வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2

தமிழகப் பொதுப்புத்தியில் ஈழத்தமிழும் ஈழத்தமிழரும்

(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

தமிழீழத்தினதும் தமிழ்நாட்டினதும் உறவுநிலை பற்றிய பொதுவான பார்வையென்பது காலனியக் கொள்ளையர்கள் வரைந்த எல்லைப் பிரிப்புகளிற்கு வெளியே இன்னும் விரிவடையவில்லை என்பது தமிழீழ மக்களின் வரலாற்றிற்குப் பாரிய பின்னடைவாக உள்ளது. வெளிப்படையாகக் கூறின், தமிழகம் மற்றும் ஈழத்தின் வரலாற்று நெடுகிலான ஒருவழித்தட உறவுநிலை குறித்துப் பார்வையற்றவர்களாகப் பெரும்பாலான தமிழக, தமிழீழ மக்கள் இருப்பதென்பது தமிழீழ மக்களின் அரசியல் இருப்பையும் அதனது வரலாற்று நிலைப்பையும் வலுக்குன்றச் செய்கின்றது எனலாம்.

அரசியற்படாத, வரலாற்றுப் புரிதலற்ற தமிழீழ, தமிழகத்தைச் சார்ந்தோர்கள் பார்வையில் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலென்ன தமிழீழத்தில் வாழ்ந்தாலென்ன “நாம் ஒருவர்” என்ற மனநிலை இன்னமும் ஏற்படாமைக்கான காரணங்களில் முதன்மையானதாக அரசியலறிவின்மை மற்றும் வரலாற்றறிவின்மை என்பனவற்றை விஞ்சியதாக தமிழறிவின்மை இருக்கின்றது எனலாம். நன்கு தமிழறிவுள்ளவர்களால் தமிழரின் வாழ்விடங்களில் வெவ்வேறு பகுதிகளில் வழக்கிலுள்ள வட்டாரவழக்கிலான மொழிநடையைப் புரிந்துகொள்ளவும் அதையிட்டுப் பெருமைகொள்ளவும் இயலும்.

ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கைத் தம்மால் உடனே புரிந்துகொள்ள இயலவில்லை என தமிழகத்தில் பலர் சொல்வதுண்டு. ஈழத்தமிழர்கள் பேசும் தமிழை மலையாளமா எனக் கேட்குமளவிற்குத் தமிழறிவு மங்கித் தொலைந்துவிட்ட கேடானநிலையே தமிழகத்தில்வாழும் எம் தமிழ்மக்களில் பெரும்பாலானோரிடத்தில் நிலவுகிறது. கிருபானந்த வாரியார் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஒரு தகவலை இங்கே சுட்டுவது ஈழத்தமிழ் குறித்த தமிழ்நாட்டவரின் புரிதலைப் பற்றி அறிய உதவுவதாயிருக்கும். ஒரு முறை கிருபானந்தவாரியார் அவர்கள் சொற்பொழிவாற்ற ஈழத்திற்குச் சென்றபோது, அவர் தங்கியிருந்த இடத்தில் “தோய்ஞ்சிட்டு வாறீங்களா?” என ஒருவர் அவரைப் பார்த்து வினவ, அதனைப் புரிந்துகொள்ள முடியாமல் கிருபானந்த வாரியார் தடுமாறியிருக்கிறார். பின்பு, “தலையில் குளித்தல்” என்பதைத்தான் ஈழத்தில் “தோய்தல்” என மிகவும் பொருத்தமான சங்ககால சொல்வழக்கைத் தமது இயல்பான பேச்சு வழக்கில் வைத்திருகிறார்கள் என்பதை கிருபானந்த வாரியார் அறிந்து மகிழ்ந்தார். அதனால், தமிழ்நாட்டில் வழக்கொழிந்துவிட்ட பல சங்கத்தமிழ்ச் சொற்களானவை ஈழத்தில் கற்றார் முதல் கல்லாதார் வரை அனைவரிடத்திலும் மிக இயல்பாக வழக்கிலுள்ளது என்பதைத் தெரிந்து மெய்சிலிர்த்து, ஈழத்து மொழிவழக்கைத் தேடித் தேடி கிருபானந்த வாரியார் ஆய்வுக்கண்ணுற்றாராம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்கள் ஈழத்தமிழ் வழக்கில் அருஞ்சிறப்பாகப் பேணப்படும் தொல்காப்பிய மரபு பற்றி தமது ஆய்வுக்கட்டுரைகளிலும், ஆய்வுரைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் வழக்கொழிந்து விட்ட “உகரம்” என்ற சுட்டானது இன்றுவரை ஈழத்தமிழர்களின் நாவினிலே இயல்பாய் வருவதொன்று. வேற்றுமை உருபுகளை அன்றாட மொழிவழக்கில் வழுவின்றிப் பயன்படுத்தும் மொழிவழக்கு ஈழத்திற்கேயுரிய சிறப்பென்பர். ஒற்றெழுத்துகளை முறையாகப் பயன்படுத்துவதை பாலர் வகுப்பில் படிக்கும் ஈழத்துக் குழந்தைகள் கூட இயல்பாக நன்கறிந்து வைத்திருப்பர். “கடல்கடந்து பிராமணர்கள் பயணப்படக் கூடாது” என்று மாந்தகுலத்திற்கு எதிரானதும் பிராமணர்களின் வழிகாட்டி நூலுமாகிய ஸ்மிருதி என்கின்ற நூலிற் கூறப்பட்டுள்ளமையால், நல்வாய்ப்பாக, பிராமணர்களின் இழிவழக்கிலிருந்து ஈழத்தில் தமிழ்மொழியானது மிகநீண்ட காலம் தப்பித்து வந்தது. 18 ஆம் நூற்றாண்டு வரை பிராமணர்கள் தமது “ஸ்மிருதி” இல் கூறப்பட்டுள்ளதைக் கடைப்பிடித்துக் கடல்கடந்து பயணப்படாமல் இருந்தமையால், அதுவரை ஈழத்தில் செய்யுள்நடையானது எந்தத் திரிபுமடையாமல், இலக்கண வரம்பை மீறாமல் அருந்தமிழ் பேணிவந்தமையை உலகத் தமிழர்கள் ஈண்டு நோக்க வேண்டும்.

ஆனாலும், தமது பிழைப்பிற்காகவும் சமூக ஆதிக்கத்திற்காகவும் எதையும் மாற்றிப் பேசவும் நடக்கவும் பழக்கப்பட்ட பிராமணர்கள் காலனிய காலத்தில் தயங்கித் தயங்கிக் கடல்கடக்கத் தொடங்கினார்கள். அத்துடன், ஏடுகளில் கிடந்த தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படியெடுத்து அச்சேற்றியமையைத் தமிழுலகில் தொடக்கிவைத்த முன்னோடியான யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் வைதீக இழிவில் நாளடைவில் உழன்று போனதன் விளைவாக 1850 களின் பின்னர் வடசொல்லாதிக்கம் ஈழத்தமிழில் நிலைபெறத் தொடங்கிய இழிவானது வரலாற்றில் நிலைபெற்றது. ஆனாலும், வடசொற்கள் வைதீகமயமாக்கலினால் ஈழத்தில் உள்நுழைந்தபோதிலும் ஈழத்தமிழானது, வடசொல்லைத் தமிழோசைக்கு இணங்கச்செய்து, அதற்கு நிகரான தமிழெழுத்தமைத்து, தமிழ்நடைபெறச் செய்து, தொல்காப்பிய மரபுமீறாமலே வழக்கிலெடுத்தது என்பதை ஈண்டு நோக்க வேண்டும். “ஜாதி” என்று ஈழத்தில் சொல்ல மாட்டார்கள். மாறாக, “சாதி” என்றே சொல்வார்கள். விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழீழ அரசானது தனித்தமிழில் அத்தனையையும் மாற்றுவதில் முனைப்புடன் செயலாற்றிய காலத்தில் தனித்தமிழார்வ மிகுதியால் வடசொல்லெனக் கூறிப் பயன்பாட்டில் தவிர்க்க விரும்பிய சொற்களைக் கூட மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் அவர்களின் வேர்ச்சொல்லாய்வுகளை மேற்கோள் காட்டி அவை தமிழிலிருந்தே வடதிசை சென்றவை என தமிழ்நாட்டிலுள்ள பல தமிழறிஞர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

