கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 3-

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த அரசியல் என்ன?

சிறிலங்காவில் சீன நிறுவனங்கள் மூலமான சீனாவின் முதலீடுகள் பற்றிய பேச்சுகள் 2011 ஆம் ஆண்டின் பின்பே குறிப்பிடத்தக்களவிற்குப் பேசுபொருளாகத் தொடங்கியது. சீனாவின் அத்தகைய முதலீடுகளாக அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம், ராஜபக்ச விளையாட்டரங்கு, நுரைச்சோலை அனல்மின் நிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் என்பவை குறிப்பிடத்தக்கன. இவற்றில் சீனாவின் முதலீடுகளுக்குப் பெரும் பங்கு உண்டு.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம்

இந்த மின்னுற்பத்தி நிலையத்தினை விரிவாக்கி அதனது மின்னுற்பத்தியாற்றலை அதிகரிப்பதற்கான திட்டத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது 2006 ஆம் ஆண்டு சீனாவை அணுகி கடன்வழங்குமாறு கோரியது (அப்போது, புலிகளை அழித்தொழிக்க இந்தியா மற்றும் மேற்குலக கூட்டுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒட்டுறவாடி வந்த காலம் என்பதை நிலைவில் கொள்ளலாம்).

இத்திட்டத்திற்கு கடனளிக்க முன்வந்த சீனாவின் Export-Import Bank of China என்ற நிறுவனத்தோடு அப்போதைய சிறிலங்கா அரசாங்கமானது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தத் திட்டத்திற்கான 85% முதலீட்டை சீனாவே மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway)

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பையும் சிறிலங்காவின் தெற்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையான இத்திட்டமானது 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது (இந்தியா மற்றும் மேற்குலகுடன் சிறிலங்காவானது ஒட்டானவுறவுடன் இருந்த காலம்). இந்தத்திட்டத்திற்கு கடன் வழங்குமாறு சீனாவை அணுகிய சிறிலங்கா அரசிற்கு கடன் வழங்க China Exim Bank முன்வந்தது. China Aviation International Engineering Corporation மற்றும் China Construction Corporation and China Harbour Engineering Construction Company ஆகிய சீன நிறுவனங்களிற்கு இந்தச் சாலையமைப்புக் கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

உண்மையில் பெரும் பணச்செலவில் இப்படியான நெடுஞ்சாலை அமைக்கும் தேவை எந்தவொரு அடிப்படையிலும் சிறிலங்காவுக்கு இருக்கவில்லை. கொழும்பிலிருந்து சிறிலங்காவின் தெற்கிற்கு விரைந்தோடி, அதுவும் வெறும் 136 கிலோ மீட்டர் தொலைவை விரைந்தோடி, எதையுமே பெரு நன்மையாகப் பெற முடியாது.

உண்மையில், தனது சொந்த ஊரில் தனது பெயரில் வானூர்தி நிலையம் அமைத்து, அதனை இலாபமீட்டக்கூடிய ஒன்றாக இயக்குவதற்கும், தனது சொந்த மாவட்டத்தை கொழும்பிற்கு நிகரானதாக்குவதற்குமாக தன்முனைப்பில் ராஜபக்ச மேற்கொண்ட திட்டமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

Lotus Tower

350 மீட்டர் உயரமான மொட்டு வடிவிலான இந்தக் கோபுரமானது தெற்காசியாவிலேயே மிகவுயர்ந்த கோபுரமாகவுள்ளது. இதற்கான மொத்தச் செலவு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 80% ஆன முதலீடுகளை சீனாவே மேற்கொண்டது. உணவு விடுதிகள், தங்ககங்கள், மாநாட்டு மண்டலபம், கடைத்தொகுதிகள் போன்ற பல இந்தக் கோபுரக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், இதன் முதன்மைத் தொழிற்பாடாக சிறிலங்காவின் எண்சார் தொழினுட்ப தொலைக்காட்சிக் கோபுரமாக (Digital TV Tower) தொழிற்படவிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இந்தக் கோபுரத்தை அமைக்கும் ஒப்பந்தமானது சிறிலங்காவிற்கும் China National Electronics Import and Export Corporation (CEIEC) என்ற சீன ஒப்பந்த நிறுவனத்திற்குமிடையில் கைச்சாத்தானது.

