் தத்தளித்தவாறு அடிப்படையற்ற காத்திருப்புக்களுடன் காலம் போக்கியது.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தை மாதம் சனாதிபதித் தேர்தல் நடபெற்றது. மகிந்தவிற்குப் போட்டியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பிற்கு மைத்திரி தலைமை தாங்கினார். தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வர்த்தக நலனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக சிதைக்கும் நோக்கில் தமிழரை இனப்படுகொலைக்குட்படுத்திய இந்தியாவும் மேற்குலகமும், சிறிலங்காக் கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வருகை தந்தைமையினை தமக்கான அச்சுறுத்தலாகக் கருதி மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்துச் செயலாற்றியது. இதனால், மைத்திரியின் வெற்றிக்கு இந்தியாவுடன் சேர்ந்து மேற்குலகமானது முழு ஒத்தாசையையும் ஆலோசனையையும் வழங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனது, மகிந்தவின் சிங்கள வெறிக் கொடுங்கோலாட்சியை அகற்றுவதன் மூலம், தமிழர் சிறிதளவு மூச்சுவிடவேனும் தகுந்த அரசியல் வெளியை ஏற்படுத்தும் நோக்குடனும் மேற்குலகத்தின் கட்டளைப் பாங்கிலான வலியுறுத்தலின் விளைவாகவும், நிபந்தனையின்றி மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்தது. விளைவாக, மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் சனாதிபதியானார். தனக்குச் சார்பானவரை ஆட்சிக்கட்டிலில் இருத்திவிட்ட மேற்குலகம், புதிய சனாதிபதியான மைத்திரிக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, அவருக்கு உதவும் படியாக 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வர இருந்த உப்புச் சப்பற்ற கண்துடைப்புத் தீர்மானத்தைக் கூட, புரட்டாதிக்குத் தள்ளிப்போட்டது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17 ஆம் நாள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு 106 இருக்கைகளைப் பெற்று ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, சமூக வலைத் தளங்களில் அரசியல் வறட்சியின் உச்சத்திலிருப்போரால் மேற்கொள்ளப்ப்பட்ட எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகளிற்கும் மத்தியில் 16 இருக்கைகளைப் பெற்று (2010 பெற்ற இருக்கைகளிலும் இரண்டு இருக்கைகள் அதிகம்) சிங்கள வெறி கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாண்டி எதிர்க்கட்சியாகத் தெரிவாகி, நல்லாட்சி அரசு என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவழிக்கும் நிலையை எடுத்தது.
ஈழத்தமிழர்கள் தமது தாயகத்தில் தமது விடுதலைக்காக முப்பது ஆண்டுகளிற்கு மேலாகப் போராடிய தலைமையை இழந்ததன் விளைவாக, எந்தவொரு தீவிரமான அரசியலிலும் ஈடுபடுவதற்குச் சக்தியற்றவர்களாக இருந்தமையாலும், தொடர்ந்து வந்த மகிந்தவின் வெளிப்படையான சிங்களக் கொடுங்கோலாட்சியில் தம்மை ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயமாகக் கட்டியமைக்க முடியாமையாலும் ஏற்பட்ட வலுவற்ற அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழுத்தங்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் வளைந்து கொடுக்க வேண்டிய இயலாத்தன்மையை இராசதந்திரம் என்ற வார்த்தை விளையாட்டில் மறைக்க முனைவது வருத்தத்திற்குரியதே. இருப்பினும், தமிழ்மக்கள் தமது நெஞ்சார்ந்த அரசியல் வாஞ்சைகளை வெளியே எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள். இதற்கு சாத்தியப்பாடான வழிவகைகளைத் தேடுகின்றார்கள். தங்கள் மத்தியில் செயற்திறனுடைய தியாக உணர்வுடன் கூடிய அரசியற் சக்தி இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகின்றது. அது உடனடியாக உருவாகும் என்றும் அவர்கள் நம்புமளவில் அவர்கள் கட்புலனாகும் படி எதுவும் நடந்தேறுவதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. எனினும் தமிழின ஓர்மையைக் காட்டுவதற்கும், தமது அரசியல் வாஞ்சையை வெளியில் எடுத்துச் சொல்லவும் தற்போது சிறிலங்காவில் இருக்கும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொருத்தமானது என்று அவர்கள் திடமாக நம்புகின்றார்கள். இந்த விடயத்தையே, தமிழ் மக்கள் தமக்குக் கிடைக்கும் எல்லா வாக்களிக்கும் வாய்ப்புகளிலும் சொல்ல முனைகின்றார்கள்.
