ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டெழவே எழாதா? அவ்வளவுதானா? எல்லாமே முடிந்த கதையா? -முத்துச்செழியன்-

ஈழத்தில் இளையோர்களிடத்தில் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது; பாலியல் குற்றங்கள் அன்றாடச் செய்தியாகிவிட்டன‌; பெண்கள் போர்த்துமூடாமல் திரிகிறார்கள்; தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் ஈழத்தவர்கள் எதற்கும் தகுதியற்றவர்கள்; வெளிநாட்டிற்குப் புலம்பெயர்வதைத் தவிர விடுதலைக் கனவோ அல்லது வெறெந்த உருப்படியான நினைவுகளோ ஈழத்தவர்களிடம் இப்போது இல்லை என்றவாறு ஈழத்தமிழர்களைப் பற்றி குறைமதிப்பீடுகளைக் கொண்டோர் அல்லது ஈழத்தமிழர்கள் மீது வரலாற்றுவழி வன்மத்தைத் தமது கருக்களிற் காவுவோர் சொல்லிக்கொள்வதன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டமென்பது முடிந்தகதை என்று கூறிவருகிறார்கள்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இழந்த இழப்புகள், விடுதலைக்குக் கொடுத்த விலைகள், பட்ட துன்பங்கள், மீளநினைவிற்கொள்ள விரும்பாத அதிர்ச்சிகள், பல பத்தாண்டுகாலப் பின்னடைவுகள் என்பன ஈழவிடுதலைப் போராட்டத்தினை இன்னொருமுறை முன்னெடுத்துச் செல்வது குறித்து நம்பிக்கையற்ற தன்மைகளை ஈழத்தவர்களிடம் ஆழமாக ஏற்படுத்திவிட்டமையால் ஈழவிடுதலைப் போராட்டமானது இனி மீண்டெழ வாய்ப்பில்லை என்று தளுதளுத்த குரலில் கூறிவிட்டு மாவீரர்நாளன்றும், இனப்படுகொலை நினைவுநாளன்றும் விளக்கேற்றிவிட்டுக் கடந்து செல்பவர்களின் எண்ணிக்கையானது ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையாகிவிட்டது.

ஒடுக்குமுறையரசின் ஒத்தோடிகளாக இருந்து மக்களால் புறந்தள்ளப்பட்டவர்களோ ஒன்றுபட்ட இலங்கைத்தீவில் வாழ வகுப்பெடுப்பது என்ற பெயரில் ஒடுக்குமுறைக்குள் தமிழ் மக்களை வாழப்பழக்க வழிவகை தேடுகிறார்கள். தாம் வந்த வழி மறந்து ஈழவிடுதலைப் போராட்டத்தைப் புலிகளின் பாசிச முன்னெடுப்பென்று கூறுவதன் மூலம் தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் இவர்களோ ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழீழ முதலாளிகளின் தூண்டிவிடலே தவிர வேறெதுவுமில்லை என்று கூறி மார்க்சிய அறிவியல், பொருளியல், அரசியல் என அத்தனையையும் சுவடு தெரியாமல் புதைகுழியிற் போட்டுப் புதைத்துவிட்டு, முகத்தில் முளைக்கும் மயிரை மட்டும் கார்ல் மார்க்ஸ் போல வைத்திருக்கிறார்கள். இந்த அரச ஒத்தோடி அரம்பர்களின் பார்வையில் ஈழவிடுதலைப் போராட்டமென்பது செத்த கதையே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அறவழியிலேனும் முன்செல்லவிடாது முட்டுக்கட்டை போடுவது முதியவர் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியைத் தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் சுமந்திரனுமே எனவும் இவர்கள் மண்டையைப் போட்டாலோ அல்லது இவர்களின் மண்டையில் போட்டாலோ மட்டுமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்று புலம்பெயர்ந்த குழுக்களால்  மூளைச்சலவைக்கு ஆளான அரசியற் புரிதலற்ற இளையோர்களைப் பொறுத்த வரையில் தமிழரசுக் கட்சியை அதன் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்காவிட்டால் ஈழவிடுதலைப் போராட்டமானது முன்னகர்வதற்கு வாய்ப்பில்லை.

தமிழரசுக் கட்சியைப் பிளவுபடுத்தி அதனை வலுக்குன்றச் செய்யாமல் விட்டிருந்தால் சம்பந்தனின் 65 ஆண்டுகால அரசியற் பட்டறிவையும் சுமந்திரனின் சட்டப் புலமையையும் பயன்படுத்தி சுடுகலனால் கூட வென்றெடுக்க முடியாத பலவற்றைப் பெற்றெடுத்திருக்க முடியுமென்று நம்பும் மூளை வளர்ச்சி குறைந்தோரும், வரலாற்றின் வளர்ச்சிப் போக்கினைப் புரிந்திட இயலாதோரும், பிற்போக்காக வாழ்ந்துமடிவதைத் தவிர வெறெந்த முனைப்புகளிலும் நம்பிக்கைகொள்ள விரும்பாதோரும், எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின்பு தமிழரசுக் கட்சியின் பக்கத்தில் நின்று வாக்குகளைத் தீட்டுவதைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் தீட்டாகக் கொள்வோரும் என பல பக்கத்தினரும் ஈழ விடுதலைப் போராட்டமானது முடிந்த கதையென்பதில் முடிவாக இருக்கின்றார்கள்.

