வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 5

தமிழிலக்கியங்களில் ஈழம்

ஈழம் எப்பெயர்களால் வரலாற்றில் பதிவாகியுள்ளதென்பதையும் அவற்றின் பழைமை எத்தன்மையிடத்து என்பதையும் அறிவது ஈழத்தின் தொன்மை பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது. தமிழீழத்தின் பூநகரியில் கிடைத்த தொல்லியல் எச்சமான மட்பாண்ட ஓட்டில் “ஈழ” என்ற சொல் காணக்கிடைக்கிறது என்பதுடன் காலக்கணிப்பில் அது கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்குரிய தொல்பொருளெனவும் துணியப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்தில் கி.மு 2-1 ஆம் நூற்றாண்டிற்குரியதென காலக்கணிப்பிற்குட்படுத்தப்பட்ட கல்வெட்டானது “ஈழத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவன் ஒருவன் அங்கு வாழ்ந்த சமணத்துறவிகட்குக் கற்படுக்கை அமைத்துக் கொடுத்தான்” எனக் கூறுகிறது.  ஈழமானது நாகத்தீவு, மணித்தீவு, மணிநாகத்தீவு, மணிபல்லவத்தீவு, இலங்கை என அழைக்கப்பட்டமைக்குப் பல்வேறு இலக்கியச் சான்றுகளுண்டு.

“தொன்மாவிலங்கைக்கு கருவொடு பெயரிய” என சிறுபாணாற்றுப்படையிலும் “பெருமாவிலங்கைத் தலைவன், சீறியாழ் இல்லோர் செம்மலை நல்லியக்கோடனை”, “நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியாதன் கிணையோம் பெரும” என புறத்திணையிலும் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” என சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையிலும் “சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கைக் கட்டு அழித்த சேவகன் சீர் சேளாத செவி என்ன செவியே” என சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும் என சங்கப்பாடல்களில் “இலங்கை” எனக் குறிப்புகளுண்டு. “மணி மேகலையை மணிபல்லவத்துய்த்து” என மணிமேகலையில் ஈழமானது மணிபல்லவத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. இன்று ஈழத்திலுள்ள நயினாதீவிற்கேயுரியதாய் மணிபல்லவத்தீவு என்பது வழக்கிலிருந்தாலும் இலங்கைத்தீவு முழுமைக்குமுரிய பெயராகவே மணிபல்லவத்தீவு அல்லது மணித்தீவு என்பது பண்டைய காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை ஈண்டு நோக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்றும் பாயும் தாமிரபரணி என்றழைக்கப்படும் ஆற்றின் பெயரை அடியொற்றி வந்ததான “தாம்(ப்)ரபனே” என்ற பெயராலேயே ஈழமானது உரோமர்களால் அழைக்கப்பட்டது. மேலும், சேரன் தீவு என்பதே சேரந்தீவு என்பதாகி அரேபியரால் சேரண்டிப் என்ற பெயராலே ஈழம் அழைக்கப்பட்டது. அரேபியர்கள் அரபிக்கடலூடாக தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்த முசிறித்துறைமுகம் (இன்றைய கேரளாவில் உள்ளது) வழியாகவே தமிழருடன் வணிக உறவுகொண்டிருந்தனர் என்பதுவும், அது சேரநாடாகவிருந்ததால் அதன் வழி செல்வாக்குப்பெற்றிருந்த ஈழமானது அரபியர்கட்கு சேர மன்னரின் செல்வாக்கிற்குட்பட்ட தீவாகவே அறிமுகமாகியிருக்கும். அரபியர் ஈழத்தைக் கண்டுகொண்ட காலத்தைய நிலைமை அதுவெனப் புரிந்துகொள்ள இயலும். அதன் முன்பு பாண்டியரின் செல்வாக்கிற்குட்பட்டதாயும் அதன் பின்பு ஈழமானது சோழமண்டலமாகவும் இருந்ததென்பதை மனதிற்கொள்ள வேண்டும்.

