ஊடகங்களின் அரசியலும் மக்களின் நுகர்திறனும் –முத்துச்செழியன்-

எம்மைச் சூழநிகழ்வன பற்றிய புரிதலிலிருந்தே இவ்வுலகப்போக்கைப் புரிந்துகொள்ளவும், சமூகப்போக்கை ஏற்றிடவும் மாற்றிடவும் இயலும். ஊடகங்களின் வாயிலான கருத்தேற்றங்கள் ஒவ்வொருவரினது பார்வையையும், நுகர்வுத் தெரிவையும் ஆளுகை செய்வனவாக உள்ளன. நுகர்தல் என்பது உண்ணுதலும், உடுத்தலும் என்பதைத் தாண்டி வாசித்தலும், கேட்டலும், பார்த்தலும் என புலன்களால் உள்வாங்கும் அத்தனையும் நுகர்வுகள் தான் என்பதை அறிந்திருந்தாலும், நுகர்வென்றால் அறிவுநுகர்வென்பது யார் மனதிலும் பட்டெனத் தோன்றுவதில்லை. அறிதல் என்பதிலிருந்தே அறிவியல் என்ற சொல் உருவாக்கம் பெற்றது. அறிதலில் தாக்கஞ் செலுத்துவனவாக அறிகருவிகளே முதன்மை இடம் வகிக்கின்றன. ஊடகங்களும் அறிகருவிகளாகவே சமூகத்தில் ஊடாடுகின்றன. அறிதலை ஊடகங்கள் ஆழப்படுத்துகின்றனவா? மழுங்கடிக்கின்றனவா? திசைமாற்றி விடுகின்றனவா? என்ற வினாக்களுக்கு ஊடக நிறுவனங்களின் பின்னணி பற்றிய புரிதலிலிருந்தே விடைகாண இயலும்.

கேட்டுக்கேள்வியின்றி கண்டதையும் நுகரும் சீர்கெட்ட நுகர்வுப் பண்பாட்டினுள் சிக்குண்டு கிடக்கும் மக்களுக்கு ஊடகச் செய்திகளையும் கருத்துகளையும் நுகர்வதில் கூட தெரிவோ, விழிப்போ பெரும்பாலும் இருப்பதில்லை. எமது நுகர்வின் பின்னாலுள்ள ஆளும் வர்க்கங்களின் சந்தை நலன்கட்கான அரசியல் எதுவென்ற புரிதலை ஊடக நிறுவனங்களின் அரசியல் பற்றிய ஆய்வுத்தளத்திற்கு விரிவுபடுத்துவது ஊடகங்களினூடான அரசியல் குறித்துத் தெளிவடைதலில் துணைநிற்கும். ஊடகங்களின் அரசியலைத் தீர்மானிப்பன எவை என்ற வினாவிற்கான விடைகாணலாக பின்வரும் பத்திகள் அமைகின்றன. எதனைச் செய்தியாக்குவது, எதனைச் செய்தியாக்காமல் தவிர்ப்பது, எதனை ஊதிப்பெருப்பித்து மிதமிஞ்சிய ஊடக வெளிச்சத்திற்குள் கொண்டுவருவது என்பன பற்றிய ஊடகங்களின் நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பனவே ஊடகங்களின் அரசியல் என சுருங்கச் சொல்லலாம்.

ஊடகங்களின் அரசியற் பொருண்மியத்தால் (Political Economy) தீர்மானிக்கப்படும் எழுத்துகளையும், குரல்களையும், காட்சிகளையும் செய்திகளாகவும் கருத்துகளாகவும் இடையறாது நுகரும் நுகர்வோராகவே நாம் இருக்கின்றோம் என்பதில் விழிப்புப்பெறாமல் எம்மைச் சூழநிகழ்வனவற்றை முறையாக அறிந்துகொள்ளவியலாது என்பதை அழுத்திச் சொல்வதே இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்காக அமைகின்றது.

  • ஊடக நிறுவனத்தின் பின்னணி

ஊடக நிறுவனத்தின் உரிமையாளர், பங்குதாரர், இயக்குநர்கள் குழு ஆகியோரின் அரசியல் பின்னணி, அவர்கள் சார்ந்த வர்க்கம், அவர்களின் வணிகப்பின்னணி என்பன ஊடக நிறுவனங்களின் அரசியலில் பெருந்தாக்கத்தைச் செலுத்தவல்லன. வணிகப் பின்னணி கொண்டவர்கள் ஊடகநிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்தால் ஊடக நிறுவனத்தையும் ஒரு வணிக நிறுவனம் போலவே இயக்குவர். ஊடக நிறுவனங்களின் வெற்றி என்பது குறித்த மதிப்பிடலின் போது செய்தியிடலின் தரம், சமூகத்தின் ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும் நல்கும் பங்களிப்பு மற்றும் அறிவார்ந்த சமூக உருவாக்கத்தில் ஆற்றும் பங்கு என்பன மதிப்பிடப்படாமல், பொருளியலடிப்படையில் ஊடக நிறுவனம் அடைந்த இலாபமே ஊடக நிறுவனத்தின் வெற்றியாகக் கொள்ளப்படும் கேடான மதிப்பீடுகளையே இலாபநோக்கில் வணிகமாற்றிப் பழகியவர்களால் மேற்கொள்ள இயலும். அவர்களின் இலாபநோக்கிற்காக அவர்கள் உற்பத்தி செய்யும் பயனற்ற செய்திகளைக் கவர்ச்சியூட்டிச் சந்தைக்கு எடுத்துவரும் போது வீண்நுகர்வாகவோ மிகைநுகர்வாகவோ அவற்றை மக்கள் நுகர்ந்துவிடுகிறார்கள்.

