ராஜீவ் கொலை என்பது குற்றமல்ல; தமிழினப் பகையாம் இந்தியாவிற்கெதிரான தமிழர்களின் அறச்சீற்றம் -முத்துச்செழியன்-

படைத்துறை அடிப்படையிலும் மிகத் திறமையான திட்டமிடல்களினாலும் மக்களுக்கேயுரிய தமிழீழ அரச கட்டமைப்புகளினாலும் தமிழீழமானது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசினால் கனவிலும் வெற்றிகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே மாவீரர்களின் ஈகத்தாலும் மக்களின் பங்களிப்பாலும் நிமிர்ந்து நின்றது. நிலைமை அவ்வாறிருக்கையில் தான், தெற்காசியாவில் தேசிய இனவிடுதலையை அடியொட்ட வெறுக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவானது தனது வரலாற்றுப் பகையான தமிழினத்தின் மீது தான் கொண்ட கொடும் பகையுணர்வின் மேலீட்டால் தமிழர் தேசஅரசு அமைவதை எப்பாடுபட்டேனும் தடுக்கும் முனைப்புடன் தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையைத் திட்டமிட்டு, வடிவமைத்து மேற்குலகின் முழு ஒத்துழைப்பையும் சிங்கள தேசத்திற்குப் பெற்றுக்கொடுத்து முன்னின்று முன்னெடுத்த இந்தியாவின் தமிழினப் படுகொலைக்குப் போர்ப்பொருண்மியமீட்டும் நோக்குடன் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்கிப் பங்கெடுத்தன. அதுவரை புலிகளை அழித்துத் தமிழரை வலுக்குன்றச் செய்யலாம் என்று கனவிலும் நம்பியிராத மகிந்த ராஜபக்சவிற்கு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கத் தான் வைத்திருந்த முழுத் திட்ட‌ வரைபையும் காட்டி, உலகின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுத்துத் தமிழினவழிப்பை முன்னின்று நடத்தியது இந்தியாவே. அதனாலேதான் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என மகிந்த ராஜபக்ச பல தடவைகள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் இந்தியா முன்னின்று முன்னெடுத்த தமிழீழ இனவழிப்பானது, உலகிலுள்ள தேசிய இன விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்குப் பாரிய சோர்வைத் தந்திருக்கிறது. பல தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மறவழிப் போராட்டத்தின் மூலம் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதில் நம்பிக்கையிழந்து இடைக்காலத் தீர்வு, உள்ளகப் பொறிமுறையில் அதிகாரப் பரவலாக்கம், பகிரப்பட்ட இறைமை போன்ற காயடிப்புச் சூழ்ச்சிகட்குள் மாட்டிக்கொண்டன. இனி மறவழிப் போராட்டத்தால் எந்தப் பயனும் கிட்டாது மாறாக மீளா அழிவுதான் கிட்டும் என்ற பரப்புரையை இந்தியாவின் உளவு அமைப்பு பல தளங்களில் ஊடகங்கள் அடங்கலான தனது கருத்தியல் அடியாட்கள் மூலம் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களின் கட்டமைப்புகட்குள் ஊடுருவிச் சென்று பரப்பியது. தமிழீழ விடுதலையின் புரட்சிகர அமைப்பின் தோல்வி என்பது எக்காலத்திலும் மறவழிப் போராட்டத்தின் தோல்வியாகாது என்பதை விடுதலைக்காகப் போரிடும் ஒடுக்குண்ட தேசிய இனங்களுக்குச் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தவிப்பு நிலையிலும் தமிழீழ மக்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில், தேசிய இனங்கள் விடுதலை பெற்ற தேசங்களை தெற்காசியாவில் நிறுவத் தொடங்குவதுடன் உடைந்து சிதறப் போகும் வரலாற்று ஓட்டத்தில் இருந்து தப்பிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே தமிழீழ விடுதலை அமைப்பினை போரில் வென்று தமிழர்களை அழித்தமையை இந்தியா கருதியது.

