“நீங்கள் மார்க்சியர்கள் என்றால் நாங்கள் மார்க்சியர்கள் அல்ல” : தமிழ்த்தேசிய நோக்குநிலையில் ஒரு உரையாடல் – முத்துச்செழியன் –

தமிழர்களின் தேச அரசான தமிழீழ நடைமுறை அரசானது இந்தியாவின் முதன்மைப் பங்கெடுப்போடும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் முழு ஒத்துழைப்போடும் சீனா போன்ற உலக வல்லாண்மையாளர்களின் துணையோடும் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் அழித்தொழிக்கப்பட்டுப் பதினைந்து ஆண்டுகளின் நிறைவை அண்மிக்கின்றோம். தமிழீழப் படைவலுவின் மேனிலையும், தமிழீழ நடைமுறை அரசின் ஆளுகையும், தமிழீழத் தனியரசமைப்பதில் உலகத் தமிழர்களின் ஒருமித்த உறுதிப்பாடும் உலகில் தமிழீழம் தனிநாடாகப் பதிவாகப்போகும் வரலாற்றின் போக்குத் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கைக் கீற்றை உலகத் தமிழர்களிடத்திலும் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் நாடற்ற தேசிய இனங்களிடத்திலும் ஏற்படுத்தின என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

உண்மையில், தமிழீழ விடுதலைப் போராளிகளின் ஒப்பற்ற ஈகங்களாலும், தம்மை ஒறுத்துப் போராடும் அசையாத் திடத்தாலும், தமிழீழ மக்கள் தமது ஆற்றல் வளத்திற்கு விஞ்சிச் செய்த பங்களிப்புகளாலும், இறுதி இலக்கில் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத் தலைமை கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியான நிலைப்பாட்டாலும், தமிழீழ விடுதலைப் போராட்டமானது பீடுநடை போட்ட அந்தப் பெருமைமிகு நாட்களை நினைத்தவாறே இன்றும் வாழாதிருப்போரும், அதை மறந்து மீதமுள்ள காலங்களைப் போறபோக்கில் கடந்து செல்லும் மனப்பாங்கு கொண்டோரும், கடந்த காலங்களை வரலாற்றின் இறந்தகாலமாகவே மனங்கொள்ளும் வரலாற்றின் இயங்கியலை மறுப்போரும், பண்டங்களை நுகரும் பிண்டங்களாகத் தம்மை உலகின் கட்டற்ற சந்தைப் பொருண்மியத்தின் நலன்கட்காக மாற்றிக்கொண்டோரும் என தமிழீழ மக்களின் சமூக வாழ்வானது இற்றைச் சூழலில் ஒழுங்கற்றுக் கிடக்கின்றது.

கருவியேந்திய தமிழீழ மறவழி விடுதலைப் போராட்டமானது இந்தியாவின் சூழ்ச்சியினாலும் உலக வல்லாண்மையாளர்களின் முழு ஒத்துழைப்பினாலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக தமிழ்மக்களிடத்திலும் உலகளவில் போராடும் மக்களிடத்திலும் பல்வேறு எதிர்ப்புரட்சிக் கருத்துகளானவை ஒடுக்குமுறை அரசுகளின் ஊடக அடியாட்கள் மூலமும் புலனாய்வு அமைப்புகள் மூலமும் கருத்தேற்றம் செய்யப்பட்டன. அதாவது, முப்படைகளையும் கொண்ட உலக இராணுவங்களின் போரிடுந்திறனை மேவி நின்ற விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது இனி மறவழிப் போராட்டங்கள் மூலம் விடுதலையை வென்றெடுப்பது இயலாத காரியம் என்பதற்கான சான்று என்றும் இனி அமைதி வழிகளில் விட்டுக்கொடுப்புகளுடன் பேச்சுகளில் ஈடுபட்டு வாய்ப்புள்ள சில உரிமைகளைப் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியெதுவும் போராடும் தேசிய இனங்களிற்கு இல்லையென்றும் பரவலான கருத்துருவாக்கங்கள் விடுதலைக்காகப் போராடும் அமைப்புகட்குள் ஊடுருவிச் சென்று பரப்பப்பட்டன.

இந்த எதிர்ப்புரட்சிக் கருத்தேற்றங்களைச் செய்வதில் முன்னின்று இழிசெயலாற்றியது இந்தியா என்ற தேசங்களினதும் தேசிய இனங்களினதும் சிறைக்கூடமே. நாகலாந்தின் விடுதலை அமைப்பானது மறவழிப் போராட்டத்தினைக் கைவிட்டு “பகிரப்பட்ட இறைமை” போன்ற கதையளப்புச் சூழ்ச்சிகளிற்குள் சிக்குண்டுபோவதற்கு அணியமானபோது, தாம் முப்படைகளையும் கொண்டிருந்த வலுவான விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவைப் படிப்பினையாகப் பெற்றே அத்தகைய முடிவிற்குத் தாம் வந்திருப்பதாக அறிக்கைவிட்டிருந்தது. தமிழீழ விடுதலைக்குத் துணைநிற்பதாக உருவாகிய பல அமைப்புகளானவை முன்வாசல் வழியாகவும் பின்வாசல் வழியாகவும் டெல்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டு எதிர்ப்புரட்சிக் கருத்தியல் வகுப்புகளில் அமரவைக்கப்பட்டார்கள். இப்படியாக டெல்கிக்குப் போன பல அமைப்புகள் இன்றும் உதட்டளவில் “தமிழீழம்” என்று தமது இருப்பிற்காகப் பேசுகிறார்களே தவிர அவர்கட்குத் தமிழீழ விடுதலையில் துளியளவேனும் நம்பிக்கையில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகரமைத் (சோசலிச) தமிழீழத் தனியரசை அமைத்தல் என்ற இறுதி இலக்கின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர்கள் கூட முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் பேரதிர்ச்சிக்குள்ளானதோடு விடுதலை அரசியலின் மீதான நாட்டமின்றித் திரிபுவாத எதிர்ப்புரட்சிக் கருத்தியல்கட்குள் அகப்பட்டுப்போயினர்.

