
கொழும்புத் துறைமுகநகர பொருண்மிய ஆணைக்குழுச் சட்டமூலமானது (Colombo Port City Commission Bill) கடந்த மே மாதம் 20 ஆம் தேதியன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விடயங்கள் எவை?
சீனாவின் விரிவாக்கமாக சீனாவின் மாகாணம் ஒன்று கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் புதிய காலனியாகவே இந்த கொழும்புத் துறைமுகநகரம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகில் இறுதியாகத் தோன்றிய புதிய நாடு ” கொழும்புத் துறைமுக நகரம்”.
சீனாவின் கடன்பொறிக்குள் மூழ்கிப்போயுள்ள சிறிலங்காவானது முழுமையாகச் சீனாவின் பக்கம் சாய்ந்துவிட்டது.
இந்தத் துறைமுக நகரத்தினால் இந்தியாவின் இருப்பானது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டது.
இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான கொள்கைவகுப்புகள் படுதோல்வியடைந்ததையடுத்து இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டை மாற்றவுள்ளனர்.
தமிழர்களின் பக்கம் சாய்வதைத் தவிர இந்தியாவிற்கு வேறுவழிகள் இல்லை.
இந்தியா தமிழர்களை நோக்கி நீட்டப்போகும் கையைப் பற்றிப் பிடித்து எழுவதுதான் தமிழர்களுக்கு ஒருக்கும் ஒரே வழி.
மேலே குறிப்பிட்டுள்ள இந்தக் கதையளப்புகள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்துவதை முதன்மை நோக்காகக்கொண்டு கீழ்வரும் கேள்வி- பதில் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.
சீனாவானது “கடன் பொறி இராசதந்திரம்” மூலம் பல மூன்றாமுலக நாடுகளை வன்வளைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த “கடன் பொறி இராசதந்திரம் (Debt Trap Diplomacy” என்ற கருத்துருவாக்கத்தின் பின்னணி என்ன?
“கடன்பொறி இராசதந்திரம் (Debt Trap Diplomacy)” என்ற சொற்றொடரனாது 2017 ஆம் ஆண்டில் சங்க பரிவாரத்தின் வளர்ப்பான பிரம்மசெலானே என்ற பொருளியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வல்லாண்மை நாடுகளின் சீனவெறுப்பு அரசியலிற்கான பரப்புரைச் சொற்றொடராகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவ்வாறாக “கடன்பொறி இராசதந்திரம்” என்ற சொற்றொடரானது இந்திய ஆளும்வர்க்க நலன்களிற்கான பொருளியலாளரால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சீனாவிற்கெதிரான பரப்புரைக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கடன்பொறி இராசதந்திரமானது உலகவங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் போன்ற அமெரிக்காவின் வல்லாண்மை நலன்களிற்கான அமைப்புகள் செயற்படத் தொடங்கிய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வருகின்றது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்காவின் கையோங்கிய நிலையில், உலகம் முழுவதையும் தனது வல்லாண்மைக்குள் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துச் செயலாற்றியது. உலகப்போரினால் பெரும் பாதிப்புகளிற்குள்ளான நாடுகளினை மீள்கட்டுமானம் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்படுவதாகச் சொல்லிக்கொண்டு, உண்மையில் உலகப்போரின் பின்னரான மறுகாலனியாக்க நோக்கிற்கான சூழ்ச்சித் திட்டங்களை ஒப்பேற்றுவதற்காக உலக வங்கி நிறுவப்பட்டது.
தன்னிடமிருந்த மிகப்பெரியளவிலான நிதிமூலதன வளத்தைக் கொண்டு உலக வங்கியின் பங்குகளில் மிகப்பெரும்பான்மையை தனது சார்பு நாடுகளின் ஒத்துழைப்போடு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அமெரிக்காவானது, தனது நலன்களை உலகளவில் பட்டெறிவதற்கான கருவியாகவும் தனது புதிய காலனியாக்கத்திற்கான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் பொருண்மிய அடித்தளக் கட்டமைப்பாகவும் உலக வங்கியை அந்நாள் முதல் இந்நாள் வரை பயன்படுத்திவருகிறது.
பல்லாண்டுகளாய் காலனியாக இருக்கத்தலைப்பட்டதனால் நிதி உட்பட தனது பெருமளவிலான வளங்களை இழந்து பொருண்மிய அல்லாட்டத்திற்குள்ளான நாடுகள் மற்றும் உலகப் போரில் ஈடுபட்டதால் நலிவடைந்து போன நாடுகள் என்பவை உலக வங்கியிடம் கடன் பெறுவதற்காக முனைந்தார்கள். அவ்வாறு உலக வங்கியிடம் கடன்பெற அணுகிய நாடுகள் கடன்களை உலக வங்கியிடம் இருந்து பெற வேண்டுமென்றால், அந்த நாடுகளின் பொருண்மியம் மற்றும் அரசியல் ஆகிய அடிக்கட்டுமானங்களிலும், சட்டம், கல்விக்கொள்கை, மருத்துவக்கொள்கை போன்ற ஏனையவற்றிலும் அமெரிக்க நலன்களிற்கு இசைவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென வலுவந்தத் திணிப்புகளை உலக வங்கி மூலமாக அமெரிக்கா செய்தது, செய்து வருகிறது.