மேலும், மணிபல்லவத்தைப் பிறப்பிடமாகக் கொண்டோரே வேறிடம் போகி, பின் அரசாட்சி பெற்றதன் பின்பாக, தமது தாயகம் தாங்கிப் பல்லவர் எனப் பெயர் பெற்றனர் என இராசநாயகம் முதலியார் முதல் பல தமிழறிஞர்கள் கருத்துக்கூறுகின்றனர். இதன் உண்மைத்தன்மை மெய்ப்பிக்கப்பட ஆய்வுகள் இன்னமும் அகலப்படுத்தப்பட வேண்டும். அப்படி நிகழின் ஈழமென்பது எத்தகைய உறவுக்குரியதென இன்றுள்ள தமிழர் அறிய உதவியாயிருக்கும். எது எப்படியெனினும் சிலப்பதிகாரம் முதல் மணிமேகலை வரை ஈழம் என்பது தமிழரின் வாழிடத்தொடர்ச்சியாகவே இயல்பில் இருந்திருக்கின்றதென்பதை ஐயந்திரிபற அனைவரும் உணர்ந்திருக்க இயலும். இன்னமும் சொல்லப்போனால், தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் ஈழத்திலேதான் சிலப்பதிகாரமானது சடங்குநிலையில் பரவலாகவுள்ளது. தமிழீழத் தலைநகர் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவின் வற்றாப்பளை, யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை என தமிழீழத்தின் பல பகுதிகளையும் இணைத்ததாக சிலப்பதிகாரத்தின் பல கிளைக் கதைகள் உண்டு என்பது நோக்கற்பாலது.

ஈழத்துப் பூதன்தேவனார் என்ற ஈழத்தைச் சேர்ந்த புலவரின் 7 பாடல்கள் அகத்திணையிற் தொகுக்கப்பட்டுள்ளன. முறஞ்சியூர் முடினாகனார் என்ற இன்னுமொரு சங்கப் புலவர் இன்றைய மன்னாரின் முசலியைச் சேர்ந்தவர் என அறியக்கிடைக்கின்றது. இன்னாரின் ஊர் இதுவென இனங்காணப்படவியலாத சங்ககாலப் புலவர்களில் ஈழத்தைச் சேர்ந்தவர் எத்தனை பேருளர் என்பது கண்டறிய இயலாததொன்றாய் இருக்கின்றது. இன்னமும் சங்கநூற்தொகுப்பில் இடம்பெறாமலும் கைக்குக் கிட்டாமலும் போனவற்றில் எத்தனை உளதோ என்பதும் தெரியவில்லை. எப்படியிருப்பினும், ஈழம் என்பது தமிழரின் வாழிடத் தொடர்ச்சியேயன்றி வேறெதுவுமில்லை என சங்க இலக்கியங்களும் சான்றுபகருகின்றன.

ஈழம் அல்லது இலங்கை என்ற பொதுவான குறிப்புகளிற்கு மேற்சென்று ஈழத்திலுள்ள ஊர்ப்பெயர்கள் குறித்து, இன்னமும் குறிப்பாக மாந்தையினைப் (மன்னார்) பற்றிய வெளிப்பாடுகள் சங்கப்பாடல்களில் விரவிக் காணப்படுகின்றன. “முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்” என அகத்திணையிலும் “கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்தி விடுக்கும் துறைகெழு மாந்தை” என நற்றிணையிலும் ஈழத்தின் மாந்தை (மன்னார்) சங்கப்பாடல்களிற் சிறப்பிக்கப்படுகிறது. இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் மாந்தைப் பட்டினத்தில் பொன் முதலான பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் குறிப்பிட்டுள்ளார்.