பின்னர் 2015 ஆம் ஆண்டு புரட்டாதிக்குத் தள்ளிப்போடப்பட்ட அமெரிக்கத் தீர்மானமானது, சிறிலங்கா அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த மாந்த உரிமை மீறல்களை, சிறிலங்கா நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதவான்கள் அடங்கிய குழு விசாரிக்கலாம் என்று கூறிச் சப்பைக்கட்டுக் கட்டிச் சிறிலங்கா மீதான பன்னாட்டு விசாரணைக்குக் குடமுழுக்குப் போட்டது. தீர்மானம் பரிந்துரைப்பதற்கமைய சிறிலங்கா அரசு தேசிய விசாரணையை நடத்தும் என்று கூறிய சிறிலங்கா அரசு, தானே கையொப்பமிட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஈழத் தமிழர்களுக்கு பன்னாட்டு விசாரணைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைப் பகடைக் காயாக்கி, அவர்கள் மீதான ஒடுக்கல்களைத் தமக்குத் தேவையான ஆட்சியாளரை ஆட்சிக்கட்டிலிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அழுத்தமாகப் பயன்படுத்தி, அது நிறைவேறியவுடன், ஈழத்தமிழர்களிற்கு நல்லிணக்கம் பற்றி வகுப்பெடுத்து, சிங்களவருடன் இணைந்து நல்லிணக்கமாக வாழும் படி அறிவுரை சொல்லிவிட்டுப் போகும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சதிவலையில் மீண்டும் மீண்டும் சிக்கிச் சின்னாபின்னமாகச் சீரழிந்துபோவதான அவலமே ஈழத் தமிழரின் நிகழ்கால அரசியல் வறட்சியின் உச்சமாக இருக்கின்றது.
தமிழரிற்கான அரசியற் தீர்வைக் கொடுக்காமல், காலங்கடத்தி, கிடைக்கின்ற அந்தக் கால இடைவெளியில் சத்தஞ் சந்தடியின்றித் தமிழினம் மீதான தமது கட்டங் கட்டமான இனவழிப்பை முனைப்புடன் முன்னெடுக்கும் உத்தியாக நல்லிணக்க வேசமிட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசு, அரசியலமைப்பு சீர்திருத்தம் என்று இன்னொரு மாயமானை ஈழத் தமிழரிற்குக் காட்டுகின்றது. ஈழத்தமிழரை மடையராக்கும் மைத்திரி தலைமையிலான சிங்களச் சூழ்ச்சியின் வெற்றிகரமான இரண்டாவது வருட நிறைவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
இந்த அவதியான காலகட்டத்திலும், தமிழ்த் தேசியத்தை முனைப்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, குறைப்பிரசவ அரசியலே தமிழ்மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றதுடன் பொது எதிரியை மறந்து காழ்ப்புணர்வின் பாற்பட்டு இன ஓர்மையைக் குலைக்கும் முதிர்ச்சியற்ற கருத்துருவாக்கங்களே பொறுப்பற்ற ஊடகங்களாலும் அரசியற் சிந்தனை வறட்சியுடன் சமூக வலைத்தளங்களில் அரசியற் பதிவிடுவோர்களாலும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வலி நிறைந்த காலப்பகுதியாக ஈழத்தமிழர்களின் நிகழ்காலம் இருப்பது இன்று எம்மினம் முகங்கொடுக்கும் மிகப் பெரிய சவால்களில் முதன்மையாகிவிட்டது.
தமிழர்களின் தாயக நிலப்பரப்புக்கள் தொடர் இராணுவமயமாக்கலுக்குள்ளாவதுடன், சிங்களக் குடியேற்றம், கட்டங்கட்டமான இனவழிப்பு, இன விகிதாசாரத்தை மாற்றுதல், போராட்ட சிந்தையற்ற சமூகத்தை உருவாக்கல் என்றவாறு ஈழத்தமிழர்களின் நிகழ்காலம் இருண்மையாக இருக்கின்றது. தமிழின மீட்புப்போரில் பங்காளிகளாகி நின்ற எமது மக்களும் போராளிகளும் சகலதையும் இழந்து மீண்டெழ முடியாத அவலநிலைக்குள் சிக்கித் தவிக்கும் இந்த நிகழ்காலச் சூழலில், உரிய பொருண்மிய மற்றும் சமூகக் கட்டமைப்புகளை கட்டுறுதியுடன் கட்டியெழுப்பி அடுத்த கட்டத்திற்கு எமது இனம் எமது மண்ணில் இயங்காற்றலைப் பெற முன்னெடுத்திருக்க வேண்டிய வேலைகள் இன்னும் உரியவாறு முன்னெடுக்கப்படாமலே நீளும் இந்த நிகழ்காலம் இன்னும் இப்படியே நீடிக்காமல் இருக்க மக்கள் திரள் தனது தோள்களின் மீது ஏற்றுச் சுமந்து முன்செல்ல வேண்டிய பணிகளை ஒருங்கமைத்து வழிகாட்ட வல்லதொரு போராட்டத் தலைமை வராதா என்ற ஏக்கமே நிகழ்காலத்தின் இந்தக் கணங்களில் தமிழ்த் தேசிய ஆன்மாவைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.
ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால நிகழ்வுகளை இப்பத்தியில் பகுப்பாய்ந்தமையுடன் கிடைத்த தெளிவின் பாற்பட்டு, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்ன செய்ய வேண்டும் என்ற வினாவுடன் அடுத்த வாரப்பத்தியைத் தொடருவோமாக.
ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்
தம்பியன் தமிழீழம்
2017.01.07
8,044 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.