இலங்கைத்தீவில் இந்தியா தனது மேலாண்மை நலன்கட்காகவும் அகண்ட பாரதக் கனவிற்காகவும் செய்து வருகின்ற சித்து விளையாட்டுகளிற்குச் சீனப்பூச்சாண்டி காட்டும் பொறுக்கித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் முகமாக இந்து மாகடல் பகுதியின் (Indian Ocean Region) புவிசார் அரசியல் தொடர்பான மெய்நிலைகள் (geopolitical realities) மற்றும் சீனாவின் அமைவிடம் சார்ந்த சிக்கல்கள் பற்றிப் போதிய அளவு தெளிவூட்டல் கருத்துகளை எமது முன்னைய கட்டுரைகளில் வழங்கியுள்ளோம். எனவே, தமிழர்கட்கு எதிராக இலங்கைத்தீவில் நடந்தேறும் அத்தனை குழப்பங்களுக்கும் முதன்மைக் காரணம் இந்தியாவே என்பதை ஐயந்திரிபறப் புரிந்துகொண்டு, அந்த உண்மையின் அடிப்படையில் விடயங்களை அணுகினாலேயன்றி நாம் மெய்நிலையை உணர்ந்துகொள்ள இயலாது என்பதைத் தமிழ்த்தேசியர்கள் ஒவ்வொருவரும் திடமாக மனங்கொள்ள வேண்டும்.

இருதுருவ உலக ஒழுங்குக் காலத்தில் (Bipolar world order) இந்தியாவின் முதல் மந்திரியாக இருந்த இந்திராகாந்தி இலங்கையின் ஜே.ஆர் அரசாங்கத்தின் அதிகரித்துச் சென்ற அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக‌ இலங்கைத்தீவில் நிலவும் தமிழ்த் தேசிய இனச்சிக்கலைப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது, 1983 இல் தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட சிங்களத்தின் இனவன்முறை வெறியாட்டமான கருப்பு சூலைப் படுகொலைகளானவை இலங்கை மீதான இந்தியாவின் தலையீட்டிற்கான நல்வாய்ப்பாகவே இந்திராவிற்குப் புலப்பட்டது. அதனால், அமெரிக்கச் சார்பு நிலையிலிருந்த சிறிலங்கா அரசிற்கு அழுத்தத்தைக் கொடுத்துத் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கில் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி வழங்க முன்வந்தார் இந்திராகாந்தி. இவ்வாறாக, ஈழப்போராளிக் குழுக்களைப் பயிற்றுவித்து ஆயுதங்களும் நிதியுதவியுமளித்து போராளிக்குழுக்களை ஏவி விட்டுத் தனது கூலிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்கச் சார்பு ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு கீழிலிருந்து ஒரு அழுத்தத்தை உருவாக்கி, விலக்குப் பிடிக்க வருவது போல தலையிட்டுத் தனது சிறிலங்கா மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதென கங்கணங்கட்டிச் செயற்பட்டது இந்திராவின் அரசாங்கம். தனது இந்த மேலாண்மை செலுத்தும் வ‌ன்கவர்வு நடவடிக்கைகளைத் தமிழர்கள் மீதான கரிசனை மற்றும் மனிதாபிமான அணுகுமுறை போன்ற அரசறிவியலுக்குப் பொருந்தாத சொற்றொடர்களுக்குள் ஒளித்த இந்திராகாந்தி தமிழர்களை முட்டாள்களாக்குவதில் வெற்றி கண்டார். இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு அவர்களது தாயகநிலப்பரப்புகளை சிங்களத்திடம் இருந்து மீட்டுத் தனிநாடாக்கிக் கொடுத்தால் தமிழ்நாடும் தனிநாடாகி இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை சிந்தையில் கொண்டு மிகவும் சிரத்தையுடனே தனது மேலாதிக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் இந்திராகாந்தி. எனவே விடுதலைப் போராளிகள் தாமகவே போராடிப் பெறப்போகும் ஈழம் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு உகந்ததாக இருக்காது எனக் கருதிய இந்திராகாந்தி, தமிழ்மிதவாதத் தலைமைகள் மற்றும் ரெலோ போன்ற அமைப்பினரைத் தமக்குச் சார்பானோராக்கி அவர்களுக்கு ஒரு அரைகுறைத் தீர்வு மூலம் பொறுப்பினைக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு காய்நகர்த்தினார். எனவே, “அன்னை இந்திராகாந்தி இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும்” என்று கதையளப்பவர்கள் குறித்துத் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் இந்தியா ஈழத்தமிழர்கட்கு எதிராகத் திரும்பியிராது என்று கூறி முழுப் பூசணியைச் சோற்றில் மறைப்பவர்கள் குறித்துத் தமிழர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலையை ஒரு பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சியெனவும், அந்தப் பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சியில் விடுதலைப் புலிகள் ஏதோ ஒரு இடத்தில் தொடர்புபடுகிறார்களெனவும் கூறுவதுடன், அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி பிரேமதாசாவுடன் ஏற்பட்ட உடன்பாடு மற்றும் சந்திரசுவாமி, சுப்பிரமணியசுவாமி போன்றோர் அடங்கலான தொடர்பும் அந்தக் கொலையில் உண்டாம் என்றும், அந்தக் கொலையை முன்னின்று நடத்திய சிவராசன் என்பவருக்கு இந்திய அதிகாரவர்க்கத்துடன் தொடர்பு கண்டிப்பாக இருந்திருக்கும் என்றும் பொய்புரட்டுகளைப் பரப்புரை செய்வதன் மூலம் மொத்தத்தில் ராஜீவ்கொலையில் விடுதலைப் புலிகள் ஒப்பந்தக் கொலையாளிகள் என்றவறான நச்சுக்கருத்தேற்றங்களைத் தமது கருத்தியல் அடியாட்கள் மூலம் இந்திய உளவுத்துறை தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. இப்படியான கருத்தேற்றங்களின் போது தமிழர்கள் எதிர்வினையாற்றும் முன்பே தமிழர்கள் இந்தியாவை நக்கிப்பிழைத்து இந்தியா ஆடும் தமிழரின் மீதான அத்தனை கொலைவெறியாட்டங்களையும் கைகூப்பி ஏற்கவேண்டுமே தவிர எதிர்த்துப் போராடக்கூடாது என்ற வகையிலான கூட்டுளவியலை தமிழரிடத்தில் ஏற்படுத்தும் பொறுக்கித்தனமான சிந்தனையுருவாக்கமானது தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டது. எனவே இது குறித்து தகுந்த எதிர்வினையாற்றி இந்தியத்தின் நச்சுக் கருத்தேற்றத்தை முறியடிப்புச் செய்ய வேண்டிய காலக் கடமையை உணர்ந்து இப்பத்தி சில வலியுறுத்தப்பட வேண்டிய மிள்நினைவூட்டல்களை செய்யும் நோக்குடனும் பொறுக்கிக் கருத்தாடல்களைத் தகர்த்தெறியும் நோக்குடனும் இப்பத்தி எழுதப்படுகின்றது.

