
சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?
சிறிலங்கா தற்பொழுது முகங்கொடுக்கும் கடன் சுமையானது எந்தளவிற்கு சிறிலங்காவை அழுத்திப் பிடிக்கிறது? சிறிலங்காவின் கடன் சுமையானது எத்தன்மையானது? இதுபோன்ற கடன் சுமையை முன்னெப்பொழுதாவது சிறிலங்கா முகங்கொடுத்ததுண்டா? சிறிலங்கா இதுவரை கடன்சுமையில் இருந்தபோது எப்படி அதிலிருந்து மீண்டது அல்லது யார் அதனைக் காப்பாற்றினார்கள்? போன்ற வினாக்களிற்குத் தெளிவான பதில்களைக் கண்டறிவதன் மூலம் இப்போது சிறிலங்கா முகங்கொடுக்கும் கடன் தொல்லையிலிருந்து தற்காலிகமாக எப்படித் தப்பித்துக்கொள்ளும் என்பதையும் அதைச் செய்யக்கூடிய வெளியாற்றல் எதுவெனவும் விளங்கிக் கொள்ளலாம்.
சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) அண்ணளவாக 84 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். கொரோனாப் பெருந்தொற்றினால் சிறிலங்காவின் பொருண்மியத்தினைத் தாங்கிப்பிடித்திருக்கும் துறைகளான சுற்றுலா முழுமையாகவும் ஆடை ஏற்றுமதி பெருமளவிற்கும் முடங்கிப் போனமையால், சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 84 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மொத்தக் கடன் எனும் போது வெறுமனே அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன்களை மட்டுமே கணக்கிலெடுப்பதென்பது தவறான அணுகுமுறையாகும். ஏனெனில், மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பில் தனியார்துறையின் பங்களிப்பும் உள்ளடங்கியே இருக்கிறது.
அந்தவகையில், சிறிலங்காவின் அரசாங்கம் மற்றும் தனியார்துறை ஆகியவை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 65 பில்லியன் அமெரிக்க டொலரை நெருங்கிவிட்டது. சிறிலங்காவானது, ஆண்டொன்றிற்கு இறக்குமதிக்காகச் செலவிடும் தொகைக்கும் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயிற்குமிடையிலான வேறுபாடானது 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகிவிட்டது. அதாவது, ஆண்டொன்றிற்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சிறிலங்கா சந்திக்கத் தொடங்கிவிட்டது. கொரோனாப் பெருந்தொற்றால் இந்தநிலை மேலும் மோசமடைந்து வருகிறது.
ஆகவே, தான் செலுத்த வேண்டிய கடனைத் தனது வருவாய் மூலம் செலுத்தக் கூடிய நிலையில் சிறிலங்கா இல்லை என்பதோடு, நாடு இயங்குவதற்கு கடனிலும் மேற்சென்று ஆண்டொன்றிற்குப் பற்றாக்குறையாகும் தொகையான (deficit) 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதற்கும் ஏனைய கடன்களிற்கான வட்டியைச் செலுத்தவும் கடன்பெறுவதைத் தவிர வேறுவழியில்லாத நிலையில் சிறிலங்காவின் பொருண்மியம் அதள பாதாளத்தில் இருக்கிறது.
சிறிலங்காவானது, வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலைக்கு எப்போதோ வந்துவிட்டதுடன், வாங்கிய கடனிற்கான வட்டியையும் செலுத்த முடியாத நிலைக்கு சில ஆண்டுகளின் முன்பே வந்துவிட்டது. அதனால், தான் வட்டியைச் செலுத்தும் கால எல்லையை நீட்டித்து உதவுமாறு சிறிலங்காவானது இந்தியாவிடமும் சீனாவிடமும் சென்ற ஆண்டு வேண்டிக்கொண்டது. தலைக்குமேல் வெள்ளம் வந்துவிட்ட நிலையில் இருக்கும் சிறிலங்காவானது, இப்போது கடனையும் செலுத்த முடியாது என்பதோடு அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது என்ற நிலையையும் தாண்டி, நாட்டின் அன்றாடச் செலவுகளிற்காக 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டொன்றிற்கு மேலதிகமாகக் கடன்பெற வேண்டிய சூழலிற்கு வந்துவிட்டது. சிறிலங்காவானது செலுத்த வேண்டிய மொத்தக் கடனிற்கும் அதனது மொத்த உள்நாட்டு உற்பத்திற்கும் இடையிலான விகிதமானது (Debt to GDP Ratio) 112 % ஆகிவிட்டது.
