வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 7

தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் புலமைமரபு

தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமான உறவுநிலை எத்தகையது என்ற புரிதலினை இக்காலத் தமிழர் அறிந்துணர வேண்டுமெனின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதனது புலமைத் தொடர்ச்சிக்கும் ஈழத்தார் எத்துணை பங்களித்தனர் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளல் வேண்டும். தமிழ்நாட்டினைக் கொள்ளயடித்தலையும் சூறையாடலையும் மட்டுமே நோக்காகக்கொண்டு கி.பி 1323 இல் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தபோது, அருந்தமிழ்ச் சுவடிகள் மற்றும் தொன்மையான நூற்களானவை பாதுகாக்கப்படும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் தமிழ்ப்புலமையாளர்களும் மதுரை, தஞ்சைப் பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஊர் பெயர்ந்தனர்.

கி.பி.1215 இலிருந்து மதுரைப் பாண்டியர் மரபைச் சேர்ந்தவர்கள் அரியணையில் அமர்ந்த யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததெனினும் மாலிக்கபூர் படையெடுப்பின் பின்பும் அதைத்தொடர்ந்த தெலுங்கு விசயநகர அரசு தமிழ்நாட்டை வன்கவர்ந்ததைத் தொடர்ந்துமே யாழ்ப்பாண அரசை வலிமைப்படுத்திச் சிறக்கச்செய்வதே தமிழை வளர்க்க உகந்த வழி என்று அந்நாட்களில் மதுரையைத் தளமாகக்கொண்டியங்கிய புலமையாளர்கள் உணர்ந்து, அதன்வழி செயலுறுத்தினர். இதன் தொடர்ச்சியாகவே, யாழ்ப்பாணத்தில் 1400 களின் தொடக்க காலத்தில் பராரசசேகர மன்னனால் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பின்னாட்களில் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு ஈழத்தில் நல்ல புலமை மரபு உருவாக வழியமைத்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

கி.பி.1336 இல் தொடங்கிய தெலுங்கு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் சமசுக்கிருதமும் தெலுங்குமே அரச அணைவு பெற்றிருந்தன. அத்துடன், தமிழினை மாற்றாந்தாய் மனப்போக்குடன் தெலுங்கு ஆட்சியர் அணுகியதோடு மட்டுமல்லாமல் தமிழை இழிந்துரைப்பதையும் தமது இயல்பாக வைத்திருந்தனர். ஆளுகின்ற சமசுக்கிருத, தெலுங்கு சார்பு ஆட்சியால் தமிழ் வளர்ச்சிப்பணியும் தமிழ் கற்றலும் பாரிய இடரை எதிர்கொண்டன. விசயநகரப் பேரரசின் தொடர்ச்சியாக கி.பி 1509 இல் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சி எனும் தெலுங்கராட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தமிழ் வளர்வெய்த முடியாமல் மேலும் இன்னல்களிற்குள்ளானது. தெலுங்கு நாயக்க மன்னான திருமலைநாயக்கனைத் (1572- 1596) தேடிச் சென்று “திருமலைநாயக்கன் காதல்” என்ற தலைப்பில் பாவியம்பச் சென்ற கவிராயர் என்ற புலவரைப் பார்த்து “அரவம் அத்துவானம்” என இழித்து எள்ளல் செய்தான் திருமலை நாயக்கன். “அரவம் அத்துவானம்” என்றால் தமிழ் கேவலமானது, இழிவானது என்று பொருள். “சந்தியிலே மாமியிட்ட சண்டையிலே வந்ததொரு தொந்திவடுகன் சுகிப்பானோ” என கவிராயர் சினங்கொண்டு திருமலை நாயக்கன் என்கிற தெலுங்கு மன்னனை “தொந்தி வடுகன்” என எள்ளல் செய்தார். எனின், தெலுங்கு நாயக்கர் காலத்தில் தமிழும் தமிழரும் எத்துணை இடர்களை எதிர்கொண்டிருப்பரெனப் புரிந்துகொள்ளலாம். செஞ்சி, தஞ்சை, மைசூர், காளகத்தி மற்றும் மதுரை என தொடர்ந்த தெலுங்கு நாயக்கர் ஆட்சியானது கி.பி 1736 வரை தமிழ்நாட்டில் நீடித்திருக்கின்றது. மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள் இந்த சமசுக்கிருத- தெலுங்குச் சார்பு நாயக்கர் ஆட்சி நடைபெற்றிருக்கின்றது. கழகம் (சங்கம்) அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் செந்தமிழின் நிலை பேரிடர் மிகுந்ததாகவே தெலுங்கு நாயக்கர் காலத்தில் இருந்தது. அத்துடன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு தொடர்ந்த மராத்தியர்களின் (1676-1857) ஆட்சியிலும் தமிழ் வளர்வெய்த முடியாமல் பொலிவிழந்து போகலாயிற்று.

