விதைப்பது முட்டாள்த்தனம்; அறுப்பது அகண்ட‌ பாரதம்; கொண்டாடுவது இந்திய வல்லூறு; திண்டாடுவது தமிழர்தேசம் – முத்துச்செழியன் –

பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்பிடித்து இந்தியா என்ற சந்தையை காலனிக் கொள்ளையர்கள் உருவாக்கிவிட்டுத் தமக்குவப்பான முகவர்களிடம் கையளித்துச் சென்ற பின்பும் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது சோவியத் சிதறியது போல இன்னமும் சிதறாமலிருப்பதற்கான காரணங்கள் பல. தேசமாக வளர்ந்த தேசிய இனங்கள் தேச அரசமைக்கும் (Nation state) வரலாற்று ஓட்டத்தில் இந்தியச் சிறைக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் தேசங்களின் நிலை குறித்து நமது பார்வைகளை நாம் படரவிட வேண்டும். இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில் உள்ள தேசங்களின் அறிவுமரபைச் சிதைத்து அவர்களை சிந்தையில் குறுகியோராகவும் முட்டாள்களாகவும் வைத்திருக்கும் வகையிலேயே இந்திய வல்லாதிக்கமானது கல்வித்திட்டங்களை வகுத்து வைத்திருக்கின்றது. புள்ளிவிபரங்களில் பொய் புளுகு புனையும் இந்தியாவில் மிகப் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். மக்கள் தம்மைச் சூழநிகழ்வ‌னவற்றைக் குறித்து அறிந்துணரும் ஆற்றலைப் பெற்றுவிட்டால் இந்தியா என்ற சந்தையின் நிலவுகையானது கேள்விக்குள்ளாகிவிடும் என்று நன்கறிந்த ஆரிய பிராமணியச் சூழ்ச்சியாளர்கள் முட்டாள்த்தனத்தை விதைத்தே தமது அகண்ட‌ பாரதக் கனவை அறுவடை செய்யலாம் என்று நம்புகிறார்கள்.

தீவிர இந்துத்துவ வாக்கு வங்கியாகவுள்ள இடங்களானவை கல்வியறிவிலும் பண்பாட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளன என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்துத்துவம் (Hindutuva) என்பதைத் தமது கருத்தியலாகக் கொண்டுள்ளவர்களில் பலர் முழுமுட்டாள்களாகவும் சிலர் மக்களை முட்டாள்களாக்குவதில் வல்லவர்களாகவும் இருக்கின்றனர். விநாயகரின் தலையானது ஆனைத் தலையாக இருப்பதென்பது, உலகிலேயே முதன் முதலில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையை (Plastic Surgery) மேற்கொண்டது இந்தியாவே என்பதற்கான ஆணித்தரமான சான்று என இந்தியாவின் தலைமை அமைச்சரான மோடி உரையாற்றியிருக்கின்றார். மோடி போன்ற ஆர்.எஸ்.எஸ் என்ற ஆரிய இனவாதக் கும்பலால் வளர்க்கப்பட்ட இந்துத்துவ அரசியல்வாதிகள் தாம் ஆளுகின்ற காலத்தில் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுகின்ற தகவல்களை நாம் எண்ணிப் பார்த்தால் முட்டாள்த்தனமானது இந்துத்துவ உருவாக்கத்தில் கொண்டுள்ள பங்கினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இராமாயணத்தின் தொடக்கம் முதலே இழிவான ஆரிய பிராமணியப் பண்பாடானது வெளிப்படுகிறது. ஆயிரம் பெண்களுடன் உறவுகொண்டும் மக்கட்பேறின்றிய தசரதனின் மனைவியான கோசலை “புத்ரகாம இஷ்டி” இன் பொருட்டு “அஸ்வமேத யாகம்” மூலம் புரவியுடன் புணர்ந்து பெற்றவனே இராமன் என்று ஓரறிவு உயிரினங்களே நாணும் அளவிற்குக் கதை புனையும் இராமாயணத்தில் இராமர் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமாகவும் சக்ராயுதம் பரதனாகவும், ஆதிகேசன் இலக்குவணனாகவும், சங்கு சத்துருக்கனாகவும் பிறந்ததாகக் கதை நகர்கிறது. மோடி போன்ற ஆர்.எஸ்.எஸ் அடிப்பொடிகள் இவ்வாறான கதைகளை நம்புமளவிற்கு அறிவில் இழிந்தோராக இருக்கலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலுள்ள ஆரிய பிராமணிய அரம்பர்கள் இந்த இராமாயணம் போன்ற நகைக்கத்தக்க புராணங்களை நம்பவில்லை; மாறாக இந்த முட்டாள்த்தனத்தை மக்களிடம் விதைத்து, “இராமஜென்ம் பூமி” என்ற மூலக் கதைக்குக் கிளைக் கதைகள் அமைத்து அகண்ட‌ பாரதம் அமைக்கும் தமது ஆரியக் கனவை நிறைவேற்றிடத் துடிக்கின்றார்கள்.

