
ஒரு தெளிவான புரட்சிகரக் கருத்தியலும் அக்கருத்தியலின் வழி மக்களையும் போராளிகளையும் புரட்சிகரமாக வழிநடத்திச் செல்லக்கூடிய அமைப்பு வடிவமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலையின் திசைவழி நகரமுடியாது. கருத்தியலில்லாத அமைப்பு வடிவங்களோ அல்லது அமைப்பு வடிவமில்லாத கருத்தியலோ ஈற்றில் இலக்கினை நோக்கி நகர முடியாமல், நம்பிநின்ற மற்றும் நம்பிப் பயணித்த மக்களிற்கு உளச்சோர்வையே ஏற்படுத்தும்.
அரசறிவியலும் உலகெங்கிலுமான புரட்சிகர முன்னெடுப்புகள் தந்த பட்டறிவும் இவ்வாறு விளக்குகையில், ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் நிலைவரம் என்பது கருத்தியலும் இல்லாமல் அமைப்பு வடிவமும் கொள்ளாமல், நடைமுறை மற்றும் தம்மைச் சூழ நடந்தேறுபவை எவை என ஏதுமறியாமல் அல்லது அறிந்துகொள்ள விரும்பாத உதிரிகளின் சில்லெடுப்பாகவே இருக்கிறது என்பதை எமது மக்கள் உணரத் தவறக்கூடாது.
உலகளவில் புரட்சிப் போராட்டங்கள் மீது மக்கள் கூடுதலான நம்பிக்கை கொண்டிருந்த காலப்பகுதியாக 1970 கள் இருந்தது. வியட்னாம் விடுதலை மற்றும் கியூபா புரட்சியின் நாயகர்களாம் சேகுவேரா, பிடல்கஸ்ரோ பற்றியும் சிலாகித்துப் பேசியவாறு புரட்சிகளின் மீது இளையோர்கள் ஈர்ப்புக் கொண்டிருந்த காலப்பகுதியான 1970 களிலே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புரட்சிகரக் கருத்தியலுருவாக்கம் செய்யும் முனைப்புகள் நடந்ததுடன், அத்தகைய செல்வழியிலேயே விடுதலைக்காகப் புரட்சிகரமாகப் போராடப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் தமது அரசியலறிக்கைகளையும் வேலைத்திட்டம் தொடர்பான கொள்கையறிக்கைகளையும் வெளியிட்டன.
இவ்வாறு, தேசிய இனவிடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் ஒரு வர்க்கப்போராட்டமேயெனவும் தமது அரசியல் எப்படி மார்க்சிய அணுகுமுறையை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிறுவுவதுமாகவே விடுதலைப் புலிகள் அடங்கலான அத்தனை விடுதலை இயக்கங்களினதும் அரசியலறிக்கைகள் அமைந்திருந்தன.
“சோசலிச தமிழீழத்தை நோக்கி” என்ற விடுதலைப் புலிகளின் அரசியற் கொள்கை விளக்க நூலும் “சோசலிச தத்துவமும் கொரில்லா யுத்தமும்” என்ற விடுதலைப் புலிகளின் போர் உத்தி தொடர்பான கொள்கை விளக்க நூலும் விடுதலைப் புலிகள் எவ்வாறு தமது புரட்சிகரப் போராட்டத்தின் மூல மற்றும் செயல் உத்திகளிற்கு மார்க்சிய அணுகுமுறையில் விளக்கம் கொடுத்தார்கள் என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன. தேச ஒடுக்குமுறைக்குள்ளாகி இறைமையை இழந்து நிற்கும் ஒரு தேசம் தனது தேசவிடுதலைக்காக போராடி இறைமையை மீட்டெடுப்பது தான் நிகரமைக்கான (சோசலிசத்திற்கான) உண்மையான பங்களிப்பென கோடிட்டுக் காட்டியதோடு வர்க்கப் போராட்டங்கள் என்பன முதலாளியும் தொழிலாளியும் கன்னை பிரிந்து நின்று போராடுவதல்ல, மாறாக வர்ர்க்கப் போராட்டம் என்பது தேசிய இனங்களின் தேச விடுதலைப் போராட்டங்களின் மூலமே வரலாற்றில் நிகழ்ந்தேறுகின்றன என விடுதலைப் புலிகளின் அரசியற்கொள்கை அறிக்கையில் விளக்கங்கொடுக்கப்பட்டது.