மேலே குறிப்பிட்ட வகையினர் அனைவரோடும் ஒப்பிடுகையில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் கிஞ்சித்தும் நம்பிக்கையற்ற தரப்பு ஒன்று உள்ளது. வரலாற்றின் முரண்நகையாக, அவர்களே ஈழப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அலுவல்களில் தாமே ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத்தின் ஒற்றை நம்பிக்கை தாமே எனவும் வாயளக்கும் பொய்யர்களே அந்தத் தரப்பு. இந்த வீணர்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டமானது முன்னகரும் என்பதில் துளியேனும் நம்பிக்கையோ அல்லது முன்னகர வேண்டுமென்பதில் அக்கறையோ இல்லை. ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தாம் முன்னெடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்வதன் மூலம் தமது பிழைப்பிற்கான இருப்பைத் தக்கவைக்கும் வேடதாரிகளே இவர்கள். விடுதலைக்காகத் துணிந்தெழும் இளநெஞ்சுகளைத் தமது முகவராக்கித் திசைதிருப்பி, விடுதலை முனைப்பை முளையில் கிள்ளும் வஞ்சகர்கள் இவர்களே. ஆனால், மக்களிடத்தில் இன்னமும் முழுமையாக அம்பலப்படாமலே இவர்கள் இருக்கிறார்கள்.

தொகுத்துக் கூறின், எண்ணங்களாலும், நோக்குநிலைகளாலும், நிலைப்பாடுகளாலும் வேறுபட்டு நிற்கும் வெவ்வேறு தரப்பினரும் தாம் வெளிப்படையாகக் கூறாவிடினும் ஈழவிடுதலைப் போராட்டமானது முன்னகரும் என்பதில் நம்பிக்கையற்றிருப்பதில் ஒன்றாகவே நிற்கின்றனர். தெளிந்த ஓடை நீரும் தேங்கி விட்டால் சாக்கடையாகிவிடும். அதனால் காறி உமிழ்ந்துவிட்டுத்தான் அதனைக் கடந்து செல்வார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினது இற்றை நிலையும் அவ்வாறுதான் என்று நொந்துகொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்பதைப் போலவே வரலாற்றின் பாய்ச்சலும் முன்னோக்கியே செல்லும் என்று வரலாறு கற்பித்துச் செல்வதைக் கணக்கிற்கொள்ளாமல் எவ்வளவுகாலந்தான் ஒதுங்கியிருக்க வரலாறு இசைவு கொடுக்கும் என்பது குறித்து மனங்கொள்ள வேண்டிய வேளையிது.

ஈழவிடுதலைப் போராட்டமானது முன்னெடுக்கப்படாமல் முடங்கிக் கிடப்பதற்கான காரணங்களை ஆழமாக ஆய்விற்குட்படுத்தாமல், குற்றஞ்சாட்டுவதையும், கரித்துக்கொட்டுவதையும், எள்ளிநகையாடுவதையும், நீலிக்கண்ணீர் வடிப்பதையும், கிரகமாற்றத்திற்குக் காத்துக் கிடப்பதையும் வழக்காகக்கொள்ளும் வேடிக்கை மாந்தர்களாக இராது, உலக வரலாறு கற்பித்துச் சென்றவற்றில் எமக்குப் பொருந்துவனவற்றைத் தேடியெடுத்துப் பொருத்திக்கொண்டு, விடுதலையறத்தில் பெருநம்பிக்கைகொண்டு, முறையாக ஆய்ந்தறிந்து விடுதலைக்கான வழித்தடத்தைச் செப்பனிட்டு விரைந்து பயணிக்கும் இயங்காற்றலை ஈழவிடுதலைப் போராட்ட வரலாறு பெற்றியங்கும் என்ற வரலாற்றின் திசைவழி மனங்கொள்ளச் செய்ய, பேச வேண்டிய வரலாற்றுச் செய்திகளை எடுத்தாள்வதை இப்பத்தி நோக்காகக் கொண்டுள்ளது.