500 ஆண்டுகளிற்கும் மேலாக தமிழ்நாடானது தமிழ்மொழிக்கு எதிராக வன்மம் கொண்ட மாற்றார்களின் ஆட்சிக்குள் சிக்குண்டு கிடந்தமையால் தமிழ்மொழியானது நனிசிறப்பும் வளர்ச்சியும் அடையாமல் இருந்தது மட்டுமல்லாமல் தமிழ்ப் புலமை மரபும் தன்னிலை கெட்டுப் போகும் நிலையில் இருந்தது. அரியணை இசைவோ அல்லது புரவலர்களின் ஊக்கமோ இன்றி இருந்த இத்தகைய சூழலிலும் சிற்றிலக்கியங்கள் பல இயல்பூக்கத்துடன் தமிழ்ப் புலமையாளர்களால் இயற்றப்பட்டன. அவற்றுள், தெலுங்கு வடுகராட்சியானது தமிழர்கட்கும் தமிழிற்கும் இழைத்த கொடுமைகளைப் பள்ளு இலக்கியங்களானவை வெகுவாக வெளிக்கொணர்ந்திருந்தன. ஆனால், ஈழத்தில் யாழ்ப்பாணத்தைத் தளமாகக்கொண்டு தமிழர்க்கு ஓரளவு வலிமைமிக்க அரசு கி.பி 1215 முதல் கி.பி 1624 வரை இருந்தது. அதனால், தெலுங்கு வடுகராட்சி தமிழ்நாட்டில் 5 நூற்றாண்டுகளாகத் தொடர்ந்திருந்தாலும், ஈழத்தில் நிலைபெற்றிருந்த இந்தத் தமிழரசானது தமிழை வளர்க்கப் பெரிதும் பொருத்தமானதாகவும் உகந்ததாகவும் இருந்தது. பண்டைத் தமிழ் நூற்கள் பல யாழ்ப்பாணத்திலே பாதுகாக்கப்பட்டிருந்தன.

போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தை வன்கவர்ந்ததைத் தொடர்ந்து தமிழர்களின் வழிபாட்டிடங்கள், கல்விக் கூடங்கள் என்பனவற்றைத் தேடித் தேடி அழித்து ஒரு காட்டாட்சியை மேற்கொண்டனர். மதுரையில் இருந்து காப்பாற்றிக் கொண்டுவந்த பல ஓலைச்சுவடிகள் போர்த்துக்கேயரின் காட்டாட்சியில் அழிவுற்றன. இருப்பினும், தமிழ் மக்களால் பல ஓலைச்சுவடிக் குறிப்புகளும் நூற்களும் பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டன. பின்னாட்களில் பல சைவ சித்தாந்த நூற்கள் யாழ்ப்பாணத்திலிருந்தே மதுரை மற்றும் திருவாடுதுறை ஆதீனத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன. தொல்காப்பியத்தின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் இல்லாதுபோனமையால் தொல்காப்பியத் தொகுப்பானது முழுமையடையாதிருந்தது. யாழ்ப்பாணத்திலே பாதுகாக்கப்பட்டிருந்த தொல்காப்பியத்தின் சில பகுதிகள் கிடைத்த பின்பே தொல்காப்பியத் தொகுப்பு முழுமைபெற்றது. இன்று உலகின் முதலாவது இலக்கண நூல் என்ற வகையில் தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் தொல்காப்பியமானது முழுமையாக எமது கைகளிற்குக் கிடைப்பதற்கு ஈழமண் எத்துணை பங்காற்றியிருக்கின்றது என்பதைத் தமிழரில் பெரும்பாலானோர் அறிவாரில்லை.

தமிழ்நாட்டில் 5 நூற்றாண்டுகளாகத் தமிழ் மீது வன்மம் கொண்ட ஆட்சியானது தொடர்ந்ததைப் போலல்லாது, ஈழத்தில் காட்டாட்சி செய்த போர்த்துக்கேயரின் ஆட்சி 1658 இல் டச்சுக்காரரின் வருகையுடன் முடிவிற்கு வந்தது. ஒப்பீட்டளவில் டச்சுக்காரரின் ஆட்சியானது தொல்லைகள் குறைந்ததாகவே இருந்தது. அவர்கள் தமிழர்களின் வழிபாட்டிடங்களையோ கல்விக் கூடங்களையோ போர்த்துக்கேயரைப் போன்று இடித்தழிக்கவில்லை. டச்சுக்காரர்கள் வணிகமாற்றுவதையே குறிக்கோளாகாக் கொண்டிருந்தனரேயன்றி தமிழர்களுடைய நம்பிக்கைகள், மரபுசார்ந்த வாழ்வியல் மற்றும் இன்னபிற மரபுடைமைகளைச் சீர்கெடுக்க நினைக்கவுமில்லை, அவற்றில் தலையிடும் விருப்பையும் குறிப்பிடுமளவிற்குக் காட்டவில்லை.  இதனால் போர்த்துக்கேயர் காலத்தில் ஈழத்தில் வளர்வெய்த முடியாமல் இருந்த தமிழின் நிலையானது மாற்றங்கண்டு டச்சுக்காரரின் ஆட்சியில் மீண்டெழ இயன்றது. யாழ்ப்பாணத்தில் டச்சுக்கார நிருவாகத்தில் உயர் பதவி வகித்து வந்த வில்வராய முதலியார் (1716- 1780) என்பவர் தமிழ்மொழி கற்றலில் ஒரு புதுப்பாய்ச்சலைச் செய்யத் தம்மாலான வகைகளில் முயன்றார். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஊர்பெயர்ந்த கூழங்கைத் தம்பிரான் (நன்னூலிற்கு உரைசெய்தவர்) என்பவருடன் நட்புக்கொண்டு தமது வீட்டில் தமிழிலக்கண, இலக்கியக் கற்றலிற்கு வில்வராய முதலியார் வழியேற்படுத்தினார். வணிகமாற்றுவதற்காக வந்திருந்தவரும் யாழ்ப்பாண வைத்தீசுவரன் கோயிலைக் கட்டிய வைத்திலிங்கச் செட்டியாரின் தகப்பனாருமாகிய கோபாலச் செட்டியார் என்பவர் காஞ்சி கூழங்கைத் தம்பிரானுடனும் வில்வராயருடனும் நட்புக்கொண்டு தமிழிற்குத் தம்மாலியன்றளவு வசதிசெய்ய பெரும்புரவலராகும் உறுதிகொண்டார்,

