அமெரிக்காவின் தீர்மானமும் அமைதிவழியில் தமிழீழமும்; அற்ப அறிவு அல்லற்கிடம் -முத்துச்செழியன்-

அமெரிக்கப் பேராயத்தின் (US Congress) பேராளர்கள் அவை (House of Representatives) உறுப்பினரான விலே நிக்கல் என்பவர் தன்னைப்போன்ற மேலும் 7 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையில் நிலவும் இனச்சிக்கலுக்குத் தீர்வாக ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையினை ஏற்று விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த அமெரிக்க நிர்வாகம் உதவ வேண்டுமெனவும் ஈழத்தமிழர்களுடன் அமெரிக்காவானது தனது இராசதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டுமெனவும் கோரும் தீர்மானத்தை அமெரிக்கப் பேராயத்தில் அறிமுகப்படுத்தினார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரப்படுகின்ற வேளையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தீர்மானமானது இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்குமாறு வலியுறுத்தியதோடு, இதேபோல தேசிய இனச்சிக்கல் நிலவிய தென்சூடான், மொன்ரிநீக்ரோ, கிழக்குத்தீமோர், பொஸ்னியா, எரித்திரியா மற்றும் கொசோவா போன்ற இடங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ஈழத்தமிழர்கள் தமக்கு உரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் தமது தலைவிதியைத் தீர்மானிக்க வழிசெய்யும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றது.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பெறுதி என்ன? இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் தீர்மானங்களின் நிலை என்னவானது? எந்தவொரு பேராளர் அவை உறுப்பினரும் தமது மனவிருப்பின் படி எந்தவொரு தீர்மானத்தையும் அறிமுகப்படுத்த முடியும் என்ற நிலையில் அறிமுகப்படுத்தப்படும் தீர்மானங்களானவை அமெரிக்கக் கொள்கை வகுப்புச் செயன்முறையில் ஏற்படுத்தவல்ல தாக்கங்கள் எவை? என்ற எந்த வினாக்களையும் எழுப்பாது அமெரிக்கப் பேராயத்தில் தமிழீழத்திற்கான வாக்கெடுப்புக்கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் செய்தி வெளியிட்டு, அதன் மீது தமிழ் மக்கள் நம்பிக்கைகொள்ளுமாறு அதனைப் பேசுபொருளாக்கி, தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியலையே தொடர வேண்டுமென்று, அதுவும் தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்தவர்களின் தயவுக்காகத் தமிழர்கள் காத்திருக்கும் அரசியலையே தொடர வேண்டுமென்று தமிழர்களை அரசியல் நீக்கம் செய்ய முனைபவர்கள் விரும்புகிறார்கள். இதனால் இது குறித்து எமது மக்களை அரசியல் விழிப்பூட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் இப்பத்தி எழுதப்படுகிறது.

அமெரிக்கப் பேராயத்தில் (US Congress) அறிமுகப்படுத்தப்படும் தீர்மானங்கள் அடுத்தகட்டத்திற்கு நகர்வதற்கான பொறிமுறை

அமெரிக்கப் பேராயத்தில் வெளிநாட்டு அலுவல்களுடன் தொடர்புடைய தீர்மானமொன்றானது பேராளர் அவையைச் சேர்ந்த உறுப்பினர் (House of Representatives) சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்தக் குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய குழுவிற்கோ அல்லது குழுக்களிற்கோ அந்த அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம் தொடர்பாக மதிப்பாய்வு செய்வதற்குப் பரிந்துரைக்கப்படும். அந்தத் தீர்மானம் தொடர்பாக பேராளர் அவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பிற்குச் செல்வதற்கு முன்பாக, அந்த மதிப்பாய்வுடன் தொடர்புடைய குழுவானது தகவல்களைத் திரட்டி மெய்ப்புப்பார்த்தும் உசாவல்களை நடத்தியும் அந்த அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும். வாக்கெடுப்பிற்கு எடுத்துச் செல்லக்கூடியளவு பொருத்தப்பாடுடைய தீர்மானமதுவெனத் தொடர்புடைய குழுவானது முடிவுசெய்தால், பேராளர் அவை உறுப்பினர்களிடையே அந்தத் தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒருவேளை, அந்தத் தீர்மானமானது பேராளர் அவை உறுப்பினர்களிடையே இடம்பெறும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றால், அது தொடர்பில் மூதவை (Senate) உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடைபெறும். மூதவை உறுப்பினர்களிடையே நடைபெறும் வாக்கெடுப்பிலும் அந்தத் தீர்மானம் வெற்றிபெற்றால் அந்தத் தீர்மானமானது அமெரிக்க அதிபரின் ஒப்புதலிற்காக அனுப்பிவைக்கப்படும். பேராளர் அவை மற்றும் மூதவை என இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தீர்மானம் வெற்றிபெற்றிருந்தால் மாத்திரமே அமெரிக்க அதிபர் அந்தத் தீர்மானத்தை ஏற்காமல் மறுக்க முடியாது. அப்படி 2/3 பெரும்பான்மை பெறாத தீர்மானமாகவிருந்தால் அமெரிக்க அதிபர் அந்தத் தீர்மானத்தை எளிதாக ஏற்க மறுக்கலாம்.

பேரவை உறுப்பினர்களிடையே வெற்றிபெற்ற தீர்மானத்தை ஏற்று வாக்களிப்பதானால், தான் வேண்டும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென மூதவை உறுப்பினர்கள் வலியுறுத்துவதே வழமை. மூதவை உறுப்பினர்கள் ஏற்காவிட்டால் அந்தத் தீர்மானமானது மேற்கொண்டு நகராது. உண்மையில், அமெரிக்காவின் வல்லாண்மைக்கும் அதன் சந்தை நலன்கட்கும் இயைந்து போகுமாறு பல தீர்மானங்களை நீர்த்துப்போகச் செய்தே மூதவை தீர்மானங்களை ஏற்று வாக்களிப்பதுண்டு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கடந்து ஒரு தீர்மானமானது அமெரிக்க அதிபரின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றப்பட்டால், அதன்படி நடவடிக்கை எடுக்கவோ, அதைச் செயலாக்கம் செய்யவோ வேண்டுமென்ற கடப்பாடு எதுவும் கிடையாது என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