ஊடக நிறுவனத்தினை ஆளுகை செய்பவர்களின் வர்க்க நலன்கட்குக் கேடான வகையில் அமையக்கூடிய செய்திகளும் கருத்துகளும் வெளிவராமல் இருக்கவோ அல்லது வெளித்தெரியவந்தால் அவற்றை மடைமாற்றவோ தேவையான தம்மால் இயன்ற அனைத்தையும் ஊடக நிறுவனங்கள் செய்துவருகின்றன. அரசுடன் ஒட்டான உறவுகளைப் பேணுவதனால் கிடைக்கும் சில நன்மைகளுக்கான கைமாறாக ஒடுக்கும் அரசுகளின் ஊதுகுழல்களாக இக்கட்டான நேரங்களில் இயங்குந்தன்மை உலகளவில் ஊடகங்கட்கு உண்டு.

ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலிக்க விரும்பித் தோன்றிய ஊடக நிறுவனங்களால் முற்றிலும் வணிகமாகிப்போன ஊடக நிறுவனங்களுடன் போட்டிபோட இயலாத சந்தைப் பொருளியற்போக்கே இன்று நிலவுகிறது. அறிவே வணிகப்பொருளாகிவிட்ட இடர்மிகு சூழலில் அறிகருவிகளான ஊடகங்கள் வணிக நடுவங்களாகவன்றி வேறெதுவாக இருந்துவிட இயலும் என்பதை எண்ணியுணர்ந்தே ஊடகங்களின் வாயிலான செய்திகள் மீது பார்வைகொள்ள வேண்டும்.

  • ஊடகத்தின் நுகர்வோர்களின் பின்னணி

ஊடகத்தின் நுகர்வோர்களினை மகிழ்விப்பதையும் அவர்களினைத் தக்க வைப்பதையும் ஊடகநிறுவனங்கள் நோக்காகக் கொண்டவை. குறிப்பாக ஆங்கில நாளிதழ்களில் பெரும்பாலானவை சமூக உயரடுக்குகளில் உள்ளவர்களால் (Elites) குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து நுகரப்படுவன. இவ்வாறான ஊடகங்கள் தமது நுகர்வோரான சமூக உயரடுக்குக் குடிகளின் மனங்களை வென்றெடுப்பதை நோக்காகக் கொண்டே செய்தித் தெரிவுகளையும் அறிக்கையிடலையும் மேற்கொள்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் “த இந்து” மற்றும் சிறிலங்காவில் வெளிவரும் “த ஐலண்ட்” போன்ற நாளிதழ்கள் இவற்றிற்கான அச்சொட்டான எடுத்துக்காட்டுகளாகும். சமூக உயரடுக்கு நிலையிலுள்ளவர்களின் பார்வையில் போர் என்பது எப்படி மகிழ்வளிக்கும் பரபரப்பான புதினமாக இருக்கின்றதென்பதை அறிய, ஈழத்தில் தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இந்திய, மேற்குலகுக் கூட்டுச் சூழ்ச்சியுடன் இனக்கொலைக்கு உள்ளாக்கப்படும் போது மேற்கூறிய ஊடகங்கள் எப்படி நடந்துகொண்டன என்பதைக் கண்ணுற வேண்டும்.

பிராமணியவெறி மனநிலையை “த இந்து” நாளிதழும் மகாவம்சத்தை விஞ்சிய சிங்களப் பேரினவெறியை “த ஐலண்ட்” நாளிதழும் பட்டெறினவாகவே அன்றும் இன்றும் உள்ளன. இந்த ஊடகநிறுவனங்களின் அரசியல் பின்னணி என்பது இந்த ஊடகங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்குக் காரணமாக இருந்தாலும் அவர்களின் இந்த அரசியல் நிலைப்பாடு கூச்சநாச்சமின்றி அவர்களின் ஊடகங்களினூடாக வெளிப்படுத்தப்படுவதன் பின்னாலுள்ள வலுவான காரணமாக இந்த ஊடகங்களின் நுகர்வோரின் தன்மை என்பதே இருக்கின்றது என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

கனதியான செய்திகளைத் தாங்கிவரும் புரட்சிகர ஊடகங்களோ உட்சுற்று இதழ்கள் போல சுற்றுநிலை (Circulation) அளவில் மிகவும் குறைந்தனவாக இருப்பதுடன் மக்கள் ஊடகமாக வளர்வெய்த முடியாமல் இருக்கும் கேடான நிலையே இற்றைச் சமூக அரசியற் சூழலாக இருக்கின்றது. புரட்சிகர கருத்துநிலையில் உள்ளவர்களை நுகர்வோராகக் கொண்ட புரட்சிகர ஊடகங்களானவை கருத்துநிலையிலும் செய்தித்தெரிவிலும் புரட்சிகரநிலையில் இருந்து சற்றும் விலகிவிடக் கூடாது என்ற இறுக்கமான நிலைப்பாட்டினால் மக்கள் ஊடமாக சற்று வெளிச்சென்று தமக்கான நுகர்வோரை ஈர்க்க இயலுவதில்லை.

  • ஊடகநிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் மூலம்

ஊடகநிறுவனங்களின் செய்தியாளர்களும் அவர்களின் ஒளி மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் செய்தி திரட்டுவதற்காக எந்நேரமும் அணியமாகி இருப்பது நடைமுறையில் நிகழ்தகவற்றது. ஊடகநிறுவனங்கள் பெரும்பாலான செய்திகளைச் செய்திநிறுவனங்களின் (News Agency) ஊடாகவே பெற்றுக்கொள்கின்றன. அரச செய்திநிறுவனங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் செய்தி அறிக்கைகளையோ அல்லது அரசதரப்பினால் ஒழுங்குசெய்யப்படும் செய்தியாளர்கள் சந்திப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளையோ தகவல் மூலங்களாகக் கொண்டு செய்தி திரட்டும் ஊடகங்களானவை அரசின் ஊதுகுழலாகவன்றி மக்களின் குரலாக ஒலிக்கமாட்டா.