இப்படியாக, உலக வங்கியிடமிருந்து கடன்பெற வேண்டுமெனில் கடன்கோரும் நாடுகள் கட்டமைப்பு மாற்றங்களை (Structural Adjustments) செய்தாக வேண்டுமென்று அமெரிக்காவின் கைப்பாவையான உலக வங்கி வலுவந்தமாகத் திணிக்கிறது. பொருண்மிய அடிப்படையில் துலக்குவதானால், அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய நலன்களுக்கான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்றவற்றினை உள்வாங்கிக் கட்டமைப்புகளை மாற்றி வெறும் நுகர்வுச் சந்தையாகவும், வளங்களைத் தங்குதடையின்றிச் சுரண்டவிடும் வளக்கொள்ளையர்களின் அடிவருடிகளாகவும், முதலாளித்துவ உற்பத்திகளுக்கான மலிவான தொழிலாளர் சந்தையாகவும் (Cheap Labour Market) இருக்க உடன்படும் குறைந்த நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கே உலக வங்கியின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
கல்வியை, மருத்துவத்தை, நீர் வழங்கலை மற்றும் அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாகத் தனியார்மயப்படுத்துமாறு மூன்றாம் உலக நாடுகள் வற்புறுத்தப்படுவதுடன், தமக்கான மலிவான தொழிற்சந்தையாக இருந்து பணியடிமையாக இருக்க உடன்படுமாறும் திணிப்பிற்குள்ளாகின்றன. தமது கையறு நிலையால் கடன்களை வாங்கித் தற்காலிக ஆறுதலடைந்த குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட மூன்றாமுலக நாடுகள், போகப்போக கடன்சுமைக்குள்ளாகி, அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும் தனித்து வளர முடியாமலும் அமெரிக்க சார்புநிலையிலேயே இருக்க வேண்டிய அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
உலக வங்கி உருவான காலத்திலிருந்தே அதனது கடன் அச்சுறுத்தல் (Debt Intimidation) அரசியல் தொடர்ந்து வருகிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;
உலக வங்கி தொடங்கிச் சிறிது காலமேயாகியிருந்த 1947 ஆம் ஆண்டில் பிரான்ஸ் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கியிடம் கடனாகக் கேட்ட போது, அப்போதைய பிரான்சின் அரசாங்கத்தில் பிரான்ஸ் பொதுவுடைமைக் கட்சியும் கூட்டணிக் கட்சியாக இருப்பதைக் காரணம் காட்டி பிரான்சிற்குக் கடன் மறுக்கப்பட்டதோடு, கடன் பெறுவதற்கான நிபந்தனையாக அரசாங்கக் கூட்டணியிலிருந்து பிரான்ஸ் பொதுவுடைமைக் கட்சியை வெளியேற்றுமாறு திணிக்கப்பட்டது. ஈற்றில், பொதுவுடைமைக் கட்சியை வெளியேற்றி அதனுடனான கூட்டணி உறவைத் துண்டித்த பின்பாக உலக வங்கியிடமிருந்து பிரான்ஸ் கடனைப் பெற்றுக்கொண்டது.
அமெரிக்க நலன்களை முழுமையாகப் பட்டெறியும் சொமோசாவின் ஆட்சி நிகரகுவாவிலும், மார்க்கோசின் ஆட்சி பிலிப்பைன்சிலும் நடக்கும் போது உலக வங்கி அந்த நாடுகளிற்குக் கடன்களை உவந்தளித்தது.
பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கி வந்த கானா நாடு கடன்பெறுவதற்காக உலக வங்கியை அணுகிய போது, கடன்பெறுவதற்கான நிபந்தனையாக கானா நாட்டின் கல்விக்கொள்கை மாற்றப்பட்டு, பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அறவிட்டு இலவசக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கானா நாட்டின் மீது திணிப்பு ஏற்படுத்தப்பட்டது.
தன்சானியா நாடானது உலக வங்கியிடம் கடன் கோரிய போது, அந்த நாட்டின் நீர் வழங்கலைத் தனியார்மயப்படுத்துமாறு திணிக்கப்பட்டது.
ஈராக்கினை வன்வளைத்த பின்பாக, அந்த நாட்டிற்கு கடன் வழங்க வேண்டுமென்றால் அங்கு நடைமுறையிலிருந்த உணவு மாணியத்தை நீக்குமாறு திணிப்பு ஏற்படுத்தப்பட்டது.
சுனாமிக்குப் பின்பான மீள்கட்டுமான பணிகளுக்கு சிறிலங்கா கடனுதவி பெறுவதற்கான முன்னிபந்தனையாக, நாட்டின் தொழிலாளர் தொடர்பான சட்டங்களில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துமாறு திணிப்பு ஏற்படுத்தப்பட்டது.
