வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

வரலாற்று ஒப்புநோக்கில் ழமும் தமிழ்நாடும் – பாகம் 1

ஈழ அரசியலின் நிகழ்காலப் போக்கு

உலகெங்கும் தமிழ்த்தேசிய இனத்தவர் பரவி வாழ்ந்து வந்தாலும் அவர்களின் அடிவேரானது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ தான் இருக்கும் என்ற உண்மையை மனதிற்கொள்ளும் அதேவேளையில் தமிழ்த்தேசிய இனத்தவர் அனைவரும் ஒரே அரசியற்பண்பு நிலையிலும் ஒரே அரசியற் தேவையிலும் இல்லை என்பது குறித்த பார்வையும் தவிர்க்க இயலாதது. உணர்ச்சிக் கூப்பாடுகளால் நாம் நரம்பு புடைக்கப் பேசித் தமிழின உணர்வை ஒரு நொடிப்பொழுதுக்கான உருவேற்றலாகவோ அல்லது செயலற்ற வெட்டிப்பேச்சாகவோ தொடரலாமேயன்றி, ஒரு நிகழ்கால மற்றும் தொலைநோக்கு அடிப்படையிலான அரசியல் வேலைத்திட்டத்தை நோக்கித் தமிழ்த்தேசிய மக்களை அணியப்படுத்த இயலாது.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ்த்தேசிய இனத்தவர்களின் அரசியல் இருப்பென்பது தமிழீழம் விடுதலை அடைந்தவுடன் நாடு திரும்பும் காத்திருப்பென யாராவது நினைத்தால் அது அவர்களின் பார்வைக்கோளாறு என்பது மட்டுமல்லாமல் அது ஒருவகையான அரசியல் அறிவிலித்தனமுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்மொழியில் சிந்தித்து, தமிழ்மொழியில் பொருட்செறிவுடன் பேச இயலாத தலைமுறையே புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களின் பணம் என்பது தமிழீழத்தின் அரசியற்பொருண்மியமாக அமையாமல் வெறுமனே கைச்செலவிற்குச் சில இடங்களிலும் பகட்டுச் செலவிற்குப் பல இடங்களிலும் என்ற நிலையிலேயே இன்றளவில் புழங்குகின்றது. அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்களிற்கும் தமிழீழத்திற்குமிடையில் அத்தகைய ஒரு பொருண்மிய உறவுகூட நிலைக்கப் போவதில்லை எனலாம்.

தமிழீழத்தை அடியாகக்கொண்ட புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது வாழ்வியல் நடைமுறைக்குத் துளியேனும் பொருந்தாதவற்றை தமது அரசியலாகப் பேச இயலுமே தவிர, அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கவோ அல்லது ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை நோக்கி அணியப்படவோ அவர்களால் இயலாது. உண்மையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் அந்தந்த நாடுகளில் தாங்கள் மொழிச்சிறுபான்மையினரே என்பதை உணர வேண்டும். எனவே, தமிழ்மொழியைப் பயிலவும், தமிழர் மெய்யியலைப் பின்பற்றவும், தமிழர் கலை, பண்பாடுகளைப் பேணவும், தமிழர் வரலாற்றைக் கற்கவும் என அந்தந்த நாடுகளில் வாழும் மொழிச்சிறுபான்மையினருக்குக் கிடைக்கக் கூடிய உரிமைகளை உச்ச அளவிற் பயன்படுத்தி தாம் தமிழ்த்தேசியத்தின் உறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, தம்மைப் போல நாடற்ற தேசிய இனங்களின் தன்னுரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்து, தேசிய இனங்களை ஒடுக்கும் ஒடுக்குமுறை அரசுகளிற்கெதிரான அத்தனை புறக்கணிப்புப் போராட்டங்களிலும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு அரசியற் சூழலிற்கு புலம்பெயர்ந்த தலைமுறை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

