வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 6

ஈழத்தின் தமிழராட்சி

சோழர் ஆட்சியின் எழுச்சியாக, கி.பி 993 இல் இராசராசசோழன் தமிழரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த சிங்கள ஆட்சியரை வீழ்த்தி ஈழத்தின் பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு மும்முடிச் சோழமண்டலம் எனப்பெயரிட்டு ஈழத்தின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்ததோடு, இராசராசசோழனின் மகனான இராசேந்திரசோழன் கி.பி 1017 இல் உறுகுணையில் இருந்து சோழருக்கு எதிராகச் சூழ்ச்சியில் ஈடுபட்ட சிங்களவரைத் தோற்கடித்து இலங்கைத்தீவு முழுவதையும் ஒரு குடையின் கீழ்க்கொண்டு வந்து ஆட்சி நடத்தினான். கி.பி 1070 வரை தொடர்ந்த சோழரின் வலிமையான ஆட்சியில் சைவக் கோயில்கள் பல அமைக்கப்பட்டன. பதவியா, திருகோணமலையிலுள்ள கந்தளாய், கிளிவெட்டி மற்றும்  மன்னார், பொலநறுவை என சைவக்கோயில்கள் பல சிறப்புப்பெற்றிருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் போதுமானளவு உண்டு. இவ்வாறு சோழர்களின் பகுதியாக ஈழத்தின் வாழ்வியல் கி.பி 1250 வரை தொடர்ந்தது. பொலநறுவையில் 30 இற்கு மேற்பட்ட சைவ மற்றும் வைணவ கோயில்கள் இருந்திருக்கின்றன என்பதுடன் அவற்றுள் காலவோட்டத்தாலும், கைவிடப்பட்ட நிலையாலும், காடுமண்டியும் சிதைந்தழிந்தும் போக எஞ்சியவற்றில் ஒரு கோயிலானது இராசராசசோழனின் மனைவியின் பெயரினை அடையாளப்படுத்துமாறு வானவன் மாதவி ஈச்சரம் என்ற பெயரிடப்பட்டிருக்கின்றது. மற்றும் இன்னொரு சிவன் கோயில் பள்ளிப்படைக்கோயில் என்ற பெயர் கொண்டே அழைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் இன்று வன்னியர் என பெரும் சாதிக்கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்ட குடிப்பெயரே பள்ளி, படையாட்சி என்பதை இவ்விடத்தில் நினைவிற்கொள்ளலாம். அத்துடன் அகமுடையார், தேவர், வேளாளர், நகரத்தார் என சோழரால் அமைக்கப்பட்ட கோயில்களிற்குத் தானம் வழங்கியமை மற்றும் நிருவாகம் சார்ந்த விடயங்களுடன் தொடர்புபடுத்தி தமிழர்களின் குடிப்பெயர்களைத் தாங்கிவரும் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுக் கிடக்கின்றன.

