கற்றோராயினும் அறிவோரல்லவே; கட்டியிருக்கும் கோவணத்தையும் அறுத்தெறியத் துடிக்கும் ஈழத்தின் அறிவுமரபு -முத்துச்செழியன்-

அயோத்தியில் கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பதாகவே தேர்தல் கணக்கில் 2024.01.22 அன்று இராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து யாரும் எண்ணியிராத அளவுக்கு ஈழத்தில் சிலாகிப்புகளும், சிலிர்ப்புகளும் பரவலடைந்துள்ளன. தமிழ்த்தேசியத்தின் முதன்மைப் பகையான இந்துத்துவத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களை விஞ்சும் அளவிற்கு ஈழத்தில் கற்றோரென்று தம்மைத் தாமே நினைத்துக்கொள்ளும் அறிவுநீக்கம் செய்யப்பட்ட கல்வியைக் கவ்விக்கொண்டோர் இராமர்கோயில் திறக்கப்பட்டதைக் கொண்டாடித் தீர்த்துள்ளனர். தன்னினவழிப்பிற்குத் தானே எண்ணெய் ஊற்றும் இந்த இழிநிலைக்கு ஈழத்தவர்களில் பலர் முன்வந்திருப்பதானது, ஈழத்தமிழர் மனநிலைகளில் இந்திய நீக்கம் (de-indianizing the mindset) செய்யப்பட வேண்டியதன் உடனடித்தேவையை உணரச் செய்கின்றது.

இந்துத்துவம் என்ற தமிழினக்கொல்லி குறித்துத் தமிழ்த்தேசியக் கருத்தியற் பரப்பில் காட்டுக் கத்துக் கத்தியும் ஈழத்தில் உள்ள பலரிடம் இது குறித்த விழிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலை வேண்டிப் புறப்பட்ட புரட்சிகர இளையோரைத் தனது மேலாதிக்க‌ நலன்கட்கு இசையும் கூலிப்படைகளாக்க முயன்றதிலிருந்து, தமிழீழதாயகத்தை வன்கவர்ந்து, அகவை வேறுபாடின்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை வன்புணர்ந்து, நரபலிவேட்டையாடி, தமிழினக்கொலை செய்த இந்தியா மீது தமிழர்களுக்கு இருக்க வேண்டிய வெஞ்சினம் எங்கே? பன்னிரு வேங்கைகளை வஞ்சகமாக சிங்கள பேரினவாதப் படைகளிடம் கையளித்த இந்தியாவின் வஞ்சகத்தின் வழித்தடமானது ஈழத்தமிழர்கட்கு மறந்துபோகக் கூடியதொன்றாகி விட்டதா? தியாகதீபம் திலீபனை அணுவணுவாகச் சாகவிட்டு வேடிக்கை பார்த்த இந்தியாவின் தமிழினவெறுப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு மட்டுமன்றி அதன் காந்திய முகத்திரையையும் தியாகதீபம் திலீபன் கிழித்தெறிந்த பின்பும் இந்தியா எனும் தமிழினப் பகை குறித்து ஈழத்தவர்களிடம் புரிதல் ஏற்படவில்லையா? அத்தனைக்கும் பின்பும் வங்கக் கடலில் வைத்து கேணல் கிட்டுவையும், அவருடன் பயணித்த போராளிகளையும் கொன்று சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு உறுதுணையாக இருந்த இந்தியாவின் சூழ்ச்சியை எப்படி மறந்துபோகிறார்கள்? போரில் புலிகளைத் தோற்கடிக்கலாம் என்று கனவில் கூட நினைத்திராத மகிந்த ராஜபக்சவை அழைத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டிக்கொடுத்து, தானே தமிழினவழிப்பை முன்னின்று நிகழ்த்தி, தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்த இந்தியா என்ற வல்லூறின் மீது என்றுந்தீரா வெஞ்சினம் தமிழர்கள் மனங்களில் நிலைத்திராமைக்குக் காரணந்தான் என்ன?

இந்தியத்தின் தமிழினப்பகைமையானது வரலாறு நெடுகிலும் வெளிப்படுமொன்று எனினும், வரலாற்றுப் புரிதல் இல்லாதோருக்கும் வெட்டென விளங்குமாறு வாழுங் காலத்திலேயே நடந்தேறிய இத்தனைக்குப் பின்பும் இந்துத்துவ மிலேச்சர்களின் பொறிக்குள் ஈழத்தமிழர்கள் உறைவிடந்தேடும் கேடிலும் கேடான மடைமைத்தனம் தொடருகின்றதெனின், அதற்கு ஈழத் தமிழர்களிடத்தில் தலைமுறை தலைமுறையாக ஆழமாக வேரூன்றி நிற்கும் அழிவுதரும் நம்பிக்கையானது (devastating faith system) பண்பாட்டுத் தளத்தில் இடையூறின்றித் தொடர்ந்து வருகின்றமையே காரணம் எனலாம். எனவே, இந்தச் சிக்கலை நாம் இதற்கு மேலும் கண்டுங் காணாமலும் கடப்பது முறையன்று, ஏனெனில் பண்பாட்டுத் தளத்தில் புராண, இதிகாச வழி தொடரும் அந்த மூடநம்பிக்கையே இந்தியத்தின் தமிழினப் பகைமையைப் புரிந்துகொள்ளாத மூடர்களாக ஈழத்தமிழர்களில் கற்றோர் பலரை ஆக்கிவைத்திருக்கின்றது.

தமிழரின் வழிபாட்டு மரபு

இயற்கை வழிபாடு, தமது மண்ணையும் மக்களையும் காக்க மாண்ட மாவீரர்களை வழிபடும் நடுகல் வழிபாடு என்பனவே பழந்தமிழர் வழிபாட்டு மரபாகும். எல்லாவற்றையும் பகுத்து ஆராயும் அறிவுத்திறனும், முதிர்ச்சியும் வாய்க்கப்பெற்ற பண்டைத் தமிழர்கள் தாம் வாழும் தாயக மண்ணைக் கூட அதன் நிலவியற் கூறுகளின் தன்மைகளைக் கொண்டு ஐவகை நிலங்களாக வகுத்து, அந்த மண்ணோடு இயைந்த வாழ்வை ஐந்திணை வாழ்வியலாகக் கொண்டிருந்த போது திணைத்தெய்வ வழிபாடாக‌ தமிழரின் முன்னோர் வழிபாடு தொடர்ந்தது. பழந்தமிழர் இந்த உலகைப் புரிந்துகொள்ள முயன்றதன் விளைவாகக் கண்டடைந்த உலகியல் பார்வைகளானவை தமிழர் மெய்யியல்களாகின. இவ்வாறாகத் தமிழர்களிடத்தில் ஏற்பட்ட மெய்யியல் நோக்குகளானவை ஆசிவகம் போன்ற தமிழர்களிடத்தில் தோன்றிய சமயங்களிலும், புறத்தேயிருந்து தமிழர்களிடத்தில் வந்து தமிழர்களின் வளர்வெய்தியிருந்த மெய்யியல் பார்வைகளாலும் செழிப்பான மொழிவரலாற்று வளர்ச்சியாலும் வளர்வெய்திய சமணம் மற்றும் பௌத்தம் போன்ற சமயங்களிலும் பட்டெறிந்தன. சங்ககாலம் என்பது இறைநெறிக் காலமாகவன்றி இயற்கைநெறிக் காலமாகவே இருந்தது.

