கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 2

சீனா வழங்கும் கடன்களின் பின்னணிகள்  எவை?

தனது வினைத்திறன்மிக்கதும் மலிவானதுமான தொழிற்சந்தையை மட்டுமே பெருமளவில் நம்பி முதலாளித்துவ சந்தைப்பொருண்மியத்திற்குள் காலடியெடுத்து வைத்த சீனாவானது, பெரு நிறுவனங்களின் உற்பத்திக்கூடமாக முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் தனது வகிபாகத்தை வளர்த்தெடுத்ததோடு, உலகின் பெருநிறுவங்களின் தொகையுற்பத்திக்கேற்ற (Mass Production) மலிவான தொழிற்சந்தையைக் கொண்டதாகவும், தற்போதைக்கு மாற்றேதும் இல்லையென்ற அளவிற்கு உலகப் பெருநிறுவனங்களின் உற்பத்திக்கூடத்திற்கான ஒரே தெரிவாக சீனா உருவெடுத்தது. இதனால் சீனாவின் வருவாய் பன்மடங்கு அதிகரித்ததுடன் அதன் கையிருப்பு நிதிமூலதனமாகத் திரண்டது. இதன் தொடர்ச்சியாக சீன அரசிற்குச் சொந்தமான உற்பத்தி நிறுவனங்கள் உருவாகியதோடு, அந்த நிறுவனங்களின் உற்பத்திப் பெருக்கமானது உலகின் தரச் சந்தையையும் மலிவுச் சந்தையையும் தனது உற்பத்திகளால் வன்வளைத்தது. உலகெங்கிலும் சீனாவின் பொருட்களை நுகராத ஒருவரேனும் இலர் என்பதாக சீனாவின் உற்பத்திகள் முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் முதன்மை வகிபாகமாற்றின.

இதன் தொடர்ச்சியாக திரண்ட வருவாயானது கையிருப்பிலிருப்பது சீனாவின் நாணய மதிப்புக் குறித்த பார்வையினாலும் கணிப்புகளாலும் பயனற்றதென உணர்ந்த சீனாவானது, தனது வங்கிகள் மூலமும் நிதிநிறுவனங்கள் மூலமும் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வலுவான பொருண்மியம் கொண்ட நாடுகளில் கூடுதலான ஈடுபாட்டுடன் முதலீட்டில் ஈடுபட்டது.

அதிக வருவாயை ஈட்டக்கூடிய துறையாக இருந்த உட்கட்டுமான ஒப்பந்தங்களைப் பெறும் வணிகத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகானது 2000 ஆம் ஆண்டு வரையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. இந்த வணிகத்தில் தனது நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வினைத்திறன்மிக்க சுறுசுறுப்பான தொழிலாளர் வளத்தைக்கொண்டும் வெளிநாட்டு முதலீட்டுக்கென மிகக் கூடுதலான நூற்றுக்கூறில் ஒதுக்கப்பட்ட பெரிய நிதிவளத்தோடும் சீனாவானது உட்கட்டுமானத்துறையில் உலகெங்கிலும் வணிகமாற்ற மிகவலுவான காலடி எடுத்துவைத்தன சீனாவின் நிறுவனங்கள்.

2000 ஆம் ஆண்டில் உலகின் முதன்மையான 100 கட்டுமான நிறுவனங்களில் 19 அமெரிக்க நிறுவனங்களும் 41 ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களும், 9 சீனாவின் நிறுவனங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் உட்கட்டுமான வணிக வளர்ச்சியின் விளைவாக இன்று உலகின் தலைசிறந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களில் 27 நிறுவனங்கள் சீன நிறுவனங்கள் என்பதோடு வெறும் 9 அமெரிக்க நிறுவனங்களே இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

இப்படியாக, பில்லியன் கணக்கில் சீனாவானது அமெரிக்காவில் முதலிட்டதோடு, உலகில் அதிக வெளிநாட்டு முதலீடுகளைக் (Foreign Direct Investment) கொண்ட நாடாக அதுவரை இருந்த அமெரிக்காவை முந்தும் தறுவாயில் வெளிநாட்டு முதலீட்டில் சீனா இருந்தபோது, அமெரிக்காவினால் சீனாவிற்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலமும், சீன நிறுவனங்களில் முதன்மையானவற்றைக் கருப்புப்பட்டியலில் வைப்பதன் மூலமும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