இந்த விகிதம் போல மிகக்கூடுதலான பெறுமானத்தை சிறிலங்காவானது பல தடவைகள் முகங்கொடுத்தது என கோத்தாபாயவின் பொருளியலாளர்கள் கூறிவருகிறார்கள். 1990 ஆம் ஆண்டினை அண்மித்த காலப்பகுதியிலும் 2000 இற்கும் 2002 இற்குமிடையிலான காலப்பகுதியிலும் இந்த விகிதமானது 100% இனைத் தாண்டியிருந்தது என்பது உண்மைதான். அப்போது மேற்குலகும் இந்தியாவும் சேர்ந்து சிறிலங்காவைக் காப்பாற்றியதும் உண்மைதான். ஆனால், சிறிலங்காவானது இப்போது முகங்கொடுக்கும் கடன் நெருக்கடி என்பது வரலாறு காணாத நெருக்கடிதான் என்பதை விளங்கிக்கொள்வதற்கும் கோத்தாபயவின் பொருளியலாளர்கள் கூறிவரும் கருத்துகளைப் பார்த்து எள்ளிநகையாடுவதற்கும், சிறிலங்கா முகங்கொடுக்கும் கடன் சுமையின் உள்ளடக்கத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
2010 ஆம் ஆண்டின் முன்பு சிறிலங்கா பெற்ற கடனின் உள்ளடக்கமென்பது முற்றிலும் இன்றைய நிலையிலிருந்து வேறுபடுகின்றது. அந்தக் காலப்பகுதியில் சிறிலங்காவானது குறைந்த வருமானமுள்ள நாடாகவே பட்டியற்படுத்தப்பட்டு இருந்தது. இதனால், முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்திற்கு உவப்பான செயல்களிற்கு உடன்படுவதன் மூலம் சலுகைக் கடன்களை (Concessionary Loans) உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து குறைந்த வட்டிக்கு நீண்டகால இடைவெளியில் கடனைத் திரும்பச் செலுத்தும் ஏற்பில் சிறிலங்காவானது பெருந்தொகைப் பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொண்டது. ஆனால், 2010 ஆம் ஆண்டளவில் சிறிலங்காவானது நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் பின்பாக சலுகைக் கடன் பெறும் வாய்ப்பை சிறிலங்கா இழந்தது.
தனது ஆற்றல்வளத்திற்கும் இயலுமைக்கும் இயலவே இயலாத விடயமாக இருந்த விடுதலைப் புலிகளைப் போரில் அழித்தல் என்ற விடயத்தை, இந்தியாவின் பேச்சை நம்பிக் கையிலெடுத்த சிறிலங்காவானது, சுமக்க முடியாத சுமையைச் சுமந்ததன் விளைவாக, அது வரலாற்றில் மீளமுடியாத நெருக்கடிக்குள் சென்றுவிட்டது.
உண்மையில் விடுதலைப் புலிகளினை தமது இயலுமைக்கு மேற்சென்று அழிக்கும் போதே சிறிலங்காவும் மீண்டெழ முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிவிட்டது. இந்தியாவின் சூழ்ச்சியாலும், மேற்குலகின் வழிகாட்டலாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் போர்ப் பொருண்மியமீட்டும் முனைப்பாலும் நன்மைகளைப் பெற்று விடுதலைப் புலிகளை போரில் அழித்துவிட்டதன் வெற்றியைத் தனது வெற்றியாகத் தம்பட்டமடித்து “தமிழர்களைத் தோற்கடித்துவிட்டோம்” என கூச்சலிட்டுச் சிங்கள மக்களை அந்த போர்வெற்றிவாத மாயையில் ஆழ்த்திவிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது, தன்னுடைய சொந்தப் புகழ்ச்சிக்ககவும் தன்முனைப்பிற்காகவும் பில்லியன் கணக்கான டொலர்களைக் கடனாகப்பெற்றுத் தமது குடும்பப் பெயரில் வானூர்தி நிலையம், துறைமுகம், விளையாட்டரங்கு என விளையாடித் தள்ளியதுடன் பல பில்லியன் பணத்தைச் சுருட்டி வெளிநாடுகளில் முதலிட்டும் கொண்டது.