மாந்தநேய உதவிகள், அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள், பாலத்தீனியர்களின் உரிமைச் சிக்கல், இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தும் முயற்சிகள், பாலத்தீன மக்களின் தன்னாட்சியுரிமை போன்றவற்றின் அடிப்படையில் பாலத்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பல தீர்மானங்கள் அமெரிக்கப் பேராயத்தில் பேராளர் அவை உறுப்பினர்களில் சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்படியாகப் பாலத்தீனத்திற்கு ஆதரவாக அறிமுகப்படுத்தப்படும் தீர்மானங்கள் முதற்கட்ட முனைப்புகளிலேயே தோற்கடிக்கப்பட்டு எள்ளலுக்குள்ளாவதே அமெரிக்கப் பேராயத்தில் நடந்தேறியிருக்கின்றன என்ற வரலாற்று மெய்நிலையைத் தமிழ்மக்கள் மனங்கொள்ள வேண்டும். இரசியாவின் ஒருசில நடவடிக்கைகட்கு ஆதரவான தீர்மானங்கள் கூட ஒரு சில பேராளர் அவை உறுப்பினர்களால் அமெரிக்கப் பேராயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் நிலை என்னவாயிருக்குமென்று கூறவேண்டியிராது என்பது உறுதி. எனவே, அண்மையில் தமிழீழத்திற்கு ஆதரவாக அமெரிக்கப் பேராயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானத்தின் நிலை என்னவாகும் என்பதைத் தமிழ் மக்கள் ஐயந்திரிபறப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம். 

பிரித்தானியரின் காலனியாக வாழ்ந்த காலத்தில் தமிழ்மக்களைப் பீடித்திருந்த அடிமை மனநிலையானது தமிழர்களின் அரசியலிலும் வாழ்நிலையிலும் இற்றைவரை தேய்வின்றித் தொடர்கின்றது. பிரித்தானியாவிடம் முறையிடவும் அவர்களின் தயவுக்காக ஏங்கிச் சலுகை பெறுவதையுமே இவ்வுலகில் வாழ்வதற்கான வழியென்று சிந்தையில் நிறுத்திய தமிழர்களின் காலனிய அடிமை அரசியலே வெவ்வேறு தளங்களில் இற்றைவரை தொடர்கின்றது. அன்று பிரித்தானியர்களை உலகின் வல்லமை பொருந்திய ஆற்றலென்று பெருமைகூறி அவர்களின் ஆட்சியில் வாழக் (அடிமைப்பட்டுக் கிடப்பது) கிடைத்ததை எண்ணிச் சிலாகித்துக் கொண்ட தமிழர்கள் இன்று பிரித்தானியாவின் இடத்தில் அமெரிக்காவை வைத்து அவ்வாறான சிந்தனையையே தொடர்கிறார்கள். தமிழர்களின் அரசியலிலும் வாழ்வியலிலும் காலனிய நீக்கம் செய்யப்படாத நிலையே இற்றைவரை தொடர்கிறது.

உலகில் வல்லாண்மை பொருந்தியவர்களின் அடக்குமுறைகளிற்கு நியாயம் கற்பிக்கவும் அவற்றைக் கொண்டாடவும் செய்கின்ற ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானவர்களின் மனநிலையானது அவர்கள் விடுதலையை வென்றெடுக்கத் தகுதியானவர்களா என்று ஐயங்கொள்ளுமளவிற்கு எல்லை தாண்டிப் போகின்றது. அமெரிக்கா உலகின் வல்லாண்மையாகி தனது தலைமையில் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கைப் (Unipolar) பேணியது என்பது எவ்வளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு அமெரிக்காவால் மட்டுமல்ல இனி எந்தவொரு நாட்டினாலும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கைப் பேண முடியாது என்பதும் உண்மையாகும். பல்துருவ உலக ஒழுங்கு (Multipolar World Order) அமைந்துவரும் நிகழ்கால உலக அரசியற் செல்நெறி பற்றிய தெளிவான பார்வையானது விடுதலைக்காகப் போராடும் நாடற்ற தேசமாகிய தமிழீழ தேசத்திற்கு இன்றியமையாதது ஆகும். எனவே, ஒடுக்கும் அமெரிக்கா குறித்த மிகைமதிப்பீட்டிலிருந்து வெளியேறி, மாறிவரும் உலகில் அமெரிக்காவின் வல்லாண்மை எத்தகையது என்ற புரிதலை விடுதலைக்காகப் போராடும் தமிழ்த்தேசியர்கள் அடைவது இனியும் தட்டிக்கழிக்க முடியாத வரலாற்றுத் தேவையாகின்றது.

தமிழினவழிப்பில் அமெரிக்காவின் பங்கு

தமிழினப் பகையாம் இந்தியாவானது விடுதலைப் புலிகள் அமைப்பை 1992 ஆம் ஆண்டு தடைசெய்த பின்பாக விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்த முதலாவது நாடு அமெரிக்காவே. 1997 இல் விடுதலைப் புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடைசெய்த அமெரிக்கா, அந்தத் தடையைப் பயன்படுத்தி அமெரிக்காவில் வசிப்பவர்கள் புலிகளுக்கு உதவிவழங்குவதைச் சட்டத்திற்குப் புறம்பான செயலாக்கியதுடன் அமெரிக்காவிலிருந்த தமிழீழ விடுதலைக்கான புலிகளின் சொத்துகளையும் முதலீடுகளையும் அமெரிக்க வல்லூறு முடக்கியது. இந்த அமெரிக்காவின் தடையை அடியொற்றியே 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளானவை கூட்டாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பெனப் பட்டியற்படுத்தித் தடைசெய்ததன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டமானது உலகரங்கிற் தனிமைப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலமாக (Office of Foreign Assets Control) விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பின் மீது குறிவைத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அத்தனை நிதி நடவடிக்கைகளையும் பரிமாற்றங்களையும் முற்றாக அமெரிக்கா முடக்கிப் போட்டது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு விடுதலைப் புலிகளிற்கு உதவ முற்பட்டவர்களைக் கைது செய்து கடுமையான வழக்குகளில் அமெரிக்கா சிறைப்படுத்தியது. உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் என்ற போர்வையில் இராசதந்திர அணுகுமுறைகள் மூலம் விடுதலைப் புலிகளின் இயங்காற்றலை முடக்கிப் போட்டதில் இந்தியாவிற்கே அப்பனாக அமெரிக்காவே இருந்தது. இராணுவ உதவிகளை நேரடியாக வழங்குதல், உளவுத்தகவல்களைப் பகிர்தல், பயிற்சியளித்தல், போர்க்கருவிகளை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்வதைத் தடுப்பது மற்றும் அதையும் மீறிக் கொள்வனவு செய்யப்பட்டு ஏற்றிவரப்பட்ட போர்க்கருவிகளை நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கை எடுப்பது, சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான போரினால் தனது போரிடும் ஆற்றலை இழந்திடாமல் இருப்பதை உறுதிப்படுத்த நிதி மற்றும் போர்க்கருவிகளை வழங்கல் என 1990 களில் இருந்து முள்ளிவாய்க்கால் பேரழிவுவரை புலிகளை அழிப்பதில் அமெரிக்காவானது இந்தியாவுடன் இணைந்து முதன்மைப் பங்காற்றியது.