போரின் பிந்தைய பாதிப்புகளைப் பற்றிய உலக வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் ஈழத்தமிழர்களை விடுதலை வேண்டிப் பயணிக்க இயலாதவர்களாகத் துரித்துக் காட்டுதல் பற்றியது……

உலகின் இரு பெரிய வல்லாண்மையாளர்களான பிரான்சு, அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளின் வன்கவர்விற்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீரத்துடன் போராடி விடுதலையை வென்றெடுத்த வியட்னாமியர்கள் விடுதலைக்குக் கொடுத்த விலையை நாம் மறந்துவிடக் கூடாது. 170 கிலோ டைஒக்சினை உள்ளடக்கிய 50 மில்லியன் லீட்டர் “Agent Orange” என்ற வேதிச் சேர்வையானது வியட்னாமெங்கும் விசிறப்பட்டது. புல், செடி, கொடி முதல் அத்தனை உயிரினங்களையும் அழிக்கக் கூடிய இந்தக் கொடிய வேதிப் பொருளை வியட்னாமியர்கள் மீது வீசிறிப் பல்லாயிரக் கணக்கில் கொன்றதோடு மட்டுமல்லாமல், பயிர்கள், மரம், செடி, கொடி என அனைத்தையும் நஞ்சாக்கியதோடு, தலைமுறைக்கும் பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய நிலைக்குப் பல்லாயிரக்கணக்கான வியட்னாமியர்களைத் தள்ளியது கொடிய அமெரிக்கா. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எண்ணாயிரத்திற்கும் கூடுதலான வியட்னாமியப் பெண்கள் பாலியல் பதுமைகளாக “War Brides” என்ற பெயரில் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். வியட்னாமில் 26,000 குழந்தைகள் அமெரிக்கப் பயங்கரவாத இராணவத்தினர்கள் மூலம் வியட்னாமியப் பெண்களிற்குப் பிறந்தனர். 1 மில்லியன் வியட்னாமியப் பெண்கள் கைம்பெண்களாகினர். 5 இலட்சம் பேர் போதைப்பொருட்களுக்கு முழு அடிமைகளாகவும், 5 இலட்சம் வியட்னாமியப் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாகவும் ஆகினர். விடுதலைபெற்ற வியட்னாமில் வாழவிரும்பாமல் இலட்சக் கணக்கான மேற்குலக அடிவருடிகளாக இருந்த வியட்னாமியர்கள் (பெரும்பாலும் தென்வியட்னாம்) விட்டோடிகளாக மேற்குலக நாடுகளிற்குச் சென்று வியட்னாமிய விடுதலைக்குக் களங்கம் கற்பிக்கும் பரப்புரைகளைச் செய்தனர். உலகில் ஒடுக்கப்பட்ட தேசங்களிற்கெல்லாம் விடுதலை மீது நம்பிக்கைகொள்ளச் செய்து உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த விடுதலைபெற்ற வியட்னாமில் ஏற்பட்ட போரின் பிந்தைய நிலையே இவ்வாறாகத்தான் இருந்தது.

எனவே, எம்மைப்போல விடுதலைக்காகப் போராடி இறுதிவெற்றியைப் பெறமுடியாமல் உலக வல்லாண்மையாளர்களின் முழு ஒத்துழைப்போடு தோற்கடிக்கப்பட்டவர்களின் போரின் பிந்தைய நிலையானது எவ்வாறிருந்தது என்பதையறிய பயாவ்ரா விடுதலைப் போராட்டம் முதற்கொண்டு பல எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் உள்ளன. தமிழீழ இனப்படுகொலையில் முதன்மைப் பங்காற்றிய இந்தியா என்ற ஒடுக்கும் சிறைக்குள் தளைப்பட்டிருக்க விரும்பாது விடுதலை வேண்டிப் போராடிய சீக்கியர்களின் காலிஸ்தான் விடுதலைப் போராட்டமும், காசுமீரியர்களின் காசுமீர் விடுதலைப் போராட்டமும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட போரின் பிந்தைய பாதிப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

காலிஸ்தான் விடுதலைப் போராட்டமானது ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலிஸ்தான் விடுதலை இயக்கமானது மக்களிடத்தில் செல்வாக்கு இழந்துபோனதுடன், சீக்கிய மக்களிடமிருந்து அயன்மைப்பட்டது. காலிஸ்தான் தாயகமெங்கிலும் போதைப்பொருட் பயன்பாடும், பாலியல் தொழிலும் தலைவிரித்தாடியது. போதைக்கு அடிமையாக இளையோர்கள் ஒழுக்கச் சீர்கேடுகளில் இறங்கினர். ஒரு குற்றச்சமூகம் போலவே அந்த மக்கள் பார்க்கப்பட்டனர். இனி அந்த மக்கள் விடுதலைக்காகப் போராட வாய்ப்பேயில்லை என்று கருதப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த நிலையில் காலிஸ்தான் விடுதலை முழக்கங்கள் வானதிர்கின்றன; மேற்குலகில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தூங்கவிடாமற் செய்கின்றன. காலிஸ்தான் விடுதலைப் போராட்டமானது வெவ்வேறு வடிவங்கொண்டு மீண்டெழ முனைகின்றது.