மாந்தகுல எதிரி ராஜீவ்காந்தி

காலனியர்களின் நம்பிக்கைக்குரிய முகவரான நேருவின் பேரன் ராஜீவ்காந்தி என்பவர் செல்வக்கொழிப்பின் ஊதாரி வாழ்வில் உலகம் சுற்றி ஒய்யாரமாக வாழ்ந்துகொண்டிருந்த போது அவரது தாயார் இந்திராவின் மறைவைத் தொடர்ந்து தமது குடும்ப ஆட்சியைக் காப்பாற்ற ஓடி வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நாள் முதல் இந்திய வன்கவர்விற்குள் ஒடுக்குண்டு கிடக்கும் தனித்த தேசிய இனங்களைச் சீண்டுவதும் ஒடுக்குவதுமாக நடந்த பன்னாட்டு வணிகத்திற்காக இயலுமானவரை ஊழல்கள் செய்தும் கூட்டிக் கொடுத்துத் தரகு பெற்றும் இழிநிலை ஆட்சிக்கு அடித்தளமிட்டார். இந்தப் பன்னாட்டு வணிகத்தின் ஊழல் மற்றும் தரகு வலையமைப்பில் இருக்கும் அமெரிக்க உளவு அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சவுதி நாட்டைச் சேர்ந்த பெரு வணிகனும் போர்க்கருவிகளை விற்றல் அடங்கலான மிகப்பெரும் கருப்புச் சந்தை வணிகப்புள்ளியான அட்னன் கசோக்கி மற்றும் பணப் பரிமாற்றங்களை சிக்குப்படாமல் அறக்கட்டளைகள் மூலம் பன்னாட்டுத் திருட்டு வணிகருக்கு மாற்றுவதுடன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வெள்ளையாக மாற்றி வெளிநாடுகளில் முதலிட்டுக் கொடுப்பவருமான சந்திரசாமி என்ற அரசியல் தரகர் போன்றவர்களுடன் ராஜீவ்காந்திக்கு ஒட்டான உறவுகள் இருந்தன‌.