சோவியத் உடைவின் பின்னரான எதிர்ப்புரட்சிகர அரசியற்போக்கை ஒத்த அரசியற் குழப்பங்களும் கருத்தியற் பிறழ்வுகளும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழீழ விடுதலையை முன்மாதிரியாகப் பார்த்துப் பழகிய தேசிய இன விடுதலைப் போராட்ட அமைப்புகட்குள் ஏற்பட்டுள்ளன. மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டமானது முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னராகப் பற்றிக்கொண்டிருக்கும் எதிர்ப்புரட்சிக் கருத்தியற் செல்வாக்குகளின் போக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் சோவியத் உடைவை ஒட்டியும் சோவியத்தின் உடைவின் பின்னரும் உலகளவில் பரவலடையச் செய்யப்பட்ட கருத்தியற் பிறழ்வுகள் குறித்த தெளிவான பார்வை இன்றியமையாததாகின்றது.

விடுதலைக்கான கருத்தியல்கள் திரிபுக்குள்ளாகி ஒடுக்குமுறையாளர்களிற்கு ஒத்துழைக்க ஆரம்பித்த வரலாற்றின் துன்பமான பக்கங்கள் சோவியத்தின் உடைவையொட்டிப் பதிவாகின. விடுதலையின் பேரால் விடுதலைக்கு ஆப்பு வைக்கும் கருத்தியற் குழப்பங்கள் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டோரையும் ஆட்கொண்ட காலமது. மார்க்சியத்தின் பேரால் மார்க்சும் ஏங்கல்சும் நாளும் பொழுதும் படுகொலை செய்யப்பட்ட காலமது. பின்மார்க்சியம், பின்நவீனத்துவம் போன்ற அடையாள அரசியற் குப்பைகள் முற்போக்கின் பெயரால் ஊசலாடிய முற்போக்காளர்களை வன்புணர்வு செய்த காலமது. அமைதிவழியில் பாராளுமன்றம் சென்று சோசலிசத்தை அடையப்போவதாகக் கதையளந்ததோடு நின்றுவிடாது விடுதலைக்காகக் கருவியேந்திப் புரட்சிகரமாகப் போராடியோரைப் பயங்கரவாதிகள், சாகசக்காரர்கள் என இழிந்துரைத்தவாறே மார்க்சின் பெயரிலும் லெனினின் பெயரிலும் கட்சி நடத்தலாம் என்ற நிலை உருவாகிய வரலாற்றின் இருண்மையான காலமது.

மார்க்சும் ஏங்கல்சும் ஏட்டில் எழுதியவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் வளர்த்தெடுத்து ஒடுக்குமுறை சார் மன்னராட்சிக்கும் அதனுடன் ஒட்டிக்கிடந்த நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விடுதலைக் கருத்தியலாக்கி உலகின் முதலாவது நிகரமை (சோசலிச) நாட்டை உருவாக்கிய லெனின் அவர்கள் முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியான ஏகாதிபத்தியக் காலத்தில் தனது தலைமையில் சோவியத்தின் உழைக்கும் மக்கள் அமைத்த நிகரமை சோவியத் ஒன்றியத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஸ்டாலின் அவர்களிடம் விட்டுச் சென்றிருந்தார். ஒக்டோபர் புரட்சியில் தோல்வியடைந்திருந்தாலும் ஒடுக்குமுறையாளர்களும் ஒடுக்குமுறையால் நன்மை அடைந்து வந்த தரப்புகளும் அவர்களது உலகளாவிய ஏகாதிபத்திய நலன்கட்கான வலைப்பின்னல்களும் சோவியத்தில் சோசலிசம் (நிகரமை) வெற்றிபெற்றதைச் சகித்துக்கொள்ளாமல் அதனை அழித்தொழித்துக் கட்டற்ற சந்தைப் பொருண்மிய நலன்கட்கு இசையுமாறு சோவியத் ஒன்றியத்தை மண்டியிட வைக்க வேண்டுமென்ற முனைப்புடன் தம்மாலான அத்தனை இழிசூழ்ச்சிகளையும் மேற்கொண்டனர். தாராண்மைப் போக்கு எனும் கட்டற்ற சந்தைப் பொருண்மிய நலன்கட்குத் துணைநிற்கும் கேட்டினை சனநாயகம் என திரிபுசெய்வதை ஏற்கமறுத்ததோடு, லெனினின் தலைமையில் வெற்றிகொள்ளப்பட்ட நிகரமைப் புரட்சிகர நாட்டைக் காப்பாற்றிப் புரட்சியின் வெற்றியைத் தக்கவைக்கப் பெரும்பாடாற்றி உழைத்த மாபெரும் ஆளுமையான ஸ்ராலின் அவர்கள் அதில் வெற்றியும் கண்டார். ஆனால், ஸ்ராலினின் மறைவின் பின்னர் ஆட்சியிலேறிய குருசேவ் திரிபுவாத எதிர்ப்புரட்சிக் கருத்தியல்கட்கு நாற்றாங்கால் அமைத்து உழைக்கும் மக்களிற்கான நிகரமைக் (சோசலிச) கருத்தியலைப் புறமொதுக்கி முதலாளித்துவ நலன்கட்கான தாராண்மைக் கொள்கையைக் கட்டியணைத்தார். குருசேவினது கருத்தியற் பிறழ்வுகளைத் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்திய சீனப் புரட்சியாளன் மாவோ சேதுங் குருசேவினைத் திரிபுவாதி என அடையாளப்படுத்தியதோடு நின்றுவிடாது, மார்க்சும் ஏங்கல்சும் கண்டடைந்த புரட்சிகரக் கருத்தியலை லெனினும் ஸ்டாலினும் அடுத்தடுத்த கட்டங்களிற்கு வளர்த்துவிட, மாவோ சேதுங் அவர்கள் அந்தப் புரட்சிகரக் கருத்தியலைத் திரிபுவாதிகளிடமிருந்து காப்பாற்றியதோடு மட்டுமல்லாது உலக இயங்கியலின் போக்கில் மேலும் அதனை வளர்த்தெடுத்தார்.