உண்மையில் ஏழ்மையில் இருக்கும் மூன்றாம் உலக நாடுகளானவை, தமது காலில் நின்று தற்சார்பாக முன்னேறித் தமது வளங்களை முறையாகப் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகள் மூலம் தன்னிறைவை அடைந்து வாழத்தலைப்படுதலானது கட்டற்ற முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தின் உலகமயமாதலிற்கு எதிர்த்திசையில் இருக்கும். அதனால், அந்த நாடுகள் தற்சார்புநிலை அடைவதைத் தடுக்க ஏழ்மையிலுள்ள மூன்றாம் உலக நாடுகளை கடன் அடிமைகளாக (Loan addicts) மாற்றும் வேலைகளை உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இன்றியமையாத் தேவையுள்ள பொருட்களிற்கான (Essential Goods) இறக்குமதி வரியைக் (Tariffs & Import Taxes) குறைக்க வேண்டுமென்பதை முன்னிபந்தனையாகத் திணித்தே பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடன் வழங்குகிறது. இதனால் இறக்குமதியாகும் பொருட்களுடன் உள்ளூர் உற்பத்திகள் போட்டி போட இயலாமல், தமது தற்சார்புநிலையை கடன்பெறும் மூன்றாமுலக நாடுகள் இழந்து வருகின்றன. இன்னும் சுருங்கக் கூறினால், நாடுகளின் தற்சார்புநிலையைக் குலைத்து, உலக வல்லாண்மையாளர்களின் உலகமயமாதல் சந்தை விரிவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் பொருளியல் அடியாளாகவே இந்த பன்னாட்டு நாணய நிதியமும் உலக வங்கியும் இயங்குகின்றன.
இவ்வாறாக உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) போன்றவற்றிடம் கடன்வாங்கிய கையறுநிலையிலிருந்த நாடுகள் அனைத்தும் தாம் அந்தக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற அமெரிக்காவின் கட்டற்ற திறந்த சந்தைப் பொருண்மிய நலன்களிற்கு உவப்பாக தமது நாட்டின் கட்டமைப்பையே மாற்றிக்கொண்டார்கள். இந்த நாடுகள் கடன்பெறுவதற்காக தம்மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளையோ அல்லது தாம் உடன்பட்டுப்போன மக்கள் நலன்களிற்கு மாறான கட்டமைப்பு மாற்றங்களையோ பற்றி மக்களிற்குத் தெரியாமல் திசைதிருப்பல்களையும் மறைப்புகளையும் செய்வர்.
இதுவே அமெரிக்காவின் கைப்பாவை அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவற்றின் மூலமாக அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய கூட்டுமுகாமின் கடன்பொறி இராசதந்திரமாகும்.
இந்த அமெரிக்காவின் கடன்பொறி இராசதந்திரத்திற்கு இடையூறாகவோ அல்லது அதற்கு உலைவைப்பது போல சீனாவின் வெளிநாட்டு முதலீடுகளும் கடன் வழங்குமுறைகளும் அமையும் போது அதனை “கடன் பொறி இராசதந்திரம்” எனப் பெயரிட்டு சீனவெறுப்புப் பரப்புரை செய்து தமது வயிற்றெரிச்சலைப் போக்கிக்கொள்ளவதை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும் அவர்களோடு முதலாளித்துவச் சந்தைப் பொருண்மியத்தில் ஒத்தோடும் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
அண்மையில் சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடானது (Foreign Direct Investment) அமெரிக்காவினதையும் பார்க்க விஞ்சிவிட்டது. இதனால், சீன முதலீடுகள் தொடர்பாக அச்சத்தை ஏற்படுத்துவதோடு மேற்குலக மற்றும் இந்தியாவிற்கு உவப்பான ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான பரப்புரைக் கருவியாகும் “கடன்பொறி இராசதந்திரம்” என்ற சொற்றொடர் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் சீனாவினைக் கட்டுப்படுத்தி வைப்பதன் மூலம் தனது மேலாண்மைக்கு எப்போதும் சிக்கல் வராது என்பதை உறுதிசெய்யும் வகையில் செயற்படும் அமெரிக்காவின் சூழ்ச்சிக் கணையாகத் தான் “கடன் பொறி இராசதந்திரம்” என்ற சொற்றொடர் இற்றையரசியலில் பயன்படுகிறது என எளிதாய் விளங்கிக்கொள்ளலாம்.
-களநிலைவர ஆய்வு நடுவம்-
2021.06.19
தொடரும்……………….
குறிப்பு: கீழ்வரும் வினாக்களிற்கான விடைகள் அடுத்தடுத்த தொடர்களில் வெளிவரும்.
சீனா வழங்கும் கடன்களின் பின்னணிகள் எவை?
சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த அரசியல் என்ன?
சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம் என்ன?
சீனப்பூச்சாண்டி அரசியலின் பின்னணி என்ன?
சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?
இந்தியாவின் “சீனப்பூச்சாண்டி” பரப்புரையும் ஈழத்தமிழர் அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் எத்தகையது?
2,244 total views, 3 views today