தமிழ்த்தேசிய அரசியலின் முதன்மை எதிரி இந்துத்துவ அரசியலே ! -முத்துச்செழியன் –

தமிழீழதேசமானது முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக உள்ள இந்த 14 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தமிழரது அரசியல், சமூக, பொருண்மிய இருப்பென்பது வெறிதான ஒரு நிலையிலேயே இருக்கின்றது எனலாம். விடுதலைக்காகப் போராடிய சமூகத்திடம் இயல்பாக ஊறித்திளைத்திருக்க வேண்டிய பண்புநிலைகள் எவையும் ஈழத்தமிழரின் வாழ்நிலையில் இன்று வெளிப்படுவதாயில்லை. மாறாக, மரபார்ந்து வந்த வாழ்நெறிகள் மற்றும் பண்புகள் என்பனவும் விடுதலைக்காகப் புரட்சிகரமாகப் போராடியதால் பெற்ற முற்போக்கான பண்புகள் என்பனவும் ஈழத்தமிழரிடத்தில் இன்று இல்லாமற்போனதுடன், இனப்படுகொலைப் போரின் பின்னவலக்கால ஏழ்மை, வலிகள், ஆற்றாமைகள், உறுதியற்ற வாழ்நிலையும் அதனைத் தக்க வைக்கவென முயல்கையில் வெளிப்படும் பக்கவிளைவுப் பண்பான மிகைத்தன்னல உணர்வு என்பனவே ஈழத்தமிழரில் கணிசமானோரின் குணவியல்பாக மாற்றங்கண்டு வருகின்றமையைத் துன்பம்மேலிட இங்கு சுட்ட வேண்டியுள்ளது.

தனிநாடமைக்கும் தறுவாயில் நின்ற தமிழீழ மக்கள் ஈற்றில் வாழிடமிழந்து, தமது தாயக மண்ணை இழந்து, உரிமையிழந்து இனி இழக்க ஏதுமில்லை என்ற நிலையில் தமிழீழ விடுதலைக்கான புரட்சிகரத் தலைமையையும் இழந்து நட்டாற்றில் தேற்றுவாரின்றி தகிக்கவிடப்பட்டதன் பின்பான பின்னடைவிலிருந்து தமிழீழ மக்களை எழுகையுணர்வுபெறச் செய்யத்தக்க வகையில் ஒரு சிறு முன்னெடுப்பைத் தன்னும் முன்னெடுக்கும் அளவிற்கு ஒரு புரட்சிகர அமைப்பு வடிவமானது ஈழத்தமிழர்களிடத்தில் இல்லை என்பதே ஈழ அரசியலின் இற்றைச் சூழலாகும். இப்படியான இடர்மிகுந்த அரசியற் சூழலில் ஈழத்தமிழர்கள் இருப்பதனை தமக்குவப்பான களமாகப் பயன்படுத்த எதிர்ப்புரட்சி அரம்பர்கள் தலையாலும் காலாலும் ஈழத்தில் நடமாடலாகினர். நம்பிக்கையிழந்து வாழ வழிதெரியாமல் இனப்படுகொலைக்கு ஆட்பட்டுநின்ற தமிழீழ மக்களிடம் தேற்றுவார் போல உள்நுழைந்த மத அடிப்படைவாதப் போக்கிரிகள் தமது ஏமாற்றுவித்தைகளால் மக்களை அவர்களின் மகுடிக்கு ஆடும் அரவங்களாக ஆட்டுவிக்க முயன்று, அதில் ஒரு கணிசமான வெற்றியும் கண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முள்வேலி முகாங்களுக்குள் எமது மக்கள் அடைக்கப்பட்டு இருக்கும்போதே, “அம்மா பகவான்” போன்ற போலி ஆன்மீகக் கும்பல்கள் சிறிலங்கா அரசின் ஏற்புடன் உள்நுழைந்து தமது கடைகளை விரித்தனர். இவ்வாறாக, தமிழீழ மக்களிடம் உள்நுழைந்த இந்துவிய போலி ஆன்மீகக் கும்பல்களின் பின்னாலுள்ள இந்துத்துவ அரசியல் குறித்த விழிப்போ அல்லது அல்லது அதன் மூலமான இந்திய உளவுத்துறை அமைப்புகளின் ஊடுருவல்கள் குறித்த எச்சரிக்கையுணர்வோ அற்று மழுங்கிய மனநிலையுடன் எமது மக்கள் அவற்றை ஏற்றோ அல்லது அவற்றைக் கடந்தோ எதிர்ப்பின்றிக் கடந்துபோகலாயினர். இவ்வாறே, கர்த்தரின் பெயரால் தமிழீழ மக்களிடத்தில் உள்நுழையும் மதமாற்றி அமைப்புகளானவை கருப்பு- வெள்ளைப் பணப்பரிமாற்ற வணிகத்தை முதன்மை நோக்காகக்கொண்டுள்ளதுடன் அமெரிக்க உளவுத்துறையின் வலைப்பின்னலில் இணைந்ததாகவும் இருந்தவாறே எமது மக்களை உளநோய் முற்றியோராக மாற்றி வருகின்றன. அத்துடன், அகமதிய வாகபிச ஜிகாதிகளும் தமது காபிர்கள் (சிலை வணங்கிகள்) மீதான கொலைவெறியாட்டங்களிற்கான ஆட்சேர்ப்பினை எமது தமிழீழ மண்ணில் முடுக்கிவிட்டுள்ளனர்.

கர்த்தரின் பெயரால் கடைவிரிக்கும் மதமாற்றி அமைப்புகளும், அகமதிய ஜிகாதிகளும் தமது அடிப்படைவாத அரசியலை தமிழீழ மண்ணில் நிகழ்த்துவதை தமக்கான நல்வாய்ப்பாகவே இந்துவிய போலி ஆன்மிகக் கும்பல்கள் பார்க்கின்றன. இப்படியான கிறித்தவ, அகமதிய மதமாற்றக் கும்பல்களின் அட்டூழியங்களை எடுத்துக்காட்டி, அவற்றிலிருந்து தமிழர்களைக் காப்பதற்கான வழி தமது இந்துவிய போலி ஆன்மீகக் கும்பல்களிடம் சிக்குண்டுபோவதே என்றாற்போல ஒரு அரசியலை இந்த இந்துவிய கும்பல்கள் தமிழீழ மண்ணில் முன்னெடுக்க தம்மாலியன்ற அத்தனை இழிசூழ்ச்சிகளையும் செய்து வருகின்றனர். சிங்கள- பௌத்த பேரினவாதமானது, அரச பயங்கரவாதத்தின் தொடர்நிகழ்வாக, தமிழர்களின் நிலங்களை வன்கவர புத்தர்சிலைகளைப் பயன்படுத்தி வருகின்றமை குறித்து அதிகம் பேச விரும்பாதவர்களாக இந்த இந்துவிய கும்பல்கள் இருக்கின்றன என்பதையும் கிறித்தவ, அகமதிய மதமாற்றி கும்பல்களை மட்டும் இலக்காக்கி, அவற்றின் மேல் தமிழர்கள் கொள்ளும் வெறுப்பினை மூலதனமாக்கி,  ஈழத்தமிழர்களை தமது இந்துவிய கும்பல்களிற்குப் பின்னாலுள்ள இந்துத்துவ அரசியலின் கருத்தியல் அடிமைகளாகவும் அடியாட்களாகவும் மாற்றும் கேடிலும் கேடான அரசியற் சூழ்ச்சியானது ஈழத்தமிழர்களைக் குறிவைத்து அரங்கேற்றப்படுகின்றமையை ஈண்டு நோக்க வேண்டும்.