இயற்பியலறிவைச் (Physics) சமூகத்தைப் புரிந்துகொள்ளும் படியாக விரிவாக்கிச் சமூக அறிவியலுக்கு வலுவான அடித்தளமிட்ட மார்க்சிய அறிவியலையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியற் கண்ணோட்டத்தில் மாந்தகுல வரலாற்றைப் புரிந்துகொண்ட மார்க்சினதும் ஏங்கல்சினதும் கருத்துகளையும் உள்வாங்கியதோடு, மார்க்சியப் பொருளியலைச் சரிவரப் புரிந்துகொண்டு அதனை வெறுமனே வர்க்கப் பார்வைக்குள் மட்டுமே குறுக்கிவிடாது சமூக அறிவியலை அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்றவர்கள் லெனின், ஸ்ராலின் மற்றும் மாவோ சேதுங் ஆகியோர்களே. தேசங்களின் தன்னாட்சியுரிமை பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொடுத்த லெனினும் அதனை மேலும் திறம்பட வரையறுத்துத் தேசங்கள் தேச அரசமைக்கும் (Nation State) வரலாற்றின் போக்கினைத் தெளிவுற மனங்கொண்ட ஸ்ராலினும், ஸ்ராலினின் மறைவின் பின்னர் திரிபுவாதிகளிடமிருந்து மார்க்சிய அரசியலைக் காப்பாற்றிய மாவோவும் இன்று மார்க்சியத்தின் பெயரால் எதிர்ப்புரட்சிகரக் கருத்தியல்களை விதைக்கும் கருத்தியல் அரம்பர்களினால் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

வர்க்க எதிரிகளுடனான போரினைத் தற்காலிகமாக நிறுத்தி சியாங்கேசேக்குடன் சேர்ந்து சீனாவின் மஞ்சூரியாவை வன்கவர்ந்த யப்பானியப் படைகளை விரட்டுவதென்ற முடிவை எடுத்துச் செயலாற்றிய மாவோவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு சமூக அறிவியலை வர்க்கக் குறுக்கல்வாதம் செய்யும் மாவோவிற்கு எதிரானவர்கள் எதிர்ப்புரட்சியாளர்களே என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ரொட்ஸ்கி, குருசேவ், பிரஸ்னோவ், கோபர்ச்சேவ் ஆகியோரின் திரிபுவாதங்களை மார்க்சியம் என நம்பி, அவை எதிர்ப்புரட்சிக் கருத்தியல்களாக அமைவது கண்டு விடுதலைக்காகப் போராடும் புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிவப்புச் சித்தாந்தத்திலிருந்து அயன்மைப்படலானார்கள். “சோசலிச தத்துவமும் கொரில்லா யுத்தமும்” மற்றும் “சோசலிச தமிழீழத்தை நோக்கி” ஆகிய ஏடுகளைத் தமது கொள்கையறிக்கைகளாக வெளியிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது 1990 களின் நடுப்பகுதியில் மார்க்சியம் என்ற சொல்லைப் பெயரளவில் வைத்திருக்கும் எதிர்ப்புரட்சிகரத் திரிபுவாதக் கூட்டங்களிடமிருந்தே தம்மை அயன்மைப்படுத்திக் கொண்டார்கள் என்று வாதுரை செய்வதற்கு விடுதலைக்காகப் போராடுவதையே வாழ்வாகக் கொண்டிருந்தவர்கட்கு நேரங்கிடைக்கவில்லை. முரண்பாடுகளைப் பற்றி மாவோ எழுதிக் குவித்தவற்றிலிருந்து எத்தகைய புரிதலையும் பெறாமல், முதன்மை முரண்பாட்டை மறந்து அடிப்படை முரண்பாடுகளையும் அக முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களைக் குழுப்பிரிக்கும் அடையாள அரசியல்களை முன்னெடுத்தவர்களே மார்க்சின் பெயரால் மார்க்சையும் அவர் விதைத்து வளரவிட்டுச் சென்ற சமூக அறிவியலையும் குழிதோன்றிப் புதைத்தவர்களாவர்.

சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பிரதேச ஒடுக்குமுறை என அடிப்படை முரண்பாடுகளானவை ஈழத்தில் தமிழ்ச் சமூகத்திடம் நிலவிவந்தாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தேச ஒடுக்குமுறையே தமிழர்தேசத்தின் முதன்மை முரண்பாடாக முனைப்புறுத்தி நிற்கின்றது. தமிழர் தேசமானது சிங்கள பௌத்த பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடித் தமிழீழ தேச அரசமைத்து அதனைப் பாகுபாடற்ற நிகரமைத் (சோசலிச) தமிழீழத் தனியரசாக்குவது என்ற வரலாற்றுப் போக்கையே முதன்மை முரண்பாடான தேச ஒடுக்குமுறை வேண்டிநின்றது. முதன்மை முரண்பாட்டை ஏற்க மறுத்து அடையாள வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தி அரசியல் செய்தவர்களும், தேச ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டத்தைக் குறுந்தேசியவாதம் என திரிபுசெய்து வர்க்கக் குறுக்கல்வாதமாகச் சமூக அறிவியலைக் குறுக்கியவர்களும் மார்க்சியர்கள் அல்லது முற்போக்காளர்கள் என்ற வகைப்பாட்டிற்குள் வர மாட்டார்கள். மாறாக, அவர்கள் மார்க்சின் பெயரால் மார்க்சியத்தை மடைமாற்றம் செய்த எதிர்ப்புரட்சிக்காரர்களே. 1917 இன் பின்னர் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட வெற்றிகரமான அனைத்து சோசலிசப் புரட்சிகளும் அடிப்படையில் தேச விடுதலைக்கான போராட்டங்களே என்பதைக் கூட மனங்கொள்ள மறக்கும் மனநோயாளிகளை மார்க்சியர்கள் என அடையாளப்படுத்துவது சமூக அறிவியற்றுறைக்கு இழைக்கப்படும் இரண்டகமாகவே நோக்கப்பட வேண்டும்.

“தமிழீழ முதலாளி தமிழீழம் கேட்கிறான்” என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எதிராக முழக்கங்களை முன்வைத்த சிறுமதியாளர்கள் மார்க்சின் பெயரால் தம்மை அடையாளப்படுத்தியதன் விளைவே தமிழீழ மக்களில் பலருக்கு மார்க்சின் மீதும் சிவப்புச் சித்தாந்தத்தின் மீதும் வெறுப்பு ஏற்படக் காரணமாயின. சிவப்பின் மீது தமிழர்களில் பெரும்பான்மையோருக்கு ஏற்பட்ட வெறுப்பானது உலகின் துன்பங்களிற்கெல்லாம் காரணமான அமெரிக்காவின் ஒடுக்குமுறைகளிற்கு ஒத்தூதுபவர்களாக ஈழத்தமிழர்களில் கணிசமானவர்களை மாற்றியுள்ளது; பாலத்தீனத்தின் மீதான இசுரேலின் வன்கவர்வினை ஏற்பவர்களாக மாற்றியுள்ளது; ஒடுக்கும் அரசுகளின் வல்லாண்மை குறித்துச் சிலாகிப்பவர்களாக மாற்றியுள்ளது. ஒரு வரியிற் கூறுவதென்றால், மார்க்சியத்தின் பேரால் தமிழ்ச் சமூகத்தில் தேசவிடுதலைப் போராட்டத்தை ஏற்க மறுத்த சிறுமதியாளர்களே தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தலைமுறையானது சிவப்புச் சித்தாந்தத்திலிருந்து அயன்மைப்படக் காரணமாகினர். தமிழீழதேசத்தின் தேச அரசமைக்கும் வரலாற்றுக் கடமைக்காகக் கையில் கருவியேந்திய அனைத்துப் போராளிகளும் மார்க்சியத்தின் செல்நெறிக்கு வலுச்சேர்த்தோரே. ஆனால், திரிபுவாதி கோபர்சேவின் தலைமையிலான சோவியத்துடன் ஒட்டியுறவாடிய இந்திராகாந்தியின் காலிஸ்தான் தேசத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமல் இருந்தவரும், காலிஸ்தான் தேச ஒடுக்குமுறைக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது காலிஸ்தான் (சீக்கிய) போராளிகளின் உருவ அமைப்பில் கொடும்பாவி எரித்தவருமான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் பத்மநாபா அவர்கள் மார்க்சிஸ்டாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மார்க்சிசத்திற்கு எதிரானவராகவும் காட்டப்பட்ட போதே மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும், ஸ்ராலினும், மாவோவும் வரலாற்றில் ஈழத்திலிருந்து படுகொலை செய்யப்பட்டனர்.  

பத்மநாபா அவர்களை மார்க்சின் அளவிற்கு ஏற்றிப்போற்றியவர்களால் முன்னெடுக்கப்பட்ட தலித்தியம் என்ற அடையாள அரசியலானது மார்க்சிசத்தின் பார்வையில் எதிர்ப்புரட்சிக் கருத்தியலே. ஆனால், 1966 களில் பொதுவுடைமைக் கட்சிகளால் தலைமைதாங்கப்பட்டு நடந்தேறிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களானவை பெருவெற்றி பெற்றதோடு உற்பத்தி உறவுகளில் சாதியின் பாத்திரத்தை வேரோடு வெட்டியெறிந்தன. அத்தகைய சாதியொடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களானவை தலித்தியம் என்ற அடையாள அரசியலாக நடைபெறவில்லை என்பதை இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டும். சாதியச் சிக்கலினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது குறித்து விடுதலைப் புலிகள் நாளேட்டில் வெளியாகிய கருத்தியற் கட்டுரையானது அடையாள அரசியற் குழப்பங்கட்கு (எதிர்ப்புரட்சிக் கருத்தியல்) இடங்கொடாது, பொருள்முதல்வாத இயங்கியற் கண்ணோட்டத்திலே அமைந்திருந்தது. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அவர்களால் “தாயகத்தின் தந்தை” என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதையிலும் 1960 களில் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற சாதியொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தினையும் அதில் பங்கெடுத்த தோழர்களின் வரலாற்றுப் பாத்திரத்தையும் மெச்சியிருப்பார்.

