வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 4

(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

(II) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2

(III) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 3

ஈழமும் தொல்லியலும்

தமிழ்நாடானது இந்திய ஒன்றியத்தினுள் தளைப்பட்டிருப்பதனால் தன்விருப்பில் தமிழருடைய தொல்லியல் தேடல்களை முன்னெடுப்பதில் இடர்பாடுகள் இருப்பினும், இருக்கின்ற தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்திற்குட்பட்ட தொல்லியல் துறை மூலமாக ஓரளவு தொல்லியலாய்வுகள் இதுகாறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் போதாமைகள் இருக்கவே செய்கின்றன. இந்திய அரசானது தமிழரின் தொன்மைகள் தொல்லியலால் வெளிப்பட்டுவிடக் கூடாது என்ற வரலாற்றுப் பகைமை உணர்வுமேலீட்டால் தொல்லியலாய்வின் முடிவுகளை இருட்டடிப்புச் செய்யவும், மடைமாற்றம் செய்யவும், திரித்துக் கூறவும், மூடிமறைக்கவும் முயன்று வருகின்றது. ஆனாலும், ஈழத்துடன் ஒப்பிடுகையில் தமிழரின் தொல்லியலாய்வுகளைப் பெருமளவிற்கு மேற்கொள்ள வசதியான களமாக தமிழ்நாடே இருந்துவருகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், சிங்கள பௌத்த பேரினவாதமானது அரச வளங்களைக் கொண்டு தனது தொல்லியற்றுறையை சிங்கள பௌத்தமயமாக்கலிற்கான நிறுவனமாகவே அன்றுதொட்டு இன்றுவரை பயன்படுத்தி வருகின்றது. சிங்கள பௌத்த பேரினவாத வெறியூறிப்போன பௌத்த பிக்குகளும் அவர்களால் வழிநடத்தப்படும் தொல்லியற்றுறை ஆய்வாளர்களுமே ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் தொல்லியலாய்வுகளை மேற்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முழுநேர வேலையே தமிழர் நிலங்களின் தொல்லியற் தொன்மங்களை அழித்தலும் தமிழர் நிலங்களின் வரலாறைத் திரிபுசெய்து புரளியில் ஈடுபட்டு, தமிழர்தாயகத்தை சிங்கள- பௌத்த மயப்படுத்துவதென்பதுவுமே.

இதனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அகழாய்வுகளே ஈழத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் முதன்மையானதொன்றாகவுள்ள யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் 1917 இல் அகழாய்வினை மேற்கொண்ட போல் பீரிஸ் என்பவர் “இலங்கையில் தமிழருடைய பழைமையானது அகழாய்வுகள் மூலம் உறுதியாக வெளிப்படும். யாரும் இதுவரை கனவிலும் நினைத்திராத தமிழரின் பழைமையானது அகழாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் வெளிப்படும்” என்று கூறினார். அவரது கூற்றினை மெய்ப்பிப்பது போலவே விரல்விட்டு எண்ணக்கூடியதாக மிகச் சிறிய அளவில் சில இடங்களில் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளானவை ஈழத்தின் எல்லைகளை விஞ்சி ஒட்டுமொத்த தமிழரின் தொன்மைக்கான தொல் சான்றுகளாக சான்றுபகருகின்றன.

கந்தரோடை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களான கருப்பு, சிவப்பு மட்பாண்டங்கள், நாணயங்கள், எலும்புகள், சிற்பங்கள், சிலைகள், தமிழி பொறிப்புகள், மணிவகைகள் மற்றும் அணிகலன்கள் என்பவை அங்கு நன்கு வளர்வெய்திய நிலையில் நகர்நாகரிகம் காணப்பட்டதென்பதையும் அது மிகப்பெரிய வணிக நகரமாகத் திகழ்ந்ததென்பதையும் உறுதிசெய்ததோடு,  காலக்கணிப்பு மூலம் அது கி.மு.700 ஆண்டுகள் பழமையானது எனத் துணியப்பட்டுள்ளது. இந்தக் கந்தரோடை என்ற இடத்தில் அமைந்திருந்த வணிக நகரமானது மாந்தை பொம்பரிப்பு என விரிந்து பரந்திருந்தமை ஏனைய அகழாய்வுகளுடன் பொருத்திப் பார்த்து உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுவரும் தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வுகளானவை, அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களாலும், காலக்கணிப்பாலும் கந்தரோடையுடன் அச்சொட்டாகப் பொருந்திப் போகின்றமையை ஈண்டு நோக்க வேண்டும். இது குறித்த ஒப்பீட்டாய்வினை தமிழீழ மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியற் செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.