இவ் வானவெளியில் நடுக்கோட்டில் இலங்கை. இருக்கிறதென்றும் இவ்விலங்கையானது தில்லைச் சிற்றம்பலத்துடன் ஒரேகோட்டில் பொருந்துகிறதெனவும் தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும் எனவும், இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும் என பொருட்படும் கீழ்வரும் திருமந்திரப் பாடல் மூலம் இலங்கையின் அமைவிடச் சிறப்பைக் கூறும் திருமூலர், ஈழத்தைச் சிவபூமி என்று கி.பி 5 ஆம் நூற்றாண்டில் அழைத்துமிருக்கிறார் என்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.

“மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே– திருமந்திரம்-

பக்தி இலக்கியங்களில் (கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியின) உள்ளவற்றின் வைதீகப் பிறழ்நெறிகளையும் பக்தி, முக்திகளையும் இன்னபிற அறிவிற்கொவ்வாதனவற்றையும் தவிர்த்து, அப்பக்தி இலக்கியங்கள் எழுந்த காலப்பகுதியையும் அதில் வரும் இடப்பெயர்களையும் அதுசார்ந்த செய்திகளையும் வரலாற்றுக்கண்ணுறுதல் அக்காலத்தைய வரலாற்றினை அறிதலில் தவிர்க்க இயலாதவொன்றாகும். குறிப்பாக ஈழத்தின் மாந்தை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகள் குறித்த வெளிப்பாடுகள் பக்தி இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.

கடலால் சூழப்பட்ட, வாசமிகு பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் அமைந்துள்ள, பலரும் விரும்பிப் பூசனை செய்திடும் திருக்கேதீச்சரத்தைக் தொழுதால் நம் கடுவினைகள் விலகியோடும் என பொருட்படுமாறு “கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே” என தேவார மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். “வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்ததிரு கேதீச்சரத் தானே” என தேவார மூவரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார். அதாவது கப்பல்கள் (வங்கம்) நிறைந்து நின்ற கடலாக மாதோட்டம் எனப்படும் மாந்தை விளங்கியது என்பதுவும் தென்னஞ்சோலை சூழ்ந்ததாக திருக்கேதீஸ்வரம் விளங்கியது என்பதுவும் இப்பதிகம் மூலம் தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.

மேலும், ஈழத்து மாந்தையின் சிறப்பினை, “மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் புறமருவிய மாதோட்டம்” என திருஞானசம்பந்தரும், “மாவின் கனிதூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்” என சுந்தரரும் தேவாரப் பதிகங்களில் பதிவுசெய்துள்ளனர். “பூதியணி பொன்னிறத்தர் பூண்நூலர் பொங்கரவர் சங்கரர் வெண்குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்” என திருநாவுக்கரசரும் ஈழத்தின் மாந்தையிலுள்ள திருக்கேதீச்சரத்தைப் பாடியுள்ளார்.

மாணிக்கக்கற்கள் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துகளைக் கொழிக்கும் இடமாக இன்றைய தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை அன்று விளங்கிற்று என்பதை “கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே” என திருஞான சம்பந்தரின் தேவார வரிகளினூடு அறியலாம். விரிந்துயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருகோணமலை என்பதை “விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரேஎன்ற தேவார வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் கூறுவதிலிருந்து திருகோணமலை பற்றி எந்தளவிற்கு அவர் தகவல்களைத் தெரிந்து வைத்திருந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவியலும். அந்த அளவிற்கு ஈழத்தின் ஊர்களெல்லாம் தமிழரின் வாழிடத்தொடர்ச்சியாக ஒருங்கேதான் நோக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.

தென்னிலங்கைக்கு அரசியான வண்டோதரிக்கு (இராவணனின் மனைவி), பேரருளாகிய இன்பத்தையளித்தவனும் பெருந்துறையில் உறைபவனுமாகிய பிரானை, உனது பெருமை பொருந்திய வாயால், அத்தென்பாண்டி நாட்டானை, என்னிடம் வரும்படி கூவுவாயாக, குயிலே’ என்கிறார் மாணிக்கவாசகர் (கி.பி 863–911).