இந்தியாவின் வெளியுறவுத்துறையில் நாற்பது ஆண்டுகள் பட்டறிவுகொண்டவரும் இந்தியாவின் தற்போதைய வெளி அலுவல்கள் அமைச்சராகவும் உள்ள ஜெய்சங்கர் எழுதிய “Why Bharat Matters” என்ற நூலின் மூலம் மோடி இராமனாகவும் ஜெய் சங்கர் அனுமானாகவும் இந்துத்துவப் பதர்களின் மனங்களில் நிலைகொள்ளலாம். ஆனால், அண்மையில் எழுதப்பட்ட இந்நூலின் மூலம் இராமாயணப் புனைவின் பண்பாட்டுத் தளத்தின் மீதான வன்கவர்வானது தமது அகண்ட‌ பாரதக் கனவிற்கு எத்துணை உடந்தையாக இருக்கும் என்பதில் ஜெய்சங்கர் கொண்டுள்ள காட்டுத்தனமான நம்பிக்கையே வெளிப்படுகிறது. அயோத்தியில் அரைகுறையாகக் கட்டப்பட்ட இராமர் கோவில் திறப்புக் குறித்து இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்கள் கூவிய கூவானது அதன் பின்னாளுள்ள சந்தை நலன்களை வெளிச்சம் போட்டுக்காட்டவும் தவறவில்லை.  சீதையின் பிறப்பிடம் இன்றைய நேபாலில் இருக்கிறதென்று பெருமைபடக் கூறுவதன் மூலம் நேபாளத்தின் இந்தியாவுக்கான தூதுவரான முனைவர் சங்கர் சர்மா என்ற பொருளியல் நிபுணர் இந்தியாவின் சந்தை விரிவாக்கத்திற்கான தனது ஒத்தோடித்தனமான இசைவை இராமர் கோவில் திறப்பை ஒட்டிய நிகழ்வின் போது வெளிப்படுத்தினார். இராமர் கோவில் திறப்பு நிகழ்வுக்காக பண்பாட்டு ஆற்றுகைக் குழுவினர் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டமை, தாய்லாந்திலிருந்து மண்ணும் தண்ணீரும் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டமை என அனைத்தும் இந்தியாவின் சந்தை விரிவாக்க நலனின் நீட்சியே. இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஆணையராகவிருக்கும் மிலிந்த மொறகொட இதனிலும் ஒரு படிமேற்சென்று சீதாஎலிய போன்ற 50 இற்கும் மேற்பட்ட இராமயணத் தளங்கள் இலங்கைத்தீவில் இருப்பதாகவும் “குருதியானது நீரிலும் அடர்த்தியானது” என்றும் கூறி அயோத்தியில் சிங்களத்திற்குக் குருதியுறவு வேண்டி நிற்கிறார்.