சிங்கள பௌத்த வரலாற்றுப் புரட்டிற்கு நெத்தியடி கொடுப்பது போன்ற ஆய்வுமுடிவொன்று கீழடி அகழாய்வில் தற்போது கிடைக்கப்பட்டுள்ளமையானது ஈழத்தமிழர்களின் வரலாற்றினை எழுதுவதில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். காக்கைவண்ணதீசன்/ தேவநம்பிய தீசன் என்ற சிங்கள மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே (கி.மு 247) பௌத்தம் இலங்கைத்தீவிற்குப் பரவியது என சிங்கள வரலாற்றாய்வாளர்கள் பிதற்றி வந்தனர். உண்மையில், பௌத்த மதமானது இலங்கைக்குப் பரவும் வரை சிங்களம் என்ற சொல்லே இருந்திராது. ஏனெனில், பௌத்த மத்ததுடன் இலங்கைக்குள் பாளி மொழி புகுந்தபின்பே, அதுவரை இலங்கைத்தீவில் மக்களின் மொழியாகவிருந்த தமிழானது பாளியுடனும் சமசுக்கிருதத்துடனும் கலக்கச் செய்யப்பட சிங்களம் என்ற மொழி காலப்போக்கில் உருவானது. எனவே, தேவநம்பிய தீசன் எனப்படும் காக்கைவண்ண தீசன் தமிழனாகவே இருந்திருக்க முடியுமென வாதுரை செய்ய இயலுமானதாகவே இருந்தது. ஆனால், திசன், தீசன் (திசை+ அன்) என்ற பெயர்களானவை கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளமை மூலம் தேவநம்பியதீசன் தமிழனே என்பது தொல்லியலாய்வின் முடிவாக ஐயந்திரிபற வெளிப்படுகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அகழாய்வுகளினால் ஈழத்தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தவும் சிங்கள வரலாற்றுப் புரட்டுகளைத் தோலுரிக்கவும் இயலுமென்பது வெள்ளிடைமலை.

கிளிநொச்சியிலுள்ள இரணைமடுவில் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேலைப் பழங்கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்தன. அவை தமிழ்நாட்டின் தொல்லியலாய்வுகளால் கண்டடைந்த மேலைப் பழங்கற்காலத்தினதாகவே இருக்கின்றன. மேலும், ஈழத்தில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் நடந்த அகழாய்வானது ஈழத்தில் தமிழரின் தொன்மையென்பதையும் விஞ்சி, தமிழரின் எழுத்துமுறை தொடர்பான தொடக்ககாலச் சான்றாய் அமைகிறது. ஆனைக்கோட்டையில் கிடைத்த முத்திரையொன்றின் முதல் வரியில் சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட குறியீட்டு எழுத்துகள் காணப்பட்டதுடன், அக்குறியீட்டு எழுத்துகளினால் குறிப்பிடப்படும் பெயரானது (கோவேந்தன் என வாசித்தறியப்பட்டுள்ளது) தமிழி என இன்று நாம் அடையாளப்படுத்தும் தொன்மையான வரிவடிவத்தில் அம்முத்திரையின் இரண்டாவது வரியில் எழுதப்பட்டுள்ளது. எனவே, சிந்துவெளிகால குறியீட்டு எழுத்துகளும் அதற்கொத்த வரிவடிவ தமிழி எழுத்துகளும் எழுதப்பட்ட முத்திரையாக ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை காணப்படுவதென்பது, குறியீட்டெழுத்திலிருந்து தமிழி எழுத்திற்கு நகரும் வரலாற்றின் தொடக்ககாலத்தைய முத்திரை அதுவென உறுதிசெய்ய இயலுமாகிறது. அத்துடன், ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால ஈம அடக்கங்கள், அகல் விளக்குகள், சங்குகள், வட்டமான தாயம், மணிவகைகள் மற்றும் கடலுணவு எச்சங்கள் என்பவை தமிழரின் தொன்மையான நாகரிக வாழ்வை வெளிக்கொணர்ந்து உதவியுள்ளன. இத்தகைய வரலாற்றுப் பெருஞ்சான்றானது, தமிழ்மொழியின் எழுத்துத் தோற்றம் பெறுங்காலந்தொட்டு ஈழத்தில் தமிழர் சிறப்புடன் வாழ்ந்துவருகின்றனரெனவும் ஈழமென்பது தமிழரின் வாழிடத்தொடர்ச்சி எனவும் தொல்லியலடிப்படையில் உறுதிசெய்கிறது.

