“அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு”; தமிழர் பார்வையில் ஜே.வி.பியினர்

கடனைத் தீர்க்க வலுவற்ற நிலையையும் மேலும் நிதியடிப்படையில் நாட்டைக் கொண்டு நடத்த இயலா நிலையையும் ஒப்புக்கொண்டு 2022 ஆம் ஆண்டு சிறிலங்காவானது தான் வங்குரோத்து நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாக உலகிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து நிலவிய மின்வெட்டுகள், எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்புகள், எரிவாயு இன்மை, அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாதளவிற்கான பொருட் தட்டுப்பாடு போன்ற மக்களை எரிச்சலூட்டும் நிலைமைகளால் சிங்கள‌தேசத்து மக்கள் தாம் பெருவிருப்போடு இன்றைய துட்டகெமுனுவாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய கோத்தாபய அரசாங்கத்தின் மீது தமது உடனடி வெறுப்பைக் காட்டத் தெருவிற்கு இறங்கினர்.

உண்மையில் சிறிலங்காவானது வங்குரோத்து நிலைக்கு வந்தமைக்கு கோத்தாபயவின் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை மட்டுமே காரணங்காட்டுவதில் மேற்குலத் தூதரகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்கள் முன்னின்று உழைத்தன. திறந்த சந்தைப் பொருண்மியத்தை ஜே.ஆர் அரசாங்கம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து வெளியாரின் நிதிமூலதன‌ங்களிற்கான வேட்டைக்காடாக இலங்கைத்தீவு மாறிப்போனமையின் விளைவுகள், தமிழினவழிப்பு மூலம் தமிழர்தேசத்தைப் போரில் வென்று ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்குவதற்காக உலகநாடுகளிடம் கடனிற்குக் கேயேந்தத் தொடங்கி ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் வணிக ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அடகுவைத்தமை, போரில் தமிழர்தேசத்திடம் வாங்கிக் கட்டிய அடிகளால் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்ட பாரிய சொத்தழிவுகள், மேற்குலக, பாகிஸ்தான் மற்றும் சீன ஒத்துழைப்புடன் இந்தியாவால் முன்னின்று முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்டப் போரில் தமிழர்களை இராணுவ அடிப்படையில் தோற்கடித்தமையைத் தமது வெற்றியாகக் காட்டிய ராஜபக்ச அரசாங்கமானது போர் வெற்றிவாத மாயையில் சிங்கள மக்களை மூழ்கியிருக்க வைத்துச் செய்த அள்ளுகொள்ளை ஊழல்கள் போன்ற வங்குரோத்து நிலைக்கான நீடித்த காரணங்கள் குறித்தோ அல்லது வேதிய உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டிற்கு முன்னேற்பாடுகள் ஏதுமின்றி கோத்தாபய அரசாங்கம் உடனடித் தடை விதித்ததன் மூலம் இலங்கைத்தீவு ஓரளவு தன்னிறைவு கொண்டிருந்த நெல்லுற்பத்தியிலும் மற்றும் ஏற்றுமதியில் இன்னமும் வருமானமீட்டிக் கொடுத்த தேயிலை உற்பத்தியிலும் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி, புத்தர் கனவில் வந்து கூறிய கதையாக எந்த முன்னெடுப்புகளுமற்ற புரிந்துகொள்ளவியலாத சடுதியான வரிக்குறைப்பு போன்ற வங்குரோத்து நிலைக்கான உடனடிக் காரணங்கள் குறித்தோ அல்லது 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பினால் சிறிலங்கா முதலீட்டிற்குப் பாதுகாப்பற்ற நாடு என்றும் சுற்றுலா செல்வதற்குப் பாதுகாப்பற்ற நாடு என்றும் உலகு மனங்கொள்ளத் தொடங்கியதால் டொலர்களில் வருமானம் பெற இயலாத நிலை ஏற்பட்டமை அல்லது கொரோனாப் பெருந்தொற்று, உக்ரேன் போர் போன்ற உலகந்தழுவிய சிக்கல்களால் சிறிலங்காவின் பொருண்மியத்திற்கு ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகள் என்பன குறித்தோ சிங்களதேச மக்கள் தெளிவாக எண்ணியுணராதவாறு கோத்தாபயவை வீட்டிற்கு அனுப்புவதை மட்டுமே இலக்காகக் கொள்ளுமாறே “அரகலய” போராட்டமானது புரட்சிச் சாயம் பூசப்பட்டு மேற்குலக நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டது.