அத்துடன் நிறுத்தினாரில்லையே இந்த மிலிந்த மொறகொட! இலங்கைத்தீவானது பொருளியற் சிக்கலில் சிக்குண்டு திணறுகையில் உடன் வந்து 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவியைச் செய்த இந்தியாவானது தமக்குக் குருதியுறவு என்று கூறி ஜெய் சங்கருடன் சேர்ந்து சிங்கத்திற்குப் பிறந்ததாகச் சொல்லிக்கொண்டவர்களின் வழித்தோன்றலான மிலிந்த மொறகொட வானரமாகியிருக்கிறார். இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவின் அடுத்த கட்டமானது இணைப்புகள் தொடர்பானதாகவே மலரப்போவதாக அண்மையில் “வியன்” தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். கடலுக்கடியால் மின்கம்பி வடத்தின் மூலம் இலங்கைத்தீவுக்கான மின்சார வழங்கலை அதானி குழுமம் நிறைவேற்ற அணியமாகிவிட்டமை இந்தியாவுக்கும் இலங்கைக்குமான மின்னிணைப்பாகவும்,  இந்தியாவின் அலைபேசி எண்கள் வாயிலாக நேரடியாக இலங்கையில் தம் நுகர்வுகளுக்கான பணப்பரிமாற்றத்தை UPI பணப்பரிமாற்ற முறையில் செய்யலாம் என்பது அண்மையில் நடைமுறைக்கு வந்தமையும் மிகவிரைவில் இலங்கையின் சில முதன்மையான துறைகளில் இந்திய நாணயமானது புழக்கத்திற்கு வரவிருப்பதும் நிதியிணைப்பாகவும், இந்தியாவின் IIT போன்ற மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் கண்டியில் இவ்வாண்டிற்குள் நிறுவப்பட இருப்பதானது கல்வியிணைப்பாகவும், இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எரிபொருள் வழங்கற் குழாய்களை இணைக்கும் திட்டமானது அடுத்த ஆண்டுகளில் தொடங்கப்பட இருப்பதானது எரிபொருளிணைப்பாகவும், தலைமன்னாரையும் இராமேசுவரத்தையும் பாலத்தால் இணைத்து ஒரே நிலத்தொடர்ச்சியாக்கும் வேலைகளுக்கான செயலாக்க ஆய்வு முற்றுப்பெற்று வேலைகள் மிக விரைவில் தொடங்கப்பட இருப்பதானது நில இணைப்பாகவும் இனிவருங்காலம் இணைப்புகளாக இருக்கப்போகின்றதென்பதை தனது வாயினால் ஒப்புக்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க, இனி இந்தியச் சந்தையில் இணைக்கிற நிலையில் இலங்கை இருக்கிறதென்பதைத் தமது உடல்மொழியால் உலகிற்குக் காட்டிய நேர்காணலாகவே அந்த நேர்காணல் அமைந்தது. மிலிந்த மொறகொடவோ இவ்விடயத்தில் நுனிக்கொம்பில் ஏறிய வானரமாக நிற்பதால் அடிக்கொம்பைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். மேற்குலகின் அடிவருடி என நெடுநாளாய் அறியப்பட்ட மிலிந்த மொறகொட என்ற அரசியல் வணிகனோ உலக வங்கியினதும் பன்னாட்டு நிதி அமைப்புகளினதும் அறிக்கைகளைப் படித்தொழுகுவதை நிறுத்திவிட்டு இராமாயணத்தையே பற்றிக்கொண்டு திரியும் முழுநேர வானரமாக மாறிவிட்டமையை அவரின் அண்மைய நேர்காணல்கள் ஐயந்திரிபற வெளிப்படுத்துகின்றன. மிலிந்த மொறகொட என்ற வானரத்துடன் ஒட்டான உறவில் இருக்கும் ஜெய்சங்கர் என்ற அனுமனோ தான் செல்லுமிடங்களிலெல்லாம் இலங்கைக்குச் சுற்றுலா செல்லுமாறு பரப்புரை செய்து இலங்கைக்கான இந்தியாவின் சுற்றுலா முகவராகச் செயலாற்றுகிறார்.