சமூகங்களின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கணக்கிலெடுக்காது உலகந்தழுவி ஒரே நேரத்தில் புரட்சிசெய்வது என்ற திரிபுவாதத்தை முன்னெடுத்த ரொட்ஸ்கி என்ற எதிர்ப்புரட்சிக் கருத்தியலாளனின் கருத்தை நகலெடுத்தாற் போல “இயக்கம் நன்கு வளர்ந்த பின்பாக ஒரே நேரத்தில் தாக்குதல் செய்வதென்றும், அதுவரை தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை” என்று போர் உத்தி வகுத்த புளொட் இயக்கத்தவர்கள் தம்மை மார்க்சிஸ்டுகள் என்று அவர்களே அடையாளப்படுத்துவர். ஆனால், ஒரு வெடிகுண்டு வெடிப்பு ஓராயிரம் பரப்புரைகளிற்குச் சமன் என்ற மாவோவின் சிந்தனைக்கு ஒத்ததாகச் சிந்தித்து, கரந்துறைப் (கொரில்லா) போராட்ட வடிவத்தை மக்கள் போராட்டப் பாதையாகத் தெரிவுசெய்து மக்களின் துணையுடன் எதிரிகளை இடைவிடாது தாக்கிக் களைப்படையச் செய்து முகாங்களிற்குள் முடக்கிய பின்பு, வலிந்த தாக்குதல்கள் மூலம் முகாங்களைத் தாக்கி சுடுகலன்களை எதிரியிடமிருந்து கைப்பற்றி, வன்கவரப்பட்ட தாயக நிலங்களை மீட்டெடுத்து, அதில் தமிழீழ நடைமுறை அரசை நிறுவி, தமிழீழ மக்களைக் கருவியேந்த வைத்து மக்கள் படைகளை உருவாக்கி, கரந்துறைப் போர்முறையை மக்கள் இராணுவம் என்ற அளவில் வளர்த்தெடுத்து அச்சொட்டாக மாவோவினதும் ஜெனரல் கியாப்பினதும் இராணுவ மூலோபாயங்களுடனும் ஒத்துப்போன விடுதலைப் புலிகளை மார்க்சிசத்திற்கு எதிரானவர்களைக் காட்டியதன் மூலம் மாவோ மீண்டுமொரு தடவை எதிர்ப்புரட்சியாளர்களாற் கொல்லப்பட்டார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ போன்றோர்களை உண்மையாக ஏற்றுக்கொள்ளும் அமைப்புகள் தமிழீழ தேச அரசமைக்கும் வரலாற்றுப் பயணித்தில் தம்மைப் புரட்சிகரமாக இணைத்திருப்பர், எந்நிலையிலும் ஊசலாடியிருக்க மாட்டார்.

“இவர்கள் மார்க்சியர்கள் என்றால் நான் மார்க்சிஸ்ட் இல்லை” என்று ஒருமுறை மார்க்ஸ்சே கூறியதாக அறியக் கிடைத்தது. ஆம் உண்மை தான். தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்தைக் குறுந்தேசியவாதம் என்றும் பாசிஸ்டுகளின் ஆயுத வழிபாடென்றும் கூறியோரும், அடையாள அரசியலை மேற்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் தேச ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஏளனஞ் செய்தோரும், அரச ஒத்தோடிகளும், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் மீது பக்தி கொண்டோரும், எதிர்ப்புரட்சிக் கருத்தியல்களை மார்க்சியம் எனத் திரிபு செய்வோரும் மார்க்சியர்கள் என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு 30 ஆண்டுகளிற்கு மேலாகத் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மார்க்சிஸ்டுகளே அல்ல.

நாம் ஏலவே குறிப்பிட்டவாறு ஸ்ராலினின் மறைவின் பின்னர் ஆட்சியிலேறிய குருசேவின் திரிபுவாதமானது எதிர்ப்புரட்சிக் கருத்தியல்கட்குக் களங்கொடுத்து, ஈற்றில் 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கோபர்ச்சேவ் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி உலகின் முதலாவது சோசலிச நாடான சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார். சோசலிச சோவியத்தின் புரட்சிக் கொடியை இறக்கி சார் மன்னனின் கொடுங்கோன்மைக் காலத்துக் கொடியை கோபர்ச்சேவ் ஏற்றினார். அதன் பின்பாக, 1995 இல் பன்னாட்டு நாணய நிதியத்திடம் ரசியா கடன் வாங்கியதுடன் கட்டற்ற முதலாளித்துவ சந்தை நலன்கட்காகக் கட்டமைப்பு மாற்றமும் செய்தது. பின்னர் ரசியாவின் அதிபரான ஜெல்ட்சின் முற்றுமுழுதாக அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். எனவே, ஸ்ராலினின் பின்பான சோவியத்தின் நிலைப்பாடுகளையோ அல்லது இன்றைய ரசியாவின் நிலைப்பாடுகளையோ ஏற்றிப்போற்றுவர்கள் உண்மையான மார்க்சிஸ்டுகளாக இருக்க முடியாது என்பதை இங்கு சுட்ட விரும்புகின்றோம்.

