ஜெனிவா கூட்டத்தொடர்களும் தீர்மானங்களும் தமிழர்களுக்கு செங்குட்டு குட்டிச் சொல்லும் பாடங்கள்: -12 ஆண்டுகாலமாய் தொடரும் கழுத்தறுப்புப் படலம் குறித்து ஓர் நோக்கு- -முத்துச்செழியன் –

தமிழினப்படுகொலையும் அதன் பங்காளிகளும்

முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தின் உச்சக்கட்ட போக்கானது உலகமயமாகி விட்ட பின்பு, தனது உலகமயமாதல் சந்தை நலன்கட்கு இடையூறாக இருக்கும் இறைமையாண்மை வேட்கைகொண்ட தேச அரசுகளின் நிலவுகை மற்றும் தேச அரசுகளின் புரட்சிகர உருவாக்க முனைப்புகளை பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அழித்தொழிக்கும் உலக வல்லாண்மையாளர்களின் சூழ்ச்சித் திட்டமானது செப்டம்பர் 11 தாக்குதலைக் காரணங்காட்டி நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தான் தேச அரசமைக்கும் இறுதித் தறுவாய்க்கு வந்து நின்ற ஈழதேசத்தை சிதைத்தழிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலையில் பெரும்பங்கெடுக்க அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு முன்வந்து செய்து முடித்தது.

பல தேசிய இனங்களையும் தேசங்களையும் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சிறைக்கூடமான இந்தியாவானது தமிழர்கள் மீது வரலாற்றுப் பகை கொண்டுள்ளதோடு, ஈழத்தில் தமிழர்கள் தேச அரசமைத்தால் தமிழ்நாடு விடுதலையை நோக்கி நகரும் என்பதோடு, ஏலவே இந்தியச் சிறையை உடைத்து வெளியேறி தேச அரசுகளை அமைப்பதற்காகப் போராடும் நாகலாந்து, மணிப்பூர், அசாம், காசுமீர், மிசோரம் போன்ற தேசங்களுக்கு விடுதலைப் போராட்டங்களின் வெற்றி குறித்த உறுதியான நம்பிக்கை வலுப்பட்டு அவர்களின் விடுதலைப் போராட்டங்கள் வீரியமடைந்து ஈற்றில் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் சிதறிப்போகும் என்ற கெடிக்கலக்கத்தின் விளைவாகவும் தமிழினப்படுகொலை செய்து ஈழதேசத்தை சிதைத்தழிப்பதை தனது முதன்மை நோக்காக இந்தியக் கொடுங்கோல் அரசு வரிந்து கொண்டது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுகளைத் தொடர நோர்வேயினை மகிந்த ராயபக்ச டிசம்பர் மாத முதற் கிழமை அழைத்தார். ஏனெனில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்று நின்ற விடுதலைப் புலிகள் அமைப்பை வீழ்த்த முடியும் என கிஞ்சித்தும் நம்பிக்கை கொண்டிராதவராகவே மகிந்த ராயபக்ச தான் சனாதிபதியாகப் பதவியேற்கும் போது இருந்தார். போரினைத் தொடங்கி, புலிகளை அழிக்க முடிவெடுத்த இந்தியாவுக்கு மகிந்தவின் இந்த அழைப்பு எரிச்சலையூட்ட, மகிந்த டிசம்பர் இறுதிக் கிழமையில் உடனடியாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தான் வைத்திருந்த முழு வரைபையும் மகிந்தவுக்குக் காட்டி அமைதிப் பேச்சுகளிலிருந்து விலகி முற்று முழுதான போரை முன்னெடுக்குமாறு இந்தியா மகிந்தவை நெரித்தது. இதனாலேதான் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என மகிந்த பல தடவைகள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அமைதிப் பேச்சுகளில் மூன்றாந்தரப்பாக அமர்ந்த மேற்குலகின் முகவர் நாடான நோர்வேயின் எரிக்சொல்கெய்ம் தான் இலங்கைத்தீவிற்கு வந்து நாடு திரும்புகையில் டெல்கி சென்று அவர்களிடம் நிலைமைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு அவர்களின் வழிகாட்டல்களையும் பெற்றுத்தான் நாடு திரும்புவதாக வெளிப்படையாகவே பலமுறை தெரிவித்திருந்தார் என்பதை ஈண்டு நோக்க வேண்டும்.