இவ்வாறாக இராமாயணத்தை வைத்து இந்திய பிராமணியக் குப்பைகள் குவிக்கும் குப்பைமேடானது உயர தமிழர்தேசத்தின் அறிவுமரபென்னும் கோபுரமானது தாழ்கிறதா என்று அச்சங்கொள்ளும் அளவிற்கு இராமாயணத்தின் அடியொற்றி அரங்கேறும் அரசியல் அடாவடித்தனங்களை அறிந்துகொள்ளும் ஆற்றலற்றவர்களாக ஈழத்தின் கல்வியாளர்களும், அறிந்தும் செயலாற்றலற்றவர்களாக தமிழ்நாட்டின் சிந்தனைக் குழாங்களும் இருக்கின்றனர். புராண மயக்கத்தில் நின்று பட்டிமண்டபம் நடத்தி இராவணனை ஏற்றி இராமனைத் தூற்றுவதுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்பவர்களால் இராமாயணம் முன்னெடுக்கும் ஆரிய பிராமணிய அரசியலை வெற்றிகொண்டிட இயலாது என்பதைத் தெளிவுறப் புரிந்துகொள்வதோடு, இதன் பின்னாலுள்ள இந்தியச் சந்தையின் விரிவாக்கமாக அமையும் அகண்ட‌ பாரத முனைப்புப் பற்றிய தெளிவான புரிதல் இன்றைய உடனடித் தேவையாக உள்ளது. இந்தியச் சிறைக்குள் ஒடுக்குண்டு கிடக்கும் தேசங்களானவை தேச அரசுகளை நிறுவி இந்தியச் சந்தைக்கு முழுக்குப்போடும் முனைப்பை முன்கொண்டு செல்வதே இராமாயணத்தை அடியொற்றி நடக்கும் இடும்பை தரும் இழிவான இந்திய அரசியலை எதிர்கொள்ளும் ஒரேவழி என்ற புரிதலே தமிழ்நாடு தேசம் மற்றும் தமிழீழ தேசம் எனும் இரு தமிழர் தேசங்களினதும் பிராந்தியம் தழுவிய பார்வையாக இருக்க வேண்டும்.

இந்திய ஒன்றியத்தின் ஆட்சியதிகாரத்திலிருக்கும் ஆளுகின்ற பா.ஜ.க அரசாங்கத்தில் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் அறிவுக்கொவ்வாத கருத்துகளானவை, நாம் ஏலவே குறிப்பிட்டதைப் போல ஓரறிவு உயிரினங்களே நாணும்படியாக உள்ளன. இருந்தும், இப்படியான ஆட்சியாளர்களுடன் அண்ட முனையும் அல்லது அவர்களை ஏற்றிப்போற்றும் மெத்தப் படித்ததாகப் பாசாங்கு செய்யும் ஈழத்துக் கல்வியாளர்களின் மூளை பேதலித்துவிட்டதா என உரிய முறையில் உறுதிசெய்ய வேண்டும். இந்துத்துவத்தின் சிந்தனை ஊறிப்போனால் படித்தும் பயனில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் இந்தியாவின் பல்கலைக்கழகங்களிலும், கல்விசார் ஏனைய நிறுவனங்களினதும் செயற்பாடுகளில் தெரியவருகின்றது. அவற்றைப் பட்டியலிடுவதன் மூலம் முட்டாள்த்தனத்தை விதைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியத்தின் முனைப்பிற்கு இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களும் அங்குள்ள கல்வியாளர்களும் உடந்தைகளாக இருக்கின்றன, இருக்கின்றனர் எனத் தெளிந்துகொள்ளலாம்.