எனவே, மத அடிப்படைவாதமானது எதிர்ப்புரட்சிக் கருத்தியல் என்ற அடிப்படையிலே நாம் இந்த இந்துவிய கும்பல்களை எதிர்க்க வேண்டும் என்ற பொதுவான நோக்குநிலைக்கு மேற்சென்று இந்துவிய அமைப்புகளையும் அதன் பின்னாலுள்ள இந்துத்துவ அரசியல் குறித்தும் புரிந்துகொள்வதென்பது முன்னெப்போதிலும் பார்க்க ஈழத்தமிழரிடம் இன்றைக்கு இன்றியமையாத் தேவையாகவுள்ளது. இந்து மதம் உருவாகிய வரலாற்றுப் பின்னணி என்ன? அது யாருடைய நலன்கட்காக உருவாக்கப்பட்டது? எவற்றையெல்லாம் காவுகொண்டும் எவற்றையெல்லாம் உட்செரித்தும் இந்து மதம் செயற்கையாக ஒரு கலப்பு மதமாகக் கட்டமைக்கப்பட்டது? தமிழர்கள் இந்துக்களா? இல்லையெனில் தமிழர்களின் மெய்யியல் மரபு எத்தகையது? தமிழர்களில் பெரும்பான்மையானோரிற்கு மத அடையாளமாக இந்து என்பது நிலைத்துவிட்டதென்றான பிறகு அதனைத் தொடர்வதில் உள்ள சிக்கலென்ன? போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்க முன்பாக, சரி தவறுகளுக்கு அப்பால் நோக்கில் “இந்து” என்பது ஒரு மதக்கருத்தியல் (religious ideology). ஆனால் இந்துத்துவா என்பதோ ஒரு அரசியற் கருத்தியல் (political ideology) என்ற புரிதல் இந்துவாகத் தம்மை அடையாளப்படுத்தும் ஒவ்வொருவற்கும் இருக்க வேண்டியதொன்றாக இருக்கின்றது.

இது பற்றி மேலும் உசாவுவதற்கு முன்பாக, அடிப்படையான சில கேள்விகளிற்கு ஐயந்திரிபறப் பதிலுறுத்த வேண்டியிருப்பதானது மேற்சென்று இப்பத்தியை அனைவரும் புரிந்துகொள்ள வழியமைக்கும். அந்த வகையில் “தமிழர்கள் இந்துக்களா?” என்ற வினா இங்கு முதலாவதாக எழுகிறது.

தமிழர்கள் இந்துக்களா?

“தமிழர்கள் இந்துக்கள் அல்ல. இந்து என்பது எம் மீது திணிக்கப்பட்டது. அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் சைவர்கள். சைவத் தமிழர்கள்” என கடந்த ஆண்டு மதுரை ஆதீனத்தின் முதல்வர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். மதுரை ஆதீனம் வேண்டி நிற்கும் சமூக ஆதிக்கத்தையும் அது கைப்பற்றி வைத்திருக்கும் 5000 ஏக்கர் வரையிலான விளைநிலங்களின் பின்னால் இருக்கும் அரசியல் வரலாறு குறித்தும் புரிந்துகொள்வோமெனில், இத்தகைய ஆதீனங்களும் உழைக்கும் தமிழர்களை ஏய்த்துப் பிழைப்பதில் வேறுபட்டு நிற்பவர்கள் அல்ல என்ற முடிவிற்கு வரலாம். தமிழரின் வழிபாடுகள் வைதீகமயப்பட்டுப் போனவை பற்றிய கவலையோ அல்லது வைதீகக் கேட்டிலிருந்து விடுபட தமது சமய மீட்டுருவாக்கம் பற்றியோ முனைப்போ இன்றி தமது சமூக மேலாதிக்கத்திற்காக மட்டுமே அடையாளங்கள் குறித்துக் கவலைப்படுவோராக இந்த ஆதீனங்கள் இருக்கின்றன. வேத- வைதீக பிராமணியத்தின் ஊதுகுழலாக இருந்த திருஞானசம்பந்தரையும் சிவனியம் சார்ந்த உழைக்கும் தமிழரின் குரலாக இருந்த திருநாவுக்கரசரையும் வேறுபடுத்தி நோக்குமளவிற்குக் கூட பார்வையற்று இருக்கும் மதுரை ஆதீனம் போன்றவர்களே “தமிழர்கள் இந்துக்கள் அல்ல” என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள் எனின், இந்து என்ற அடையாளம் வைதீகத்தில் மூழ்கி அறிவுமங்கிக் கிடக்கும் தமிழர்கட்குக் கூடப் பொருந்தாது என்பதை ஐயந்திரிபறப் புரிந்துகொள்ளலாம்.

தமிழர்களின் வழிபாட்டு, மெய்யியல் மரபு எத்தகையது?

எந்தவொரு சமயநெறிகளேனும் தமிழரது வாழ்வியலாவதற்கு முன்னர் தமிழர் இயற்கைநெறியினராய் இருந்தனர் என்று கூறத்தக்கவாறு இயற்கையோடியைந்த வாழ்வியல் நெறிகளையும் இயற்கையோடியைந்த வழிபாட்டு மரபுகளையும் பண்டைத்தமிழர் பின்பற்றி வந்தனர். அத்துடன், தமது மண்ணிற்காகவும் மக்கட்காகவும் தம்மை ஒறுத்து வாழ்ந்து ஈகஞ்செய்த தம்மின முன்னோர்களை நடுகற்களாக்கி நடுகல் வழிபாடு செய்யும் மரபினராய் பண்டைத்தமிழர் விளங்கினர். எனவே, பண்டைத்தமிழரின் வழிபாட்டு மரபு என்பது இயற்கை வழிபாடாகவும் நடுகல் வழிபாடாகவும் இருந்தது என்பதுடன் அதனடி தொடர்ந்தவையாக பின்வந்த வழிபாட்டு வழக்காறுகள் தமிழரின் வழிபாட்டு மரபாகத் தொடர்ந்தன எனலாம். ஐவகை நிலங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களின் திணைவாழ்வியலில் குறிஞ்சியில் முருகன், முல்லையில் திருமால், மருதத்தில் இந்திரன், நெய்தலில் வருணன் மற்றும் பாலையில் கொற்றவை என திணை வழிபாட்டு மரபாக தமிழரின் இயற்கை வழிபாடும் நடுகல் வழிபாட்டு வழக்காறுகளும் வளர்வெய்தி இருந்தன.

பண்டைத் தமிழர்கள் இந்த உலகையும், உலகின் இயக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு முயற்சித்த முயற்சியின் பேறாக முகிழ்த்தவையே தமிழர் கண்டடைந்த மெய்யியல் கோட்பாடுகளாக உருவாகின. அந்த வகையில் பூதவாதம் மற்றும் உலகாய்தம் என பொருள்முதல்வாத அடிப்படையிலான முற்போக்குப் புரிதல் கொண்ட மெய்யியற் கோட்பாடுகள் தமிழரிடத்தில் உருவாகின. இவ்வாறு தோன்றிய மெய்யியற் கோட்பாடுகள் தொடர்பான பார்வைகள் அகன்றும் விரிந்தும் தமிழர்களிடத்தில் வளர்ச்சிகண்டன. அந்த வகையில் ஆசிவகம் என்ற பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாத மெய்யியற் கோட்பாடானது ஓரளவு நிறுவனமயப்பட்ட சமயமாக தமிழர்களிடத்தில் உருவானது.

