சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்கள் மனங்கொள்ள வேண்டியவைகளும் -முத்துச்செழியன்-

நிதிப்பற்றாக்குறையைக் காரணங்காட்டி உள்ளூராட்சி அவைத் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இவ்வாண்டு வேறு வழியின்றிச் சனாதிபதித் தேர்தலை நடத்தியாக வேண்டிய சூழலிற்குத் தள்ளப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபரிற்கு முன்பாகச் சனாதிபதித் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டிற்கு முன்பாகப் பாராளுமன்றப் பொதுத்தேர்தலையும் ரணில் விக்கிரமசிங்க நடத்தியாக வேண்டும். எனினும், சனாதிபதியாகத் தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, சனாதிபதித் தேர்தலிற்கு முன்பாகவே பாராளுமன்றப் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ரணிலிடம் இருக்கும் அதிகாரம் இடமளிக்கும். ஆனால், பாராளுமன்றத்தை 5 ஆண்டுகாலப் பதவிக்காலத்திற்கு முன்பதாகக் கலைத்தால் நடப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கட்கான ஓய்வூதியம் இல்லாமல் போய்விடும் என்பதால், இந்தப் பாராளுமன்றக் கலைப்பை நடப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள். 2022 யூலையில் கோத்தாபய ராஜபக்ச சனாதிபதிப் பதவியிலிருந்து பதவிவிலகி ஓடியபோது, அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தின்படி பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று (134/225) ரணில் சனாதிபதியானார். அவ்வாறு பாராளுமன்றப் பெரும்பான்மையை ரணிலிற்குப் பெற்றுக்கொடுத்தவர்கள் மொட்டுக்கட்சியின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களே.

வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் வக்கற்றுப்போனதாக சிறிலங்கா வெளிப்படையாக அறிவித்த பின்பாகத் தொடங்கப்பட்ட கடன் மறுசீரமைப்புத் (debt restructuring) தொடர்பான பேச்சுகள் இன்னுமொரு முடிவையும் எட்டாததால், வட்டியுடன் செலுத்த வேண்டிய விண்ணை முட்டும் கடன்களைத் தற்காலிகமாகச் செலுத்தத் தேவையில்லாத காலப்பகுதியில் ரணில் பதவியில் இருப்பதால் கிடைக்கும் ஆறுதலான நிலைமைகளாலும், இந்திய மேலாதிக்கக் கனவுடன் இந்தியா அள்ளிக்கொடுத்த 4.5 பில்லியன் அமெரிக்க டொலரினாலும் ரணிலினால் கொந்தளிப்பற்ற பொருளியற் சூழலை இதுகாறும் ஓரளவு பேணமுடிந்தமையினால், நாட்டைப் பொருளியற் சிக்கலிலிருந்து மீட்கத் தகுதியான மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்ள ரணிலிற்கு இயலுகிறது. இறக்குமதியைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தல் போன்ற சில செயற்கையான வழிவகைகளைப் பயன்படுத்திப் பணபதிப்பைக் கூட்டிக்காட்டும் பாசாங்குத்தனத்தை ரணில் செய்து வருகின்றமை அவரின் தேர்தல்காலப் பரப்புரை நோக்கிலானது என்று அடித்துக் கூறலாம். எவ்வளவு பாசாங்கு செய்தாலும், நிமிர்த்த முடியாத பொருண்மியச் சரிவினை சீர்செய்ய வழியின்றி 15% இலிருந்த மதிப்புக் கூட்டு வரியினை 18% ஆக ரணில் அண்மையில் அதிகரித்திருக்கிறார்.

கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் முடிவு எட்டப்பட்டு மீண்டும் கடன் செலுத்தும் கடப்பாட்டிற்குள் சிறிலங்கா வரும்போது, பாரிய பொருண்மிய நெருக்கடிக்குள் சிறிலங்கா தள்ளப்படும் என்பதே உண்மையான நிலை. ஆனால், பொருண்மிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட மீட்பரெனப் பாசாங்கு செய்துகொண்டும், மொட்டுக் கட்சியில் பெரும்பான்மையின் உடனிருப்பைத் தக்கவைத்துக் கொண்டும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்களைத் தன்னிடம் கட்சிதாவ வைத்தும், மேற்குலக மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் தனக்கிருக்கும் நெருங்கிய உறவைப் பயன்படுத்தியும் எப்படியாவது சனாதிபதித் தேர்தலில் வென்றிட வேண்டும் என்ற முனைப்பில் ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். ஆனால், ராஜபக்ச குடும்பமோ தமது சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சனாதிபதி வேட்பாளரைக் கூட நிறுத்தமுடியாத அவலத்திலிருப்பதால், தம்மால் தமது இடத்தில் தமது பதிலியாக (Proxy) இட்டு நிரப்பப்பட்ட சனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் அவர்கட்கு இல்லாமலிருப்பதால், சனாதிபதித் தேர்தலின் முன்பாகப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டுமென விரும்புகின்றது. பாராளுமன்றத்தைக் கலைத்து, முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த ரணில் முன்வராது போனால், பாராளுமன்றத்தில் தம்மிடமிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து பாராளுமன்றைக் கலைத்து, முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய சூழலிற்குள் நாட்டைத் தள்ள முடியுமா எனவும் ராஜபக்ச குடும்பம் சிந்திக்கின்றது. எனினும், நாம் ஏலவே கூறியவாறு, பாராளுமன்றப் பதவிக்காலத்தை நிறைவுசெய்து ஓய்வூதியம் பெறுவதற்கு உலைவைக்கும் இந்த முயற்சிக்கு மொட்டுக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன்பட விரும்பார்கள். அவ்வாறு மிரட்டி உருட்டிச் செய்ய வைக்கும் வலுவில் ராஜபக்ச குடும்பம் இப்போது இல்லையென்பதுடன், அப்படி மிதமிஞ்சிய அழுந்தங்கள் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கட்கு ராஜபக்ச குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டால் கட்சிதாவும் தெரிவுகளை நோக்கியே அவர்கள் தள்ளப்படுவர் என்பதையும் இங்கு நினைவிற்கொள்ள வேண்டும். எனவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், சனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப்போகின்றது என எதிர்வுகூறலாம்.

இந்நிலையில், பொதுவாக சிங்கள மக்களிடத்திலும், குறிப்பாக சிங்கள இளையோரிடத்திலும், அனுரகுமார அலையே வலுவாக இருக்கின்றது. எத்தனை கருத்துக் கணிப்புகளை நடத்தினாலும், சிங்களப் பகுதிகளில் அனுரகுமாரவே முன்னிலைப்படுகின்றார். தாராளவாதப்போக்கினை ஏற்றிப்போற்றித் தம்மை அறிவுடைமை வர்க்கம் என நினைக்கும் சிங்கள கல்வியாளர்கள் கூட (இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாக இருந்தவர்கள்) அனுரகுமாரவின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். சிங்கள இளையோரின் மனங்களை வென்ற வேட்பாளராக அனுரகுமாரவே இருக்கின்றார். ஊடகச் செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துக் கணிப்புகள் என அனைத்திலும் அனுரகுமாரவின் வெற்றியே எதிர்வுகூறப்படுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஜே.வி.யின் இனவாதப்போக்கைப் பற்றி நன்கறிவர். ஆழமான கருத்தியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதொன்றாகவே ஜே.வி.யின் சிங்கள பௌத்த பேரினவெறி வெளிப்பட்டுவந்துள்ளது. தமிழர்களின் தாயகநிலத்தைக் கூறுபோடுவதன் மூலம் தமிழர் தேசத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக வடக்கு – கிழக்கைப் பிரிக்க வழக்குத் தாக்கல் செய்தமை, புலிகளுடனான அமைதிப்பேச்சுக்களைத் தொடராமல் முழு அளவிளான போர் தொடங்கப்படும் என்று உறுதியளிப்பவர்களுக்கே தமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பிற்கு வாழ்த்துத் தெரிவிக்க அமெரிக்கத் தூதரகம் சென்றமை (தமிழர்களை அழிப்பதற்கு ஏகாதிபத்தியத்துடனும் உறவாடுவோம் என்ற கொள்கையையுடைய அரிய வகை இடதுசாரிகள்), தமிழினவழிப்புப் போரின் பரப்புரைப் படையாகச் செயற்பட்டமை, மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கக் கைக்கூலிகள் என்று சிங்கள மக்களிடத்தில் கருத்தேற்றம் செய்தமை, இலங்கைத்தீவில் இனச்சிக்கல் என்ற ஒன்றிருப்பதாக எந்நிலைவரினும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம்பிடித்தல் என ஜே.வி.பியின் கடந்தகால வெறித்தனமான சிங்கள பேரினவாத நிலைப்பாட்டை தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிவர். இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் அனுரகுமாரவிற்குக் கிடைக்காது.

