தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிர்காலம் என்ன? -மான்விழி-

மக்களிற்கு உண்மையைச் சொன்னால், அவர்கள் தமக்கான விடுதலையை வென்றெடுப்பார்கள். விடுதலைப் போராட்ட அமைப்புகளின் நிலவுகையும் இயங்காற்றலும் அவர்கள் மக்களுடன் கொண்டிருக்கும் உறவுநிலையிலேயே தங்கியிருக்கின்றன. மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுநிலை என்பது தண்ணீருக்கும் மீனுக்குமான உறவுநிலையாகும்.

தமிழீழதேசம் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வன்கவர்வானது அமைதிவழியில் தடுத்து நிறுத்தவியலாத ஒன்றென்று தமிழீழ மக்களிற்கு உறுதியாகத் தெரிந்துபோனமையினாலேயே கருவியேந்திய மறவழிப் போராட்டத்தின் திசைவழி தமிழீழ மக்கள் அணிதிரண்டனர். சிங்கள பௌத்த பேரினவாதத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்ற தேவையே தமிழீழ மக்களைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்காளர்களாக்கியது. எதுவந்த போதிலும் அதை எதிர்கொண்டவர்களும் எதிர்கொள்ளப் போகின்றவர்களும் மக்களே. இவ்வாறிருக்க, மக்களை ஏய்ப்பதன் மூலம் மட்டுமே தம்மால் அந்த மக்களிற்கு எதையாவது பெற்றுக்கொடுக்க முடியுமெனக் கருதி முன்னெடுக்கப்படும் அத்தனை முன்னெடுப்புகளும் மக்களினை அரசியல்நீக்கம் செய்து நடுத்தெருவில் விட்டுவிட வழிசெய்வனவாகவே அமையும்.

ஒரு விடுதலை அமைப்பானது மக்களைத் திட்டித்தீர்க்கவும் குறைசொல்லவும் துவங்கிவிட்டதென்றால், அதுதான் மக்களிலிருந்து விலகிச்சென்ற காரணங்களைக் கண்டறியத் தவறியதன் விளைவே எனலாம். “மக்களை நம்பிப் போராட வந்தோம். மக்கள் ஏமாற்றி விட்டார்கள். மக்களிற்கு விடுதலை பற்றி எந்த எண்ணமும் இல்லை. மக்கள் எல்லாவற்றையும் மறந்து மாறிப்போய் நிற்கிறார்கள்” என்று புலம்பும் போராளிகள், தாம் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க அணியமாகாத நிலையை மறைப்பதற்கும், பூசிமெழுகுவதற்குமே மக்களைக் குறைசொல்வர். அவர்கள் இனிப் போராட்டத்தைத் தொடராமல் இருப்பதற்கான காரணமாக மக்களையே காரணங்காட்டிக் குறைசொல்வர்.

தேசம் என்பது வெறுமனே வரைபடத்திற் காட்டப்படும் நிலப்பரப்பு அன்று. தேசம் என்பது வெறும் கற்களாலும் மண்ணாலும் மரங்களாலும் ஆன தரைத்தோற்றம் அன்று. அது வரலாற்று வழி ஒரு பொதுவான மொழி பேசி, ஒரு படித்தான பொருளியல் வாழ்வு வாழ்ந்து அதன் வழி தம்முள் சமூக உறவுகொண்டு, தாம் ஒருவர் என்ற மனப்போக்கில் தொடருகின்ற மக்கள் திரட்சியின் உயிர்த்தன்மை கொண்ட வாழ்வியல். எனவே, தேச விடுதலையென்பது அந்த மக்களின் மீதான ஒடுக்குமுறையைத் தகர்த்து அந்த மக்களின் தாயகநிலத்தின் மீதான வன்கவர்வுகளை விரட்டியடித்து, அந்த மக்களின் இறையாண்மையை மீட்டெடுக்கும் அரசியற் பணியேயன்றி வேறெதுவுமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்பணி என்பது தமிழீழ விடுதலைப் போரிற்குத் தலைமைதாங்கித் தமிழீழத் தனியரசை நடைமுறையில் நிறுவியமை என்றே சொல்ல வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒவ்வொரு வெற்றியும் தமிழீழ மக்களுடையதே. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழீழ மக்களிலிருந்து பிரித்துப் பார்க்கும் அரசியலை வேண்டி நிற்போர், தமிழீழ மக்களிடத்தில் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர்களாகவே இருப்பர். தமிழீழ மக்களின் இறைமையைக் காத்துநின்ற விடுதலைப் புலிகளின் அழிவு என்பது தமிழீழ மக்கள் தமது இறையாண்மையை இழந்ததையே குறிக்கும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மறவழியில் மட்டுமே தொடர இயலும் என்பது முடிவாக, அதற்கான முறையான போராட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு விடுதலை அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இருந்தது. அந்த வகையில் சிறிலங்காவின் முறையாகக் கட்டமைக்கப்பட்ட ஆயுதபலம் கொண்டதும் உலக வல்லாண்மை நாடுகளிடம் பயிற்சிகளையும் உதவிகளையும் பெறுவதுமான அரச படைகளை எண்ணிக்கையில் குறைவான போராளிகளுடன் எதிர்த்துப் போரிட வேண்டுமெனின், அது முற்றுமுழுதாக மக்களில் தங்கியிருக்கக் கூடிய போரியல் வடிவமாக இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது கரந்தடிப் போரியலைத் (Guerrilla warfare) தனது தனது போரியல் வடிவமாகக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான மறவழிப்போரை முன்னெடுத்தது.