எனவே, சலுகைக் கடன்பெற வாய்ப்பற்றுப் போன சிறிலங்காவானது, பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (International Sovereign Bonds) விற்பதன் மூலம் அதிக வட்டிக்குப் பணம் பெற்று அபிவிருத்தியென்ற பெயரில் ராஜபக்ச பெயரில் கட்டுமானங்களைக் கட்டி விளையாடியது. இதன் விளைவாக, சிறிலங்காவின் கடனானது வட்டி- குட்டியுடன் பெருகி வந்தது. சுருங்கக் கூறின், 2010 இற்கு முன்பாக சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டிய கடனென்பது கூடுதலாக சலுகைக் கடனாகப் பெற்ற மிகக் குறைந்த வட்டி செலுத்த வேண்டிய கடனே. ஆனால், 2010 இன் பின்னர் சிறிலங்கா செலுத்த வேண்டிய கடன்களில் பெரும்பகுதி மிகக் கூடிய வட்டிக்கும் குறைந்த காலத் தவணையிலும் செலுத்த வேண்டிய கடனாக இருக்கிறது. மேலேயுள்ள வரைபடம் இதனைத் தெளிவுறக் காட்டுகிறது. அதாவது, தற்போது செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களில் பெரும்பகுதியானது, பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (ISB) விற்றுப் பெற்ற கடனாக இருக்கிறது. எனவே, சிறிலங்காவானது முன்னரும் இதுபோன்ற கடன் சுமையை எதிர்கொண்டு மீண்டதென கோத்தாபயவின் பொருளியல் கோயாபல்சுகள் கூறும் கதை எவ்வளவு சிரிப்பிற்கிடமானது என விளங்கிக்கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டிற்குள் சிறிலங்கா அரசாங்கமானது 23.2 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடனைச் செலுத்திமுடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே, ஆண்டொன்றிற்கு 4 முதல் 5 பில்லியன் வரையிலான அமெரிக்க டொலர்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த மட்டுமே தேவைப்படுகிறது. இதைவிட, தனியார்துறை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடனைச் செலுத்த சிறிலங்காவிலிருந்து பணம் வெளியே செல்லப்போகின்றது. மேலும், ஆண்டொன்றிற்கு சிறிலங்காவிற்குக் கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும் அதனது செலவீனம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (கொரோனா காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகமாகும்) அதிகமாகும். ஆனால், சிறிலங்காவிடம் கையிருப்பில் இருக்கும் பணமோ வெறும் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே. எனின் இந்தத் தொகையை வைத்து ஒரு ஆண்டிற்குக் கூட நாட்டை இயக்க முடியாது.
எனவே, தற்போதைக்கு நாடு பொருண்மிய அடிப்படையில் இயங்க முடியாத நிலைக்குச் (Bankruptcy) செல்வதிலிருந்து தப்பிக்கொள்வதற்கு, சிறிலங்காவிற்கு ஆண்டொன்றிற்கு 10 பில்லியன் டொலர்கள் கடனாகத் தேவைப்படுகிறது. இப்படியாக 2021 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை சிறிலங்கா அரசாங்கம் ஆண்டொன்றிற்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என 50 பில்லியன் டொலர்கள் கடனாகப் பெற்றால் மட்டுமே, அதனது வெளிநாட்டுக் கடன்களைக் கட்டி முடிக்க முடியும். இதைவிட, சிறிலங்காவின் உள்நாட்டுக் கடன்களும் நாடு முடக்கத்திற்குப் போகுமளவிற்கு அதிகரித்து விட்டது. இதற்கு மேலும், சிறிலங்காவானது உள்நாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொண்டால், வங்கிகள் இயங்க இயலாத நிலைக்குச் செல்லும், ஊதியம் கொடுக்க இயலாத நிலைக்கு நாடு செல்லும். இப்போதே ஊழியர் நம்பிக்கை நிதியத்திடமிருந்த (ETF) பணத்தையும் உள்நாட்டுக் கடனாக சிறிலங்கா பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கீழே உள்ள வரைபடத்தில், மென்னீல நிறத்தினால் காட்டப்படுவது பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (ISB) விற்றுப் பெற்று இன்னமும் செலுத்தப்படாத கடன் தொகையாகும் என்பதோடு சிவப்பு நிறத்தினால் காட்டப்படுவது அதற்காகச் செலுத்த வேண்டிய வட்டியாகும். மண்ணிறத்தினால் காட்டப்படுவது உட்கட்டுமானத் திட்டங்களிற்காகப் பெற்ற கடனாகும் என்பதோடு மென்பச்சை நிறத்தினால் காட்டப்படுவது அதற்காகச் செலுத்த வேண்டிய வட்டியாகும்.