இது போன்ற மிகவுயரமான கோபுரங்களை அமைத்துத் தமக்குப் புகழ்சேர்க்கவும் தமது பெயரையும் அடையாளங்களையும் நிறுவுவதற்குமே தமக்கான செல்வாக்கைப் பயன்படுத்த முனையும் ராஜபக்சவின் தலைகால் புரியாத தன்முனைப்பின் வெளிப்பாடாகவே இந்தத் திட்டத்தையும் நோக்க வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற பண்டாரநாயக்க குடும்பச் சொத்திற்கு மாற்றாகத் தனது ராஜபக்ச குடும்பத்தின் சொத்தாக தனது அரசியல் கட்சியை வரலாற்றில் நிறுத்திவிடும் முனைப்புடனே அவரது கட்சியின் சின்னமான மொட்டுச் சின்னத்தில் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டது. போரின் பின்பான மீள்கட்டுமானங்களில் கூடுதலாக முதலீடுகளைச் செய்து, சிதைவடைந்திருந்த நிலையிலிருந்த சிறிலங்காவின் பொருண்மியத்தை மீட்பதற்குப் பதிலாக, ராஜபக்ச கொழும்பின் நடுவில் அடையாளச் சிக்கலிற்காகவும் தன்முனைப்பிற்காகவும் மேற்கொண்ட திட்டமாகவே இந்தக் கோபுர உருவாக்கத்தைப் பார்க்க வேண்டும். இது போன்ற திட்டங்களுக்கு பெறப்படும் கடன்களிற்கான வட்டியைச் செலுத்தக் கூடிய அளவிற்கேனும் வருவாய் ஈட்டித்தர வக்கற்ற திட்டங்களாலே சிறிலங்காவானது கட்டுமானத் திட்டங்களால் கடனாளியானது.

அம்பாந்தோடைத் துறைமுகம்

கொழும்புத்துறைமுகத்தை கூடுதலான மிகப்பெரிய கொள்கலங்களைக் கையாளக்கூடிய வகையில் விரிவுபடுத்த வேண்டுமென சிறிலங்கா அரசு முடிவெடுத்த போது, துறைமுகத்தை விரிவாக்கத் தகுந்த போதுமான நிலங்கள் (Hinterland) கொழும்புத்துறைமுகத்தைச் சுற்றிலும் இல்லையென்று கருத்திட்டக்குழு அறிக்கையிட்டது. அதனால் மாற்றை நோக்கி சிறிலங்கா அரசு எண்ணத்தலைப்பட்டது. அதன் விளைவாக கொழும்புத்துறைமுகத்தின் நீட்சியாகக் கொள்ளத்தக்க வகையில் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்கலாமா என சிறிலங்கா அரசு 2000 ஆம் ஆண்டின் தொடக்ககாலத்தில் சிந்தித்தது.

அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்க முடியுமா என்பது குறித்து தொழினுட்ப மற்றும் பொருண்மிய அடிப்படையிலான செயலாக்க ஆய்வினை (Feasibility Study) மேற்கொள்வதற்காக கனடாவின் Canadian International Development Agency என்ற நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட SNC- Lavalin என்ற கனடாவின் புகழ்பெற்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனமானது சிறிலங்கா அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டது.

அந்த நிறுவனமானது 2003 ஆம் ஆண்டு ஒப்படைத்த செயலாக்க ஆய்வறிக்கையில் (Feasibility Study Report), அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பது செயலாக்கமுடையது என்றும் அது பொருண்மிய அடிப்படையில் வெற்றியளிக்க வேண்டுமெனில் கட்டுமானம் செய்து இயக்கிப் பின் கையளித்தல் என்ற அடிப்படையிலான கூட்டு ஒப்பந்தத்தை (Joint Venture) சிறிலங்கா அரசு வெளிநிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டது.

இரண்டாவது தடைவையாக இது தொடர்பான செயலாக்க ஆய்வினை மேற்கொண்ட டென்மார்க்கின் Ramboll என்ற கட்டுமான பொறியியல் நிறுவனமும் கனடாவின் SNC- Lavalin என்ற நிறுவனம் மேற்கொண்ட அதே ஆய்வின் முடிவையே 2006 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியது.