சிங்கள அரச படைகளைத் தாக்கிவிட்டுத் தப்பித்தல், பதுங்கித் தாக்குதல், நகரும் தளங்களை அமைத்து, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து தாக்கி அரச படைகளை நிலைகுலையச் செய்தல் போன்றவற்றின் மூலம் சிங்கள அரசபடைகளினை நகர முடியாமல் அச்சத்துடன் முகாங்களுக்குள் முடக்கியது விடுதலைப் புலிகளின் கரந்தடிப்போரியல். மக்களே தமது வீடுகளில் போராளிகளிற்கு அடைக்கலம் கொடுத்தனர், மக்களே போராளிகளிற்கு உணவளித்தனர், எதிரியின் நடமாட்டங்களை அறிந்து சொல்லும் வேவுப் புலிகளாக மக்களே செயலாற்றினர். இவ்வாறாக மக்களைக் காக்கப் புறப்பட்ட போராளிகளை மக்களே காப்பாற்றினர். அதனால், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட கரந்தடிப் போராட்டமானது மக்கள் போராட்டத்தின் முதிர்ந்த வடிவமாகவே நடைமுறையில் இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இந்த மக்கள்மயப்பட்ட போராட்ட வடிவமே இந்திய வல்லாதிக்க இராணுவத்தின் கொட்டத்தைத் தகர்த்தெறிந்து கிந்தியர்களுக்கு தமிழரின் மறமானத்தை உணர்த்தியது.

கரந்தடிப் போர்முறையில் சிங்கள அரச படைகளை முகாங்களுக்குள் முடக்கிவிட்டதன் பின்பாக, கரந்தடிப்போரின் மூலம் கைப்பற்றப்பட்ட எதிரியின் சுடுகலன்களை வைத்துத் தமது போரிடும் வல்லமையை வளர்த்துக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கமானது, எதிரியின் முகாங்களைத் தேடிச்சென்று தாக்கி அழித்து தமிழர் மண்ணிலிருந்து எதிரிப்படைகளை விரட்டியடித்து, மீட்டெடுத்த தாயகப் பகுதிகளில் மக்களிற்கான கட்டமைப்புகளை நிறுவியதுடன் மீட்டெடுத்த நிலப்பகுதியின் எல்லைகளைக் காக்க மக்கள் படையை அணிதிரட்டிக் களங்காணச் செய்தது. இவ்வாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற மறவழிப் போராட்டமானது முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாகவே இருந்தது.

எண்ணிக்கையில் அதிகமான சிங்கள அரசபடைகளை எதிர்கொள்ள மக்களே இராணுவமாகினர். அதுவே தமிழீழ மக்கள் இராணுவமாக உயர்ந்து நின்றது. அதுவே முன்னணிப் போர்ப்படையுமாகியது. இவ்வாறாக, மக்கள்மயப்பட்ட மறவழிப் போராட்டமானது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையில் உருவாகிவிட்ட வரலாற்றுப் பெருநிகழ்வு நடந்தேறியது. தமிழீழ மக்களின் போரிடும் வலுவை உணர்ந்த உலக வல்லாண்மையாளர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்க அமைதிப்பேச்சு எனும் பொறியே சிறந்ததென்ற முடிவிற்கு வந்து தமது சூழ்ச்சி வலைகளைப் பின்னலானார்கள். தமிழீழ மக்களின் இறையாண்மையும் தன்னாட்சி உரிமையும் பேரம்பேசலுக்கானதல்ல (not negotiable), அது தமிழர்தேசத்தின் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமை என்பதில் தெளிவாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது, இந்த அமைதிப்பேச்சுக் காலத்தை ஒரு போரோய்வுக் காலமாகவே பயன்படுத்த முயன்றது. தொடர்ச்சியான நீண்டகாலப் போரில் மக்களுக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்கான ஒரு காலப்பகுதியாக இதைக்கருதிய விடுதலைப் புலிகள் இயக்கமானது நாளடைவில் தமிழீழத்திற்கு உலக நாடுகளின் இசைவைப் பெற்றுக்கொள்ளும் பரப்புரைப் பணிகளை மேற்கொள்ளவல்ல காலமாக இந்த அமைதிப்பேச்சுக் காலத்தைப் பயன்படுத்த முயன்றது.

எந்தவொரு வல்லாண்மையாளர்களின் உதவியுமின்றி, எத்தனையோ பொருண்மியத் தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து தமிழீழத் தனியரசு அமைக்கும் இறுதி இலக்கினைச் சற்றொப்ப அடைந்துவிட்ட திறன் கண்டு வியந்த உலக வல்லாண்மைச் சூழ்ச்சியாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழீழ மக்களிடமிருந்து வேறுபடுத்தி, தமிழீழதேசத்தைப் பலவீனப்படுத்த அத்தனை சூழ்சிகளையும் மேற்கொண்டனர். “பொருண்மியமே அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனைய எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” என்ற அரசியலின் அடிப்படைக்கேற்ப, தமிழீழ மக்களின் பொருண்மியப் பண்பாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழீழ மக்களின் சமூக இருப்பைச் சீரழித்து, தமிழீழ மக்களிடத்திலும் விடுதலைப் போராளிகளிடத்திலும் எதிர்ப்புரட்சித்தன்மை கொண்ட பண்புமாற்றத்தை ஏற்படுத்த உலக வல்லாண்மையாளர்கள் முயன்றனர்.