இதிலிருந்து, சிறிலங்கா திருப்பிச்செலுத்த வேண்டிய கடனின் பெருஞ்சுமைக்கு வித்திட்டது அதனால் பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (ISB) விற்றுப் பெற்ற கடனினால் ஏற்பட்டதென எளிதாக விளங்கிக்கொள்ள இயலுமென்பதோடு, “சீனாவின் கடன் பொறி” என்ற பரப்புரையின் உண்மைத்தன்மைகள் எத்தகையன என்பதைப் பொருண்மிய அடிப்படையிலும் விளங்கிக்கொள்ள இயலும்.
எனவே, மேற்போந்த பத்திகளில் விளக்கிக் கூறியதன்படி, நாடு பொருண்மிய அடிப்படையில் மூழ்குவதிலிருந்து தப்பிக்கொள்வதற்கு சிறிலங்காவிற்கு ஆண்டொன்றிற்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் கடனாகத் தேவைப்படுகிறது. பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளைக் (ISB) கொடுத்துக் கடன் பெறுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சூழலில் சிறிலங்கா இருக்கிறது. ஏனெனில், பொருண்மிய அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பிணைகளை யாரும் முன்வந்து வாங்க மாட்டார்கள் என்பதோடு, அப்படிப் பிணைகளை விற்றுப் பணம் பெறுவதானால் மிக மிகக் கூடிய வட்டிக்கே பணம் பெற வேண்டியிருக்கும்.
எனவே, சிறிலங்காவிற்கு இருக்கும் ஒரே வழி என்பது வெளிநாட்டுக் கடன்களை உதவியாகக் கேட்டுப் பெற்றுக்கொள்வது மட்டுமே. அப்படியாயின் யாரிடமிருந்து சிறிலங்கா கடன்வாங்க இயலும் என்ற ஒரு கேள்வி எழும். சீனாவானது பொருண்மிய நலன்களிற்கு வெளியே சென்று ஒரு எல்லைக்கு மேல் கடன் வழங்காது. அப்படிச் சீனாவிடமிருந்து பெறும் கடன்களிற்கு அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலையில் சிறிலங்கா இருக்கிறது. ஏனெனில், பொருண்மிய அடிப்படையில் நலிவடைந்துள்ள சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் பழிவாங்கல்களை (வரிச் சலுகையை விலக்கல், முதலீட்டிற்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இணைத்தல், பகுதியளவிலான பொருண்மியத் தடைகள்) எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் இல்லை.
எனவே, மேற்குலகிடமும் இந்தியாவிடமும் ஓடிப்போய் ஒதுங்க வேண்டிய நிலையானது சிறிலங்காவிற்குத் தவிர்க்க இயலாதது. வாய்ப்பேச்சிற்கும் களநிலைவரத்திற்கும் மலைத்த வேறுபாடு இருக்கிறது என்பதைத் தெரிந்து தெளிய வேண்டும்.
2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாளன்று சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத்தளமும் பன்னாட்டு வானூர்தி நிலையமும் தமிழர் படையின் வீரஞ்செறிந்த தற்கொடைத் தாக்குதல் மூலம் தாக்கியழிக்கப்பட்டதில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வானூர்திகள் முழுமையாகத் தீக்கிரையானதுடன், ஏனைய பழுதுபார்க்கும் வேலைகளிற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவானது. உடனடி மற்றும் நேரடி இழப்புகள் இப்படியாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தாலும், இந்தத்தாக்குதலால் ஏற்பட்ட நீண்டகாலப் பொருண்மிய இழப்பு என்பது பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களாக இருந்தது. சிறிலங்காவின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் துறைகளில் ஒன்றான சுற்றுலாத்துறையானது முழுமையாக முடங்கிப்போனதுடன், முதலீட்டுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா இணைக்கப்பட்டது. இதனால், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (Foreign Direct Investments) சிறிலங்காவிற்குக் கிடைக்கவில்லை. சிறிலங்காவானது பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (ISB) வழங்கிக் கடன்பெறுவதற்கு மிகப் பெரிய வட்டியைச் செலுத்த வேண்டியிருந்தது. சிறிலங்காவில் காப்புறுதிசெய்ய பன்னாட்டுக் காப்புறுதி நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதமானது – 1.4% என்ற மறைப் பெறுமானத்திற்குப் போய் சிறிலங்காவானது மேலும் இயங்க முடியாத நாடு என்ற நிலைக்குச் சென்றது. போரில் சிறிலங்காவின் இராணுவ எந்திரம் முற்றாக சிதைந்தழிந்து கொண்டிருந்த காலமாக அக்காலப்பகுதி இருந்தது. இதனால், சிறிலங்காவானது இயங்க முடியாத சூழலிற்குள் முழுமையாக வந்தது.