பதவிக்கு வந்த மறுநாளிலிருந்து தனது தாயைப் ப‌ழிதீர்த்தவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள் தம்மைத் தனித்த தேசிய இனமாக வளர்த்து வருவதோடு தமக்கான தனித்த தேசஅரசு அமைக்கும் வாஞ்சையுடன் இருப்பதாலும் வட இந்திய நகரங்களில் சீக்கியர் மீது கொலைவெறியாட்டமானது ராஜீவ்காந்தியால் கட்டவிழ்த்து விடப்பட்டது. அத்துடன் வட கிழக்கிலுள்ள தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மீது என்றுமில்லாதவாறு ஒடுக்குமுறையை ராஜீவ்காந்தி பதவிக்கு வந்து மிகச் சில மாதங்களிலே ஏவினார். உளவுத்துறை மூலம் காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காலித்தானில் பல சூழ்ச்சிகளைச் செய்து அந்த இடங்களில் குருதியாறு ஓடச் செய்து அந்த மக்களின் மனதில் அழித்தொழிக்கப்பட வேண்டியவனாக ராஜீவ்காந்தி இடம் பிடித்தார். இதனால் ராஜீவை அழித்தொழிக்கும் எண்ணத்தில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சீக்கியரின் காலித்தான் விடுதலை இயக்கங்கள் என்பனவும் இருந்தன.

ராஜீவ்காந்தி ஊழல் செய்வதற்காக வாங்கிய விண்ணூர்தியிற் பயணித்தவர்கள் அனைவரும் இறந்தமை, ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விசவாயு விபத்துக்கு காரணமான யூனியன் நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்யப் பணம் பெற்றமை, 155mm Artillery எறிகணை செலுத்திகள் 410 இனை சுவீடனிடமிருந்து தனது இத்தாலிய மனைவி சோனியாவின் இத்தாலிய உறவினர்களுடன் சேர்ந்து கொள்வனவு செய்ததில் கோடி கோடியாக ஊழல் செய்தமை என ராஜீவின் ஊழல்களைப் பட்டியற்படுத்தினாலே விடயமறிந்தவர்களுக்குப் புரியும் இப்படியொரு ஆட்சியாளரைத் தான் பன்னாட்டு வணிகக் கும்பல்களிற்குப் பிடிக்கும் என்பது.

ராசீவ்காந்தி என்ற கொடுங்கோலன் காலத்தில் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட நரபலிவெறியாட்டங்கள்

ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்படாமல் இந்திய மேலாதிக்கக் கனவுடன் ராஜீவ்காந்தியும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் மேற்கொண்ட இலங்கை– இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்குச் சில நாட்கள் முன்னரே தலைவர் பிரபாகரனை டெல்கிக்கு அழைத்து அசோகா விடுதியில் தங்க வைத்துக் கேவலப்படுத்தும் வகையில் சில்லறைத்தனமாக நடந்துகொண்ட பின்பு ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு ஒரு நாள் முன்பே ராஜீவ்காந்தி தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் மறுத்தாலும் ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என மெத்தனமாகவும் தமிழர் மீது ஏளனமாகவும்  நடந்துகொண்டமையுடன் தனது இழிசெயலைத் தொடங்கிய இந்தியக் கொடுங்கோலர்கள் இறுதி நேரத்தில் தேர்தல் நடக்கும் வரை விடுதலைப் புலிகள் தலைமையில் இடைக்கால நிருவாகத்திற்குப் பல நெருக்குதல்களின் பின்னர் உடன்பட்ட பின்பும் அப்பட்டமாக ஏமாற்றியவாறே விடுதலைப் புலிகளிடம் போர்க் கருவிகளைக் களைந்து ENTLF என்ற தன்னால் உருவாக்கப்பட்ட நரபலிக் கூலிப்படையிடம் கொடுத்துப் புலிகளை அழிக்க முனைந்தமை, சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படும் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான அத்தனை அரசியல்கைதிகளும் விடுவிக்கப்படுவர் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெருமளவிலான அரசியல் கைதிகள் மீது பாராமுகமாகவும் தமிழர்களின் நிலங்களில் குறிப்பாக தென்தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்களைக் கண்டும் காணாததுமாக பாராமுகமாக இருந்தமை மூலம் இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணம் வட–கிழக்காக இணைவது தொடர்பாக ஒப்பந்ததில் குறிப்பிட்டவாறு கிழக்கில் தேர்தல் நடக்க நேர்கையில் வடக்கு–கிழக்கை நிரந்தரமாகத் துண்டாடும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைய வழிசெய்யுமாறு சூழ்ச்சி செய்தமை, ஈகி லெப்.கேணல் திலீபனை அணுவணுவாகச் சாகவிட்டு வேடிக்கை பார்த்தமை, முதன்மையான தளபதிகள் அடங்கலான 12 போராளிகளை ஒப்பந்தத்தின் படி பொறுப்பேற்காமல் சிறிலங்கா இராணுவத்தின் கொழும்புச் சித்திரவதைக் கூடங்களிற்குக் கூட்டிச் செல்ல இடமளித்தமையால் அவர்கள் தாம் வரித்த உயர்ந்த இலட்சியத்தின் படி நஞ்சுக் குப்பி கடித்து வீரச்சாவடையக் காரணமாகியமை, மக்கள் போராட்டத்தின் உயரிய போராட்ட வடிவமான‌ தமிழீழ மக்களின் கரந்துறைப் போர்முறைக்கு (Guerrilla Warfare) ஈடுகொடுக்க வக்கற்ற நரபலி இந்திய வன்வளைப்புப் படைகள் கண்மூடித்தனமாக மக்கள் மீது எறிகணைகளை வீசி 29 மாதங்களில் 15,000 வரையான மக்களைக் கொன்று குவித்தும் 30,000 வரையான மக்களைக் காயத்திற்குள்ளாக்கியும் 3000 இற்கும் அதிகமான மக்களை உறுப்புகள் இழந்தவர்களாக்கியும் 2000 இற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரையான தமிழ்ப் பெண்களை வன்புணர்விற்குட்படுத்தியும் உலகின் மாந்த குல நாகரிகத்தின் ஏடறிந்த வரலாறுகளில் என்றும் இடம்பிடிக்காதளவில் இந்திய வன்வளைப்புப் படைகள் தமிழர்கள் மீது நரபலி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்தமை என எண்ணிலடங்காத சேட்டைகளைச் செய்த தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் நரபலியாட்டத்தின் மீதான தமிழர்களின் அறச்சீற்றமே ராசீவ்காந்தி என்ற கீழினப் பாசிச வெறியன் மீது பாய்ந்த புலிகளின் தற்கொடைத் தாக்குதல் என்பதை உலகிலுள்ள மனச்சான்றுள்ள மக்கள் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.