எவரிடமும் கையேந்தி நிற்காத பொருண்மிய வாழ்வு வாழமுடியும் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களிடமிருக்கும் வரை, எவரிடமும் தமது அரசியலை அடகுவைக்கத் தேவையில்லை என்ற உறுதி அவர்களிடம் இருக்கும் என்ற மெய்நிலை தெரிந்த உலக வல்லாண்மையாளர்கள் தமிழீழ மக்களின் பொருண்மியப் பண்பாட்டைச் சீர்கெடுக்கும் முனைப்பில் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். உற்பத்தி, நுகர்வு, விநியோகம் மற்றும் சந்தை என்பன பொருண்மியத்தின் அடிப்படை அலகுகளாக இருப்பதால், அவை ஒவ்வொன்றிலும் சீரழிவுகளைச் செய்து தமிழீழதேசத்தின் பொருண்மிய இருப்பை ஆட்டங்காணச் செய்யும் இழி சூழ்ச்சிகளைச் செய்தனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முன்னர் தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்தோரில் மிகப்பெரும்பான்மையினர் பொருண்மிய நோக்கங்களிற்காக தாய் மண்ணை விட்டுச் சென்றோர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதிலும் கணிசமான தொகையினர் தாயக மண்ணையும் அதனுடன் ஓரிழையில் பிணைந்திருந்த விடுதலைப் போராட்டத்தையும் விட்டு ஓடிய விட்டோடிகளாகவே இருந்தனர். எனினும் ஓடுகின்ற குதிரையில் ஏறிப் பயணம் செய்யும் மனநிலை கொண்டோர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் களமுனை வெற்றிகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையாலும், மண்ணை விட்டு வாழும் வாழ்க்கை கற்றுக்கொடுத்த சில கசப்பான உண்மைகளால் ஏற்பட்ட மனமாற்றமாக தாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்காளர்களாகவில்லை என்ற குற்ற உணர்வாலும் தமிழீழ மண்ணிற்கு அமைதிப்பேச்சுக் காலத்தில் பயணப்படலானார்கள்.

அமைதிப் பேச்சுக்காலத்தில் தமிழீழ நிழலரசின் சந்தை ஒருவாறாக திறந்துவிடப்பட, அதை ஆட்டுவிக்கும் ஆற்றலாக இருந்துவிட மேற்குலகில் இருந்து தமிழீழ மண்ணிற்குப் பயணப்பட்டோரும் தம்பங்கிற்கு முயன்றனர். மிகை நுகர்வுப் பண்பாட்டிற்குத் தமிழீழ மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். மேற்குலக வாழ்வினை நாகரீக வளர்ச்சி என நம்ப வைக்கப்பட்டனர். தமது வாழ்வும் அடுத்த கட்டமாக அவ்வாறு நகர்ந்துவிடாதா என ஏக்கம் கொண்டனர். உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி இயன்றவரை நகர்ந்திருக்க வேண்டிய தமிழீழ நிழலரசில் பல்தேசிய நிறுவனங்களின் குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் என அத்தனையும் புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவற்றின் விற்பனைக்குரிய சந்தையை வழங்குவதால் வரும் பணம் (Commission) தமிழீழ நிழலரசின் வருமானமூலங்களில் ஒன்றானது.

அமைதிப்பேச்சு என்ற போர்வையில் தமிழீழத்தினுள் நேரடியாகத் தலையிட முனைந்த உலக வல்லாண்மையாளர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்து கீழ்வருவன போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளுமாறு பன்னாட்டளவிலான அழுத்தங்களைக் கொடுத்தனர்.

  • தமிழீழமானது திறந்த சந்தைப் பொருளியலை ஏற்று அதனை வெளிப்படையாக அறிவித்து அதன்படி தமிழீழச் சந்தையைக் கட்டற்ற சந்தைப் பொருளியலமைப்பிற்குத் திறந்துவிட வேண்டும். (தமிழீழதேசத்தின் பொருண்மியத்தைத் தங்கியிருக்கும் நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் அதன் அரசியற் தலைவிதியையும் மாற்றாரில் குறிப்பாக உலக வல்லாண்மையாளர்களில் தங்கியிருக்கும் நிலைக்குக் கொண்டுவருதலை நோக்காகக் கொண்டது)
  • இலங்கைத்தீவின் எந்தப் பகுதிகளிலும் கரும்புலித் தாக்குதல்களை இன்னும் குறிப்பாக பொருண்மிய இலக்குகள் மீது தாக்குதல்களை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்ளக் கூடாது. (ஏனெனில் இலங்கைத்தீவில் தமது முதலீட்டிற்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்குடனே இந்த அழுத்தம் புலிகளுக்கு உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது)