ஆரிய இன மேலாதிக்கத்தைக் காவிவந்த வேதப் பிராமணியம்

இன்றைய நடுவண் (மத்திய) ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து குறிப்பாக உக்ரேன், உஸ்பெஸ்கித்தான் போன்ற பகுதிகளிலிருந்து கி.மு 2000‍ – கி.மு 1500 ஆண்டுகாலப்பகுதியில் காபூல் பள்ளத்தாக்கினூடாக இந்தியத் துணைக்கண்டத்திற்கு வந்த நாடோடி மிலேச்சர்களே தம்மை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட அநாகரிகர்களாவர். பெண்களை மிகவும் மட்டமாகக் கருதும் இந்த மிலேச்சர்கள் கால்நடைகளை மேய்த்த வண்ணம் ஆண்கள் கூட்டமாகவே இந்தியத் துணைக்கண்டத்திற்குள் 500 ஆண்டுகளாக காலத்திற்குக் காலம் கூட்டங்கூட்டமாக நுழைந்தபோது, தமிழர்களின் வழி நாகரிகமாக (Secondary Civilization) இருந்த மொகஞ்சதாரோ, கராப்பா பகுதிகளில் பண்டைத் தமிழரின் நகர் நாகரீகம் நிலவியது. காலநிலை மாற்றங்களாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வரட்சியாலும் கரப்பாவில் நாகரீகமாக வாழ்ந்த மக்கள் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் புலம்பெயரலானர்.

இந்தச் சூழலை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திய ஆரிய மிலேச்சர்கள் அந்தப் பகுதிகளில் தமது குடியிருப்புகளை அமைத்து வாழத் தொடங்கினர். அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வரும்போது எழுத்துவடிவில் இல்லாமல் வாய்வழியாக (Oral tradition) மட்டுமே கடத்தப்பட்டு வந்த தமது இருக்கு வேதத்தினைத் தமது வாழ்வியலில் கடைப்பிடிக்கத் தவறவில்லை. விலங்குகளைப் புணருதல், பெண்களை இழிவாக நோக்கல் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட இருக்கு வேதத்தினையே தமது அநாகரிக வாழ்வியலின் வழிகாட்டியாக ஆரிய மிலேச்சர்கள் கொண்டிருந்தனர். Zeus போன்ற கிரேக்கத்தில் வழிபடப்பட்ட‌ தெய்வங்களை ஒத்த தோற்றங்களையுடைய தெய்வங்களையே இந்த ஆரிய மிலேச்சர்கள் வழிபட்டனர். சோமபானம் அருந்துவதும் விலங்குகளைப் புணரும் சடங்குகளைச் செய்வதுமான இழிசெயல்களை வாழ்வியலாகக் கொண்டிருந்த‌ இந்த ஆரிய மிலேச்சர்கள் தமது முன்னோர் வழியாக பெற்றுக்கொண்ட இருக்கு வேதத்தைத் தொடர்ந்து யசூர், சாமம், அதர்வணம் போன்ற காலத்தால் பிற்பட்ட வேதங்களையும் தமது வாழ்வியல் வழிகாட்டிகளாகத் தொகுத்துக் கொண்டனர். வேதங்களை ஓத அவர்கள் பயன்படுத்திய வேதமொழியானது (Vedic language) இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த ஆரிய மிலேச்சர்களின் பண்பாடான வேதப் பண்பாடானது (Vedic Culture) இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குச் செலுத்த முனைந்த காலப்பகுதியாக கி.மு 1500‍ – கி.மு 500 வரையான காலப்பகுதியிருந்தது.

வேதப் பண்பாடென்பது அடிப்படையில் ஆரிய பிராமணியப் பண்பாடாகவே (Aryan Brahminism) இருந்தது. ஆரிய இன மேலாதிக்கமே இந்த வேதப் பண்பாட்டின் உட்பொருளாக இருந்தது. சிறுபான்மையாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வந்த ஆரிய மிலேச்சர்களின் அநாகரிக வேதப் பண்பாட்டை, பண்பார்ந்து வாழ்ந்த மண்ணின் மக்கள் ஏற்கவில்லை. எனவே, மண்ணின் மக்களிடம் நிலவிய பண்பாடுகள், வாழ்வியல் நம்பிக்கைகள், அவர்களின் வரலாற்றுக் கதைகள் போன்றவற்றை உட்செரித்துக்கொண்டு ஆரிய வேத பிராமணியமானது (Arya vedic Brahmanism) புராண, இதிகாச இந்துவியமாக உருவெடுத்தது (Puranic Hinduism). சிவன், விஷ்ணு போன்றன தெய்வங்களாக குப்தர்காலத்தில் உள்வாங்கப்பட்டன என்றும் பௌத்த யாதகக் கதைகளை நகலெடுத்தும் அவற்றை அடியொற்றியுமே குப்தர் காலத்தில் வைதீக (இன்றைய இந்துவிய) மதமானது வளர்த்தெடுக்கப்பட்டது என இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாய்வாளரான பேராசிரியர் ரோமிலா தாபர் கூறுவதை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

வேத பிராமணியத்தை மண்ணின் மக்கள் ஏற்கமறுத்ததால் மண்ணின் மக்களிடம் நிலவிய பண்பாடுகளையும் வரலாறுகளையும் உள்வாங்கிக்கொண்டு உருவாகிய வேத பிராமணியத்தின் வடிவமாற்றமே புராண, இதிகாச வைதீக மதம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதோடு, அந்த வரலாற்றுப் போக்கில் படைக்கப்பட்டவையே மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற இதிகாசங்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆரிய இனமேலாதிக்கத்தை வலியுறுத்தும் வேத பிராமணியத்தை உட்பொருளாகக் கொண்டே இந்த இதிகாசங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே மண்ணின் மக்களிடம் நிலைத்து நின்ற வரலாற்றுக் கதைகளில் கதாநாயகத்தன்மை கொண்ட பாத்திரங்களைக் கடவுளின் அவதாரங்கள் எனப் புனைவுசெய்யப்படுவதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் நோக்கலாம்.