CNN, The New York Times, The Washington Post, Fox News, NBC News, ABC News, CBS News, Associated Press (AP), The Wall Street Journal போன்ற தனது ஊடகங்கள் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயலாக உலகெங்கும் பரப்பி உலக மக்களிடத்தில் தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்தின் தேவை பற்றிய செய்திகள் சென்று சேராமல் பார்த்துக்கொண்டதில் அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியது என்பதை உலகத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.

அமெரிக்காவின் வல்லாதிக்க அரசியல் வரலாறு

உலகப்போர்களில் அழிவுகளைச் சுமக்குமளவிற்குப் பங்கெடுக்காத அமெரிக்காவானது பருத்தி, கோதுமை, உலோக உற்பத்தி, இறப்பர், வாகன உற்பத்தி என பல்வேறு உற்பத்திகளில் கோலோச்சி 1910 இல் 2,000 தொன்களாக இருந்த தனது தங்க இருப்பை 1914 இல் 20,000 தொன்களாக உயர்த்தியது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியா, இரசியா, பிரான்ஸ், ஜேர்மனி, யப்பான் என அனைத்து நாடுகளும் தொடர்ச்சியான போர்களினாலும் ஏற்பட்ட பேரிழப்புகளாலும் வலுக்குன்றியிருந்த நிலையைப் பயன்படுத்திய அமெரிக்காவானது இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் உலக வர்த்தகத்தை ஆதிக்கம் செய்யும் நாணயமாக தனது டொலரை நிலைநிறுத்தியது. தங்கத்திற்கு நிகரான டொலரின் மதிப்பை உறுதிசெய்வதாக அமெரிக்கா 44 நாடுகளுடன் Bretton Woods Agreement என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலம் டொலர் இராசதந்திரம் (Dollar Diplomacy) உலக அரசியலானது.

உலக வங்கியும், பன்னாட்டு நாணய நிதியமும் (IMF) அமெரிக்காவின் சந்தை நலன்கட்காக உலக நாடுகளை வளைத்துப்போடும் அமெரிக்காவின் ஏவல் அமைப்புகளாகத் தொழிற்பட்டு டொலர் இராசதந்திரத்தை உலகளவில் பரவலடையச் செய்தன. 1945 இல் பிராங்ளின் ரூஸ்வேல்ட் அமெரிக்க அதிபராகவிருந்த போது சவுதி அரேபிய மன்னருடன் செய்த ஒப்பந்தமே வளைகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்க நிலவுகைக்குக் காரணமாக அமைந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை அமெரிக்காவிற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமென்றும், அதற்குக் கைமாறாக சவுதி அரேபியாவிற்கு இராணுவ தளபாடங்களை வழங்குவதென்றும் சவுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாகவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எண்ணெய் வளநாடுகளின் கூட்டமைப்பான OPEC என்ற அமைப்பானது 1960 இல் டொலருக்கு மட்டுமே எண்ணெய் வளங்கள் விற்பனை செய்யப்படும் என்று முடிவுசெய்தமையே டொலர் அரசியலின் உச்சக்கட்ட வளர்ச்சியாக அமைந்தது.

வியட்னாமின் போரின் விளைவு, அதிகரித்த அமெரிக்காவின் பொறுப்புகள், உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு என்பன 1970 களில் அமெரிக்காவிற்குப் பின்னடைவைக் கொடுத்தன. 1950 களில் 22,000 தொன்கள் தங்க இருப்பு வைத்திருந்த அமெரிக்காவின் தங்க இருப்பானது 1970 களில் 10,000 தொன்களாகக் குறைந்ததால் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன்  Bretton Woods Agreement இலிருந்து 1973 இல் வெளியேறினார்.

வியட்னாமிய மக்களினதும் போராளிகளினதும் விடுதலை வேட்கைக்கும் போர்க்குணத்திற்கும் முன்னால் அமெரிக்காவின் இராணுவ வல்லாண்மை மண்கவ்வியதுடன், “வியட்னாம் போர் எதிர்ப்பு இயக்கம்’ என்பது அமெரிக்காவிலும் அமெரிக்காவின் நட்புநாடுகளிலும் மக்களிடத்தில் வலுப்பெற்று வந்தமையால் வேறுவழியின்றி வியட்னாமை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு அமெரிக்கா வந்தபோது, தென்வியட்னாமில் தனது கைப்பொம்மையை ஆட்சியில் வைத்திருக்க முனைந்து அதிலும் தோல்வியைத் தழுவி வெட்கக் கேட்டுடனே 1975 இல் அமெரிக்கா வியட்னாமை விட்டு வெளியேறியது.