ஆனாலும், சிறிலங்காவின் பொருண்மியம் பெரும் இடர்பாட்டில் இருந்தமையால் இந்தத்திட்டம் உடனே செயற்பாட்டிற்கு வராமல் கிடப்பிற் கிடந்தது. அதன் பின்பாக, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், கொழும்பிற்கு இணையாகத் தன்னுடைய ஊரினை மாற்றித் தனது பெயரை நிலைநிறுத்தும் தன்முனைப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயன்றார். அதனால், கனடா மற்றும் டென்மார்க்கின் பொறியியல் நிறுவனங்கள் மேற்கொண்ட செயலாக்க ஆய்வறிக்கையை கையிலெடுத்துக்கொண்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுக உருவாக்கற் திட்டத்திற்கு நிதியளிக்குமாறு அமெரிக்கா மற்றும் இந்தியாவினை ராஜபக்ச அணுகினார். உலகின் மிகவும் சிறந்த வசதிகளைக் கொண்ட சிங்கப்பூரினூடாகப் பயணிக்க வேண்டிய கப்பல்களானவை அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை அடைந்து செல்ல வேண்டிய தேவை எதுவும் இருக்காதென்பதையும், கொழும்புத்துறைமுக நெரிசலைக்குறைக்க மட்டுமே பயன்படக் கூடிய இத்துறைமுகத்தை நோக்கிக் கப்பல்களைத் திருப்பினால் அதில் எத்தனை கப்பல்கள் இதற்கு உடன்படும் எனவும் ஐயப்பட்டு, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் முதலிட அமெரிக்கா மற்றும் இந்தியா (இப்போது பட்டுப்பாதையின் கேந்திர முதன்மை என படம் காட்டுகிறார்கள்) ஈடுபாடு காட்டவில்லை. ஆனால், தன்னுடைய ஊரில் துறைமுகம் அமைக்கும் தன்முனைப்பில் மகிந்த ராஜபக்ச சீனாவினை அணுகி அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் முதலிடுமாறு கோரினார்.

China Exim Bank என்ற சீன நிறுவனம் இதற்கு நிதியளிக்க முன்வந்ததோடு China Harbour என்ற சீன கட்டுமான ஒப்பந்த நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டது. முதற்கட்டமாக 307 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அடுத்த கட்டமாக 757 மில்லியன் அமெரிக்க டொலர்களும் என பெருந்தொகைப் பொருட்செலவில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைக்கப்பட்டும், அதனால் பெற்ற கடனிற்கு வட்டியைக் கட்டக்கூடிய அளவிற்குக் கூட வருவாயை ஈட்ட முடியவில்லை. இதனால், இந்தத் துறைமுகத்தைக் கூட்டாக அபிவிருத்திசெய்து இயக்குவது என China Harbour மற்றும் China Merchants என்ற சீன நிறுவனங்களுடன் 35 ஆண்டுகளிற்குக் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டது சிறிலங்கா அரசாங்கம்.

ஆனாலும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்காகப்  பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் இந்தத் துறைமுகத்தை வருவாயீட்டக்கூடிய வகையில் வழிவகைசெய்ய முடியாமலும் மைத்திரி- ரணில் அரசாங்கமானது (மேற்குலகிற்கு உவப்பான அரசாங்கம்) அம்பாந்தோட்டதைத் துறைமுகத்தை, அதற்குப் பெரும் கடன் வழங்கிய China Merchants என்ற நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுத்தது. சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில் வெறும் 5% கடனே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தால் ஏற்பட்டது என 2017 ஆம் ஆண்டு அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியிருந்தார். எனின் மீதிக்கடன்களில் பெரும்பாலானவை தனது ஆற்றல்வளத்திற்கு முடியாததான விடுதலைப் புலிகளை அழித்தல் என்பதற்காக உலக நாடுகளிடம் தன்னை ஈடுவைத்துச் சிறிலங்கா பெற்ற கடன்கள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

மத்தள ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம்

209 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அம்பாந்தோட்டை நகரிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வானூர்தி நிலையக் கட்டுமானத்தில் 190 மில்லியன் அமெரிக்க டொலரை Exim Bank of China என்ற சீன நிறுவனம் முதலிட்டு இதற்கான கட்டுமானப் பணிகளை 2009 இன் இறுதியில் தொடங்கியது. 2013 இல் இந்த வானூர்தி நிலையம் இயங்கத் தொடங்கினாலும் உலகின் வெறுமையான வானூர்தி நிலையம் (World’s Emptiest Airport) எனப் பெயரெடுத்தது.