உள்நாட்டுடன் தொடர்புபட்ட வெளிநாட்டுச் செய்திகளிலும் மற்றும் ஏனைய உலகச் செய்திகளிலும் வெளிநாட்டுத் தூதரகங்களின் கருத்தியற் தாக்கமே மிகுந்து காணப்படும். குறிப்பாக இலங்கையில் இயங்கும் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தாம் தொடர்புபட்ட செய்திகளில் கூடுதல் கவனமெடுத்துத் தமது நிலைப்பாட்டைச் செய்தியாக்கித் தமது ஊதுகுழல்களாக ஊடகங்களை இயங்க வைக்கும் வல்லாற்றலைப் பெற்றிருக்கின்றன என்பதை எவராலும் மறுக்கவியலாது.

இதையும் தாண்டி, தமக்குவப்பான ஆட்சியாளர்களை ஆட்சியில் அமரவைப்பதற்குச் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களில் பெருமளவானவற்றை ஊடகங்கள் வாயிலாக தூதரகங்கள் மேற்கொள்கின்றன என்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும். “அரகலய” போன்ற பதிலிப் போராட்டங்களை (Proxy protests) இயக்கி அதற்கு “மக்கள் போராட்டம்” என்றவாறான தோற்றத்தை ஏற்படுத்தவும், தமக்குவப்பான ஆட்சியாளர்களையும் வேட்பாளர்களையும் மக்களின் பொதுப்புத்திக்கு நெருக்கமானோராக்குவதும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இயலுகின்றதெனில், அதற்குப் பின்னால் ஊடகங்கள் எந்தளவிற்குப் பங்களித்திருக்கும் என்பது குறித்துத் தெளிவடைய வேண்டும்.

புகழ்பூத்த ஊடகர்களில் பலர் எந்தெந்த தூதரகங்களின் செல்லப்பிள்ளைகள் என்பதைப் பற்றிய தேடல்கள் அவர்களின் கருத்துநிலைப்பாட்டின் காரணங்களை அறிய உதவியாயமையும். தவிர, உலகச் செய்திகளுக்கு BBC, CNN, Reuters, Aljazeera போன்ற உலகளவில் பரந்துபட்டு வலைப்பின்னல் அமைத்திருக்கும் அளவிற் பெரிய செய்திநிறுவனங்களிலே தான் பல்வேறு ஊடகங்கள் தங்கியிருக்கின்றன.

அமெரிக்காவின் உலக வல்லாண்மை நகர்வுகளுக்கான வன்கவர்வுகளைப் பன்னாட்டளவில் நியாயப்படுத்தவும் அவற்றிற்கான மக்களாதரவைப் பெறும் வகையிலும் செய்திகளைத் திரித்தும், இட்டுக்கட்டியும், சொல்ல வேண்டியவற்றை சொல்லாமலும், காட்ட வேண்டியனவற்றைக் காட்டாமலும் செய்தியிட்டு அமெரிக்காவின் தகவல் போர்க்களத்தில் (Information Battlefield) முன்னணிப்படையாகச் செயற்படும்  CNN ஆனது ஊடகம் என்ற போர்வையில் செய்த வல்லாண்மை அரசியல் எத்தகையது என்பதையும் வளைகுடாப் போரின் போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்துடன் அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத ஆயுத வன்முறைகளின் போதும் அது வகித்த பாத்திரம் மற்றும் தாக்கம் என்ன என்பதையும் விரிவாக ஆராய்ந்து பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. CNN இனது இந்த நிகழ்ச்சிநிரலின் விளைவுகளை CNN விளைவு (CNN Effect) என்ற கோட்பாடாக்கி ஊடகக்கற்கைகளில் பாடக்குறிப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

BBC இனை ஒரு செய்திநிறுவனமாக மட்டுமேயன்றி பிரித்தானியாவின் உளவுநிறுவனமாகவும் (MI5, MI6 போல) நோக்க வேண்டும். உண்மையில் உலகப்போரின் போது எவ்வாறு BBC உளவுத்துறையாகவே செயற்பட்டது என்பது குறித்த தேடல் இன்றியமையாதது. உளவுத்துறைக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் (Intelligence Monitoring Operations) ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் நாடுகளுக்கிடையான உளவுத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்திலும் பிரித்தானியா சார்பாக BBC கையெழுத்திட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்தச் செய்திநிறுவனங்களினை செய்தி மூலமாகக்கொண்டு தகவல் வெளியிடும் ஊடகங்கள் யாரின் நலனைப் பட்டெறிவனவாக செயற்தளத்தில் இருக்கும் என்பதை ஐயந்திரிபறப் புரிந்துகொள்ளலாம்.