அக்காலத்தில் வைதீகம், சைனம் (சமணம்), பௌத்தம் ஆகிய மதங்கள் புறத்தேயிருந்து தெற்குநோக்கி வந்து தமிழர்களிடத்தில் கடைவிரித்தன. கி.மு 3 ஆம் நூற்றாண்டுகாலத்தில் இவ்வாறான முனைப்பில் இங்கு வந்த அந்தந்த மதப் பரப்புரையாளர்கள், தமிழர் வாழ்ந்த பகுதிகளுக்கு வந்த பின்னர் அவர்கள் கண்டுகொண்ட தமிழர்களின் கோட்பாட்டுத் தெளிவுகளையும் அறிவு மரபுகளையும் கண்டு அதிர்ந்து வியந்து போனதுடன் தமது கடைவிரிப்பு தமிழர்களிடத்தில் எடுபட வேண்டுமெனின் அந்தக் கோட்பாட்டில் சிலவற்றை தம்மாலியன்ற அளவில் உள்வாங்க வேண்டுமெனப் புரிந்து அதனைச் செய்யவும் செய்தனர். இதில் வைதீகம் என்ற மாந்தகுலத்திற்கு கேடான கருத்தியலானது எவ்வாறு வடிவமாற்றங்களிற்கு உள்ளாகி வேறுபட்ட மெய்யியற் போட்பாடுகளையும் வழிபாட்டு மரபுகளையும் காவுகொண்டும் உட்செரித்தும் “இந்து” என்ற மதமாக இன்று நிலைபெற்றுவிட்டது என்பது குறித்த புரிதலானது தமிழர்களிடத்தில் ஏற்பட்டேயாக வேண்டும்.

வைதீக சமயம் என்றால் என்ன?

இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால்வேதங்களையும் அடிப்படையாகக் கொண்ட கோட்பாடே வைதீகம் ஆகும். இந்த நால் வேதங்களின் உட்கிடை என்னவென்றால் பிறப்பினடிப்படையில் உழைக்கும் மாந்தர்களை இழிவுபடுத்தி பிராமணன் என்ற ஆரிய அநாகரிகன் குமுக மேலாதிக்கத்தை அடைவதே. பிராமணன், வைசிகன், சத்திரியன், சூத்திரன் என்ற இந்த வர்ணாசிரமக் கோட்பாட்டின் மூலம் அநாகரிக ஆரியப் பிராமணன் குமுக மேலாதிக்கம் பெற்று உழைக்கும் மண்ணின் மக்களை இழிந்தோராக்கி அவர்களை அடிமைப்படுத்துவதே வைதீகத்தின் அடிப்படை. உண்மையில் இந்த நால்வேதங்களை உள்ளாய்ந்து பார்த்தால் நாகரீகமடையாத நாடோடி வாழ்நிலையில் ஒழுக்கமென்றால் என்னவென்றறியாத ஒரு கூட்டத்திற்கான வேதங்களாய் அவை அமைவதைக் காணலாம். இந்த ஆரியப் பிராமணியத்திற்கான நால்வேதங்களில் அந்த அநாகரிகக் கூட்டம் சோம பானம் அருந்தி, பசுக்கன்றுகளையும், புரவிகளையும் வேள்வித்தீயில் இட்டுக் கொலைசெய்து வழிபடும் செய்திகளும், புரவிகள் போன்ற விலங்குகளைத் தாம் எப்படிப் புணர்வதென்ற காட்டாண்டிக் கேவலங்களுமே விரவிக்கிடப்பதைக் காணலாம். இப்படியான வைதீகமதத்தின் வருகையை செம்மார்ந்த வாழ்வியல் ஒழுக்கங்களோடு அறமும் மறமும் அறிவுமரபும் என இயற்கோடியைந்து வாழ்ந்த தமிழர்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதே காலப்பகுதியில் அதாவது கி.மு.3 ஆம் நூற்றாண்டளவிலே, சைன (சமணம்), பௌத்த மதத்துறவிகளும் தமிழர்களிடத்திற்கு வந்து தமது மதக் கருத்துகளை இங்கு பரப்பினார்கள். இவர்கள் வைதீக மதத்தை இங்கு பரப்ப வந்த ஆரியப் பிராமணர்கள் போலல்லாது, தமது சைன, பௌத்த மதக் கருத்துகளைப் பரப்பத் தமிழ்மொழியை நன்கு பயன்படுத்தினர். இவர்களின் மதக் கருத்துகளை உள்வாங்கிய தமிழறிஞர்களைக் கொண்டு தமிழில் பல நூல்கள் செய்து தமிழோடியைந்து தமது மெய்யியல் கருத்துகளைத் தமிழர்களிடத்தில் பரப்பினர். ஆனாலும், மெய்யியல் கோட்பாடுகளால் இந்த உலகை பொருள்முதல்வாத முற்போக்குச் சிந்தனை மரபில் உலகைப் புரிந்துகொண்டு முன்னோரையும் அறிவர்களையும் (சித்தர்கள்) இயற்கையையும் போற்றி இவ்வுலக வாழ்வை அறிவார்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்த தமிழர்களிடத்தில் இந்த சைன, பௌத்த மதங்களாலும் வெகுவாகச் செல்வாக்குச் செலுத்தி வளர முடியவில்லை.

பின்பு, கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்த வடுக அநாகரிகரான களப்பிரர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை வன்கவர்ந்து ஆட்சி செய்தனர் (கி.பி.250-கி.பி.575). இந்தக் களப்பிரர்கள் அநாகரிகர்களாக இருந்ததோடு தமிழர்களின் செம்மார்ந்த வாழ்க்கையையும் அறிவுமரபையுங் கண்டு பொறாமையும் எரிச்சலுமுற்றதோடு தமிழர்கள் மரபிற்கு எதிரான அத்தனை செயல்களுக்கும் ஊக்கமளித்து வந்தனர். தமிழிசையை கர்நாடக இசையென வழங்கும் நிலையும் இதனாலே ஏற்பட்டது. இந்தக் களப்பிரர்களே சைன (சமணம்), பௌத்த மதங்களை தமிழ் மண்ணில் ஊக்குவித்து நல்லாதரவு வழங்கி வளர்த்து வந்தனர். களப்பிரர்கள் ஆட்சியிலேதான் இவ்வாறு சைன, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வளர்ந்தன. தமிழர்களின் மெய்யியற் கோட்பாடான ஆசீவகமும் அதன் வழிவந்த வழிபாட்டு செல்நெறியும் மோசமாக ஒடுக்கப்பட்டு அவை சைன, பௌத்தர்களால் வன்வளைக்கப்பட்டது.

சைனர்கள் கொல்லாமை, புலாலுண்ணாமை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள் என்பதும் புலாலுண்ணாமல் வாழும் பழக்கத்தை மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதும் பௌத்தர்கள் கொல்லாமையை வலியுறுத்தினார்கள் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. அதுவரை, சோமபானம் அருந்தி, பசுவதையும், புரவி பலியெடுப்பும் செய்ததோடு தமிழர்களின் வழிபாட்டு முறைகளைக் கேவலப்படுத்தி வந்த ஆரிய அநாகரிக வைதீகர்கள் களப்பிரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவதுடன் நலிவுபெறத் தொடங்கிய பௌத்த, சைன (சமண) மதத்திலிருந்து பல விடயங்களை உள்வாங்கித் தாம் முன்னர் கீழ்மைப்படுத்திய தமிழர்களின் திணைவழிபாட்டையும் உள்வாங்கியதோடு தாம் முன்னர் வெறுத்தொதுக்கிய தமிழையும் பயன்படுத்திப் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீகத்தைப் பரப்பும் அமைப்பைத் தொடங்கியது. அவ்வாறே புலாலுண்ணாமை, கொல்லாமை போன்ற விடயங்களை வைதீகம் கைக்கொள்ளத் தொடங்கியது. ஏனெனில், சைன, பௌத்தம் கோலோச்சியிருந்த காலத்தில் தமிழ்மக்கள் அந்த வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுப்போனதால், அதை உள்ளீர்த்தே வைதீகம் வளர்ந்தது.