இதனால் ஆண்டுக்கு 18 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை இந்த மத்தள வானூர்தி நிலையம் ஏற்படுத்தியது. இதனால் இதனை மேற்கொண்டு இயக்க முடியாத மைத்திரி- ரணில் அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்த வானூர்தி நிலையத்தை இயக்க முடிவுசெய்து கூட்டு ஒப்பந்தத்திற்கான கோரலைச் செய்தது. இதில் இந்தியாவின் வானூர்தி நிலையங்கள் அதிகார அவை தாம் சிறிலங்காவுடன் இணைந்து தோல்வியடைந்திருக்கும் மத்தள வானூர்தி நிலையத்தை இயக்க முன்வருவதாகக் கூறி பேச்சுகள் தொடர்ந்து வருகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை அமைக்கவே கூடாதென பொருளியலாளர்கள் முதல் சுற்றுச் சூழலியலாளர்கள் வரை அனைவரும் மகிந்த ராஜபக்சவிற்கு படித்துப் படித்துக் கூறியும் தனது சொந்த ஊரில் வானூர்தி நிலையத்தை அமைத்து கொழும்புக்கு நிகர் நகராகத் தனது ஊரான அம்பாந்தோட்டையை அமைத்துக்காட்டுவேன் என தன்முனைப்பில் ஆடிய ராஜபக்சவின் இந்த முதலீடும் தோல்வியைத் தழுவியது. இப்போது காட்டு யானைகளே அந்த வானூர்தி நிலைய வளாகத்தில் அதிகமாக நடமாடுகின்றன. எனவே, தவறான முதலீட்டுத் தெரிவுகளைச் செய்து அதற்குக் கடன் வழங்குமாறு சீனாவை அணுகிக் கடன்பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் புத்திபேதலிப்புகளையும் தோல்விகளையும் சீனாவின் “கடன் பொறி” என சீனாவின் திணிப்புப் போல கதையளப்பது என்பது யாரின் நலனிற்கானது?

கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City)

கொழும்புத் துறைமுக நகரமானது கடல்நீரை வெளியேற்றி அப்பகுதியை நிலப்பரப்பாக செயற்கையாக உருவாக்கிக் கட்டியெழுப்பப்பட்ட நகரமாகும். இது 269 கெக்டெயர் (660 ஏக்கர்) பரப்பளவுடைய நிலத்துண்டாகும். இந்த நகரமானது உண்மையில் ஒரு சிறப்புப் பொருண்மிய மண்டலமாக (Special Economic Hub), இன்னும் சொல்லப்போனால், நிதி நகரமாக (Financial City) செயற்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலேயே உருவாக்கப்பட்டது.

துபாய், கொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் எப்படிச் சிறப்புப் பொருண்மிய மண்டலங்கள் தொழிற்படுகின்றனவோ அந்த வகையில் மேற்குலகிலிருந்து கிழக்குலகிற்குப் பயணப்படக்கூடிய வழித்தடத்தில் ஒரு சிறப்புப் பொருண்மிய மண்டலமாக இந்தக் கொழும்புத் துறைமுக நகரம் அமைய வேண்டுமென்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விரும்பியது. 2011 இல் தொடங்கிய இத்திட்டம் நிதி வழங்கலில் ஏற்பட்ட சுணக்கங்களால் முன்னகராமல் இருந்தாலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதற்கட்டமாக சீனா நிதியளிக்க China Harbour Engineering Company என்ற நிறுவனமானது கடல்நீரை வெளியேற்றி செயற்கையாக நிலத்துண்டாக்கும் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. இப்போது இந்தத் துறைமுக நகரத்திற்கான நிலத்துண்டு செயற்கையாக உருவாக்கி முடிக்கப்பட்டுள்ள நிலையில், துறைமுக நகரத்தைக் கட்டுமானம் செய்வதற்காக மேலும் 13 பில்லியன் டொலர்களை முதலிட சீனா முன்வந்துள்ளது. 269 கெக்டெயர் மொத்த நிலப்பரப்பில் 88 கெக்டெயர் நிலப்பரப்பை சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்தாகியுள்ளது.