முடிவாக, தமிழினப்படுகொலையினை திட்டமிட்டு அதற்கு மேற்குலகின் முழு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுத்து சிங்கள அரசைக்கொண்டு தமிழினப்படுகொலை மூலம், அமையும் தறுவாயில் இருந்த இறையாண்மை கொண்ட தமிழர்களின் ஈழதேச அரசை அழித்தொழித்தது இந்தியாவே.

ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் மகாவம்சக் கனவில் ஆண்டாண்டு காலமாய் கிடந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசானது இந்தியாவின் இந்த முனைப்பை தனக்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. இதில், சீனா, பாகிஸ்தான் போன்றநாடுகள் போர்ப் பொருண்மியம் ஈட்டிக்கொண்டன. அவ்வளவே……….

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் வெளிப்படையான போரின் மூலம் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை முடிவிற்கு வர அதன் பங்காளிகளாக நின்று தமிழினப் படுகொலையில் முதன்மைப்பங்கெடுத்த நாடுகள் முள்ளிவாய்க்காலின் பின் சிறிலங்காவுடனான தமது அணுகுமுறையை எப்படி மாற்றிக்கொண்டன?

தமிழர்களின் மறவழிப்போராட்ட அமைப்பை அழிக்குமளவிற்கு சிறிலங்காவிடம் வலு இருக்கவில்லை என்பதால், வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்தே உலக நாடுகளின் ஆதரவை சிறிலங்கா அரசு பெற்றுக்கொண்டது. போரின் பின்பான மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புவிசார் அமைவிட நன்மையை பெறத்தக்க வகையிலான நீண்டகாலக் குத்தகைகள் மற்றும் இன்ன பிற பங்கு பிரிப்புகள், வணிக உடன்படிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா உதவிபெறுவதற்காக உலக நாடுகளுக்கு அள்ளி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட சீனாவிடம் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு சிறிலங்கா சென்றது. இதனால், சிறிலங்கா மிரட்டி பணிய வைத்து தமக்கு கொடுத்த வாக்குறுதிகளின் படி செயற்படவைப்பதோடு மேலும் அழுத்தங்களை சிறிலங்கா மீது தொடராதிருக்க மேலும் சில பல வணிக ஒப்பந்தங்கள், குத்தகைகள் மற்றும் உடன்படிக்கைகளை தம்முடன் சிறிலங்கா செய்தேயாக வேண்டுமென்று திணிக்கும் முகமாகவே உலக வல்லாண்மையாளர்கள் ஜெனிவாவைப் பயன்படுத்தி சிறிலங்கா மீது அழுத்தங்களை மேற்கொண்டு வந்தனர். இதற்கு அவர்களுக்கான பகடைக் காயாகப் பயன்பட்டதும் பயன்படுவதுமே தமிழர்களும் தமிழர்களின் ஜெனிவா அரசியலும்.

12 ஆண்டுகாலத் தொடரும் ஜெனிவாவின் அரசியலானது தமிழர்களிடம் வெளியாருக்காகக் காத்திருக்கும் கேடான பழக்கத்தையும் தம்மை அழித்தவனே நீதியைத் தட்டில் வைத்து எடுத்து வருவான் என கண்மூடித்தனமாக நம்பும் அரசியல் வரட்சியையும் விதைத்துள்ள அவலம் நிகழ்ந்தேறிவிட்டது. கால ஒழுங்கு அடிப்படையில் இது தொடர்பாக நடந்தேறிய நிகழ்வுகளை தொகுத்து நோக்குவதன் மூலம் ஜெனிவாவை நம்பும் கழுத்தறுப்புப் படலத்தை தெளிவாக விளங்கிக்கொள்வோமாக.