எம்மைப் போலவே இந்திய நரபலிப் படையின் வன்புணர்வுகளாலும் காணமலாக்கப்படுதல்களாலும் மிகக் கொடுரமாகப் பாதிக்கப்பட்ட காசுமீரிய மக்களும் மறவழிப் போராட்டத்தில் எம்மைப்போலவே தோல்விக்கொப்பான பின்னடைவுகளை எதிர்கொண்டமையுடன் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளல் வேண்டும். சமூகநீதிக்கான அமைச்சகம் வெளியிட்ட ஆய்வின் புள்ளிவிபரத் தகவல்களின் படி 5,34,000 ஆண்களும் 8,000 பெண்களும் ஓப்பியம் என்று சொல்லப்படும் செறிவான போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்; 1,08,000 ஆண்களும் 36,000 பெண்களும் கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்; 1,60,000 ஆண்களும் 8,000 பெண்களும் போதை மாத்திரைகளிற்கு அடிமையாகியுள்ளனர். இப்படியாக போதைப்பொருட்களிற்கு அடிமையாவதில் காலிஸ்தானைத் தாயகமாகக் கொண்ட சீக்கியர்களையும் விஞ்சிய துன்பத்தில் காசுமீரிய மக்கள் உழல்கின்றனர். போதைப்பொருட்களினால் விளைந்த சமூகக்கேடாகப் பாலியல் குற்றங்களும் காசுமீரில் அதிகரித்துள்ளன. ஏறத்தாழ 1 மில்லியன் காசுமீரியர்கள் போதைக்கு அடிமையாகியுள்ள நிலையில் காசுமீரின் சிறப்பு அதிகாரங்களையும் பறித்து காசுமீரை முழு அளவில் வன்கவரத் துடிக்கும் இந்தியக் கொடுங்கோலர்களால் காசுமீர் மீண்டெழும் என்ற வரலாற்றுப்போக்கை உணரமுடியவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழராகிய நாம் உலகில் வெற்றிபெற்ற விடுதலைப் போராட்டங்கள் எதிர்கொண்ட போரின் பிந்தைய பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது இன்னமும் எமது சமூக வாழ்வானது மீளமுடியாதளவிற்குச் சீர்கெட்டுப் போய்விட்டதென்று எண்ண இடமில்லை.

அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும் என்ற மனநிலையில் ஈழத்தமிழர்கள் இருந்தமையால் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் விடுதலை பற்றி எண்ணங்கொள்ளாது மக்கள் வேறு திசைவழி பயணிக்க விரும்புகின்றார்கள் என்று கூறுபவர்களுக்கு………………….

தமிழீழ மக்கள் தமது விடுதலைப் போராட்டத்திற்கு மறவழியில் புரட்சிகரமாகத் தலைமைதாங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போலவே தமது ஆற்றல்வளங்களிற்கும் மேற்சென்று மிக மிகக் கூடுதலாகத் தம்மை ஒறுத்துப் போராடியிருக்கின்றார்கள். உலகில் எந்தவொரு விடுதலைப் போராட்டத் தலைவரும் கண்டிராதளவிற்கு தலைவர் பிரபாகரன் அவர்களை இறைக்கு ஒப்பாக ஏற்றித் தமது மனங்களில் தமிழீழ மக்களில் பெரும்பான்மையானோர் வைத்திருந்தனர். தற்கொடை ஈகியர்களை விதைத்தும், விளைவித்துக்கொண்டும் இருந்தனர். விடுதலையே வாழ்வென்றாகிப் போனபின் உடைமைகள் குறித்துப் பெரிதும் கவலைகொள்ளாமல் விடுதலை மீது நம்பிக்கைகொண்டு இயன்றவரை போராட்ட இயக்கத்தின் வழித்தடம் தொடர்ந்தனர். மறவழிப் போராட்டத்தின் எண்ணற்ற வெற்றிகளுக்கு உரித்துடைய தமிழீழ மக்கள், ஈகங்களை மட்டுமே நம்பி விடுதலை வேண்டிப் போராடிய தமிழீழ மக்கள், ஏன் இன்று விடுதலைக்காக அணிதிரளாமல் ஒதுங்கிக் கிடக்கின்றார்கள் என்பது பற்றி ஆய்ந்தறியாமல் தமிழீழ மக்களைக் குற்றஞ் சொல்வது அறமோ அல்லது முறையான அரசிய‌ற் பார்வையோ அல்ல என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழீழ மக்கள் விடுதலைக்காக அணிதிரளாமல் அவர்களை முடமாக்கிய 2009 மே மாதத்தின் பிந்தைய சூழல் எத்தகையது என்பதைப் பின்வருமாறு சுருங்கக் கூறலாம்;