மக்களைத் திரட்டிவிட்டு ஒரே நாளில் தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுப்பதென்பது உலகெங்கும் ஒரேமிக்க புரட்சி செய்வதென்ற ரொட்ஸ்கிய கற்பனாவாதத்தின் அடிப்படையில் அடிப்படையற்று எழுந்த போர் உத்தி என்பதையும் நாம் இன்று புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் விடுதலைப் புலிகள் தமது “சோசலிச தத்துவமும் கொரில்லா யுத்தமும்” என்ற நூலில் விளக்கம் கொடுத்ததோடு கொரில்லாப் போராட்டத்தின் இயங்குமுறைதான் உண்மையில் ஒரு மக்கள் போராட்டத்தின் இயங்குமுறையென்பதையும் கோடிட்டுக் காட்ட சேகுவேரா, பிடல்காஸ்ரோ, மாவோ என அத்தனை புரட்சியாளர்களிடமிருந்தும் வரலாற்றுப் படிப்பினை பெற்று நிறுவுவதாக அந்த நூலில் மேலும் குறிப்பிட்டிருந்தார்கள். தண்ணீரும் மீனும் போல மக்களுடன் போராளிகள் வாழ்ந்து மக்களிடம் உண்டு அவர்களோடு உறவாடி அவர்கள் அடைக்கலத்தில் உறங்கி, மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று (இவ்வாறாக எல்லா இடங்களிலும் புரட்சிகர ஒத்துழைப்பை நல்கக் கூடியவர்களாக மக்களை அரசியற்படுத்தி) பகைவரைப் பதுங்கி இருந்து தாக்கி விட்டுத் தப்பியோடி இன்னுமொரு ஊரில் தளமமைத்து நகரும் தளங்களாக நிலைகொண்டு, பின்பு அதை நோக்கி பகைவன் தேடி வரும் போது பகைவனைத் தாக்கி வெற்றிகொண்டு அவனது போர்க்கருவிகளையும் பறித்து, பகைவனின் முகாம்களைத் தேடிச் செல்லும் ஆற்றலைப் பெற்ற பின்பாக பகைவனின் முகாம்களை தாக்கி நிலங்களை மீட்டு நிழலரசமைத்து அதன் பின்பாக மக்கள் இராணுவம் அமைப்பது தான் தமது போரியல் செயற்திட்டம் என்பதை மிகத் தெளிவாக “சோசலிச தத்துவமும் கொரில்லா யுத்தமும்” எனும் நூலின் மூலம் விடுதலைப் புலிகள் விளக்கியிருந்தார்கள். இவ்வாறு எல்லா இயக்கங்களும் மார்க்சியத்தோடு தமக்கிருந்த பற்றுக்கோட்டை துலாம்பரமாகத் தமது கொள்கைவிளக்க அறிக்கைகள் மூலம் வெளியிட்டிருந்தார்கள். சில விடுதலை இயக்கங்கள் போர்த்தந்திரம் முதல் கருத்தியல் வரையான அத்தனைக்கும் மார்க்சிய, லெனினிய, மாவோவிய கட்டுரைகளை தேடித்திருந்து மொழியாக்கம் செய்து வாசித்ததோடு தோற்றத்திலும் நடை, உடையிலும் கூட அவர்களை நகலெடுத்தனர். இந்த நகலெடுப்பிலிருந்து 1980 களின் கடைக்கூறில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் வெளியேறத் துவங்கிவிட்டனர் எனலாம்.
சோவியத்தின் உடைவுடன் வந்த ஒருதுருவ உலக ஒழுங்குப் போக்கானது, தமது செயற்பாடுகளுக்கு மார்க்சிய அணுகுமுறையில் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஏற்படுத்தியிருக்கவில்லை என்று கூறுவதற்கு அடிப்படையில்லாமலில்லை. ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் 1990 இன் பின்பாக செயற்தளத்திலிருந்து அகற்றப்பட்டதனாலும், அகன்றதாலும் அவர்களில் பல அரசியல் ஆளுமைகள் வாய்ப்பாட்டு மார்க்சியவாதத்திலும் “யேசு சீக்கிரம் வருகிறார்” என்றாற்போல “சோவியத் மீண்டும் மலரும்”, “மக்கள் சீனா உலகில் மேலெழும்”, “சோசலிசம் மீண்டும் பூக்கும்” என தமது உளநம்பிக்கை குலைந்துவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் மீண்டும் எழுதியும் சிறுகூடங்களில் பேசியும் வந்தனர். இன்னும் சிலர் 1990 களில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த “பின்நவீனத்துவம்” எனும் மக்களை உதிரிகளாக்கும் எதிர்ப்புரட்சிக் கருத்தியல் பிறழ்வுகளுக்குள் ஆட்பட்டு “தலித்தியம்” போன்ற அடையாள அரசியல்களை முன்னெடுத்து ஒடுக்குமுறை அரசுகளுக்கும் ஆளும் வர்க்க நலன்கட்கும் தொல்லையில்லாமல் புரட்சி வேடம் போட்டார்கள். தம்மை சிவப்புச் சித்தாந்தத்தின் உண்மையான நகலென கட்டமைக்க முயன்றோர் இந்தியா அன்றைய உலக அரசியற்போக்கில் சோவியத் சார்பு நிலையில் இருக்கிறது என்பதற்காகவே “தேசிய இனங்களினதும் தேசங்களினதும் சிறைக்கூடம்” இந்தியா என்பதைக் கண்டுகொள்ளாமல் கடைக்கண்ணால் இந்தியாவிற்குக் கண்ணடித்தார்கள்.
இவ்வாறாகத் தம்மை மார்க்சியர்களாக அடையாளங்காட்டும் மார்க்சிய நகலெடுப்பாளர்கள் தாம் நேசித்த மக்களிலும் பார்க்க தமது தத்துவத்தை நேசிக்கப்போக, அதுவே மார்க்சிய வழிபாடாகி, மார்க்சியத்திற்கு புறம்பானதென தாம் நம்பும் வழியால் மக்களிற்கு எந்தவொரு நன்மையும் விளையக்கூடாதென்றும் அப்படி ஏதாவது நன்மை விளைந்தால் தாம் ஏற்ற தத்துவம் தோற்றுவிடும் என்ற உளவியல் சிக்கலிற்காளாகினர். இப்படியாக தாங்கள் தான் உண்மையான சிவப்புச் சிந்தாந்தத்தை தாங்கி நிற்பவர்கள் என மார்க்சிய வழிபாட்டை “அல்லேலூயா” பாணியில் நிகழ்த்துவோராக சில விடுதலை இயக்கங்கங்களைச் சார்ந்த சில ஆளுமைகள் நடந்துகொள்ள, தங்கள் தங்கள் தலைவர் தான் உண்மையான புரட்சியாளர் என்றும் தத்துவக் குழப்பங்கள் அற்ற அறிவாளி என்றும் சொல்லி தன்முனைப்புகளும் குழு மோதல்களும் மக்களுக்காகப் போராட வந்த அன்றைய இளையோரிடம் புற்றுநோயாகாப் பரவத் துவங்கியது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் 1980 களில் புதிதாக இணைந்த ஒருவருடன் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாடுகையில் அந்தப் போராளி புலிகள் அமைப்பில் இணைந்த வழியையும் இணைந்தமைக்கான காரணத்தையும் வினவிய போது, “தமிழீழத்தை வென்றெடுக்கவே இணைந்தேன்” என்றாராம். அதற்கு எவ்வளவு காலத்திற்குள் தமிழீழத்தை வென்றெடுப்போம் என உன்னிடம் சொல்லி இயக்கத்தில் இணைத்தார்கள் என தலைவர் பிரபாகரன் கேட்க “4 ஆண்டுகளுக்குள் தமிழீழத்தை புலிகள் மீட்பர்” என அந்தப் புதிதாய் இணைந்த போராளி பதிலளித்தாராம். அதற்குத் தலைவர் பிரபாகரன் உடனடியாக அப்படிக் கூறி இயக்கத்தில் இணைத்த மூத்த போராளியைக் கண்டித்ததோடு “தமிழீழம் 4 ஆண்டுகள் அல்ல 40 ஆண்டுகளிலும் கிடைக்கலாம். இல்லை 400 ஆண்டுகளிலும் கிடைக்கலாம். எமது தலைமுறை எங்களது தாயக நிலங்களை மீட்டு விடுதலை பெற்ற தமிழீழ தேசத்தை அமைக்கப் போராடும். நாம் தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம். விடுதலைக்கு நாட்குறிக்க முடியாது. எமது தலைமுறையில் தமிழீழ விடுதலை நடக்கவில்லை எனில் அடுத்த தலைமுறை அந்த விடுதலைக்காகப் போராடும்” என்று பதிலளித்தாராம்.