சிறிலங்காவைப் பொறுத்தளவில், தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காதவிடத்து, தனிச்சிங்கள மக்களின் வாக்குகளில் மட்டுமே ஒருவர் சனாதிபதியாவது என்பது மிகவும் அரிதான வரலாற்று நிகழ்வு. சென்றமுறை உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல் என்ற சூழ்ச்சியின் விளைவாக எழுந்த சிங்களக் காவலரிற்கான தேடலில் விளைந்த வினையாகவே கோத்தாபய தனிச்சிங்கள மக்களின் வாக்குகளில் மட்டும் (69 இலட்சத்து 24,000 வாக்குகளிற்குச் சற்றுக் கூடுதலான வாக்குகளைப் பெற்று) சனாதிபதியாக முடிந்தது. அதுவும் வழக்கம்போல இருமுனைப் போட்டியாக அந்த சனாதிபதித் தேர்தல் அமைந்தமையாலே இது நடந்தேறியது. ஆனால், இம்முறை அனுரகுமார திசாநாயக்க‌, சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க (ஓரளவு உறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்) என மும்முனைப் போட்டியாகவே சனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கின்றது. “அரகலிய” எழுச்சியலையின் விளைவாக வீசும் பேரளவிலான செல்வாக்குடன் போட்டியிடும் அனுரகுமார; ஐ.தே.க, மொட்டுக் கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவு, மலையக மக்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி போன்றவற்றின் ஆதரவுடன் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க; தனது ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மொட்டுக் கட்சியின் ஒரு பிரிவினர் போன்றோரின் ஆதரவுடன் போட்டியிடும் சஜித் பிரேமதாச; ஆகியோர் வரவிருக்கும் சனாதிபதித் தேர்தலை மும்முனைப் போட்டிக் களமாக மாற்றுவர்.

இலங்கைத்தீவிலுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,68,00,878 ஆகும். இதுநாள் வரையான புள்ளிவிபரத்தின் படி வாக்களிப்பு வீதம், செல்லுபடியாகும் வாக்குகளின் விழுக்காடு என்பனவற்றைக் கருத்திற்கொண்டால், வருகின்ற சனாதிபதித் தேர்தலில் செல்லுபடியாகப்போகும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அண்ணளவாக 1 கோடி 34 இலட்சத்து 45,000 ஆக‌ இருக்கும். சனாதிபதித் தேர்தலில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் 50% இற்கு மேலதிகமாக 1 வாக்கினைப் பெற வேண்டும். எனவே, ஒருவர் சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அண்ணளவாக 67 இலட்சத்திற்குக் கூடுதலாக வாக்குகளைப் பெற வேண்டும். மும்முனைப் போட்டி நிலவும் சனாதிபதித் தேர்தலில் ஒருவர் 50% வாக்குகளைப் பெறுவதென்பது எளிதானதல்ல. அதுவும், தனிச்சிங்கள வாக்கில் அவ்வாறு 50% வாக்கினைப் பெறுவதென்பது மிக மிக அரிதாகவே நிகழ்ந்தேறக்கூடியதொன்று.