பொருத்தமான தமிழ்ச்சொற்களை முறையாக வழக்கில் வைத்திருக்கும் மொழிநடையானது புரிந்துகொள்ளப்படாமல் இருக்கின்றதென்பது, புரிந்துகொள்ள இயலாத தமிழர்க்கே வெட்கம். மாறாக, ஈழத்தமிழ் வழக்கை கிண்டலிற்கும் கேலிக்கும் உட்படுத்துவதென்பது தமிழ்நாட்டில் தமிழ்மறப்போரிடம் பரவலாகி வருகிறது. ஈழத்தமிழர்களின் பேச்சுவழக்கை மலையாளமா எனக் கேட்கும் மொழியறிவே இல்லாத எம் தமிழர்க்கு மொழி வரலாறு குறித்து அறிவைப் புகட்டும் வகையில் எழுத்துகளும், பேச்சுகளும் தமிழ்நாட்டிலிருந்து எழ வேண்டும். இன்று கேரளம் என்று சொல்லப்படும் நிலப்பரப்பானது தமிழர்களின் சேரநாடே. அங்கு முகிழ்த்தவை அத்தனையும் தமிழ்த்தன்மையினதே. சங்க இலக்கியங்களாம் பதிற்றுப்பத்தும் தமிழ்த்தேசியக் காப்பியம் என்று மெச்சப்படும் சிலப்பதிகாரமும் அங்கு முகிழ்த்தவையே.

சேர நாட்டினை நாம் குடிமுழுகிவிட்டால், சங்கத்தமிழ் வளத்தில் மூன்றில் ஒன்றை இழந்தவராவோம். மலையாளம் என்பது தமிழின் ஒரு வட்டார வழக்காகவே 14ம் நூற்றாண்டுவரை இருந்தது. மலைதழுவி வாழ்ந்த மலைத்தமிழர் பேசிய மலைத்தமிழே “மலையாளம்”. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்மணம் வீசும் தமிழரின் நிலமாகவே கேரளம் என்று இன்று சொல்லப்படும் சேரநாட்டின் பகுதி இருந்தது. கி.பி 800- 900 காலப்பகுதியில் வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிப் பிராமணர்களினால் திட்டமிட்டுச் சூழ்ச்சியாகச் சமசுக்கிருதமானது தமிழுடன் கலக்கச் செய்யப்பட்டது. ஆனாலும், அது அறிவுத்தளத்தில் நிகழ்ந்ததே தவிர, மக்கள் வழக்கிற் செல்வாக்குப் பெறவில்லை. 12 ஆம் நூற்றாண்டிலே தான் நம்பூதிரிப் பிராமணர்களின் சூழ்ச்சியால் மலையாளத் தமிழைச் சமசுக்கிருதமயப்படுத்தும் கேடு சொல்லக்கூடிய அளவில் விளைந்தது எனலாம். இருந்தபோதும், 14 ஆம் நூற்றாண்டுவரை மலைத்தமிழானது பாரிய அளவில் சமசுக்கிருத இழிநடையால் பொலிவிழக்காமலே இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பின்பு தான் இந்நிலையில் மாற்றமேற்பட்டு அருமை பெருமை மிகு சங்ககாலத் தமிழ்மணம் வீசும் மலைத்தமிழானது சமசுக்கிருத இழிவழக்கின் மிகுதியால் தன்னிலை கெட்டு, திரிந்து, வேறோர் கலப்புமொழியாகப் பாழ்பட்டுப்போய் தமிழிலிருந்து வேறாகி (தமிழை இழிந்துரைக்குமளவிற்கு) பிழைப்பிற்காகப் பிராமணத்திற்கு அடிவருடிய சில சமூக ஆதிக்கக் கும்பல்களின் தயவுடன் நம்பூதிரிப் பிராமணர்கள்தமது இழிசூழ்ச்சிகளால் மலைத்தமிழரை அவர்கள் தமிழினப்பகை கொள்ளுமளவிற்கு மடைமாற்றினர்.