தமிழினவழிப்பின் முதன்மைப் பங்காளர்களான உலக வல்லாண்மையாளர்கள் பற்றி தமிழீழ மக்களிடம் விழிப்பினை ஏற்படுத்தாமல் தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்த குற்றவாளிகளிடமே தீர்வை எதிர்பார்த்துக் காத்திருக்க வைத்தவர்கள் யார் என்பதை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்தது இனவழிப்பு என்ற நிலையிலிருந்து அதனை போர்க்குற்றங்கள் என்றும், அதுவும் போரின் இறுதி நாட்களில் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் என்றும், மாந்தை உரிமை மீறல்கள் என்றும், அதுவும் போரின் இறுதி நாட்களில் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றும், அதனிலும் கீழிறங்கி அது ஒரு வகுப்புவாத வன்முறை என்றும் நீர்த்துப்போகச் செய்யத் துணைநின்ற ஐ.நாவின் மாந்த உரிமைகள் போர்வையிலான அரசியலில் தமிழீழ மக்களை நம்பிக்கைகொள்ளச் செய்து தீரத்துடன் விடுதலைக்காகப் போராடிய மக்களை வெளியாரிற்காகக் காத்திருக்கும் கேடான நிலைக்குப் பழக்கப்படுத்தியவர்கள் யார் என்று உசாவினால் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் வல்லாண்மை நாடுகளின் முகவர்களாகச் செயற்படும் அமைப்புகளைச் சார்ந்தவர்களே அவர்கள் என்ற பதிலுக்கு வந்தடையலாம்.

விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் பெரும் பின்னடைவை எதிர்கொண்ட பின்பாக போரின் பிந்தைய உடனடி அவலச் சூழலில் செய்வதறியாது ஆற்றொணாத் துன்பத்தில் உழன்று நின்ற மக்களிற்குத் தேர்தல் அரசியலைத் தவிர வேறெதிலும் நம்பிக்கை ஏற்படாதவாறு கருத்துகளைத் திணித்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகளினதும் அவர்களின் தொங்கு தசையாகச் செயற்பட்ட ஊடகங்களினதும் கேடான செயல்களைப் பற்றிக் கேள்விக்குட்படுத்தாமல் விடுதலைக்காகப் போராடிய மக்களைக் குறைசொல்லித் தமது அரிப்புகளைப் பலர் தீர்த்துக்கொள்கின்றார்கள்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் (ஆகக் குறைந்ததாக மாகாணங்களிற்கு அதிகாரப் பரவலாக்கம் கூட இல்லாத நாட்டினது பாராளுமன்றில்) ஆகக் கூடுதலாக வெறும் 15 பேர் உட்கார்ந்துகொண்டு தூண்களின் பின்னால் தூங்குவதும், கிண்டல் கேலிக்குள்ளாகுவதும் என்பனவற்றைத் தாண்டி என்ன செய்துவிட முடியுமென்று மக்களிடம் கூறாமல் தேர்தல் அரசியலில் மக்களை நம்பிக்கைகொள்ளச் செய்த அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும் குற்றத்தரப்பினரே தவிர மக்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தேர்தல் கூட்டணிக் கட்சியின் செயல்களை மதிப்பீடு செய்து அதனது குறைகளைக் கோடிட்டுக் காட்டுவதே தமிழ்த் தேசியம் என்றளவில் தமிழ்த்தேசியக் கருத்தியலை விடுதலை நீக்கம் செய்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற தமது குடும்பக் கட்சியைக் காப்பாற்றுவதற்கான கருத்தியற் துருப்பாகப் பயன்படுத்திய பொன்னம்பலம் கயேந்திரகுமார் தான் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவரே தவிர மக்கள் அல்ல. உண்மையில், தமது வாக்குப் பொறுக்கும் தேர்தல் அரசியல் இருப்பிற்காகவும், நலன்கட்காகவும் பொதுவில் தமிழ் மக்களையும், குறிப்பாகத் துடிப்புள்ள தமிழிளையோரையும் குழுப்பிரிப்பதைத் தாண்டி இந்த வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தமிழ்த் தேசியத்தின் பெயரால் எதுவும் செய்யவில்லை.

விடுதலை அரசியலில் புரட்சிகரமாகப் பயணிக்கும் ஆற்றலோ, ஆளுமையோ, போர்க்குணமோ இல்லாமல் தேர்தலில் வாக்குப் பொறுக்கும் அரசியற் கட்சியாக மட்டுமே இந்தக் கட்சிகளால் பயணிக்க இயலும் என்பதை நாம் புரிந்துகொண்டாலும், தேர்தல் அரசியற் கட்சியாக இருந்துகொண்டு வெறுமனே வாக்குப் பொறுக்கும் அரசியலோடு தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பொருண்மியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மொழி வளர்ச்சி, உற்பத்தியாற்றல்களைப் பெருக்கவல்ல அபிவிருத்தி, தமிழர்கள் தமது சந்தையைக் கைக்கொள்ளும் ஆற்றல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வூட்டி வேலைத்திட்டங்களை தேர்தல் அரசியற் கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை நகர்த்த இயலும் அல்லது அது குறித்து மக்களை எண்ணியுணரச் செய்ய‌ இயலும். ஆனால், தமிழ் மக்களைக் குழுப்பிரித்தமையைத் தாண்டி வெறெந்தப் பெறுதியும் தமிழ்த்தேசியத்தின் பெயரால் தமிழ்த்தேசியத்தை மடைமாற்றும் இந்த வாக்குப் பொறுக்கும் தேர்தல் அரசியற் கட்சிகளால் தமிழர்கட்குக் கிடைக்கவில்லை.