அதைத் தொடர்ந்து ஒஸ்லோவில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் 7 கோடி அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் இறக்கி, தமிழரின் விடுதலைக் கனவை மழுங்கடிக்க உலகம் முனைந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலகின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. உண்மையில் இந்த அமைதிப்பேச்சினை முன்னெடுக்கவென எமக்கு இடப்பட்ட அத்தனை அழுத்தங்களுமே தமிழீழதேசத்தின் பொருண்மியப் பண்புநிலையைச் சீர்குலைத்து அதன் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதை அடிப்படை நோக்காகக் கொண்டிருந்தது. புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் எமது மக்களும் அங்கிருந்த கட்டமைப்புகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தாக்கம் செலுத்த வல்லனவாக அமைதிப்பேச்சுக் காலத்தில் உருவாகின. உலகளவில் தமிழீழத்தின் பொருண்மியத் தேவைகளை நிறைவுசெய்யும் மாற்றுப் பொருளீட்டும் உத்திகள் முடக்கப்பட்டதனால், மேற்குலகில் வாழும் எமது மக்களின் பொருளியற் பங்களிப்பானது தமிழீழ நிழலரசினை இயக்குவதற்குத் தேவைப்படும் ஒன்றாக மாறியது. இப்படியான பல காரணங்களினால் தமிழீழத்தின் தலைவிதி மேல் வெளியிலிருந்து செல்வாக்குச் செலுத்தவல்ல நிலைமைகள் களத்தில் செய்த அளப்பரிய ஈகங்களைக் கடந்தும் உருவாகின.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவிற்கும், அந்த விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய புரட்சிகர விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முடக்கத்திற்குமான புறக்காரணிகள் குறித்த தெளிவைப் புவிசார் அரசியற் பார்வை வழங்கும். ஆனால், இங்கு கூர்ந்து நோக்கப்பட வேண்டியது என்னவெனில், என்னதான் புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தினாலும் அவை அகச்சூழலின் வழியாகத்தான் தாக்கஞ் செலுத்தவும் மாற்றத்தை நிகழ்த்தவும் இயலும் என்பதாகும். எனவே, தமிழீழதேசத்தின் அகக் கட்டுமானமானது அதன் பொருண்மியப் பண்பாட்டைச் சீரழித்தல் என்பதனூடாக உலக வல்லாண்மையாளர்களின் சூழ்ச்சியில் நடந்தேறியது. இதுவே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இதுவரை மீளா முடக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது.

நாம் ஒன்றை அழுத்தந் திருத்தமாக உலகத் தமிழ்மக்களிற்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவென்னவெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது 2009- 05- 18 ஆம் தேதியுடன் முடக்கத்திற்கு வந்துவிட்டது. அதன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரால் நடந்தேறுபவை எதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புப் பொறுப்பாகாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் பன்னாட்டளவில் உறவுகளை மேற்கொள்ளவென தலைவரால் அதிகாரமளிக்கப்பட்ட கே.பி என்பவர் 2009- 07- 21 அன்று மலேசியாவில் கைதாகிய பின்பாக அவர் சிறிலங்கா அரசிடம் சரணாகதி அடைந்துவிட்டார். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடு இதுவென அமைப்பின் பெயரில் முடிவெடுக்கும் அதிகாரம் எந்தக் கட்டமைப்புகளிற்கோ அல்லது எந்தத் தனிநபர்களுக்குமோ இல்லையென்பதை உலகத் தமிழ்மக்கள் ஐயந்திரிபறப் புரிந்துகொள்ள வேண்டும். இதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள 2009- 05- 18 இற்குப் பின்பாக விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பித்தலாட்ட அரசியல்களை உற்றுநோக்க வேண்டும்.

தாம் எடுக்கும் நிலைப்பாடுகளை விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைப்பாடு எனவும் தாமே விடுதலைப் புலிகளின் பேராளர்களாக இருக்க அதிகாரமளிக்கப்பட்டவர்கள் எனவும் புலிகளின் புலம்பெயர்ந்த கட்டமைப்புகள் 2009- 05- 18 இன் பின்னர் பேசிக்கொள்கின்றனர். தமிழர் தாயகப் பகுதிகளில் நடக்கும் சிறிலங்காவின் தேர்தல் அரசியல் முதற்கொண்டு, ஐ.நா வில் நடக்கும் அரசியல், இந்தியா, மேற்குலக நாடுகள், சீனா என உலக வல்லாண்மையாளர்களுடனான உறவுநிலை போன்ற அத்தனை விடயங்களிலும் தமது புரிதல்களின் அடிப்படையிலும் தமது நலன்கட்காகவும் புலம்பெயர்ந்த புலிகளின் இன்றைய கட்டமைப்புகள் முடிவுகளை எடுத்துவிட்டு அவற்றை விடுதலைப் புலிகள் அமைப்பின் முடிவுகளாகக் காட்டும் பேரவலம் முள்ளிவாய்க்காலின் பின்பான அரசியற் பேரவலமாக நடந்தேறுகின்றது. அவையாவன;

ஐ.நா மாந்த உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது மக்களை நம்பிக்கைகொள்ளச் செய்து, அதன் மூலமாக இனப்படுகொலை அரசைத் தண்டிப்பதோடு உலகநாடுகளினை தமிழர் பக்கம் வளைக்கப்போவதாக ஒரு தோற்றப்பட்டை ஏற்படுத்துகிறார்கள். இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் போல காட்ட இந்தத் தரப்புகள் முற்படுவதால், வேறுவழியின்றி ஐ.நா வின் பொறிமுறை மீதான திறனாய்வுகளை மேற்கொள்ளும் அரசியற் செயற்றிட்டம் தமிழர்களிடத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிகழ்ந்தது, நிகழ்கிறது.

மேற்குலக வல்லாண்மையாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப வளைந்து கொடுத்துப் பன்னாட்டளவில் அவர்களின் மாந்தகுலத்திற்கெதிரான குற்றங்களை மூடிமறைத்து, அவர்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்துமாறு செயலாற்றும் வகையிலே இந்த ஐ.நா வின் மாந்த உரிமைகள் ஆணையகம் அதன் கட்டமைப்பளவில் நிறுவப்பட்டிருக்கிறது. உண்மையில், தமிழினப்படுகொலையை இந்தியா நன்கு திட்டமிட்டு, உலக வல்லாண்மையாளர்களின் முழு ஒத்துழைப்பையும் சிங்கள பேரினவாதத்திற்குப் பெற்றுக்கொடுத்தே நடத்தி முடித்தது.