இதனால் தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளானவை சுருங்கிப்போனதோடு, தமிழினத்திலிருந்தே தமிழ்ப்பகை உருவான துன்பியல் நடந்தேறியது. எனவே, 18 ஆம் நூற்றாண்டுவரை சேரர்களை ஒரு தனித்த தேசிய இனமாக நோக்கவே இயலாது. மாற்றாருடைய ஆட்சிகளில் நீண்டகாலம் வாழத்தலைப்பட்டால் மண்ணின் மொழி திரிந்துபோவதும், இலக்கண மரபில்லாத மொழிகள் மிகுதியான பிறமொழித் தாக்கங்களால் வேறோர் மொழியாகத் திரிந்துபோவதும் வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. ஆனால், மலையாளம் என்பது அப்படியான வரலாறு கொண்டதல்ல. திட்டமிட்ட இழிசூழ்ச்சிகளால் தமிழ்மொழியில் சமசுக்கிருதமானது வலிந்து கலக்கச் செய்யப்பட்டு ஒரு செயற்கை மொழியாக, தமிழை அழிப்பதை முதன்மை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதே இன்றைய மலையாளம். எனவே, மலையாளத்தை ஒரு மொழியாக ஏற்க தமிழறிந்த தமிழர்களின் மனம் ஒப்பாது. அது மேலிருந்து கீழாக சேரளப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களிடம் திணிக்கப்பட்டது என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். மொழியறிவில்லாதவர்கள் ஈழத்துமொழி வழக்கை மலையாளமா எனக் கேட்பதற்குப் பதிலுறுத்த வேண்டியிருந்ததால் மலையாளம் ஒரு மொழியேயல்ல என்றளவிற்கு இங்கு எழுதவேண்டி நேரிட்டது. எனினும் விரிவஞ்சி வேறோர் பத்தியில் இதனை மேலும் விரித்தெழுதுவோம்.

வெள்ளையர்களால் வன்கவரப்படுவதற்கு முன்னரே வடக்கேயிருந்து வந்த முசுலீம்களாலும் தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட வடுகர்களாலும் தமிழ்நாடானது வன்கவரப்பட்டு, தமிழ்நாட்டில் தமிழர்கள் மாற்றாரின் ஆட்சியில் நீண்டகாலம் வாழத்தலைப்பட்டனர். அந்த இடர்மிகு காலப்பகுதியில் ஆட்சிமுறை சார்ந்தும், உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் இன்னபிற தளங்களிலும் உருதுத்தாக்கம் எல்லையற்று ஆதிக்கம் செலுத்தி இன்றுவரை இயல்வழக்காக மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ளது. சோல்னா, தமாஷ், தர்ணா, தாசில்தாரர், தாலுக்கா, தாஜா, திவால், ஜாமின், பட்டுவாடா, பட்டா, பந்தோபஸ்து, பர்பி, பஜாரி, பலே, புகார், பேக்கு, பேட்டா, பேபானி, போதை, மண்டி, மசோதா, மிரசுதாரர், மௌசு, லத்தி, லோலாக்கு, வசூல், வாய்தா, வாரிசு, ஜமீந்தார், ஜல்தி, இனாமா, இலாகா, சுமார், கம்மி, பத்திரிக்கை, ஜலதோசம், வக்காளத்து, தினம், வாபஸ் என வகை தொகையற்று அத்தகைய மாற்றாரின் மொழிவழக்குகளை ஊர்களில் இயல்பாகப் பயன்படுத்தும் நிலையே தமிழ்நாட்டில் உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு ஈழத்தமிழருக்கும் ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்த்தேசியருக்கும் அலைபேசியில் நிகழ்ந்த உரையாடலை மொழிதொடர்பான புரிதலுக்காக இங்கே சுட்டலாம்.