“சைவம்” தோற்றுவிக்கப்பட்ட வரலாறு

வைதீகர்களைப் பொறுத்த வரையில் தமது ஆரியப் பிராமணர்கள் குமுக ஆதிக்கம் பெற வழிசெய்யும் நால்வேதங்களை உள்நுழைத்து ஏற்றுக்கொள்ளச் செய்தாலே போதுமென்ற சிந்தையிலே தான் பௌத்த, சமண, தமிழர் பண்பாடு என்பனவற்றை உள்ளீர்த்து சைவம், வைணவம் என்ற பெயரில் மதத்தைப் பரப்பினர். சங்ககாலத்திலேயே தமிழர்கள் மருதநிலத் திணைத்தெய்வமாக வழிபட்ட இந்திரனை காமுகனாகக் கதை பரப்பியதோடு, நாம் சங்ககாலத்தில் ஈசன் எனவும் கோச்சடையன் எனவும் போற்றியவரை சிவன் என மாற்றி, எங்கள் கொற்றவை என்ற தாய்த்தெய்வத்தை அம்மன், பார்வதி என்றாக்கி சிவனுக்கு மனைவியெனக் கதைகட்டி, குறிஞ்சித் திணைத்தெய்வமாகித் தமிழர் தெய்வமான முருகனை அவனின் வள்ளி என்ற தமிழ்வேட்டுவிச்சி மனைவியை விட வட இந்திய தெய்வானையை இரண்டாம்தாரமென கதைகட்டி, திருமாலை விஸ்ணுவாக்கி மோகினியாக்கி சிவனுடன் புணர்ந்து பெற்றவனாக எம் ஆசிவக ஐயனார் (அறிவர்) இருப்பதாகக் கதைகட்டி, இவ்வாறு அத்தனை கூத்துமாடி கதைகட்டித் தாம் முன்னர் இழிந்துரைத்த தமிழர் திணைத்தெய்வங்களை வைதீகம் உள்வாங்கி, அதுவரை தமிழை “நீசபாசை” என்று இழிந்துரைத்ததிலிருந்து விடுபட்டு தமிழோடிசை பாடி தமது வைதீகத்தை பரப்பி வந்தனர். அதுவரை இருந்த சமண, பௌத்த கோட்பாடுகள் உண்மையில் தமிழர் சங்கவாழ்க்கை மரபிற்குப் பொருந்தாமையால் (துறவையும் வாழாதிருத்தலையும் முன்னைப்படுத்துவன) தமிழர்கள் மனதார அதை ஏற்று நடந்தாரெனச் சொல்ல முடியாது. அத்துடன், இவ்வுலக வாழ்வில் தமிழர்கள் கூடிய நாட்டம் கொண்டிருப்பதைக் கண்ட வைதீகம் அப்படி இவ்வுலக வாழ்வினூடு இலகுவாக கடவுளை அடையலாம் என சொல்ல, இறுக்கங்கள் அதிகமான சைன, பௌத்த மதங்களிலிருந்து விடுபட்டு வைதிகம் புதிதாகக் கட்டிய சைவம் (இதுவும் பாளிமொழிச் சொல்), வைணவம் (விண்ணவம் என்ற தமிழர் அறிவியலின் திரிபு) நோக்கி நகர்ந்தனர். இவ்வாறு தனக்கு கண்ணிலேயே காட்டக் கூடாதளவு வெறுப்பாயிருந்த தமிழர் வழிபாடுகளை உள்ளீர்த்தாவது வைதீகத்தை தமிழர்களிடத்தில் புகுத்தும் ஆரிய அநாகரிகச் சூழ்ச்சிக்குள் தம்மையறியது தமிழர்கள் வீழ்ந்து போயினர்.

இவ்வாறு பிராமண வேத மரபான ஆரிய வந்தேறிகளின் அநாகரிக வைதீகமானது தன்னை தமிழர்களிடத்தில் ஏற்றுக்கொள்ளச் செய்யுமொரு மதமாகத் தக்க வைக்க முயற்சிகள் ஏற்பட்ட காலமாக களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்காலமே இருந்தது என்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும். கி.பி 4 ஆம் நூற்றாண்டிலேயே முதன் முதலில் சைவம், சிவம் ஆகிய சொற்களானவை காரைக்கால் அம்மையாரால் அறிமுகமாகின. கி.பி 4 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் தமது இலக்கியங்களிலோ அல்லது படைப்புகளிலோ சைவம் மற்றும் சிவம் என்ற சொற்களைப் பயன்படுத்தியதேயில்லை. சைவம் என்ற சொல் பாளிமொழிச் சொல்லே. வைதீகமானது தமிழர்களின் வழிபாட்டு முறைகளை உட்செரித்து அவற்றை மடைமாற்றித் தனது வைதீகக் கதையாடல்களிற்குள் கரைக்கும் சூழ்ச்சியை முன்னெடுத்த காலமாகவே சமயகுரவர்களின் பக்தி இலக்கிய காலம் அமைந்தது. “சைவம்” என்ற சொல்லிற்குள் பதுங்கியிருந்தவாறே வைதீகம் தனது வேத மரபைத் தமிழர்களிடம் திணிக்கும் சூழ்ச்சியைச் செய்யத் தொடங்கியதென்பதை தமிழர்கள் நாம் மறந்துவிடக் கூடாது.

திருக்குறளுக்கும் சைவத்திற்கும் தொடர்பிருப்பதாகச் சொல்வது ஏன் நகைப்பிற்கிடமானது?

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என்பது கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னையது என்று தமிழ்ப்புலமையாளர்கள் ஒன்றுகூடி முடிவுசெய்தனர். இருப்பினும், திருக்குறள் தொடர்பாக பின்வந்த ஆய்வுகள் திருவள்ளுவரின் காலம் இதனிலும் பழமையானது எனத் துணிகின்றன. எது எவ்வாறாயினும் திருக்குறள் தோன்றிய காலத்தில் சைவம் என்ற சொல்லே தமிழர்களிடத்தில் புழக்கத்திற்கு வரவில்லை என்பதும் திருவள்ளுவர் பிறந்து 400 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளின் பின்பு தான் சைவம் என்ற சொல்லே தமிழர்களிடம் அறிமுகமாகியது என்ற வரலாற்றைப் புரிந்துகொண்டால் திருக்குறளுக்கு சைவச் சாயம் பூசுவது எத்துணை மடைமைத்தனமானது என்பது புரியும்.