2009-மே-23: தமிழினப்படுகொலையின் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழர்களின் மறவழிப்போராட்டம் முற்றாக முடக்கப்பட்டு ஒரு கிழமையைக் கூட கடந்திராத நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் இலங்கைத்தீவிற்கு வருகை தந்து சிறிலங்கா அரசுடன் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்தக் கூட்டறிக்கையில் “நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், நல்லிணக்கம்” என்பன குறித்து நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியது.

2009-மே-26: சிறிலங்காவில் ஐ.நா செயற்படக் கூடிய செயற்பாட்டுவெளி இல்லை என்றும் நீதி மற்றும் விசாரணை தொடர்பான விடையங்களில் ஐ.நா வின் திட்டமிடலும் வழிகாட்டலும் தேவையென்றும் குறிப்பிட்டு, ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையர் நவிப்பிள்ளை சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை கோரினார்.

2009-மே-30: ஐ.நாவின் சட்ட விதி 99 இன் படி, சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணைக்கு செயலுறுத்தும் பணிநிலை வலு ஐ.நாவின் பொதுச் செயலாளர் பன்கி மூனுக்கு இருந்தும், 2009 யூன் மாதம் 30 ஆம் நாள் ஐ.நா தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் பன்னாட்டு விசாரணையை அவர் முற்றிலுமாக மறுதலித்துக் கருத்தினைப் பதிவு செய்தமையானது, நவிப்பிள்ளை தலைமை வகித்த ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகம் ஒரு செயலுறுத்தும் வலுவற்ற ஒரு கண்துடைப்புக் கட்டமைப்பு என்பதை மறைமுகமாகத் தமிழரிற்கு உணர்த்தியது.

அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசியல் வெளியை சிறிலங்கா அரசிற்கு வழங்க வேண்டும் என்று கூறி, இனப்படுகொலையாளியான சிறிலங்கா அரசை அதன் தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்து முடிப்பதற்குக் கால இடைவெளியை வழங்க முனைந்தார் பான்கி மூன்.

2010-மே: 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கு வழிவகுத்த உண்மைகள் மற்றும் சூழமைவுகள் குறித்தும் பின்னர் அதன் தொடர்ச்சியாக 2009-மே-19 வரை நடந்தேறிய நிகழ்வுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கையிடுமாறு பணிப்பு விடுக்கப்பட்டு “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC)” என்ற அமைப்பினை அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராயபக்ச நிறுவினார். பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் காலங்கடத்தலை ஏற்படுத்தவும் அந்தக் கால இடைவெளியில் தமிழினம் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்யவும் பன்னாட்டு ஒழுங்குகளிற்கேற்றாற் போல ஏமாற்று வேலை செய்யவும் உவப்பான சித்து விளையாட்டாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை 2010 ஆம் ஆண்டு மே மாதம் மகிந்த ராஜபக்ச நிறுவினார்.

2010-யூன்: இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட மாந்த உரிமைகள் மீறல் தொடர்பாக பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்து தனக்கு அறிவுரை வழங்குமாறு ஆணையிடப்பட்டு மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் நிறுவினார். அந்தக் குழுவில் இந்தோனோசிய அரசின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியாக இருந்த Marzuki Darusman, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மாந்த உரிமைகள் வழக்கறிஞர் Yasmin Sooka மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் Steven Ratner ஆகிய 3 நிபுணர்களும் செயலாற்றினர்.