புரட்சிசெய்யப் போவதாகச் சொல்லி வந்த ஊசலாட்டப் பிரிவினர் பலர் சோவியத் உடைவைக் காரணங்காட்டிப் புரட்சியின் நலன்களைப் பின்தள்ளி தமது தன்னல உணர்விற்கு முதன்மையளித்தனர். அதுவரை “பிறருக்கு மார்க்சியம் தமக்குத் தாராளவாதம்” என்றிருந்த பலர் வெளிப்படையாகவே மார்க்சின் பெயருடன் எதிர்ப்புரட்சி முகாங்கட்குள் புகுந்தனர். இத்தகைய வகையறாக்களே பின்நவீனத்துவம் என்ற எதிர்ப்புரட்சிக் கருத்தியலின் பின்னாலிருக்கும் ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல் பின்னவீனத்துவக் கருத்துகளை மார்க்சியவாதி போல பாசாங்கு செய்துகொண்டு பரப்பி வந்தனர். இவர்களே கட்டவிழ்த்தல், பெருங்கதையாடல், மாற்றுக்கதையாடல், கட்டுடைத்தல், மறுவாசிப்பு என விதவிதமான சொற்றொடர்களிற்குள் ஒளிந்துகொண்டு பின்நவீனத்துவத்தைப் பரப்பினர்.

“ஆசிரியன் இறந்துவிட்டான். வாசகன் கொள்வதே பொருள்”, “ஒரு படைப்பிற்குச் சமூகக் கடப்பாடு என்று எதுவும் இல்லை. புனைவுதரும் போதையே படைப்புகளின் பயன்”, “உண்மை என்று உலகில் எதுவுமே இல்லை”, “மொழி என்பது குறிகளின் விளையாட்டு மாத்திரமே”, “கோட்பாடுகளைக் கொண்டு இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள இயலாது”, “படைப்பு என்று எதுவுமே இல்லை. பிரதிகள் தான் உள்ளன. பிரதிக்கு என்று பொருள் இல்லை” என்று கூறும் பின்நவீனத்துவவாதிகள் பின்நவீனத்துவத்தை ஒரு கலைக்கோட்பாடாக்கி அதன் மூலம் கலையை உயர்குழாத்தின் நுகர்வுப் பண்டமாக்கினர். பின்நவீனத்துவக் கருத்தியல் மூலம் அரசியல் உதிரிகளை உருவாக்கினர். தேசிய இனங்களினதும் தேசங்களினதும் வரலாற்றை ஏளனஞ் செய்யும் நோக்கில் பொருள்முதல்வாத இயங்கியற் கண்ணோட்டத்தில் வரலாற்றை அறிந்துகொள்வதைப் பெருங்கதையாடல் (meta narrative) என்று கூறி இழிவுசெய்தனர். இந்த உலகில் அதிகாரமற்றுக் கிடக்கும் உழைக்கும் மக்களினதும் நாடற்ற தேசிய இனங்களினதும் துன்பங்களிற்குக் காரணமான ஒடுக்குமுறை அரசுகளின் சந்தை நலன்களைப் பற்றி ஒடுக்கப்படும் அதிகாரமற்ற மக்கள் தெரிந்து தெளிந்துகொண்டால் அவர்கள் விடுதலை வேண்டிப் போராடுவதில் உறுதிகொள்வர் என்பதால், அதிலிருந்து மடைமாற்றுவதற்கு இந்த உலகைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று பின்நவீனத்துவவாதிகள் வாதுரைப்பர். ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி மட்டுமே விடுதலையைப் பெற்றுக்கொடுத்திடாது. மாறாக, புரட்சியை நிகழ்த்த ஒரு புரட்சிகர அமைப்பு வடிவமும் புரட்சிகரக் கருத்தியலும் இன்றியமையாதன. எனவே, அதிகாரங்களை எதிர்ப்பது என்ற போர்வையில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரிடும் விடுதலை அமைப்புகளின் அதிகாரங்களை எதிர்த்து அவற்றைப் பாசிசத்திற்கு ஒப்பிட்டு விடுதலை அமைப்புகளை வலுக்குன்றச் செய்யும் எதிர்ப்புரட்சிப் பரப்புரைகளை மேற்கொள்வதையே பின்நவீனத்துவவாதிகள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். விடுதலை அமைப்புகளை அதிகார வெறிக்கான தளங்களாகக் காட்டி, அமைப்புகட்கு வெளியே அரசியல் உதிரிகளை உருவாக்கும் வேலையைப் பின்நவீனத்துவவாதிகள் செய்வதன் மூலம் விடுதலை வேண்டிப் போரிடும் அமைப்புகளைத் தனிமைப்படுத்தும் ஒடுக்குமுறை அரசுகளின் நிகழ்ச்சிநிரல்களிற் தம்மை இணைத்துக்கொள்கின்றார்கள். பின்நவீனத்துவத்தைக் கருத்தியற் தளமாகக் கொண்ட அடையாள அரசியல்களை முன்னெடுப்பதில் பல்கலைக்கழக ஆய்வுத் தலைப்புகளிற்கும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கட்கும் (NGOs) பாரிய பங்குண்டு.