Rashtriya Kamdhenu Aayog என்ற இந்துத்துவ அமைப்பானது மரபு மாட்டு அறிவியல் (Indigenous Cow Science) எனும் பாடத்திட்டத்தை உருவாக்கி அதையடியாகக் கொண்டு இந்தியாவிலுள்ள 900 பல்கலைக்கழகங்களில் பரப்புரை நோக்கிலான‌ தேர்வினை நடத்துவதற்கு முனைந்த போது, அதற்கு இந்தியாவின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) பின்னின்று ஒத்துழைப்பு வழங்கியது. அந்தப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தை நோக்கினால் மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டுச் சாணத்தின் பின்னாலுள்ள இந்துத்துவ அரசியல் குறித்தே தெரிந்துகொள்ள முடியும். மாட்டுச் சாணமானது அணு நிலையங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கிறது; மாட்டுப் பாலில் தங்கம் உள்ளது; பசு மாட்டைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் போன்ற நகைப்பிற்குரிய அறிவிலித்தனமான குறிப்புகளை உள்ளடக்கியதாகவே இந்தப் பாடத்திட்டம் அமைந்திருந்தது. குஜராத்திலுள்ள Junagadh Agricultural University எனும் வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழினுட்பப் பிரிவின் (Biotechnology) துறைத்தலைவரான முனைவர் கோலாக்கியா தலைமையில் 400 கிர் மாடுகளின் மூத்திரத்தை மாதிரியாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 1 லீட்டர் பாலில் 3 முதல் 10 மில்லிகிராம் அளவிலான தங்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையிட்டு ஒட்டுமொத்த அறிவுலகும் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது. இப்படியான தகவல்களை அடியொற்றியே இந்தப் பாடத்திட்டம் ஆக்கப்பட்டிருந்தது.

கல்விநிறுவனங்களே இப்படியான அறிவுக்கொவ்வாத கருத்துகளை வெளியிடும்போது கொண்டாட்ட மனநிலைக்குச் செல்லும் இந்துத்துவ அரம்பர்களோ ஒரு படிமேற்சென்று தமது முட்டாள்த்தனத்தை மக்களிடம் விதைப்பதில் வெட்கமின்றிச் செயற்படுகின்றனர். மேற்கு வங்காளத்தின் பா.ஜ.க தலைவரான திலிப் கோஸ் என்பவர் மாட்டுப்பாலில் மஞ்சள் நிறம் தென்படுவதே அதில் தங்கம் உள்ளடக்கமாக இருப்பதற்கான சான்று என்று மக்கள் முன் கூச்சமின்றி உரையாற்றியுள்ளார். காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் போல இந்தக் காவி அரம்பர்கள் அவர்கள் கழிப்பதும் மஞ்சளில் இருப்பதால் நாளை அளைந்து பார்த்துத் தங்கம் தேடினாலும் தேடுவார்கள் என்று அவர்களை இழிந்துரைக்கவே தோன்றுகின்றது. இந்த திலிப் கோஸ் என்ற அரம்பனே கொரோனாப் பெருந்தொற்றினை எதிர்த்துப் போராட வல்லது மாட்டு மூத்திரமே எனக் கருத்து வெளியிட்டவனாவான். இந்துத்துவத்தைத் தீவிரமாகப் பற்றிப்பிடிக்கும் பா.ஜ.கவின் செல்வாக்கு மிகுந்திருக்கும் மாநிலங்களில் மாட்டை வைத்துத் தமது அரசியலை முன்னெடுக்கும் சேட்டைகள் கூடுதலாகவே நடக்கின்றன.

13 அகவைக்குக் குறைந்த மாடுகளை எந்தத் தேவையின் பொருட்டும் கொல்லக் கூடாது என்று கருநாடக சட்ட அவை ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. பசு மாட்டையோ அல்லது காளையையோ எந்தத் தேவையின் பொருட்டும் கொல்பவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்படுமென லக்சதீபு விலங்குகள் பாதுகாப்பு விதிகள், 2021 என்ற சட்ட வரைபும் முன்மொழியப்பட்டுள்ளது. உலகின் உணவுத்தேவையைப் பெருமளவில் நிறைவு செய்யும் புலால் உணவான மாட்டை இறைச்சிக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நோக்கில் இறைச்சிக்காக மாட்டினைக் கொல்வதை வாழ்நாள் சிறைவழங்கும் அளவிற்குக் குற்றமாக்கும் நகைப்பிற்கிடமான நடைமுறையானது மதச்சார்பற்ற நாடு என்று தனது அரசியலமைப்பில் தன்னைத்தானே குறிப்பிட்டிருக்கும் இந்தியாவில் நிலவுகின்றது.