கி.பி 1 ஆம் நூற்றாண்டுகாலத்தையதான தமிழ்த்தேசியக் காப்பியம் என்று குறிப்பிடத்தக்க சிலப்பதிகாரத்தில் பாட்டுடைத் தலைவனான கோவலன் ஒரு சமண சமயத்தைச் சேர்ந்தவராகவே குறிப்பிடப்படுகிறார். கண்ணகி இறந்த பின்பாக அவரின் தந்தையார் ஆசிவகத்தைத் தழுவியதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலை என்பவர் பௌத்த துறவியாக இருந்ததை மணிமேகலை என்ற காப்பியம் தெளிவாகச் சொல்கிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியானது சமணரைக் கண்டிக்க பௌத்தர்கள் எழுதிய காப்பியமாகவே இருக்கிறது. அவ்வாறே, பௌத்தத்தைக் கண்டிக்க சமணர் நீலகேசி என்ற நூலை எழுதியிருக்கின்றனர். திருவள்ளுவர் காலத்திற்கு பிந்தைய 500 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் வைதீகம் தமிழ்மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்படாத, கணக்கிற்கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்திருக்கின்றது. எனவே, திருக்குறளின் காலத்தை இன்னுமொரு 500 ஆண்டுகள் பின்தள்ளித் திரிபு செய்தால் கூட அதை சைவசமயத்துடன் முடிச்சுப்போட இயலாது என்பதைப் புரிந்துகொண்டால் திருக்குறளிற்குச் சைவச்சாயம் பூசுவது எத்துணை நகைப்பிற்கிடமானது என்பதைத் தெட்டத்தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

“இந்து” என்ற அடையாளத் திணிப்பின் பின்னணி

சிந்துநதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க அரபு மொழியில் “அல் இந்” என்ற சொல்லுப் பயன்படுத்தப்பட்டது. ஈரானிய பார்சி மொழியில் சிந்துநதிக்கு அப்பாலுள்ள நிலப்பகுதியைக் குறிக்க “அந்து” என்ற சொல் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. வங்காளமொழியில் கூட இந்து என்ற சொல் நிலப்பகுதியைக் குறிக்கவே பயன்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இந்தியத்துணைக் கண்டத்தைக் குறிப்பிட கிந்துஸ்தான் என்ற பெயர் பயன்பாட்டிற்கு வந்தது. மொத்தத்தில் கிந்து/ இந்து என்ற பெயர் ஒரு நிலப்பகுதியைக் குறிப்பிடவே மாற்றாரினால் பயன்படுத்தப்பட்டு வந்ததேயன்றி ஒரு மதத்தைக் குறிக்கும் சொல்லாக அது பயன்பாட்டில் இருந்திருக்கவில்லை என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள இயலுமாகின்றது.

பிரித்தானியர் இந்தியத்துணைக்கண்டத்தை ஆண்ட காலத்திலே தான் அவர்கள் இந்து என்பதை ஒரு மத அடையாளமாக உருவாக்குகின்றார்கள். ஏனெனில், இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் நுழைய முன்பாக பிரித்தானியர்கள் கிறிஸ்தவம், இசுலாம் மற்றும் யூடாஇசம் போன்ற ஆபிரகாமிய மதங்களை மட்டுமே அறிந்துவைத்திருந்தனர். எனவே, இந்தியத் துணைக்கண்டத்தில் அவர்கள் நுழைந்த பின்னர் அந்த ஆபிரகாமிய மதங்கள் தவிர்த்த வழிபாட்டுமுறைகளையும் சமய நம்பிக்கைகளையும் ஒருசேர “இந்து” என்ற அடையாளத்தினுள் பிரித்தானியர் வகைப்படுத்தினர். பௌத்தம் மற்றும் சீக்கியம் போன்ற மதங்கள் கூட ஆரம்பத்தில் இந்து என்ற அடையாளத்தினுள்ளே தான் நோக்கப்பட்டன என்பதை நாம் இங்கு ஈண்டு நோக்க வேண்டும். பின்வந்த காலங்களில் பௌத்தம் தன்னை இந்துவில் இருந்து வேறுபட்டு நிற்குமாறு மெய்யியல் கருத்தியலை முன்வைத்தாலும், பௌத்தம் என்பது இந்து மதத்திலுள்ள ஒருவழிமுறை என்றே இந்துமதத்தைத் தூக்கிச் சுமப்பதால் நன்மையடையும் ஆரிய பிராமணியர்கள் கதையளந்து வந்தனர். வைணவத்திலுள்ள 10 அவதாரங்களில் ஒன்றே புத்தர் என்றும் அதற்கான சான்றுகள் இருப்பதாகவும் கதையளந்து பௌத்தத்தை இந்துவினுள் கரைத்துப்பார்ப்பதை முனைவர் நாகசாமி போன்ற தொல்லியலாய்வாளர்கள் இன்னமும் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு வைதீகத்தைத் தூக்கித் தாங்க இயற்றிய கதையாடலாக சைவம் உருவாகி நிற்க அதனுடன் வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் மற்றும் காணபத்தியம் போன்ற மதப் பிரிவுகளை செயற்கையாக ஒன்றாக்கி ஆறுமதங்களின் சேர்க்கை என்று பொருள்கொள்ளுமாறு “சண்மார்க்கம்” என்ற பெயரிட்டு செயற்கையாக நிறுவப்பட்ட மத உருவாக்கமானது பிரித்தானியரின் அலுவலகப் பயன்பாட்டிற்காக “இந்து” என்ற புதிய பெயரினை எடுத்துக்கொண்டது.

“இந்துத்துவா” வேறு “இந்து” வேறு

இந்துமதம் என்பது எவ்வாறு முரண்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மெய்யியல் கோட்பாடுகளை திரிபுசெய்து செயற்கையாக ஒரு கலப்பு மதமாக (hybrid religion) திரிபுகளாலும் போலிக் கதையளப்புகளாலும் உருவாக்கப்பட்டது என்பதை மேலுள்ள பத்திகள் வாயிலாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆரிய பிராமணியத்தின் வேதமரபைக் காப்பாற்றுவதற்கும் அவர்களின் சமூக அதிக்கத்தை நிலைநிறுத்தவுமே இந்துமதம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நீண்டகாலமாக அதனை தமது மதமென நம்பிவாழும் மக்கள் ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியின் வழிவந்த மதமென்ற நம்பிக்கையில் ஊறித்திளைப்பதாலும் “இந்து” என்ற சொல்லைத் தமது பள்ளிக்கூடங்களின் பெயர்களிலும் அமைப்புகளின் பெயர்களிலும் தூக்கித் தாங்கிப் பழக்கப்பட்டுப் போனமையாலும் “இந்து” என்ற சொல்லுடன் அறிவுநிலை கடந்து மயக்கங்கொண்டவர்களாகவே ஈழத்தமிழரில் பெரும்பான்மையானோர் இருக்கின்றனர் என்பது வரலாற்றுப் பெருந்துயரே.

“இந்து” என்ற சொல்லானது ஒரு மதக்கருத்தியலாக அல்லது ஆன்மீகக் கருத்தியலாக இருக்கும் வரை தமிழர்களிடத்தில் ஆரிய பிராமணியம் தமது சமூக மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் என்பதுடன், அதுவரை வைதீகப் போலிகளிலிருந்து தமது மெய்யியல் மற்றும் வழிபாட்டு மரபுகளை மீட்கும் ஆற்றலைத் தமிழர்கள் இழந்தேயிருப்பர். ஆனால், இவையெல்லாம், கோயிலுக்குள் மட்டும் இந்து என்பது ஒரு மதக்கருத்தியலாக இருக்கும் வரை மட்டுமே. ஆனால் “இந்துத்துவா” என்பது மதக்கருத்தியல்ல. “இந்துத்துவா” என்பது அரசியற்கருத்தியல் என்பதை தம்மை இந்துவென ஆன்மீக அடிப்படையில் நம்பவும் அதனைத் தொடரவும் செய்பவர்கள் ஐயந்திரிபற விளங்கிக்கொள்ள வேண்டும்.