மாறாக, தமிழீழ மீட்பிற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்று புலத்திலிருந்து முன்னெடுக்கப்படுவதாக தமிழ்நாட்டில் இருக்கும் தமிழுணர்வாளர்களை நம்பவைத்து, ஒரு பொய்புரட்டான அரசியலை முன்னெடுப்பதென்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எனவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் மொழிச்சிறுபான்மையினர் என்பதை உணர்ந்துகொள்வதோடு, அவர்கள் தாம் தமிழ்த்தேசிய இனத்தின் இணைபிரியா உறுப்புகள் என்பதில் உறுதிகொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால், இவையெல்லாவற்றையும் முன்னெடுப்பதே அவர்கள் முன்னால் இருக்கக்கூடிய மிகப் பெரும்பாடாயிருக்கும். தமிழீழத்தை அடியாகக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு அந்தந்த நாடுகளில் மொழிச்சிறுபான்மையினரோ அவ்வாறே காலனிய காலத்திலும் அதற்குப் பின்பும் இன்றளவிலும் பொருளியலீட்டும் நோக்குடன் புலம்பெயந்த தமிழ்நாட்டை அடியாகக் கொண்ட தமிழர்களும் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களே என்றாலும் தமிழ்நாட்டை அடியாகக்கொண்ட புலம்பெயர்ந்தவர்கள் அந்தந்த நாடுகளில் அரசியற் கட்டுறுதிகொண்ட புலம்பெயர்ந்தவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தவில்லை அல்லது அதற்கான தேவைகள் அவர்கட்கு எழவில்லை என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். அத்துடன், தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே இந்தியச் சிறையினுள் அடைபட்டுக் கிடக்கும் தேசங்களில் வாழும் தமிழ்நாட்டவர்களும் அந்தந்தத் தேசங்களில் மொழிச்சிறுபான்மையினரே என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தொகுத்துக் கூறின், தமிழரொருவர் (அவர் தமிழ்நாட்டை அடியாகக் கொண்டவராக இருக்கலாம் அல்லது தமிழீழத்தை அடியாகக் கொண்டவராக இருக்கலாம்) தமிழ்நாடு அல்லது தமிழீழம் தவிர்ந்த உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர் தாம் வாழும் நாட்டிலோ/ தேசத்திலோ மொழிச்சிறுபான்மையினர் என்ற அரசியற் பண்புநிலைக்குள்ளேயே அடையாளப்படுத்தப்படுவர். ஆனால், இலங்கைத்தீவின் மலையகமானது சிறிலங்கா தேசத்தின் எல்லைக்குள் அமையப்பெற்றாலும், அங்கு வாழும் தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) மொழிச்சிறுபான்மையினர் என்ற அரசியற் பண்புநிலைக்கு மேற்சென்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

காடுமண்டிக் கிடந்த பகுதிகளான மலையகப் பகுதிகளைக் கழனிகளாக்கி மாந்தர்கள் வாழும் பகுதிகளாக்கி 200 ஆண்டுகளாக தமது உழைப்பினால் ஒரு பொருண்மிய வாழ்வை ஏற்படுத்தி வாழுகின்ற தமிழ்த் தேசிய இனத்தின் ஓர் உறுப்பாகவுள்ள மலையகத் தமிழர்கள் ஒரு தனித்த தேசமாக வளரக்கூடிய ஆற்றல் வளங்களைக் காலவோட்டத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய அளவிலான அரசியற் பண்பைக் கொண்டிருப்பதாலும் தமிழீழத்துடனான வாழ்நிலை உறவாலும் தமிழ்நாட்டுடனான வழித்தோன்றலுறவாலும் தமது அரசியற் பண்புநிலையை ஒரு தேசத்தின் பண்புகளுடன் வளர்த்தெடுக்கும் வாய்ப்பிருப்பதாலும், தாம் தமிழ்த்தன்மையுடன் வாழ வழிசெய்யும் வகையிலான ஒன்றியப்பகுதியாக மலையகத்தை அடையாளப்படுத்தி அதிகாரப்பரவலைக் கோரிநிற்கும் அரசியற் தகுதியுடையவராக இருகின்றனர் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுவழி உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுகின்றது. பன்னெடுங்காலத்திற்கு முன்பு அதாவது கடற்கோள் கொள்ளப்படுவதற்கு முன்பு ஒரே தொடர்ச்சியான தாயகநிலப்பரப்பை வாழிடமாகக்கொண்டதாக தமிழ்த்தேசிய இனம் இருந்தபோது அது ஒரு தேசமாக இருந்தது. இன்று அது இரண்டு தேசங்களாக மாற்றாரின் ஆட்சி முறைகளால் நிலைபெற்றுவிட்டது. இரண்டு தேசங்கள் ஒன்றாவதும் ஒரு தேசம் இரண்டாவதும் வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த/ நிகழக்கூடிய ஒன்று தான்.