இந்தத் துறைமுக நகரமானது உற்பத்திச் செயற்பாடுகளிற்கானதல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் கூறுகிறது. இங்கு களியாட்ட விடுதிகள், கடைத் தொகுதிகள், தங்ககங்கள், பொழுதுபோக்கு வசதிகள், உணவகங்கள் மற்றும் ஒய்யாரமான ஏனைய பல விடயங்கள் என அமையவிருக்கின்றதெனினும், இதனை நிதிநிறுவனங்களிற்கான தளமாக உருவாக்குவதிலேயே சிறிலங்கா தனது முழு அக்கறையையும் செலுத்துகிறது.

இதனை உலகின் இரண்டாவது துபாய் ஆக மாற்ற முடியுமென சிறிலங்கா அரசாங்கம் சிரிப்பூட்டக்கூடிய வகையிலான நம்பிக்கை கொண்டுள்ளது. துபாய், கொங்கொங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நிதி நகரங்களில் இருக்கும் சிறப்புப் பொருண்மிய மண்டலங்களினைத் தாண்டி இந்தக் கொழும்புத் துறைமுக நகரம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்பது நடைமுறையில் நிகழ்ந்தேறக் கூடிய விடயமல்ல. இப்படியான மிகப்பெரும் செலவில் அமைக்கப்படும் இந்தத் துறைமுக நகரமானது ஆனை கட்டி தீனி போட்ட கதையாகவே முதலீட்டாளர்களிற்கும் சிறிலங்கா அரசிற்கும் அமையும்.

ஏனெனில், துபாய் மற்றும் சிங்கப்பூரில் முதலிடக் கூடிய வாய்ப்புகளைத் தாண்டித் தொடர்தோல்வித் திட்டங்களால் துவண்டு கிடக்கும் சிறிலங்காவில் அமையும் வெற்றிவாய்ப்பற்ற இந்தத் துறைமுக நகரத்தில் முதலிட எந்த முதலீட்டாளர்களும் முன்வர மாட்டார்கள்.

ஏனெனில், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சிறப்புப் பொருண்மிய மண்டலங்களில் சிறப்புச் சலுகைகளும் ஏற்பாடுகளும் முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய முதலாளிகளைக் கவரும் தன்மையில் அமைந்துள்ளது. அங்கு வணிக விடயங்களில் ஏற்படும் பிணக்குகளைத் (Disputes) தீர்க்க அந்த நாட்டு நீதிமன்றுகளை அணுகத் தேவையில்லை. ஏனெனில், பொது நீதிமன்றுகள் வணிகச் சிக்கலைத் தீர்க்க நிபுணர் குழு (Expert Committee) அமைத்துத் தீர்வுகாண நீண்டகாலமாகும் என்பதால், அத்தகைய நடைமுறைகள் அந்த வணிகங்களை மிகவும் பாதிக்குமென முதலீட்டாளர்கள் கருதுவர். அதனால் பிணக்குகளிற்கான மாற்றுத்தீர்வுப் பொறிமுறைகளை (Mechanism for Alternative Dispute Resolution) அமைத்து அவற்றிற்கு அதிகாரமளித்து சிக்கல்களைத் தீர்க்க நீதிமன்றமும் பொதுச்சட்டமும் செல்லாது என்ற ஏற்பாடுகளை சிறப்புப் பொருண்மிய மண்டலங்களில் செய்வார்கள். அலைச்சல் இல்லாமல் இயன்றளவிற்கு ஒரே இடத்தில் விரைவுத் தீர்வு பெறும் வழிவகைகளை (Single Seat Solutions) இப்படியான பொருண்மிய மண்டங்களில் சிறப்பு ஏற்பாடுகளாகச் செய்வர். வெளிநாட்டு நாணயங்கள் அங்கு புழக்கத்தில் இருக்கும்.