இந்தியச் சிறையினுள் ஒடுக்குண்டு கிடக்கும் மணிப்பூர், அசாம், நாகலாந்து, காலிஸ்தான், மிசோரம், காஸ்மீர் போன்ற தேசங்களில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த செய்திகளை இந்திய இதழ்கள் வழியாக, இன்னும் குறிப்பாக “தி இந்து” போன்ற ஆரிய பிராமணிய நாளிதழ் மூலமாகவே நாம் தெரிந்துகொள்கிறோம் என்றால் ஒடுக்கும் அரசின் பொய்ப்பரப்புரைகளையே நாம் செவிமடுத்து எமது பொதுப்புத்தியைப் பேதலித்து வைத்திருக்கின்றோம் என்று பொருள். ஆரிய பிராமணிய நலன்கட்கான கருத்துகளைப் பரப்புரை செய்யும் ஊடகங்கள் வாயிலாகவே தமிழ்நாட்டுச் செய்திகள் கூட ஈழத்தமிழரை வந்தடைந்தமையால் தமிழ்நாடு குறித்த அயன்மைப் பார்வையே புரிதல் பெரிதுமற்ற எண்ணிக்கையில் கூடுதலான மக்களிடம் தொடர்ந்தது. எனிலும், சமூகவலைத்தளங்களின் வருகையும், 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொதிப்புணர்வும் ஈழ- தமிழக உறவினை மிகவும் நெருக்கமாக்கியது. இதன் பின்னர் இறுகப் பிணைந்துவந்த ஈழ- தமிழக உறவானது, தமிழர்களிடத்தில் பாரிய பார்வை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்று உலகத் தமிழர்களிடத்தில் ஓர்மை உணர்வு நாளுக்கு நாள் தேசங்கள் கடந்து வலுப்பெற்று வருகின்றமையை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

  • விளம்பரங்களின் ஆதிக்கம்

அச்சு ஊடகத்தைப் பொறுத்தளவில் அதன் உற்பத்திச் செலவிலும் பார்க்கக் குறைந்த தொகையிலே தான் அவை விற்பனையாகின்றன. அதற்குக் காரணமாக இருப்பன அந்த ஊடகநிறுவனங்கள் விளம்பரத்தால் பெற்றுக்கொள்ளும் இலாபமே. எனவே, விளம்பரங்களை ஈர்க்காத ஊடகநிறுவனங்களானவை இலாபமே இல்லாமல் உற்பத்திச் செலவில் இதழ்களை விற்பனை செய்தாலும் விளம்பரத்தைப் பெறும் ஊடகங்களுடன் போட்டி போட இயலாததாகிவிடுகிறது. விளம்பரதாரர்கள் தமது விளம்பரத்திற்காக ஊடகநிறுவனங்களைத் தெரிவுசெய்யும் போது அந்தக் குறிப்பிட்ட ஊடகநிறுவனமானது வாங்கும் ஆற்றல் (Buying Power) உள்ளவர்களை நுகர்வோராகக் கொண்டுள்ளதா என்பதையே பார்க்கிறார்கள்.

அதாவது உயரடுக்குச் சமூகத்தினரின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகங்களிலே தமது விளம்பரப்படுத்தலைச் செய்யவே வணிக நிறுவனங்கள் முன்வருகின்றன. எனவே, சமூகவாஞ்சையும் கருத்தியல் தெளிவும் மேலிட்டு நின்று மக்களின் குரல்களாக ஒலிக்கவல்ல ஊடகங்களால் விளம்பரதாரர்களை ஈர்க்கவியலாது என்பதைப் புரிந்துகொள்வது எளிது. இதனால் ஊடகங்களாக நிலைக்க வேண்டுமென்றால் சில பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து விளம்பரதாரர்களை ஈர்க்க வேண்டிய சூழலுக்குள் ஊடகநிறுவனங்கள் தள்ளப்படுகின்றன.

எனவே, பெருநிறுவனங்களின் வளவேட்டைகளையும் அவற்றினால் ஏற்படும் சுற்றுச்சூழற் சீர்கேடுகளையும் மட்டுமல்ல, பொதுவாக சுற்றுச்சூழல் குறித்த கரிசனையையும் மிகைநுகர்வுப் பண்பாட்டின் கேடான விளைவுகளைப் பற்றியும் கூட வாய்திறக்க விரும்பாதவர்களாக ஊடகங்கள் மாறிவருகின்றன. ஏனெனில், இவ்வாறான செய்திகள் அந்த பெருநிறுவனங்களில் தங்கிநிற்கும் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் விளம்பர வருகையைக் கூடப் பாதித்துவிடும் என ஊடகநிறுவனங்கள் அஞ்சுகின்றன. பொருளியலே அனைத்தையும் தீர்மானிக்கும் அரசியலைத் தீர்மானிப்பதால், பொருளியல் சுரண்டலிற்கான அமைப்பைக் கேள்விகேட்காமல் ஒதுங்கியிருப்பது என்பது உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவே இருக்கும். எனவே, விளம்பரங்கள் வாயிலாக பெருநிறுவனங்கள் தம்மில் தங்கியிருக்கும் நிலையை ஊடகங்களிற்கு ஏற்படுத்தித் தமக்கெதிரான கருத்துகளுக்கு வாய்ப்பூட்டுப் போடுகின்றன.

  • ஊடகங்களிற்கிடையிலான போட்டி

அனைத்தும் வணிகப்பொருளாகிப் போயுள்ள சந்தைப் பொருளியலின் அடிப்படையான சந்தைப்போட்டியில் ஊடகநிறுவனங்களின் வெற்றி, தோல்வி என்பனவும் மதிப்பிடப்படுவதால், வணிகநோக்கினை மட்டுமே நோக்காகக்கொண்டு இயங்கும் ஊடகநிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டியுள்ள சூழலியே இலாபநோக்கை முதன்மை நோக்காகக்கொள்ளாத நடுவுநிலை காக்க விரும்பும் ஓரளவு சமூகப்பொறுவுணர்வேனும் கொண்ட ஊடகநிறுவனங்கள் இருக்கின்றன. சந்தைப்போட்டியில் தப்பிப்பிழைக்க வணிகநோக்கினை மட்டுமே கொண்ட ஊடகநிறுவனங்கள் கையிலெடுக்கும் அத்தனை கவர்ச்சிகரமான முயற்சிகளையும் எடுத்தாள வேண்டிய சூழலிற்குள் ஓரளவு சமூக வாஞ்சையுள்ள ஊடகங்களும் வந்தடைகின்றன.