தனக்குவப்பான கைப்பொம்மைகளை உலகெங்கிலும் ஆட்சியில் அமரச் செய்யும் அமெரிக்காவின் அரசியல்

1950 களில் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜகொபோ ஆபென்ஸ் இனை ஆட்சியிலிருந்து அகற்றித் தமது நலன்கட்கு இசையக்கூடிய ஒரு பொம்மை அரசை கவுதம்மாலாவில் ஆட்சியில் ஏற்றியமை, தமக்குவப்பான பட்டிஸ்ரா ஆட்சியினைக் கியூபாவில் தொடரச் செய்ய தன்னாலியன்ற அத்தனை சூழ்ச்சிகளைச் செய்தும் அதனையும் மீறி புரட்சிகர சோசலிச அரசமைத்த பிடல் கஸ்ரோவோக் கொலை செய்யவும், கொலை செய்ய இயலாது போனால் ஆட்சியிலிருந்து அகற்றவும் 1960 களில் சூழ்ச்சி செய்தமை, சிலியின் மிகச் சிறந்த அதிபராகவிருந்த சல்வடோர் அல்லெண்டேயினை ஆட்சியிலிருந்து அகற்ற இராணுவச் சூழ்ச்சியை ஏவிவிட்டுத் தனது கைப்பொம்மையான ஜெனரல் அகஸ்டோ பின்செட்டினை 1970 களில் ஆட்சிக்குக் கொண்டுவந்தமை, நிகரகுவாவில் நிகரமை (Socialist) ஆட்சி நடத்திய சண்டினிஸ்ராவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க தனது நலன்கட்கு இசையும் கன்ரோ என்ற குழுவை 1980 களில் ஏவிவிட்டமை, ஆர்ஜென்ரீனாவில், கொண்டூராசில், கெய்ட்ரியில் நடந்தவை என இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நல்லாட்சி நடத்திய அந்த மண்ணின் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்த்துத் தனது கைப்பொம்மைகளாகச் செயற்பட விரும்பும் ஆட்சியாளர்களைக் கொண்டு அந்த நாடுகளில் தனக்கிசைவாக ஆட்சிமாற்றங்களைச் செய்வதை அமெரிக்கா என்ற வல்லூறு தனது வாடிக்கையாக வைத்திருக்கிறது.

2001 செப்டெம்பர் 11 இல் நிகழ்ந்தேறிய நிகழ்வைப் பயன்படுத்தி எண்ணெய் வளமிக்க முழு நடுக்கிழக்கு (Middle East) நாடுகளையும் தனது இராணுவ வலிமைக்குக் கீழ்க் கட்டுப்படுத்துவது என அன்றைய புஸ் நிர்வாகம் முடிவு செய்தது. அந்த முயற்சி பின்னடைவையும் தோல்வியையும் தழுவவே லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளை வன்கவர்ந்து தனது ஆளுகைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயன்று அதிலும் தான் நினைத்ததைச் செய்து முடிக்க முடியாமல் பின்வாங்கியுள்ளது.

திரில்லியன் கணக்கில் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்து அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் மீதான வன்கவர்வானது 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து வெளியேறுவதன் மூலம் முடிவிற்கு வந்திருக்கிறது. டொனால்ட் ரம்ப் தலிபான்களுடன் இரகசிய ஒப்பந்தங்களினை மேற்கொண்டதன் பின்பாகவே அமெரிக்கப் படைகள் ஆப்கான்ஸ்தானிலிருந்து வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதன் பின்னால் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குப் பின்னடைவு ஏற்படவில்லை என்ற பரப்புரை நோக்கம் உண்டு. உண்மையில், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் முடிவை பென்டகன் ஆய்வாளர்களும், நேட்டோ படைகளின் கட்டளை அலுவலர்களும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் கடுமையாக எதிர்த்துக் கருத்துகளைப் பதிவுசெய்தமையை ஆய்வேடுகளில் காணக்கூடியதாக இருக்கிறது.

உண்மையில், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து வெளியேறுவது என்ற முடிவு உடனடியாக விரைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றல்ல. உறுதிசெய்யப்பட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரங்களானவை அமெரிக்காவிடமிருந்து ஆப்கானிஸ்தானிற்கு மாற்றப்படுமென 2010 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானின் கமிட் கர்சாய் இற்கு உறுதியளித்திருந்தார். ஒரு நாட்டை வன்கவர்ந்த பின்னர் அங்கிருந்து தனது படைகளை வெளியேற்றுவதற்கு முன்பாகத் தனது பொம்மை ஆட்சியை அங்கு ஏற்படுத்துவது அமெரிக்காவின் வழமையான நடைமுறை. தெற்கு வியட்னாமில் அமெரிக்கா இவ்வாறாக மேற்கொண்ட நடவடிக்கையானது மண்கவ்வியதைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் தனது பொம்மை அரசை ஆட்சியில் நீடிக்க வைப்பது நடவாத காரியமென்று அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.

சிரியாவினூடாக ஐரோப்பியச் சந்தைக்குச் செல்லும் இயற்கை எரிவாயுக் குழாய்களினால் குளிர்காலங்களில் தமது எரிவாயுத் தேவைக்காக ஐரோப்பிய நாடுகளானவை முற்றுமுழுதாக இரசியாவில் தங்கியிருப்பது கண்டு பொறுக்காத அமெரிக்காவானது கட்டார் மற்றும் துருக்கியினூடான எரிவாயு குழாய் வழங்கலைத் தனது ஆளுகைக்குள் மேற்கொள்ள முனைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரான், ஈராக் மற்றும் சிரியாவூடாக எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களைப் பொருத்த இரசியா தீர்மானித்தது. இந்த விடயத்தை ஊற்றுப் புள்ளியாகக் கொண்டு தனது நலன்கட்கு இசையுமாறு சிரியாவானது அமெரிக்காவால் அச்சுறுத்தப்பட்டது. இந்த அச்சுறுத்தலிற்கு அடிபணிய மறுத்த சிரியாவின் பாசர் அல் அசாட்டை ஒரு கொடுங்கோலனாகச் சித்தரித்த அமெரிக்கா அங்கு உள்நாட்டுக் கிளர்சியாளர்களுக்கு நிதியும் பயிற்சியுமளித்து சிரியாவிற்கு எதிரான தனது பதிலிப்போரை (Proxy War) 2011 இல் தொடங்கியது. அமெரிக்காவினால் வழிநடத்தப்பட்ட சிரியாவின் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்கள் பாசர் அல் அசாட்டின் அரச படைகளைத் தோற்கடித்து அமெரிக்காவிற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சூழ்நிலையிலேயே இரசியாவானது சிரியாவில் நேரடி இராணுவத் தலையீட்டைச் செய்தது. அதன் விளைவாக, சிரியாவின் அரச படைகள் இழந்த நிலங்களை மீட்டன. இது உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்திற்குக் கொடுக்கப்பட்ட வலுவான அடியென்றே கருதப்பட வேண்டும். எண்ணெய் வள ஏற்றுமதியில் அமெரிக்க டொலரை மதிக்காமல் மாற்றினைத் தேடியமைக்காகவே லிபியாவில் கடாபியும் ஈராக்கில் சாதாமும் அமெரிக்க வல்லூறின் ஆதிக்கவெறிக்கு இரையாகினர்.