2011-ஏப்ரல்: ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளரால் நிறுவப்பட்ட மூவர் குழு என்று அழைக்கப்படும் நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையை கையளித்தது. அதில், சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்கள் மற்றும் மாந்தகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தனர் எனவும் இருதரப்பும் பொதுமக்களின் பாதுகாப்பு, உரிமைகள், நலவாழ்வு மற்றும் பன்னாட்டு சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையானது தவறானது என்றும் பக்கச்சார்பானது என்றும் குறிப்பிட்டு இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மறுதலித்தது. ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புகள் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய தமது கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும், அரசாங்கத்தின் மீறல்களை சரிவர அறிக்கையிடவில்லையெனவும் மற்றும் களத்திலுள்ள மக்களின் கருத்துவெளியிடல் முயற்சிகளை முடக்கிவிட்டன எனவும் ஐக்க்ய நாடுகள் அவையின் எதிர்மறையான செயற்பாடுகள் குறித்த தனது திறனாய்வை இந்த மூவர் குழு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நிபுணர் குழுவானது தனது அறிக்கையில், சிறிலங்கா அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நேர்மையற்றதாக இருப்பதனாலும் அதனால் சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

2011-செப்டெம்பர்-13: நிபுணர் குழுவின் இந்த அறிக்கைக்கு நேர்மறையான எதிர்வினைகள் எதனையும் சிறிலங்கா அரசு ஆற்றாமையினால், இந்த அறிக்கையை மாந்த உரிமைகள் பேரவையின் தலைவருக்கும், மாந்த உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்திற்கும் ஐ.நாவின் அன்றைய பொதுச்செயலாளர் பான்கிமூன் அனுப்பிவைத்தார்.

2011-நவம்பர்: நிலைமை அப்படியாயிருக்க, குற்றவாளி தன்னைத்தானே விசாரித்துத் தண்டனை அளிக்கும் ஒரு கேலிக்கூத்தான பொறிமுறையைக் கூறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) தனது கேலிக் கூத்தான அறிக்கையை வெளியிட்டது. அரசாங்கம் செய்ய வேண்டிய சலுகைகள் மற்றும் 300 வரையான பரிந்துரைகள் என்பன இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசு தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தன்னைத் தானே விசாரித்துத் தீர்ப்புக்கூறிய கேலிக்கிடமான அறிக்கையாக மட்டுமே இது அமைந்தது.

2012-மார்ச்: ஐ.நாவின் நடைமுறைகளின் படி அதனுடைய செயல்வீச்சு மட்டத்தில் பன்னாட்டு விசாரணை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கேலிக்கிடமான அறிக்கையை அடிப்படையாகவும் சார்பாகவும் கொண்டு 2012 ஆம் ஆண்டு பங்குனியில் ஐ.நாவின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை இனப்படுகொலைப் பங்காளிகளில் ஒன்றான அமெரிக்கா முன்வைத்தது. அதில், சிறிலங்கா அரசு தன்னைத் தானே விசாரித்து வெளியிட்ட கேலிக்கிடமான அறிக்கையின் (LLRC) பரிந்துரைகளுக்கு பாராட்டுத் தெரிவித்து அதற்குச் செயல்வடிவம் கொடுக்குமாறு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட உறுப்புநாடுகளால் இசைவளிக்கப்பட்டு ஐ.நா. மாந்த உரிமைகள் பேரவையில் “நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பது தொடர்பான தீர்மானம்” என தலைப்பிட்டு 19/2 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனப்படுகொலையில் முதன்மைப் பங்கு வகித்த இந்தியா மற்றும் இனப்படுகொலைப் பங்காளி அமெரிக்கா ஆகியன சிறிலங்கா மீது கொண்டு வந்த தீர்மானம் என்ற அளவிற்கு மிகவும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதும் சிறிலங்கா அரசை காப்பாற்றுவதுமான தீர்மானமுமாகவே இது அமைந்தது.

2012-ஏப்ரல்: இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து, இன்னும் குறிப்பாக மாந்தநேயம் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான தனது கடமையை சரிவர முன்னெடுக்காமை தொடார்பாக உசாவுவதற்காக உள்ளக மீளாய்வுக் குழுவை ஐக்கிய நாடுகள் அவையின் அப்போதைய பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட்டினார். மூவர் குழு  ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து எதிர்மறைத்தன்மையுடன் வெளியிட்ட திறனாய்விற்கு நடவடிக்கை எடுப்பதாகக் காட்ட மேற்கொள்ளப்பட்ட கண்துடைப்பு நாடகமாகவே இதனை பான்கிமூன் செய்தார்.