தொடர்ச்சியான தாயக நிலப்பரப்பை வாழிடமாகக்கொண்டு, உலகின் தொன்மையான மொழியாம் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, ஏறத்தாழ ஒருபடித்தான பொருண்மிய வாழ்வையும் நாம் தமிழர் என்ற ஒருமன உணர்வும் கொண்டு வாழும் நீண்டதொரு வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தமிழர் இரண்டு தேசங்களாக இன்று வாழ்கின்றனர். தமிழ்நாடு தேசம், தமிழீழ தேசம் எனும் இரண்டு தேசங்களாக தமிழ்த் தேசிய இனத்திற்கு இரண்டு தேசங்கள் உண்டு எனினும் இரண்டு தமிழர் தேசங்களும் தமது இறையாண்மையை இழந்து முறையே இந்திய வல்லாதிக்கத்திடமும் சிங்கள பேரினவாதத்திடமும் ஒடுக்குண்டு கிடக்கின்றன என்பதனை நினைவிற்கொண்டே தமிழர்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்த முடியும்.

தேசங்களின் தேச அரசு (Nation State) அமைக்கும் வரலாற்றுப்போக்கு என்பது தேசங்களின் அடிப்படை உரிமையின்பாற்பட்டது என்பதற்கிணங்க தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழர் தேசங்கள் இரண்டும் விடுதலைபெற்று, தேச அரசுகளை அமைக்க வேண்டும். அதுவே இவ்வுலகில் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழியமைக்குமேயன்றி வேறெந்தவிதமான அரசியற் தீர்வும் தமிழர்களை இனவழிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளத் துணைபுரியாது என்பதை ஐயந்திரிபற உலகத் தமிழர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழீழத்தின் இற்றை நிலை

தமிழீழத்தாயக நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் வன்கவரப்பட்டு, தமிழீழதேசமானது சிங்களதேசத்தினால் ஒடுக்கப்பட்டுக் கிடந்தமைக்கு எதிராக அமைதிவழியில் போராடி, அந்த அமைதிவழிப் போராட்டங்களால் தாம் இழந்த அடிப்படை உரிமைகளைத் தன்னும் மீட்க இயலாது என்பது தெளிவாகத் தெரிந்துபோக, தமிழீழதேசத்தின் இறையாண்மையை மீட்டுத் தனியரசு அமைத்தலே இலங்கைத்தீவில் தமிழர்கள் உளதாயிருக்க ஒரேவழி என 1976 இல் தீர்மானமியற்றி, அதற்கு 1977 பொதுத்தேர்தலைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் மக்களாணையை அமைதிவழிப் போராட்டத்தின் தலைமையே பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழீழத் தனியரசமைத்தல் என்ற உயரிய விடுதலைக் கனவிற்காகப் பாடாற்ற வருமாறு இளையோர்களிடம் வேண்டுகோளையும் முன்வைத்தது. எனவே 1977 இலேயே தமிழீழ மக்கள் தமிழீழம் மீட்பதே தமக்கான ஒரே அரசியல்வழி என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள் என்பது தமிழீழ அரசியலில் என்றுமே ஈண்டு நோக்கப்பட வேண்டியதாகும்.