நாம் ஏலவே விளக்கியவாறு, புரவிகளோடு புணர்ந்து, விலங்குகளோடு கலவி செய்து, சோமபானம் பருகி, பசுக்கன்றுகளை தீயிலிட்டு யாகம் செய்வதைத் தனது பண்பாடாகக் கொண்டிருந்த ஆரிய இன மேலாதிக்கத்தைத் தனது உட்பொருளாகக் கொண்ட வைதீக மதமானது பௌத்தம், சமணம் போன்ற புறத்தேயிருந்து வந்த மதங்களைப் போல தமிழர்களிடத்தில் செல்வாக்குப் பெற கி.மு. 3 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே முயன்றது. நன்கு வளர்வெய்தியிருந்த செம்மார்ந்த பண்பாட்டைத் தமதாய்க் கொண்டிருந்த தமிழர்களிடத்தில் அறிவுக்கொவ்வாத அநாகரிகர்களின் வைதீக மதமானது சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய சமயங்கள் தமிழர்களிடத்தில் எடுபட்டதைப் போல எடுபடவேயில்லை. ஆரிய வேதங்களை தமிழில் பரப்பாமல் தமிழை நீசமொழி என இழிந்துரைத்த ஆரிய அநாகரிக‌ர்களின் கால் குறை மொழியால் (Vedic Language) தமிழர்களிடத்தில் செல்வாக்குச் செலுத்த இயலவில்லை. ஆனால், சமணமும் பௌத்தமும் தமிழர்களிடத்தில் ஏலவே துளிர்த்து வளர்ந்திருந்த மெய்யியல் மரபிலிருந்து பெரிதும் மாறுபடாமலிருந்ததாலும், பௌத்தமும் சமணமும் தமிழால் வளர்ந்தும் தமிழை வளர்த்தும் தமிழரின் வாழ்வியலோடு ஓரளவு ஒன்றித்துப் பயணித்ததாலும் சமணமும், பௌத்தமும் தமிழர்களிடத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்ற சமயங்களாகவிருந்தன. ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரத்தை எழுதியோனும் அதில் முதன்மையான கதை மாந்தர்களாக வருவோரும் சமண சமயத்தைச் சார்ந்த தமிழர்களே. மணிமேகலை என்ற காப்பியத்தின் முதன்மைப் பாத்திரமே பௌத்த துறவியான மணிமேகலை தான். குண்டலகேசியானது பௌத்த நூலாகவும், வளையாபதி மற்றும் நீலகேசி ஆகியவை சமணக் காப்பியங்களாகவும் இருக்கின்றன. இவ்வாறாக தமிழர்களின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, நீலகேசி என்பன பௌத்த மற்றும் சமண சமயங்களின் செல்வாக்கையும் தமிழின் செழுமையையும் கோடிட்டுக் காட்டுகின்றன.

துறவறத்தை அதிகம் பரப்பிய சமண, பௌத்த மதங்களானவை ஏழாம் நூற்றாண்டில் தமிழர்களிடத்தில் அயன்மைப்படலாயின. உண்டு களித்து மறமே அறமென இயற்கைநெறியுடன் வாழ்ந்த சங்கத் தமிழர்களை துறவறம், வாழாதிருத்தல் என‌ சமணமும் பௌத்தமும் இறுக்கத்திற்குள்ளாக்கியமையால் இந்த மதங்கள் தமிழர்களிடத்தில் காலப்போக்கில் அயன்மைப்படலாயின. விளைவாக, பௌத்த, சமண வழிபாட்டிடங்கள் கவனிப்பாரற்றுக் காடுமண்டிக் கிடந்தன. பௌத்த, சமண எழுச்சியால் தமிழிசையும் பொழிவுகுன்றி எடுப்பாரற்றுக் கிடந்தது. இந்தச் சூழலைத் தமிழர்களிடத்தில் செல்வாக்குச் செலுத்த உகந்ததாகக் கருதிய வைதீக மதமானது தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக ஏற்றுப்பழகி விட்ட சமண, பௌத்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு தமிழிசையையும் மீட்டெடுத்தவாறு பக்தி இயக்கமாக தமிழ் வேடந்தரித்துத் தமிழர்களிடத்தில் நுழைந்தது. அதுவரை நீசமொழியென தாம் இழிவுசெய்த தமிழ்மொழியையும் தமிழிசையையும் கையிலெடுத்துக் கொண்டு நுழைந்த வைதீகத்தைத் தமிழர்கள் எச்சரிக்கையுணர்வற்று சமண, பௌத்த வீழ்ச்சியின் பின் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். அதுவரை பசுக்கன்றுகளைக் கொன்று யாகம் செய்து சோமபானம் குடித்து ஏறிய வெறி மயக்கத்தில் விலங்குகளைப் புணர்வதைச் சடங்காகக் கொண்டிருந்த வைதீக மதமானது, சமண, பௌத்த சமயங்கள் தமிழர் வாழ்வியலில் ஏற்படுத்திய புலால் மறுக்கும் பண்பாட்டைக் கையிலெடுத்தது.