2012-நவம்பர்: பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதோடு, பொதுமக்களுக்கு நேர இருந்த ஆபத்துகள் மற்றும் தீங்குகள் குறித்து வெளிப்படுத்தாமல் ஐ.நா. அமைப்புகள் மறைத்துள்ளன எனவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு வழக்கத்துக்கு மாறாக ஐ.நாவின் உள்ளக மீளாய்வு குழு தனது ஆய்வின் முடிவை வெளியிட்டது.

2013-மார்ச்: நிலைமாறுகால நீதிப்பொறிமுறை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை மீளவலியுறுத்துவதோடு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றப்போவதாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கிய தேசிய செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் மற்றும் உண்மையைத் தேடும் பொறிமுறை ஒன்றை நிறுவுவது தொடர்பாக உயர் ஆணையர் வெளியிட்ட அறிக்கையை வரவேற்பதாகவும் கூறி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகளின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது, தீர்மானம் 22/1 ஆக 25 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.

2013-ஓகஸ்ட்: இந்த நிலையில் இது தொடர்பாக சிறிலங்காவிற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் அவையின் மாந்த உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவநீதம்பிள்ளை “சிறிலங்காவில் மாந்த உரிமைகள் மீறலின் அளவு மிகவும் கூடுதலாக இருக்கிறது. தான் கடந்த காலங்களில் இழைத்த குற்றங்களிற்குப் பொறுப்புக்கூறுவதில் எந்த விருப்பையும் சிறிலங்கா அரசு காட்டவில்லை என்பதுடன் பொறுப்புக்கூறலைக் கோருவோர் மீது சிறிலங்கா அரசு தாக்குதலையும் தொடுக்கிறது” என கருத்து வெளியிட்டார்.

2014-பெப்ரவரி: 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அமெரிக்காவின் உள்த்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளரான நிசா பிஸ்வால் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சிறிலங்காவுடனான நட்பின் அடிப்படையிலேயே சிறிலங்கா மீதான தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகச் சொல்லித் தமிழர்களின் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் வரட்சிக்கு ஒரு குட்டுக் குட்டினார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஐ.நாவின் தீர்மானம் என்று பொருட்படுத்தி சிற்றின்பம் கண்ட எமது மக்களின் பன்னாடுகள் தொடர்பான அரசியல் வரட்சிக்கு முன்னால் நிசா பிஸ்வால் குட்டிய குட்டும் உணரப்படவில்லை.

2014-மார்ச்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் சொல்லும்படியாக முன்னேற்றம் இல்லையென்று கூறுவதோடு சிறிலங்காவில் நிகழும் பிரிவினைவாத வன்முறை, ஊடகர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் மாந்த உரிமைகள் பொறிமுறையுடன் தொடர்புபட்டவர்கள் மீதான பழிவாங்கல் தாக்குதல்கள் என்பன குறித்து கவலைகொள்வதாகத் தெரிவித்து ஐ.நா. மாந்த உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானமானது, தீர்மானம் 25/1 ஆக நிறைவேறியது.

உண்மையில் இந்தத் தீர்மானத்தின் மூலம், அதுவரையில் இனப்படுகொலை என்ற சொல்லை முற்றாக மறுதலித்து இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றளவில் பொருட்செறிவைக் குன்றித்துத் தீர்மானங்களை முன்வைத்து வந்த அமெரிக்கா, 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தில், சிறிலங்காவில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிருத்தவர்கள் எனும் மதச் சிறுபான்மையினர் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாகப் பொத்தம் பொதுவாகச் சொல்லி சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றம் செய்து நீர்த்துப்போகச் செய்தது.