“இந்துத்துவா” என்ற அரசியற் கருத்தியல் உருவான வரலாற்றுப் பின்னணி

ஆரிய சமாசம் மற்றும் இந்து மகாசபா போன்ற அமைப்புகளின் மூலமாக ஆரிய பிராமணிய வேத மரபைக் காத்து அதன் மூலமாக தமது சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா என்ற சந்தை தமக்கு முழுமையாகத் தேவையென்று உணர்ந்த ஆரிய பிராமணியமானது அதற்கான அரசியலை முன்னெடுக்க “இந்துத்துவா” என்ற அரசியற் கருத்தியலை உருவாக்கியது. “இந்துத்துவா” சித்தாந்தத்தை ஏற்று இன்றுவரை அதை முன்னெடுக்கும் முன்னோடியமைப்பான RSS ற்கு இந்தக் கருத்தியலை வழகிங்கியது சாவர்க்கர் என்பவர் எழுதிய “இந்துத்துவா” என்ற நூலே. “இந்துத்துவா” என்ற பெயரில் சாவர்க்கர் எழுதிய நூலில் “இந்துமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் இடையிலான வேறுபாடு” என்று துணைத்தலைப்பிட்டு இந்துத்துவா என்பது எப்படி ஒரு அரசியற் கருத்தியலென்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இந்தக் கருத்தியலின் வழி செயற்படும் பயங்கரவாத மாந்தகுல எதிர்ப்பு இயக்கமே RSS ஆகும்.

RSS அமைப்பின் நிறுவனரும் அதற்குத் தொடர்ச்சியாகத் தலைமை தாங்கிய முன்னோடிகளாகவிருந்த கெட்கேவர் மற்றும் கோல்வாக்கர் போன்றோர் தமது குறிக்கோளானது அகண்ட பாரதம் அமைப்பது என்பதையும் அதனை எவ்வாறு பாதுகாப்பதென்பதனையும் அடிப்படையாகக் கொண்டே எழுதியும் பேசியும் தமது அமைப்பிற்குள்ளேயும் வெளியேயும் கருத்தியலை உருவாக்கி வந்தனர். இந்துஸ்தான் என்ற இயல்பாய் எழுந்த கலப்பு மொழியினுள் உருதுமொழிச் சொற்களுக்குப் பதிலாக சமஸ்கிருதச் சொற்களைப் பதிலிட்டு 1920 களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழியான கிந்தியை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரே மொழியாக்கி அதன் வழியாக செத்துப்போன வழக்கிலில்லாத திருட்டு மொழியான சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் அரசியல் நோக்கு கிந்தி என்ற மொழியின் உருவாக்கத்தினதும் அதன் திணிப்பின் பின்னணியிலும் இருக்கின்றது. அவ்வாறே பிரித்தானியரின் அறியாமையின் விளைவாக அடையாளப்படுத்தப்பட்ட இந்து என்ற மத அடையாளமானது ஆரிய பிராமணியர்களின் சமூக மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் இந்தியா என்ற துணைக்கண்டத்தைத் தமக்கான நாடாக்கி அகண்ட பாரதமெனும் அவர்களது மேலாதிக்க விரிவாக்கத்திற்குத் துணைசெய்வதாக உள்ளது.

இவ்வாறு இந்து-இந்தி- இந்தியா/ கிந்துஸ்தான் என்று முன்னெடுக்கப்படும் அரசியலானது இந்துத்துவ அரசியல் என்ற அரசியற் கருத்துவழிப்பட்டதாக உள்ளது. இது அடிப்படையிலேயே தமிழ்- தமிழர்- தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பிற்கு முதன்மைப் பகையாக உள்ளது. தமிழின் மொழிவரலாறும் அதனுடைய தொன்மை எத்தகையது என்ற வரலாறும் வெளிப்படலானால் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி வரலாறானது குறுகலாகிவிடும். தமிழின் மொழிச்சிறப்பு வெளிப்படும் போது இந்தியை ஒரு மொழியாகக் கூட ஏற்கமுடியாத சூழல் உருவாகும். தமிழர்களின் வரலாறு முறைப்படி எழுதப்பட்டால் வரலாற்றுத்திரிபால் எழுதப்பட்ட இந்திய வரலாறு என்ற போலி வரலாறு அம்பலப்பட்டுப் போய்விடும். தமிழர்களின் மெய்யியற் கோட்பாடுகள் பேசுபொருளாகி அவற்றுள் இடையில் செயற்கையாக சொருகப்பட்ட வைதீகக் குப்பைகளானவை அகற்றப்பட்டு தமிழரின் மெய்யியல் மீட்டுருவாக்கம் பெற்றால் இந்து என்ற மதக்கலப்பு அடையாளமானது அடையாளந் தெரியாமல் உருக்குலைந்துவிடும். எனவே, இந்துத்துவம் என்ற அரசியற் கருத்தியலானது, அதன் தமிழ்த்தேசியம் என்ற அரசியற் கருத்தியலிற்கு நேரடிப் பகையாகும். தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சியானது இந்துத்துவ அரசியலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடும் ஆற்றலும் இயல்பும் வாய்ந்தது. இந்தியாவிற்குள் சிறைப்பட்டிருக்கும் தேசிய இனங்களின் விடுதலையென்பது இந்துத்துவாவின் அகண்டபாரதக் கொள்கையினைப் பொருளாற்றதாக்கிவிடும் என்பதால், இந்துத்துவ அரசியலானது தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுக்கும். எனவே, தமது முதன்மைப் பகைவர்களான தமிழர்கள் ஈழத்தில் தேசிய இனவிடுதலைக்காகப் போராடி இறைமையுடைய தனியரசு அமைப்பதை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த தன்னாலியன்ற அனைத்தையும் இந்துத்துவ அரசியல் செய்திருக்கும், செய்தது, செய்யும் என்பதை மிக எளிதாக அனைவராலும் புரிந்துகொள்ள இயலும்.

இந்துத்துவா என்ற இந்த அரசியற் கருத்தியலின் வழிப்பட்டு நிறுவப்பட்ட RSS என்ற இந்துத்துவ இயக்கத்தின் செயற்பாடுகளிற்கு ஊன்றுகோலாகச் செயற்படுமாறு “விஸ்வ கிந்து பரிசத்”, “அகில பாரதீய வித்தியாத்தி பரிசத்”, “சுதேசி யக்ரன் மன்ஞ்”, “பாரதீய கிசா சங்”, பாரதீய மஸ்தூர் சங்” போன்ற இயக்கங்களும் “பாரதீய ஜனதா கட்சி” எனும் அரசியற் கட்சியும் உருவாக்கப்பட்டு இன்று மிக வலுவாகத் தமது இந்துத்துவ அரசியல் நிரலில் பயணப்படுகின்றன. RSS இனையும் இந்த அமைப்புகளையும் ஒரு சேர “சங் பரிவார்” அமைப்புகள் என அடையாளப்படுத்துவர்.

இந்து என்ற மத அடையாளத்தினைப் பயன்படுத்தும் இந்துத்துவா என்ற அரசியலின் தமிழின வெறுப்பு வெளிப்பட்டு நின்ற அண்மைய நிகழ்வுகள்