அக்காலப் பகுதியில், இந்திய- சிறிலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வணிகம் பெருகி வந்தமையாலும், இந்திய தரகு முதலாளிகளின் முதலீடுகள் சிறிலங்காவில் அக்காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டு இலாபத்திற்காகக் காத்திருந்தமையாலும், இந்த பாரிய பொருண்மிய முடக்கத்திலிருந்து சிறிலங்காவைப் பாதுகாத்து, தனது தரகு முதலாளிகளின் வர்க்க நலன்களை பாதிப்பிற்குட்படாத வண்ணம் பேண வேண்டிய தேவை கருதி, இந்தியா தன்னாலான அத்தனை உதவிகளையும் சிறிலங்காவிற்குச் செய்தது. அதேவேளை,, தனது தொழிலுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்யும் உடனடி நோக்கத்துடன், விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் அமைதிப் பேச்சில் ஈடுபடுத்த இந்தியாவின் துணையுடன் மேற்குலகு முன்வந்தது. இப்படியாக, சிறிலங்காவினைக் காப்பாற்றி தமிழீழம் மலரக் கிடைத்த அருமையான வாய்ப்பைத் துடைத்தழித்தது இந்திய- மேற்குலகுக் கூட்டே என்பதைத் தமிழர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடக்கிப் புலிகளை அழித்துத் தமிழர் தேசத்தை அழிக்கத் துடித்த இந்திய- மேற்குலகக் கூட்டானது, சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் மாநாடுகளினூடாகவும் இயன்ற அத்தனை வாய்ப்புகளினூடாகவும் பெரும் பண உதவிசெய்து, சிறிலங்காவைத் தமது கைப்பாவையாக மாற்றிக்கொண்டது.
இப்போது சிறிலங்காவானது இயங்க முடியாத நிலைக்கு மிக மிக அண்மித்துவிட்டது என்பதை இந்தப் பத்தியின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். கடந்த இரு கிழமைகளிற்கு முன்னர் சிறிலங்காவானது பங்காளதேசத்திடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது. இந்தக் கடனானது டொலர்களாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் இந்தக் கடனை வட்டியுடன் சிறிலங்கா தனது நாணயத்தில் (சிறிலங்கா உரூபாய்) செலுத்தலாம். இந்தப் பணமானது டொலர்களில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்த சிறிலங்காவிற்குப் பயன்படும். பங்காளதேசம் பெற்ற கடன் சுமைக்குள் இருக்கும் நாட்டிடமே பணத்தைக் கடன் வாங்க வேண்டிய நிலையில் சிறிலங்கா இருக்கிறது. சிறிலங்காவிற்கு 200 மில்லியன் டொலர்கள் என்பது அதனது கடன் சுமையுடன் ஒப்பிடுகையில் மிக மிகச் சிறிய தொகையே என்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும். எனவே, இப்படியான கடன்களைப் பெற்றுச் சிறிலங்காவினால் தான் முகங்கொடுக்கும் பாரிய இன்னலிலிருந்து தப்பிக்க முடியாது என்பது துலாம்பரமானது.
இருந்தபோதிலும், ஆண்டொன்றிற்கு 10 பில்லிய்ன் வரையான அமெரிக்க டொலர்களைப் பெற்றால் மட்டுமே கடனைக் கட்டி நாட்டை இயக்க முடியுமென்ற நிலைக்கு வந்துவிட்ட சிறிலங்காவினைக் காப்பாற்ற உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி போன்றன முன்வருவார்கள். ஆனால், அதற்காக சிறிலங்கா கொடுக்கப் போகும் விலை மிகப்பெரிதாக இருக்கும்.