இலங்கைத்தீவில் காணக்கிடைத்த ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளானவை “அசோக பிரமி” எனும் கல்வெட்டு எழுத்துகளால் எழுதப்பட்டவை எனத் தமிழினப் பகைமை உணர்வுகொண்ட இந்திய ஆய்வாளார்களினை மேற்கோள்காட்டி சிங்கள பௌத்த தொல்லியற்றுறை கூறி வந்தது. ஆனால், மட்டக்களப்பு குசாணமலைக் கல்வெட்டில் காணப்படும் அதே கல்வெட்டு எழுத்துகளானவை தமிழ்நாட்டில் பரவலாகக் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துகளே என உறுதிசெய்யப்பட்டதுடன் தமிழ்நாட்டில் அத்தகைய எழுத்துகள் கி.மு 5 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரியனவாகவும் உள்ளமை நிறுவப்பட்டுள்ளது. எனவே, இதை “அசோக பிரமி” எழுத்துகளெனக் குறிப்பிடுவது நகைப்பிற்கிடமானது (அசோகனின் காலம் கி,மு 3 ஆம் நூற்றாண்டு) எனவும் அதைத் “தமிழ் பிரமி” என்றே கருத வேண்டுமெனவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ஆணித்தரமாக நிறுவினர். இதே கருத்தை கேம்பிரிச் டிலிப் கே. சக்ரபத்தி எனும் உலகப்புகழ்பெற்ற தொல்லியலாய்வாளர் “An Oxford Companion to Indian Archaeology” எனும் நூலின் மூலம் அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, “தமிழ்ப் பிரமி” என்று அவ்வெழுத்துகளை அழைப்பதைக் காட்டிலும் அவற்றை “தமிழி” எனக் குறிப்பிடுதலே பொருத்தமானதென தமிழாய்ந்தவர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டின் ஆய்வுலகமானது தமிழி எழுத்துகளை வரையறுத்து நிறுவியமை கண்டு கிலிகொண்ட சிங்கள-பௌத்த வரலாற்றுப் புரட்டர்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை மூடிமறைத்து வருகின்றனர்.

ஈழத்தின் பொம்பரிப்பு மற்றும் குஞ்சுப்பரந்தனில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழியும் ஈம அடக்கங்களும் தமிழ்நாட்டில் கொடுமணல், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றில் கண்டெடுக்கப்பட்டவையும் ஒருங்கிசைவன. எனவே, ஈழத்தின் பூநகரி, ஆனைக்கோட்டை, கல்முனை, கந்தரோடை, பொம்பரிப்பு, கதிரவெளி, குசாணமலை, குஞ்சுப்பரந்தன் அம்பாறை சங்கமன் கண்டி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்லியல் எச்சங்களானவை தமிழ்நாட்டின் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி, சிவகளை, செம்பியன் கண்டியூர் மற்றும் மகாவலிபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த தொல்லியல் எச்சங்களுடன் அச்சொட்டாகப் பொருந்துகின்றன.

இறப்பு (ஈம அடக்கங்கள், ஈமத்தாழி), வாழ்வியல் (அகல் விளக்கு, மட்பாண்டம், மணி வகைகள், அணிகலன்கள்), வழிபாடு (நடுகற்கள்), வணிகம் (நாணயங்கள், மணிகள்) மொழி, எழுத்து (கல்வெட்டுகள்) என அனைத்து வகைகளிலும் நோக்குங்கால் ஈழம், தமிழ்நாடு என மேற்குறிப்பிட்ட அத்தனை இடங்களிலும் ஒரே மக்கள் ஒரே காலப்பகுதியில் ஒரே பண்பாட்டுக்குரியனராய் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பது ஐயந்திரிபற வரலாற்று நேர்த்தியுடன் வெளிப்பட்டு நிற்கின்றது.

இன்று மேற்செல்லும் தொல்லியல் ஆய்வுகள் எதுவெனிலும், தமிழ்நாடு மற்றும் தமிழீழம் என்ற எல்லைகளை மறந்து தொல்லியல் எச்சங்களை ஒப்புநோக்கும் போக்குத் தவிர்க்கமுடியாத ஒன்றென்பதாகிவிட்டது. ஆதிச்சநல்லூர், பொம்பரிப்பு, மாந்தை என்பன நெருங்கிய ஒப்பீட்டுக்குரியன. கீழடி அகழாய்வுகளானவை கந்தரோடையுடன் ஒப்பிட்டே முன்னெடுக்கப்பட வேண்டியவை. ஆனைக்கோட்டையில் கண்டெடுத்த முத்திரையிலுள்ள எழுத்துகளே தமிழி எழுத்துகளின் காலக்கணிப்பிற்குப் பயன்படுவன. எனவே தமிழ்நாடும் ஈழமும் தமிழரின் வாழிடத்தொடர்ச்சியாகவே என்றென்றும் இருக்கின்றன என்பதைத் தொல்லியலாய்வுகள் ஆணித்தரமாக நிறுவிவிட்டன.

தொடரும்……………….