தமக்குவப்பான ரணில் விக்கிரமசிங்கவை மக்களின் வாக்குகளின்றிப் பின் கதவால் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியாக்கிய பின் “அரகலய” போராட்டம் கலைத்துவிடப்பட்டது. ஆனாலும் தொடருகின்ற சிறிலங்காவின் பொருண்மியச் சிக்கலைச் சீர்செய்ய மேற்குலகினால் அருள்பாலிக்கப்பட்ட, இந்தியாவிற்கு முந்தானை விரிக்கக்கூடிய ஒருவராலே முடியுமென்றவாறு சிங்கள மக்கட்குக் கருத்தேற்றங்கள் பல தளங்களிற் செய்யப்பட்டன. சிறிலங்காவானது தமிழர்களை அழிக்க உலகமெல்லாம் கையேந்திப் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தும் வல்லமையற்றுப் போன நாடென வெட்கமின்றித் தாமே அறிவித்ததைத் தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) தலையீட்டில் கடன்மறுசீரமைப்புத் (debt restructuring) தொடர்பான பேச்சுகள் சிறிலங்காவிற்குக் கடன் வழங்கிய நாடுகளுடன் நடைபெறுவதால் கடன்செலுத்த வேண்டிய சூழல் தற்காலிகமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாலும் இந்தியா சிறிலங்காவின் மீது முழு அளவில் மேலாண்மை செலுத்துவதற்காக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ரணிலின் அரசாங்கத்திற்கு வழங்கியதாலும் சிங்கள மக்களின் சினத்தைத் தற்காலிகமாகத் தணிக்கும் வாய்ப்பை ரணில் பெற்றிருக்கிறார்.

“அரகலய” போராட்டத்தினை மேற்குலகத் தூதரகங்கள் தம்வயப்படுத்தினாலும் அதன் தொடக்கநிலைத் தன்னெழுச்சித் தன்மையானது ரணிலின் வருகையையும் ஏற்கவில்லை என்பதுடன் மரபுசார்ந்த கட்சிகட்கு மாற்றாகப் புதிதாக இளையோர் எழுச்சியுடன் எவரேனும் ஆட்சியிலேறிப் புதுமைகளை நிகழ்த்தித் தமது லங்கா மாதாவைக் காப்பாற்றிட வேண்டுமென்று வேட்கை கொண்டுள்ளது. புரட்சியை முன்னெடுக்கவல்ல கருத்தியற்தெளிவோ அல்லது அமைப்பு வடிவமோ அற்ற இளையோரின் ஒன்றுகூடலில் “அரபு வசந்தம்” போன்ற கனவிருந்ததே தவிர புரட்சிக்கான அணியப்படுத்தல்களும் வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. எனவே, அனுரகுமார திசநாயக்கவை ஆட்சியேலேற்றுவதைத் தமது புரட்சிகரக் கடமைகளில் ஒன்றாக மனங்கொள்ள “அரகலய” போராட்டத் தாக்கத்தினால் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள சிங்கள இளையோர் பழக்கப்படுத்தப்படுகின்றனர். எச்சில் விழுங்காமல் மூச்சு விடாமல் தொடர்ந்து புரட்சிகர முழக்கங்களை அரைகுறையாக வாயாடக் கூடிய வல்லமை அவர்கட்கு (JVP/ NPP) வாய்க்கப்பெற்றதொன்றாக இருப்பதால் மாற்றம் என்ற சொல்லை மலினப்படுத்துமாறு தேசிய மக்கள் சக்தியானது (NPP) தாம் எதிர்கொள்ளும் அனைத்துத் துன்பப் பூட்டுகளிற்குமான திறவுகோலாக இருக்குமென்று சிங்கள இளையோரில் பெரும்பான்மையானோர் மனங்கொள்கின்றார்கள்.

கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் “சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் (Institute for Health Policy)” எனும் ஆய்வு நிறுவனமானது இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கடந்த ஆண்டின் இறுதியில் நடத்திய கருத்துக் கணிப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தேர்தல் அரசியலிற்கான கவர்ச்சிப் பெயராகவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்கவே 50% வாக்குகளைப் பெற்று சிறிலங்காவின் பத்தாவது சனாதிபதியாகப் போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தீவிர சார்பாளர்களாகக் கருத்துத் தெரிவித்து வந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் கணிசமானோர் வெளிப்படையாகவே அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தியின் வருகையை வேண்டி நிற்பதாகக் கருத்துப் பகிரும் நிலைக்கு வந்துவிட்டனர்.

சிங்கள இளையோர் கூடுதலான எண்ணிக்கையில் கூடும் கல்வி நிறுவனங்களில் அனுரகுமார ஒளிருகின்ற விண்மீன் போல பார்க்கப்படுகிறார். ராஜபக்சக்களின் மீது பற்றுக்கொண்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சரத்பொன்சேகவின் மீது நாட்டம் கொண்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் அனுரகுமார திசநாயக்கவின் வருகை மீது வேட்கை கொண்டுள்ளமை அண்மைய செய்திகளில் வெளிவருகின்றன. மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர போன்றோர் தேசிய மக்கள் சக்தியின் துணை அமைப்பாக தேசிய அறிவுசார் அமைப்பு (National Intellectual Organization) என்பதைக் கட்டி அனுரகுமாரவின் வருகைக்காக முழு அளவில் பாடாற்றுகிறார்கள். அத்துடன் சிறிலங்காவின் வாக்காளர்களில் பாரிய விழுக்காட்டினராகவிருக்கும் இளையோரின் வாக்குகளை வென்றெடுக்கும் வல்லமை அனுரகுமாரவுக்கு வாய்த்துவிட்டதாலும் வேறொரு தகைமையான வேட்பாளர் இதுவரை எந்தக் கட்சிகளாலும் முன்னிறுத்தப்படாமையாலும் அனுரகுமார சனாதிபதியாகும் வாய்ப்புகள் இப்போதைக்குக் கூடுதலாகவிருப்பதை இந்தியா உணர்ந்துள்ளது.