தமிழர்களின் திணைத் தெய்வங்களையும் தமிழரின் முன்னோர் வழிபாட்டையும் உள்வாங்கிக்கொண்ட வைதீகமானது ஈசனை சிவன் என்று மாற்றியது, கொற்றவையை பார்வதி என்று மாற்றியது, முருகனை சுப்பிரமணியனாக மாற்றியது, ஆசிவக அடையாளமான ஆனையை விநாயகராக்கியது. பின்னர் கணவன், மனைவி, பிள்ளைகள் என உறவுமுறை கொண்டு கதை புனைந்தது வைதீகம். இப்படியாகத் தமிழர்களின் வழிபாடுகளை வைதீகமாக்கி அதற்குச் சைவம் என்ற பாளிமொழிச் சொல்லைக் கொண்டு தனக்குப் பெயர் மாற்றமும் செய்துகொண்டது ஆரிய வைதீகம். ஆசிவக ஐயனார்களும், புத்தர் சிலைகளும் சிவ‌ன் சிலைகளாக மாற்றப்பட்டன. பௌத்த, சமணப் பள்ளிகளானவை சைவ ஆலயங்களாக மாற்றப்பட்டன. இவ்வாறு சைவம் எனும் பெயர் மாற்றி சமண, பௌத்தக் கூறுகளை உள்வாங்கி, தமிழையும் தமிழிசையையும் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களிடம் புகுந்த வேத பிராமணியமான வைதீகமானது தமிழர்களிடத்தில் செல்வாக்குப்பெறத் தொடங்கியது. விளைவாக ஆரிய இன மேலாதிக்கப் போக்கையும் வேத பிரமாணியக் கூறுகளையும் தம்மையறியாமலே ஏற்றுப் போற்றும் இழிநிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

ஆரிய பிராமணியப் பண்பாடென்பது தமிழர் மரபிற்கு நேரெதிரானதாக இருக்கிறது. தாய்வழிச் சமூக அமைப்பைக் கொண்டிருந்த தமிழர் வாழ்வியலில் பெண்களில் பலர் கொற்றவைகளாக உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். சங்க இலக்கியத்திலே அறிவோராகவும் மறத்திகளாகவும் தமிழ்ப் பெண்கள் பாடுபொருளாக இருந்திருக்கின்றனர். ஐம்பெருங் காப்பியங்களில் காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரத்தில் அறச்சீற்றத்துடன் அதிகாரத்தை எதிர்த்துக் குரல்கொடுத்த கண்ணகி முதல் அறிவும் கலைத்திறனும் வாய்க்கப்பெற்ற ஆளுமையான மாதவி, மற்றும் நல்வழி காட்டவல்ல அறிவுடை கவுந்தியடிகள் என காப்பியத்தின் முதன்மை மாந்தர் அனைவரும் பெண்களே. மணிமேகலையிலும் பெண்ணே காப்பியத்தின் தலைவியாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். இப்படியாக பெண்களை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றும் பண்பாடே தமிழர்களுடையதாக இருந்தது.

ஆனால், ஆண்கள் கூட்டமாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்த ஆரிய மிலேச்சர்களோ தமது முன்னோர்களின் வழியில் பெண்களைப் பற்றி மிக இழிவான பார்வை கொண்டிருந்தனர். தாம் புணரும் விலங்குகளில் ஒன்றாகவே பெண்களைப் பார்த்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமெல்லாம் ஆரிய மிலேச்சர்களின் வேத அநாகரிகப் பண்பாட்டுடன் வந்தேறிய இழிவுகளே. கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் தந்தை இறந்தபோது அவரின் மனைவிகள் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டனர் என்று அவர்களின் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான இழிவான ஆரிய மிலேச்சர்களின் பிராமணிய வேதப் பண்பாடே இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் விரவிக் காணப்படுகின்றது.

சிலப்பதிகாரத்தில் கோவலன் சமண சமயத்தைச் சார்ந்தவனாகவும், அவனின் இறப்பின் பின் அவனது தந்தை ஆசிவகத்தைச் சார்ந்ததாகவும், அவனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலை பௌத்த துறவியாகவும்,  சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் சமணராகவும் அவரது தமையனான செங்குட்டுவன் வைதீகத்தைப் பின்பற்றுபவனாகவும், அதில் வரும் ஏனைய பாத்திரங்களான மாதிரி கண்ணனை வழிபடும் மாலியத்தைச் சார்ந்தவளாகவும், மாலமறையோன் வைதீகத்தையும், மாங்காட்டு மறையோன் மாலியத்தையும் என ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் கூட வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். எனவே, மதங்கள் அன்றைய தமிழரின் அடையாளங்களாக இருக்கவில்லை. அவை வெறுமனே ஒவ்வொருவரின் உலகியல் பார்வைகளாக மட்டுமே இருந்திருக்கின்றன. தமிழரின் வாழிடத் தொடர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுவதை முதன்மை நோக்காகக் கொண்டிருந்த சிலப்பதிகாரத்தில் தமிழர் என்ற அடையாள‌த்தைத் தவிர வேறெதுவும் அடையாளங்களாக முன்னிறுத்தப்பட்டிருக்கவில்லை.

இராமாயணத்தின் பின்னாலுள்ள அரசியலென்பது தமிழர்கள் மீதான ஆரிய பிராமணியத்தின் மேலாதிக்கமே

இராமாயணம் என்ற இதிகாசமானது ஒரு தடவை படைக்கப்பட்டு அப்படியே வரலாற்றின் வழி கடத்தப்பட்டு நமது கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது என்று யாரும் நம்பிவிடக் கூடாது. கி.மு 400 களிலிருந்து கி.பி 400 வரை காலத்திற்குக் காலம் பல மாற்றங்களிற்கு உட்பட்டதே இன்று எம் கையில் கிடைக்கும் இராமாயணம் ஆகும். 30 இற்கும் மேற்பட்டோர் இராமாயணத்தை எழுதியுள்ளனர். ஜாவா, தாய்லாந்து, மலேசியா என அந்தந்த நாடுகளிலும் இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன. 30 இற்கு மேற்பட்ட இராமாயணக் கதைகள் பற்றிய குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. ஒரு இராமாயணத்தில் சீதையும் இராமனும் உடன்பிறந்தவர்கள். இன்னொரு இராமாயணத்தில் சீதை இராவணனுக்கு மகள். மலையாளத்தில் எழுதப்பட்ட “மாப்பிள்ளை இராமாயணம்” எனப்படும் இராமாயணத்தில் இசுலாமியக் கதைகளையும் பிணைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்துத்துவ அரசியலுக்காக இராமாயணம் என்ற இதிகாசப் புனைவைக் கையிலெடுத்த வேத பிராமணர்கள் முதலில் வால்மீகி இராமாயணத்தை முன்னிலைப்படுத்தினர். எனினும் இராமரின் பண்பு குறித்து ஐயத்தைக் கிளப்பும் செய்திகள் வால்மீகி இராமாயணத்தில் இருப்பதாகப் பேச்சுகள் பரவலடைந்தமையால், இராமனைக் கடவுள் நிலைக்கு உயர்த்திய துளசிதாச இராமாயணத்தை முன்னிலைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் இந்துத்துவ அரசியலாளர்கள்.