அதனால் சீனாவானது அமெரிக்காவில் தனது முதலீடுகளை அதற்கு மேலும் அதிகப்படுத்தாமல், குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட மூன்றாமுலக நாடுகளை நோக்கித் தனது முதலீடுகளைத் திருப்பியது. அதுவரை, மூன்றாமுலக நாடுகளுக்கு உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் மூலம் கடன் வழங்கி அந்த நாடுகள் வரலாற்றில் மேலெழுந்துவிட முடியாதவாறான கட்டமைப்பு மாற்றங்களிற்கு (Structural Adjustments) உடன்பட வைத்து மேலும் மேலும் கடன் வழங்கி அந்த நாடுகளைக் கடன் பொறிக்குள் வைத்திருப்பதன் மூலம் உலக அரசியலிலும் வணிகத்திலும் தன்னை சார்ந்து மட்டுமே அந்த நாடுகளால் இயங்க முடியும் என்ற அளவில் அந்த நாடுகளின் முதுகெலும்பை முறித்துவிட்டு உலக வல்லாண்மையாளராக வலம்வந்த அமெரிக்காவிற்கு சீனா மூலம் புதிய சவால் எழுந்தது.

அதுவரை மாற்று இல்லாமல், அமெரிக்காவின் கைப்பாவை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியவாறு அமெரிக்காவின் மீளா அடிமைகளாக இருந்து வந்த நாடுகளிற்கு அவற்றில் இருந்து தப்பிக்கக் கிடைத்த ஒரு கடன் வழங்கும் நண்பனாக சீனாவை நோக்கித் திரும்பும் வாய்ப்புக் கிடைத்தது.

சீனா கடன்வழங்கும் போது எந்தக் கட்டமைப்பு மாற்றத்தையும் அந்த நாடுகளிடமிருந்து கோரவில்லை. வணிக நோக்கிலான உறவுகளைத் தாண்டி உலகரங்கில் தனக்குச் சார்பாக அந்த நாடுகளை அணிதிரளுமாறு மிரட்டவுமில்லை. இதனால் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிலிருந்து வாங்கிய கடனைத் திருப்பச் செலுத்துவதற்காக சீனாவிடம் கடன்பெற கடன்பொறியில் தவித்த நாடுகள் முனைப்புக்காட்டின. எனவே, இன்று சீனாவிடம் பெறப்பட்டதாக பல நாடுகள் வெளிப்படுத்தும் கடன் நூற்றுக்கூறில் பெருமளவிலானது அமெரிக்காவின் கைப்பாவை அமைப்புகளினால் தாம் அடைந்த கடன்சுமையிலிருந்து விடுபடுவதற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடனாகவே இருக்கிறது.

அத்துடன், சீனாவானது உட்கட்டுமானங்களிற்காக முதலிடுவதிலும் கடன்வழங்குவதிலுமே கூடுதல் ஈடுபாட்டைக் காட்டுகிறது. தமது நாட்டில் உட்கட்டுமானங்களை அதிகப்படுத்த விரும்பும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட நாடுகளுக்கு உலக வங்கியினைக் காட்டிலும் மிகக் குறைந்த வட்டிக்கு பெருந்தொகைக் கடன்வழங்க சீனா முன்வந்து செயலாற்றத் தொடங்கியது.

அதற்கு உலக வங்கியைப் போல அந்த கட்டமைப்பு மாற்றங்களையும் உலக அரசியல் சார்புநிலையையும் மிரட்டல் உருட்டலாகக் கேட்டு நிபந்தனை வைக்காமல், சீனாவானது கடன் வழங்குவதற்கு வெறும் வணிக அடிப்படையிலான நிபந்தனைகளைப் போட்டது. விளக்கிக்கூறினால், ஒரு உட்கட்டுமான திட்டத்திற்கு (பாலம் கட்டுதல், சாலை அமைத்தல், தொடர்வண்டிப் பாதையமைத்தல், துறைமுக அபிவிருத்தி, வானூர்தி நிலையங்கள், வானளாவிய கட்டடங்கள் அமைத்தல்) சீனாவிடம் கடன்பெற வேண்டுமானால் அதுவும் ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த வட்டிக்குக் கடன்பெறுவதானால், அந்த கட்டுமான ஒப்பந்ததாரராக சீன நிறுவனத்தையே தெரிவுசெய்ய வேண்டும் என்பதோடு, கட்டுமானப் பொருட்களை கொள்வனவு செய்தல், அதற்கான எந்திரங்களை வாடகைக்குப் பெறல் போன்றனவற்றையும் சீன நிறுவனங்களிடமே பெற வேண்டுமெனவே கடன்வழங்குவதற்கான நிபந்தனைகளாக சீனா முன்வைத்தது.

