கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 5-

சீனப்பூச்சாண்டி அரசியலின் பின்னணி என்ன?

சீனா தற்போது நிகரமை (சோசலிச) நாடு அல்ல. அதேவேளை, அண்டைநாடுகளின் மீது வல்லாண்மை செலுத்தி ஒரு துருவ உலக ஒழுங்கிற்குத் தலைமையெடுக்கும் அளவிற்கு வாய்ப்புள்ள நாடும் அல்ல. சீனாவின் புவிசார் அமைவிடமானது உலக நாடுகள் மீது ஒரு எல்லைக்கு மேல் மேலாண்மை செலுத்தக் கூடிய வகையில் இல்லை என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

133.92 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவானது சீனாவினைப் பொறுத்தவரை உற்பத்திப் பொருண்மியம் சொல்லக் கூடியளவிலற்ற மிகப் பெரும் நுகர்வுச் சந்தையாகும். டெல்கி கையொப்பமிட்டாலே சீனப் பொருட்களைப் பெருமளவில் நுகரும் இந்தியா என்ற சந்தை சீன உற்பத்திகளுக்குக் கிடைக்கும். எனவே இந்தியா எனும் பெரும் சந்தையானது, தேசிய இன விடுதலையின் பேரால் உடைந்து போவது சீனாவின் வணிகத்திற்குக் கேடானதே.

அதேபோல், சீனா 690 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான பணத்தை அமெரிக்க வங்கிகளிலும் இன்னும் பல பில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களிலும், சொத்துகளிலும் முதலிட்டுள்ளது. அதேபோல், சீனாவின் வினைத்திறனான தொழிலாளர்கொள் சந்தையை முழுமையாக நம்பியே அமெரிக்கா பில்லியன் டொலர்கள் பணத்தை சீனாவில் முதலிட்டுள்ளது. சீனாவின் பொருட்களுக்கான சந்தைகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவில் அதிகரித்த சீனாவின் முதலீடுகளை ஒரு எல்லையின் மேல் தாண்டிச் செல்ல முடியாதவாறான மட்டுப்படுத்தலை அமெரிக்கா செய்தது. அதாவது, சீனாவின் நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலில் வைப்பதன் மூலமும் வரிகளை அதிகப்படுத்தியதன் மூலமும் அமெரிக்காவில் சீனாவின் முதலீடுகளை அமெரிக்கா மட்டுப்படுத்தியது. சீனாவின் முதலீடுகள் அமெரிக்காவிற்குத் தேவை. ஆனால் அது ஒரு எல்லைவரை இருக்க வேண்டுமென்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே, முதலாளித்துவ பொருண்மிய உலகில் தமக்குள் ஒருவரையொருவர் அழிப்பதல்ல அவர்களின் இலக்கு. ஒவ்வொருவரும் மற்றையவரின் உற்பத்தியிலோ சந்தையிலோ ஒருவரின் மேல் இன்னொருவர் தங்கியுள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன், அமெரிக்க டொலர்களைக் கொடுத்து வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளத்தை வாங்கி அதனை சீனாவிற்குக் கொண்டு வந்து சேர்ப்பது முதல் சீனாவின் உற்பத்திப் பொருட்களை ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளிற்கு எடுத்துச் செல்வது வரை சீனாவானது தனது நிலவிட அமைவிடம் காரணமாக, ஒரு தற்காப்புப் புவிசார் அரசியல் நிலைப்பாட்டையை எடுக்க இயலும் என்பதை “சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம்” என்ற தலைப்பில் எழுதிய முன்னைய ஆய்வின் மூலம் ஐயந்திரிபற விளங்கிக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) ஆண்டொன்றிற்கு 20.81 trillion அமெரிக்க டொலர்களாகும். அதேவேளை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டொன்றிற்கு 14.86 trillion டொலர்களாக இருக்கிறது.  அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையிலான இந்த பொருண்மிய வலு அடிப்படையிலான வேறுபாட்டை உணர்ந்தறிவதற்காக இந்தியாவின் பொருமிண்மிய மதிப்பீட்டுச் சுட்டிகளை அறிந்துகொள்வது இங்கு தேவையாகிறது. அதாவது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டொன்றிற்கு 2.59 trillion டொலர்களாக இருக்கிறது.  இதிலிருந்து, இந்தியாவினதும் சீனாவினதும் பொருண்மிய வலுவினை ஒருசேரக் கூட்டிப் பார்த்தால் கூட அமெரிக்காவின் பொருண்மிய வலுவுடன் ஒப்பிடும் போது ஒரு மலைத்த வேறுபாட்டைக் காண முடியும்.