1995- 2007 வரையான காலப்பகுதியில் உலக இராணுவச் செலவீனங்களில் 40% அமெரிக்காவினுடையது. அதேவேளை, அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் இராணுவச் செலவீனமானது உலகின் மொத்த இராணுவச் செலவீனத்தின் 75% ஆக இருந்தது. ஆனால், 2008 இற்குப் பின்னர் அமெரிக்காவில் பொருண்மிய நெருக்கடி ஆரம்பித்து விட்டது. 2001 இல் உலகப் பொருண்மியத்தில் 30% ஆக இருந்த அமெரிக்காவின் பங்கானது 2020 இல் 25% ஆகக் குறைந்துள்ளது. இதேகாலப்பகுதியில், உலகப் பொருண்மியத்தில் சீனாவின் பொருண்மியப் பங்களிப்பானது 4% இலிருந்து 17% ஆக அதிகரித்துள்ளமையை உலக வங்கி அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன. 2015 ஆம் ஆண்டில் உலகப் பொருண்மியத்தில் 25% ஆக இருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருண்மியப் பங்களிப்பானது 2020 இல் 18% ஆகக் குறைந்துள்ளமையை உலக வங்கியின் அறிக்கைகளில் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது. இதிலிருந்து அமெரிக்காவினதும் அதன் மேற்குலகக் கூட்டாளிகளினதும் வல்லமை உலகப் பொருண்மியத்தில் எவ்வாறு வீழ்ச்சியுறுகின்றது என்பதை ஐயந்திரிபறப் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில், கொரோனாப் பெருந்தொற்றின் முன்னரே அமெரிக்கா தலைமையிலான ஒருதுருவ உலக ஒழுங்கு சரியத் தொடங்கிவிட்டது. உலகமயமாகிய சந்தைப் பொருண்மியத்தின் தோல்விகளையும் தனது பின்னடைவுகளையும் மக்கள் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக நிலவும் அத்தனை துன்பங்களுக்கும் கொரோனாப் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டுவதிலும் அதையிட்டு சீனாவைக் குற்றவாளியாகப் பரப்புரை செய்வதிலும் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டது. இருப்பினும், அமெரிக்காவின் மேலாதிக்கம் சரிந்தாலும், அதன் தலைமையிலான ஒருதுருவ உலக ஒழுங்கு ஆட்டங்கண்டாலும், உலகின் முதன்மையான இராணுவ வலிமை கொண்ட நாடாக இன்னும் சில பத்தாண்டுகளிற்குப் பிறகும் அமெரிக்காவே நீடிக்கும் என்ற மெய்நிலையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

உக்ரேன் – இரசியப் போரும் அமெரிக்காவின் அரசியலும்

உண்மையில், உக்ரேன் – இரசியப் போர் என்பது நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்க முனைப்பின் விளைவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுவரை, அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு ஆளுமையையும் வல்லமையும் கண்டு அமைதியாக ஒதுங்கியிருந்த இரசியாவிற்கு தனது இராணுவத் தலையீடானது சிரியாவில் அமெரிக்காவிற்குத் தோல்வியை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட எழுகை உளவியலாலும், ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா வந்துள்ளமையைக் கண்ணுற்றமையாலும் உக்ரேனை வன்கவர்ந்து அமெரிக்காவின் பதிலிப் போரை (Proxy War) எதிர்கொள்ளலாம் என்ற துணிவு இரசியாவிற்கு ஏற்பட்டிருக்கின்றது.

சிறுகச் சிறுக சிதைக்கப்படுவதைக் காட்டிலும் வாழ்வா அல்லது சாவா என்ற கணக்கில் ஒரு போரை எதிர்கொள்வது எவ்வளவோ மேல் என்ற நிலைப்பாட்டிற்கு இரசியா வந்திருப்பதன் விளைவே உக்ரேன் மீதான அதன் போர் நடவடிக்கை எனலாம். இரசியாவின் உக்ரேன் மீதான வன்கவர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவியலாது. ஏனெனில் இரசியாவின் வல்லாண்மைக் கனவென்பது உலகில் நிகரமையை (Socialism) நிலைநிறுத்தச் செய்யும் நோக்கின்பாற்பட்டதல்ல, மாறாக, இரசியாவின் நிதிமூலதனமும் அதனது ஆதிக்க எண்ணங்களும் உலகெங்குமுள்ள பல்வேறு தேசிய இனவிடுதலைப் போராட்டங்களைச் சிதைக்கும் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். இருப்பினும், ரசியாவின் உக்ரேன் மீதான வன்கவர்வானது, இன்னுமொரு வகையில் அமெரிக்காவின் பதிலிப் போர் (Proxy War) மீதான எதிர்நடவடிக்கையாகவும் பார்க்கப்பட வேண்டும். இரண்டாம் உலகப்போரின் பின்னர் வழங்கப்படும் ஆகக் கூடிய இராணுவ உதவியாக (61 பில்லியன் அமெரிக்க டொலர்) உக்ரேனிற்கு வழங்கப்பட இருக்கும் இராணுவ உதவித் திட்டத்திற்கு அமெரிக்கப் பேராயம் (US Congress) ஒப்புதலளித்திருக்கின்றது.