கி.பி 1215 இல் யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியமைத்த யாழ்ப்பாண அரசர்கள் மதுரைப் பாண்டியரின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருந்துள்ளனர். மணவுறவு மற்றும் மரபு அடிப்படையிலான உறவானது யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களிற்கும் மதுரைக்கும் இருந்திருக்கின்றது. யாழ்ப்பாண அரசின் நாணயங்களில் எருதும் மீனும் இருப்பதானது அது பாண்டியர்களின் ஆட்சிப்புலத்தில் இருந்தமையை உறுதிசெய்கின்றது. மேலும் யாழ்ப்பாண அரசின் நாணயமாக சேது நாணயமே இருந்திருக்கின்றது. சேது என்பது இராமேசுவரத்திற்கான மறுபெயராகவும் மறவர் குடிவந்த மன்னர் பரம்பரையின் பெயராகவும் இருக்கின்றது. இராமேசுவரக் கல்வெட்டில் ஆரியச்சக்கரவர்த்திகளால் பராமரிக்கப்படும் கோயில் என்று கூறும் செய்தி உண்டு. ஆரியச்சக்கரவர்த்திகள், கூழங்கைச் சக்கரவர்த்திகள் என்றும் சேதுக்காவலர்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆரியர்களை வென்ற மரபிற்குரியனரென்ற பெருமிதவுணர்வால் மதுரைப் பாண்டியர்கள் ஆரியச்சக்கரவர்த்தி எனப் பெயர் சூடியதாகவும், ஆழிகடந்து ஆண்ட சிறப்பைக் குறிக்கும் “ஆழியர்” என்ற பெயர் பின்னாட்களில் மருவி ஆரியர் என வழக்கிற்கு வந்ததாகவும் வேறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன. கும்பகோணத்தில் உள்ள ஒரு தெருப்பெயரக “ஆரியப்படை வீடு” இருக்கின்றது என்பதையும் இங்கு நினைவிற்கொள்ளலாம். முடிவாக, மதுரை முதல் இராமேசுவரம் வரையான பகுதிகளில் ஆண்ட மறவராட்சியே ஆரியர்சக்கரவர்த்தி என்ற பெயர் சூடிய அரச மரபாக யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது என ஐயந்திரிபறக் கூறலாம். யாழ்ப்பாணத்தின் வட்டாரங்களான வடமராட்சி, தென்மராட்சி என்பவை வடமறவர் ஆட்சி, தென்மறவர் ஆட்சி என்பதிலிருந்து மருவி வந்த இடப்பெயர்களே. மறவன்புலவு போன்ற எண்ணற்ற இடப்பெயர்கள் இவற்றைப் பட்டெறிவன. விரிவஞ்சி வேறோர் இடத்தில் இதனைத் தொடரும் முடிவுடன் இப்போதைக்குக் கடந்து செல்வோம்.

கொள்ளையடித்துச் சூறையாடும் நோக்குடன் கி.பி 1323 இல் மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர் என்ற தில்லி சுல்தான் படைத்தளபதியின் கொடுஞ் செயல்களால் பாண்டியர்கள் பின்னாட்களில் மதுரையில் வலுக்குன்றிப்போயினர். மாலிக்கபூரின் படையெடுப்பினைத் தொடர்ந்து  தமிழ் ஏடுகளையும் அரிய குறிப்புகளையும் அவனுடைய அழித்தொழிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். மதுரை ஆதீனத்திலிருந்த சைவ சித்தாந்த ஏடுகளும் யாழ்ப்பாணத்திற்கே பாதுகாப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டன. மாலிக்கபூர் படையெடுப்பைத் தொடர்ந்து மதுரை, தஞ்சை, இராமநாதபுரம் பகுதிகளிருந்து தமிழ்ப்புலமையாளர்கள் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு ஊர்பெயர்ந்தனர். இப்படியாக மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவந்து பாதுகாக்கப்பட்ட ஏடுகள் யாழ் நூலகத்தில் பின்னாட்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. 1981 இல் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான யாழ்ப்பாண நூலக எரிப்பில் இந்த அரிய ஏடுகள் எரிந்து சாம்பலாகின. தமிழர்களின் வாழிடத்தொன்மை, மெய்யியற் செழுமை, மருத்துவ அறிவியல், இசை வரலாறு, குடிகளின் வரலாறு என எண்ணற்ற தளங்களில் தமிழரின் வரலாற்றைத் தொகுத்துவைத்திருந்த ஓலைச் சுவடிகளானவை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் எரியூட்டப்பட்டிருப்பது உலகத் தமிழர்களின் மீது அது தொடுத்த இனவழிப்புப் போர் என்பதை இவ்விடத்தில் ஈண்டு நோக்க வேண்டும்.