ஜே.வி.பியினரின் இந்தியப் பயணம்

இந்தப் பின்னணியிலேயே வரலாற்றில் முதன் முறையாக மக்கள் விடுதலை முன்னணியினரின் பேராளர் முழுவானது (delegation) 5 நாள் சுற்றுப் பயணத்திற்கு டெல்கியினால் அழைக்கப்பட்டது. புகழ்வாய்ந்த தமது 5 அரசியல் வகுப்புகளில் முதன்மையான இடம் வகித்திருந்த இந்திய விரிவாக்கம் (Indian Expansionism) பற்றிய வகுப்புகளின் மூலம் இந்தியாவை எதிர்ப்பதாகத் தோற்றங்காட்டிய மக்கள் விடுதலை முன்னணியானது (JVP) தனது இரண்டாவது கிளர்ச்சியை இந்திய எதிர்ப்புவாதத்திலிருந்தே வெளிக்கிளம்ப வைத்தமை யாவரும் அறிந்ததே. அப்படியிருக்க, ஜே.வி.பி தொடங்கப்பட்டுச் சற்றொப்ப 60 ஆண்டுகளாகும் நிலையில் வரலாற்றில் முதன்முறையாக டெல்கிக்கு அழைக்கப்பட்டு இந்தியாவின் வெளி அலுவல்கள் அமைச்சரான ஜெய்சங்கருடனும், இந்திய அதிகார வர்க்கத்தினருடனும் சந்திப்புகள் நடைபெற்றன. அத்துடன் ஒருபடி மேற்சென்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவாலுடனும் அனுரகுமார தலைமையிலான குழு சந்திப்பை மேற்கொண்டது. அத்துடன் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் தாய்நிலமான குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் அங்குள்ள முதலீட்டாளர்களுடன் கைகுலுக்கும் நிகழ்வுகளானவை ஜே.வி.பியினரின் 5 நாள் இந்தியப் பயணத்தில் நடந்தேறின. ஆட்சியதிகாரத்தை அடைவதற்கு எந்த நிலைக்கும் போகக் கூடிய ஜே.வி.யினரின் அன்றைய இந்திய எதிர்ப்பு முழக்கங்களில் கூட உண்மையில்லை என்பதை இந்தியா நன்குணரும். அத்துடன், சிறிலங்காவானது பொருளியற் சிக்கலிற்குள் மீண்டெழ இயலாதவாறு சிக்குண்டிருந்தபோது 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இறைத்துத் தான் போட்டுக் கொண்ட மேலாண்மை அடித்தளத்திலிருந்து இனிவரும் எந்த சிறிலங்காவின் ஆட்சியாளர்களாலும் காலெடுக்க முடியாது என்று உறுதியாக நம்பும் இந்தியாவானது வழமைக்கு மாறான முதன்மையை ஜே.வி.பியின் இந்த 5 நாள் இந்தியப் பயணத்திற்கு வழங்கியிருந்தது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அனுரகுமாரவின் சந்திப்பை ஒரு அரசியற் சந்திப்பாக மட்டுங்கருதிக் கடந்து செல்ல இயலாது. ஆட்சியதிகாரத்தை அடையவும் தன்முனைப்பைக் காட்டவும் வாய்ப்புள்ள சொல்லத்தரமற்ற வழிகளைக் கூட ஜே.வி.யினர் பயன்படுத்துவர் என்பதை வரலாற்றில் நடந்தேறிய நிகழ்வுகள் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.

இப்படியான சூழமைவில், தேசிய மக்கள் சக்தி (NPP) என்று கூறிக்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணியினர் (JVP) இம்மாதம் 16 ஆம் தேதி இலங்கைத்தீவின் வடக்கிற்குச் சுற்றுப்பயணம் வரவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வருகையின் போது தமிழ் அரசியற் கட்சிகளையும் பொதுமக்கள் அமைப்புகளையும் (Civil Societies) தமிழ் மக்களையும் சந்திக்கவிருப்பதாக ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர். இலங்கைத்தீவின் சனாதிபதித் தேர்தல் வரலாற்றில் விதிவிலக்காக எழுந்த அலையில் வந்தவர் போக (கோத்தாபய) பொதுப்படையான உண்மை என்னவெனில், இலங்கைத்தீவில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ்பேசும் மக்களின் துணையின்றி சிங்களதேசத்தின் வாக்குகளில் மட்டுமே ஒருவர் சனாதிபதியாகிவிட முடியாது. இந்த உண்மையை நன்கறிந்த அனுரகுமார திசநாயக்க தமிழர்தேசத்திற்கு வருகை தந்து அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசப் போகின்றார். இன்னும் குறிப்பாக சனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்களில் சிலருடன் 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் தொடக்கத்திலும் ஜே.வி.யினர் கொண்டிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி அவர்களுடனான உறவுகளை வாயினால் வலுப்படுத்தி தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களை வேண்டப்போகிறார் அனுரகுமார திசநாயக்க. ஏற்கனவே, கடந்தமாதம் வடக்கிற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க என்பவர் சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஜனநாயகப் போராளிகள் (?) கட்சியினருடனும் இது தொடர்பில் முதற்கட்டப் பேச்சுகளைத் தொடங்கியிருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