ஏனெனில், இரண்டாம் உலகப் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட நாள் முதலாக, உலகின் பொருண்மிய அடியாளாக இருந்து வரும் அமெரிக்காவானது தான் சுரண்டிச் சேர்த்த பொருண்மியமும் வறுகிச் சேர்த்த வளங்களும் கொள்ளையடித்த ஏராளமான சொத்துகளுமென அதனது பொருண்மிய வலுவென்பது ஒப்பிடமுடியாதளவு உயர்ந்தே காணப்படுகிறது. உலகச் சந்தையில் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தே சீனா அடங்கலான அத்தனை நாடுகளும் எண்ணெய் வளங்களை வாங்க இயலும். உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் மூலம் பாதுகாக்கப்படுவது அமெரிக்காவின் கட்டற்ற முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய மேலாதிக்க நலன்களே தவிர வெறொன்றுமில்லை.

இதனால், அமெரிக்காவின் பொருண்மிய வலுவானது அண்மித்த வருங்காலத்தில் வீழ்ந்தழியப் போவதில்லை. முதலாளித்துவ சந்தைப் பொருண்மியம் என்பது உலகின் பொருண்மிய உலகப் போக்காக இருக்கும் வரை அமெரிக்காவின் மேலாண்மை என்பது தொடரத்தான் செய்யும். ஆனாலும், முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருண்மிய வலுவேறுபாடானது குறைந்துவருவது தவிர்க்க முடியாத போக்காகும். ஆனாலும், அமெரிக்காவினை விஞ்சிய மேலாண்மையை சீனா பெறுவதென்பது, இந்த முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய உலக ஒழுங்கு நிலவும் வரைக்கும் வாய்ப்பற்றதொன்றே.

எனினும், அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டிற்கு தான் வரைந்த எல்லைக்கோட்டைத் தாண்ட முடியாதவாறு அமெரிக்கா மட்டுப்படுத்தல்களைச் செய்யும் போது, தனது முதலீடுகளை மூன்றாமுலக நாடுகளின் பக்கம் சீனா திருப்பியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில், உலகப் பெருநிறுவனங்களுக்கும் சேர்த்து உலகின் மிகப்பெரும் உற்பத்திக்கூடமாக விளங்கிவருவதால் தான் ஈட்டிய வருவாயை சீனாவிலே வைத்திருப்பது சீனாவைப் பொறுத்த வரையில் உகந்ததல்ல. ஏனென்றால், சீனாவின் நாணயமான யுவான் நாணயமானது முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் மதிப்புமிக்கதாக இல்லை. அதனாலேயே, சீனாவானது கையிருப்பை அதிகப்படுத்தாமல், வெளிநாடுகளில் டொலர்களில் முதலிட முனைகிறது. ஆனால், அமெரிக்காவின் நாணயப் பெறுமதி காரணமாக, கையிருப்பில் தனது பணத்தை வைத்திருப்பதில் அமெரிக்காவிற்குச் சிக்கல் இல்லை.

இதன் விளைவாக அதிகரித்த சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளானவை கடந்த சில மாதங்களிற்கு முன்பு அமெரிக்காவின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் காட்டிலும் சற்று விஞ்சிவிட்டது. இதனால், அமெரிக்காவினை சீனா பொருண்மிய வலுவில் விஞ்சி விட்டது எனச் சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானதே.

தொகுத்துக்கூறின், முதலாளித்துவ சந்தைப் பொருண்மியம் என்ற உலகப்போக்கு நிலைத்திருக்கும் வரை அமெரிக்காவின் மேலாண்மையையும் பொருண்மிய வலுவையும் எந்தவொரு நாட்டினாலும் மேவிவிட முடியாது என்பதும், சீனாவின் அமைவிடம் என்பது சீனாவிற்கு மிகவும் பின்னடைவானது என்பதால் அதனால் புவிசார் அரசியலில் எதையும் புரட்டிக்காட்டிவிட முடியாதென்பதும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளிற்கும் இந்தியாவிற்கும் நன்கு தெரியும்.