ஈழத்தமிழர்: “முந்தி இருந்தது போல நிலமை இங்க இல்ல. பள்ளிக்கூட பெடியங்கள் கூட வெறியில திரியிறாங்கள். குடிவெறிதான் எங்க பாத்தாலும்….வெறிச்சேட்டைகளை கண்டுங்காணமலும் தான் நாங்கள் கூடத் திரியிறம்….” மதுவிற்கு அடிமையாகிய நிலையில் நடந்துகொள்ளும் இழிசெயல்களைத்தான் ஈழத்தமிழில் வெறிச்சேட்டை எனவும், மதுவிற்கு அடிமையாதலை குடிவெறி எனவும் இயல் வழக்கில் குறிப்பிடுவர். ஆனால், போதை என்ற சொல்லால் மட்டுமே இதனைக் கேட்டுப் பழக்கப்பட்ட தமிழகத் தமிழருக்கு இதனை உடனே புரிந்துகொள்ள இயலவில்லை. போதை என்பது தமிழ்ச்சொல்லே அல்ல என்ற புரிதலும் அவரிற்கு இதன் பின்னரே ஏற்பட்டது. இவ்வாறாக, மாற்றாரின் ஆட்சி தமிழ்நாட்டின் மொழிவழக்கில் மட்டுமல்ல உணவு தொடர்பாக புழக்கத்தில் உள்ள சொற்களிலும் பாரிய தாக்கத்தை இன்றுவரை செலுத்துகிறது.

தமிழ்நாட்டின் உணவுப்பழக்கமானது மாற்றாரின் ஆட்சிக்குள் வாழத்தலைப்பட்டமையாலும் பண்பாட்டுப் படையெடுப்புகளாலும் வெகுவாக மாற்றங்கண்டது என்பதை விளங்கிக்கொள்வாரில்லை. சோறைக் கூட சாதம் (ப்ரசாதம் என்பதிலிருந்து வந்தது) என்று வெகுவாகச் சொல்லும் இழிநிலையொன்றே தமிழ்நாட்டில் உண்ணும் உணவிலேயே தமிழ் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளப் போதுமானது. சாதம், சட்னி, சாம்பார், ரசம், பச்சடி, கிச்சடி, பூரி, சப்பாத்தி, பரோட்டா, பிறிஞ்சி, பிரியாணி, ஜிகர்தண்டா, சால்னா, லெஸ்ஸி, முட்டைமாஸ், கோலா, மசாலா, ரசகுல்லா, ரஸ்னா, பஜ்ஜி, பக்கோடா, லட்டு, கேசரி, ஜாங்கிரி, சமோசா, பூந்தி, காரச்சேவ் எனத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் புழக்கத்தில் இருக்கும் உணவுகளின் பெயர்கள் எவையுமே தமிழிலும் இல்லை தமிழ்த்தன்மையுடையதாயும் இல்லை.

ஈழத்து உணவில் சுறா வறை, திருக்கை வறை, முருங்கையிலை வறை, வாழைப்பூ வறை என வறைகள் வகை வகையாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு வறை என்றால் என்னவெனப் புரிந்துகொள்ள இயலுவதில்லை. அவர்கள் சுறா வறையை சுறாப் பிட்டு என்றே சொல்வர். உண்மையில், அது ஆக்கப்பட்ட முறையில் வறை எனப் பெயர் பெறுதலே பொருத்தமானது. வறை என்பது எவ்வாறு இயல்வழக்கில் சங்ககாலத்தில் இருந்துள்ளதென்பதை கீழ்வரும் சங்கப்பாடல்களிலிருந்தே தெரிந்து தெளியலாம்.