இவ்வாறாகத்தான் தாம் முதலிடும் அல்லது கடன்வழங்கும் வெளிநாட்டு உட்கட்டுமானத் திட்டங்களின் (Infrastructural Projects) மூலம் தனது நாட்டின் ஒப்பந்த நிறுவனங்களைப் பணிக்கமர்த்தி வருமானமீட்டிக்கொள்வதால், சீனாவிற்கு உட்கட்டுமானத் திட்டங்களைப் பொறுத்தளவில், மற்றைய நாடுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த வட்டிக்கு கடன் வழங்க இயலுமானதாகிறது. இதனால், உட்கட்டுமான ஒப்பந்தங்களில் சீனாவுடன் எந்த நாடும் போட்டி போட இயலாத சூழலே உலகளவில் காணப்படுகிறது.

மேற்போந்த விளக்கங்களிலிருந்து தமது நாட்டின் உட்கட்டுமானத் திட்டங்களிற்காகவும் வேறு பல கடன்சுமைகளின் விளைவாகவும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகள் எதற்காக சீனாவிடம் முதலீடுகளை வேண்டி நிற்கின்றன என்பதும் கடன்களைக் கோரி நிற்கின்றன என்பதும் புரிந்துகொள்ளக் கடினமாயிராது என நம்பலாம்.

ஆனாலும், தன்முனைப்பிலும், ஊழலிலும், அதிகார ஆட்டத்திற்காகவும் கட்டுமானங்களை முறையான திட்டமிடலில்லாமல் நிறுவிவிட்டு, அதனை இயக்க முடியாமலும் அதனால் வருவாயீட்ட முடியாமலும் திணறிக்கொண்டு, வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் சில நாடுகள் அல்லலுறும் போது, ஏலவே போடப்பட்ட ஒப்பந்தங்களிற்கு வெளியே பேச்சுக்களில் ஈடுபட்டு ஒரு பொது உடன்பாட்டுக்கு வருவதற்காக இயக்க முடியாமல் கடன்சுமையாகிப் போன சில உட்கட்டுமானங்கள் வாயிலான வணிகத்தை சீனா குத்தகைகள் மூலம் பெற்று அந்த நாட்டின் ஒப்புதலோடு வணிகமாற்றி வருகிறது. இப்படியான எந்த உட்கட்டுமானத் திட்டங்களும் சீனாவின் திணிப்பாலமைந்தது அல்ல என்பதையும் அந்த நாடுகளே இப்படியான திட்டங்களுக்கு நிதியளிக்குமாறும் கடன்வழங்குமாறும் கோரி சீனாவை அணுகின என்பதை முறைப்படி ஆய்வுசெய்து ஈண்டு நோக்க வேண்டும்.

இந்த நாடுகளிற்கு வேலியில் போகும் ஓணானாக சீனா அமையலாமே தவிர அமெரிக்கா போன்று ஒக்டோபர்சாக அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சீனாவின் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;

சீனாவின் பெரிய நிறுவனமான COSCO என்ற நிறுவனமானது கிரீசின் Piraeus என்ற மிகப்பெரிய துறைமுகத்தின் பங்குகளில் மிகப்பெரிய அளவை வாங்கியுள்ளது. அத்துடன் அந்நிறுவனமானது, இத்தாலியின் Trieste மற்றும் Ravenna போன்ற துறைமுகங்களின் விரிவாக்க உட்கட்டுமானங்களில் மிகப்பெரியளவில் முதலிட்டுள்ளது.

Djibouti இல் புதிய துறைமுகம், இரண்டு வானூர்தி நிலையங்கள் மற்றும் எதியோப்பாவிற்குச் செல்லும் தொடர்வண்டிப்பாதை போன்றவற்றினை அமைப்பதில் சீனா முதலிட்டுள்ளது.

கென்யாவில் மொம்பாசா துறைமுக உட்கட்டுமான அபிவிருத்தி, மொம்பாசாவிற்கும் நைரோபிக்கும் இடையிலான தொடர்வண்டிப்பாதை, பெருந்தெருக்கள் என்பவற்றின் கட்டுமானம் போன்றனவற்றில் சீனா பெருமளவு முதலிட்டுள்ளது.

அங்கோலா (25 பில்லியன் அமெரிக்க டொலர்), எதியோப்பியா (13.5 பில்லியன் அமெரிக்க டொலர்), சாம்பியா (7.4 பில்லியன் அமெரிக்க டொலர்), கொங்கோ (7.3 பில்லியன் அமெரிக்க டொலர்), சூடான் (6.4 பில்லியன் அமெரிக்க டொலர்) போன்ற ஏனைய ஆபிரிக்க நாடுகளும் சீனாவிடம் இப்படியான பெருந்தொகைக் கடனை தங்களுடைய உட்கட்டுமானங்களிற்காகவும் உலக வங்கி போன்றவற்றிடமிருந்து பெற்ற கடன்சுமையைக் குறைப்பதற்காகவும் சீனாவை அணுகி வாங்கியுள்ளன.