அரசிளங்குமாரனின் வாழ்வைக் காப்பாற்ற அனுமன் பெயர்த்தெடுத்துச் சென்ற சஞ்சீவி மலையைக் கண்டுபிடிப்பதற்காக உத்தரகாண்ட் மாநில அரசாங்கமானது 25 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கின்றது என்றால், இந்துத்துவ அரம்பர்களின் அறிவின் வரம்பு எத்தகையது என்பதையறிந்து அவர்கள் தமிழரின் அறிவு மரபிற்குத் தீட்டானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவ்விடத்தில் மீளநினைவூட்ட விரும்புகின்றோம்.

உலகில் எந்தவொரு அறிவியற் கண்டுபிடிப்பும் வெளிவரும் போது அப்படியான கண்டுபிடிப்பை தமது வேதகால முன்னோர்கள் (ஆரிய மிலேச்சர்கள்) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்த்திக் காட்டியிருப்பதாக ஒரு புராணக் கதையையும், மேற்கொண்டு இன்னும் சில புனைவுகளையும் சான்றாக முன்வைத்து முழு உலகிற்கும் சிரிப்புக் காட்டுவதை இந்துத்துவ இந்தியர்கள் தமது வழக்காகக் கொண்டுள்ளனர். 1903 இல் ஓவில் ரைட், வில்பர் ரைட் என்ற‌ உடன்பிறந்தார்கள் விண்ணூர்தியைக் கண்டுபிடித்தபோது, 6000 ஆண்டுகளுக்கு முன்னரே மகரிசி பரத்வாஜ் என்ற முனிவர் விண்ணூர்திக் கட்டுமானத் தொழினுட்பத்தில் தேர்ந்தவராகவிருந்தார் என்றும் வேற்றுக் கோள்களிற்கு அந்நாளிலே தம் முன்னோர்கள் பயணித்ததாகவும் இந்துத்துவ அரம்பர்கள் அறிக்கை விட்டனர். அப்படியாக மகரிசி பரத்வாஜ் இனது இந்தக் கண்டுபிடிப்பானது “விமான சாஸ்திரம்” எனும் நூலாகத் தம்மிடம் இருப்பதாகக் கூறினார். இந்த நூலைத் தேடிப்பார்த்தால் அது இந்துத்துவக் கோமாளிகளால் 1970 களிலே எழுதப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், சகுண, சுந்தர, றுக்ம, திரிபுர என்பனவே நால்வகை விமானங்களின் வகைகளாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விண்ணூர்திகளிற்கான எரிபொருளைப் பற்றிக் குறிப்பிடும் போது சுந்தர விமானத்திற்குக் கழுதை மூத்திரமும், சகுண விமானத்திற்கு பழங்களும், நேயும், தேனும் சேர்த்த கலவையான பஞ்சாமிர்தமும், திரிபுர விமானத்திற்குப் பாலும் எரிபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுதியுள்ளனர். இப்படியான ஓரறிவிலும் குறைவான இந்துத்துவ அரம்பர்களிடம் சேர்ந்திருப்போரும் அவர்களிடமிருந்து தம்மை அயன்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற புரிதலுக்கு வருவதற்கு இப்படியான தகவல்கள் துணைபுரியும் என்று நம்புகின்றோம்.