மேலும், இராமேசுவரம் கோயிலை பரராசசேகரன் கி.பி 1414 இல் திருத்தற் பணிகள் செய்தானெனவும், அதற்குத் தேவையான தூண்களும் பாறைகளும் ஈழத்தின் திருகோணமலையிலிருந்து கடலால் கொண்டுவரப்பட்டதென்றும் குறிப்புகளுண்டு. இங்கு பரராசசேகரன் மற்றும் செகராசசேகரன் போன்ற பெயர்களானவை மதுரையை அடியாகக்கொண்ட கூழங்கைச் சக்கரவர்த்திகள்/ ஆரியச்சக்கரவர்த்திகளின் அரியணைப் பெயர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். செந்தமிழ் வளர்த்த மதுரையில் மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்கள் வலுவிழந்து போனதன் பின்பாக, அவர்கள் யாழ்ப்பாண அரசை வலுப்படுத்துவதில் வெற்றி கண்டனர். யாழ்ப்பாண அரசையாண்ட பரராசசேகரன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கமொன்றை அன்றைய கால இயலுமையிலிருந்து அமைத்தான். மதுரைத் தமிழ்ச்சங்கமென்பது யாழ்ப்பாணத்திலே தான் அமைக்கப்பெறும் சூழல் நிலவிய வரலாற்றின் அன்றைய போக்குகளை இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் கடலோடிக் கடலாண்ட குடிகள் கடலோரங்களில் போர்க்குடிகளாக நிறுத்தப்பட்டனர். யாழ்ப்பாண அரசின் தலைநகர் யாழ்ப்பாணத்திலிருந்தாலும் வன்னிப்பெருநிலப் பரப்பில் நிலைகொண்டிருந்த மண்டியிடாத போர்மரபுகொண்ட வன்னிமைக் குடிகளால் யாழ்ப்பாண அரசு பாதுகாக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாண அரசின் மன்னர்களில் ஒருவனான சிங்கைப் பரராசசேகரன் தமிழீழத்தின் இன்றைய தலைநகரான திருகோணமலையிலுள்ள திருக்கோணேசுவரத்திற்கு அடிக்கடி வழிபடச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாகக் குறிப்புகள் உண்டு. மேலும், யாழ்ப்பாண மன்னன் பரராசசேகரன் சிதம்பர வழிபாடு செய்து திருப்பணிகள் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைக் கல்வியங்காட்டுச் செப்பேடு (யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டில் கண்டெடுக்கப்பட்டது) கூறுகிறது. அதில் திருப்பணிக்காகக் கொடைசெய்தவர்கள் பெயர் பட்டியலில் வன்னியனார்கள் என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பல காணிகள் சிதம்பரம் கோயிலிற்குச் சொந்தமானவை என உறுதிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளமையை இவ்விடத்தில் நினைவிற்கொள்ளலாம். எனவே, யாழ்ப்பாண அரசென்பதை இன்றைய யாழ்ப்பாணத்தின் மாவட்ட எல்லைக்குள்ளோ அல்லது யாழ்ப்பாணத்தவரின் அடையாளத்திற்குள்ளோ சுருக்கிக்கொள்ளும் பாமரத்தன்மையே வரலாற்றறிஞர்கள் பலரிடமும்  இருக்கின்றதென்பதை ஆழ்ந்த கவலையுடன் இங்கு சுட்ட வேண்டியிருக்கின்றது. யாழ்ப்பாண நிலப்பரப்பானது எவ்வளவு சிறியதாயும் வன்னி நிலப்பரப்பானது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டு- அம்பாறை என விரிந்து பரந்து இருந்தமையையும் கண்டுகொள்ளாமல் யாழ்ப்பாண அரசென்பதை அதன் பெயர்கொண்டு சுருக்கி வரலாற்றுத் திரிபை நம்மவர்களே செய்கின்றார்கள் என்பது ஆய்வுலகில் நகைப்பிற்குரியதாகவே நோக்கப்படும்.

திருக்கோணேஸ்வர கோயிலின் நிருவாகமானது மருங்கூர் தானத்தார் (மருங்கூர் என்பது இன்றைய கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ளது) கையில் இருந்தது என்பதைக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது. சங்ககாலப் புலவர் மூவர் மருங்கூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வர கோயிலின் நிருவாகமானது நகரத்தார் (தமிழ்நாட்டு வாணிபச் செட்டியார்கள்) கைகளில் இருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எனவே, இன்று ஈழத்தில் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ் மரபினர் என்பதைத் தாண்டி வேறு எந்த முற்கற்பிதங்களும் உண்மையாகாது. எனவே, தமிழ்நாடு, தமிழீழம் என்ற எல்லைகளிற்குள் நின்று தமிழர்களின் வரலாற்றை வரையறுக்க இயலாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டு ஈழம் என்பது தமிழர்களின் வாழிடத்தொடர்ச்சி என்பதை மட்டுமே அறுதியிட்டுக் கூறமுடியுமென்பதால் தமிழர்கள் வரலாறு குறித்த அத்தகைய எண்ணவோட்டத்திற்குள் பழக்கப்பட வேண்டும்.

தொடரும்……………….

Loading

(Visited 49 times, 1 visits today)