இராமரின் பிறப்புப் பற்றி அவர்களின் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட விடயமானது விலங்குகள் கூட எள்ளிநகையாடும் அளவிற்கு மட்டமாக உள்ளது. குழந்தைச் செல்வமற்ற தசரதனின் மனைவிகளை அழைத்து அசுவமேத யாகம் செய்து புரவிகளோடு புணரும் சடங்கு செய்யப்பட்டமையாலே கோசலைக்கு இராமன் பிறந்ததாக இந்துத்துவவாதிகள் தூக்கித் திரியும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமன் என்ற பாத்திரமானது மன்னனாகப் (சத்திரியன்) படைக்கப்பட்டிருப்பினும் இராமன் வேதக் கல்வி கற்றார் என்று கூறி வேதப் பிராமணத்திற்குள் இராமன் இழுத்து வரப்படுகிறான். அதிலும் குறிப்பாக விசுவாமித்திரர் சொற்படி தெற்கிலே இருக்கும் அசுரர்களை அழிக்கவே இராமன் அழைத்து வரப்படுகிறான் என இராமாயணத்தில் குறிப்பிடப்படுவதிலிருந்து மண்ணின் மக்களை அதாவது தமிழர்களை அழிக்கப்பட வேண்டிய அசுரர்கள் என இழிவுசெய்து, தமிழர்கள் மீது ஆரிய மேலாதிக்கம் வெற்றிகொள்வதாகவே இராமாயணம் எனும் இதிகாசம் புனையப்பட்டுள்ளது. இராமன் என்ற மன்னர் பாத்திரத்தை அவதாரமாக்கும் இதிகாசப் புனைவிற்காக இராமன் பெருமாளின் ஏழாவது அவதாரம் என்றும் சக்கராயுதம் பரதனாகவும், ஆதிகேசன் இலக்குவணனாகவும், சங்கு சத்துருக்கனாகவும் அவதாரமெடுத்ததாகச் சொல்லும் அவதாரக் கதையின் புனைவாக வரும் இராமாயணம் என்ற இதிகாசத்தை வைத்து இந்துத்துவ அரசியல் முன்னெடுக்கப்படுவதன் காரணம் என்னவென தமிழர்கள் ஐயந்திரிபற அறிந்துகொள்ள வேண்டும்.

இந்துத்துவத்தின் உள்ளீடு தேசிய இனங்களை இனவழிப்புச் செய்வதே

இந்துவியம் (Hinduism) என்பது வேறு இந்துத்துவா (Hindutuva) என்பது வேறு என இந்துத்துவா என்ற கோட்பாட்டின் மூலவரான சாவர்க்கரே இந்துத்துவத்தை அறிமுகம் செய்யும் தனது நூலில் கூறியுள்ளான். இந்துவியம் (Hinduism) என்பது எப்படி ஒரு மதமாக அடையாளப்பட ஆரம்பித்தது என்பதைப் பற்றிய புரிதல் இன்றியமையாதது. அதற்கு, முதலில் இந்து என்ற சொல் எப்படிப் புழக்கத்திற்கு வந்தது என்பது பற்றிய வரலாற்றுப் பார்வை எமக்குத் தேவைப்படுகிறது. இந்துகுஸ் மலைக்கு அப்பாலுள்ள நிலத்தைக் குறிக்கவே இந்து என்ற சொல்லை அராபியர்களும் பாரசீகர்களும் பயன்படுத்தினர். எனவே, இந்து என்ற சொல் ஒரு நிலவியற் பெயராகவே இருந்தது. மேற்குலகத்தாருடன் குறிப்பாக ஐரோப்பியருடன் வணிகத்தொடர்பைக் கொண்டிருந்த அராபியர் மற்றும் பாரசீகர்கள் மூலமாகவே இந்து என்ற நிலப்பரப்புக் குறித்த அறிமுகம் பெருமளவில் மேற்குலகத்தாருக்கு ஏற்பட்டது. இந்து நிலப்பகுதியிலிருந்து கொள்வனவு செய்த பொருட்களை அராபியரும் பாரசீகரும் மேற்குலகத்தாருக்கு விற்பனை செய்தனர். இதனால், இடைத்தரகர் இல்லாமலே இந்து நிலப்பரப்பின் பொருட்களை வாங்கி நுகரும் வாஞ்சை மேற்குலகத்தாருக்கு ஏற்பட்டது. எனவே, அராபியர்களுக்கு இருந்த இந்து குறித்த பார்வையே மேற்குலகத்தாருக்கும் கடத்தப்பட்டிருக்கிறது.

ஐரோப்பியர்கள் இந்து என்ற நிலப்பரப்பை அதாவது இந்தியத் துணைக் கண்டத்தை வன்கவர்ந்து தம‌து காலனியாக்கிய பின்னர், வரலாற்றை எழுதும் பணியைத் தமது திருச்சபைக் கல்வியாளர்களிடம் ஒப்படைத்தனர். மக்ஸ் முல்லர் மற்றும் கேணல் ஒல்கொட் போன்ற ஐரோப்பியர்களே இந்து என்ற நிலவியல் பெயரானது பின்னாளில் மதப்பெயராக மாற்றமடைவதற்கு வழி அமைத்தனர் என்று கூறலாம். மக்ஸ் முல்லர் என்பவர் ஜேர்மனியராக இருந்ததோடு கிட்லரின் ஆரிய இனவாதக் கோட்பாட்டின் மீது வெளிப்படுத்த விரும்பாத ஈர்ப்பைக் கொண்டிருந்தார். அவரே ஆரிய மேலாதிக்கத்திற்கு வித்திடும் வகையில் இந்திய வரலாற்றை எழுதலானார். அதுவரை, மக்ஸ்முல்லர் கூட மறுக்கவியலாதவாறு இருந்த வரலாற்று உண்மையான ஆரியர்கள் வந்தேறிய வரலாற்றைத் திரித்து எழுதும் வேலையை கேணல் ஒல்கொட் எடுத்துக்கொண்டார். ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மண்ணின் மக்களென்றும் அவர்கள் அங்கிருந்து இன்றைய மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்குக் குடிபெயர்ந்து நீண்ட காலத்தின் பின் தமது வரலாற்றுத் தாயகமான இந்தியத் துணைக்கண்டத்திற்குத் திரும்பியதாக “அவிச்ச இறால் துடிக்குது” என்ற பொய்புரட்டை, வரலாறு என்ற பெயரில் கேணல் ஒல்கொட் எழுதியதன் மூலம் வந்தேறிய ஆரிய மிலேச்சர்களை மண்ணின் மக்களாக்கி இந்துத்துவ அரசியலின் அடிப்படைக்குத் தளமமைத்துக் கொடுத்தார். மேலும், ஐரோப்பியர்களைப் பொறுத்த வரையில் கிறித்தவத்தைத் தவிர்த்து இன்னொரு மதமாக அவர்கள் இஸ்லாமையே அறிந்து வைத்திருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டத்திற்கு அவர்கள் வந்தபோது இங்கிருந்த இஸ்லாம் மதத்தையும் அவர்களால் பரப்பப்பட்ட கிறித்தவத்தையும் தவிர்த்து மண்ணின் மக்களிடம் நிலவிய அத்தனை சமய நம்பிக்கைகளையும் இந்து என்ற ஒற்றைச் சொல்லால் ஐரோப்பியர்கள் அழைத்தனர். எனவே, அதுவரை நிலவியற் பெயராக இருந்த “இந்து” என்ற சொல்லானது வரலாற்றை எழுதுவதாகக் கூறி கதையாடிய ஐரோப்பிய காலனியர்களால் மத அடையாளம் பெற்றது. மேலும், ஆசிவகத்தின் எச்ச சொச்சங்கள், சமணம், பௌத்தம், சீக்கியம், பழங்குடியினரின் நம்பிக்கை வழிபாடுகள் என அத்தனையையும் தொகுத்த ஒரு தொகுப்புச் சொல்லாகவே “இந்து” என்ற சொல் மத அடையாளம் பெற்றமையை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