போரின் தொடக்கத்தில் ரசியாவின் தாங்கிகளானவை அமெரிக்காவின் ஜவலின் எனப்படும் தாங்கித் தகர்ப்புக் கருவியின் தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதைத்தழிக்கப்பட்டதால், இரசியா ஆமை வேகத்திலேயே உக்ரேனில் தனது படைநகர்வைச் செய்ய இயலுமானதாக இருந்தது. அதாவது இதுவரை ஆண்டிற்கு 6 மைல் என்ற கணக்கிற்தான் ரசிய படைகளால் முன்னகர முடிந்திருக்கின்றது.

ஆளில்லாத் தாக்குதல் வானூர்திகளை உக்ரேன் தானே உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் இரசியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு ஆற்றல்கள் மீது உக்ரேனால் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த முடிந்திருக்கின்றது. உக்ரேனிற்கு இந்தப் போரில் உதவி வழங்கும் மேற்குநாடுகளைக் கூட்டாகப் பார்த்தால் அவற்றின் மொத்தத் தேசிய உற்பத்தி 50 திரில்லியன் டொலரிலும் கூடுதலானது. இதனால் இந்த நாடுகளின் கூட்டான பொருண்மிய வலுவினால் இரசியாவின் முன்னகர்வுகளிற்கு எதிராக சென்ற ஆண்டு அளவு கணக்கில்லாமல் எறிகணைத் தாக்குதல்களை உக்ரேன் மேற்கொண்டிருந்தது. அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப் பாதுகாப்பிற்கு ஒதுக்க வேண்டிய நிதி போன்றவற்றைக் காரணங்காட்டி அமெரிக்கப் பேராயத்தின் பேச்சாளர் உக்ரேனிற்கு வழங்க வேண்டிய உதவித்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் சில மாதங்கள் வைத்திருப்பதாக அறிவித்திருந்தார். 1 பிளாட்டூன் இராணுவத்தின் முன்னகர்வைத் தடுக்க பல டசின் ஆட்லறி எறிகணைகள் தமக்குத் தேவைப்படுவதாக உக்ரேன் இராணுவத்தின் ஆட்லறி எறிகணை செலுத்தலிற்கான கட்டளை அதிகாரி அண்மையில் ஓர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவின் ஜவலினால் தொடக்கத்தில் தமது தாங்கிகள் கூடுதலானளவிற் தகர்க்கப்பட்டதால், தனது மின்னணுப் போரியல் ஆற்றலைப் (Electronic Warfare Capabilities) பயன்படுத்தித் தாங்கிகளின் மேற்பரப்பை ஆளில்லா வானூர்திகளின் குண்டுவீச்சுகள் அணுகாமல் சற்றுத் தொலைவிலே வெடிக்கச் செய்ய வைக்கும் உலோக விரிப்பைப் பயன்படுத்தி இரசியா தனது தாங்கிகள் தகர்க்கப்படுவதைப் பெரிதும் குறைத்திருந்தது. ஆனால், அந்தத் தொழினுட்பம் யாதென அறிந்து அதனை முறியடிக்கும் நோக்குடன் உக்ரேன் படைகள் இரசியாவின் தாங்கியொன்றைச் சுற்றிவளைத்துக் கடத்திச் சென்று அதற்கான முறியடிப்பு உத்தியையும் வகுத்துவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் இரசியா தாக்குதல் நகர்வுகளை விரைவுபடுத்தும் என்பதால், உக்ரேனில் திடீரென ஏற்பட்ட போர்க்கருவிகளின் பற்றாக்குறையைச் சரிசெய்ய அமெரிக்கப் பேராயம் 61 பில்லியன் டொலர்களை உக்ரேனிற்கு வழங்குவதற்கு ஒப்புதலளித்துவிட்டது. ஆளில்லா வானூர்திகளைத் தவிர்த்துப் பார்த்தால், ஏனைய அத்தனை போர்க்கருவிகளிற்காகவும் முற்றுமுழுதாக மேற்குலகின் வழங்கலிலேயே உக்ரேன் தங்கியுள்ளது. எனினும், ஒரு சில உலங்கு வானூர்திகள் சுடப்பட்டமையைத் தவிர்த்துப் பார்த்தால், இரசியாவின் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Air Defense System) போதுமானதாக இல்லையென்றே சொல்லப்படுகின்றது. இப்போது வழங்கப்பட இருக்கும் அமெரிக்காவின் பெருநிதியில் அதனைச் சரிசெய்யும் திட்டம் அமெரிக்காவிடம் உறுதியாகவிருக்கும். 60 இற்கும் கூடுதலான எண்ணிக்கையில் F 16 தாக்குதல் வானூர்தியை அமெரிக்கா உக்ரேன் போரில் ஈடுபடுத்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் லிங்- 16 எனப்படும் நேட்டோ நாடுகளிற்கிடையிலான தொடர்பாடல் அமைப்பிலும் உக்ரேன் இணைக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபோரில் உக்ரேனின் வலுவைக் கூட்டும் என்பது உறுதி. ஆனாலும், சரியான ஓடுதளங்கள் இல்லாமல் பயன்படுத்த முடியாத F 16 இனை உக்ரேனிற்கு வெளியேயிருந்து எடுத்து வந்து பயன்படுத்துவது பற்றியும் நேட்டோ மட்டத்தில் பேசப்படுகின்றதாக இராணுவ ஆய்வேடுகள் கருத்துச் சொல்கின்றன.

போர்க்கருவிகளின் பற்றாக்குறை குறிப்பாக எறிகணைகளிற்கும் ஆளில்லா வானூர்திகளுக்குமான தட்டுப்பாடு இரசியாவில் நிலவுகின்றது. மேற்குலகிலே முற்றுமுழுதாகத் தங்கியிருக்கும் உக்கிரேனைப் போல் இல்லாமல் பெருமளவிற் போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் ஆற்றலுடைய நாடாக இரசியா இருந்தாலும், தற்போது ஈரானிலும் வடகொரியாவிலும் போர்க்கருவிகளிற்காக இரசியா தங்கியிருக்கின்றது. வட கொரியாவின் உற்பத்திகளில் 30% ஆனவை சரியாகச் செயற்படுவதில்லை என்ற மனக்குறை இரசிய இராணுவத்திடமிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இந்த இரசியா- உக்ரேன் போரில் 50,000 இற்குமேற்பட்ட இரசியர்கள் இறந்துள்ளார்கள் அல்லது போர்க்களத்திற்குத் திரும்ப முடியாத நிலையிலுள்ளார்கள். 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனவே, நீண்டு செல்லும் போர்க் களங்களில் ஆட்பற்றாக்குறையை ஈடுசெய்ய இரசியாவிலுள்ள ஏழ்மையான ஊர்களில் வாழும் இளையோர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கைகளை இரசியா எடுத்து வருகின்றது.