இப்போது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு மறவழியில் தோற்கடிக்கப்பட்டுப் பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டு நிற்கும் தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்தின் நிலையை நாம் மேற்போந்த சோவியத் உடைவினை ஒட்டி உருவாகிய எதிர்ப்புரட்சி நிலைமைகள் பற்றிய குறிப்புகளிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். கோபர்ச்சேவ் சோசலிச சோவியத்தின் கொடியை இறக்கி சார் மன்னனின் கொடியை ஏற்றியது போல புலிக்கொடியை இறக்கி காவிநிற நந்திகொடியை ஏற்றுவதற்கு இந்துத்துவ மனநோயாளிகள் இந்தியாவின் சொற்கேட்டு முனைந்து வருகின்றார்கள். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் தமிழ்மக்களைச் சாதியடிப்படையில் ஒடுக்கப்பட்டதன் வரலாறே இன்னமும் தொடர்கின்றதாக தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய எழுச்சி ஏற்படக் கூடாது என்ற நோக்கில் இயங்கியல் மறுப்புப்பேசி, அந்த உழைக்கும் தமிழ் மக்களைத் தலித்தியம் என்ற பெயரில் அடையாள அரசியலிற்குள் உள்வாங்கி, அந்த அடையாள அரசியலை தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியச் சந்தையைக் காப்பாற்றும் வகையில் இந்தியந் தழுவி முன்னெடுக்கும் தலித் அரசியலானது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் உதிரிகளால் முன்னெடுக்கப்பட்டது. புரட்சிவேடந்தரித்து இத்தகைய தலித்திய அரசியற் கோட்பாட்டாளர்கள் முன்னெடுக்கும் தாராளவாத அரசியலானது அவர்கள் மேட்டுக்குடி வாழ்வையொத்த வாழ்வு வாழ்வதற்கு வழிவகுப்பதோடு சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் தமிழ்மக்களை அரசியல் உதிரிகளாக்குவதிலும் முன்னின்று செயலாற்றுகின்றது.

இப்படியாகத் தமிழ்நாட்டில் அம்பலப்பட்டு வரும் தலித்திய அடையாள அரசியலை ஈழத்திற்கு இறக்குமதி செய்யும் அறிவிலித்தனங்கள் தொடர்கின்றன. அ.மார்க்ஸ் போன்ற கல்விப்புலத்தில் செயலாற்றும் அடையாள அரசியலைத் தொடரும் எதிர்ப்புரட்சிக் கருத்தியலாளர்களும், ஜெயமோகன், சாருநிவேதா போன்ற பின்நவீனத்துவ எதிர்ப்புரட்சிக் கருத்தியலைக் காவித்திரியும் ஆக்க இலக்கியப் படைப்பாளிகளும், தமிழ்த்தேசிய அரசியலை மறுப்பதற்காக மட்டுமே பெரியாரிய மற்றும் அம்பேத்கரியத்தைச் சுமந்துதிரிவோரும் ஈழத்துச் சூழலிற்கு வலிந்து அறிமுகப்படுத்தப்படுகின்றனர். பின்நவீனத்துவ எதிர்ப்புரட்சிக் கருத்தியலைத் தமது படைப்புகளில் காவித்திரிந்த சோபாசக்தி வகையறாக்களுடன் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக எதிர்ப்புரட்சி அடையாள அரசியலைச் சுமந்து திரியும் கருணாகரன் போன்ற அரசியல் உதிரிகளும் இணைந்து ஈழத்தின் படைப்புலகத்தை அரசியல் உதிரிகளின் அரிப்புத் தீர்க்குமிடமாக மாற்றியுள்ளனர். பின்நவீனத்துவ எதிர்ப்புரட்சிக் கருத்தியலை அடித்தளமாகக் கொண்ட அடையாள அரசியல்களிற்கு உரமூட்டும் படைப்புகளைப் புகழ்ந்து தள்ளி அவற்றிற்கு விருதும் வாங்கிக்கொடுத்து அத்தகைய படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஈழத்தின் அடையாளங்கள் போலக் காட்டும் இழிவான செயல்களை இந்த அரசியல் உதிரிகள் செய்து வருகின்றனர்.