2014-ஓகஸ்ட்: இருந்தபோதும், 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதத்துடன் தனது பதவியிலிருந்து நவிப்பிள்ளை விடைபெற்றுச் செல்லும் போதும் தான் தலைமை வகித்த செயலுறுத்தும் வலுவற்ற ஐ.நாவின் பொம்மை அமைப்பான ஐநா.மாந்த உரிமைகள் ஆணையத்தின் சார்பாக சிறிலங்காவின் மீதான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திக் கோரினார்.

2014-யூலை: பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் Martti Ahtisaari, நியூசிலாந்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் Dame Silvia Cartwright மற்றும் பாகிஸ்தானின் மாந்த உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் Asma Jahangir ஆகியோர் தலைமையில் மாந்த உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகமானது (OHCHR) சிறிலங்கா மீதான விசாரணையைத் தொடங்கியது (OISL).

2015-சனவரி: தேர்தலில் மகிந்த ராயபக்சவைத் தோற்கடித்துத் தமக்கு (அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா) உவப்பான மைத்திரி- ரணில் ஆட்சியைக் கொண்டு வந்தமையால், சிறிலங்கா குறித்து கொண்டு வர இருந்து மிகவும் நீர்த்துப்போகச் செய்யப்பட்ட தீர்மானத்தைக் கூட இனப்படுகொலைப் பங்காளிகள் தள்ளிப்போட்டன. புதிய சனாதிபதியான மைத்திரிக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, அவருக்கு உதவும் படியாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வர இருந்த உப்புச் சப்பற்ற  கண்துடைப்புத் தீர்மானத்தைக் கூட, அவர்கள் செப்டெம்பர் மாதத்திற்குத் தள்ளிப்போட்டனர்.

2015-செப்டெம்பர்: சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல், பாலின அடிப்படையிலான வன்முறை, குழந்தைகள் அடங்கலான கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நிலவும் தடைகள் என்பன குறித்து மாந்த உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் (OISL) அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மாந்த உரிமைகள் பேரவையின் உயர் ஆணையர் Zeid Al Hussein, “அடுத்தடுத்து அமைக்கப்பட்ட உள்நாட்டு விசாரணை முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவியதால், ஒரு கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றின் உருவாக்கத்திற்காக வலியுறுத்துகிறேன்” என்றார். உண்மையில், உள்நாட்டு விசாரணை முயற்சிகள் பயனற்றது என துலாம்பரமாகத் தெரிந்து போக, பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையினை கோருவதைத் தவிர்க்க முடியாத நிலை வருவதை உணர்ந்து, சிறிலங்கா அரசைக் காப்பாற்ற எடுத்த மடைமாற்று நடவடிக்கையே இந்த கலப்பு நீதிப்பொறிமுறை.

2015-ஒக்டோபர்: நிலைமாறுகால நீதி வழங்கும் செயற்பாட்டில் சிறிலங்காவானது உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறது எனக் கூறி சிறிலங்கா அரசாங்கத்திற்கு பாராட்டு வழங்கும் சான்றிதழாக  அமெரிக்காவானது ஐக்கிய நாடுகள் மாந்த உரிமைகள் அவையில் முன்வைத்த தீர்மானமானது உறுப்பு நாடுகளின் இசைவுடன் 30/1 தீர்மானமாகியது.  தள்ளிப்போடப்பட்டு, பின்பு நிறைவேற்றப்பட்ட இந்த 30/1 தீர்மானமானது, சிறிலங்கா அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த மாந்த உரிமை மீறல்களை, சிறிலங்கா நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதவான்கள் அடங்கிய குழு விசாரிக்கலாம் என்று கூறிச் சப்பைக்கட்டுக் கட்டிச் சிறிலங்கா மீதான பன்னாட்டு விசாரணைக்கு முழுக்குப்போட்டது.  தீர்மானம் பரிந்துரைப்பதற்கமைய சிறிலங்கா அரசு தேசிய விசாரணையை நடத்தும் என்று கூறிய சிறிலங்கா அரசு, தானே கையொப்பமிட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