  • தமிழ்நாடு கரூரில் அமைந்துள்ள மணிமுத்து ஈச்சரம் கோயிலில் தமிழில் வழிபாடு நடந்தமையால், தமிழ் என்ற நீசமொழியில் வழிபட்டதால் விளைந்த தீட்டை விலக்கச் செய்வதற்காக “சம்ரோசன யாகம்” என்ற வேத மரபுச் சடங்கை வைதீக பிராமணர்கள் செய்து தமிழை இழிவுபடுத்தினர்.
  • ஒரு பொதுநிகழ்வில் பங்கேற்ற காஞ்சி சங்கரமடம் என்கிற இந்து மடாலயத்தின் முதல்வராக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி என்பவர் இந்திய தேசியகீதம் பாடப்படும் போது எழுந்து நின்று மரியாதை செய்துவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் போது இருக்கையில் அமர்ந்திருந்து தமிழ் மீதான வைதீக பிராமணியத்தின் வெறுப்பை உமிழ்ந்து காட்டினார்.
  • ஆண்டாளின் ஆழ்வார் பாடல் ஒன்றில் வரும் “தீக்குறள்” என்ற சொல்லிற்கு பொழிப்புச் சொன்ன காஞ்சி சங்கரமடம் என்ற இந்து மடாலயமானது தீய கருத்துகளைச் சொல்லும் திருக்குறள் என பதிவுசெய்து அச்சொல்லினை பொருள்கோடச் செய்தது. உண்மையில், தீமையான கருத்துகளென ஆண்டாள் தனது பாடல்கள் மூலம் சொல்ல விளைந்தவை சமணசமயத்தின் தாக்கத்தால் எழுந்த கருத்துகளையே. அது சமணசமயத்திற்கு எதிரான சைவ- வைணவ சமயத்தாரின் வெறுப்புணர்வுகள் மேலிட்ட பாடலடிகள் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆனால், “தீக்குறள்” என்பது திருக்குறளே என சங்கர மடம் விளக்கம் சொல்கின்றது என்றால் இவர்கள் திருக்குறளை எப்படித் தமக்கு எதிரான கருத்தியல் என நோக்குகிறார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளல் வேண்டும். அப்படியிருக்க, திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசி சைவ, இந்து அடையாளம் கற்பிக்க எடுக்கப்படும் முயற்சிகளின் பின்பு மிகப்பெரிய சூழ்ச்சிகள் இருக்கின்றன என தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். திருக்குறளை வெறுத்து ஒதுக்கும் கருத்தியல் கொண்ட சங்கரமடம் இப்போது அதனை மடைமாற்றி பொருள்கோடச் செய்து அழிக்கும் வேலையை அரங்கேற்றுகிறது என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2009 இன் பின்பான காலப்பகுதியில் தமிழீழதேசத்தில் இந்துத்துவ அரசியலின் நிகழ்ச்சிநிரல்கள்

50 ஆண்டுகளிற்கும் மேலாக சிங்கள-பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழினவழிப்பு அரசியல் என்பது 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலையைச் செய்ததன் மூலம் தமிழீழதேசத்தை முற்றாக வன்கவர்ந்தது. அதன் பின்பாக தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க தக்க தலைமை இல்லாமல் தமிழினம் திணறி வருகையில், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இனிமேலும் தமிழ்த்தேசிய அரசியல் ஈழதேசத்தில் மேலெழாமல் இருப்பதனை உறுதிப்படுத்துவதோடு இந்திய விரிவாக்க அரசியலிற்கு வலுச்சேர்க்கும் ஒரு கேடான அரசியற் பொறிக்குள் ஈழத்தைச் சிக்க வைத்துவிடலாம் என்ற குறிக்கோளுடன் இந்துத்துவ அரசியலானது ஈழ மண்ணில் தனது இந்தியக்கொடுங்கோலர்களின் அகண்டபாரதம் மற்றும் தமிழினவெறுப்பு நிகழ்ச்சிநிரலிற்கமையக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

தக்க தலைமை இன்றி நட்டாற்றில் தமிழீழதேச அரசியலானது அவதிப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னவலச் சூழமைவை இந்தியக் கொடுங்கோலர்கள் தமக்கான அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழர்களிடத்தில் ஊடுருவித் தமிழர்களை இந்துக்களாக்கி தமிழர்களின் தேசிய இன ஓர்மையைச் சிதைப்பதன் மூலமாக தமிழர்களை இந்துக்களாக்கிப் பண்பாட்டு வன்வளைப்பைச் செய்வதன் மூலம் இந்தியாவின் இலங்கைத்தீவின் மீதான மேலாண்மைக்கு ஒத்துதவும் தரப்பாகத் தமிழர்களை மாற்றும் இந்துத்துவா என்ற தமிழர் வெறுப்பு அரசியலானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற தமிழீழதேசத்தின் முதன்மை எதிரிக்கு எதிராக தமிழீழதேச அரசின் போராடும் ஆற்றலை மழுங்கடித்து அதனை இசுலாமிய மற்றும் கிறித்தவ மத அடிப்படைவாதங்களிற்கு எதிரான இந்துமத அடிப்படைவாதமாக மடைமாற்றும் அரசியலானது ஈழத்தில் இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்துத்துவ அரசியலின் தன்னார்வலர்களாகத் தம்மைக் கட்டமைத்து வரும் சிவசேனா மற்றும் கம்பன்கழகம் போன்ற அமைப்புகள் அடங்கலான ஆன்மீக கும்பல்கள் ஈழத்தில் கடைவிரித்துத் தமிழ்த்தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் அரசியலை முன்னெடுக்கின்றன.

தமிழர்கள் முற்போக்காக வாழ்ந்த சங்ககால வாழ்வியலையும் அதன் பின்பு தமிழில் எழுந்த இலக்கியங்களையும் தமிழர்கள் உள்வாங்காமல் “இராமாயணம்” போன்ற வட இந்திய மேலாதிக்கத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும் ஆரிய வைதீக பிராமணியத்தின் புராணக் குப்பைகளைத் தமிழர்களிடத்தில் பரவலடையச் செய்து தமிழர்களின் அறிவுமரபையும் இலக்கியமரபையும் சிதைத்தழிக்கும் வேலைகளை “கம்பன் கழகம்” போன்ற அமைப்புகள் முன்னெடுக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது “கம்பன் கழகம்” என்ற அமைப்பின் பின்னாலுள்ள அரசியலை இனங்கண்டு தமிழீழ மண்ணிலிருந்து இரவோடிரவாக அந்த அமைப்பை விரட்டியிருந்தார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். கம்பன் கழகத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்துத்துவ அரசியலின் முகவர்கள் தமிழீழதேசத்தின் கல்வித்துறையில் செல்வாக்குச் செலுத்த வல்லவர்களாக வளர்க்கப்பட்டு வருகின்றார்கள். பேராசிரியர் பிரசாந்தன் என்பவர் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வள்ளுவத்திற்கேற்ப வாழவில்லை எனவும் போறபோக்கில் கம்பன்கழக மேடையில் கருத்துச்சொல்லிச் சென்றிருக்கிறார் என்பதை அவ்வளவு எளிதாகத் தமிழர்கள் கடந்துபோகக் கூடாது.

“ராம ஜென்ம பூமி” என்ற கிளை அமைப்பைத் தொடங்கி இந்துத்துவா முன்னெடுத்து வரும் அரசியலின் நீட்சியாகவே “கம்பன் கழகம்” என்ற அமைப்பின் செயற்பாடுகளைத் தமிழர்கள் நோக்க வேண்டும். அகண்ட பாரதம் என்ற அவர்களின் கருத்தியலானது “இராம ஜென்ம பூமி” என்பதைத் தளமாக வைத்துக் கட்டப்படுகின்றது என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். அண்மையில் கம்பன் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேசுவதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்த இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவரான அண்ணாமலை என்பவர் இலங்கைத்தீவின் ஊர்களை எவ்வாறு “ராம ஜென்ம பூமி”: என்ற கதையாடலுக்குள் சொருக முயன்றார் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இதற்கான அடித்தள வேலைகளை ஈழ மண்ணில் முன்னெடுக்கும் “கம்பன் கழகம்” போன்ற தமிழ்த்தேசியத்திற்குப் பகையான அமைப்புகளை இந்த மண்ணை விட்டு விரட்டுவதற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியது இன்றியமையாத அரசியற் தேவையாக உள்ளது.