காஞ்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஊர்பெயர்ந்த கூழங்கைத் தம்பிரானும் யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த சிற்றம்பலப்புலவருமே ஈழத்தில் தமிழ்ப்புலமை மரபானது மீண்டெழ அடித்தளத்தை இட்டவர்களாவர். வில்வராய முதலியாரின் மகனாகிய யாழ்ப்பாணம் நல்லூர் சின்னத்தம்பிப்புலவரே மறைக்காடு ஈசுவரம் (வேதாரண்யம்) சென்று அக்கோயிலிற்கு மறைசையந்தாதி பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த சிற்றம்பலப்புலவரிடமும் கூழங்கைத் தம்பிரானிடமும் தமிழை நன்கு கற்ற சேனாதிராச முதலியார் என்பவர், தமிழ்ப்புலமை மரபின் தொடக்ககால வளர்ச்சிக்கு வித்திட்டவராயினார். கம்பரிற்கு உறுதுணையாகவிருந்த சடையப்ப வள்ளலின் வழித்தோன்றலாகிய மண்ணாடுகொண்ட முதலியாரின் பரம்பரையில் தோன்றியவரே சேனாதிராச முதலியாரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. சேனாதிராச முதலியாரின் தாயாரின் முன்னோர்கள் மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு ஊர்பெயர்ந்தவர்கள் என்பதை அவர் நன்கு அறிந்தும் பதிவுசெய்தும் இருக்கிறார்.

சரவணமுத்துப்புலவர், ஆறுமுகநாவலர், அம்பலவாணப் பண்டிதர், நீர்வேலி பீதாம்பரப்புலவர், வல்வை ஏகாம்பரப்புலவர், காரைதீவு மு.கார்த்திகேயப்புலவர் போன்ற சிறந்த தமிழ்ப்புலமையாளர்களை உருவாக்கியவர் சேனாதிராச முதலியாரே. சேனாதிராச முதலியார் மற்றும் அவரின் மாணவராகிய சரவணமுத்துப்புலவர் ஆகியோரிடம் மாணவராகவிருந்து தம்மை வளர்த்துக்கொண்டவரே தமிழ் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத இடத்திலிருக்கும் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் ஆவார். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆறுமுகநாவலரே ஓலைச்சுவடிகளாகக் கிடைத்த தமிழ்நூற்களைத் தேடித்தேடிச் சேகரித்து அவற்றை அச்சிலேற்றிப் பதித்த முன்னோடியாவார். ஆறுமுகநாவலரைத் தொடர்ந்தே யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை மற்றும் உ.வே. சாமிநாதய்யர் ஆகியோர் அப்பணியை மேலும் முன்னெடுத்துச் சென்றனர் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். திருவாடுதுறை ஆதீனத்தில் ஆறுமுகநாவலர் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்ட ஆதீனத்தார் அவரிற்கு நாவலர் என்ற பட்டமும் அளித்துப் பல்லக்கிலும் தூக்கிச் சென்றனர். ஆகமம் மற்றும் தீட்சை தொடர்பாக ஆறுமுகநாவலர் தெரிவித்து வந்த கருத்துகளானவை தமது மேலாதிக்கத்திற்கு ஊறுவிளைவிப்பன என்று கருதிய தில்லை (சிதம்பரம்) தீட்சிதர்கள் ஆறுமுகநாவலர் தம்மைத் தாக்குவதற்காகச் சிதம்பரம் தேடி வந்தார் என மஞ்சக்குப்பம் காவல்நிலையத்தில் பொய்வழக்கைப் பதிவுசெய்தனர் என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். ஆனால், பின்னாட்களில் வைதீகம் என்ற சேற்றுக்குள் வீழ்ந்து சாதியச் சகதிக்குள் உழன்றவராகி, தமிழர் மெய்யியல் மரபில் ஆறாத வடுவை ஆறுமுகநாவலர் ஏற்படுத்தியவர் ஆயிற்றார் என்பதை இங்கு சுட்டியாக வேண்டும். இது பற்றி விரிவாக வேறொரு தளத்தில் விரித்துப் பேசலாமென்ற நோக்கில் இவ்விடத்தில் விரிவஞ்சி இது தொடர்பில் இத்துடன் நிறுத்துவோம்.

வைதீகத்தில் உழன்ற வீண்செயலிற்கு வெளியே நோக்கினால், ஆறுமுகநாவலர் ஆற்றிய தமிழ்ப்பணி என்பது அவரைத் தமிழ் மறுமலர்ச்சியின் மூலவர் எனக் கூறினும் மிகையன்று என்ற இடத்தில் வைத்தது எனலாம். தமிழ்நாட்டில் சிதம்பரத்திலும் ஈழத்தின் பல பாகங்களிலும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவித் தமிழிலக்கண மற்றும் இலக்கியக் கல்வியை ஊக்குவித்தார். யாழ்ப்பாணத்தில் தம்மிடம் கற்றுத் தேர்ந்த சபாபதி நாவலர், திருஞானசம்பந்தப்பிள்ளை போன்ற மாணவர்களை சிதம்பரத்திற்கு அனுப்பி அங்கு தமிழைக் கற்பிக்கவும் ஆய்வுகளில் ஈடுபடவும் செய்தார் ஆறுமுகநாவலர். சிதம்பரத்தில் அவரால் நிறுவப்பட்ட இந்தப் பள்ளியில் படித்து நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் புலமையெய்தினர் என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.