அறிவு வளர்ச்சி இல்லாத காலத்துப் புனைவுகளான புராணங்களை உருவாக்கும் போது கதாநாயகத்தன்மையில் கடவுளர் படைக்கப்பட்டனர். இது மதங்கள் கடந்து, நாடுகள் கடந்து உலகெங்கிலுமான போக்காக இருந்தது. அதில் இயல்பான மாந்தர்களிடத்திலிருந்து வேறுபட்டு மீயாற்றல் கொண்டோராகக் கடவுளர் பாத்திரங்களைப் புராணங்களில் படைப்பதற்காக, மாந்தர்களால் செய்ய முடியாது என்று அன்று நம்பப்பட்ட செயல்களைச் செய்வோராக கடவுளர் என்ற பாத்திரங்கள் படைக்கப்பட்டது. எனவே பறத்தல், வேறு கோள்களிற்குச் சென்று வருதல், உயிர்த்தெழுதல் போன்ற சித்தரிப்புகள் அவ்வாறே நிகழ்ந்தன. பறப்பது பற்றிய கட்டுக்கதைகளானவை கிரேக்க புராணங்களிலும் விரவிக் காணப்படுகின்றன. இகாரஸ், பிகாசஸ் போன்ற கிரேக்கக் கதைகளில் வானில் பறந்து செல்லும் விமானங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. இராமன் கானகம் செல்ல படகோட்டி குகனே துடுப்பினை வலித்துச் சென்றதாகக் கூறும் இராமாயணத்தில் சீதையை மீட்டு வரும்போது இராமன் இராவணனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புஸ்பக விமானத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறான புராணப் புனைவுகளின் உலகந்தழுவிய போக்கினை அறிந்துகொள்ளாத நம்மவர்களும் எம்முன்னோன் இராவணன் விண்ணூர்தியோட்டியதாகச் சிலாகித்துக் கொள்வதன் மூலம் முட்டாள்த்தனத்தில் ஆரிய பிராமணனிற்கு சற்றும் சளைக்காதவராகின்றனர்.

ஒரு தாயிலிருந்து ஒரே மாதிரியான 100 கௌரவர்கள் தோன்றியமை மகாபாரதத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதனால், இந்தியரே குருத்தணுக்கல ஆய்வு (Stem cell research) மற்றும் ஆய்வுகூட இனப்பெருக்கத்தை முதன் முதலில் மேற்கொண்டனர் என்றும் மேலும் விஷ்ணுச் சக்கரம் எனும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளும் (guided missiles) இந்திய முன்னோர்களிடம் பயன்பாட்டில் இருந்ததாகவும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான நாகேஸ்வர் இந்திய அறிவியல் பேராய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். புவியியலாளரும் பஞ்சாப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான அசுகோஸ்ல என்பவர் பிரமனே டைனோசர்களைப் படைத்ததாக டைனோசர் பற்றிய தனது ஆய்வில் கூறியிருக்கிறார். அத்துடன், சமஸ்கிருத இலக்கியங்களில் (மிலேச்சர்களின் இழிவான பண்பாடுகளைப் பேசும் இலக்கியங்கள்) அறிவியல் மற்றும் தொழினுட்பங்கள் பற்றிய செய்திகள் விரவிக் காணப்படுவதால் IIT பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஸ்மிரிதி இரானி என்பவர் கூறியுள்ளார். இந்த பல்கலைக்கழகமே இவ்வாண்டு இறுதிக்குள் இலங்கைக்குள் நிறுவப்பட இருக்கின்றது என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். மேலும், இராஜஸ்தான் மாநில கல்வியமைச்சரோ மாடுகள் தமது வெளிச்சுவாசத்தின் (exhale) மூலம் ஒட்சிசனை (Oxygen) வெளியிடுவதால் மாடுகளை வளர்த்தால் வளிமண்டலத்தில் ஒட்சிசனின் அளவு கூடும் என்று சொல்லியிருக்கிறார். மேலும், மகாபாரதத்தில் வரும் குருஷேத்திரப் போரில் நடப்பனவற்றை பலமைல் தொலைவிலிருந்த சஞ்சய திருதராஷ்ரவிற்கு நேரலையில் நடப்பது போல கூறிக்கொண்டிருந்த செய்தி பதிவாகியிருப்பதால் இணையம் மற்றும் செய்மதித் தொழினுட்பம் என்பன தமது இந்திய முன்னோர்களின் கண்டுபிடிப்பே என இந்துத்துவக் கல்வியாளர்கள் முதல் கலவியாளர்கள் வரை கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வேதக்கோட்பாடுகளானவை (Vedic Thoeries) அல்பேட் ஐன்ஸ்ரினின் சார்புக் கோட்பாட்டிலும் சிறந்தவை என கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று அடித்துக்கூறி வந்த அண்டவியல் அறிவரான (Cosmologist) Stephen Hawking கூறியிருக்கிறார் என்று அறிவியல் மற்றும் தொழினுட்பத்துறை அமைச்சரான ஹர்ஸ்வர்த்தன் பொய் புளுகிப் பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளார். ஆரிய மிலேச்சர்களின் அநாகரிக வாழ்வியலின் தொகுப்பாக இருக்கும் வேதங்களின் உள்ளடக்கத்தைக் கூச்சமின்றி வெளியில் பேசமுடியாதளவிற்கு விலங்குகளுடன் புணர்தல் போன்ற அருவெறுப்பான விடயங்களை அவை உள்ளடக்கியிருக்கும் போது அதனை ஒரு இறைமறுப்பு அறிவியலாளனுடன் தொடர்புபடுத்திப் பேசுமளவிற்கு ஆரிய பிராமணியம் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒன்று என்பதை ஈண்டு நோக்க வேண்டும். மாந்தவள அபிவிருத்தி மற்றும் உயர்கல்வித்துறை ஆகியவற்றிற்கு அமைச்சராகவிருந்த சத்யபால்சிங் என்பவர் சாள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை தவறானது என்று கொஞ்சங்கூடத் தயக்கமில்லாமல் பொதுவெளியில் உரையாற்றியிருக்கிறார். மேற்கூறிய விடயங்களிலிருந்து இந்தியாவில் அறிவியல் படாத பாடு படுகின்றது என்பதைத் தெரிந்துகொள்வதோடு, முட்டாள்த்தனத்தை விதைக்க இந்துத்துவவாதிகள் காட்டிவரும் முனைப்பைப் புரிந்துகொள்வதோடு, இந்துத்துவத்தைப் பற்றி நிற்கும் கல்வியாளர்கள் கற்காலத்தையும் தாண்டிப் பின்னாலே பயணிக்கின்ற முட்டாள்களாகி விட்டனர் என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