எனவே, தமிழ் மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் வாக்குகள் நடைபெறவிருக்கும் சனாதிபதித் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டதாகவே இருக்கும். முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் சஜித் முஸ்லிம் வாக்குகளைப் பெறுவார். மலையகத் தமிழர்களின் பேராளராக‌விருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுடன் உடனிருப்பதால் கணிசமான மலையகத் தமிழர் வாக்குகளை ரணில் பெற்றுக்கொள்வார். மனோகணேசனின் தமிழர் முற்போக்குக் கூட்டணி சஜித்துடன் உடனிருப்பதால் சஜித்தும் மலையகத் தமிழரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில், ஜே.வி.பியினருக்கு அறவே வாக்களிக்க மாட்டார்கள் என்பது ஏலவே குறிப்பிடப்பட்டாயிற்று. அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குக் காரணமான மொட்டுக் கட்சியை இனப்படுகொலைக் கட்சியாகவே தமிழ் மக்கள் நோக்குவர். அத்துடன், ஈழத் தமிழ்த் தலைமைகளுடன் ரணில் மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாக ஈழத்தமிழ்க் கட்சிகளிடம் ஒரு மனக்குறை உண்டு. எனவே, மொட்டுக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும் ரணிலிற்கு டக்ளஸ் தேவானந்தவின் ஈ.பி.டி.பி வாக்குகள் மட்டுமே ஈழத்தமிழ்த் தரப்பிலிருந்து உறுதியாகக் கிடைக்கக் கூடியன. மனோகணேசனைப் போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கும் நிலையையே எடுக்கும் என்று அண்மையை ஊடகச் செய்திகளிலிருந்து எதிர்வுகூறக் கூடியதாகவுள்ளது. எனவே, அதிகமான தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகளை சஜித் பிரேமதாசவே பெற்றுக்கொள்வார் என்பதும் ரணிலும் அதில் ஒரு சிறுபங்கைப் பெற்றுக்கொள்வார் என்பதும் புலனாகின்றது. ஆனால், அனுரகுமார ஈழ, மலையகத் தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வல்லமையற்றவராகவே இருக்கிறார். என்னதான் அனுரவிற்கு சிங்கள மக்களிடத்தில் பெரு வரவேற்பு இருந்தாலும், மும்முனைப் போட்டியாலும் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளைப் பெற முடியாமையாலும் முதற்சுற்றில் 50% வாக்குகளைப் பெறுவதென்பது இயலாததொன்றாகவே இருக்கப்போகின்றது.

முதற்கட்ட வாக்கு எண்ணுகையின் முடிவில் 3 ஆம் இடத்தைப் பிடித்துப் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ரணிலிற்கே ஏற்படும். அப்படியிருக்கையில் ரணிலிற்கு வாக்களித்தவர்களின் இரண்டாவது விருப்புவாக்குகளை எண்ணியே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், தேர்தல்களில் இரண்டாவது விருப்பு வாக்குகளை அளித்து மக்கள் பழக்கப்படவில்லை என தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். எனவே, நடைபெறவிருக்கும் சனாதிபதித் தேர்தல் என்பது வரலாற்றில் இதுவரை நடந்தேறியிராதளவிற்கு இறுக்கமானதாகவும் பரபரப்பானதாகவும் அமையப்போகின்றது என்பது திண்ணம். எனவே இம்முறை அதிகூடிய வாக்குகளைப் பெற்றாலும் சனாதிபதியாகத் தேவையான வாக்குகளை அனுரகுமார பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடு இருக்கவே செய்யும்.