வரலாற்றின் கசப்பான பக்கங்களைக் கூட தமது வசதிக்கேற்ப அவ்வப்போது மறந்துவிடும் ஒருவிதமான‌ அரியவகை ஆற்றல் படைத்த பலர் சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகவிருப்பதால் தமிழ்த் தேசிய இனச்சிக்கலில் ஜே.வி.யினர் கொண்ட பேரினவாத வெறிக் கோலங்களை இன்றைய தலைமுறையினருக்குச் சொல்ல மாட்டார்கள். ஜே.வி.யினரின் தமிழினப் பகைமையுணர்வானது எத்தன்மையினது என்பதை இன்றைய தலைமுறைத் தமிழிளையோரிடம் சொல்வாருமில்லை. தமிழரசுக் கட்சியோ மேற்குலகின் மடியில் உறங்கியவாறு இந்தியாவின் தாளத்திற்குக் காலாட்டும் ஆற்றலில் கைதேர்ந்தவர்களாக இருப்பதைத் தாண்டி ஜே.வி.பியின் தமிழினப் பகைமை வரலாற்றையெல்லாம் விளக்கும் நிலையில் இல்லை. தமிழரசுக் கட்சியா தமிழ்க் காங்கிரசா என்ற குழுவாதப் போக்கினைத் தாண்டி எதையும் பேசுபொருளாக்கும் மனநிலையில் கயேந்திரகுமார் கூட்டத்தினரில்லை. அதிகாரத்திற்கு எவன் வந்தாலும் ஒத்தோடுவதில் தனக்குவமையில்லாத டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தமிழ் மக்கள் எதையும் தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். “ஜே.வி.பி இடதல்ல; இடத்திற்கேற்ப உருமாறும் இனவாத அமைப்பு” என நிறுவும் சண்முகதாசன் வழிவந்த ஓரிரு கட்டுரையாளர்களைத் தவிர ஜே.வி.யினர் பற்றித் தமிழ் மக்கள் எந்தளவிற்கு எச்சரிக்கையுடனிருக்க வேண்டுமென்று வரலாற்றுச் செய்திகளுடன் யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி எனும் இனவாதப் பூதம் தமிழர்கள் விடயத்தில் மெத்தனத்துடன் எப்படி நடந்துகொண்டது என்பது பற்றி இன்றைய தலைமுறைத் தமிழிளையோர்கள் தெளிவடைய வேண்டும்.

அன்று முதல் இன்று வரை பேரினவெறியின் உச்சத்தில் நிற்கும் ஜே.வி.பி

ஜே.வி.பியினை 1965 இல் நிறுவிய அதன் நிறுவனரான ரோகண விஜயவீர என்பவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான நா.சண்முகதாசனைத் தலைமையேற்று அவரின் வழிநடத்தலிலேயே மார்க்சிய, லெனினிய, மாவோவிய கருத்தியல்களைக் கற்றுக்கொண்டார். மார்க்சியத்தைத் திரிவுபடுத்தி அதனை எதிர்ப்புரட்சிக் கருத்தியலாக்கும் குருசேவ் வழியிலான திரிபுவாதச் சேட்டைகளுக்கு இடங்கொடுக்காமல் அதனை எதிர்த்து நின்று மாவோவின் வழியில் மார்க்சியத்தைக் காப்பாற்றி நின்ற நா.சண்முகதாசன் அவர்கள் சீனாவில் பண்பாட்டுப் புரட்சி நடைபெற்ற காலத்திலே இரு தடவைகள் அங்கு நேரிற் சென்று மாவோவுடன் நெருங்கிய தோழமை கொண்டவராக இருந்தவர். இதானால், நா.சண்முகதாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகி கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்திய ரோகண விஜயவீர நா.சண்முகதாசன் மூலமாக வடகொரியா, சீனா, இந்தோனேசியா என உலகலாவிய புரட்சிகரத் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் போதுமானளவு தொடர்புகளை வளர்த்துக் கொண்ட ரோகண விஜயவீர உட்கட்சி விவாதங்கள் ஏதுமின்றி தமிழரான நா.சண்முகதாசனிற்கு எதிராக தனக்கென ஒரு குழுவை உருவாக்கியதோடு, ரொட்ஸ்கிய எதிர்ப்புரட்சிக் கருத்தியலிற்கும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் பெயர்போன கெனமனுடன் கூட்டுச் சேர்ந்து 1966 இல் கெனமன் தலைமையில் பேரினவாத நோக்குடன் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பங்குபற்றியதோடு நா.சண்முகதாசன் தலைமைதாங்கி நடத்திய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினுடைய‌ (பீஜிங் பிரிவு) வளங்களைப் பயன்படுத்தி அந்த ஊர்வலத்திற்குத் திருட்டுத்தனமாகத் துண்டறிக்கை அச்சிட்டு, கட்சியின் ஒழுக்கநெறிகளை மீறி இரண்டகமிழைத்ததால் ரோகண விஜயவீரவை கட்சியிலிருந்து இடை நீக்கினார் நா.சண்முகதாசன். இவ்வாறாக, சிங்கள பேரினவாத சிந்தனை என்பது ரோகண விஜயவீரவிடம் 1960 களிலேயே வெளிப்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளரை முன்னணிப் போர்ப்படையாகக் கருதி மலையக மக்களின் தொழிலுரிமைப் போராட்டங்களில் கூடிய அக்கறை செலுத்திப் போராடிய நா.சண்முகதாசனிற்கு இனவாதச் சாயம் பூசுவதிலும் ரோகண விஜயவீர முனைப்புடன் இருந்தார். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதனாலும் அந்தப் போராட்டங்களிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி முன்னின்று உழைத்த நா.சண்முகதாசன் அவர்கள் பிறப்பால் தமிழரென்பதனாலும் இந்த தமிழினவாதச் சாயத்தைப் பூசுவது ரோகணவிற்கும் அவரது குழுவினரிற்கும் எளிதாகவிருந்தது.