ஒரு சில மார்க்சிய நகலெடுப்பாளர்கள் அந்தக் காலத்தில் “சாத்தியவாதம்” என்ற எதிர்ப்புரட்சிகர கருத்தியற் குளறுபடிக்குள் சிக்குண்டனர். தமிழீழ தேச விடுதலையும் இறைமை மீட்பும் தேவையா? இல்லையா? என்ற அடிப்படையில் மட்டும் நோக்குகிற சரியான புரட்சிகரக் கருத்தியல் உறுதிப்பாடானது, மெத்தப் படித்த மேதாவியாகத் தன்னை பாசாங்கு செய்யாத தலைவர் பிரபாகரனிடமும் ஏனைய அந்தக் காலப் போராட்ட ஆளுமைகளிடமும் (இயக்க வேறுபாடுகளின்றி) இருந்தது. ஆனால், தலைவர் பிரபாகரனால் மட்டுமே தமிழீழத்தைப் பெற முடியும் எனவும் அவர் மட்டுமே அதற்காகப் படைக்கப்பட்டவர் எனவும் வழிபாட்டு மனநிலையில் அக்காலத்தில் சில விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தம்மைப் பிணைத்திருப்பதாகச் சொன்னோர் கூறிவந்ததோடு ஏனைய போராளித் தலைவர்களுடன் உள்ளும் வெளியுமாக கருத்துளறல்கள் செய்தமையானது தலைவர் பிரபாகரனை ஒரு குறுங்குழுவாத சேற்றுக்குள் அடைக்க எடுத்த முயற்சியெனவே நாம் மதிப்பிட வேண்டும்.
உண்மையில் தலைவர் பிரபாகரனை சரியாக மக்களிடம் எடுத்துச் செல்லாமல், அவரது எண்ணவோட்டங்களை சரியாக எடுத்துச் செல்லாமல் இப்படியான “தனிமாந்த வழிபாடு” என்றளவிற்குள் குறுக்க முயன்ற கூட்டமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலம்பெயர்ந்த ஆளுமைகளாக தம்மைக் காட்டியவாறு “இரண்டகன்” பட்டத்தையும் தமது நலன்கட்கு கேடானவர்களுக்கு வழங்கியவாறு அருவெறுப்பான அரசியலைத் தொடர்கிறது. உண்மையில் தலைவர் பிரபாகரனின் உறுதியையும் அவரது விடுதலைப் போராட்டம் தொடர்பான பார்வை மற்றும் அவர் தன்னை எப்படி ஒறுத்துப் போராடினார் என்பதையும் சரியாக சரியான தளத்தில் எடுத்துச் செல்வதில் பகைவரிலும் பார்க்க இந்தத் “தனிமாந்தத் துதிக்கோட்பாட்டு” கூட்டமே உள்ளிருந்து திரிபுவாதம் செய்தவாறு பெருந்தடையாக இருக்கிறது.
தலைவர் பிரபாகரன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் எந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினாரோ அந்த மண்ணை விட்டு ஒரு போதும் வெளியேறாமல் நின்று எத்தகைய இடர்மிகு சூழலிலும் எத்தகைய தடைகள் வந்தபோதும் “சாத்தியவாதம்” போன்ற எதிர்ப்புரட்சிக் கருத்தியல்களை தனக்குக் கிட்டவும் அண்டவிடாமல், தமிழீழ தேசத்தின் இறைமையை தான் எந்தக் கொம்பனிடமும் இழக்க விடமாட்டேன் என்ற விடுதலை உறுதியுடன் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடினார். இந்த அவரின் உறுதிப்பாடே தமிழீழதேச மக்களிடம் அவர் மீதான மிகுந்த பற்றையும் அவர் மீது முழு நம்பிக்கையையும் ஏற்படுத்தியதே தவிர வேறெந்த “புளுகியடிப்புகளும்” அல்ல என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தலைவர் பிரபாகரன் என்ற புரட்சியாளனை மக்களிடமும் ஏனைய போராட்ட ஆளுமைகளிடமும் எப்படி சரியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டுமென்பதையும், அதை மடைமாற்றி வேறு திசையில் எடுத்துச் சென்று இழிவுபடுத்தும் சிறுமதியாளரே தலைவர் பிரபாகரனை நேசிப்போராகப் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றிப் பிழைப்போர் என்பதை விளக்கும் முகமாக ஒரு சில நிகழ்வுகளைக் கீழ்வருமாறு தொகுக்கிறோம்.