விக்கினேசுவரன், சுமந்திரன் மற்றும் பொன்னம்பலம் கயேந்திரகுமார் போன்ற‌ கொழும்பு 7 இன் மேட்டுக்குடிகளைக் கட்சிகளின் தலைவர்களாக்கி விட்டு அவர்களிற்கு வாக்குப் பொறுக்கும் மோட்டுக் குடிகளாகவே இவர்களை நம்பும் எம்மவர்கள் ஆகிப் போகின்றனர். “ஆங்கிலமும் சட்டமும் நன்கு தெரிந்தவர்களைத் தலைவர்களாக்கினால், அவர்கள் ஒருபோதும் எம்மக்களிற்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்” என்ற பாமரத்தனமான பட்டெறிவுக் கருத்தானது அரசியற் கருத்துநிலை கொண்டு விளக்கப்படக் கூடியது தான். இந்த கொழும்பின் மேட்டுக்குடி மும்மூர்த்திகள் பல வேடங்களைப் பூண்டு அரசியல் செய்தாலும் அவர்களின் வர்க்கப் பண்பென்பது ஒருபோதும் எமது மண்ணின் அரசியலுடன் ஒன்றித்துப்போகக் கூடியதல்ல. இந்த மும்மூர்த்திகள் தெரிந்தும் தெரியாமலும் போராடப் புறப்பட்ட போராளிகள் பற்றிப் பொதுவெளியில் தெரிவித்த கருத்துகளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக தனது பதவிக் காலத்தில் சிங்களத்துடன் சல்லாபித்துவிட்டு, மீதிக் காலத்தில் இந்துத்துவப் பாசிச அரசியலின் ஈழப் பேராளராகப் பணியாற்றும் பிரேமானந்தாவின் சீடனான விக்கினேசுவரன் என்பவர் ஈழத்தின் அரசியற் பரப்பில் சகிக்க முடியாத நாற்றமாகவே இருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. இதே விக்கினேசுவரனை வைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்துவிடலாம் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்த பொன்னம்பலம் கயேந்திரகுமார் அவர்கள் விக்கினேசுவரனைத் தமிழரின் தலைவர் என பதாகை தூக்கியதையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

தமிழ்த்தேசியத்தின் பெயரால் வாக்குப் பொறுக்கும் கட்சி நடத்தித் தலைமை வகிக்கும் இந்தக் கொழும்பின் மேட்டுக்குடிப் பேராளர்கள் மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. திரைமறைவில் தமது தேவைகளை நிறைவேற்றப் பின்கதவால் அதிகாரங்களுடன் பேரம்பேசிவிட்டு தமிழ்மக்களிடம் வந்து போராளி வேடமிடும் செல்வராசா கயேந்திரன் மற்றும் விடுதலை இயக்கங்களை மதித்தும், ஏற்றியும் பேசுவதோடு தன்னுடைய இளமைக் காலத்தில் அறப்போராட்டக் களங்களில் பங்கேற்றுச் சிறைசென்றதாகக் கூறிச் சிலாகித்த மாவை சேனாதிராசா அவர்களும், மேலும் அன்று மறவழியில் போராட வந்து பின்னர் இன்று தூதரகங்களின் முகவர்களாகிவிட்ட அரசியல்வாதிகள் என்று தமிழ்மக்களிடத்தில் உலவுகின்ற பலரும் மக்களின் கேள்விகளுக்குப் பதிலிறுக்க வேண்டியவர்களே.

தனது இளமைக் காலத்தில் அறப்போராட்டங்களில் பங்கேற்று கொடுஞ்சிறைப்பட நேர்ந்த காலத்தில் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பற்றித் தேடிப் படித்ததாக ஒரு நேர்காணலில் கூறிய மாவை சேனாதிராசா அவர்கள் அதற்கு நேரெதிரே செயற்படும் அளவிற்குத் தன்னைத் தரந்தாழ்த்தியுள்ளார் என்றுதான் குறிப்பிட வேண்டும். தமிழரசுக் கட்சிக்குள் இல்லாத ஒரேயொரு நல்ல விடயமென்னவெனில் “வாரிசு அரசியல்” என்றுதான் சொல்ல இயலும். அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல தனது மகனைக் கட்சிக்குள் முன்னிலைப்படுத்த மாவை சேனாதிராசா எடுத்த முனைப்புகளானவை அவரை அறிந்த பலரை முகஞ்சுழிக்கச் செய்துள்ளன.

ஐரிஸ் குடியரசு இராணுவத்தின் (IRA) அரசியல் பிரிவான சின்ஃபெயினைச் (Sinn Fein) சேர்ந்த அடம்ஸ் என்பவர் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்பும் நாடாளுமன்றம் விடுதலைக்கான வழியல்ல என்பதை உணர்த்துவதற்காக நாடாளுமன்றம் செல்வதைப் புறக்கணித்துத் தூக்கிப்போட்டார். அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தைப் பற்றித் தேடிப்படித்ததாகக் கூறும் மாவை மனதில் இவர்கள் யாரும் நிலைத்திருக்கவில்லை. மாறாக, ஜி.ஜி.பொன்னம்பலம் தான் இவரின் மனதில் நிலைத்திருந்து இவரை வழிகாட்டுகிறார் என்பதாகவே இவரின் அண்மைய செயற்பாடுகள் காட்டுகின்றன.

