பொட்டம்மான் அகவை 60

வெளியில் தெரியாத
விளக்கே உளவின்
உளியில் எமை வார்த்த
கிழக்கே
எளிதில் புரியாத
மலைப்பே தமிழன்
அழியாப் புகழொற்றின்
தலைப்பே

பெருங் கடலின் அடியில்
பெயரின்றி ஓடிநின்ற
உருவங் காட்டாத ஆறே
ஒன்றாக நின்றோர்க்கு
உருகும் மெழுகாகி
உள்ளத்தைக் காட்டுமோர் பேறே

தேர் தெரியும் கண்ணில்
தெரியாத சில் அச்சாய்
போர் நடத்தி சென்றிட்ட
புதிரே
யார் அறிவார் முடிவை
என்றின்னும் சொல்கின்ற
ஊர்சுவடும் மறைவான
ஒளியே

நீருள்ளால் நெருப்போடு
நீந்திக் கடக்கின்ற
போர்முறை சித்தித்த பொறையே
தலைவனின் நிழலாகத்
தாளாத வானாக
நிலையென்றும் தளராத
நிறையே

பொட்டில் உந்தனது
போம் வழியைச் சுமந்து கொண்டே
எட்டி நடக்குமெங்கள்
பயணம்,
எது வந்த போதும்
என்றைக்கும் மாறாது
ஒரு போதும் சிதறாது கவனம்

எந்தக் கனவுக்காய்
இத்தனை நாள் நடந்தோமோ
அந்தக் கனவை நாம்
அடைவோம்,
எந்தக் கனவுக்காய்
இத்தனையைச் சுமந்தோமோ
அந்த நிலத்தை நாம் பெறுவோம்

எம்மானம் மீட்டெடுத்து
எமக்கான தமிழ் நிலத்தில்
அம்மானை பாடி
ஆடிக் களித்திடுவோம்

எம்மானம் மீட்டெடுத்து
எமக்கான தமிழ் நிலத்தில்
அம்மானைப் பாடி
ஆடிக் களித்திடுவோம்..

-திரு –

28-11-2022