அதன் விளைவாக, மறவழியில் தொடர்ந்த தமிழீழ விடுதலை நோக்கிய மக்கள் போராட்டமானது சிங்கள பௌத்த பேரினவாத அரச படைகளிற்கும் இந்திய வல்லாதிக்கப்படைகளிற்கும் எதிராக தீரத்துடன் போராடி வன்கவரப்பட்ட தமிழீழத்தாயக நிலப்பரப்புகளை மீட்டெடுத்து, தமிழீழ நிழலரசமைத்துத் தனியரசமைத்திடும் நிலைக்குச் சற்றொப்ப வந்துவிட்டமை கண்ட தமிழினப் பகையான இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும் ஏனைய வல்லாண்மையாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுடன் கூட்டுச்சேர்ந்து தமிழினவழிப்பை முழுமுனைப்புடன் முன்னெடுத்ததனால் தமிழீழதேசமானது மீண்டும் 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முழுமையாக சிங்களதேசத்தின் வன்கவர்விற்குள்ளாகி விட்டது.

தமிழீழ மக்கள் தமது ஆற்றல் வளத்திற்கு மேற்சென்று இழக்க ஏதுமில்லையென்றளவில் எல்லாவற்றையும் இழந்து உயரிய ஈகத்தைச் செய்தே தமிழீழம் என்ற நிழலரசை அமைத்திருந்தனர். எனவே 2009 இல் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற தமிழினவழிப்பினால் தமிழீழ மக்கள் தாம் எல்லாமாகவும் நேசித்த விடுதலைப் போராட்டத் தக்க தலைமையை இழந்து, இனி இழக்கவும் ஏதுமில்லை, தமக்காகத் தட்டிக்கேட்கக் கூட யாருமில்லை என்ற நிலையில் நட்டாற்றில் அரசியல் ஏதிலிகளாக விடப்பட்டுள்ளார்கள். இந்தநிலையைத் தனக்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்தும் சிங்கள அரசானது, தமிழீழ மக்கள் தனது ஒடுக்குமுறைக்குள் வாழத்தலைப்படும் கேடான நிலையிலுள்ளபோதும் கூட தமிழர்கள் ஒரு தேசமாக நிலைக்கக் கூடாது என்பதற்காக, தமிழீழத்தாயகமானது நிலத்தொடர்ச்சியை இழக்கும் வகையிலான செயற்பாடுகளை தனது அரச வளங்களையும் உலகின் ஒத்துழைப்பையும் பயன்படுத்தி முன்னெடுக்கின்றது. அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் தான் காலங்காலமாக முன்னெடுத்து வந்த சிங்களக் குடியேற்றத் திட்டங்களையும் பெருந்தெரு அமைப்புகளையும் தமிழீழத்தாயக நிலத்தொடர்ச்சியைத் துண்டாடும் வகையில் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழீழத் தாயகநிலங்களானவை பல்தேசிய நிறுவனங்களிற்கும் உலக வல்லாண்மையாளர்களிற்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. சிங்களதேசத்தின் நிருவாக நடைமுறை ஆளுகைக்குள் தமிழ்மொழி வளர்வெய்த முடியாமல் திணறிக்கிடக்கின்றது. தமிழர்களின் புலமை மரபும் அறிவுமரபும் செழித்தோங்க முடியாமல் பட்டுப்போக உள்ளடி வேலைகளும் குளறுபடிகளும் சிறிலங்கா அரசினால் முடுக்கிவிடப்படுகின்றன. தமிழர்களின் சமூக பொருண்மிய வாழ்வானது சீர்குலைக்கப்பட்டு, சிங்களதேசத்தின் உற்பத்திகளையும் பல்தேசிய நிறுவனங்களின் சந்தைத் திணிப்புகளையும் கூவிக் கூவி விற்கும் கூட்டமாகவும் தரகு அடிமைகளாகவும் தமிழர்கள் இருக்குமாறு தமிழீழதேசத்தின் பொருண்மியமானது இழிநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றது. சிங்கள அரசபடைகளினால் இராணுவமயமாக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழீழத் தாயகப் பகுதிகள் எங்கிலும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு விடப்பட்டு, தமிழீழ இளையோர்களை இளமையிற் கருக்கும் இனவழிப்புச் செயற்பாடானது சிங்கள அரசினால் முன்னெடுக்கப்படுகிறது. சமூக- பொருண்மிய வாழ்வை இழந்தும், பாதுகாப்புணர்வற்றும் போகும் தமிழிளையோர் தமிழீழ மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட, உயிரச்சுறுத்தல் மிக்க வழிகளில் புலம்பெயர முற்பட்டு வாழ்வு முடங்கி நட்டாற்றில் நிற்கும் அவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே செல்கிறது. தமது சமூக- பொருண்மிய அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகின்றது என்ற நிலையற்ற தன்மையோடு தமிழீழதேசம் தத்தளிக்கின்றது. தமிழீழ மண்ணில் தமிழர்களின் வாழ்வு நிலையற்றதாக மாறுகிறது.