“சிவசேனா” என்று மறவன்புலவு சச்சிதானந்தன் எனும் மனநோயாளியால் உருவாக்கப்பட்ட அமைப்பானது சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற ஒடுக்கும் அரசியற் கருத்தியலை வெல்லும் கருத்தியலாக தமிழ்தேசியம் என்ற தமிழர்களின் அரசியற் கருத்தியல் இருப்பதனை மடைமாற்றி சிறித்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களிற்கு எதிரான மத அடிப்படைவாத உணர்வான இந்து என்ற அடையாள அரசியலிற்குள் தமிழர்களைக் கரைத்துவிடும் இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கின்றது. உண்மையில் “சிவசேனா” என்ற அமைப்பானது மராட்டியத்தில் பால்தாக்ரே என்பவரால் சிவன் என்ற அடையாளத்தைச் சுமந்து உருவாக்கப்பட்டதல்ல. அவர்கள் சிவனை முன்னிலைப்படுத்தி மத அரசியலைக்கூட முன்னெடுக்கவில்லை. வட இந்திய மேலாதிக்கத்தின் குறியீடான இராமரைத் தான் அவர்கள் முன்னிலைப்படுத்தி அரசியலை முன்னெடுக்கின்றனர். மராத்திய மன்னன் சிவாஜி என்பவனின் பெயரைச் சுமந்தே “சிவசேனா” என்ற அமைப்பை மராத்தியத்தில் தொடங்கினார்கள். “மதராசிகளை கொன்றொழிப்போம். தமிழர்களை இந்த மண்ணை விட்டு விரட்டுவோம். இந்தியை எதிர்க்கும் தமிழர்களின் கொட்டத்தை அடக்குவோம்” என்ற முழக்கங்களுடன் செயற்பட்ட “சிவசேனா” என்ற தமிழரிற்கு எதிரான வன்மத்தைக் கொண்ட அமைப்பை தமிழீழ மண்ணில் உருவாக்கும் மறவன்புலவு சச்சிதாந்தம் என்ற மனநோயாளியின் அரசியல் எத்திசை செல்லும் என்பதைத் தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

பௌத்தமானது அரச பயங்கரவாத்தின் முழு ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற ஒடுக்குமுறை அரசியற் கருவியாக எமது மண்ணை பண்பாட்டு அடிப்படையிலும் முற்றாக வன்கவரும் போது அதைப் பற்றி பெரிதாக வாய் திறக்காமல், இசுலாமிய மற்றும் கிறித்தவ வெறுப்பரசியலை மட்டும் முனைப்பாக்கும் “சிவசேனா” வின் அரசியல் குறித்துத் தமிழர்கள் தெளிவடைய வேண்டும். இந்துத்துவ அரசியலானது பௌத்தத்தை இந்துவின் ஒரு கிளையாகவே நோக்குகின்றது என்பதை இந்துத்துவ அரசியலைத் தூக்கிச் சுமக்கும் பேராசிரியர் முனைவர் நாகசாமி ஆகியோரின் கருத்துகளை உற்றுநோக்குவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

திருவள்ளுவரின் வள்ளுவம் எவ்வாறு ஆரிய- வைதீக– பிராமணிய மரபிற்கு நேரெதிரானது என்றும் அவர்கள் திருக்குறளை எப்படி மடைமாற்றும் வேலைகளில் ஈடுபட்டார்கள் என்பதையும் மேற்போந்த பத்திகளில் நோக்கினோம். காவிச்சாயம் பூசிய திருவள்ளுவர் சிலைகளை ஈழக்திற்கு இந்தியாவில் இருந்து அனுப்பிவைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுவிடங்களில் நிறுவுவதற்கு இந்துத்துவ அமைப்புகள் முழுமூச்சுடன் முயன்று வருகின்றது.

வள்ளுவரிற்குக் காவிச்சாயம் பூசும் இந்துத்துவத்தின் சேட்டைகள் தமிழ்நாட்டில் எடுபட்டுப்போகாமையாமல் மானங்கெட்டுக் கிடந்த இந்துத்துவ அரம்பர்கள் தமிழர் மீதான தமது வெறுப்பை உமிழும் இடமாக ஈழமண்ணைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு உடன்பட்டுப் போகும் அறிவிலிகளையும் இந்துத்துவ அரசியலின் அடிவருடிகளையும் இனங்கண்டு புறக்கணிப்பதன் மூலம் இந்துத்துவா என்ற தமிழ்த்தேசியத்திற்கு எதிரான அரசியலிற்குத் தமிழர்கள் சாவுமணியடிக்க வேண்டியது இன்றைய காலத்தின் உடனடி அரசியற் தேவையாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச்சென்ற இந்துத்துவ எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் தனித்தமிழினை ஆவணங்கள் முதல் பெயரிடல் என அத்தனை தளங்களிலும் விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுத்தமையை வெறும் தமிழ்மொழியின் மீதான பற்று என்பதாகக் கடந்துவிட முடியாது. தமிழினத்திற்கெதிரான ஆரிய- இந்துத்துவ வன்கவர்வுக்கெதிரான தமிழ்த்தேசியத்தின் அரசியல் நடவடிக்கையாகவே சமஸ்கிருதத்தைத் தேடித் தேடிக் களைந்த தமிழீழத்தின் தனித்தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாவீரர் துயிலும் இல்லங்களானவை நடுகல் என்ற தமிழர்களின் வழிபாட்டு மரபின் தொடர்ச்சியென்ற அரசியற் புரிதல் தமிழர்களுக்கு இருக்க வேண்டும். கோயில்களில் தமிழில் மட்டுமே மந்திரங்கள் ஓதப்பட வேண்டுமென்ற விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பானது தமிழரின் மெய்யியல் மரபில் இடை வந்த வைதீக- பிராமணியக் கேடுகளைக் களையும் அரசியற் செயற்பாடு என்பதைத் தமிழர்கள் அனைவரும் புரிந்து தெளிய வேண்டும்.

பூச்சிய சிறி ரவிசங்கர் போன்ற RSS இன் கருத்தியல் அடியாட்கள் அமைதிப்பேச்சுக் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையை நெருங்க முற்பட்டு அவமானப்பட்டுப் போனமையையும் அதனால் புலிகள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பையும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ரவிசங்கர் என்ற ஆன்மீக வேடதாரி வெளிப்படுத்தியிருந்தார் என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தபோது எந்தவொரு ஆன்மீக அமைப்பும் இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் தமிழினப்படுகொலையில் இந்தியா ஏன் அத்தனை ஈடுபாட்டுடன் முதன்மைப் பங்காளியாகப் பங்கெடுத்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்த்தேசியக் கருத்தியலின் வழிநின்று சமஸ்கிருதத்தை மொழிவழக்கில் களைந்து, வைதீக ஊடுவல்களிலிருந்து தமிழர் மெய்யியலையும் வழிபாட்டு மரபுகளையும் மீட்டெடுத்து, “இது ராம ஜென்ப பூமி” அல்ல அதற்கு எதிரான தமிழரின் மண் என்ற அடிப்படையிலான அரசியலைத் தமிழீழதேசத்தில் முன்னெடுப்பதே ஈழத்தில் தமிழ்த்தேசிய இனம் உளதாயிருக்க உடன் ஆற்ற வேண்டிய அரசியற் பணிகளாக இருக்கின்றன. இதனைத் தமிழர் நாம் முன்னெடுக்கவில்லை என்றால் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தம்மை ஈந்த 60,000 வரையிலான மாவீரச் செல்வங்களிற்கு நான் இழைக்கும் வரலாற்று இரண்டமாக அமையும் என்பதை இவ்விடத்தில் மீள நினைவூட்ட விரும்புகிறோம்.

-முத்துச்செழியன் –

2023-03-29

 

 785 total views,  3 views today

(Visited 354 times, 1 visits today)