கட்டமைப்பு மாற்றங்கள் (Structural Adjustments) மட்டுமே சிறிலங்காவிற்கு கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக இம்முறை திணிக்கப்படப்போவதில்லை. அதையும் தாண்டிப் பல தாரைவார்ப்புகளை சிறிலங்கா செய்ய வேண்டியிருக்கும். மிகவும் நெருக்கடியான நிலையில், மேற்குலக மற்றும் இந்திய நலன்களிற்கு முழுமையாக உடன்பட்டுப் போகும் நிலைக்கு சிறிலங்கா தள்ளப்படும். கோத்தாபய அரசே அதைச் செய்யும். இல்லையென்றால், ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலம் அது நிகழ்த்தப்படும்.
இந்தியாவின் “சீனப்பூச்சாண்டி” பரப்புரையும் ஈழத்தமிழர் அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்
தமிழினப் படுகொலையின் முதன்மைப் பங்காளியான இந்தியாவானது தனது அண்டை நாடுகளினை சீனா வன்வளைப்புச் செய்கிறது என்றும் அதனால் அந்த அச்சுறுத்தலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சிக்கலில் தான் இருப்பதாகவும் “சீனப்பூச்சாண்டி” இனைக் காட்டிக்கொண்டு, தனது அண்டை நாடுகளில் நுழைந்து, தனது ஆளும்வர்க்க நலன்களிற்கான சந்தை விரிவாக்கத்தைச் செய்வதன் மூலம் தனது மேலாதிக்கத்தைப் படரச்செய்து வருகிறது.
இந்தச் “சீனப்பூச்சாண்டி” என்ற இந்தியாவின் சூழ்ச்சியில் விபரம் குறைவான ஈழத்தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் சிக்குண்டு போய் இருப்பதுடன், இந்தியா சீனாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிட்ட (இந்தியாவின் பரப்புரையின் அடிப்படையில்) சிறிலங்காவைத் தண்டிப்பதற்காக, வேறுவழியின்றி ஈழத்தமிழர்களிற்குச் சார்பாகத் திரும்பப் போவதாகவும், அதனால் தமிழீழம் மலரக் கூட வாய்ப்புண்டு என்றும் அடிமுட்டாள்கள் போல நம்புகிறார்கள். இந்த நூற்றாண்டின் முட்டாள்த்தனத்திற்கு எடுத்துக்காட்டாகக் காட்ட வேண்டிய இந்த நகைப்பிற்கிடமான விடயத்தைத் தாமும் நம்புவதோடு, அதனைப் பரப்புரையாக மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் சீரழிவையும் இவர்கள் செய்து வருகின்றனர். எனின், இந்தியா தொடர்பான ஒரு சிலவற்றை சுருங்கச் சொல்லிச் சுட்டிக்காட்டுவது இந்தவிடத்தில் தவிர்க்க முடியாததொன்றாகிறது.
தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் மீது தனது மேலாண்மையைச் செலுத்த நேரு காலத்திலிருந்து இன்றுவரை இந்தியா துடியாய்த் துடித்து வருகிறது. தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுத்து இந்தியாவைக் காப்பது என்பதையும் தாண்டி அண்டை நாடுகளின் மீதான தனது மேலாதிக்கம் மூலம் அகன்ற பாரதக் கனவில் அன்றிலிருந்து இன்று வரை இந்தியா வெறித்தனமாக வேலை செய்து வருகிறது.
இலங்கைத்தீவின் மீதான தனது மேலாண்மைக்கே தமிழர்களின் தேசிய இனச் சிக்கலை இந்தியா பயன்படுத்தும் என்பதோடு தமிழர்களின் தேசிய இன விடுதலைப்போரை அடியொட்ட அழித்துத் தன்னுடைய கூலிப்படைகளாகவும் இந்தியாவின் தயவுக்காகக் கையேந்தி நிற்கும் அபலைகளாகவும் தமிழர்கள் இருக்க வேண்டுமென்பதும் தான் இந்தியாவின் எதிர்பார்ப்பு.
தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்தியாவானது தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதை எப்பாடுபட்டேனும் தடுக்குமென்பதோடு, தமிழீழ தேசிய இன விடுதலை என்பது தமிழ்நாடு தேசிய இனவிடுதலைக்கு விரைவூக்கியாகப் பங்களிப்பதோடு நாகலாந்து, அசாம், மணிப்பூர், மிசோரம், காசுமீர் என இந்தியாவுக்குள் இன்னமும் சிறைப்பட்டுக் கிடக்கும் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களுக்கு உந்துதலாக அமைய இந்தியா துண்டு துண்டாகச் சிதறி தேசிய இனங்கள் விடுதலை பெற்று தேச அரசுகள் அமையப் போகும் வரலாற்றுப் போக்கின் மீது கொண்டுள்ள அச்சமே இந்தியாவைத் தமிழினப் படுகொலையின் முதன்மைப் பங்காளியாக்கியது.
இனி மறவழிப் போராட்டத்தால் எந்தப் பயனும் கிட்டாது மாறாக மீளா அழிவுதான் கிட்டும் என்ற பரப்புரையை இந்தியாவின் உளவு அமைப்பு பல தளங்களில் ஊடகங்கள் அடங்கலான தனது கருத்தியல் அடியாட்கள் மூலம் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களின் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவிச் சென்று பரப்பியது. தமிழீழ விடுதலையின் புரட்சிகர அமைப்பின் தோல்வி என்பது எக்காலத்திலும் மறவழிப் போராட்டத்தின் தோல்வியாகாது என்பதை விடுதலைக்காகப் போரிடும் ஒடுக்குண்ட தேசிய இனங்களுக்குச் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தவிப்பு நிலையிலும் தமிழீழ மக்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில், தேசிய இனங்கள் விடுதலை பெற்ற தேசங்களை தெற்காசியாவில் நிறுவத் தொடங்குவதுடன் உடைந்து சிதறப் போகும் வரலாற்று ஓட்டத்தில் இருந்து தப்பிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே தமிழீழ விடுதலை அமைப்பினை போரில் வென்று தமிழர்களை அழித்தமையை இந்தியா கருதியது.
நாகலாந்தின் விடுதலை அமைப்புத் தான் மற்வழிப்போரைக் கைவிட்டு பகிரப்பட்ட இறைமை போன்ற கதையளப்புச் சூழ்ச்சிக்குள் போவதற்கான காரணங்களை அடுக்குகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற முப்படைகளையும் கொண்ட மிக வலுவான விடுதலை இயக்கம் போரில் அழிக்கப்பட்டமையைத் தாம் கருத்தில் கொண்டும் தான் அந்த முடிவுக்குத் தாம் வருவதாகச் சொல்லி இருக்கிறது.
எனவே, தமிழீழ மக்களின் விடுதலை அமைப்பு அழிக்கப்பட்டமைக்கான காரணத்தையும் அதில் முதன்மைப் பங்காற்றிய இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைகூடம் பற்றிய தகுந்த தெளிவில் உலகளாவிய போராடும் மக்களுக்கும் குறிப்பாகத் தெற்காசியாவில் ஒடுக்குண்டிருக்கும் விடுதலை மறுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் இன்னும் குறிப்பாக இந்தியாவிற்குள் சிறைப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கும் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தமிழீழ விடுதலைக்காக மிகப்பெரிய ஈகங்களைச் செய்த தமிழீழ மக்களுக்கும் அதை முன்னெடுத்த புரட்சிகர அமைப்பின் எஞ்சியுள்ள ஆளுமைகளுக்கும் உண்டு.
எனவே, இந்தியாவின் நிகழ்ச்சிநிரலை கூராய்ந்து அறிந்து, அந்தச் சூழ்ச்சிகர நிகழ்ச்சிநிரல்களைத் தமிழர் மண்ணில் தோற்கடிக்கச் செய்வதற்கான முழுத் தகைமையும் தமிழர் எமக்குண்டு என்ற தெளிவைப் பெற வேண்டியது தமிழ்த் தேசிய அரசியலின் உடனடித் தேவையாகின்றது. எனின், “சீனப்பூச்சாண்டி” இனைக் காட்டித் தமிழர்களின் காதுகளில் பூவைத்துத் தலையில் செத்தல் மிளகாயையும் அரைக்கும் இந்தியச் சூழ்ச்சியைத் தவிடுபொடியாக்குவோம் என்று தமிழர் நாம் உறுதியேற்போம்.
-களநிலைவர ஆய்வு நடுவம்-
-முற்றும்-
1,847 total views, 6 views today