எனவே, இந்தச் சிறப்பு ஏற்பாடுகளிலும் பார்க்க கூடுதலான ஏற்பாடுகளைச் செய்து முதலீட்டாளர்களைக் கொழும்புத் துறைமுக நகரம் நோக்கிக் கவர்ந்திழுப்பது நிகழ்ந்தேறக் கூடிய ஒன்றல்ல. எனினும், சிறிலங்கா தனது பங்கிற்கு ஒரு முயற்சி செய்து பார்க்கிறது. அதனால் கொழும்புத் துறைமுக நகர பொருண்மிய ஆணைக்குழு (Colombo Port City Economic Commission) என்பதை அமைத்து அதற்கு அதிகாரமளிக்கப்பட்டு, முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் வணிகம் செய்ய இலகுவான இடமாக (Place for ease of doing business) இந்தத் துறைமுக நகரத்தைக் காட்ட முயல்கிறது சிறிலங்கா அரசாங்கம்.

இப்படியான ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரம் சனாதிபதிக்குத் தான் இருக்கிறதே தவிர பாராளுமன்றிற்கில்லை என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பைத் தெரிந்தவர்களுக்கும் இதுவரை அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நடைமுறைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும். அத்துடன் வழக்கமாக பொருண்மிய மண்டலங்களில் நடைமுறையில் வெளிநாட்டு நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டாலும், அங்கு அமெரிக்க டொலர் தான் நடைமுறையில் இருக்கும். ஆனால் கொழும்புத்துறைமுக நகரத்தில் சீனாவின் யுவான் தான் புழக்கத்தில் இருக்கப் போகும் நாணயம் என ஊடக மூடர்கள் பரப்புரை செய்வதும் அதையெல்லாம் கிழித்துப்போடாமல் வாசகர்கள் நம்புவதும் கவலை தரும் விடயங்களே.

கொழும்புத் துறைமுக நகரமானது படுதோல்வியடையக் கூடியது என மேற்போந்த விடயங்கள் மூலம் விளங்கிக்கொள்ளலாம். எனவே, ஒய்யாரம் என்ற பதாகையின் கீழ் உருவிவிடுதல்/ நீவிவிடுதல் (Massage) என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதற்கும், சூதாட்டங்களிற்கான நடுவமாகக் கொழும்புத் துறைமுக நகரம் மாறிப்போகுமென எதிர்வுகூறலாம். சிறிலங்காவின் பொருண்மிய நிலைவரமானது அப்படி எதிர்வுகூறுமாறே எமக்குச் சொல்கிறது.

மேற்குலகிற்கு மிகவும் உவப்பான மைத்திரி- ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மேற்குலகின் வழிகாட்டலில் திறந்தசந்தைப் பொருளியலுக்கான மிகத்தாராளமான மண்டலமாக சிறிலங்காவைத் திறந்துவிட வழிகோலும் “Vision- 2025” என்ற திட்டத்தை தீட்டினார்கள். இதில் சிறிலங்காவை ஒரு பொருண்மிய மண்டலமாக்குவது (Economic Hub) எப்படியென்றும், அதனை நடைமுறையில் வெற்றியளிப்பதானதாக மாற்ற அரசியலமைப்பு முதற்கொண்டு என்னவகையான மாற்றங்களைச் செய்ய வேண்டுமென பல தீட்டங்களைத் தீட்டினார்கள். “Vision- 2025” இனை வெற்றியடையச் செய்வதை நோக்காகக்கொண்டே ரணில்- மைத்திரி ஆட்சியில் நடந்த சட்டத் திருத்தங்கள் முதல் அனைத்தும் அமைந்திருந்தன என்று கூறுவதில் மிகையில்லை.

எனவே, இப்போது இந்த கொழும்புத் துறைமுக நகர பொருண்மிய ஆணைக்குழு சீனாவிற்காக அமைக்கப்பட்டதொன்றாக மட்டும் வரலாற்றில் இருந்துவிடப் போவதில்லை. சிங்கள மக்கள் நாட்டின் பொருண்மிய நிலை குறித்து ஒவ்வொரு மணித்துளியும் உணரத் தலைப்படுகிறார்கள். இந்த ஆட்சியில் வெறுப்புக்கொள்ளவும் தொடங்கிவிட்டார்கள். அதனால், மேற்குலகிற்கு உவப்பான ஆட்சிமாற்றத்தை அடுத்த முறை உறுதியாக எதிர்பார்க்கலாம். எனின், “Vision -2025) நடைமுறைக்கு வரத்தான் போகிறது. அப்போது, இப்படிப் பல ஆணைக்குழுக்கள் தோன்றும். சிறிலங்கா ஒரு சூதாட்டக் களமாக மட்டுமல்ல அதற்கு மேலும் சென்று தன்னைத்தானே துயிலுரிந்துகொள்ளும்.