இந்தநிலையில், தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகப் பேசப்படுகின்றது. முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரனே இந்த விடயத்தில் பேரார்வத்துடன் இருக்கின்றார். அப்படித் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதென்பது, சஜித்திற்குப் போகவிருக்கும் பெரும்பாலான தமிழரின் வாக்குகளைத் தடுத்து நிறுத்தி அனுரகுமாரவின் வெற்றிக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் கயேந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கிறார். ஒட்டுமொத்த தமிழர்களையும் தேர்தலைப் புறக்கணிக்க வைத்திட புலிகளைப் போல பாரிய வலிமையுடைய தரப்பால் மட்டுமே இயலும். தேர்தலைத் தமிழர் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்தேசமானது சிங்களதேசத்திற்கும் உலகிற்கும் ஒரு தெளிவான அரசியற் செய்தியைக் கொள்கையளவில் பறைசாற்ற இயலும். விடுதலைப் புலிகள் அதனைச் செய்து காட்டியிருந்தனர். ஆனால், இன்றுள்ள அரசியல் தாராளவாதப் போக்கில் தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வல்லமை வாக்குப் பொறுக்கும் தமிழ்க் கட்சிகள் எவரிற்குமில்லை.

எனவே, தேர்தலைப் புறக்கணிக்குமாறு இவர்கள் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்ளும்போது, யார் வெற்றிபெறக் கூடாது என்ற அடிப்படையில் இதுநாள் வரை சனாதிபதித் தேர்தலில் வாக்களித்துப் பழகியவாறே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க நேர்ந்தால், அது தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியவர்கட்கும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகட்கும் அவர்கள் உலகிற்குப் பறைசாற்ற முன்வந்த செய்திக்கும் பாரிய பின்னடைவாக அமைந்துவிடும். எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளரை சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதென்பது முட்டாள்த்தனமான முடிவே. அதேபோல, தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதும் இன்றுள்ள அரசியற் சூழமைவில் நேர்த்தியாக முன்னெடுக்கக் கூடியதொன்றல்ல. இப்போதுள்ள தெரிவில் அனுரகுமாரவையும் மொட்டுடன் ஒட்டிவரும் ரணிலையும் ஏற்க முடியாதென்ற அடிப்படையில் தமிழ் மக்கள் சனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கே பெருமளவில் வாக்களிப்பர். ஒடுக்கும் சிங்களதேசத்திற்கு ஒரு பலவீனமான சனாதிபதி அமையட்டும் என்ற கடுப்பில் வாக்களிக்கப்போவதாக எண்ணினாலும் சஜித் பிரேமதாசவே தமிழர்களின் தெரிவாக இருப்பார். ஒரு வலுவான அரசாங்கம் ஒடுக்கும் சிங்களதேசத்தில் உருவாகாமல் அங்கு கூச்சலும் குழப்பமும் நீடிக்க வேண்டுமென்றே ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் ஏங்குவர். இதைவிட இன்னுமொரு செய்தியையும் நாம் உற்றுநோக்க வேண்டும். அதாவது தற்போதுள்ள தேர்தல் முறைமையில் ஏதாவது சீர்திருத்தங்களை சிங்களதேசத்திற்கு ஏற்றதாகச் செய்ய முடியுமா என ரணில் சிந்திப்பதாகச் சொல்லப்படுகின்றது. நாடற்ற மக்களாக தமிழர் சிங்களதேசத்தால் ஒடுக்கப்பட்டிருக்கும் போது சிங்களதேசத்தின் சனாதிபதித் தேர்தலெல்லாம் ஒரு கேடா? என நீங்கள் நினைப்பது எமது காதுகளில் அறைகின்றது. தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுக்கும் தேசிய இயக்கமில்லாமல் தத்தளிக்கும் தமிழர்களின் விடுதலை அரசியல் பற்றிப் பேசுவதை இனிவரும் பத்திகளில் மனங்கொள்வோம்.

-முத்துச்செழியன்-

2024.04.03