செய்தியிடலில் பரபரப்பும் மிகைப்படுத்தல்களும் இல்லாமல் செய்தியிட்டால் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்க முடியாது என்ற சூழலில் செய்தியிடலில் தரம் என்பதைக் கிஞ்சித்தும் கண்கிலெடுக்காமல் ஊடகநிறுவனங்கள் இயங்கும் போக்கைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தவிர, குறிப்பாகக் காட்சி ஊடகங்களில் தகைமை வாய்ந்த செய்தியாளர், நெறியாளர், ஊடகர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்குக் காட்டும் முனைப்பிலும் பார்க்க, உதட்டுச்சாயமும் முகத்தினை வெளிற்றும் களிகளினையும் பூசிவரும் பாவைகளை வேலைக்கு அமர்த்துவதிலே தான் ஊடகங்கள் முனைப்பாக இருக்கின்றன. சமூகத்தில் நிலவும் பாலியல் வரட்சிகளையும் பலவீனங்களையும் கூட வணிகமாக்கும் இத்தகையை வணிகநோக்கை மட்டும் கொண்ட ஊடகங்களுடன் போட்டி போடுதல் என்ற புள்ளியில் இத்தகைய ஆட்தெரிவுகள் இயல்பானதொன்றாகி வருகின்றன.

  • அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்களின் தாக்கம் (NGO அரசியலின் தாக்கம்)

அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற NGO க்கள் உண்மையில் அரசைப் புரட்சிகளில் இருந்து காக்கும் அமைப்புகளாகவே இருக்கின்றன என்பதை அவற்றின் அரசியலை உற்றுநோக்கினாற் தெரிந்துகொள்ளலாம். மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டடைய விடாமல் மேற்குலகின் நலன்கட்கான பொருளியல் அமைப்பை உலகெங்கும் காப்பதை நோக்காகக் கொண்டவையே இந்தத் தொண்டு நிறுவனங்கள் என்பதை அவற்றிற்கான நிதியளிப்பாளர்கள் யார் என அறிந்துகொள்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒடுக்கும் அரசுகளின் அடாவடிகளைப் பொறுக்க இயலாது மக்கள் கொதித்தெழுந்து புரட்சிக்கு அணியமாகும் நிலையை அடையவிடாது, மக்களைத் திசைதிருப்பிச் சிக்கலைக் காயடிப்பதற்காகக் களத்தில் நிற்பனவே இந்தப் பன்னாட்டு நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள். அரசியல் நீக்கம் செய்வதனை மூல உத்தியாகக் கொண்ட இந்த அமைப்புகள் அடையாள அரசியல் மூலம் மக்களைக் குழுப்பிரிக்கும் வேலையையே தமது கருத்திட்டங்களை (Projects) முன்னெடுப்பது முதல் அவை தொடர்பாக அறிக்கையிடுவது வரையில் செய்கிறார்கள்.

தேசமாக ஒன்றுபட்டுத் தேச உரிமைக்காகப் போராடும் மக்களிடத்தில் அடையாள வேறுபாடுகளைப் புகுத்தி அவர்கள் தேசமாக சிக்கல்களைக் கையாளப் பழகுவதில் இருந்து தள்ளிவைப்பதை இந்தத் தொண்டு நிறுவனங்கள் தமது அரசியல் வேலைத்திட்டமாக வைத்திருக்கிறார்கள். அபலைப் பெண்கள், நலிவுற்றோர், விளிம்புநிலையில் உள்ளோர், சிறுவர்கள், பழங்குடிகள் என மக்களைக் குழுப்பிரித்து அமைப்பாக்கித் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் வேலைத்திட்டத்தை இந்தத் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கப்பட்ட தேசத்தைச் (தமிழீழதேசத்தை) சேர்ந்தவர்களில் விளிம்புநிலை, அபலநிலை என எதிர்ப்புரட்சிக் கருத்தியலான பின்னைப் புதுமையியத்தின் (postmodernism) அடையாள அரசியலை முன்னெடுக்கும் சொற்கள் மூலம் ஊடகங்களில் அறிக்கையிடப் பயிற்றுவிக்கும் தொண்டுநிறுவனங்களின் அரசியலில் பெரும்பாலான ஊடகர்களும் செய்தியாளர்களும் சிக்குண்டு கிடக்கின்றார்கள். ஊடகர்களுக்கான தொழினுட்பப் பயிற்சி என்ற பெயரில் உள்வாங்கப்படும் ஊடகர்கள் நாளடைவில் தொண்டுநிறுவனங்களின் அறிக்கைப் பகுதிப் பொறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர்.

பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் கருத்திட்டங்களை (Projects) மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான வழிவகை என்றாற்போல ஊடகங்களில் புளுகித்தள்ளுவதால் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை மக்களின் மனதில் மீட்பர்களாகப் பதியவைக்கும் கருத்தேற்றத்தை ஊடகங்கள் செய்கின்றன. வெளியாரின்றி ஒரு துடைப்பத்தையோ அல்லது விளக்குமாறையோ கூட உற்பத்தி செய்ய இயலாதவர்களே தாம் என எமது மக்களை நம்ப வைத்துக் கழிப்பறைக்குக் கூடக் காத்திருப்பவர்களாக போராடிய மக்களின் ஆளுமையைச் சிதைத்ததில் தொண்டுநிறுவனங்களிற்கும் அவர்களின் வேலைத் திட்டங்களை அடியொற்றி வேலை செய்துபழகும் தன்னார்வக் குழுக்கற்கும் பெரும்பங்கு உண்டு. இப்படியான நிலைக்கு இட்டுச் சென்ற கருத்துருவாக்கத்தை ஊடகங்கள் அழுத்தமாகச் செய்துவருகின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