பங்காளதேசம்

தெற்காசியாவிலே பாகிஸ்தானிற்கு அடுத்த படியாக கூடுதலான சீன முதலீட்டைப் பெறும் நாடாக பங்காளதேசமே இருக்கின்றது. பங்காளதேசானது சீனாவிடம் இருந்து வட்டிக்கு கடன்பெறும் அடிப்படையிலாக அல்லாமல் நேரடி முதலீடுகளாகவே சீனாவிடம் இருந்து முதலீடுகளைக் கூடுதலாகப் பெறுகிறது. இதனால் சென்ற ஆண்டில் வெளிவந்த தகவல்களின் படி பங்காளதேசம் வட்டிக்கு வாங்கிய கடன்களில் வெறும் 6% மட்டுமே சீனாவிடம் இருந்து வட்டிக்குப் பெற்ற கடனாக இருக்கின்றது. பங்காளதேசத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கம் மற்றும் தொடர்வண்டி- நெடுஞ்சாலைகள் என்பனவற்றிற்கு நிதியளித்து அதன் கட்டுமான ஒப்பந்தங்களையும் பெற்றது சீனா. பங்காளதேசமானது தனது ஏற்றுமதி வருவாயில் 84% ஆடை உற்பத்தியிலேயே தங்கியுள்ளது. இதனால் ஆடை உற்பத்தித்துறையில் மிகையாக தங்கியிருப்பதால் வரும் ஆபத்துகளை உணர்ந்து, சிறப்புப் பொருண்மிய மண்டலங்களை (Special Economic Zones) கூடுதலான அளவில் உருவாக்குவதில் பங்காளதேசம் முனைப்புக் காட்டி வருகிறது. அவற்றில் சீனா அதிகளவிற்கு வணிக முதலீடுகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளது.

பங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சொனடியா என்ற இடத்தில் சீனாவின் முதலீட்டைப் பெருமளவிற்கு நம்பித் தொடங்கப்பட இருந்த துறைமுக உருவாக்கற் திட்டத்தை இந்தியாவின் அழுத்தத்தினால் பங்காளதேசம் கைவிட்டுள்ளது. அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தத் திட்டத்தையும் பங்காளதேசம் முன்னெடுக்காது என உறுதியுமளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து China Harbor and Engineering Company (CHEC) என்ற சீனாவின் நிறுவனம் கையூட்டுக் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி அந்த நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்த்ததோடு, 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அந்தச் சீன நிறுவனத்தினால் அமைக்கப்பட இருந்த டாக்கா- சில்கெட் நெடுஞ்சாலையமைப்புத் திட்டத்தை பங்காளதேசம் கைவிட்டுள்ளது.

உண்மையில், தனது ஏற்றுமதி வருவாயில் 84% ஆடையுற்பத்தியில் தங்கியிருக்கும் பங்காளதேசமானது, ஆடை இறக்குமதி தொடர்பான வரிச்சலுகைகளால் மேற்குலகிற்குக் கட்டுண்டே கிடக்கிறது. பங்காளதேசத்தில் சீனாவின் முதலீடுகளுக்கு இந்தியா மற்றும் மேற்குலகு ஒரு எல்லை வரையே வழிவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மியன்மார் (பர்மா)

1988 இல் தொடங்கிய சீனாவின் மியன்மார் (பர்மா) நாட்டில் மேற்கொள்ளும் முதலீடானது இன்று பர்மாவிலுள்ள மொத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டில் (Foreign Direct Investment) 25% ஆனது சீனாவின் முதலீடு என்றளவில் வளர்ந்திருக்கிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங்சாங் சுகியும் அவரது கட்சியான சனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியும் முற்றுமுழுதான மேற்குச்சார்பு கொண்டவர்களாக இருக்கும் போது, சீனாவானது இயன்றவரை அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகச் செயற்பட்டு வந்தது. மேற்கிற்கு உவப்பான ஆட்சியாளர்களால் சீனாவின் உட்கட்டுமான முதலீடுகள் கிடப்பில் போடப்படுவதும் மேற்கின் தூண்டுதலில் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதும் தொடர்கிறது. தற்போது இராணுவ ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து, அங்சாங் சூகியின் மேற்குலகிற்கு உவப்பான அணியும் அதனது அரசியலில் பயணிப்போரும் அணிதிரட்டிய போராட்டத்தின் போது, Yangon’s Hlaing Tharyar என்ற தொழிற்பேட்டை மண்டலத்திலுள்ள 10 இற்குமேற்பட்ட சீனாவினால் நிதியளிக்கப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் முதலீடுகளுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு சீனா மியான்மார் ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மாலைதீவு