ஆறுமுகநாவலரின் சமகாலத்தவராகிய யாழ்ப்பாணத்து சுன்னாகம் முருகேசப் பண்டிதர் என்பவர் பண்டிதர் தேர்விற்காக கும்பகோணத்தில் அமைந்திருந்த கல்விக் கூடத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு பண்டிதர் தேர்விற்கான வினாத்தாளிற்கு சில வினாடிகளில் பதில் எழுதிவிட்டு எழுந்த முருகேசனாரை என்ன எதற்கென வினவ, தாம் வினாக்களிலுள்ள இலக்கண வழுக்களைச் சுட்டிக்காட்டியிருப்பதாகக் கூறியிருக்கின்றார். அதனைப் படித்துப்பார்த்த தலைமைப் பண்டிதர் அவர்கள் தேர்வேதுமின்றி முருகேசப் பண்டிதரைத் தலைமைப் பண்டிதராக்கினாராம். கும்பகோணம், சிதம்பரம், திருப்பத்தூர், சென்னை என தமிழ்நாட்டின் பல இடங்களில் தமிழைக் கற்பித்த முருகேச பண்டிதர் கும்பகோணச் சிறப்பை இயம்பும் “குடந்தை வெண்பா” என்ற நனிசிறந்த இலக்கியத்தை இயற்றினார். தமிழிலக்கணத்தில் தேர்ந்த நுண்மாணுழைபுலம் மிக்கார் அக்காலத்தில் இவரன்றி எவருமில்லை என்ற அளவிற்கு இலக்கணத்தில் பேரறிவு பெற்றிருந்த முருகேசப் பண்டிதர், ஏனைய அறிஞர்கள் செய்யும் இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனால் இவரை”இலக்கணக் கொட்டன்” என அழைப்பர்.

சுன்னாகம் முருகேசப் பண்டிதரின் மாணவனாக இருந்ததால் தமிழிலக்கணத்தில் கூரறிவு பெற்றவராக யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமாரசமிப்புலவர் உருவானார். குமாரசாமிப் புலவரிற்கு ஏடுதொடக்கியவர் அவர்களின் குலகுருவான வேதாரணியம் நமசிவாய தேசிகர் ஆவர். இதை இங்கு சுட்டுவதன் நோக்கமென்னவெனில் வேதாரணியம் என்பது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் தமது ஊர்களில் ஒன்றாகவே பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவூட்டவே. இது குறித்து இப்பத்தியின் இறுதியில் விரிவாகப் பார்க்கலாம். 1901 இல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தைப் பாண்டித்துரைத் தேவர் நிறுவியபோது மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வளர்க்க வரும்படி குமாரசாமிப் புலவரிற்கு சிறப்பழைப்பு விடுத்திருக்கிறார்.

உடல்நிலை கருதி அவரிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து மதுரைக்கு ஊர்பெயர இயலவில்லை. ஆனாலும் மதுரைத் தமிழ்ச்சங்க இதழான “செந்தமிழ்” வெளியீடுகளில் தொடர்ந்து அரிய பல ஆய்வுகளை எழுதிவந்தார். செந்தமிழில் வெளியாகிய சுன்னாகம் குமாரசாமிப்புலவரின் எழுத்துகளைப் படித்த மு.இராகவ ஐயங்கார் மற்றும் உ.வெ.சாமிநாதையர் ஆகியோர் அவரின் எழுத்துகளைப் பாராட்டியும் அத்தகைய புலமையடைய எத்துணை காலம் உழைத்தீர்களோ என்று வியந்து அவரிற்கு மடல் எழுதிவந்துள்ளனர். 1931 இல் சென்னையாட்சியர் அகராதி எழுத முடிவுசெய்து குமாரசாமிப்புலவரை அழைத்துச் செல்ல நேரில் யாழ்ப்பாணம் சென்றிருக்கின்றனர். உடல் நலிவுற்றிருந்த அவரால் ஊர்பெயர இயலாமையை உணர்ந்து அவர் சேகரித்து வைத்திருந்த சொற்தொகுப்புகளையும் அகரமுதலிக் குறிப்புகளையும் ஒரு தொகைப் பணம் கொடுத்து வாங்கிச் சென்றிருந்தனர் அன்றைய சென்னையாட்சியர். இவரது பிள்ளைகள் தமிழ்நாட்டில் பேராசிரியர்களாகக் கடமையாற்றியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகு என்றென்றும் நினைவிற்கொண்டே தீர வேண்டும். இவரே தொல்காப்பியப் பதிப்பை முழுமைபெறச் செய்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்பெற்ற முதலாமர் இவரே. பின்பு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றியிருக்கின்றார். ஆறுமுகநாவலரிடம் மெய்ப்புப்பார்ப்பித்து இவர் பதிப்பித்த நூற்கள் ஏராளம். இவரினைப் பற்றியே உ.வே.சாமிநாதையர் சுவடிகளைப் படியெடுத்து அச்சேற்றினார். ஆனால், தமிழ்த்தாத்தா என மதிப்பளித்துப் போற்றப்படும் உ.வே.சாமிநாதையரை அறிந்த பலரும் அவரிற்கு முன்னோடியாக அப்பணி செய்த ஆறுமுகநாவலர் மற்றும் சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரை அறிந்திலர்.