இந்திய நரபலியாட்டம் தமிழீழத்தில் அரங்கேற்றிய வெறியாட்டத்தை மிகவும் நேர்த்தியாக விடுதலைப் புலிகள் ஆவணப்படுத்திச் “சாத்தானின் படை – The Satanic Force” என்ற நூலாக்கி இருந்தார்கள். இந்த நூலானது ராஜீவ் அழித்தொழிக்கப்பட்ட பின்பு இந்திய உளவுத்துறையால் கைப்பற்றப்பட்டுத் தடை செய்யப்பட்ட நூலாகியது. அந்த நூலைப் படிப்பவர்களுக்கு ராஜீவ் மீதான அழித்தொழிப்பு என்பது எவ்வளவு தெளிவுடனும் மேலிட்ட அறச்சீற்றத்துடனும் மிகுந்த அரசியல் தெளிவுடனும் நிகழ்த்தப்பட்டது என்பது எளிதில் புரியும். இந்த அழித்தொழிப்புக் குறித்து விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான கிட்டுவிடம் கருத்துக் கேட்ட போது “நாங்கள் செய்யவில்லை. முடிந்தால் யார் செய்தார்கள் என இந்தியா கண்டுபிடிக்கட்டும்” என்று புலிகளின் புலனாய்வினர் செய்யும் இரகசிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் நேர்த்தியும் திறமும் குறித்த பெரு நம்பிக்கையில் ஏவல் நாயான இந்தியா மீது ஏளனமாகப் பதிலுறுத்தினார். அந்த வகையில் ராஜீவ்காந்தி என்ற ஒருவனைப் பழிதீர்த்து விட்டால் விடுதலை கிடைத்துவிடுமென்பதற்காக இந்த அழித்தொழிப்பு நடத்தப்படவில்லை. மாறாக, “தமிழர்களை அழிக்க நினைப்பவர்கள் எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் அழிக்கப்படுவர்” என்ற செய்தியைச் சொல்வதுடன் இந்தியப் பகைவன் மீதும் ஆட்சிக் கட்டிலில் இருந்து மிரட்டும் கொடுங்கோலர்கள் மீதும் அதுகாலவரையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிழலுருவை அகற்றுமுகமாகவும் ராஜீவ் மீதான துணிகரத் தாக்குதல் அமைந்தது. உண்மையில் இந்தியாவில் ஒடுக்குண்டிருக்கும் அத்தனை தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களிற்கும் ஒரு நம்பிக்கைப் பேரொளியைப் பாய்ச்சுவதற்கும் தமிழக மக்களிற்கு ஒரு வீரப்பேருணர்வு ஏற்படுவதற்கும் வழிகோலியிருக்க வேண்டிய “ராஜீவ் காந்தி அழித்தொழிப்பு” என்ற அரசியல் நிகழ்வைத் தமிழரின் அறச்சீற்றமாக நாம் உரிமையேற்காததை வேண்டுமென்றால் தவறென்று கூறலாம்.

அரசியல் தரகு மாமாக்களான சந்திரசாமி மற்றும் பன்னாட்டு கருப்பு வணிகத் தாதாவான அட்னன் கசோக்கி போன்றோருக்கு ராஜீவின் இழப்பு இழப்பாக இருக்கலாம். உண்மையில் ராஜீவின் அழித்தொழிப்பைத் திரிபுபடுத்தும் நயவஞ்சக நோக்கிலேயே யெயின் கமிசன் அமைக்கப்பட்டது. சீக்கிய விடுதலைப் போராட்டங்களுக்குள் ஊடுருவி அவற்றை அழிக்கவெனப் போராளி வேடத்தில் இந்தியாவால் இறக்கிவிடப்பட்டு இந்தியாவின் Z+ பாதுகாப்பில் இருந்த மெகன்ட் தாசு சிங் என்ற கயவனை வைத்து அதில் அசாமின் ULFA, காலித்தான் விடுதலை இயக்கம், காசுமீரிய விடுதலை இயக்கம் போன்ற பல விடுதலை இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் ஒரு கதையைப் புனைந்துரைத்து இது ஒரு பன்னாட்டுச் சூழ்ச்சியெனக் காட்டி விடுதலைப் புலிகளை ஒரு தரகுக்கொலையாளிகளாகக் காட்ட முனைந்த இந்தியாவின் குரல்வளையைக் கடித்துத் துப்பி அதன் போலிப் பரப்புரைகளைத் கிழித்துத் தொங்கவிடுவதே அந்த மறவர்களின் ஈகத்திற்கு நாம் செய்யும் குறைந்தளவிலான நன்றிக்கடனாகும். எனவே, ராஜீவின் கொலை தமிழர்களின் அறச்சீற்றத்தின் வெளிப்பாடு. அதில் நேரடியாகப் பங்கெடுத்தோர்கள் தாயக மண்ணிற்காக ஆகுதியாகிவிட்டார்கள். அந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை நெறிப்படுத்திய சிவராசனுக்கு அறிந்தவர், தெரிந்தவர் அல்லது அவரின் ஊர்க்காரர் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக தமிழ்நாட்டில் தங்கியிருந்தோர் என்பதற்காகக் கைதுசெய்யப்பட்டு வெறியாட்டத்துடன் நடத்திய உசாவல்களின் பின்பு அறத்திற்கு முரணாக இந்திய ஆதிக்கச் சட்டங்களின் படி குற்றவாளியாக்கப்பட்டனர். ராஜீவ்காந்திக்கு சாவொறுப்பு வழங்கப்பட்ட வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட தமிழர்களின் விடுதலைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் கிளர்ந்தெழுவார்கள் என்பதை அறிந்த இந்தியா இதை ஒப்பந்தக்கொலையாகவும் பன்னாட்டுச் சூழ்ச்சியாகவும் திரிபுசெய்வதைத் தமிழர்கள் பல்லைக்கடித்துச் சகிப்பார்கள் எனக் கணித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. ராஜீவின் அழித்தொழிப்பென்பது தமிழர்களின் அறச்சீற்றமே. ஆனால் அதை நேரடியாக‌ நிகழ்த்திய புலி மறவர்கள் ஆகுதியாகி விட்டார்கள். அவர்களை உயிருடன் கைதுசெய்ய வக்கற்ற, கையாலாகாத இந்திய அரசானது தனது கையாலாகாத்தனத்தை மறைக்க நேரடித் தொடர்புகள் குறிப்பிடக் கூடிய அளவிற்கு இல்லாத தமிழர்களின் (முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபட் பயஸ், ஜெயக்குமார்) தலையில் ராஜீவ் கொலை வழக்கினை இட்டுக்கட்டித் தமிழர்கள் மீது வஞ்சம் தீர்த்துக்கொண்டது. இதை ஒப்பந்தக்கொலை என இந்திய உளவு அமைப்பின் தேவைக்கேற்ப நிறுவுவது என்பது இவ்வழக்கில் சிறைப்பட்டிருப்பவர்களின் விடுதலைக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்ற புரிதல் கூட இல்லாமல் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான சரியான கருத்துகளைப் பதிவுசெய்யாமல் தமிழர் தரப்புத் தவறிழைத்து விட்டது.