இந்த உலகை ஆதிக்கம் செய்து தனது ஒற்றை ஆளுகைக்குள் வைத்திருப்பது என்ற ஒரேயொரு திட்டம் (Plan A) மட்டுமே அமெரிக்காவிடம் உண்டு என்றும் அதனிடம் வேறு எந்த மாற்றுத் திட்டமும் (Plan B) இல்லை என்றும் கனடாவிலுள்ள மொனிரோபோ பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்றுறைப் பேராசிரியரும் புவிசார் பொருண்மிய ஆய்வாளருமான ராதிகா தேசாய் அண்மையில் தெரிவித்திருக்கிறார். முன்னரைப்போல அமெரிக்காவினால் இந்த உலகை ஒற்றைத்துருவமாக ஆளுகை செய்ய இயலவில்லை என்றும் இசுரேலிடம் கூட இறைஞ்சியே இணங்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் அமெரிக்கா இருப்பதாகவும், மேலும் உக்ரேன் – இரசிய போர் விடயத்தில் தான் நினைத்தபடியான முடிவை எடுக்குமாறு மூன்றாமுலக நாடுகளை மிரட்டி வழிக்குக்கொண்டுவரவும் அமெரிக்காவால் இயலவில்லை என்பதை நாம் மனங்கொள்ள வேண்டுமென்றும் ராதிகா தேசாய் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க வங்கிகளில் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதன் மூலமே இருநாடுகளிற்கிடையிலான பணப்பரிமாற்றங்களையும் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள இயலும் என்ற நிலையை உருவாக்கிய SWIFT என்ற வங்கி நடைமுறை அமைப்பின் மூலம் உலகின் பணப்பரிமாற்றங்களைத் தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவானது, அந்த வல்லமையைப் பயன்படுத்தி 300 பில்லியன் டொலர் பெறுமதியான இரசியாவின் பணத்தை அமெரிக்காவில் முடக்கியுள்ளது.

இரசியா தனது போரிடும் ஆற்றலை இழக்கும், பொருண்மியத்தில் வலுக்குன்றும், இரசியாவின் எரிவாயுவில் ஐரோப்பிய நாடுகளின் தங்குநிலை அற்றுப்போகும், போரில் தாம் செய்யும் இராணுவச் செலவீனங்களில் ஒருபகுதியை போர்க் கருவி விற்பனை மூலம் பெற இயலுவதோடு போரின் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளின் ஒப்பந்தங்கள் மூலம் பெருமளவு வருவாயை ஈட்டலாம் போன்றவற்றை உக்ரேன் – இரசிய போரின் விளைவுகளாக அமெரிக்காவும் அதனது மேற்குலகக் கூட்டு நாடுகளும் கணித்திருந்தன. ஆனால், நீண்டு செல்லும் இந்தப் போரிற்கு மிகையாகச் செய்த செலவுகளாலும் இரசியாவுடன் முறித்துக் கொண்ட வணிகத்தினாலும், போர் ஏற்படுத்திய விநியோகத் தடங்கல்களாலும் மேற்குலக நாடுகளின் பொருண்மியம் சரிவுக்குள்ளாகிப் பொருண்மிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. இது அந்த நாடுகளில் வாழும் மக்களிடத்தே கிளர்ச்சிகளை ஏற்படுத்திவிடுமோ என்று அந்த நாடுகள் அஞ்சுமளவிற்கு மக்களிடத்தில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரேன் – இரசிய போரில் அதிகமாக முதலிட்டுள்ளதால் போரினைத் தொடரவும் முடியாமல் இடைநிறுத்தவும் முடியாமல் மேற்குலக நாடுகள் திண்டாடுகின்றன. அதேவேளை, இந்தப் போரினால் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இரசியா வலுக்குன்றி வருகின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இரசியாவின் கூலிப்படையாக முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினர்

மேற்குலகு நாடுகளின் நன்கு பயிற்றப்பட்ட கூலிப்படைகளே கூடுதலானளவில் இரசியாவிற்கு எதிராக இறக்கிவிடப்பட்டு இருப்பதால், கூலிப்படைகளைப் பெற்றுக்கொள்வதில் இரசியாவும் முனைப்புக் காட்டி வருகின்றது. இரசியாவிற்கு ஆதரவான கூலிப்படையாக முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினர் களமாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொருண்மிய நெருக்கடிகள் இலங்கையில் நிலவிவரும் சூழலில் பெருந்தொகை ஊதியம் கிடைக்கும் என நம்பி இவ்வாறு இலங்கையில் முன்னாள் இராணுவத்தினர்கள் கூலிப்படையாக இரசியா சென்று அங்கு உக்கிரேனுக்கு எதிரான போரில் ஈடுபடுகின்றனர். இந்த ஆட்சேர்ப்புத் தொடர்பில் ஓய்வுபெற்ற சிங்கள ஜெனரல்கள் இருவர் கைதாகியுள்ளனர். இவ்வாறு உக்ரேனுக்கு எதிரான போரில் பங்கேற்கும் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவத்தினர் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் 12 பேர் உக்ரேனில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னமும் 455 பேர் இரசியாவிற்காகப் போர்க்களத்தில் பங்கேற்கிறார்கள் என்றும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை அரசிற்கு அமெரிக்காவில் இருந்து வரும் பாரிய அழுத்தங்களால், இலங்கையர்கள் உரிய காரணமின்றி இரசியா செல்வது தடைசெய்யப்படுவதாக ரணில் அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.

சீனா எந்தப் பக்கம்?