இப்படியாக வரலாற்றை எழுதுவதில் ஐரோப்பியர்களுக்கு இருந்த அக்கறையின்மையையும், பாராமுகத்தையும், அறிவின் மட்டுப்பாடுகளையும் பயன்படுத்திய ஆரிய‌ பிராமணர்கள் இந்து என்ற மத அடையாளத்தைத் தமது ஆரிய வேத வைதீகத்திற்குரிய அடையாளச் சொல்லாக்குவதில் வெற்றிபெற்றனர் என்பதோடு, கேட்டுக் கேள்வியில்லாமல் மண்ணின் மக்களிற்கு அந்த அடையாளத்தைச் சுமத்தி அடையாளத் திணிப்புச் செய்து, தாம் சிறுபான்மையினரென்பதை மறைத்து, அடையாளக் குளறுபடிகளால் பெரும்பான்மையாகிக் கொண்டனர். இருப்பினும், இந்த “இந்து” என்ற மத அடையாளச் சொல் புரட்டுகளாலும், திருடல்களாலும், திரிபுகளாலும் உருவாக்கப்பட்ட ஒன்றாகயிருப்பினும் கூட அதற்குள் தமது வழிபாட்டு நம்பிக்கைகளும் கரைக்கப்பட்டு இருப்பதால் காலப்போக்கில் அதனைத் தமது மத அடையாளமாக மண்ணின் மக்களும் ஏற்றுப் பழகிக்கொண்டனர். எனவே, இந்துவியம் (Hinduism) என்பது விரும்பியோ விரும்பாமலோ ஒரு மதக் கருத்தியலாகிவிட்ட (Religious ideology) கசப்பு வரலாற்றில் நிகழ்ந்து விட்டது. ஆனால் இந்துத்துவம் என்பது மதக் கருத்தியல் அல்ல. இந்துத்துவம் (Hindutuva) என்பது ஒரு அரசியற் கருத்தியலாகும் (Political ideology). இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த தேசிய இனங்களினை ஒடுக்கி ஆரிய இன மேலாதிக்கத்தை நிறுவுவதே இந்துத்துவ அரசியற் கருத்தியலை உருவாக்கிய ஆரிய பிராமணியர்களின் நோக்காக அதன் ஆரம்ப நாட்களில் இருந்தது.

தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தினையும் தமது சந்தையாக்கி, அதனை நிதிமூலதினத்திற்குத் திறந்துவிட்டுத் தரகு நன்மைபெறுவோராக இருப்பதற்கே இற்றைச் சூழலில் இந்துத்துவ அரசியல் பயன்படுகிறது. “இராம ஜென்ம பூமி” என்ற கதையாடலானது வெறுமனே அயோத்தியில் நின்றுவிடப் போவதில்லை, மாறாக அது வடக்கில் காஸ்மீரையும் தாண்டி அகன்று செல்லவும், தெற்கே ஈழம் வரைக்கும் அகன்று செல்லவும் முனைகின்றது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே, இந்துத்துவத்தின் அகன்ற பாரதக் கொள்கைக்கு இராமாயண இதிகாசம் எப்படிப் பயன்படுகின்றது என்ற புரிதல் ஒவ்வொரு தமிழர்க்கும் இருக்க வேண்டும்.

வரலாறு இல்லாதவர்கள் புராணப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்டே தமது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள முனைவர். அத்துடன், புராணப் புரட்டுகளைக் கேள்விக்குட்படுத்திவிடக் கூடாது என்பதற்காக “கடவுள்” கதை சொல்லி அவற்றைப் புனிதப்படுத்துவதன் மூலம் மக்களைக் கேள்விக்கிடமின்றித் தமது புராணப் புனைவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளுவது என்பது வரலாறு இல்லாத மிலேச்சர்களின் தேவையாக உள்ளது. உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் அறிவுமரபும், தொன்மையானதும் தொடர்ந்தேர்ச்சியுமானதுமான வரலாறும், சிந்துவெளி நாகரிகம் என்ற தமிழர்களின் வழி நாகரிகத்திற்கு (Secondary Civilization) முன்பே பூம்புகார் உட்பட பல முதன்மை நாகரிகங்களைத் (Primary Civilization) தமதாய்க் கொண்டிருந்த தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்று நிலவுகையும், ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் மண்ணின் மக்களாய் இருந்தவர்கள் தமிழர்களே என்ற வரலாற்றுச் சான்றுகளும், பழந்தமிழர்களின் பண்பட்ட செழிப்பான வாழ்வியலுமென தமிழர்களின் வரலாற்றின் பல பக்கங்களும் பொய் புரட்டுகளால் வரலாற்றை நிரப்ப முயலும் ஆரிய வேத பிராமணர்களுக்குக் கசப்பானதாகவே வரலாறு நெடுகிலும் இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையை வெளிக்காட்டும் தொல்லியல் ஆய்வுகளை மூடி மறைத்தும், அவற்றைத் தொடர விடாது முட்டுக்கட்டை போட்டும், தமிழர் வரலாற்றை வைதீகப்படுத்தித் தமதாக்க முயன்றும், பொய் புரட்டுகளால் தமது வரலாற்று இருப்பை உறுதிசெய்ய முனையும் ஆரிய இனமேலாதிக்க அரம்பர்களுக்குத் தமிழரே வரலாற்றுப் பகையாக இருப்பர் என்பதை ஈண்டு நோக்க வேண்டும்.