- 1989 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆற்றிய முதலாவது மாவீரர்நாள் உரையில் “எமது தேசவிடுதலைப் போராட்டத்திற்கு எமது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் மட்டுமல்லாமல், மற்றைய இயக்கங்களைச் சேர்ந்த எத்தனையோ நல்ல போராளிகள் பங்களித்து தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களையும் இந்த மாவீரர்நாளில் நாம் நினைவில்கொள்வதே சரியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார். போராளிகளின் முன்னிலையில் ஆற்றிய அந்த உரையில் ஏனைய விடுதலை இயக்கத் தோழர்களின் பங்களிப்பையும் ஈகங்களையும் சொல்லி அவர்களையும் மாவீரர்நாளில் நினைவுகூருவது பொருத்தமானது என குறிப்பிடுவதன் மூலம் போராளிகளிடம் எத்தகைய மாண்பினை அவர் வளர்க்க விரும்பியிருப்பார் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இப்படியான விடயங்களை முன்கொண்டு சென்று விடுதலைக்காகத் தம்மை ஈந்து போராட முன்வந்த மற்றைய புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையும் மதித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய பாதையில் பயணிக்காமல், “இரண்டகன்” பட்டம் கொடுத்து அவர்களை எதிர்நிலைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வஞ்சிப்பதுதான் தமிழீழ மக்களுக்கும் அந்த தேச விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிச் சென்ற தலைமைக்கும் செய்யும் இரண்டகம் எனலாம்.
- விடுதலைப் புலிகள் இயக்கம் மாபெரும் படைத்துறை வெற்றிகளின் மூலம் வன்வளைக்கப்பட்ட தமிழர் தாயக நிலப்பரப்புகளை மீட்டு, சிங்கள பேரினவாத அரசுப்படையினை போர்வலுச் சமநிலையில் மேவி, தமிழீழ நிழலரசு அமைத்து, உலகத் தமிழர்களின் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த காலகட்டத்தில், ஒரு நேர்காணல் ஒன்றிற்கு தலைவர் பிரபாகரன் அளித்த பதிலும் அவர் பதிலளிக்கும் போது வெளிப்பட்டு நின்ற அவரது மிக இயல்பான உடல்மொழியும் ஈண்டு நோக்கத்தக்கது. அதாவது அந்த நேர்காணலில் “உங்களைத் தமிழ் மக்கள் தெய்வமாகப் பார்க்கிறார்களே?” எனத் தொக்கு நிற்கக் கேட்கப்பட்ட கேள்விக்கு தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில் “நான் ஒரு தமிழனாகச் செய்ய வேண்டிய எனது கடமைகளைச் செய்கிறேன். எமது தமிழ்ச் சமூகத்தில் ஒரு குறை உண்டு. அது என்னவெனில், யாராவது ஒரு வேலையைச் செய்தால் அவரைக் கடவுளாக்கிவிட்டு தமது கடமைகளிலிருந்து விலகி நிற்பார்கள். அவரவர் எமது இனத்திற்காக தமது கடமைகளைச் சரிவரச் செய்தால் நான் ஒரு தலைவனாகக் கூட அவர்களுக்குத் தெரிய மாட்டேன்”எனக் கூறினார்.
இப்படியாக தனது எண்ணவோட்டத்தை இயல்பாக வெளிப்படுத்தும் பண்புகளை தலைவர் பிரபாகரனின் பண்புகளாக எடுத்துச் சென்று ஏனைய அமைப்புகளில் இருந்த போராட்ட ஆளுமைகளையும் தேச விடுதலைப் போரில் இணைத்துச் செல்லாமல், “தலைவரின் செருப்புக்கும் சமனில்லை. அவர் கடவுளின் அவதாரம்” போன்ற சமூக அறிவியலுக்குப் புறம்பான பிதற்றல்களை பரப்பும் இந்த “தனிமாந்த வழிபாட்டு” கூட்டத்திடமிருந்து தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்ட எண்ணவோட்டங்களைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
- இன்னுமொரு நேர்காணலில், “தமிழீழம் மலர்ந்த பின்பாக, நீங்கள் வெளியே செல்ல விரும்பினால் எங்கு செல்ல விரும்புவீர்கள்?” என தலைவர் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட போது “நான் தமிழ்நாட்டுக்குச் செல்ல விரும்புவேன்.