2017-மார்ச்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதிலுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யவும் இது தொடர்பாக மேலும் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குமாறும் ஐ.நாவின் மாந்த உரிமைகள் பேரவையில் உயர் ஆணையரைக் கோரி 34/1 தீர்மானம் ஐ.நா.மாந்த உரிமைகள் பேரவையால் கொண்டு வரப்பட்டது. இதையும் சிறிலங்கா தானும் இணைந்து ஒப்பமிட்டு வரவேற்றது.

2019-மார்ச்: தீர்மானம் 34/1 இல் கூறப்பட்டதை மீளவலியுறுத்தும் வகையில் தீர்மானம் 40/1 கொண்டுவரப்பட்டது.

2019-மே: இனப்படுகொலையைத் தடுப்பது தொடர்பில் ஐ.நாவிற்கு வழிகட்டல் கருத்துகளை வழங்குபவரான Adama Dieng மற்றும் பாதுகாப்பது தொடர்பான பொறுப்புக் குறித்து ஐ.நாவிற்கு வழிகாட்டல் கருத்துகளை வழங்குபவரான Karen Smith என்பவரும் இணைந்து “சிறிலங்காவில் மத அடிப்படையில், குறிப்பாக முசுலிம்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறில்ங்காவில் வாழும் அனைவரும் மதவேறுபாடின்றி ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்” என கூறி கூட்டறிக்கையை வெளியிட்டனர். உண்மையில், தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை அவர்களால் நீர்த்துப்போகும் படி செய்யப்பட்ட சொல்லாடல்களின் மூலம் கூட பேச முன்வராது, மதவன்முறைகள் பற்றி பேசி. தான் பேச வேண்டிய இனப்படுகொலையைத் தடுப்பது தொடர்பான விடயத்தை இந்த அறிக்கை மூலம் மடைமாற்றம் செய்தது ஐ.நா.

2020-வெப்ரவரி: 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தாபய ராயபக்ச சனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில் சிறிலங்காவிற்கும் மேற்குலகிற்குமிடையிலான ஒட்டான உறவின் விளைவாக உலக அரங்கில் சிறிலங்காவின் களங்கத்தை மறைத்து நற்பெயர் ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதும், அதனை சிறிலங்காவே ஒப்பமிட்டு இணை அணுசரணை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தீர்மானங்கள் 30/1, 34/1 மற்றும் 40/1 என்பவற்றிலிருந்து கூட சிறிலங்கா விலகுவதாக கோத்தாபய தலைமையிலான சிறிலங்காவின் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அவையின் மாந்த உரிமைகள் பேரவைக்கு அறிவித்தது.

உண்மையில், ஈழத் தமிழர்களுக்கு பன்னாட்டு விசாரணைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைப் பகடைக் காயாக்கி, அவர்கள் மீதான ஒடுக்கல்களைத் தமக்குத் தேவையான ஆட்சியாளரை ஆட்சிக்கட்டிலிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அழுத்தமாகப் பயன்படுத்தி, அது நிறைவேறியவுடன், ஈழத்தமிழர்களிற்கு நல்லிணக்கம் பற்றி வகுப்பெடுத்து, சிங்களவருடன் இணைந்து நல்லிணக்கமாக வாழும் படி அறிவுரை சொல்லிவிட்டுப் போகும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சூழ்ச்சியில் மீண்டும் மீண்டும் சிக்கிச் சின்னாபின்னமாகச் சீரழிந்துபோவதான அவலமே ஈழத் தமிழரின் நிகழ்கால அரசியல் வரட்சியின் உச்சமாக இருக்கின்றது.