மேற்போந்த விளக்கங்களிலிருந்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, Lotus Tower, அம்பாந்தோடைத் துறைமுகம், மத்தள ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற அனைத்தும் எந்தவொரு பொருண்மியத் திட்டமிடல் இல்லாமலும் சிறிலங்காவின் தேவை கருதாமலும் முழுக்க முழுக்க ராஜபக்சவின் தன்முனைப்பிலும் அவரது அரசியல் நலன்களிற்காகவும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐயந்திரிபற விளங்கிக்கொள்ளலாம். இப்படியான திட்டங்களில் முதலிடுவதற்கு மேற்குலகும் இந்தியாவும் முனைப்புக் காட்டவேயில்லை. இதனை மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். எந்தவொரு ஒப்பந்தமென்றாலும் இந்தியாவிடமும் அணுகி, அவர்கள் முதலிடுவதற்கு ஈடுபாடு காட்டாதுவிட்ட பின்பே சீனாவை அணுகியதாக அவர் பலமுறை தெரிவித்துள்ளார். இப்படியான உட்கட்டுமான திட்டங்களில் முதலிட்டு, தமது முதலீட்டு நிபந்தனைகளில் ஒன்றான தமது நிறுவனங்களைப் பணிக்கமர்த்தி அதன் மூலம் கொடுத்த கடன் தொகையின் கணிசமான அளவை வருவாயாகவும் பெற்று முன்னகரக் கூடிய ஒரே நாடு சீனா தான். ஏனெனில், தமது நிறுவனங்களை கட்டுமான மற்றும் கட்டடப் பொருட்களை வழங்கும் ஒப்பந்ததாரர்களாகத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற வணிக நோக்கை முதன்மையாகக் கொண்ட நிபந்தனையை மட்டுமே முன்னிறுத்தி ஒப்பீட்டளவில் குறைந்த வட்டிக்கு பெருந்தொகைக் கடனை வழங்கக் கூடிய ஆற்றலானது, வினைத்திறனானதும் மலிவானதுமான தொழிற்சந்தையைக் கொண்ட சீனாவுக்கே உண்டு. அதனாலே இன்று உலகளவில் உட்கட்டுமானத் திட்டங்களில் சீனாவுக்குப் போட்டியாக எவராலும் கிட்டவும் நிற்க முடியவில்லை. அமெரிக்காவிலுள்ள 28 Liberty Street, Baccarat Hotel, General Motors Building போன்ற கட்டடங்கள் சீனாவின் முதலீட்டில் முழுக்க முழுக்க அமைக்கப்பட்டவை என்பதோடு அமெரிக்கா முழுவதும் குறிப்பாக New York நகரத்தில் ஏராளமான கட்டட ஒப்பந்தங்களைப் பெற்று அதில் பாரியளவு முதலீட்டையும் சீனா செய்துள்ளது. எனில், தனது தன்முனைப்பிலான உட்கட்டுமானத் திட்டங்களின் கட்டுமானத்திற்காக சீனாவை அணுகுவதுதான் ராஜபக்சவின் தெரிவாக இருந்திருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதன் மூலம் சீனாவின் திணிப்பு என்ற போலிப்பரப்புரையைப் புறந்தள்ளி, சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் மடைத்தனமான முதலீடுகளுக்காக அவர்களே சீனாவை அணுகினார்கள் என்பதைத் தெரிந்து தெளிய வேண்டும்.

-களநிலைவர ஆய்வு நடுவம்-

தொடரும்………………………

குறிப்பு: கீழ்வரும் வினாக்களிற்கான விடைகள் அடுத்தடுத்து வரும் தொடர்களாக வெளிவரும்.

சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம் என்ன?

சீனப்பூச்சாண்டி அரசியலின் பின்னணி என்ன?

சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?

இந்தியாவின் “சீனப்பூச்சாண்டி” பரப்புரையும் ஈழத்தமிழர் அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்

 

 1,933 total views,  3 views today

(Visited 34 times, 1 visits today)