அங்கே புலவர் கலியபெருமாளின் கல்லறைக்குச் செல்வேன்” எனத் தலைவர் பிரபாகரன் பதிலளித்தார். புலவர் கலியபெருமாள் என்பவர் தமிழ்நாடு விடுதலைப் படையின் வழிகாட்டியும் மூலவருமானவர் (இந்தியச் சிறையில் தலைவர் பிரபாகரன் சிறைப்பட்டிருந்த போது புலவர் கலியப்பெருமாளின் சிறைத் தோழர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்திய வன்வளைப்பாளர்களிடமிருந்து தமிழ்நாட்டை விடுதலை பெறச் செய்து தனித் தமிழ்நாடு அமைக்க போராடியது அவரது “தமிழ்நாடு விடுதலைப் படை”. இந்திய ஒடுக்குமுறை அரசு எதைப் பொறுத்துக்கொண்டாலும், “தமிழ்நாடு விடுதலை” என்ற விடயம் குறித்து முனகினாலேயே முளையிலே அழித்துவிட எந்த எல்லைக்கும் செல்லும். ஆனால், அந்த நேர்காணலில் தமிழ்நாடு விடுதலைப் படையின் மூத்த ஆளுமையின் கல்லறையைப் பார்க்கச் செல்வேன் என வெளிப்படையாக பதிலளிக்கும் போது இந்திய அரசிற்கு தனது எண்ணவோட்டத்தைப் பற்றி என்ன செய்தியைச் சொல்ல தலைவர் பிரபாகரன் விரும்பினார் என்பது தெளிவாகிறது. ஆனால், தலைவர் பிரபாகரனை வழிபாடு செய்வதாகக் கதையளப்போர்கள் இந்தியாவிடம் நக்கிப் பிழைத்து தமிழ்நாட்டிற்கும் தமிழ்த்தேசியக் கருத்தியலிற்கும் கெடுதி செய்து சொந்தச் செலவில் தமிழீழதேசத்திற்கும் உலகத் தமிழர்களிற்கும் சூனியம் செய்ய முனைகிறார்கள். எனின் தலைவர் பிரபாகரனையும் அவரது கனவுகளையும் யாரிடமிருந்து காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
- இன்னுருமொரு நேர்காணலில் “தமிழீழம் மலர்ந்த பின்பு, நீங்கள் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பீர்கள்?” என தலைவர் பிரபாகரனிடம் வினவிய போது, “தமிழீழதேசம் விடுதலை அடைந்த பின்பாக, நான் மக்களாட்சிக்கு வழிவிட்டு விட்டு, எமது மண்ணின் விடுதலைக்காகப் போராடி விழுப்புண்ணடைந்து அவயங்களை இழந்து வாழும் எமது போராளிகளைப் பராமரிக்கும் பணியையேற்று அவர்களின் நலவாழ்விற்கான பேணகத்தை அமைத்து அதனை முன்னெடுத்து நடத்த விரும்புகிறேன்” என தலைவர் பதிலளித்தார். போராடித் தமிழீழம் பெற்ற பின்பாக, ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்க விரும்பாமல், தன்னிலையை எப்படி வைத்திருக்கத் தலைவர் பிரபாகரன் விரும்பினார் என்பதிலிருந்து அவர் தான் வளர்த்த ஒவ்வொரு போராளியும் தமது வாழ்வில் எப்படியிருக்க வேண்டுமென விரும்பியிருப்பார் என்பதும் எத்தகைய மாண்பினை போராளிகளிடமிருந்து அவர்களது சமூக வாழ்வில் தலைவர் எதிர்பார்த்திருப்பார் என்பதையும் தெளிவுற உணர்ந்துகொள்ளலாம். எனில், இன்றும் மக்களை ஏய்த்து தமது பிழைப்புவாதத்தை நிலைநாட்ட விடுதலைப் புலிகளுடனான தமது உறவை ஏதோவொரு விதத்தில் பயன்படுத்தும் எத்தர்கள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அதைத் தலைமையேற்று நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமான சாபக்கேடு என்பதைத் தயக்கமின்றிச் சொல்லலாம்.
புலிகளின் பெயரை வைத்துக் கொண்டு தமது நலன்களைப் பேணியவாறு மக்களை ஏமாற்றிப் பிழைத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தடைக்கற்களாக இருப்போர்கள் பற்றி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன், எமது விடுதலைப் போராட்டத்தையும், அதனது புரட்சிகர ஆளுமைகளையும் அதற்குத் தலைமை தாங்கிய தலைமை பற்றிய சரியான புரிதல்களை மக்களிடம் ஏற்படுத்தாமல், அறிவிலித்தனமாக அவர்கள் செய்யும் பாசாங்கானது அடுத்த தலைமுறையிடம் விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்வதில் பெருந்தடையாக அமையும் என்பதை விளக்கவே தலைவர் பிரபாகரனை வழிபடுவதாகச் சொல்வோரின் குறைமதிச் செயற்பாடுகளை மேற்போந்த பத்திகளில் கோடிட்டுக் காட்ட வேண்டியிருந்தது.
இனி விடத்திற்கு வருவோம். அதாவது சுருங்கச் சொல்வதானால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தும் கருத்தியல் எதுவென விளக்குகையில், தமது அரசியல் எப்படியாக மார்க்சிய அணுகுமுறைக்குட்பட்டதாக உள்ளதென வாய்ப்புப் பார்த்து நிரூபிக்கும் போக்கே அத்தனை விடுதலை இயக்கங்களிடம் இருந்தது என்றும் அதில் நகலெடுப்பாளர்கள் இலக்கினை மறந்து எத்திசை கவிழ்ந்தனர் என்பதையும் இக்கட்டுரையின் முதற்பகுதியில் நோக்கினோம்.
நாம் வாழ்ந்த வாழுகின்ற சமூக அமைப்பினைப் பற்றிய சரியான புரிதல், தமிழீழத்தின் பன்முகத்தன்மை, எந்த வரலாற்றுக் கட்டத்தில் ஈழதேச விடுதலைப் போராட்டம் முன்னகர்கின்றது போன்ற விடயங்களில் எமது சமூக, பொருண்மியச் சூழமைவில் வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் பார்வையில் ஆய்வுகளிற்கான அடிப்படை முனைப்புகள் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் துவக்க காலத்தில் ஓரளவு இருந்தாலும் தம்மை புரட்சிகர இடதுசாரிகள் எனக் கோடிட்டுக் காட்டும் முனைப்பிலேயே அவர்கள் கூடுதலான நேரத்தைச் செலவிட்டார்கள். தமிழீழதேச விடுதலைப் போராட்டமென்பது ஒரு தேசம் ஒன்று தனது வரலாற்றுப்போக்கில் தேச அரசு அமைக்கும் திசைவழியானது என்ற புரிதல் இருந்தபோதும், அதன் கருத்தியல் என்பது மார்க்சிய வழிப்பட்டது என்றளவில் மட்டுமே இருந்ததே தவிர, அது தமிழ்த்தேசியக் கருத்தியலெனக் கோட்பாட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. இதன் கெடுதியான விளைவுகளாக, இந்தியாவுடன் சேர்ந்து இந்தியாவின் அடிவருடியாகினால் இந்துஈழம் அமைந்துவிடும் என பல பேயாட்ட இழிவுச் செயற்பாடுகளை நாம் இன்று கண்ணுறவேண்டியுள்ளது.
இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்க மறுத்தமைக்கு காரணமாக, “அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை” எனவே பதிவுசெய்யப்பட்டது. அந்த இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தை எதிர்த்தமையானது மிக மிகச் சரியான நெஞ்சுரமிக்க செயற்பாடு. ஆனால், ஒப்பந்தத்தில் நன்மையில்லை என்பதால் எதிர்த்ததாகச் சொல்லப்பட்டதானது தமிழ்த்தேசியக் கருத்தியல் கோட்பாட்டுருவாக்கம் அடையாத சூழலால் விளைந்தது என்பதை எமக்குக் காட்டுவதென்பதோடு, அதைச் செய்து தமிழர்களின் தேசவிடுதலைப் போராட்டத்தைச் சரியான திசைவழி முன்னெடுக்க வேண்டிய கட்டாயத் தேவையைக் காலங்கடந்தும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. உண்மையில் தமிழ்த்தேசிய இனத்தின் சிக்கலைப் பயன்படுத்தி தமது மேலாண்மையை இலங்கைத்தீவில் நிறுவும் முனைப்போடு இந்தியாவும் தமிழர்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் தேசத்தை வன்கவர்ந்து ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் முனைப்போடு சிறிலங்காவும் செய்து கொண்ட ஒப்பந்தமே 1987 இல் கைச்சாத்தான இந்திய- சிறிலங்கா ஒப்பந்தம். இதில், தமிழர்களின் முதன்மை வரலாற்றுப்பகையான ஆரியமாயை இந்தியாவும் தமிழீழ மக்களின் நேரடி எதிரியான சிறிலங்கா அரசும் இணைந்து தமிழர்களின் தலைவிதியை எப்படித் தீர்மானிக்க இயலுமென்பதும், தமிழர்களின் வரலாற்று முதன்மைப் பகையான இந்தியா என்பது எப்படித் தமிழர்களின் பேராளராக முடியும் என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட்டு இந்திய- சிறிலங்கா ஒப்பந்தம் எதிர்க்கப்பட்டிருந்தாலே அது சரியான தமிழ்த்தேசியக் கருத்தியலின் வழி எடுக்கப்பட்ட முடிவெனலாம். மாறாக, சரத்துகளை வாசித்து நன்மை, தீமையைக் கணக்கிட்டு ஒப்பந்தத்தை எதிர்த்தமையானது தமிழ்த்தேசியக் கருத்தியலானது அன்றைய காலகட்டத்தில் சரியாக கோட்பாட்டுருவாக்கம் அடையாத சூழலையே எமக்குக் காட்டுகின்றது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர்களின் தமிழின வரலாறு, தொன்மம், தமிழின மீட்சி போன்ற தமிழியக் கருத்துகளை விடுதலைப் புலிகள் மற்றும் புளொட் அமைப்பின் தலைமையினர் 1980 களில் உள்வாங்கியிருந்தனர். தலைவர் பிரபாகரன் மற்றும் புளொட்டின் தலைவர் உமா மகேசுவரன் போன்றோர் தனித்தமிழியக்க ஆளுமைகளான பெருஞ்சித்திரனார் போன்றோருடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு அதற்குப் பெருங்காரணமெனலாம். ஒரு தலைமறைவுப் போராளியாக இருந்த காலத்திலேயே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டமைக்கு வாழ்த்துச் செய்தி எழுதித் தமிழரின் வரலாறு, மொழி, அகழ்வாய்வு, மெய்யியல், கலை என அத்தனையும் ஆய்வுசெய்யப்பட வேண்டிய முதன்மைத் தேவையைப் புரிந்துகொண்டவராக தலைவர் பிரபாகரன் தனது புரிதலை பல விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்குள் ஓரமைப்பிற்குத் தலைமை தாங்கித் தலைமறைவாய் வாழ்ந்த காலத்திலேயே வெளிப்படுத்தினார் என்பது அவரது தமிழியத்தன்மைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாய் அமைகிறது.
ஆனாலும் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் அன்றைய காலப்பகுதியில் சரியாகக் கோட்பாட்டுருவாக்கம் பெற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும், 1990 களில் தமிழீழ நிழலரச கட்டமைப்புகளை உருவாக்கும் முனைப்பிலிருந்த விடுதலைப்புலிகள் தனித்தமிழ் மீட்சி, சமஸ்கிருதக் களைவு என்பதை நன்கு துருத்திய பிறமொழிக் கலப்புகளைக் களையெடுத்தல், நமது முன்னோர்களின் வரலாறு, தமிழரின் தொன்மை, வரலாறு போன்றவற்றின் மீது உருவாக்கப்பட்ட எழுகையுணர்வு மற்றும் தமிழில் வழிபாடு, முருகவழிபாட்டை முதன்மைப்படுத்தல், முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு போன்றவை குறித்த விழிப்பு என்பனவற்றை விடுதலைப் புலிகள் தமிழியக் கருத்துகளாக உள்வாங்கிச் செயற்படுத்துவதில் முனைப்புக் காட்டினர். இதன் விளைவாகவே, முன்னர் மாவீரர்களின் வித்துடல்களை எரிக்கும் முறை பின்பற்றப்பட்டிருந்தாலும், வித்துடல்களை அடக்கம் செய்வதும் இனத்திற்காய் தம் இன்னுயிர் ஈந்தவர்களை வழிபடுதலுமே தமிழர்களின் மரபினடி தொடர்ந்த வழக்காறு என அறிந்த பின்பாக மாவீரர்களின் வித்துடல்களை அடக்கம் செய்து நடுகல்வழிபாட்டிடமாக துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன், அனைவருக்கும் தமிழில் பெயர் சூட்டல், வணிக நிலையங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைத்தல், அனைத்திற்கும் தூயதமிழில் பெயரிடல் என விடுதலைப் புலிகள் தாம் தலைமையேற்று நடத்திய நிழலரசில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தமை ஈண்டு நோக்கத்தக்கது. ஆனாலும், தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் விடுதலைப் புலிகள் காலத்திலும் உலகத் தமிழர்களிடத்தில் சரியாகக் கோட்பாட்டுருவாக்கம் செய்யப்பட்டுச் சேர்ப்பிக்கப்படவில்லை என்பதை நேர்மையுடன் சுட்ட வேண்டும். ஆனாலும், தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலுக்கு உகந்ததாகவும் அதனை நோக்கிய திசைவழியில் செல்லும் முனைப்புடனுமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டகால நெறிமுறைகளும் நடைமுறைகளும் அமைந்திருந்தன என்பதை அறியாதவரிலர். ஆனாலும், தமிழ்த்தேசியம் சரியான முறையில் கோட்பாடுருவாக்கம் பெறாமையினாலே விடுதலைக்குக் குறுக்கு வழி தேடுவதாகச் சொல்லி குழிபறிக்கும் சூழ்ச்சிக்குள் மாட்டுண்டு போகும் அவலம் இன்று ஈழத்தமிழர் அரசியற் சூழலில் நிலவுகிறது.