மாலைதீவில் வானூர்தி நிலையத்திலிருந்து வெளிவருவதற்கான பாலம் ஒன்றினை கட்டுவதற்கு 2013 ஆம் ஆண்டு மாலைதீவின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா ஜமீன் முடிவெடுத்து, சீனாவினை அணுகிக் கடன்வழங்குமாறு கோரினார். வழமை போல, உட்கட்டுமான திட்டங்களில் முன்வந்து முதலிடும் சீனா இதற்கு உடன்பட்டு அந்தப் பாலம் விரைந்து கட்டிமுடிக்கப்பட்டது. மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் உவப்பாக நடந்துகொள்ளாத அப்துல்லா ஜமீனிற்கு எதிராக மேற்குத் தூதரகங்களும் ஊடகங்களும் வேலைசெய்து அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி, இந்தியாவோடு ஒட்டி உறவாடும் மாலைதீவு சனநாயகக் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம் சொலியினை 2018 இல் சனாதிபதியாக்கின. அதைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிராக மேற்கொண்ட பரப்புரைகளின் காரணமாக மாலைதீவின் சுற்றுலாவை நடுவப்படுத்திய வணிகங்களின் இந்தியாவின் முதலீடு அதிகரித்துள்ளது. இருந்தும், தனக்கெதிரான பரப்புரையை முறியடிக்கும் விதமாகத் தன்னிடம் பெற்றுக்கொண்ட வர்த்தகக் கடன்களிற்கான வட்டியை கொரொனோ பெருந்தொற்றைக் கருத்திற்கொண்டு சீனா தற்காலிகமாகத் தளர்த்தியிருக்கிறது.

மலேசியா

மலேசியாவில் நஜிப் ரசாக் ஆட்சியிலிருந்த போது பெற்றோலியக் குழாய்கள் பதிக்கும் திட்டத்தில் பாரிய முதலீட்டைச் சீனா செய்தது. ஆனால், மேற்கிற்கு உவப்பான ஆட்சிமாற்றமான மகதீர் மொகமட் பிரதமராகிய பின்பு அந்தத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டமை மட்டுமல்லாமல், 2.795 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான அந்தத் திட்டம் ஈற்றில் கைவிடப்பட்டது.

சீனாவின் வெளிநாட்டு முதலீடுகளானவை திரும்பப்பெற முடியாதபோது, அந்த இலாபமீட்டமுடியாத வணிகத்தை ஒரு வணிகப் பேரம்பேசலில் சீனா நீண்டகாலக்குத்தகைக்கு வேறு வழியின்றிப் பெற்றுக்கொள்வது ஒரு சில இடங்களில் நடந்தேறியிருக்கிறது. எனினும், ஆட்சி மாற்றங்களினால் சீனாவின் முதலீடுகள் பாரிய சிக்கலிற்குள் சிக்குண்டு நகரமுடியாமல் இழுபறி நிலையில் தோல்வியை அண்மித்த நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்காவில் 2000 களில் சீனா மேற்கொண்ட முதலீடுகள் (அவற்றில் பெரும்பாலானவை உட்கட்டுமானங்கள்) அங்கு நடந்தேறிய மேற்குலகிற்கு உவப்பான ஆட்சிமாற்றங்களால் தேங்கிப்போய் தோல்வியை அண்மித்துள்ளன என்பதையும் சீனாவின் முதலீடுகளிற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள சீனா படாத பாடுபட வேண்டியிருப்பதையும் மேற்குலக ஊடகக் கருத்தேற்றங்களால் போதையேற்றப்பட்டு மதிமயங்கிக்கிடப்பவர்களால் உணர முடிவதில்லை.

-களநிலைவர ஆய்வு நடுவம்-

தொடரும்…………………………

குறிப்பு: கீழ்வரும் வினாக்களிற்கான விடைகள் அடுத்தடுத்து வரும் தொடர்களாக வெளிவரும்.

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த அரசியல் என்ன?

சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம் என்ன?

சீனப்பூச்சாண்டி அரசியலின் பின்னணி என்ன?

சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?

இந்தியாவின் “சீனப்பூச்சாண்டி” பரப்புரையும் ஈழத்தமிழர் அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும்

Loading

(Visited 16 times, 1 visits today)