
(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1
(II) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2
ஈழத்தின் நிலவியற்றொன்மையும் கடலிடைபுகுதலும்
வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டுத் தமிழர்களின் வாழிடத்தொடர்ச்சியாகவே இன்றைய தமிழ்நாடும் ஈழமும் இருந்துவந்துள்ளனதென்பதை நிலவியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் விளங்கிக்கொள்வது சாலப்பொருத்தமானதாகும். தென்மதுரையையும் கபாடபுரத்தையும் கடற்கோள் கொள்ள மூன்றாம் தமிழ்ச்சங்கமானது இன்றைய மதுரையில் அமைக்கப்பட்டதென இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் விளக்குகின்றன. பாண்டியநாட்டின் பெரும்பகுதியைக் கடல் மூழ்கடிக்க, அருகிருந்த சேர, சோழ நாடுகளை வென்று தனது பாண்டிய நாட்டுடன் பாண்டியன் தென்னவன் இணைத்தான் என சங்கநூற்தொகுப்பிலுள்ள கலித்தொகையானது பின்வருமாறு கூறுகின்றது;
“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்” – கலித்தொகை 104
தெற்கே கடல் கொள்ள தமிழர்கள் வடதிசை போகிய செய்தியைப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடலினால் அறிந்துகொள்ள இயலும்.
“பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி” – சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22
49 தமிழர்நாடுகளானவை கடற்கோளால் கொள்ளப்பட்டதென சிலப்பதிகாரத்திற்கு உரைசெய்த அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். “நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்” என்ற குறுந்தொகைப் பாடலும் “நிலத்திறம் பெயருங்காலை யாயினும்” எனக் கூறும் பதிற்றுப்பத்தும் “நிலம்புடை பெயர்வதாயினும்” என்ற புறநானூற்றுப் பாடலும் “பெருநிலங்கிளறினும்” என்ற நற்றிணைப் பாடலும் என்பதாக சங்கநூற்தொகுப்பிலுள்ள பாடல்கள் தமிழர் நிலமானது கடலினால் கொள்ளப்பட்டு மூழ்கிப்போன செய்திகளைச் சொல்கின்றன. தமிழர் நிலங்கலானவை கடலால் கொள்ளப்பட்ட நிகழ்வுகளானவை வெவ்வேறு காலப்பகுதிகளில் நடைபெற்றிருக்கின்றனவேயன்றி ஒரேநாளில் நடந்தேறியதொன்றாக இருக்கவில்லை என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து அதுவும் தமிழிலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து வரலாற்றை நிறுவினால் அதை இவ்வுலகு ஏற்காது என்பதுடன் இயன்றவரை அதை மறுத்தும் இழித்தும் பேசுமென்பது இன்றளவிலும் நம் கண்கூடு. எனவே, நிலவியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் இதனை நிறுவிடவும் ஈழம் எங்ஙனம் தமிழரின் நிலத்தொடர்ச்சியை இழந்ததென்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் வேண்டியிருக்கின்றது.
தமிழீழத்தின் தலைப்பகுதியில் இருக்கும் யாழ்ப்பாணமானது தமிழ்நாட்டின் கோடியக்கரைப் பகுதியிலிருந்து எங்ஙனம் கடல் நுழைவால் பிளக்கப்பட்டிருக்கும் என்பதையும் அதனிடைவெளி காலப்போக்கில் எவ்வாறு விரிந்திருக்கும் என்பதையும் மேற்சுட்டிய வரைவுக்கோடுகளைக் கண்ணுற்றால் உணரக்கூடியதாயிருக்கும். யாழ்ப்பாணத்தலையைக் கோடியக்கரையுடன் இணைத்துப் பொருத்தவியலும் என்றளவிற்குப் புரிதல்தருமாறே கடலினால் விளைந்த இந்த நிலப்பிளவு இன்றுமிருக்கிறது. உரோமப்பேரரசின் கடலாதிக்கத்திற்குக் காரணமாகவிருந்த கடற்படைத்தளபதியும் இயற்கை மெய்யியலாளருமான பிளினி (கி.பி 23- 79) என்பவர் தனது கடலாய்வுக் குறிப்பில் கடல் நிலம் புகுந்ததால் கொற்கையிலிருந்த துறைமுகமானது மதுரைக்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று எனக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்வானது கிறித்து பிறப்பதற்குச் சில நூறு ஆண்டுகள் முன்னையதாய் நடந்திருக்கக் கூடும்.
மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞரானவர் இலங்கைத்தீவைத் “தாம்ரபனே” எனக் குறிப்பதோடு நிறுத்திவிடாமல் அது இந்தியத்துணைக் கண்டத்திலிருந்து ஒரு ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். உரோமர்களும் இலங்கைத்தீவைத் தாம்(ப்)ரபெனே எனவே அழைத்தார்கள். பொருந்தல்/ பொருநை என்ற பெயர்களையுடைய தாமிரபரணி என்கின்ற இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் ஆறானது அன்று கடலில் மூழ்கிய நிலத்தின் வழியாக ஈழம் வரை பாய்ந்திருக்கின்றது எனக் கணிக்க இயலுமானதாகின்றது. அதாவது ஈழத்தின் மாந்தை (மன்னார்) துறைமுகம் வரலாற்றில் மிகுசிறப்பெய்தியமைக்கான நிலவியல் காரணமாக அது தாமிரபரணி ஆறு கடலில் கலக்குமிடத்தை அண்மித்திருந்தமை காரணமாயிருந்திருக்கும். ஏனெனில், காவேரி ஆறு கடலில் கலக்குமிடம் பூம்புகார் துறைமாகவும் வைகை ஆறு கடலில் கலக்குமிடம் கொற்கைத் துறைமுகமாகவும் பெரியாறு கடலில் கலக்குமிடம் முசிறித் துறைமுகமாகவும் இருந்திருக்கின்றன. அந்தவகையில் இந்தத் துறைமுகங்களிற்கு இணைச் சிறப்பெய்திய ஈழத்து மாந்தைத் துறைமுகத்தின் அமைவிட முதன்மை குறித்து ஆய்வுகள் இன்னும் அகலப்பட்டிருக்க வேண்டும்.
கி.மு 5 ஆம் நூற்றாண்டில் இன்றைய மேற்கு வங்காளத்திலிருந்து ஈழத்திற்குக் கரையேறிய விஜய என்ற சிங்கள மூதாதையன் ஈழத்தில் தரைதொட்ட இடம் “தம்பபன்னி” என்றும் அது தாமிர நிறத்தையுடைய மண்ணைக் கொண்டது என்பதால் அப்பெயர் (தாமிரவர்ணி- தாமிரபன்னி- தம்பபன்னி) பெற்றது என்றும் சிங்களவர்களுடைய ஐதீக நூலான மகாவம்சம் கூறுகிறது. இவற்றிலிருந்து இன்றுள்ளவாறல்லாமல் வேறோர் இடைவெளியிலேதான் தமிழர் கடல் அன்றிருந்திருக்கின்றது என்பதையும், அவ்வகையில் நிலமும் அதன் தொடர்ச்சியும் வேறோர் வகையில் அமையப்பெற்றிருக்கும் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும். இவற்றையெல்லாம் மெய்ப்பிப்பது போல தொல்லியலாய்வுகளானவை வியத்தகு செய்திகளை எமக்குத் தந்திருக்கின்றன. தமிழ்நாட்டின் தாமிரபரணி (தண்பொருநை ஆற்றங்கரை நாகரிகம்) ஆற்றங்கரை நாகரிகம் நிலவிய வாழ்விடப்பகுதிகளான ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களும் ஈழத்தின் மாந்தை மற்றும் பொம்பரிப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களும் அச்சொட்டாகப் பொருந்திப்போவதுடன் அவற்றின் காலக்கணிப்பும் ஒரேயினதாக அமைவதென்பது ஆதிச்சநல்லூர், மாந்தை, பொம்பரிப்பு என்பன ஒரேயினதாக ஒரே கால வாழ்விடத்தொடர்ச்சிக்குரியனவாக அமைந்திருக்கின்றன என்பதைத் துலக்கமாக எடுத்துச் சொல்கின்றன.
இன்றுள்ள மன்னார் வளைகுடாவானது வெறுமனே ஏறத்தாழ 5.8 மீற்றர் ஆழமுடையதாக இருப்பதோடு பாக்குநீரிணை கூட 9 மீற்றர் ஆழமுடையதாகவே உள்ளது. அந்தவகையில் மிகவும் ஆழங்குறைந்த கடலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்குமிடையில் இன்றுங்கூட இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம். பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3700 மீற்றர் அளவில் இருக்குமென்பதை மனதில் நிறுத்தினால், தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமான கடலிடைவெளியின் ஆழம் என்னவென்பதையும், அதனூடாக இத்தகையை உயரத்திற்கு கடல் நீர்மட்டம் மெலெழுந்து வருமுன்னர் நிலத்தொடர்ச்சியானது ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்குமிடையில் இருந்திருக்கின்றது என்பதையும் விளங்கிக்கொள்வது இயலுமானதாயிருக்கும்.
தொடரும்……………….
318 total views, 3 views today