“பரல்வறைக் கருனை காடியின் மிதப அயின்ற காலை” – பெருநாராற்றுப்படை

“உடும்பின்வறை கால் யாத்தது” – பெரும்பாணாற்றுப்படை

“நெய் கனிந்து வறை ஆர்ப்ப”- மதுரைக் காஞ்சி

“நெய் துள்ளிய வறை முகக்கவும்” – புறம் 386/3,4

“மண்டைய கண்ட மான் வறை கருனை” – புறம் 398/24

ஈழத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டில் சந்தைக்கு வாழைப்பழம் வாங்கச் சென்று கதலிப்பழம் கொடுங்கள் எனக்கேட்டால், புரியவில்லை என்பதே பதிலாக வரும். ஆனாலும் நெல்லை மாவட்டங்களில் கதலிப்பழம் என்பது இயல்வழக்கில் உண்டு. “ஃபூவன் பழம்” என பிரம்மனுடன் பிணைத்த வைதீகமயமாக்கப்பட்ட பெயரே தமிழ்நாட்டில் பரவலாகப் புழக்கத்தில் உண்டு. ஆனால், சங்ககாலத்தில் “கதலிப் பழம்” என்ற சொல்லே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. வெண்கதலி, செங்கதலி என கதலிப் பழங்கங்கள் வகை வகையாகச் சங்ககாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

எனவே, சங்ககாலத்தில் இயல்வழக்கிலிருந்த சொற்களானவை ஈழத்தில் இன்றும் இயல்பாகப் புழக்கத்திலிருப்பதையும் அவ்வாறு ஈழத்தவர்கள் இயல்பாகப் பேசும் சங்ககாலத் தமிழ்ச்சொற்களைத் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை என்பதையும் தமிழகத்தில் ஈண்டு நோக்க வேண்டுமே தவிர, ஈழத்தவர்கள் பேசும் போது அவை தமிழ்நாட்டிற்கு அயற்தன்மையுடையனவாக நோக்குதல் முறையன்று. அந்தச் சொற்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் வெகுவாகப் புழக்கத்திலிருந்து இன்று வழக்கொழிந்து போய்விட்டாயிற்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, பிட்டு, இடியப்பம், சோறு, அப்பம் என தமது அன்றாட உணவுப்பழக்கவழக்கத்தை வைத்திருக்கும் ஈழத்தமிழர்களின் உணவுமுறையானது தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்டிருப்பதாகக் கூறி ஈழத்தவர்களின் உணவுப்பழக்கவழக்கத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டிலிருந்து இடைவெளி தேடும் குறைப்போக்கானது தமிழ்நாட்டிற் பரவலாகக் காணப்படுகிறது.

ஈசன் பிட்டுக்கு மண்சுமந்த கதை திருவிளையாடற் புராணத்தில் உண்டு. “ஆவணி பிட்டுத் திருவிழா” என்பது தமிழத்தில் குறிப்பாக மதுரையில் புகழ்பெற்றதொன்று. திவாகர நிகண்டில் “அப்பம்” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்காஞ்சியில் “மெல்லடை” என குறிப்புண்டு. இவ்வாறாக, பழந்தமிழர் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழர்களின் மரபு உணவுகளையும் அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் மறந்து மரபிலிருந்து வேறுபட்டுப் போயிருக்கும் தவறுகளை உலகத்தமிழர்களின் தலை நிலமாகவும் பண்பாட்டுத் தொட்டிலாகவும் இருக்க வேண்டிய தமிழகமே களைய வேண்டும்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகச் சிறப்பைச் சொல்லும் பாடலில், அங்கு இன்ன இன்ன சிறப்பானவை எல்லாம் இருக்கின்றதென்ற வணிகப்பட்டினச் சிறப்பைச் சொல்கையில் உணவு என்று வரும்போது “ஈழத்துணவு” என்றே சொல்லப்பட்டுள்ளது.