வியட்னாமின் பேராளராக அமைதிப் பேச்சுகளில் பங்கெடுத்த Leedak Tho விற்கு அமைதிக்கான நோபல் விருது கொடுக்கப்பட்ட போது, அதை ஏற்க மறுத்ததை வரலாற்றில் பார்க்கின்றோம். ஆனால், தமிழ்த்தேசியத்தின் பெயரால் வாக்குப் பொறுக்கும் தமிழ் அரசியல்வாதிகளோ வெளிநாட்டிலிருந்து தூதுவர்கள் சிறிலங்காவுடனான தமது உறவுகளை மேலும் நெருக்கமடையச் செய்வதற்காக இங்கு வரும்போது, தேடிப் போய் குனிந்து வளைந்து பல்லிளித்து ஒரு புகைப்படத்தை எடுக்கத் துடிக்கின்றார்கள்.

அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கிப் போராடிய தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டும், கொல்லப்பட்டும் விடுதலைப் போராட்ட அமைப்பு முடக்கப்பட்ட பின்னர், இனி எல்லாமே முடிந்துவிட்டது; அல்ஜீரிய விடுதலைக்கு வாய்ப்பில்லை என்ற நிலை வந்தபோது, தலைவர்களின் வருகைக்காகவோ அல்லது போராளிகளின் வருகைக்காகவோ கூட அல்ஜீரிய மக்கள் காத்திருக்கவில்லை. எவரும் எதிர்பாராத விதமாக அல்ஜீரிய மக்கள் தன்னெழுச்சியாக‌ வீதிக்கு வந்து பேரெழுச்சி கொண்டனர். தமது விடுதலைத் தலைமை முடக்கப்பட்ட பின்பும் கூட விடுதலைப் போரிற்குத் தாமே தலைமை தாங்கிய அல்ஜீரிய மக்கள் தமது விடுதலையை வென்றெடுத்தமையை வரலாற்றில் கற்கின்றோம்.

1967 இல் சியோனிச இசுரேலுடனான போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்த பின்னர், பாலத்தீன விடுதலை இயக்கங்கள் தொடர்ந்து பாலத்தீனத்தில் இயங்க முடியாமல் எகிப்து, ஜோர்தான், லெபனான், துனீசியா போன்ற நாடுகளில் தளமமைத்து இருந்தபோது பாலத்தீன தாயகநிலமானது நாள்தோறும் சியோனிச இசுரேலியர்களால் வன்கவரப்பட்டுக்கொண்டே இருந்தது; ஆயிரக்கணக்கில் பாலத்தீனிய மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேயிருந்தன. எனினும், லீனா அல் நபுள்சி என்ற பள்ளிச் சிறுமி இசுரேலியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது பாலத்தீனிய விடுதலைப் போராளிகளின் வருகைக்காக பாலத்தீனிய மக்கள் காத்திருக்கவில்லை. பாலத்தீனிய மக்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராடினார்கள். தமது விடுதலையை வென்றெடுக்கத் தமக்குக் கிடைத்த பெருந்தலைவராக பாலத்தீனிய மக்களால் நோக்கப்பட்ட யாசீர் அரபாத் அவர்கள் 1980 களில் மேற்குலகின் விருப்பிற்கிணங்கி அமைதிப்பேச்சுகளில் ஈடுபட்டு பாலத்தீனியர்களின் விட்டுக்கொடுக்கவே முடியாத உரிமைகள் சிலவற்றையெல்லாம் விட்டுக்கொடுத்து நின்றபோதும் கூட, பாலத்தீனிய விடுதலையில் தாம் கொண்ட பற்றுக்கோட்டிலிருந்து பாலத்தீனிய மக்கள் அசரவேயில்லை. 1987 இல் Intifada என்று அரபு மொழியில் குறிப்பிடப்படும் பாரிய மக்கள் எழுச்சி பாலத்தீனத்தில் ஏற்பட்டது. நவீன போர்க்கருவிகள் தரித்த 80,000 இற்கும் மேற்பட்ட கொலைவெறி இசுரேலிய இராணுவத்தை எதிர்த்து 50 இலட்சம் மக்கள் தாமாகவே திரண்டெழுந்து வெறும் கற்களுடன் களமாடினர். மக்கள் நினைத்தால் கவச வாகனங்களைக் கூட கல்லால் எறிந்து வீழ்த்தலாம் என்ற உறுதியுடன் களமாடிய பாலத்தீனிய மக்களின் பேரெழுச்சியானது 20 மாதங்களாகத் தொடர்ந்தது. தாம் தலைமையேற்ற போராட்டத் தலைமையானது தமது உரிமைகளை விட்டுக்கொடுத்துச் சோரம்போகும் நிலைக்குச் சென்றபோதும், பாலத்தீனிய மக்கள் தாமே கொதித்தெழுந்து விடுதலைக்குப் போராடிய வரலாற்றை நாம் கற்கிறோம்.