தமிழ்மொழி வரலாறு நிலைக்கும் வரைக்கும் வேதமொழி, சமஸ்கிருத மொழி என்ற மக்கள் வழக்கில் என்றுமிராத பிறக்கும்போதே செத்த மொழிகள் முன்னிலைப்பட வாய்ப்பில்லை. தொல்லியல், கல்வெட்டியல் என எதை எடுத்துக்கொண்டாலும் அவை தமிழர்களின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றாமல் விட்டதில்லை. எனவே, தமிழும் தமிழரும் இருக்கும் வரை தமது பொய் புரட்டான வரலாறுகள் அம்பலப்பட்டுப் போகும் என்ற அச்சம் ஆரிய இன மேலாதிக்கத்தை விரும்பும் வேத வைதீக அரம்பர்களுக்கு இருக்கின்றது. எனவே, தமிழர்களை முடக்கிப்போட வேண்டுமெனின், தமிழர்களை ஆட்சி, அதிகாரம் அற்றவர்களாக வைத்திருக்க வேண்டுமென்பதில் இந்த வேத வைதீக அரம்பர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஆட்சி, அதிகாரம் தமிழர் கைகளுக்கு வந்துவிட்டால், தமது வரலாற்றை மீட்டெடுத்து உலக மாந்தகுல வரலாற்றில் தமிழர் தமது மேன்மையான பக்கத்தை நிலைக்கச் செய்துவிடுவர் என்ற அச்சம் ஆரிய இன மேலாதிக்கத்தின் தொங்கு தசையான இன்றைய இந்தியாவின் ஆளும் அதிகார வர்க்கங்களிற்கு உண்டு. எனவே, தமிழர்க்கு நாடு அமைவதைத் தடுப்பதில் இந்தியா காட்டும் முனைப்பை ஒற்றைப்படிம சந்தைக்கோட்பாடுகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்திப் புரிந்துகொள்ள முடியாது.

இந்து – முஸ்லீம் பகைப்புலமும் இந்துத்துவ அரசியலின் உண்மை முகமும்

பிரித்தானியர் காலத்தில் ஆரிய இன மேலாதிக்கத்திற்காகத் துடித்த இந்துத்துவவாதிகள் தாம் வந்தேறி மிலேச்சர்கள் என்ற உண்மையை மறைத்துத் தம்மை மண்ணின் மக்களாகக் காட்டிக் கொள்வதற்காகவே இஸ்லாமியர்களைத் தமக்கு எதிரான வந்தேறிகளாகக் காட்டும் போலி வரலாற்றைக் கட்டமைக்க முனைந்தார்கள். 1857 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனியர்களுக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தில் இந்து என்ற மத அடையாளத்தைத் தாங்கியவர்களும் இசுலாமியர்களும் இணைந்தே நின்றனர் என்பதால், இந்து மற்றும் இசுலாம் என்ற அடிப்படையில் மக்களைப் பிரித்தாளும் (divide and rule) சூழ்ச்சியை பிரித்தானியக் காலனியர்கள் மேற்கொண்டனர். அவ்வாறாக, இந்து மகாசபையையும் முஸ்லிம் லீக்கையும் பிரித்தானியர்களே வளர்த்துவிட்டார்கள். இந்த முரண்பாடு முனைப்புப் பெறும் வகையில் பிரித்தானியரின் சூழ்ச்சியில் வரலாறுகள் திரிபுடன் எழுதப்பட்டன.

உண்மையில் எந்த முஸ்லீம் மன்னனும் அன்றைய காலத்தில் மத நோக்கங்களிற்காகப் படையெடுக்கவில்லை. பெருஞ்செல்வங்களைக் கொள்ளையடிக்கவும், தமது அரசை விரிவாக்கவும், அதற்காக படைகளைப் பெருக்கிக் கொள்ளவுமே இந்தியத் துணைக் கண்டத்திற்குள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் வந்தனர். கஜனி முகமதுவில் தொடங்கி மொகலாயர்கள், நவாப்கள் என அனைவரினது நோக்கமும் அதுவாகவே இருந்தது. பெருஞ்செல்வங்களின் களஞ்சியமாகக் கோயில்கள் இருந்தமையால் கொள்ளையடிக்கும் நோக்கில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன என்பது மறுக்க முடியாதே வரலேறே. முஸ்லீம் மன்னர்களின் படைகளில் இந்துக்கள் வீரர்களாக இருந்துள்ளனர். இந்து என்று இன்று அடையாளப்படும் மன்னர்களின் படைகளில் முஸ்லீம் படைவீரர்கள் இருந்துள்ளனர். முஸ்லீம் படைத்தளபதிகள் இரண்டகம் செய்த போது இந்துவாக இன்று நாம் அடையாளப்படுத்தும் படைத்தளபதிகளை தமது நம்பிக்கைக்குரியவர்களாக முஸ்லீம் மன்னர்கள் வைத்திருந்த வரலாறு உண்டு. எனவே, மத நோக்கங்களிற்காக நடைபெற்ற மோதல் போலவும், இந்திய வரலாறு என்பதே இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான தொடர்ச்சியான போரின் வரலாறே என்பது போலவும் வரலாற்றைப் புரட்டாக எழுதுவதற்கு இந்துத்துவப் பொய்யர்களுக்கு உறுதுணையாக இருந்தது பிரித்தானியரே என இந்தியாவின் மூத்த வரலாற்றாய்வாளர்களான ரோமிலா தாபர், ஆர்.எஸ். சர்மா, இர்பான் கபீப் ஆகியோர் அடித்துக் கூறுகின்றனர். பெரிதாக வளர்ச்சியடையாத வட இந்தியப் பகுதிகளானவை மொகலாயர்களின் ஆட்சிக் காலத்திலேதான் நாகரிக மேம்பாடு கொண்டது என்றும் ஒரு படிமேற்சென்று உறுதிபடக் கூறுகிறார் ரோமிலா தாபர்.