இவ்வாறு கட்சிக்குள் இருந்து கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியும் ஒழுக்கநெறிகளை மதிக்காமலும் இனவாத நோக்கோடு பயணிக்கத் தொடங்கிய ரோகண விஜயவீர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஜே.வி.பியினை நிறுவினார். ஜே.வி.யினரின் நாகரீக முகமாக உலவிய அதன் ஆதரவுப் புலமையாளர்களையும் கல்வியாளர்களையும் முன்னணித் தலைவர்களையும் நெருக்கமாக அறிந்திருந்த பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் (சிவசேகரம் அவர்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டங்கள் தொடர்பில் கொண்டிருக்கும் தளம்பல் போக்காலும், தன்னுரிமை தொடர்பில் அவரிடம் காணப்படும் தவறான பார்வைகளாலும் அவருடன் தமிழ்த்தேசிய இனச்சிக்கல் தொடர்பான விடயங்களில் நாம் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பவர்கள் என்பதை இங்கே சுட்டுகிறோம்) ஜே.வி.யினர் பற்றிக் கூறும் போது “ஜே.வி.பியின் பிறப்பே இனவாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. அதன் இனவாதத்தை எல்லோரும் குறைத்தே மதிப்பிடுகிறார்கள்” என்கிறார். ஜே.வி.யினை நிறுவியதும் அந்த அமைப்பிற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காகவும் அவர்களைத் தமது அரசியல் நிலைப்பாட்டிற்குக் கொண்டுவருவதற்காகவும் ஜே.வி.யினர் நடத்திய அரசியல் வகுப்புகளை “புகழ்பெற்ற 5 வகுப்புகள்” என்று கூறுவர். அதில் ஒரு வகுப்பு இந்திய விரிவாக்கம் பற்றியது. அதாவது, தொழிலுரிமை, மண்ணுரிமை, வாழ்வுரிமை என ஏதுமில்லாது பெருந்தோட்டங்களில் கொத்தடிமைகளாக்கித் துன்புறுத்தப்பட்ட மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் கைக்கூலிகளாகச் சித்தரிப்பதை நோக்காகக் கொண்டதான இந்த அரசியல் வகுப்பை நடத்திய ரோகண விஜயவீரவின் சிந்தை எவ்வளவிற்கு இனவாதத்தில் ஊறிக்கிடந்தது என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1971 இல் ஜே.வி.யினர் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளவிருந்த முதலாவது புரட்சியானது வெறும் 53 இராணுவத்தினரையும் 37 பொலிசாரையும் கொன்றதுடனும் 35 காவல்நிலையங்களைச் சில மணிநேரங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடனும் வெறும் கிளர்ச்சியாகவே நிறைவுற்றது. இந்தக் கிளர்ச்சிக்கு முன்னரே அம்பாறையில் கைதான ரோகண யாழ்ப்பாணச் சிறையில் அடைக்கப்பட்டார். நன்கு பயிற்றப்படாமல், போரியற் திட்டங்களை முறையாக வகுக்காமல், வாயால் வடைசுட முடியும் என நம்பிக்கை கொண்டு புரட்சியைக் கிளர்ச்சியுடன் மட்டுப்படுத்திக் கொண்ட ஜே.வி.யினரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட மறவழிப் போராட்டத்துடன் போரியல் அடிப்படையிலும், ஈகத்தின் அடிப்படையிலும், இலக்குத் தொடர்பான தெளிவின் அடிப்படையிலும் ஒப்பிட்டுப் பேசுவதென்பது எள்ளலுக்குரியதேயன்றி வேறெதுவுமில்லை.