தமிழீழதேசத்தின் தனியரசமைக்கும் முனைப்பை இல்லாதொழிக்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உலக நாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்டது. தமிழீழம் ஒரு தேசமாக நிலைக்காமல் சிறிலங்காவின் சந்தைக்குள் கரைந்துவிட வேண்டுமென்பதற்காக உலக நாடுகளின் முழு ஒத்துழைப்புடன் தமிழர்கள் இனவழிப்பிற்கு உள்ளானார்கள். தமிழீழதேசத்தின் இறைமையைக் காத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததே தமது இந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான். தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று தமிழர் தரப்புப் போராட, அதனைப் போர்க்குற்றங்கள் என்று சொல்லி நீர்த்துப்போகச் செய்த ஐ.நா வானது பின்னர் அதனை இறுதிப் போரில் நடந்த போர்க்குற்றம் எனக் குறுக்கியது. பின்னர் அதனையும் இறுதிப்போரில் நடைபெற்ற மாந்த உரிமை மீறல் என நீர்த்துப்போகச் செய்து, மேலும் அதனை சமூகங்களுக்கிடையிலான பிணக்கு என்று அரசியற் குறுக்கம் செய்தது. அதன் பின்னர், சகரானினால் மேற்கொள்ளப்பட்ட இசுலாமிய அடிப்படைவாதத்தின் வெடிகுண்டுத்தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளை காலங்காலமாகத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்பும் தொடருகின்ற தமிழினவழிப்புடன் சமன்செய்து பார்க்குமாறு ஐ.நா வின் அறிக்கைகள் அமைந்தன. தற்போது ஒருபடி மேலே சென்று தமிழினவழிப்பிற்கான நீதி என்பதிலும் பார்க்க சிறிலங்காவின் பொருளியற் சிக்கலிற்குக் காரணமானவர்களைக் கண்டறிவது என்பது ஐ.நா அறிக்கையில் முதனிலைச் சிக்கலாக அறிக்கையிடப்படுகிறது. தமிழர்களின் தேசிய இனச்சிக்கல்களின் விளைவாக எழுந்த தமிழர்தேசத்தின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்து, தமிழர்தேசமாக நிலைக்கும் அரசியற் கட்டுறுதியை அழித்துவிடவே காலநீட்டிப்பைச் செய்து வருகிறது ஐ.நா மாந்த உரிமைகள் ஆணையகம்.

சிறிலங்காவின் மீது அழுத்தம் செலுத்தித் தமக்கு முழுதாக இசைய வைக்க தமிழர் தரப்பை ஊறுகாய் போல பயன்படுத்த வேண்டிய தேவை உலக வல்லாண்மையாளர்களிற்கு ஏற்படும்போதெல்லாம், அதனுடன் பேரம்பேசுவதாகச் சொல்லி அந்த நாடுகளின் முகவர்களாவதைத் தவிரத் தமிழர் தரப்பிடம் வேறெந்த அரசியல் வேலைத்திட்டமும் இல்லை. மேற்குலகின் முகவர்களாகவோ அல்லது இந்தியாவின் முகவர்களாகவோ செயற்படும் புலம்பெயர்ந்த கட்டமைப்புகள் விடுதலைப் புலிகளின் பெயரால் இந்த இழிசெயல்களை மேற்கொள்வதென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமைதாங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பையும் கொச்சைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளின் மீளெழுகையையும் கேலிக்கூத்தாக்குகின்றது. குறிப்பாகச் சொன்னால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டமைத்து தமிழீழ மண்ணில் மறவழிப் போராட்டத்தைத் தொடர்வதற்கான அடிப்படை ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ள கேணல் தெய்வீகன் போராளிகளுடன் களமிறங்குவதற்கு 2012 இல் பல முட்டுக்கட்டைகளைப் புலம்பெயர்ந்த கட்டமைப்புகளைச் சேர்ந்த சிலர் செய்தனர். அதாவது, ஐ. நா வில் தமிழர்களுக்குச் சார்பாக ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குழப்புவதாகவே தெய்வீகனின் மீள்கட்டமைப்பு அமையும் என்று சொன்னார்கள். எல்லோரும் சொல்லும் போது அதனை மீறிக் களத்தில் இறங்கிச் செயற்பட ஆரம்பித்தால் எத்தகைய ஈகத்தைச் செய்தாலும் பழியைத் தம்மீது சுமத்திவிடுவர் என்று கலங்கிப்போயிருந்த கேணல் தெய்வீகன் அவர்கள், இறுதியில் ஐ.நா வின் பம்மாத்து அரசியலைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, மறவழியில் போராட இயக்கத்தை மீளக்கட்டமைப்பதே ஒரேவழி என முடிவுசெய்து, போராளிகளுடன் களமிறங்கினார். ஐ.நா விற்காகக் காத்திருந்து பழக்கப்பட்டுக் காயடிக்கப்பட்ட செயலற்ற இனமாகத் தமிழினம் வந்துவிடக் கூடாது என்று போராடச் சென்ற கேணல் தெய்வீகன் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோபி, அப்பன் என்ற இரு போராளிகளுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அதன் பின் களமிறங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டமைக்கும் நடவடிக்கை எதுவும் காத்திரமான முறையில் நடைபெறவில்லை.