இதனால், இலக்கிய உலகிற்குள் உலவுவதென்றாலோ அல்லது இலக்கியப் படைப்பாளியாக நிலைபெறுவதென்றாலோ இத்தகைய பின்நவீனத்துவ எதிர்ப்புரட்சிக் கருத்தியல்களை அடியொற்றியே எழுதவும் பேசவும் வேண்டுமென்று 2009 இன் பின்னர் எழுத்துலகிற்குள் நுழைந்த அடையாளச் சிக்கல்கொண்ட விடலைகள் பழக்கப்படுத்தப்பட்டனர். ரசியாவின் போரிலக்கியங்களின் தரத்தினை விஞ்சிய போரிலக்கியத்தைப் படைக்கவல்ல ஆற்றலும் புரட்சிகரக் கருத்தியற் தெளிவும், போராட்ட வாழ்வியல் பட்டறிவுகளையும் கொண்டிருக்கும் புரட்சிகர எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதோடு அவர்களின் படைப்புகளும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. கட்டற்ற பாலியற் சுதந்திரத்தை வேண்டி நிற்கும் கட்டற்ற சந்தைப் பொருண்மியத்திற்கு இசையுமாறு மூளைச் சலவை செய்யும் படைப்புகளைக் கொண்டாடித் தீர்க்கும் ஈழத்து இலக்கியச் சூழலை வன்கவர்ந்து வைத்திருக்கும் இத்தகைய பதர்கள் ஈழத்தில் உலகத்தரமான புரட்சிகரப் போரிலக்கியப் படைப்புகள் வெளிவராமல் தடுப்பதில் முன்னின்று செயலாற்றுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம் போன்ற போர்வையில் ஈழத்திற்கு வந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களிடம் நாம் எமது மக்களை அடகுவைத்து விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடையாள அரசியல்களை முனைப்புறுத்தும் வகையில் தமிழ்மக்களைப் பெண்கள் என்றும் கைம்பெண்கள் என்றும் கைவிடப்பட்டவர்கள் என்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் மற்றும் மனைவியர் என்றும் இன்னும் என்னென்ன வழிகளில் தமிழர்களை ஒரு தேசமாக ஒன்றிணைவதைத் தடுத்து அடையாளங்களிற்குள் சுருக்கிவிட முடியுமோ அந்தந்த வழிகளில் கருத்திட்டங்களைக் கொண்டுவந்து செயற்படுத்தும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களும் (NGOs) போரின் பாதிப்புகளை எதிர்கொண்டு நிற்கும் ஈழமக்களை அடையாள அரசியற் சூழலுக்குள் பழக்கப்படுத்துகின்றன.

அத்துடன், இனித் தமிழீழ விடுதலைக்கு வாய்ப்பில்லை என்றும் விடுதலைக்காகப் போராடினால் இழப்புத்தான் எஞ்சும் என்றும், வெளியாருக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறெதுவும் தீர்வில்லை என்றும், இந்தியாவிற்குப் பாதம் பணிதலைத் தவிர வேறுவழி தமிழரிற்கில்லை என்றும், சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மனமாற்றத்தில் நம்பிக்கை வைத்துக் காத்திருப்பது நல்லதென்றும், கிடைக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு மீதி வாழ்வைக் கழிப்பதென்றும், வெளிநாடு சென்று பொருளீட்டுவது மட்டுமே ஈழத்தமிழர்கட்கு எஞ்சியுள்ள உருப்படியான வழியென்றும், தமிழர் என்ற அடையாளத்தைக் கைவிட்டு இந்து என்ற அடையாளத்தைத் தூக்கிச் சுமந்தால் இந்தியாவின் கடைக்கண் பார்வை தம்மீது படுமென்றும் இன்னும் என்னென்ன இழவுகளை எல்லாம் மனங்கொள்ளும் பலரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னவலக் காலமானது உருவாக்கியுள்ளது.

இப்படியாக, எதிர்ப்புரட்சிகர மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பலரை அத்தகைய மனநோயிலிருந்து மீட்டெடுத்துக்கொள்ள அவர்களைத் தமிழ்த்தேசிய அரசியற்படுத்தி விடுதலை நோக்கி அணியமாகும் வகையில் வென்றெடுக்க வேண்டும். அதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை வென்றெடுக்க முயன்றால் அதன் விளைவானது இப்போதுள்ளதிலும் சிக்கலாக அமைந்துவிடும். எனவே, தமிழ்த்தேசிய மக்களின் கடமையானது தமது நிலையைத் தக்கவைத்துக்கொள்வதோ அல்லது சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கீழ் சீர்திருத்தங்களையும் சலுகைகளையும் கோருவதோ அல்ல. மாறாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் பிடியிலிருந்து விடுதலைபெறுவதும் தமிழீழதேச மக்களின் தேச அரசை அமைப்பதுமே ஈழத்தில் தமிழ்த்தேசிய இனத்தின் கடமை என்பதைத் தெளிவுபடுத்தி மக்களை அரசியலாக வென்றெடுக்க வேண்டும். கையறுநிலைப் பாடல்களைப் புறமொதுக்கி விட்டு விடுதலை வேண்டிய பாடல்களை ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கவிட வேண்டும். எதிர்ப்புரட்சிகர மனநோயினால் பீடிக்கப்பட்டுள்ளோரிற்கு புரட்சிகர நடைமுறைகளிலும் கருத்தியல்களிலும் நம்பிக்கை வருமாறு வரலாற்றின் இயங்கியல்களையும் உலகப் படிப்பினைகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முடிவாக, தமிழீழதேசத்தின் தேச அரசு அமைக்கும் வரலாற்றுப்போக்கிற்கு இடையூறாக இருக்கும் அனைத்தையும் தமிழ்மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதோடு, விடுதலையின் பெயரால் விடுதலைக்கு ஆப்புவைக்கும் ஊடுருவல்கள் குறித்தும், அடையாள அரசியற் பிறழ்வுகள் குறித்தும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டிய காலமிது. தமிழீழ தேச அரசு அமைப்பது என்ற இறுதி இலக்கு நோக்கி நாம் பயணப்படுகையில் ஒவ்வொரு விடயங்களையும் தமிழர்தேசமாக அணுகும் அரசியல் முதிர்ச்சியையும் தமிழ்த்தேசியக் கருத்தியற் தெளிவையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும் என்பதை நாம் ஈண்டு மனங்கொள்ள வேண்டும். அதற்காகப் பாடாற்றுவதற்கான அமைப்பு வடிவங்களை நாம் வந்தடைய வேண்டாமா?

– முத்துச்செழியன்-

2024- 05- 01