ஜே.வி.யினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த 1971 ஆம் ஆண்டுக் கிளர்ச்சியில் 3000 பேர் அளவில் கைதுசெய்யப்பட்டு உசாவல்களிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் 390 ஜே.வி.பி உறுப்பினர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். அதுவரை தமிழர்கள் குறித்தும் தமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கல் குறித்தும் எந்தப் பார்வையையும் கொண்டிராத ஜே.வி.யினருக்கு சிறைப்பட்டிருந்த காலத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழ்ப்போராளிகளுடன் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதனால், ஒரு சில ஜே.வி.பி தோழர்கட்கு தமிழரின் தன்னுரிமை (Self-determination) தொடர்பில் ஒரு சிறு பார்வை மாற்றம் ஏற்பட்டதுடன் இறுதிக்காலங்களில் “ஈழச் சிக்கலிற்கு என்ன தீர்வு?” என்ற ரோகண விஜயவீர எழுதிய குறிப்பிலும் தமிழர்களின் தன்னுரிமையை ஏற்க வேண்டும் என எழுதுகிறார். ஆனாலும், சிறிலங்கா என்ற நாட்டிற்குள் தான் தமிழர்கட்குத் தன்னுரிமை இருக்க வேண்டுமென கூடுதலான அழுத்தம் கொடுத்து அந்தக் குறிப்பில் எழுதியுள்ளார். தமிழர் தேசத்தின் நிலவுகையை மறுத்து 1833 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் தமது நலன்கட்காகக் கொண்டுவரப்பட்ட ஒற்றையாட்சியைக் காப்பாற்றுவதில் ரோகண கொண்டிருந்த‌ உறுதியானது அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பையும் எள்ளலுக்குரியதாக்குவதுடன் தன்னுரிமை (Self-determination) தொடர்பில் லெனின், ஸ்ராலின், மாவோ போன்ற மார்க்சிய மூலவர்கள் எடுத்திருந்த நிலைப்பாட்டிற்கு நேரெதிராகவே இருந்தது. போறபோக்கில் வேறு வழியில்லாமல் தமிழர்களின் தன்னுரிமையை ஏற்பதாக ஒப்புக்குக் கூறிக்கொண்டாலும் “சிறிலங்கன்” என்ற அடையாளத்தைத் தமிழர் மீது திணிக்கும் பேரினவாதக் கோளாறிலிருந்து ரோகண விஜயவீரவால் மீளமுடியாதென்பதை அவர் எழுதிய அந்தக் குறிப்பே காட்டி நிற்கின்றது.

1971 இல் வாழ்நாள் சிறைவாசியாகச் சிறைப்படுத்தப்பட்ட ரோகண விஜயவீரவை சிறிமாவுடன் பகை தீர்த்துக்கொள்ளட்டும் என்ற சூழ்ச்சி நோக்கில் விடுதலை செய்த ஜே.ஆர். ஜெயவர்த்தன “ரோகணவை விடுதலை செய்யாவிட்டால் நெல்சன் மண்டேலா ஆகிவிடுவார்” என்று கூறியதை நினைவிற்கொள்ளலாம். சிறையில் இருந்தால் நெல்சன் மண்டேலா அளவிற்கு சிங்கள மக்கள் மனங்களில் நிலைகொண்டு விடுவார் என்று அஞ்சி ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் விடுதலை செய்யப்பட்ட ரோகண விஜயவீர 1982 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 4% வாக்குகளையே பெற்றார். 1977 களின் பின்பாக புரட்சிகர அரசியலில் இருந்து வெளியே வந்து வாக்குப் பொறுக்குவதென ரோகண விஜயவீர முடிவெடுத்த பின்பு தமிழ் மக்களிடமும் வாக்குப் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் 1980 இல் யாழ்ப்பாணம் வந்து உரையாற்றிய போது யாழ்ப்பாண இளைஞர்களின் கல்லெறித் தாக்குதலிற்கு உட்பட்டு நெற்றியில் காயமடைந்தார். இவ்வாறு தமிழர் தாயகப் பகுதிகளில் ஜே.வி.பியினர் கல்லெறிந்து விரட்டப்பட்ட வேறு சில நிகழ்வுகளும் வரலாற்றில் நடந்தேறின. இவை போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதென்று ஜே.வி.பியின் ஒரு சாராரும், அதை மறுத்து நா.சண்முகதாசன் அவர்களுடைய தோழர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதென ஜே.வி.பியின் இன்னொரு சாராரும் கூறினர்.

தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழரை ஒரு தரப்பாகக் கூட உள்வாங்காமல் இலங்கைத்தீவு மீதான மேலாண்மைக் கனவுடன் இனக்கொலையாளி ராஜீவ் காந்தியும் தமிழரை அழித்து ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் நோக்குடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் செய்துகொள்ளும் ஒப்பந்தமான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலையை வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் எதிர்த்தார்கள். ஜே.வி.பியினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். ஆனால், இந்திய விரிவாக்கத்தை எதிர்ப்பதற்காகவும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மீறக்கூடாது என்பதற்காகவும் மட்டுமே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஜே.வி.யினர் எதிர்த்தார்கள் என்பதோடு இந்தியா என்ற தமிழினப் பகையை ஏதோ தமிழர்களின் பேராளர்கள் போல காட்டிய ஜே.வி.பியினர் அந்த ஒப்பந்தத்தின் மீதான எதிர்ப்பைத் தமிழரின் மீதான எதிர்ப்பாக வளர்த்துவிட முயன்றார்கள். எனவே, இந்திய வெறுப்பைத் தமிழின வெறுப்பாக மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்த ஜே.வி.யினர் இந்திய-இலங்கை ஒப்பந்த எதிர்ப்பைத் தமிழர்கள் மீதான இனவெறியுடன் ஒற்றிணைத்துத் தமது இரண்டாவது கிளர்ச்சியை மேற்கொள்ள 1987-1989 காலப்பகுதியில் முனைந்தார்கள். இந்தக் கிளர்ச்சியானது 70,000 இற்கு மேற்பட்ட உயிரழிவுகளுடனும் 9000 மில்லியன் சொத்தழிவுடனும் தோல்வி கண்டது.

எந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விரிவாக்கக் கைக்கூலிகள் என ரோகண விஜயவீர இழிவுசெய்தாரோ அந்தத் தோட்டத் தொழிலாளர் நிரம்பிய உலப்பனேயில் உள்ள‌ தேயிலைத் தோட்டமே அவரிற்கு முற்றுப்புள்ளி வைத்த இடமாகியது. ரோகண விஜயவீர, உபதிஸ்ச கமநாயக்க, கீர்த்தி விஜயபாகு போன்ற ஜே.வி.யின் தலைவர்கள் கொல்லப்பட உயிருடன் எஞ்சிய ஒரே தலைவரான சோமவன்ச அமரசிங்க என்பவர் இந்திய உளவுத்துறையான “ரோ” வினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பிரான்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்திய எதிர்ப்புப் பேசிய சோமவன்ச இந்திய உளவுத்துறையுடன் சல்லாபித்து தனது உயிரைக் காப்பாற்றி ஜே.வி.யின் நாலாவது தலைவராகத் தலைமையேற்றார். பின் சந்திரிக்காவுடன் சல்லாபித்து, அவருடன் கூட்டணி சேர்ந்து 3 அமைச்சர்களுடன் 39 நாடாளுமன்ற இருக்கைகளைப் பிடித்துக்கொண்டனர். சுனாமி ஆழிப்பேரலைப் பேரிடரில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மீண்டெழுவதற்காக மாந்தநேயக் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட்ட சுனாமி மனிதாபிமான செயற்பாட்டு வரைபிற்கெதிராக‌ப் பேரினவெறிப் பரப்புரை செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டுவர இடமளிக்காமற் தடுத்தது ஜே.வி.பியினரே என்பதைத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (Patriotic National Movement) என்ற பெயரில் இயங்கிய ஜே.வி.யின் துணை அமைப்பானது 2005 இனை குடியேற்றவாத எதிர்ப்பாண்டாக அறிவித்ததோடு “பௌத்த இராட்சியத்தை அழித்துவிட்டு கிறித்தவ தமிழீழத்தை நிறுவவே பன்னாட்டுச் சமூகம் வேலை செய்கின்றது” என்று மேடைகளில் முழங்கிச் சிங்கள இனவாதத்தை பீறிட்டெழச் செய்தனர். “கிறித்தவ தமிழீழம்” போன்ற அப்பட்டமான இனவெறிக் கூச்சலானது இந்தியாவைப் பிடித்தாட்டும் பாசிசப் பேயான ஆர்‍.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்துவ பாசிச அமைப்புகளின் கூச்சல்களை விடவும் இழிவாக இருந்தது.

மகிந்த ராஜபக்ச அமைதிப் பேச்சுகளிலிருந்து வெளியேறுவதாக வாக்குறுதியளித்தால் தாம் அவரை ஆதரிக்க அணியமாக இருப்பதாக 2005 இல் ஜே.வி.பியினர் தெரிவித்தனர். அதாவது, தமிழினவழிப்புப் போரை முன்னெடுத்தால் மட்டுமே தாம் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்போம் என்ற நிலைப்பாட்டையே ஜே.வி.யினர் எடுத்தனர் என்பதைத் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமையை (Executive presidency) ஒழிக்கப் பாடாற்றுவதாக அடிக்கடி நாடகமாடும் ஜே.வி.பியினரோ புலிகளை அழிப்பதற்கு நிறைவேற்று அதிகாரமானது சனாதிபதிக்குத் தேவைப்படுகின்றது என்று கூறி நிறைவேற்று அதிகாரத்தை ஆதரித்த பாசாங்கினராகவே இருந்தார்கள் என்பதை வரலாற்றில் எவரும் மறக்க மாட்டார்கள்.  