தமிழத்தேசிய இனத்தின் இருப்பென்பது அதனது தொன்மையான அறிவாழங்கொண்ட தனித்தியங்கும் ஆற்றல்கொண்ட மொழி, தமிழரின் அறிவுமரபில் அமைந்த மெய்யியல், பன்னெடுங்கால வரலாறு, காலவோட்டத்தில் வளர்வெய்திவந்த உற்பத்தியாற்றல்கள், கலைகள், பண்பாடு, நன்கு வரையறுக்கப்பட்ட தாயகவேர் என்பவற்றின் உறுதியான நிலவுகையில் தங்கியுள்ளது. எனில், இவற்றை அழிக்கவோ மடைமாற்றவோ முயற்சிக்கும் அத்தனை முயற்சிகளும் தமிழ்த்தேசிய இனத்தை அழிக்கும் முயற்சியே. சமஸ்கிருதம் என்ற பேசவே முடியாத ஊமை மொழியாக இருக்கும் செயற்கையாக வலிந்து உருவகித்துக் கொண்ட மொழியையும் (சமஸ்கிருதத்திற்கு கல்வெட்டுச் சான்றே கி.பி 2 ஆம் நூற்றாண்டில் தான் கிடைக்கிறது. அப்போதும் அது வரிவடிவமில்லாமல் தேவநாகரியில் தான் எழுதப்பட்டது) அந்த சமஸ்கிருத மொழி உருது, பார்சி என பலதுடன் களவாய் கலவிகொண்டு பிறந்த இந்தி என்ற மொழியும் இணைந்து தமிழ் மொழியை அழிப்பதற்கு அத்தனை சூழ்ச்சிகளையும் செய்கின்றன. தமிழை சமஸ்கிருதத்துடன் வலிந்து கலக்கச் செய்து செயற்கையாகச் செய்து மேலிருந்து மக்களிடம் வலுவந்தமாகத் திணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மலையாளம் எனும் மொழியால் இன்று தமிழர்களின் சேரநாடும் சேர வரலாறும் அதனது வரலாற்று வளர்ச்சியும் தமிழின வரலாற்றிலிருந்து பிடுங்கியெடுக்கப்பட்டுத் தமிழர்களுக்கு அவர்களைப் பகையாக்கிவிடும் போக்கு நிலவுகிறது.
தமிழர்களின் இசை “கர்நாடக சங்கீதம்” என்ற பெயரில் சமஸ்கிருதமயமாக்கலால் மடைமாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் ஆடற்கலையானது “பரத நாட்டியம்” என சமஸ்கிருதமயமாக்கலால் கேவலப்பட்டுப் போய்க் கிடக்கிறது. தமிழர்களின் ஆழமான மெய்யியல் கோட்பாடுகளானவை சமஸ்கிருத மேலாதிக்கத்தையும் வட இந்திய ஆரிய-பிராமணிய மேலாதிக்கத்தை நிறுவத்துடிக்கும் “இந்து” என்ற மடைமாற்றத்திற்குள் தமிழர் மரபிற்கெதிரான வைதீகமயமாக்களிற்குள்ளாகிக் கிடக்கிறது. கீழடியை அகழ்வாய்ந்தால் இந்தியாவின் வரலாற்று நூல்கள் அனைத்தும் புனைவுக் குப்பைகளென எரிக்கப்பட வேண்டி வரும் என்பதாலும், பூம்புகாரை அகழ்வாய்ந்தால் உலக வரலாற்று நூல்களையே மாற்றி எழுத நேரிடும் என்பதாலும் இந்தியக் கொடுங்கோலர்கள் தமிழரின் அகழ்வாய்வுகளைச் செய்ய இடந்தராமல் இடர்செய்வர். இப்படியாக தமிழினத்தின் இருப்பென்பதே இந்து-இந்தி- இந்தியா என்ற போலிப் புனைவுச் சூழ்ச்சிகளுடன் தேசங்களை வன்வளைத்து ஆரிய பிராமணிய சமூக அதிக்கத்தை உறுதிசெய்வதற்காக வலுவந்தமாக உருவாக்கப்பட்ட சந்தையான இந்தியாவிற்கு எதிரானதுதான். தமிழர்களிடமிருந்து அவர்களின் அத்தனைகால உழைப்பின் பெறுதிகளையும் திருடி, அவற்றை மடைமாற்றி, தம்வயப்படுத்துவதன் மூலம் தமிழர்களை ஓட்டாண்டி ஆக்கினாலும் தமிழர்கள் தமிழ்மொழியைப் பேசும் வரைக்கும் அதாவது தமிழை அழித்து ஒழிக்கும்வரை இந்தியம் ஒரு போதும் ஓயாது என்பதை வரலாற்றடிப்படையில் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களிற்கெதிரான இந்தியத்தின் வரலாற்றுப் பகையைத் தமிழர்கள் எள்முனையளவும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எனின் இந்து- இந்தி- இந்தியா என்பதன் அடிப்படையில் வலுவந்தமாக ஆரிய பிராமணிய சமூக ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தினை எதிர்ப்பதோடு, தமிழர்களின் ஒவ்வொரு இனவரையியற் கூறுகளையும் அழிக்க அது காலகாலமாக செய்து வரும் சூழ்ச்சிகளையும் இனங்கண்டு அதை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டியது தமிழினத்தின் நிலவுகைக்கு மிக மிக இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும்.