  • ஊடகத் தணிக்கைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்

மக்களாட்சியின் நான்காவது தூண் எனச் சொல்லப்படும் ஊடகங்களானவை அரசுகளின் நலன்கட்கு கேடாகச் செயற்படாமையை உறுதிசெய்வதற்காக ஊடகத்தணிக்கையை அரசுகள் சட்டமாக்கி வைத்திருக்கின்றன. மக்களின் குரலாக ஊடகங்கள் ஒலித்தால் தமக்கும் தம்மைத் தீர்மானிக்கும் ஆளும் வர்க்க நலன்கட்கும் அது கேடாக அமையும் என உறுதியாக நம்பும் அரசுகள் ஊடகத்தணிக்கை என்பதை ஒரு ஒடுக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. ஊடகச்செய்திகளுக்குத் தணிக்கை அல்லது அதையும் விஞ்சியதாக ஊடகநிறுவனங்கட்கான உரிமங்களை இல்லாது செய்தல் போன்றவற்றைச் சட்டமாக்கித் தமது ஒடுக்குமுறைக்கு வாய்ப்பாக வைத்திருக்கும் அரசுகளினால் ஊடகங்களைப் பணியவைக்க இயலுமாகின்றது. இந்த ஊடகத் தணிக்கைகளை மதிக்காமல் இணையவெளியைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய புரட்சிகர ஊடகங்களால் மக்கள்மயப்படல் என்பது இயலாததொன்றாகவே இருக்கின்றது.

ஊடகங்களின் அரசியல் என்பது மேற்கூறியவற்றினால் தீர்மானிக்கப்படுவதாகவே இருக்கின்றன. இதனால் ஊடகங்களில் வரும் செய்திகளுக்கும் கருத்துகளிற்கும் பின்னால் அந்தந்த ஊடகங்களின் அரசியல் இருக்கின்றது என்ற தெளிவை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

ஊடகங்களானவை தமது அரசியலை எப்படி முன்னெடுக்கின்றன அல்லது வெளிப்படுத்துகின்றன என்பதைப் பற்றிய தெளிவை “ஊடக எழுத்தறிவு” (Media Literacy) எனக் குறிப்பிடுவர். எனவே, ஊடகங்களின் அரசியல் வெளிப்படுமாற்றை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலை மக்கள் புரிந்துகொள்ள கீழ்வரும் விடயங்கள் பற்றிய தெளிவு இன்றியமையாததாகின்றது.

ஊடகங்களானவை தமது அரசியலை எப்படி முன்னெடுக்கின்றன அல்லது வெளிப்படுத்துகின்றன?

  • செய்தியிடலில் சித்தரிப்புகள் (Depictions in reporting)

ஊடகநிறுவனங்கள் தமது அரசியல் நலன்களைப் பாதிக்கக்கூடிய விடயங்களானவை தவிர்க்க முடியாதளவிற்கு மக்களிடத்தில் பரவலடைந்து விட்டால் அந்தச் செய்திகளின் வீரியத்தைக் குறைக்கும் வகையிலான சொற்களைப் பயன்படுத்தி (diluting words) அந்தச் செய்திகளை அரசியல் நீக்கம் செய்தும் வேறுவகையாகத் திரிபுசெய்தும் சப்பைக்கட்டுக் கட்டியும் தமது அரசியல் நலன்கள் பாரியளவு கேடாகாத வண்ணம் பார்த்துக்கொள்கின்றன.

ஈழத்தமிழர்கள் தேசமாக வளர்ந்த தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அரசியற்பண்பு நிலையிலிருப்பதால் அவர்கட்குத் தேசஅரசு (Nation State) அமைக்கும் உரிமையென்பது இயல்பில் வாய்த்தது. ஆனால், திட்டமிட்டே ஈழத்தமிழர்களை சிறுபான்மையினர் எனக் குறிப்பிடுவதென்பது ஈழதேசத்தை மறுக்கும் போக்கிலானது என்பதுடன் சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் வைத்துத் தமிழர்களினை சிறுபான்மையினராக்கி சிறுபான்மையினருக்கான உரிமைக்கே (சிறுபான்மையினர் பாதுகாப்பு உரிமை – Protection to minority rights) தமிழர்கள் உரித்தானவர்கள் என்ற நிலையில் கருத்துகளை உருவாக்குவதென்பது ஊடகங்கள் எங்கும் விரவிக் காணப்படுகின்றது. நெறியற்ற ஊடக இட்டுக்கட்டல்கள் (Unethical media framing) மூலம் செய்திகளை வெளியிடுவதில் “த இந்து” என்ற ஆரிய பிராமணிய நாளிதழுக்கும் “த ஐலண்ட்” என்ற சிங்கள பேரினவெறிகொண்ட நாளிதழுக்கும் விருது வழங்கலாம். அந்த ஊடகநிறுவனங்களிற்கு தமிழர்மீது வன்மத்தைக் கக்குவதில் அசைக்க முடியாதனவாக வாழ்நாள் விருதையும் கூடுதலாக வழங்கலாம்.

தலைப்புகளின் மூலமும் நன்கு துலக்கமாகத் தெரியும் படியான சொற்றொடர்த் தெரிவுகள் மூலமும் (Catchphrases) வன்மத்தையும் கொடிய நஞ்சையும் இந்த நாளிதழ்கள் எப்படிக் கக்கின, கக்குகின்றன என்பதை யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

தமிழீழ விடுதலைப் போராளிகள் சிங்கள அரசபடைகளால் கொல்லப்பட்டமையை “காட்டுமிராண்டிக் கொலைகாரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்” என கீழ்வருமாறு “த ஐலண்ட் நாளிதழ்” செய்தி வெளியிட்டது.