1800 களின் தொடக்கத்தில் மிகச்சிறந்த தமிழறிஞராக இருந்த யாழ்ப்பாணத்து புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் பல தமிழ்ப் புலமையாளர்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளார். வேதாரணியத்திலுள்ள மறைக்காடு ஈச்சரம் கோயிலிற்கு இவர் பாடிய ஊஞ்சல் காலத்திற்கும் மெய்ச்சத்தக்க சொற்செறிவு கொண்டது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினமான “மோகனாங்கி” என்ற புதினத்தை  எழுதிய ஈழத்தின் திருகோணமலைச் சேர்ந்த தி.த சரவணமுத்துப்பிள்ளை என்பவர் எழுதிய “தத்தைவிடு தூது” என்ற நூலே பாரதியாருக்கு பெண்விடுதலை குறித்த பார்வையை வழங்கிப் பாரதியாரில் சிந்தனை மாற்றத்தினை ஏற்படுத்தியது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இவரும் இவரது தமையனான தி.த.கனகசுந்தரம்பிள்ளை என்ற ஈழத்துத் தமிழ்ப்புலமையாளரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மிகச் சிறந்த மாணவர்களாகவும் பின்னாட்களில் சிறந்த ஆசிரியர்களாகவும் இருந்திருக்கின்றனர். திருகோணமலை தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் உதவியிலேயே யாழ்ப்பாணத்துப் புலோலியூர் கதிரவேற்பிள்ளை சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். தமிழ்த்தென்றல் என்று மதிப்பளிக்கப்படும் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களை தமிழ்ப்புலமையாளராக உருவாக்கியவர் புலோலியூர் கதிரவேற்பிள்ளை அவர்களே என்பதை திரு.வி.க அவர்கள் பல இடங்களில் பதிவுசெய்ததோடு மட்டுமல்லாமல், தனது முதலாவது நூலாக “யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் நா. கதிரவேற்பிள்ளை சரித்திரம்” என்று தலைப்பிட்ட நூலையே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தில் பாரதியார் பற்றி இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும். எட்டையபுர அரண்மனைக்கு யாழ்ப்பாணப் புலவர் ஒருவர் சென்றிருந்தபோது அங்கு சிறுவர்களாகவிருந்த சுப்பரமணிய ஐயர், சோமசுந்தரம்பிள்ளை என்ற இரு சிறுவர்களும் நற்றமிழில் பாவியற்றும் திறமையைப் பெற்றிருந்தமையை வியந்து “பாரதி” என்ற பட்டப்பெயர் சூட்டிச் சிறப்பித்தாராம். அதனாலே, பின்னாட்களில் சுப்பிரமணிய பாரதியார் என்றும் சோமசுந்தர பாரதியார் என்றும் அவர்கள் பெயர்பெற்றனராம்.

தமிழில் சொல்லாராய்ச்சியின் முன்னோடி யாழ்ப்பாணத்து சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களே. இவர் 72 மொழிகளைக் கற்று அவற்றுள் 18 மொழிகளில் எழுத்தாற்றல் பெற்றிருந்தார். இவரை அடியொற்றியே மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் தமது சொல்லாராய்ச்சிகளை முன்னெடுத்தார் எனிலும் சொல்லாராய்ச்சியில் மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் அவர்கள் வியத்தகு உயரத்தைப் பின்னாட்களில் தொட்டார் என்பதோடு ஞானப்பிரகாசரால் தொடக்கிவைக்கப்பட்ட சொல்லாராய்ச்சிகளை செம்மையாக முறைப்படுத்தினார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

தென் தமிழீழத்தின் அம்பாறையிலுள்ள காரைதீவைச் சேர்ந்த விபுலானந்தர் அவர்களே “யாழ்நூல்” என்ற இசையாராய்ச்சி நூலை வெளியிட்டவர். அறிவியற்றுறையில் இலண்டன் பல்கலைக்கழகத்தால் பட்டமளிக்கப்பட்டுச் சிறந்த அறிவியல் ஆசானாக விளங்கினாலும், முத்தமிழில் அவர்கொண்ட எல்லையற்ற ஈடுபாட்டால் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி, அதனை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு சென்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் இவரே. 1936 இல் தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு கூட்டப்பட்டபோது அம்மாநாட்டுக் குழுத் தலைவரக இருந்ததோடு மட்டுமல்லாமல் வேதியல் துறையின் கலைச்சொல்லாக்கக் குழுவின் தலைவராக இருந்து வேதியல் துறைக்கான கலைச்சொற்களை நற்றமிழ் கொண்டு உருவாக்கியவர் விபுலானந்தர் அவர்களே. இராஜாஜியின் தலையீட்டில் இயற்பியல் துறைக்கான சொல்லாக்கக் குழுவில் பிராமணர் பலர் இடம்பெற்றதால் இயற்பியல் துறைக்கான கலைச்சொற்களில் சமசுக்கிருதச் செல்வாக்குக் கூடுதலாக இருக்கின்றதென்பதை இவ்விடத்தில் ஈண்டு நோக்க வேண்டும்.