ஒருதுருவ உலக ஒழுங்கின் (Unipolar World Order) உடைவானது மீண்டும் இருதுருவ (Bipolar) உலக ஒழுங்காக அல்லாமல் பலதுருவ (Multipolar) உலக ஒழுங்காகவே அமையப் போகின்றது. எனவே இரசியா – உக்ரேன் போரில் சீனா எந்தப் பக்கம் என்ற வினாவானது பொருத்தமற்றது என்பதே பல்துருவ உலக ஒழுங்கின் போக்கினைப் பற்றிய புரிதலின் அடிப்படையாகும்.

2022 இல் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இரசியாவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தில் சீனா வெளிநடப்புச் செய்திருந்ததே தவிர இரசியாவிற்கு ஆதரவாகச் செயற்படவில்லை. 1994 இல் சீனா- இரசிய எல்லைச் சிக்கல் இன்னமும் இழுபறியிலேயே உள்ளது. இரசியாவின் அமைவிடச் செல்வாக்கு நிலவ வேண்டிய நடுவண் ஆசியப் (Central Asia) பிராந்தியத்தில் சீனா 70 பில்லியன் அமெரிக்க டொலரிற்கும் கூடுதலாக முதலிட்டுள்ளது. ஆனால், இந்த சீனாவின் முதலீட்டில் 1/3 பங்கு முதலீட்டைத் தான் இப்பிராந்தியத்தில் இரசியா முதலிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவைக் காரணங்காட்டி சீனாவும் இரசியாவும் என்றைக்குமே நண்பர்களாகி விடமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, வல்லாண்மை பெற்ற எல்லா நாடுகளும் தமது சந்தை நலன்கட்காகவும் ஆதிக்க இருப்பிற்காகவும் வெவ்வேறு மூலோபாயக் கூட்டணிகளில் (Strategic Alliances) இணைந்தும் விலகியும் செயலாற்றுமென்பதே இன்றைய பல்துருவ உலக ஒழுங்கின் செல்நெறியாகிறது. உற்பத்திப் பொருண்மியத்தில் உலகினையே தாங்கி நிற்கும் சீனாவின் புவிசார் அமைவிடமென்பது அதற்கு எப்போதுமே பின்னடைவானது தான். அதன் அதிகரித்து வரும் தொழிற்துறைகளிற்குத் தேவையான எண்ணெய் வளத்தை நடுக்கிழக்கு (Middle East) நாடுகளிலிருந்து சீனாவிற்குக் கொண்டு சேர்ப்பதற்கு அமெரிக்காவின் ஆளுகை மிக்க கடற்பாதைகளைக் கடந்துவர வேண்டியிருப்பதோடு மேற்குலக நாடுகளின் ஆளுகைக்குள் இருக்கும் மலாக்கா நீரிணையைக் கடக்காமல் தென்சீனக் கடலிற்குள்ளே சீனாவால் நுழையவே முடியாது என்பதே சீனாவின் புவிசார் அமைவிடம் குறித்த மெய்நிலையாகும். எனவே, அதிகரித்து வரும் சீனாவின் பொருண்மிய மேலாதிக்கமென்பது ஒரு போதும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கிற்குத் தலைமையேற்கும் ஆற்றலைச் சீனாவிற்குக் கொடுத்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் இராணுவ மூலோபாயக் கூட்டணியான குவாட் (QUAD) என்ற கூட்டணியில் அமெரிக்காவின் இந்துமாகடல் பகுதியின் கையாளாக இருக்கும் இந்தியாவே, சீனாவின் வலிமையைப் பறைசாற்றும் சங்காய் கூட்டமைப்பிலும் உறுப்பு வகிக்கின்றது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இரசியா, சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகியவை உறுப்பு வகிக்கும் BRICS கூட்டமைப்பில் ஈரான், சவுதி அரேபியா ஆகிய எண்ணெய் வளமிக்க நாடுகள் அடங்கலாகப் புதிதாக 5 நாடுகள் இணையவுள்ளன. முரண்பட்டு நிற்கும் அரபுநாடுகளிட்கிடையில் ஒற்றுமையையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியிருப்பது நடுக்கிழக்கில் அமெரிக்காவின் வல்லமையைப் பெரிதும் பாதிக்கும். பாலத்தீனச் சிக்கலில் இசுரேலுக்கு அமெரிக்கா வழங்கும் கண்மூடித்தனமான ஆதரவும் நடுக்கிழக்கு நாடுகளில் இதுவரை அமெரிக்காவின் சொற்பேச்சுக்குக் கட்டுப்பட்டிருந்த நாடுகளைக் கூட மாற்றுத்தெரிவுகள் நோக்கிச் சிந்தைகொள்ள வைக்கின்றது. உக்ரேன் – இரசியா போர் தொடங்கிய நேரத்தில் அமெரிக்க எடுத்த எடுப்பிற்கெல்லாம் ஐரோப்பிய நாடுகள் ஆடமுடியாதென்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுமையேற்றிவிடும் அமெரிக்காவின் போக்குகளைக் கேட்டுக்கேள்வியில்லாமல் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைப் பிரான்ஸ் வெளிப்படுத்தியது.

சிரியாவில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவு, ஆப்கானிஸ்தானில் தனது பொம்மையாட்சியை நிறுவிடமுடியாமல் இராணுவ வெளியேற்றம் செய்தமை, நீண்டு செல்லும் உக்ரேன் – இரசிய போர் ஐரோப்பாவில் ஏற்படுத்தும் பொருண்மியச் சரிவுகளிற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை, அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு வெளியே நட்புத் தேடுகின்றமை என உலக அரசியலின் போக்கு ஒற்றைத்துருவ உலக ஒழுங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து பல்துருவ உலக ஒழுங்காக நிலைமாற்றம் கொள்கின்றது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். உலக வலுச்சமநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் போராடும் நாடற்ற தேசங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் கொன்றவன் வல்லான் என்பதால் அவனிற்கு வாலையாட்டுவோம் என்ற போக்கில் நகர்ந்தால் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையடையவதும் தேச அரசமைப்பதும் வரலாற்றில் வாய்ப்பேயில்லாத விடயங்களாகிவிடும் என்ற எச்சரிக்கைச் செய்தியை மனங்கொள்வோமாக.

-முத்துச்செழியன்-

2024-06-01