இவ்வளவிற்குப் பிறகும் தமிழினத்தின் முதன்மை எதிரி இந்தியாவே என்ற புரிதல் ஈழத்தமிழர்களிடம் ஏற்படவில்லையென்றால் நாம் வரலாற்றையா நொந்துகொள்வது? இல்லையே! வரலாறானது திரும்பத் திரும்ப இந்தியாவின் தமிழினப் பகைமையை மீள நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றதே! 32 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டு விடுதலையானபின்பும் சிறப்புமுகாம் எனும் சித்திரவதை முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் அவர்களை உயிருடன் அவரின் தாயிடம் சேர்ப்பிப்பதில்லை என்பதில் கங்கணங்கட்டிச் செயற்பட்டமையானது இந்தியாவின் சூழ்ச்சி வெளிப்பட்டு நிற்கும் இன்னுமொரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகின்றது. எனவே, சாந்தன் அவர்களின் மறைவையொட்டி இந்தியச் சூழ்ச்சிக்கு எதிராகத் தமிழீழ இளையோர்கள் கொதித்தெழும் இந்த வேளையில்செய்யாத குற்றத்திற்காகபோன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி ராஜீவ் என்ற கயவனின் மீதான தமிழர்களின் அறச்சீற்றத்திற்குக் குற்றம் போல தோற்றம் கொடுக்கும் தவறுகளை இரங்கல் அறிக்கைகளின் பேரிலோ அல்லது துண்டறிக்கைகளின் பேரிலோ எந்தவொரு அமைப்பும் செய்யக் கூடாது என்று வலியுறுத்துவதோடு அப்படி வெளியிடப்பட்ட அறிக்கைகளிலோ அல்லது செய்தியிடல்களிலோ அவ்வாறான தோற்றமளிக்கும் சொற்றொடர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். தமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது என்பதில் உறுதிகொள்ளுமாறும் இப்பத்தி வாயிலாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்மொழி வரலாறு நிலைத்திருக்கும் வரையில் சமஸ்கிருதத்தைக் கலக்கச் செய்தோ அல்லது திணித்தோ இந்தியாவினால் சமஸ்கிருத மேலாதிக்க வரலாற்றை எழுத முடியாது. தமிழர்களின் தொல்லியல் வரலாறு வெளிப்பட்டால் இந்திய வரலாற்றுப் போலியானது எள்ளலுக்குரியதாகிவிடும். இவ்வாறாக தமிழரின் இருப்பானது ஆரிய இந்திய மேலாதிக்கத்தை வரலாற்றுவழி அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். எனவே தான், தமிழர்களின் மெய்யியல் வரலாறுகளைத் திரிபிற்குட்படுத்தி அவற்றை வைதீகப்படுத்தி (ஆரிய இனமேலாதிக்கத்தைப் பூசி) தமிழர்களைப் பண்பாட்டு அடிப்படையில் தன்னிலை மறக்கச் செய்வதனூடாக‌ ஆரிய மேலாதிக்கத்திற்கு இசைந்து பழக்கப்பட்டவர்களாக மாற்றுவதன் மூலம் மாந்தகுலத்தின் நாகரீக வரலாற்றிற்குப் பெரும் பங்களித்த தமிழர்களை இனவழிப்புச் செய்ய காலங்காலமாக முனைந்து வரும் இந்தியா என்ற வல்லூறானது தற்போது தனது இழிசெயற்பாடுகளை இந்துத்துவம் என்ற இழிவான சூழ்ச்சி மூலம் இன்னும் தீவிரப்படுத்தி இருக்கின்றது. எனவே, இந்துத்துவம் என்பது ஒரு மதக் கருத்தியல் அல்ல, மாறாக அது அகண்ட பாரதம் அமைக்கும் ஆரிய இனவாதத்தின் அரசியல் கருத்தியல் என்ற புரிதல் ஈழத்தமிழர்களிற்கு ஏற்பட்டேயாக வேண்டும்.