“Butchers slaughtered” (த ஐலண்ட் நாளிதழில் 2009 May 19 அன்று வெளியான செய்தி)

  • உவமைகளைக் கையாளுதல்

வரலாற்றில் அருவருக்கத்தக்கனவாக உள்ளவற்றை உவமையாகப் பயன்படுத்தித் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் போராட்டத் தலைமையையும் தமிழர்களின் விடுதலை இயக்கத்தின் நடவடிக்கைகளையும் இழிவுபடுத்துதலை மேற்குறிப்பிட்ட நாளிதழ்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னெடுத்தன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய விடுதலைப் புலிகள் என்ற புரட்சிகர விடுதலை அமைப்பானது கிட்லர் நடத்தியதற்கு ஒப்பான சித்திரவதை முகாமை நடத்தியதாக “த ஐலண்ட்” கீழ்வருமாறு செய்தியிட்டது.

“Sri Lankan Army captured a Hitler model torture chamber operated by the LTTE leader” (த ஐலண்ட் நாளிதழில் 2009 May 22 அன்று வெளியான செய்தி)

தலைவர் பிரபாகரன் அவர்களை “அதிகார மமதையும் வெறியும் பிடித்த கொலைகாரன்” என்று குறிப்பிடுமாறு “த ஐலண்ட் “Prabaharan as the megalomaniac killer” (த ஐலண்ட் நாளிதழில் 2009 May 5 அன்று வெளியான செய்தி) என செய்தி வெளியிட்டது.

ஈகத்தாலும் போராற்றலாலும் தமக்கு நிகரில்லாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதாராக உலகத்தாரெல்லாம் ஏற்றிப்போற்றுகையில் “த ஐலண்ட்” என்ற சிங்கள இனவெறி நாளிதழோ போராளிகளை “பயந்த பூனைகள் என எழுதியதை கீழ்வருமாறு மேற்கோள் இடுகிறோம்.

“Fraidy cat” (த ஐலண்ட் நாளிதழில் 2009 May 12 அன்று வெளியான செய்தி)

விடுதலைப் புலிப்போராளிகளை நரிகள் என இழிவுசெய்யுமாறு “Losing tigers acting like foxes” என “த ஐலண்ட் நாளிதழ்” செய்தி வெளியிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை “மேற்குலகின் கொலைகாரச் செல்லப்பிராணிகள்” என இழிவுசெய்யுமாறு “Killer pets of the west” என “த ஐலண்ட் நாளிதழ்” செய்தி வெளியிட்டது.

தலைவர் பிரபாகரன் அவர்களை கோரமானவன் என இழிவுசெய்யுமாறு “Only a monster like Prabaharan can order his cadres o kill” என “த ஐலண்ட் நாளிதழ்” செய்தி வெளியிட்டது.

இவ்வாறாக தமிழ் மக்களின் புரட்சிகர விடுதலைப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கீழின விலங்குகளாகச் சித்தரிக்கும் உவமைகளையும் பழமொழிகளையும் பயன்படுத்தித் தமிழர்கள் மீதான தமது வன்மத்தைக் கக்கும் ஊடகங்களின் நுகர்வோரில் பெரும்பான்மையானோர் தம்மை நாகரிகத்தில் மேம்பட்டவர்களாகப் பாசாங்கு செய்யும் சமூக உயரடுக்கில் இருப்பவர்களே என்பதை நாம் இங்கு சுட்டுகிறோம்.

  • வரலாற்றில் முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் தவறான சித்தரிப்பைச் செய்தல் (Exemplaries)

தமிழீழ விடுதலைப் புலிகளால் நிருவகிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் வளரும் குழந்தைகளும் ஏனைய போராளிகளும் உடற்பயிற்சித் தேவைகளுக்குப் பயன்படுத்தும் நீச்சல்குளத்தினைக் காட்டி அதனை ரோம் நகர் தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தமையுடன் ஒப்பிட்டு எழுதுவதென்பதைப் போல ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை வேறெந்த வகையிலும் இழிவுசெய்ய இயலாது. இதனை ஊடகங்கள் தெரிந்தெடுத்துச் செய்தன.

ஏலவே விளக்கியது போல தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை கிட்லருடன் ஒப்பிட்டு எழுதுவதன் மூலம் அவரைப் பற்றிய வெறுப்புணர்வை இயன்றவரை விதைப்பதை தமிழரிற்கெதிரான ஊடகங்கள் தொடர்ந்து செய்து வந்தன. The Hindu, Washington Times, Wall street Journal, Manila Times போன்ற ஊடகங்கள் இப்படியாக வரலாற்றில் வெறுக்கப்படும் செய்திகளைத் தொடர்பில்லாமல் கோர்த்து எழுதுவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியில் வேறோர் படிமத்தை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். எடுத்துக்காட்டாக “அல்கெய்தா இயக்கத்தை” விடுதலைப் புலிகள் பற்றிய செய்தியிடலில் கோர்த்து எழுதுதலைக் குறிப்பிடலாம்.

  • படங்கள் மற்றும் காட்சித் தெரிவுகள்

ஈராக் மீதான வன்கவர்வின்போதும் ஆப்கானிஸ்தான் மீதான வன்கவர்வின் போதும் அமெரிக்கச் சார்பு ஊடகங்கள் அதனை நியாயப்படுத்தும் விதமாக காட்சிகளையும் படங்களையும் தெரிவுசெய்து வெளியிட்டன. போர் என்றவுடன் மக்களின் அவலங்களையும், சாவுகளையும், இரத்த வெள்ளத்தையும் காட்சிப்படுத்தாமல், போர்க் கருவிகளின் துல்லியங்களைக் காட்டும் தொழினுட்பச் செய்திகள் போலவும் ஒரு போட்டியில் பங்கேற்பவரின் வலு தொடர்பானதொரு காட்சிப்படுத்தல் போலவுமே போரினைச் சித்தரிக்குமாறு படங்களையும் காணொளிகளையும் அமெரிக்க சார்பு ஊடகங்கள் வெளியிட்டதன் மூலம் மக்களைத் தமது நிகழ்ச்சிநிரலிற்கமைய மடைமாற்றின.