எனினும், புவிசார் அரசியலில் சீனாவின் தற்காப்பு முயற்சிகளை சீனாவின் வன்வளைப்பு என மிகைப்படுத்தி சீனப்பூச்சாண்டி அரசியலை அவர்கள் செய்வதென்பது அவர்களின் ஆளும்வர்க்க நலன்களின் சந்தைவெறிக்கு மேலும் மேலும் வழிதேடும் ஒரு உத்தியே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா விடயத்தில் நடந்தேறுபவையும் அத்தகைய அரசியலே. அதாவது, இந்தியாவும் அமெரிக்காவும் சிறிலங்கா மீதான தமது மேலாதிக்கத்தை நியாயப்படுத்துவதற்காக சீனாவினைக் காரணங் காட்டுகின்றன. “சீனா புகுந்துவிடும் என்பதால் நாங்கள் காலடி பதிக்கிறோம். சீனா புகுந்துவிட்டதனால் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு நாங்கள் போக வேண்டிய இன்றியமையாச் சூழலிற்குள் இருக்கிறோம்” என்ற பாணியிலான அரசியலையே இந்திய மற்றும் அமெரிக்கா முன்னெடுக்கின்றன.

ஜே.வி.பி கலவரத்தை அடக்க சிறிலங்காவிற்கு ஓடோடி வந்து முண்டுகொடுக்கும் பாசாங்கில் தனது படை வளங்களை சிறிலங்காவிற்குள் இறக்கிய இந்தியாவானது அன்று சீனாவைக் காரணங்காட்டவில்லை. இந்தியாவானது 1987 இல் இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தைப் போட்டு சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த வந்தபோதும் சீனா காரணங்காட்டப்படவில்லை.  தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியால் சிறிலங்கா நலிவடைந்து கிடக்கும் போது 1997 களிலிருந்து சிறிலங்காவைப் காப்பாற்றுவதற்கு இந்தியாவானது “நாங்கள் போகாவிட்டால் சீனா போய்விடும்” என்று கூறித் தன்னை நியாயப்படுத்த வேண்டிய தேவையில் இந்தியா இருக்கவில்லை. அமைதிப்பேச்சுத் தொடங்கியதிலிருந்து தமிழர்களின் நிழலரசை அழித்தொழிப்பதற்கான வேலைகளை அது முடுக்கிவிடும் வரை சீனாவைக் காரணங்காட்டவில்லை. ஆனால், தமிழினவழிப்பில் இந்தியாவே முதன்மைக் குற்றவாளி என வெளிப்பட்டுப்போனதன் பின்பாக நடந்த போராட்டங்களினால் இந்தியா அம்பலப்பட்டுப் போகத் தொடங்கியதுமே சீனாவைக் காரணங்காட்ட வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழுந்தது. போரின் பின்பான மீள்கட்டுமான ஒப்பந்தங்களில் தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டு போரின் பின்பாக தமிழீழதேசத்தைத் தனது காலனியாக்குவதற்குச் சீனாவைக் காரணங்காட்ட வேண்டிய தேவையானது முன்னெப்போதும் இல்லாதளவிற்கு இந்தியாவிற்கு இன்றுள்ளது.

Newyork Times, London Times, Janes போன்ற ஏகாதிபத்திய ஊதுகுழல்களும் இந்தியாவின் வெளியக உளவுப் பிரிவான RAW வின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னைய தலைவருமான. பி.ராமன் போன்றோரின் சூழ்ச்சியானதும் உண்மைக்குப் புறம்பானதுமான புலனாய்வுக் கருத்தேற்றங்களும், அவற்றை அடியொற்றிய கட்டுரைகளும், ஆய்வுகளும், கருத்துக்களங்களும் சீனாவைப் பற்றிய மிகைப்படுத்திய பரப்புரைகளைச் செய்து, சீனாவானது பிற நாடுகளின் மீது வன்வளைப்பிற்குச் சற்றொப்பான மேலாதிக்கத்தைச் செய்வதாகக் காட்டியவாறு அதனைத் தடுப்பதற்காகவே தாம் பாய்ந்தடித்து நாடுகளிற்குள் இறங்குவதாக அமெரிக்காவும் இந்தியாவும் கதையளக்கின்றன. இந்தக் கதையளப்பின் அரசியலே சீனப்பூச்சாண்டி அரசியலாகும். இது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினதும் இந்தியாவினதும் மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கான அரசியலாகும்.

-களநிலைவர ஆய்வு நடுவம்-

தொடரும்……………………..

குறிப்பு: கீழ்வரும் வினாக்களிற்கான விடைகள் அடுத்தடுத்து வரும் தொடர்களாக வெளிவரும்.

சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?

இந்தியாவின் “சீனப்பூச்சாண்டி” பரப்புரையும் ஈழத்தமிழர் அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்

Loading

(Visited 20 times, 1 visits today)