தமிழ்நாட்டின் இற்றை நிலை

2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்பாக, அதாவது தமிழீழதேசத்தின் மறவழிப்போரட்டத்தைத் தமிழினவழிப்பு மூலம் அழித்து, தமிழரை இராணுவவலு அற்றவர்களாக்கிய பின்பாக, தமிழ்நாட்டினைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் ஒடுக்கும் இந்திய வல்லாதிக்க அரசானது தமிழ்நாட்டவரை இளக்காரமாகவும் ஏளனத்துடனும் பார்க்கிறது. இராசீவ்காந்தி என்ற தமிழினக்கொலைக் கொடுங்கோலனின் மறைவிற்குப் பின்னர் தமிழினப் பகையான இந்தியத்திடமிருந்த தமிழர் மீதும் தமிழர்களின் அறச்சீற்றத்தின் மீதுமான அச்சவுணர்வானது பன்மடங்காகியது. ஆனால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் தமிழர்களை எதற்குமியலாதவர்கள் என்றாற்போல எள்ளலுடன் நோக்கி எடுத்தெறிந்து திமிர்த்தனத்தின் உச்சத்துடன் தமிழ்நாட்டுத் தமிழர்கள் விடயத்தில் நடந்துகொள்கிறது ஒடுக்கும் இந்திய அரசு. இந்திய அரசிற்குப் பின்கதவால் அடிமைத்தொழில் செய்துவரும் கங்காணிகளாக இருக்கும் தமிழக அரசும் தமிழர் உரிமை விடயத்தில் வாயளவில் ஏமாற்றி மெத்தனப்போக்குடன் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் இறையாண்மையானது இந்தியச் சிறைக்குள் அடகுவைக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடானது வெறும் மாநிலமாகி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாநில உரிமைகளுடன் ஆளுநரின் கையெழுத்திற்காகக் காத்திருக்கும் அரசியல் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதுடன் உலகத்தமிழர்களும் தமது அரசியற் பலத்தை இழந்துவிட்டனர் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடானது தனது இறையாண்மையை இந்தியச் சிறைக்குள் அடகுவைத்ததன் பின்பாக தனது மண்ணுரிமை, தொழிலுரிமை, கல்வியுரிமை, கனமவள உரிமை, கடலுரிமை என அத்தனை உரிமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது.  இந்தியாவானது கட்டமைக்கப்பட்டுள்ள விதத்திலேயே அதிகார வர்க்கங்களின் வளவேட்டைக்கும் மூலதன விரிவாக்கத்திற்கும் மாநிலங்கள் பலியாகுமாறே அமைந்திருப்பதால், தமிழ்நாடு தேசமானது, இந்திய அதிகார வர்க்கக் கும்பல்களின் மூலதன விரிவாக்கத்திற்கான சந்தையாகி, அந்த மாற்றாரின் மூலதன விரிவாக்கமானது மாற்றாரின் தொழிற்துறைகளாகி, தமிழ்நாட்டுச் சந்தையைக் கையகப்படுத்துமளவிற்கு மாறி, இப்போது வட இந்தியர்களின் தொழிலாளர் சந்தையாகவும் மாறிப்போய்விட்டதால் இலக்கக் கணக்கில் தமிழ்நாட்டிற்குள் வரும் வெளியாரின் வருகையானது இந்தியத்தின் திட்டமிட்ட சூழ்ச்சிகளால் தமிழ்நாட்டு மக்கள்தொகையில் பாரிய மாறுதலை ஏற்படுத்திச் சொந்த நிலத்திலேயே தமிழர்களை சிறுபான்மையினர்களாக்கும் இந்தியத்தின் வேலைத்திட்டமானது, தமிழ்நாட்டை ஆளும் வடுக- தரகு அரசின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மண்ணை