ஏர்தருமேழ் உலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாம்

ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்

பேரருளின் பமளித்த பெருந்துறை மேயபிரானைச்

சீரியவா யாற்குயிலே தென்பாண்டி நாடனைக்கூவாய் – (குயிற்பத்து, எட்டாந் திருமுறை)

திசை சொல்லி ஊர் சொல்லும் மரபிற்கமைய தென் திசையில் இருக்கும் ஊரான இலங்கை என்பதனாலே தென்னிலங்கை எனக் குறிப்பிடப்படுவதை காலப் பொருள் மயக்கமின்றித் தெளிந்துணர வேண்டும். இவ்வாறே தென்னிலங்கை என பட்டினத்தார் பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளமையை நோக்க வேண்டும்.

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே -பட்டினத்தார்-

இராமேச்சுவரம் மற்றும் மன்னாரிற்கிடையில் கடலே இடைவெளி என்ற புரிதலை வெளிப்படுத்தும் வகையில் கி.பி 12 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரியதான பெரியபுராணம் இருப்பது ஈண்டு நோக்கற்பாலது.

மன்னுமிரா மேச்சரத்து மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச் சரஞ்சார்ந்த
சொன்மலர்மா லைகள்சாத்தித் தூரத்தே தொழுதமர்ந்தார்” -பெரியபுராணம்-

உறையூரை (திருச்சியில் அமைந்துள்ளது) ஆண்ட கிள்ளி என்ற சோழ அரசனது யானை தன்னுடைய முதல் அடியை சாஞ்சிபுரத்திலும் (கச்சி) அடுத்த அடியைத் தஞ்சையிலும் அதற்கடுத்த அடியை ஈழத்திலும் வைக்கின்றது என்று கீழ்வரும் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெறும் பாடல் கூறுவதனூடாக கிள்ளி என்ற சோழ அரசன் ஆண்ட காலத்தில் காஞ்சி, தஞ்சை, ஈழம் என்பனவெல்லாம் ஒருதன்மையிடத்தாயிருக்குமளவிற்கு நோக்கில் நெருங்கிக் கிடந்திருக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ளலாம். அதாவது சோழநாட்டின் மண்டலங்களாகவோ அல்லது வட்டாரங்களாகவோ தான் இவை நோக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.

“கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்

தந்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியால் பிற்றையும்

ஈழம் ஒருகால் மிதியா வருமேநம்

கோழியர் கோக் கிள்ளி களிறு” (முத்தொள்ளாயிரம்)

சோழ மண்டலத்தின் ஒரு உறுப்பாகவே ஈழம் நோக்கப்பட்டதென்பதை மேலும் உறுதிசெய்வதாக சோழமண்டலச் சதகத்தில் வரும் கீழ்வரும் பாடல் அமைகிறது. இதில் சோழமண்டலத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களைப் பற்றி குறிப்பிடுமிடத்தில் தொண்டைநாடு, பாண்டிநாடு, ஈழநாடு, கொங்குநாடு, துளுநாடு என ஒரேயிடத்தில் வைத்து வட்டாரங்களாக இந்த நிலப்பரப்புகள் நோக்கப்பட்டிருக்கின்றன என்பது இதன் மூலம் அறியக்கிடைக்கின்றது.

“தொண்டை நாட்டில் ஆறைந்து
தொடர்ந்த பாண்டி பதினான்கு
கொண்டல் ஈழம் தனில்இரண்டு
கொங்கில் ஏழு துளுஒன்றே
தண்து ழாயின் பசும்தொடையார்
தவள விடையார் தலம்பலவும்
மண்டு பாதி நெடுங்கோயில்
மருவும் சோழ மண்டலமே” – சோழமண்டலச் சதகம்-

தொடரும்……………….

 273 total views,  3 views today

(Visited 28 times, 1 visits today)