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு”

(பட்டினப்பாலை 185–193)

15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருப்புகழிலும் “பிட்டு” குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழர்களின் உணவுகளில் முதன்மை இடத்தை 15 ஆம் நூற்றாண்டுவரை கூட “பிட்டு” வகித்திருக்கின்றது. அதுதான் ஈழத்தில் இன்றுவரை தொடர்கின்றது என்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.

இவ்வளவிற்கு தமிழரின் மரபினடி தொடரும் ஈழத்து உணவுப்பண்பாட்டிற்கு ஊறுவிளைக்கும் நலிந்த பழக்கவழக்கங்கள் ஈழத்து உணவுகளையும் விட்டுவைப்பதாயில்லை. ஈழத்தில் போர்க்காலங்களில் நிவாரணப் பொருளாக கூப்பன் கடைகளில் (Ration Shop) வழங்கலாக வந்த மைதா மாவானது அரிசி (தினை, சாமை, நெல், வரகு) மாவுடன் கலந்து பயன்படுத்தும் மாவாக இடியப்பம், பிட்டு, அப்பம், அடை என்பன ஆக்குவதற்கு ஈழத்தில் வழக்கத்திற்கு வந்து தமிழரின் உணவுமரபையும் உடல்நலத்திற்கு உகந்த உணவுமுறைகளையும் சீரழிக்கின்றது. போர்த்துக்கேயரின் ஆட்சியில் அறிமுகமான “பாண்” (மைதா மா உரொட்டி/ வெதுப்பி) இன்று ஈழத்தில் வாங்கி உண்ணும் உணவாக மாறிவிட்டது. கொத்துரொட்டியானது இன்று ஈழத்தில் விரும்பி உண்ணும் வசதி உணவாக மாறிவிட்டது. தமிழரின் மரபினடி தொடர்ந்த உணவுப்பழக்கவழக்கத்தை நீண்டநெடுங்காலமாகக் காப்பாற்றி வைத்திருக்கும் ஈழமானது இத்தகைய கேடான வழியிலிருந்து வெளிவர வேண்டும்.

இதுகாறும் விரிவஞ்சிச் சுருங்கக் கூறியவற்றிலிருந்து நாம் ஒரு தெளிவான பார்வைக்கு வந்தடைதல் வேண்டும். அதுவென்னவெனில், தமிழ்நாடானது மாற்றாரின் ஆட்சியில் வாழத்தலைப்பட்டதன் விளைவாக தனது அருமை பெருமைகளை இழந்தநிலையில் இருக்கும்போது, தமிழ்நாட்டின் இற்றை நடைமுறை என்னவென்பதை வைத்து ஒப்பிட்டு எது தமிழ்த்தன்மையினது என்ற சான்றிதழ் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டுமென்பதேயாகும்.
தமிழ்நாடும் தமிழீழமும் தமது தமிழ்த்தன்மையை அத்தனை தளங்களிலும் மீட்டெடுத்துப் புழக்கத்திற்குக் கொண்டுவரும் போது மொழிவழக்கு மற்றும் உணவுமுறை என எவற்றிலும் தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமிடையே இடைவெளி இருக்காது என்பதை உலகத்தமிழர்கள் ஈண்டு நோக்கியறிதல் வேண்டும். அதனால், இற்றைச்சூழலை மட்டும் வைத்து தமிழீழ- தமிழக உறவை ஒப்பீடு செய்ய முடியாதென்ற காரணத்தினாலேயே வரலாற்று ஒப்புநோக்கில் உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை இங்கே அழுத்திக்கூற வேண்டியுள்ளது.

தொடரும்……………….

 345 total views,  3 views today

(Visited 51 times, 1 visits today)