பாண்டித்துரைத் தேவர் அவர்களுடன் இணைந்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதனது முதலாவது தலைவராகப் பொறுப்புவகித்த இராமநாதபுரத்து மகாராசா பாஸ்கரசேதுபதி மீது யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் பிரபந்தம் பாடியுள்ளதோடு, சிதம்பரம் கோயில் மீது தேர்வெண்பாவும் பாடியுள்ளார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரும் இந்த சேதுபதி மன்னன் மீது நான்மணிமாலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த தம்பையாப் புலவரும் யாழ்ப்பாணத்து வித்துவான் சிவானந்தையரும் இணைந்தே சிதம்பரத்தில் புலியூர்ப்புராணம் இயற்றியதில் முதன்மைப் பங்கு வகித்திருக்கின்றனர். யாழ்ப்பாணம் காரைதீவைச் சேர்ந்த கார்த்திகேயப்புலவர் தில்லை சிதம்பரம் மீது “திருத்தில்லைப் பல்சந்தாதி” பாடியுள்ளார். தமது  வாழ்நாளின் இறுதிக்காலங்களைச் சிதம்பரத்தில் கழிக்க விரும்பிப் புலவர்கள் உட்பட   ஈழத்தைச் சேர்ந்த பலர் சிதம்பரத்திற்குச்சென்று தங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கின்றனர். அத்தகையோரில் ஒருவராக தமிழ்ப்புலமையாளரான யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணிய தம்பிரான் சிதம்பரம் சென்று வசித்திருக்கிறார். குமாரசாமிப்புலவர், விபுலானந்தர், முத்துத்தம்பிப்பிள்ளை, ஞானப்பிரகாசர், தென்கோவை கந்தையாபிள்ளை, கதிரவேற்பிள்ளை, சிற்கைலாசபிள்ளை போன்ற ஈழத்தைச் சேர்ந்த புலமையாளர்கள் மதுரைத் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு அரும்பாடாற்றியிருக்கின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்விதழான “செந்தமிழ்” இதழில் 30 வரையான ஈழத்துத் தமிழ்ப்புலமையாளர்கள் எழுதி வந்திருக்கின்றனர் என்பதிலிருந்து தமிழ் வளர்ச்சிக்கு ஈழத்தைச் சேர்ந்த புலமையாளர்கள் நல்கிய பங்களிப்பை நன்கு உணர்ந்துகொள்ளலாம்.

ஈழத்துத் தமிழறிஞரும் தமிழ்த்தாத்தா என வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவருமான யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த கந்தமுருகேசனார் அவர்கள் தமிழ்நாட்டில் தாம் தங்கியிருந்த இல்லத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். பாலர் வகுப்பு முதல் பண்டிதர் வகுப்பு வரையான மாணவர்களால் நிறைந்திருக்கும் அப்பள்ளியில் தமிழ் மட்டுமன்றி கணிதம், புவியியல் மற்றும் தர்க்கம் என்பனவும் கந்தமுருகேசனார் அவர்களால் கற்பிக்கப்பட்டது. வைதீக மறுப்பும் முற்போக்குப் பார்வையும் கொண்டிருந்த தமிழ்ப்பேரறிஞராக விளங்கிய ஈழத்து கந்தமுருகேசனார் அவர்களுடன் அறிஞர் அண்ணாத்துரை, இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன்  போன்ற தமிழக அரசியற் தலைவர்கள் நெருங்கிப் பழகியதோடு, தமிழில் ஏதேனும் ஐயங்கள் ஏற்படும் போது அதைத் தீர்த்துக்கொள்வதற்காக கந்த முருகனார் அவர்களை அணுகுவதை வழக்கமாகவும் வைத்திருந்தனர்.

ஈழத்துஅடிகள் என அழைக்கப்படும் ஈழத்துச்சிவாநந்த அடிகளார் 1930 ஆம் ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் உள்ள கரூருக்கு அருகில் சிவாநந்த ஆச்சிரமம் எனும் அறிவுதய கழகத்தினை நிறுவி நடத்தி வந்தார். இவரிடமிருந்த புரட்சிகரச் சிந்தனைகளால் இவர் துறவறம் பூண்ட அடிகளாராயிருந்தும் தோழர் ஈழத்து அடிகள் என அழைக்கப்பட்டிருக்கிறார். தமிழக வரலாற்றில் இந்தித் திணிப்பிற்கு எதிராக 12.02.1937 அன்று முதலாவது இந்தி எதிர்ப்பு அறிக்கையினை வெளியிட்டவர் ஈழத்து அடிகளே. இந்தித்திணிப்பைக் கொண்டு வர உறுதுணையாக நின்ற இராஜாஜியின் இல்லத்தையும் சட்டமன்றத்தையும் முற்றுகையிடும் போராட்ட அறிவிப்பை அறிக்கையாக்கிய ஈழத்து அடிகளார் குடியரசு இதழில் அதனை வெளியிட்டுத்தருமாறு பெரியாரை அணுகிய போது பெரியார் அக்கறைகொள்ளாமலும் பாராமுகமாகவுமே இருந்திருக்கிறார். பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட ஈழத்து அடிகளார் சிறைப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசு அமைக்கும் கருத்தியலை முன்வைத்து அதன் வரைபடத்தை வெளியிட்ட சி.பா ஆதித்தனார் அவர்களே முதன் முதலில் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு இணைந்த பகுதியை மட்டும் பிரித்தெடுத்துத் தனது வரைபடத்தில் பயன்படுத்தியவர். இதனையே பின்னாட்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பயன்படுத்திக் கொண்டது. இதுவே இன்றைய தமிழீழ வரைபடமாக நாம் அனைவரும் பயன்படுத்துவது என்பதை யாரறிவரோ.

சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தமிழரசுக் கழகத்தை 1946 இல் அமைத்துத் தமிழரசு அமைக்க வேண்டும் என முழக்கமிட்டு மாநாடு நடத்தியபோது தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட வேண்டிய பகுதிகளென அவர் சித்தூர், திருவனந்தபுரம், கோலார் தங்கவயல், காரைக்கால், புதுக்கோட்டை மன்னராட்சி பகுதி, யாழ்ப்பாணம் என பட்டியற்படுத்தி தமிழரசு கோரி முழக்கமிட்டார். அவர் யாழ்ப்பாணம் என்று குறிப்பிட்டது தமிழீழப் பகுதியையே என்ற புரிதல் தேவை. ஏனெனில் அக்காலத்தில் ஈழத்தவர் அனைவரும் யாழ்ப்பாணத்தவர் என்றே தமிழ்நாட்டில் அடையாளப்படுத்தப் பட்டிருந்தனர் என்கிற பார்வை இங்கு தேவையாகிறது. தமிழரசுக் கழகம் என்ற பெயரையே தந்தை செல்வா “தமிழரசுக் கட்சி” என்ற பெயரைச் சூட்டப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

தனித்தமிழ் இயக்கத்தை நிறுவித் தமிழிற்குப் பெருமை சேர்த்துத் தமிழின் தனித்தன்மையை சமசுக்கிருத வன்வளைப்பிலிருந்து காப்பாற்றிய மறைமலை அடிகளார் யாழ்ப்பாணத்தில் வளாகமாக இருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்று தொடர்ச்சியாக ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார் என்பதோடு அவருடன் இணைந்து தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவரான அவரது மகள் நீலாம்பிகையை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருவரங்கனாரிற்கு மணம்முடித்து வைத்துள்ளார். திருவரங்கனார் என்பவரே தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியில் சைவநூற் பதிப்புக் கழகத்தை நிறுவித் தமிழ்ப்பணி தொடர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனிநாயகம் அடிகளார் அவர்களே உலகத் தமிழர் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தெடுத்தவர். அவர் மலேசியாவில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழ்நாட்டை அடியாகக் கொண்ட தமிழறிஞர்களுடன் கிடைத்த நெருங்கிய நட்பின் விளைவாகவே உலகத் தமிழர் கோட்பாடு குறித்த தேவையும் எண்ணமும் அவரில் துளிர்த்திருக்கின்றது. அவரே உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். உலகெங்கும் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கு வித்திட்டவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

இதுகாறும் குறிப்பிட்டவை அனைத்தும் ஈழம், தமிழ்நாடு என எல்லைகளிலும் எண்ணங்களிலும் குறுகிக் கிடக்காமல், தமிழரின் வாழிடத் தொடர்ச்சியாகவே ஈழம் நோக்கப்பட்டதென்பதையும் தமிழ்நாட்டின் ஊர்கள் போலவே ஈழம் அன்று பார்க்கப்பட்டிருக்கின்றதென்பதையும் புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் துணைபுரியும் என நம்புவோமாக. விரிவஞ்சித் தவிர்க்கப்பட்ட இத்தன்மையான தகவல்களைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால் தமிழின ஓர்மைக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்பது உறுதி.

தமிழ்நாட்டில் இற்றைவரை தொடரும் ஈழத்தின் மரபுரிமை

காலனியக் கொள்ளையர்களாலும் அதன் பின் அவர்கள் நலன்கட்காக ஆட்சியலமர்த்தப்பட்ட காலனிய காலடிவருடிகளாலும் ஏற்படுத்தப்பட்ட எல்லைப் பிரிப்புகளின் பின்பும், ஆட்சியதிகாரமின்றிப் போன தமிழினத்தின் மரபுரிமையடிப்படையிலான உறவுநிலையென்பது ஈழம், தமிழ்நாடு என்று குறுகிக்கிடக்காமல் இன்னமும் தொடருகின்றது என்பதற்கு கண்முன் கிடக்கும் சான்றுகளாக மன்னார்- இராமேசுவரம், யாழ்ப்பாணம்- வேதாரண்யம் என்பன இருக்கின்றன என்பதைக் கேள்வியுறாதார் இலர்.

இராமேசுவரக் கோயிலிற்கு ஈழத்தின் நெடுந்தீவிலிருந்து பால் எடுத்துச்செல்லப்படுவதும், யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் முருகன் கோயிலிற்கு தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து மலர்கள் எடுத்து வரப்படுவதும் ஒவ்வொரு நாளைய வழக்கமாக இருந்திருக்கின்றது. ஈழத்திலிருந்து தமிழ்நாடு சென்று திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டுப் படகுகளில் ஊர் திரும்புவது வழக்கமான மரபுவழிப் பயணமாக 1980 கள் வரை நடைமுறையில் இருந்ததென்பதை மனதிற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்ற பரந்தநிலப்பரப்பை ஈழத்தவர்கள் தமது பண்பாட்டுத் தொட்டிலாகவும், தாய்மடியாகவும் தமது சந்தையாகவும் இன்னுமொரு படிமேற்சென்று கூறினால் அதைத் தமது நிலமாகவே நோக்கினர். அவ்வாறாக, ஈழத்திலிருந்து படகு வழியாக தமிழ்நாட்டிற்கு 1 மணிநேரம் பயணப்படுவதென்ற தமிழர்களின் மரபுவழிப்பட்ட பயணமானது இந்தியா, சிறீலங்கா என்ற நவகாலனிய நாடுகளின் எல்லை உருவாக்கத்தின் பின்பு கள்ளத்தோணி என்று முத்திரை குற்றப்பட்டதோடு, தமிழர் கடலில் காலங்காலமாகத் தொடர்ந்த தமிழரின் கடல் வணிகமானது கடற்கடத்தலாக அடையாளப்படுத்தப்பட்டுக் கடற்பாதுகாப்பு என்ற பெயரில் சட்டம்போட்டுத் தடுக்கப்பட்டதன் வாயிலாக, தமிழர் கடலில் தமிழர்களின் மரபுரிமையானது மறுக்கப்பட்டது என்பதைத் தமிழர்கள் ஈண்டு நோக்க வேண்டும்.