மலடாக்கும் பல்தேசிய நிறுவனங்களின் கேடான திட்டங்களிற்கு ஆரிய இந்திய அரசும் வடுக மாநில அரசும் பச்சைக்கொடி காட்டி, தமிழ்நாட்டினை வந்தேறிகளின் வேட்டைக்காடாக்கும் சூழ்ச்சிகளானவை முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்களை 1076 கிலோமீற்றர் நீளமான தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்திக் கலைக்கும் வேலைகள் தொலைநோக்குச் சூழ்ச்சியாகத் திரைமறைவில் முடுக்கிவிடப்படுகின்றன. “நீட்” என்ற பெயரில் தமிழ்நாட்டின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, இந்திய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தினை (CBSE) நோக்கி ஓடினால் தான் கல்வியில் எதிர்காலம் கிட்டும் என்றளவில் தமிழர்களின் எதிர்காலத் தலைமுறையை இந்து – இந்தியமயமாக்கப்பட்ட கல்வியினைக் கற்கவைத்து சிந்தனைத்திறனற்றவர்களாக மாற்றும் முனைப்போடு இந்திய வல்லாதிக்கம் செயற்படுகிறது. இவற்றை வைத்துப் பணம் பார்க்கும் நோக்குடனும், தமது மேட்டுக்குடி வாழ்விற்குக் கேடில்லாதவாறு இந்தக் கல்விக் கொள்கைகள் இருப்பதனால் அகமகிழ்ந்தும் இருக்கும் மாநில- வடுக அரசானது தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வரும்போது போலி வாக்குறுதிகளால் தமிழரைத் திசைதிருப்பி ஏமாற்றி வருவதைத் தமது வாடிக்கையாக வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டினைக் கூறுபோடும் எண்ணத்துடன் தமிழ்நாட்டை வடதமிழ்நாடு, கொங்குநாடு, செந்தமிழ்நாடு என துண்டுகளாக உடைக்க சாதி அரசியலை முன்னெடுக்கும் இந்திய அடிவருடி அரசியலாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு என்ற தமிழர்களின் தேசத்தைத் துண்டாக்கியழிக்க இந்திய வல்லாதிக்க அரசு முனைப்புடன் செயலாற்றுகிறது. மூலதனச்சந்தை, தொழிற்சந்தை என அத்தனையையும் இழந்து தமிழ்நாட்டில் தமிழர் வாழும் உரிமையுடன் மட்டுமே வாழ்ந்துவரும் நிலையும் தற்போது பாதுகாப்பற்றதொன்றாக மாறி வருகிறது. தமிழீழத் தனியரசு நோக்கித் தமிழீழத் தமிழர்கள் 1976 இல் தள்ளப்பட்டமைக்கான அத்தனை தேவைகளும் சூழமைவும், இன்னும் சொல்லப்போனால், அதனிலும் இக்கட்டான நிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதனை உலகத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழீழம், தமிழ்நாடு என்ற தமிழர்களின் தேசங்கள் ஒடுக்குண்டு கிடப்பதோடு மட்டுமல்லாமல், தமிழர்களின் தேசங்களாக அவை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்க இயலுமென்று ஐயுறவுகொள்ளுமளவிற்குப் பாரிய அச்சுறுத்தலில் இருக்கின்றன. எனவே, தேச அரசமைக்கும் வரலாற்றுப் போக்கில் தமிழீழமும் தமிழ்நாடும் தமிழின விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்து அந்த விடுதலைப் பயணத்தில் தம்மை ஏதோவொரு வகையில் பங்காளர்களாக்க வேண்டும்.