கல்வித்துறையும் அரசியற்களமும் இக்கேடுகெட்ட நிலையில் இருக்கின்றனவென்றால், இந்தியாவில் நீதித்துறையின் நிலையோ சொல்லத் தரமன்று. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதியரசரான மகேஷ் சந்திர சர்மா என்பவர் ஆண்மயிலும் பெண்மயிலும் கலவி கொள்வதில்லை என்றும் ஆண்மயிலின் கண்ணீரைப் பெண்மயில் உட்கொண்டே கருப்பமடைகிறது என்றும் கூறியிருக்கிறார் என்றால் இந்துத்துவ நீதியரசர்களின் அறிவின் வரம்பு எதுவென்பதை உணர்ந்துகொள்வதோடு, இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் விக்கினேசுவரன் அவர்களும் இந்துத்துவக் கருத்தியலில் ஊறிக்கிடக்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரே என்பதை இவ்விடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாயிருக்கும் என நம்புகிறோம்.

அத்துடன், கல்வியாளர்கள் என்ற பெயரில் ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தையும் அசிங்கப்படுத்தும் மேற்குறிப்பிடப்பட்ட இந்துத்துவத்தைத் தமது சிந்தையில் தாங்கி நிற்கும் இந்தியக் கல்வியாளர்களை விஞ்சும் அளவிற்கு ஈழத்தின் நிலையும் ஆகிவிடப் போகின்றதேயென்ற‌ பதைபதைப்பு எம்மிடம் எழாமலில்லை. ஏனெனில், இந்துத்துவக் கருத்தியற் குப்பைகளைக் கோபுரம் போல தாங்கிப் பிடிக்கும் கல்வியாளர்கள் பலர் ஈழத்தில் தோன்றிவிட்டார்கள் என்ற வலி மிகுந்த செய்தியை நாம் நகைத்துவிட்டுக் கடந்துவிட முடியாது. “முட்டாள்த்தனத்திற்கு எதிரான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என அல்பேட் ஐன்ஸ்ரின் கூறியது இந்துத்துவத்தைப் பற்றிநிற்கும் எல்லோருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகின்றது. முட்டாள்த்தனத்திற்கு எதிரான தடுப்பூசி தான் இல்லை. தடுப்பதற்கான அரசறிவியல் எம்மிடம் இருக்கின்றதல்லவா?

– முத்துச்செழியன் –

2024- 02- 24