வடக்கு, கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாக இருப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் அதனை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்றும் கோரி உச்ச நீதிமன்றில் ஜே.வி.பியினரால் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே சிங்கள பேரினவாத இனவெறியனான சரத் என் சில்வா என்ற நீதியரசர் தலைமையிலான நீதியரசர் குழுவானது வடக்கு, கிழக்கை பிரிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. இவ்வாறு தமிழர் தாயகத்தைத் துண்டாடுவதன் மூலம் தமிழர்தேசத்தை அழித்தொழிக்கக் கங்கணங்கட்டிச் செயற்பட்ட ஜே.வி.பியினர் அரசியல் அதிகாரத்தில் இல்லாதபோதே தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்தனர். ஜே.வி.பியினரிடம் அரசியல் அதிகாரமிருந்திருந்தால் இதுவரை ஆட்சிக் கட்டிலிலேறிய அத்தனை சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களிலும் பார்க்க மோசமான முறையில் தமிழினவழிப்பைத் தீவிரப்படுத்தியிருப்பர் என்பதை ஜே.வி.யினரின் உண்மை முகத்தைத் தெரிந்த யாரும் மறுக்கமாட்டார்கள்.

இவ்வாறு வரலாறு நெடுகிலும் தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள பேரினவாத வெறியுடன் அலைந்த ஜே.வி.யினர் நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதைத் தமிழர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். மேற்குலகின் முழுநேர அடிவருடியான ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் இந்தியாவுடன் ஒட்டியுறவாடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சுதேசி வேடம் போட்டு விற்றுப் பிழைக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன என தமிழினவழிப்பினை மேற்கொண்ட அத்தனை சிங்கள பேரினவாதக் கட்சிகளும் ஒப்புக்காவது தமிழர்களின் தேசிய இனச் சிக்கலிற்குத் தீர்வுகாணப்போவதாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், ஜே.வி.யினரோ அடித்துக்கேட்டாலும் தமிழர்கட்கு தேசிய இனச் சிக்கல் இருக்கின்றதென பொதுவெளியில் பேசமாட்டார்கள். “சிறிலங்கன்” என்ற ஒற்றை அடையாளத்தையும் பொருளியல் சிக்கலையும் மட்டுமே பேசுபொருளாக்கித் தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமென்று கூட ஏற்கவும் பேசவும் மறுக்கும் ஜே.வி.யினரை தமிழர் மண்ணில் காலடி வைக்கக் கூட விடக்கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் ஜே.வி.பியினரைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜே.வி.பியினர் தம்மைக் கருவறுக்கத் தாமே கருக்களைத் தாங்குவோர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகால வரையிலான வரலாறும் அவ்வாறே இருந்தது. ஆனால், அனுரகுமாரவின் தலைமை வேறோர் கோலங்கொள்வது போன்று தெரிகிறது. அவர்கள் ஆட்சியதிகாரத்தை அடைவதற்காக மோடியுடன் சேர்ந்து மாட்டு மூத்திரத்தையும் குடிப்பார்கள் என இப்போது இன்னமும் உறுதியாகச் சொல்ல இயலும். நாடு இப்போதிருக்கும் நிலையில் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்தால் வேறுவழியின்றி இந்திய மேலாண்மைக்கு இசைந்தும் மேற்குலகிற்குக் குனிந்துமே ஆட்சியைத் தக்க வைப்பர். ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்கு எதையும் செய்ய அணியமாக இருக்கும் ஜே.வி.யினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அதைத் தக்க வைப்பதற்காக எவ்வளவு மலினமாகவும் நடந்துகொள்வர் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களை நுனிக்கொப்பில் ஏற்றிவிட்டு அடிக்கொப்பைத் தறித்துவிடக் காத்திருக்கும் ஜே.வி.யினரைக் கண்டால் தமிழ் மக்கள் கல்லாலெனினும் எறிந்து விரட்ட‌மாட்டார்களா? அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு என்ற கதையாக ஜே.வி.யின் வரலாற்றைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சிங்கள இனவாதப் புழுக்களால் நிரம்பி வழிவதாகவே இருக்கிறது. புரட்சியினை முன்னெடுத்த தமிழீழ மக்கட்குப் புரட்சியின் பெயரால் எதிர்ப்புரட்சி செய்யும் ஜே.வி.பியினர் எனும் புரட்டர்களைக் கண்டால் வெறுப்பும் சினமும் வரத்தானே செய்யும்? முருங்கை பெருத்தாலும் தூணாகாது என்பதைப் போலவே ஜே.வி.பி எவ்வளவு பெருத்தாலும் தமிழர் மண்ணில் கால் வைக்க முடியாது என்ற செய்தியை தமிழர் நாம் உரக்கக் கூறுவோமாக.

– முத்துச்செழியன்-

2024-03-06