சிறிலங்காவின் தேர்தல் அரசியலில் வாக்கு வாங்கிச் சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயற்படமாட்டோம் என உறுதிமொழியேற்றுச் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களாவதைத் தமது அரசியலாக வைத்திருக்கும் தேர்தல் அரசியல் கட்சிகள் தொடர்பான மதிப்பீட்டைத் தமிழ்த்தேசிய அரசியல் என்றாற்போல பொருட்படுத்தும் வேலையை தமிழ்த்தேசியத்தின் பெயராலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயராலும் புலம்பெயர் அமைப்புகள் செய்ய ஆரம்பித்தன. இன்ன கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடெனவும் ஆளுக்கொரு நிலைப்பாடெடுத்து, புலிகளின் பெயரால் அரசியற் கட்சிகளுக்குப் பரப்புரையாளர்களாகினர். இது தமிழீழ இளைஞர்களைக் குழுப் பிரிப்பதற்கே வழிவகுத்தது. தமிழீழதேச விடுதலையைப் பற்றிப் பேசவும், எழுதவும் அதனை முன்னெடுக்கவும் பழக்கப்படுத்தப்பட வேண்டிய இளைஞர்கள் தேர்தல் அரசியல் கட்சிகளின் பெயரால் குழு மோதலில் ஈடுபட விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிகர அரசியலை மலினப்படுத்திக் களங்கஞ் சேர்ப்பதாக அமைந்தது. தமிழீழ தேசிய விடுதலையை முன்னெடுக்கவும் முன்னகர்த்தவும் ஆளுமையும் துணிச்சலும் அற்றுப்போனவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் வாக்குப்பொறுக்கும் அரசியற் கட்சிகள் தொடர்பான மதிப்பீடுகளைத் தமிழ்த்தேசியம் என்று பேசித் திரிந்து தமிழ்த்தேசியத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தினார்கள்.

விடுதலைப் புலிகள் என்ற பெயரினைப் பயன்படுத்தி இந்திய உளவுத்துறை சில குறைக்கூட்டங்களிற்கு அறிவுறுத்தி தன்னை நக்கிப் பிழைப்பதே தமிழருக்குத் தீர்வு என்ற மாயையை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புகிறது. இதற்கு  விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து களமாடிய போராளிகளைப் பல வலைகள் வீசியும் அழுத்தங்கள் கொடுத்தும் இணங்க வைக்க முயன்ற இந்திய உளவு அமைப்பிற்கு அப்படியொரு போராளியைத் தன்னும் முழுமையாக தனது நலனுக்கேற்றாற் போல மாற்ற முடியாமலோ அல்லது பிரபாகரன் என்ற அந்த விடாப்பிடிக்காரனின் அமைப்பில் அவருடன் கடைசி வரை கூட இருந்த போராளிகளை இந்திய நிகழ்ச்சிநிரலில் முழுமையாக இயங்க வைக்க முடியாது என்ற புரிதலினாலோ, பூனைகளை அழைத்துச் சூடுபோட்டுப் புலியாகக் காட்டித் தனது நலனுக்கேற்ப புலிப்பெயரில் அறிக்கைவிடக் காத்திருந்த இந்திய உளவு அமைப்பிற்கு அப்படியொரு வாய்ப்பும் கிட்டாமல் போக, கேவலம் எலிகள் இரண்டைப் பிடித்து அதுவும் சுண்டெலிகள் இரண்டைப் பிடித்து புலிகளின் பெயரில் அறிக்கை விட்டு இந்தியாவிடம் தமிழர்கள் நக்கிப் பிழைப்பதே ஒரேவழியென புலிகளின் பெயரால் இந்திய உளவு அமைப்புப் பரப்புரை செய்து வந்தது. இப்போது அடிமை மனநிலை கொண்ட பிழைப்புவாதிகளை அரசியற்படுத்துவதாகச் சொல்லி  முன்னைநாள் ஆய்வாளரும் இன்று இந்தியாவின் கொத்தடிமையாக மாறிப்போய் விட்டவருமான மு. திருநாவுக்கரசு என்பவர் இந்தியாவிற்கு நக்கிப் பிழைத்துத் தமிழினத்திற்குக் கேடு செய்யும் இழிந்தோரை விடுதலைப் புலிகளின் பெயரால் உருவாக்குவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளார்.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பேராளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி இந்தச் செயலைச் செய்து வருகின்றனர். தமிழீழ மண்ணில் இந்திய வன்வளைப்புப் படைகள் ஆடிய நரபலிவெறியாட்டத்திற்கும் தமிழர்களைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் கொட்டத்திற்கும் கொடுத்த பேரிடியாகவே ராசீவிற்கான தண்டனை வழங்கப்பட்டது. அது தமிழர்களின் அறச்சீற்றத்தினால் நடந்தேறிய அரசியல் நிகழ்வு. அதில் ஈடுபட்ட போராளிகள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர். அவர்களை உயிருடன் கைதுசெய்ய இயலாமல் மண்கவ்விய இந்திய உளவமைப்புகள் அப்பாவிகளைப் பிடித்துச் சிறைப்படித்தித் தமிழர்கள் மீதான தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டது. ராசீவ் வழக்கில் சிறைப்பட்டிருப்பவர்கள் அதில் தொடர்புபடாதவர்கள் என்ற கருத்து மட்டுமே முன்வைக்கப்பட வேண்டியது. விடுதலைப் புலிகள் ராசீவிற்குத் தண்டனை வழங்கவில்லை என்றால் தம்மை ஆகுதியாக்கி மாவீரரான அந்த ஈகச் செம்மல்களை ஒப்பந்தக் கொலையாளிகள் என்கிறார்களா? அதையும் விடுதலைப் புலிகளின் அரசியற்றுறை என்ற பெயரில் மேற்கொள்வார்களா? ராசீவிற்கான தண்டனையென்பது அரசியற் தவறல்ல. மாறாக, அது தமிழர்களின் அறச்சீற்றத்தின் அரசியல் வெளிப்பாடு.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய அரசியல் குறித்த சரியான பார்வைத் திறனின்றி, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்கமைய அங்குள்ள அரசியல் அமைப்புகளையும், அரசியல் ஆளுமைகளையும் கண்டமேனிக்குத் திட்டுவதோ அல்லது கண்மூடித்தனமாக நம்புவதோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் பெயரால் நடைபெற்று வருகின்றது. இந்த முதிர்ச்சியற்ற அரசியற்போக்கும் தான்தோற்றித்தனமான கருத்துப் பகிர்வுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் நடைபெறுவதென்பது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தமிழ்நாட்டில் இருக்கும் அளவுகடந்த பற்றிலிருந்து விலகி புலிகளின் எந்தக் கும்பல் அல்லது எந்தக் குழு தமக்கு உவப்பானது என்ற மதிப்பீட்டை நோக்கி அவர்களைத் தள்ளிவிடும் பேராபத்து இருக்கிறது.

இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்படுவதைத் தமது அரசியலாகக் கொண்டுள்ள சில புலம்பெயர் அமைப்புகள் இந்தியாவின் “சீனப்புச்சாண்டி” அரசியலை முன்னெடுக்கின்றன. இந்தியா இலங்கைத்தீவின் மீதான தனது மேலாதிக்கத்தை நியாயப்படுத்தச் சீனப்பூச்சாண்டி அரசியலை முன்னெடுக்கிறதென்பதைக் காலங்கடந்தேனும் தமிழ்மக்கள் உணர்ந்திருப்பர்.

தம்மை ஆய்வாளர்களாகக் காட்டும் பொய்புளுகிகளில் பெரிதளவில் அம்பலப்பட்டுப் போகாமல் தப்பி நிற்பதாகத் தம்மை நினைத்துக்கொள்ளும் பரணி கிருஸ்ணரஜனி என்பவர் சீன விசஊசி குறித்த விழிப்பரங்கு என்ற போர்வையில் மு. திருநாவுக்கரசின் வழிகாட்டுதலில் ஒரு நிகழ்வை 2016 இல் தமிழ்நாட்டில் நடத்தினார். அதாவது, போராளிகளிற்குத் தடுப்புமுகாம்களில் விசஊசி ஏற்றப்பட்டதாகக் கண்டுபிடித்த இந்த ஆய்வுக்குன்று, அதுவும் சீனாவில் தயாரிக்கப்பட்ட விசஊசி என அந்த விழிப்பரங்கின் மூலம் கருத்துப்பரப்பக் காரணமாக இருந்தார். சீனப்பூச்சாண்டி அரசியலைப் பரவலடையச் செய்யும் வேலைத்திட்டமே அதுவென்றும் அதனையே பரணிகிருஸ்ணரஜனி என்பவர் செய்தார் என்பதும் தமிழர்களுக்கு முறையாகச் சொல்லப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த அன்ரன் பாலசிங்கம் என விபரம் தெரியாத இளைஞர்களை நம்பவைக்கும் இவரின் செயற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் இணையத்தளங்கள் என அறியப்பட்ட ஊடகங்களினூடாகப் பரப்பப்பட்டதென்பதும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழினப்பகையான இந்தியாவிற்கு நக்கிப்பிழைக்கும் இந்த அரசியற்கெடுதியானது, அதுவும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களினால் நடத்தப்படுவது போன்ற தோற்றப்பாடானது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசியல் விடயத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்படாமல், இந்திய மேலாதிக்கக் கனவுடன் ராசீவ் காந்தியும் ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள நாடாக்கும் நோக்குடன் ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தமான இந்திய- இலங்கை ஒப்பந்தமானது தமிழர்களது இறையாண்மையை முற்றிலும் பறிப்பதென்பதில் திடமாக இருந்தமையாலேயே மற்றைய இயக்கங்களிலிருந்து வேறுபட்டுத் தமிழர் மனங்களில் தமிழீழ தேசிய இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளை நிலைகொள்ளச் செய்தது. இந்தியக் கொடுங்கோலர்களின் அத்தனை அழுத்தங்களையும் திறனுடன் எதிர்கொண்டு அவர்களின் வலையில் சிக்காமல், இந்திய வல்லாதிக்கர்களைத் தமிழீழ மண்ணில் மறவழியில் எதிர்த்துப் போராடி அவர்களை எம்மண்ணிலிருந்து விரட்டியடித்தமையானது தமிழீழ மக்களினதும் அவர்களுக்குத் தலைமைதாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளினதும் வீரத்தையும் துணிச்சலையும் புரட்சிகர வாழ்வையும் உலகறியச் செய்தது. காந்திய முகமூடியில் வலம்வந்த இந்தியக் கொடுங்கோலர்களைத் தமிழர்கள் அம்பலப்படுத்திய உலக அரசியல் நிகழ்வு விடுதலைப் புலிகளின் தலைமையில் நடந்தேறியது. அப்படியிருக்க, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் ஒரு சிறு சரத்தாக இடம்பெறும் மாகாணசபையை நடைமுறைப்படுத்த டெல்கி சென்று விடுதலைப் புலிகள் அமைப்புக் கோரிக்கை வைப்பது போன்ற கேவலத்தை சில உளநிலை பிறழ்ந்தவர்களையும், விபரமில்லாதவர்களையும், பிழைப்புவாதிகளையும் பயன்படுத்தி மு. திருநாவுக்கரசு என்ற இந்தியாவின் இன்றைய கொத்தடிமை செய்து முடித்திருக்கிறார். இதைவிட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழீழ மக்களையும் கொச்சைப்படுத்தும் செயல் வேறுதுவுமாக இருக்க இயலாது. அதுவும் அதனைப் புலிகளின் பெயரால் செய்வித்து, புலிகளின் மீதும் தமிழ் மக்கள் மீதும் இந்தியாவிற்கிருக்கும் வக்கிரத்தைத் தீர்த்து நமட்டுச் சிரிப்பையும் எள்ளல்களையும் உதிர்த்துவிடுகிறது இந்தியாவின் உளவமைப்பு.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் புலிகளின் கட்டமைப்புகளானவை புலம்பெயர்ந்த மக்களிடம் நிதிதிரட்டவும், தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நிருவகிக்கவும், நினைவுகூரல்களை புலம்பெயர்ந்த நாடுகளில் ஒருங்கிணைக்கவும், பன்னாட்டளவில் பரப்புரைகளை மேற்கொள்ளவுமெனவே பயன்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பானது இப்படியான வேலைகளைச் செய்விக்கும் நோக்குடனே இந்த அமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தார்கள். இவர்களிடம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கும் அரசியல் வேலைத்திட்டம் இல்லை. விடுதலைப் புலிகளின் பெயரால் நடந்தேறும் பல எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளானவை இந்தப் புலம்பெயர் அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த அமைப்புகள் மூலமாக அடையாளப்படுபவர்கள் மூலமாகவோ தான் நடந்தேறுகின்றன. ஐ.நா விற்குக் காத்திருக்கும் கையாளாகத்தனத்தை அரசியல் முன்னகர்வு போல் ஏமாற்றும் நடவடிக்கை, இந்திய வல்லாதிக்கத்தின் முகவர் அமைப்புகளாகச் செயற்படல் அல்லது மேற்குல வல்லாண்மையாளர்களின் முகவர்களாகச் செயற்படல், வாக்குப் பொறுக்கும் சிறிலங்காவின் தேர்தல் அரசியலைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் வேலைத்திட்டம் போல பம்மாத்துவிடல், பொய்வாக்குறுதிகளை அள்ளிவீசித் தமிழீழ இளைஞர்களைக் குழுப்பிரித்தல், தமிழ்நாட்டில் முகிழ்க்கும் தமிழ்த்தேசிய அரசியல் முனைப்புக் குறித்த தவறான மதிப்பீடுகள், டெல்கிக் காவடி எடுத்தல். ஐ.ந விற்குத் திருவிழா போதல் என்பனவற்றைத் தான் தமது நிகழ்ச்சிநிரல்களாக புலம்பெயர் கட்டமைப்புகள் பெரும்பாலும் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் அரசியற் தெளிவுபெற்று விடுதலைக்கான அரசியல் வேலைத்திட்டத்தைத் தமிழ்த்தேசியக் கருத்துநிலையில் உருவாக்கித் தமிழீழ விடுதலை நோக்கி முன்னகர வேண்டும். மாறாக, தமது நலன்கட்காகவோ அல்லது அவர்களின் குறைப்புரிதலை நியாயப்படுத்தவோ அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரால் முன்னெடுப்பதென்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் களங்கப்படுத்துவதிலேயே முடியும்.