தமிழர்கட்கெதிரான இனவழிப்புப் போரைக் காட்சிப்படுத்துவதில் “ரூபவாகினி” தொலைக்காட்சி காட்டிய பாங்கென்பது சிங்கள மக்களைத் தமிழர்கட்கெதிரான போரில் அணியப்படுத்துவதையும் அதனை ஒரு நியாயமான போராக நிறுவுவதையும் நோக்காகக் கொண்டிருந்தது.

அத்துடன் காட்சிப் படங்கள் (Cartoons) மற்றும் கேலிச்சித்திரங்கள் (Caricatures) மூலமான ஊடகங்களின் கருத்தேற்றங்கள் பற்றியும் ஈண்டு நோக்க வேண்டும். நுண்மையான கருத்தேற்றங்களைச் செய்வதன் மூலம் தமது ஒடுக்கும் நிகழ்ச்சிநிரலை மக்களின் பொதுப்புத்தியால் ஏற்கச்செய்யத் துடிக்கும் ஆளும் வர்க்கங்களின் பணியாளர்களாக ஊடகங்கள் தொண்டாற்றுவதற்கு வழிசெய்யும் எளிய கருவிகளாகக் கருத்துப்படங்களைப் பெருநிறுவனங்களின் அரவணைப்பைப் பெற்ற ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பதை கூர்ந்து நோக்கல் வேண்டும்.

ஊடகங்களாக சமூகவலைத்தளங்கள்

ஊடகங்களின் அரசியலைப் பற்றி எழுதும்போது சமூகவலைத்தளங்கள் இன்று ஊடகங்களாகத் தொழிற்படும் செல்நெறி பற்றியும் குறிப்பிட வேண்டும். கட்டற்ற சுதந்திரம் என்பது எப்படி எதிர்ப்புரட்சிக்கு உற்ற தோழனாக அமையுமோ, அதேபோல சமூகவலைத்தளங்களின் கட்டற்ற, நெறியற்ற செய்தியிடல்களானவை உதிரித்தன்மையுடையனவாக இருப்பதோடு செய்திகளையும், கருத்துகளையும், பார்வைகளையும் ஒழுங்கீனமாக்கும் பாங்கையும் வெளிப்படுத்துகின்றன. ஆனாலும், புரட்சிகர ஊடக உருவாக்கத்திற்காகப் (Radical media making) பாடாற்றுபவர்கட்கு தொழினுட்பம் தந்த அருங்கொடையாக சமூகவலைத்தளங்கள் அமைகின்றன என்பதை நாம் நேர்மறை எண்ணவோட்டத்துடன் எண்ணியுணர வேண்டும்.

புரட்சிகரக் கருத்துகளை எடுத்தாளும் களமாக சமூகவலைத்தளங்களை வினைத்திறனாக எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய ஆய்வுகள் விரிவாக்கப்பட வேண்டும். “அரபு வசந்தம்” என்ற வெற்றிகரமானதும் தொடர்ச்சியானதுமான அரசிற்கெதிரான கிளர்ச்சிப் போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் சமூகவளைத்தளங்கள் ஆற்றிய பங்கினை இன்னமும் தொடர வழியிருக்கின்றதா என்பது பற்றியும் மேலும் ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தமிழ்வளர்ச்சியும் ஊடகமொழியும்

தமிழ் ஊடகங்களைப் பொறுத்தளவில் மாற்றுமொழிச் சொற்களை அளவிறந்து கையாளும் கேடு தொடர்கின்றது. சமஸ்கிருத மொழிக்கலப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் எழுதும் பாங்கு ஊடகங்களில் இயல்பானதொன்றாகி விட்டது. புதுமைகளையும் உலகப்போக்கையும் அறிவியலின் இற்றைப்படுத்தல்களையும் உடனுக்குடன் முகப்புக்கொடுத்து அறிமுகம் செய்யும் ஊடகங்களானவை நல்ல தமிழ்ச்சொற்களை உருவாக்கிப் புழக்கத்திற்கு விடும் பாரிய பொறுப்புணர்வைக் கொண்டிருக்கின்றன. தமிழின் வேர்ச்சொற்களும் இலக்கண அமைப்பும் சொல்லுருவாக்கத்திற்கு எல்லையற்ற வாய்ப்பை அளிப்பன. தமிழின் தனித்தியங்கும் ஆற்றலும் அறிவுலகை எடுத்தாளும் புத்தாற்றலும் ஊடகவாயிலாக வெளிவர ஊடகங்கள் பங்களிக்க வேண்டுமேயன்றி, தமிழிற்கு இழிவுசெய்யும் வகையில் தமிழ் ஊடகங்களின் மொழிப்பயன்பாடு அமைந்துவிடக்கூடாது என்பதில் தமிழ் ஊடகங்கள் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.

“இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும்” என்ற புரட்சிப் பாவலன் பாரதிதாசனின் வரிகளை நினைவிற்கொண்டு “வரலாற்று நோக்கில் தமிழ் ஊடகங்களின் மொழிப் பயன்பாடு” என்பது பற்றி இன்னொரு ஆய்வுக் கட்டுரையுடன் தொடர்புகொள்வோமாக.

2023- 06-23

 

 411 total views,  3 views today

(Visited 195 times, 1 visits today)