கச்சதீவு தமிழர்களின் மண். பன்னெடுங்காலமாக, தமிழ் கடற்றொழிலாளர்கள் ஓய்வெடுத்துச் சென்ற மண் அது. வெள்ளையர்கள் நாட்டெல்லை வகுத்ததன் பின்பு, அதாவது இரு நாடுகளுக்குள் அகப்பட்ட பின்பும் கூட தமிழக, தமிழீழ கடற்றொழிலாளர்களின் உறவுத்தளமாக கச்சதீவு இருந்து வந்துள்ளது. மன்னார்- இராமேசுவரத்திற்கு இடையிலான திருமண உறவுகள் விழாக்கோலம் பூண்ட இடமாக கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இருந்து வந்துள்ளது, வருகிறது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

நாகை வேதாரண்யத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான தொலைவு என்பது 43 கடல் மைல்கள் மட்டுமே. அங்குள்ள மறைக்காட்டு ஈச்சரம் என்ற வரலாற்றுப் பெயர்கொண்டதும், இன்று வேதாரண்யேசுவரர் கோயில் என அழைக்கப்படுவதுமான வரலாற்றுப் புகழ்பெற்ற கோயிலானது யாழ்ப்பாணத்துடன் எத்தகைய அணுக்கத்தைக் கொண்டது என்பதை அறிந்துகொள்வதென்பது தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையே இற்றைவரை நிலவும் மரபுறவினை விளங்கிக்கொள்ள உதவியாயமையும்.

இக்கோயிலின் மூடிக்கிடந்த திருக்கதவைத் திறக்க திருநாவுக்கரசரும் சம்பந்தரும் பதிகம் பாடினரெனக் கூறப்படுவது ஒரு புறமிருக்க, முடிவாக தேவார மும்மூர்த்திகளால் பாடல்பெற்ற கோயிலாக சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் திகழ்கின்றதென்பதை யாவருமறிவர். யாழ்ப்பாணம் வரணி ஆதினத்தின் நிருவாகத்திற்குட்பட்டதாகவே இக்கோயில் இன்றும் இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளல் வேண்டும். இக்கோயிலின் அறங்காவற் பணியில் யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்டவர்களே இன்றுவரை இருக்கின்றார்கள் என்பதைப் பலரும் அறிந்திலர். இக்கோயிலில் வரணி (யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்) மடம் என்பது உள்ளது. அக்கோயிலின் புறப்பக்கமாக உள்ள தெருவிற்கு “யாழ்ப்பாணத்தார் தெரு” என்ற பெயரே அண்மை வரை இருந்தது. மிக அண்மையில் “யாழ்ப்பாணத்தார் தெரு” என்ற தெருப்பெயரை “புதுவீதி” என மாற்றியுள்ளனர். எனிலும், “யாழ்ப்பாணத்தார் தெரு” என்பது இன்றும் அங்கு வழக்கிலே தான் உள்ளது.

இந்த வேதாரண்யேசுவரர் கோயிலிலுள்ள “மறைக்காட்டு கல்வெட்டு” என்று அழைக்கப்படும் கல்வெட்டில் வரணி, சுழிபுரம், காரைதீவு, மூளாய், புலோலி, மந்துவில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி, பனங்காமம், கரணவாய், உடுப்பிட்டி, கைதடி, நவிண்டில், இடைக்காடு, துன்னாலை, நல்லூர், மாதகல் போன்ற யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்ப்பெயர்களைக் குறிப்பிட்டு அவ்வூர்களைச் சேர்ந்தோர் கோயிலின் வளர்ச்சிக்குத் திருக்கொடை வழங்கியதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்கொடை வழங்கியவர்களின் பெயர்களைக் குறிப்பிடும் போது யாழ்ப்பாணம் என்று குறிப்பிடாமல் அங்குள்ள சிற்றூர்களை எல்லாம் கல்வெட்டிற் பொறிக்குமளவிற்கு இக்கோயிலும் அதன் சூழலும் யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் போல நோக்கப்பட்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள இயலுமாகின்றது.

ஈழத்தவர்கள் இக்கோயிலிற்குச் சென்று தங்கி, அங்கிருந்து சிதம்பரம் சென்று வருவதைத் தமது வழக்காக வைத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரே இக்கோயிலிற்கு மறைசையந்தாதி பாடியவர். ஆறுமுகநாவலர் இறந்த பின்பு அவர் செய்த பூசைகளைத் தொடர வேதாரணியத்தைச் சேர்ந்த சைவாசாரியர் ஒருவரே யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். சுன்னாகம் குமாரசமிப் புலவரிற்கு ஏடுதொடக்கியவர் அவர்களின் குலகுருவான வேதாரணியம் நமசிவாய தேசிகர் ஆவர். புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள் இக்கோயிலிற்கு ஊஞ்சல் பாடியுள்ளார். நாகை வேதாரணியத்தில் அமைந்துள்ள இக்கோயிலானது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களின் மரபுரிமையாகவே இன்றுவரை பார்க்கப்படுகின்றது என்பதை இங்கு கூறுவதன் வாயிலாக தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமான பிணைப்பென்பது எல்லைகளற்றதாகவே இருந்தது, இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறோம்.

தொடரும்……………….

 381 total views,  3 views today

(Visited 40 times, 1 visits today)