அத்துடன் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒருபோதும் தெற்காசியாவில் எந்தவொரு தேசிய இனவிடுதலைப் போராட்டத்தையும் அழிப்பதற்குப் பின்நிற்காது என்பதுடன், இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது துண்டு துண்டாய் உடையும் போது இந்தியாவால் ஒடுக்குண்டு இருக்கும் தேசிய இனங்கள் தேச அரசுகள் அமைக்கும் என்பதுடன் எந்தப் பேயரசுகளின் தயவிலும் தங்கியிராமல் தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழர்களின் இரு தேசங்கள் விடுதலை பெற விரைந்தியங்குவதொன்றே தமிழரிற்கு எஞ்சியிருக்கும் ஒரே வழியென்பதை இக்கணம் திடமாய் மனங்கொள்ள வேண்டும்.

தியாகதீபம் திலீபன் அவர்களின் ஒப்பிடற்கரிய ஈகமானது காந்தியம் என்ற போலி முகத்திரையைக் கிழித்து இந்திய மாயையில் மூழ்கிக் கிடந்த தமிழர்கட்கு இந்தியாவின் உண்மையான முகத்தைக் காட்டி இந்திய நரபலி வன்கவர்வாளர்கட்கு எதிராகத் தமிழர்களைப் போர்க்கோலம் கொள்ளச் செய்தது போலவே சாந்தன் அவர்களின் மறைவும் இந்தியாவிற்கு இன்னொரு வரலாற்றுச் செய்தியைச் சொல்கின்றது. “இந்தியாவே! காசியானந்தன், சச்சிதானந்தன், கம்பவாரிதி மற்றும் கல்வியாளர்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் கலவியாளர்கள் என எத்தனை காவி நாய்களை வைத்துக் குரைத்தாலும், எத்தனை இழி சூழ்ச்சிகளைச் செய்தாலும், ஈழமண்ணைக் காவியாக்கும் உனது கனவு நனவாக‌ வரலாற்றில் நிகழ்ந்தேறும் நிகழ்வுகள் இடமளிக்காது. சாந்தன் அவர்களை உயிருடன் விடுவதில்லை என்ற உனது வன்மமானது இந்தியக் கொட்டங்களிற்கு உலைக்களமாகி விட்டதைத் தமிழிளையோர் தமது பேரெழுச்சியால் உனக்கு உணர்த்துவர்” இதுவே, சாந்தன் அவர்களின் மறைந்த உடலின் மீது உறுதியேற்று ஈழத்திலிருந்து இந்தியாவுக்குச் சொல்லப்படும் வரலாற்றுச் செய்தி. 

-முத்துச்செழியன்-

2024.03.02

Loading

(Visited 98 times, 1 visits today)