எனவே, பாபர் என்ற வெற்றிச் சின்னமானது வரலாற்றில் இல்லாத இராமர் கோயிலின் மேல் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுவது அப்பட்டமான பொய். ஆனால், ஏதோவொரு வழிபாட்டிடத்தையோ அல்லது வெற்றிகொள்ளப்பட்ட மன்னரின் இல்லத்தையோ இடித்தழித்தே அதன் மேல் பாபர் நினைவுச் சின்னம் கட்டப்பட்டிருக்கின்றமையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழரிற்கு எதிரான ஆரிய இன மேலாதிக்கத்திற்காகப் புனையப்பட்ட இராமாயணம் என்ற இதிகாசத்தின் கதை மாந்தனான இராமன் இப்போது எவ்வாறு இந்துத்துவவாதிகளிற்குப் பயன்படுகிறான் என்பது குறித்துத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தெளிவடைய வேண்டும்.

கம்பன் கழகங்களை இடித்தழித்து சிலம்பு மன்றுகளை நிறுவ வேண்டும்

தமிழர்களை முதன்மை எதிரியாக்கி தமிழர்கள் மீது ஆரிய இன மேலாதிக்கம் வெற்றிபெறுவதாகப் புனையப்பட்ட இராமாயண இதிகாசமானது இன்று தமது எதிரிகளாக இந்துத்துவம் கட்டமைக்க முயலும் இஸ்லாமியர்களிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது போல தோற்றமளித்தாலும், இராமாயண இதிகாசமானது அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராகப் புனையப்பட்டதென்பதைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. கம்பனின் சொற்சுவையைக் காட்டி மொழிப்பற்று மிகுந்திருந்த தமிழர்களிடத்தில் ஆரிய வைதீக மேலாதிக்கத்தைத் திணித்துவிடும் ஆரிய வைதீகச் சூழ்ச்சிகளுக்குள் அகப்பட்ட தமிழர்கள் அதிலிருந்து வெளிவருவதற்கான அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அடிப்படையில் தமிழினவழிப்பையும் தமிழர்கள் மீதான ஆரிய மேலாதிக்கத்தையும் தமிழரே மேடைகளில் போற்றிப்பாடும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கம்பன் கழகங்கள் இழுத்துமூடப்பட்டு சிலப்பதிகாரக் கழகங்கள் திறந்துவைக்கப்பட வேண்டும். பட்டிமண்டபங்களும், கவிதை அரங்குகளும் தமிழர் காவியங்களைப் பேசுபொருளாக்க வேண்டும். ஆரிய அநாகரிகளின் சிந்தனைக்கு நேர்முரணான கருத்தியல்களைக் கொண்ட சிலப்பதிகாரம் போன்ற தமிழ்த்தேசியக் காப்பியங்களின் முற்போக்கான கூறுகளையே இலக்கியப் பரப்பின் உள்ளீடுகளாக உலவவிட வேண்டும். விடுதலைப் புலிகளால் தமிழீழத்தில் கம்பன் கழகம் தடைசெய்யப்பட்டு கம்பன் கழக ஜெயராஜ் என்ற இந்துத்துவ அடிவருடி தமிழீழ மண்ணை விட்டு விரட்டப்பட்டிருந்தான். அவனை ஏற்றுக்கொண்டு ஆரிய வேத வைதீகத்தை வளர்ப்பதில் பங்கெடுப்பவர்கள் பலர் தம்மை நல்ல தமிழர்களாகவும் காட்டிக்கொள்ளும் பாசாங்கைச் செய்து வருகிறார்கள். அறியாமையினால் இது நிகழ்ந்திருப்பின் தம்மை மாற்றிக்கொண்டு கம்பன் கழகத்தைத் தமிழ் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் வேலைகளில் அப்படியானவர்கள் ஈடுபட்டுத் தமது கறையைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

இராமர் கோயில் திறப்பிற்குச் சிலாகித்த ஈழத்தவர்களில் பலர் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருப்பதையுற்று நாம் சொல்லிக்கொள்ள என்ன இருக்கின்றது? அதைத் தான் “கற்றோராயினும் அறிவோரல்லவே; கட்டியிருக்கும் கோவணத்தையும் அறுத்தெறியத் துடிக்கும் ஈழத்தின் அறிவுமரபு” என இந்தப் பத்தியின் தலைப்பாகவே இட்டுள்ளோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் தலைமகனாகக் கருதப்படும் சிவகுமார் அவர்கள் இராமர்கோயில் திறக்கப்பட்டதைக் குறித்து முகநூலில் சிலாகித்திருக்கிறார். கம்பவாரிதி போன்ற அறிவியலுக்கு எட்டாத தொலைவில் வாழும் முட்டாள்களிற்குச் சற்றும் சளைக்காதவாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் அடையாளம் போல தன்னை முன்னிலைப்படுத்தும் சிவகுமார் சிலாகிப்பது என்பது தமிழரின் அறிவுமரபினைச் சீண்டுவதாகவே உள்ளது.

கல்லில் “இராமா” என்று எழுதிக் கடலில் போட்டால் அந்தக் கல் மிதக்கும் என்று இராமாயணத்திற்கு வலுச்சேர்க்க போலி அறிவியல் (Pseudo Science) விளக்கம் கொடுக்கும் முனைப்பில் ஏதேனும் ஆய்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் வியப்பில்லைப் போலும். வட இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் அறிவியற்றுறைகளானவை எவ்வாறு கற்காலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன என்பதை அடுத்த கிழமைப் பத்தியில் தெளிவாகப் பார்ப்போம். அவ்வாறே, ஈழத்திலும் கற்காலத்திற்குச் செல்லத் துடிக்கும் படிப்பாளிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்போம்.

இறுதியாக, ஒரு எச்சரிக்கையை இந்தப் பத்தியில் எடுத்துக்காட்டுகிறோம். அதாவது, தமிழர்களின் பண்பாட்டுத் தளத்தினை வன்கவர்வதன் மூலம், தம் மீதான ஆரிய வேத வைதீக மிலேச்சர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மனப்போக்கற்றவர்களாகத் தமிழர்களை மாற்றி, நலிவடைந்திருக்கும் தமிழர்களின் நிலங்களையும் வன்கவரத் துடிக்கும் அகன்ற பாரத இந்துத்துவ அரசியல் குறித்து இன்னமும் தமிழர்கள் நாம் விழிப்படையவில்லை என்றால் ந‌மக்கான சவக்குழியை நாமே தோண்டி நம்மை நாமே வரலாற்றில் புதைத்தவர்களாகி விடுவோம்.

-முத்துச்செழியன்-

2024-02-05