ஆனால், தமிழீழத் தனியரசு அமைத்தல் என்று தாம் வரித்த கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புமின்றி, வரிகளில் வரித்துவிட முடியாத உயரிய ஈகங்களைச் செய்து, வரலாற்றில் யாரும் செய்யத் துணியாதளவிற்குத் தனது குடும்பத்துடன் நின்று களமாடி தமிழீழ மண்ணை விட்டு வெளியேறாமல் அந்த மண்ணிலே வித்தாகிப் போன தமிழீழ இறையாண்மையைக் காத்து நின்ற விடுதலைப் பேரொளியான தலைவர் பிரபாகரன் அவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கத்தைத் தலைமையேற்றிருந்த தமிழீழ மக்கள் ஏன் பாலத்தீனியர்களைப் போல, அல்ஜீரியர்களைப் போல எழுச்சிகொண்டு தாமே தமது விடுதலைக்குத் தலைமைதாங்கி விடுதலைக்காக அணிதிரளவில்லை என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான ஒரே பதிலானது ஏலவே பல தடவைகள் வியட்னாமிய விடுதலைப் பேரொளியாகிய கோசிமின் கூறியது தான். அதாவது “மக்களிற்கு உண்மையைச் சொல்லுங்கள். அவர்கள் விடுதலையை வென்றெடுப்பார்கள்”. அந்தக் கூற்றை கோசிமின் அவர்கள் எமக்காகவே கூறி வைத்துச் சென்றிருக்கிறார்.

இளையோர்களே! உங்களுக்கான வரலாற்றுக் கடமை காத்திருக்கின்றது. நாம் மாவீரர்களைப் புதைத்தோமா இல்லை விதைத்தோமா என்பதை உங்களின் செயல்கள்தான் இறுதிசெய்யப் போகின்றது. இளையோர்கள் அணிதிரளக் கூடிய இடங்களாகப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், தொழினுட்பக் கல்லூரிகள் என்பனவே இருக்கின்றன. ஆதலால், வரலாறு கற்பிக்கும் இன்னொரு செய்தியையும் இப்பத்தியின் நிறைவாகச் சொல்கின்றோம். அதனை மனங்கொள்ளுங்கள்.

1918 ஆம் ஆண்டு ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்து விரட்டிவிட்ட துருக்கியானது, குருது மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்ததோடு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை குருது மக்கள் மீது மேற்கொண்டது. குர்தியர்கள் குர்து மொழி பேசுவதும் அதில் இலக்கியங்கள் படைப்பதும் குற்றமாக்கப்பட்டது. குர்தியர்களின் கலை, இலக்கியம், வரலாறு என்பன‌ துடைத்தழிக்கப்பட்டன. தமது தாயகம் குர்திஸ்தான் பற்றி எந்த நினைப்புமில்லாமலும், தமது தாய்மொழியான குர்து மொழியை மறந்தவர்களுமாகவும் புதிய தலைமுறைக் குர்தியர்கள் உருவாகினர். துருக்கியில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப் பழகி அதையே ஏற்று நடக்கப் பழகிவிட்ட குர்து தலைமுறை 40 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்டது.

அப்போது அங்கோரா பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் கற்கும் மாணவனாக இருந்த அப்துல்லா ஒகலான் தனது நண்பர்களுடன் இணைந்து தமது ஆய்வுக் கற்கையாக குர்து மக்களின் தேசிய இனச்சிக்கல்களை ஆய்வுசெய்து, அதனை அடிப்படையாகக் கொண்டு தெளிவான உரைகளை நிகழ்த்தி, பல்கலைக்கழகத்திற்குள் குர்தியப் புரட்சியாளர்களை உருவாக்கி, குர்திய தொழிலாளர் கட்சி என்ற புரட்சிகர அமைப்பை நிறுவி, வழிகாட்டும் அரசியல் வேலைத்திட்டங்களை உருவாக்கி, மாணவர்களை அணிதிரட்டிப் புரட்சிப் போராட்டத்திற்குத் தலைமையேற்று குர்துத் தேசிய இனத்தின் தேசியத் தலைவராக வளர்ந்து நின்றார்.

குர்து மொழியைக் கூட சரியாகப் பேசத் தெரியாத அப்துல்லா ஒகலான் குர்திய விடுதலைப் போராட்டத்தின் தேசியத் தலைவராக வரலாற்றின் வழி வளர்ந்து நின்றார் என்ற வரலாற்றின் செய்தியானது தமிழீழ மாணவர்களே! உங்களுக்கானதே என்பதை இப்பத்தியின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகின்றோம்.

-முத்துச்செழியன்-

19-01-2024

(Visited 206 times, 1 visits today)