மேற்குறிப்பிட்ட இழிவுகளெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் நடந்தேறும் போது, அவற்றிற்கு ஒரு மறுப்பறிக்கை தன்னும் விடத் துணிச்சலற்றவர்களாகவே புலம்பெயர்ந்த கட்டமைப்புகள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக அத்தனை ஈகங்களையும் செய்தார்களோ, அவற்றிற்கு நேரெதிரான செயற்பாடுகளை அந்த இயக்கத்தின் பெயரால் செய்து அதற்கு வரலாற்றுக் களங்கத்தை ஏற்படுத்தி, அத்தனை மாவீரர்களின் ஈகங்களையும் பொருளற்றதாக்க மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமெனின், ஒரு விடயத்தைத் திட்டவட்டமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, 2009- 05- 18 இன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படவில்லை. அதன் பின்னர் நடந்த எதற்கும் அந்த அமைப்புப் பொறுப்பாகாது. அதன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள்கட்டமைப்புச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படாமல் 13 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் விடுதலைப் புலிகள் அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரும் இருந்தது, அதற்குப் பின்னரும் இருக்கும். தமிழீழதேச விடுதலை என்பது தமிழர்கள் முன்னெடுத்தேயாக வேண்டியது. அதற்காக முப்பது ஆண்டுகளிற்கும் மேலாக உறுதியுடன் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குக் களங்கம் சேர்க்கும் எந்தவொன்றையும் தமிழர்கள் எளிதாகக் கடந்துபோக இயலாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பங்களிப்பதென்பது தமிழ்த்தேசியம் என்ற கருத்துவெளியில் தலைமை இடத்தில் வைத்துப் போற்றப்படுவதும் நினைவுகூரப்படுவதும் தவிர்க்க முடியாத வரலாற்றுப் போக்கு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலின் பின்னர் மீளக்கட்டமைக்கப்படவில்லை. அது இனி நடந்தேறாத ஒன்றாகக் கூடப் போகலாம். ஆனால், அந்தப் புரட்சிகர இயக்கம் களங்கப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. எது எப்படியோ, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைமைதாங்கிய தமிழீழதேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம். தவிர, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரால் குளிர்காய்வதனையும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனையும் உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

-மான்விழி-

2022-10-17

 928 total views,  3 views today

(Visited 295 times, 1 visits today)