கூர்மையாக்கப்படும் முரண்கள்

தமிழ்நாடும் தமிழீழமும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழின விடுதலைக்காகப் போராடும் ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு எக்காலத்திலும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் தன்னாலியன்ற அத்தனை சூழ்ச்சிகளையும் ஒடுக்கும் இந்திய, சிங்கள பேயரசுகள் செய்யும். அந்தவகையில், தமிழீழத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் தேடியறியப்பட்டு, அவற்றைக் கூர்மைப்படுத்தி, அதனைப் பிளவு என்ற அளவில் வளர்த்துவிடும் சூழ்ச்சிகளானவை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பின்னப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்கும் இடையிலான அடையாள வேறுபாடுகளைத் தேடித் தேடிப் பேசுபொருளாக்கி, அவற்றை முரண்நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் எக்காலத்திலும் ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு வர இயலாதவர்களாக்கும் சூழ்ச்சிகளை இந்திய, சிறிலங்கா உளவமைப்புகளின் துணைகொண்டு தமிழினப் பகையான இந்திய வல்லாதிக்க அரசு செய்து வருகிறது. இந்த இந்தியச் சூழ்ச்சிவலைக்குள் அகப்பட்டுப் போனவர்களும் சிறுமதியாளர்களும் இந்த இந்தியச் சூழ்ச்சிக்கு உடந்தையாக உள்ளனர்.

தமிழீழத்தைத் தமது உயிரினும் மேலாக நேசிப்பவர்களும், தமிழ்நாட்டிலும் பார்க்கத் தமிழீழத்தை நேசிப்பவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதை தமிழீழத்திற்காகத் தமிழ்நாட்டில் இருந்து செய்த ஈகங்கள் தெட்டத் தெளிவாகச் சொல்கின்றன. அதேவேளை, தமிழ்நாட்டைத் தமது தாய்மடி போல நோக்கும் தமிழீழத் தமிழர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், கடந்த 50 ஆண்டுகளிற்குள் மட்டுமே தமது வரலாற்றுப் பார்வையைச் சுருக்கிக்கொண்ட சிறுமதியாளர்களினதும், வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து தெளியாதவர்களினதும் எண்ணிக்கையே தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் இன்றளவில் மிகக்கூடுதலாக இருக்கின்றதென்னும் கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

உண்மையில் காலனிய அடிமை மனநிலைக்கு வெளிச்சென்று தமிழின வரலாற்றை முறைப்படி உவத்தல் காய்தலின்றி ஆய்வுக்குட்படுத்தினால் உலகத் தமிழர்களிற்குப் பல மலைக்க வைக்கும் வரலாற்று உண்மைகள் தெரியவருவதுடன், தமிழர்களின் வாழிடத் தொடர்ச்சியே இன்றைய தமிழ்நாடு, தமிழீழமென தமிழர்களின் இரண்டு தேசங்களாக இருக்கின்றன என்ற உண்மை புரிந்து, தமிழின ஓர்மை உணர்வு உலகத் தமிழர்கட்கு ஏற்படும். இனியும் காலந்தாழ்த்தாமல் தமிழக- தமிழீழ உறவை நேர்மைத் திடத்துடன் முன்முடிவுகளின்றி, இட்டுக்கட்டல்களிற்கு வெளியே நின்று புரிந்துதெளிவோமா?

தொடரும்……………….

 468 total views,  3 views today

(Visited 110 times, 1 visits today)