2021-சனவரி: மாந்த உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி வழங்கலில் இருந்து பின்வாங்கல், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைகளில் இருந்து விலக்களித்தல், இராணுவமயமாக்கல், சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தல், இன தேசியவாத உணர்வுகள் மீளெழல் போன்றன தொடர்பில் சிறிலங்காவை குற்றஞ்சாட்டி ஐ.நாவின் மாந்த உரிமைகள் பேரவையின் தற்போதைய உயர் ஆணையர் Michelle Bachelet சிறிலங்காவிற்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கை தொடர்பில் மாற்றங்கள் வர வேண்டுமெனில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மேலும் உகந்தவராக, அவர்களின் நலன்கட்கு மிக வேண்டியவராக கோத்தாபய அரசாங்கம் செயலாற்ற வேண்டியிருக்கும். அதைப் பொறுத்து அறிக்கையானது தீர்மானமாக முன்வைக்கப்படும் போது மாறுதல்கள் இருக்கும்.

தமக்கானதை சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி சிறிலங்காவிற்கு அழுத்தம் வழங்கும் உலக வல்லாண்மையாளர்களின் ஜெனிவா அரசியலானது, அவர்களுக்கு உவப்பான ஆட்சி சிறிலங்காவில் அமையும் போது தமிழர்களுக்கு நல்லிணக்கம் பற்றி வகுப்பெடுத்து தமக்குவப்பான ஆட்சிக்கு தமிழர்கள் ஆதரவளிக்கும் படி கூறி அதை தமிழர்களின் இராசதந்திரம் என தமிழர்களையே நம்ப வைப்பார்கள்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்றோம். இல்லை போர்க்குற்றம் என்றார்கள்….. அதுவும் இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் என்றார்கள். …. அதுவும் இரு தரப்பாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் என்று கூறி இனப்படுகொலை செய்த தரப்பையும் இனப்படுகொலைக்குள்ளான தரப்பையும் ஒரே தட்டில் வைத்தார்கள்……..

பின்பு போர்க்குற்றம் என்பது மாந்த உரிமை மீறல்களானது….. அதுவும் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றார்கள்…….. பின்பு மத அடிப்படையிலான வன்முறை, வகுப்புவாத வன்முறை என்பன பற்றி பேசி அதற்குக் கீழும் தமிழினப்படுகொலையை நீர்த்துப்போகச் செய்து விட்டார்கள்.

இனப்படுகொலையை இழைத்த சிறிலங்கா அரசு தனது குற்றத்தைத் தானே விசாரித்து தனக்குத் தானே தண்டனை வழங்கட்டும் என உலகம் ஒப்புதல் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் நிறுவிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை (சிறிலங்கா அரசின் பாரிந்துரைகளை), அந்த சிறிலங்கா அரசையே நிறைவேற்றும் படி மூன்று தீர்மானங்களை தொடர்ச்சியாக ஜெனிவாவில் கொண்டு வந்தார்கள். இதை விட என்னென்ன கேலிக் கூத்துகளைச் செய்ய முடியுமோ அத்தனையையும் தமிழர்களை வைத்து ஜெனிவா அரசியல் செய்யத் தான் போகிறது. கடைசியாக, சிறிலங்கா அரசின் பரிந்துரைகளை தான் நிறைவேற்றுவதாக தானே இணை அணுசரணை செய்து மேற்கொண்ட தீர்மானத்திலிருந்து சிறிலங்கா தானாகவே விலகியுள்ளது. இனி சிறிலங்கா அரசு தன்னைத் தானே விசாரித்து உருவாக்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மீண்டுமொரு தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வந்து தமிழர்களுக்கு ஜெனிவாவில் கிடைத்த வெற்றியாக காட்டுவார்கள். இதைவிடக் கேவலப்பட வேறென்ன இருக்கப்போகின்றது?

விடுதலைக்குக் குறுக்குவழி இல்லை. தொடர்ந்து போராடுவோம். நாம் என்ன செய்ய வேண்டுமென விரிவாக அடுத்த பத்தியில் நோக்குவோம்.

-முத்துச்செழியன் –

2021-02-06

 3,317 total views,  3 views today

(Visited 8 times, 1 visits today)