தெளிந்து கூறினால், தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்தியலென்பது இந்தியச் சூழ்ச்சியை சிதறடித்து, இழந்த தமிழின வரலாற்றுக் கூறுகளை மீட்டெடுத்தலை உறுதிசெய்யும் வகையில் அமையும் தமிழர் தேசங்களை விடுதலையடையச் செய்யும் கருத்தியல் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இனி, தமிழ்த்தேசியக் கருத்தியல் எப்படிக் கோட்பாட்டுருவாக்கத்திற்கு உள்ளாக வேண்டுமென்பதை விளங்கிக்கொள்ள, இதுகால வரையிலும் தமிழ்த்தேசியம் குறித்து மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்தி வந்த கருத்தியற் தெளிவை மீண்டும் தொகுத்துத் தருகிறோம்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
தமிழ்த்தேசியம் என்பது தமிழர்தேசங்களை விடுதலையடையச் செய்வதற்கான கருத்தியல் என வரையறுக்கலாம். அதாவது, தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழர்தேசங்களினை இறைமையுடைய தன்னாட்சியுரிமை உடைய தேச அரசுகளாக நிறுவுவதனை இலக்காகக்கொண்டு பயணிப்பவர்களினை வழிநடத்தும் கருத்தியல் தமிழ்த்தேசியக் கருத்தியல் எனலாம்.
எனின், உலகம் தழுவி வாழும் தமிழர்கள் எல்லோரும் ஒரே அரசியற் பண்பும் அரசியற் தேவையும் கொண்டோரா எனத் தெளிந்து கொள்ளல் வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் வேரானது தமிழீழத்திலேயோ அல்லது தமிழ்நாட்டிலேயோ தான் இருக்கும். தமிழர்கள் வெறுமனே ஒரு மரபினமோ அல்லது கலப்பினமோ அல்லது மதச் சிறுபான்மையினரோ அன்று. தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்பினர்கள் என்ற புரிதல் இன்றியமையாதது.
ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அடிப்படையில் உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என்பதற்கமைவாக, தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர்கள் தேசமாக வாழ்கிறார்கள். எனவே, தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரு தமிழர்களின் தேசங்கள் தன்னாட்சியுரிமைக்கு இயல்பாகவே உரித்துடையவையாகின்றன. எனவே, இந்தியத்தின் நேரடி ஒடுக்குமுறையில் இருந்து தமிழ்நாடும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நேரடி ஒடுக்குமுறையிலிருந்து தமிழீழமும் தமது அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து தமிழ்நாடு, தமிழீழம் என்ற தேசஅரசுகளை நிறுவ வேண்டும்.
இலங்கைத்தீவில், மலையகத்தில் வாழும் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு உறுப்பு. அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களெனினும் மலையகத் தமிழர் ஒரு தேசமாக இன்னமும் அரசியற் கட்டுறுதியைப் பெறவில்லை. அவர்கள் ஒரு தேசிய இனமாகத் தாம் வாழும் நாட்டின் எல்லைப் பரப்பிற்குள் அதிகாரப்பரவலாக்கம் வேண்டித் தம்மைக் கட்டுறுதியான அரசியற்சமூகமாக வளர்த்தெடுத்து தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு உறுப்பென தலைநிமிர்ந்து வாழும் வகையிலான அரசியலை உலகத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் மொழிச்சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் அவர்கள் கொள்வினை, கொடுப்பினை கொண்டு உள்ளத்தால் பிணைந்திருக்கும் தமது தேசவிடுதலைக்குப் (தமிழீழம்/ தமிழ்நாடு) பாடுபட வேண்டும். தாம் வாழும் நாடுகளில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைத் தன்னும் உச்ச அளவில் பயன்படுத்தித் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்புகளாகத் தாம் வாழுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
வெள்ளையர் காலத்தில் மொரீசியஸ், பிஜித்தீவு, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா எனப் புலம்பெயர்ந்து தலைமுறைகளாக அங்கு வாழ்வதால் தமது தாயகத்துடன் தொடர்பறுந்து போன தமிழர்கள் தம்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்பாக அரசியற் கட்டுறுதி செய்து அந்தந்த நாடுகளில் இருக்கும் அதிகாரங்களைத் தம்மாலியன்றளவு பெற்று தமிழினவுணர்வு பெற்று வாழ வேண்டும். இப்படியாக உலகம் தழுவி வாழும் தமிழர்கள் வெவ்வேறு அரசியற் பண்பினைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணை பிரியாத உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தமிழர்கள் அரசியற் பார்வை பெற வேண்டும். தமிழ்த்தேசியக் கருத்தியல் குறித்து மேலும் உரையாடுவோம்……….தமிழ்த்தேசியக் கருத்தியலானது கோட்பாட்டுருவாக்கம் பெறுவதற்கு உழைப்போம் ……………………………….
-காக்கை-
31.03.2021
2,504 total views, 3 views today