விளையாட்டின் அரசியலும் அரசியல் விளையாட்டும்- அருள்வேந்தன்-

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரும் தமிழ்த்திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் புகழ்வெளிச்சத்திற்குள் வந்துவிட்டவருமான விசய் சேதுபதி என்ற திரைப்பட நடிகர் முத்தையா முரளிதரன் என்கிற சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரின் வாழ்க்கை வரலாற்றினைத் திரைக்காவியம் ஆக்கும் திரைப்படத்தில் முரளிதரன் வேடம் ஏற்று நடிப்பது தொடர்பான விடயம் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக பலரும் வெளிப்படுத்தும் கருத்துகளைப் பார்க்கும் போது எமது தமிழ்ச்சமூகத்தில் நிலவிவரும் அரசியல் வரட்சியின் உச்சமே கண்முன் வந்து நிற்கிறது. “திரைப்படத்தை திரைப்படமாகப் பாருங்கள்”, “விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்”, “எல்லாவற்றிற்கும் அரசியல் முலாம் பூசாதீர்கள்”, “அரசியல் வேறு; திரைப்படம் வேறு; விளையாட்டு வேறு” போன்ற சொற்றொடர்களானவை அரசியல் வரட்சியின் வெளிப்பாடாகவும் அரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, விளையாட்டின் அரசியல் குறித்தும் திரைத்துறை எனும் வெகுமக்கள் ஊடகங்களின் அரசியல் குறித்தும் தெளிவடைய வைக்கும் நோக்கோடு இப்பத்தி எழுதப்படுகிறது.

“பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனைய எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” என்பது தான் அனைத்து அரசியல் குறித்த தேடல்களுக்கும் ஆய்வுவழிகாட்டியாக அமையும் சொற்றொடராகும். எமது சமூக வாழ்வின் அத்தனை விடயங்களையும் அரசியலே தீர்மானிக்கும். நாம் உண்ணும் உணவுகள், கற்கும் கல்வித்திட்டங்கள் மற்றும் நூல்கள், பார்க்கும் திரைப்படங்கள், கேட்கும் செய்திகள், வாசிக்கும் விடயங்கள், விளையாடும் விளையாட்டுகள், பயணம் செய்யும் ஊர்திகள் என எமது சமூக வாழ்வின் அத்தனை நுகர்வுகளையும் அரசியலே தீர்மானிக்கிறது. இவை அனைத்திலும், ஆளும் அதிகார வர்க்கங்களின் நலனும், அந்த அதிகார வர்க்கங்களின் நலனுக்காக கட்டமைக்கப்பட்டுள்ள அரசு என்ற எந்திரத்தினதும் அதனோடு ஒட்டிப்பிழைக்கும் ஒருசாராரது நலன்களுமே நடுவப் பொருளாக இருக்கும். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டது இதுவென இவ்வுலக வாழ்வும் எதுவுமே இல்லை. தம்மைச் சூழ நிகழ்வனவற்றினைப் புரிந்துகொள்ளல் என்பது தம்மைச் சூழ நிகழ்வனவற்றின் அரசியலைப் புரிந்துகொள்ளுதல் என்பதன் அடிப்படையிலேயே அமையும். இவ்வாறாக மக்கள் தேடல்களை விழைத்து அரசியல் தெளிவுபெற்றுவிட்டால், மக்களை ஏய்த்துப் பிழைத்துச் சுரண்டிக்கொழுக்கும் கொழுப்பெடுத்தாடும் வர்க்கங்களின் நலன்கட்கு கேடு நேர்ந்துவிடும் என்பதால், மக்கள் அரசியல்மயப்படுவது இயன்றளவு தடுக்கப்பட்டு, அவர்களது கண்களுக்கும் காதுகளுக்கும் அரசியல் நீக்கம்செய்யப்பட்ட செய்திகள் மட்டுமே செல்கின்றது என்பதை ஆளும் அதிகார வர்ர்க்கங்களும் அவற்றின் நலன்கட்கான அரசுகளும் உறுதிசெய்த வண்ணமே இருக்கும். சுருங்கச் சொன்னால், எவையெல்லாம் (விளையாட்டு, திரைப்படம், இன்ன பிற பொழுதுபோக்கு விடயங்கள்) அரசியலுக்கு அப்பாற்பட்டவை என மக்களிடம் கருத்தூட்டம் செய்யப்படுகிறதோ, அவற்றிலெல்லாம் நுண்ணரசியல் நிரம்பிக் கிடக்கும். அப்படியாக, அரசியலுக்கு அப்பாற்பட்டவையாகச் சொல்லப்படுவனவற்றின் நுண்ணரசியலைப் புரிந்துகொள்வதே அரசியல் அறிகைத்திறன் எனலாம்.

விளையாட்டின் அரசியல் எவ்வாறு உலக வரலாற்றுப் போக்கில் வெளிப்பட்டு நின்றது, நிற்கின்றது என தொகுத்து நோக்கினால் விளையாட்டின் அரசியலின் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். அப்படியான வரலாற்று நிகழ்வுகளில் சில;

Max Schmeling என்ற சேர்மனின் குத்துச்சண்டை வீரனிற்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆபிரிக்க அடியைக்கொண்ட கறுப்பினத்தவரான Joe Louis என்ற குத்துச்சண்டை வீரரிற்கும் 1936 இல் இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் Max Schmeling வெற்றிபெற்றான். Max Schmeling இனால் சேர்மனுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த வெற்றியானது.  ஆரிய மேலாண்மைவாதத்தினதும் சேர்மன் நாட்டின் வெற்றிப் பெருமைகளினதும் அடையாளமாக கருதப்பட்டு சேர்மனியர்களால் ஏற்றிப்போற்றிக் கொண்டாடப்பட்டது.

இந்தப் போட்டியில் அமெரிக்க வீரர் Joe Lousis தோல்வியடைந்ததையிட்டு அமெரிக்கர்களின் உளவெளிப்பாடு எப்படி இருந்தது என்பதை உலகின் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான Langston Hughes பின்வருமாறு பதிவுசெய்கிறார்.

“வளர்ந்த ஆண்கள் குழந்தைகள் போல அழுவதையும், பெண்கள் தலையில் கைவைத்தபடி குந்தியிருந்ததையும், மக்கள் விம்மி விம்மி அழுவதையும் நான் பார்த்தேன்”, என்கிறார்.

அதேநேரத்தில், இந்தப்போட்டியில் Max Schmeling வெற்றிபெற்றவுடன் “இந்தப் போரில் (போட்டியல்ல போர்) எனது வெற்றிக்காக சேர்மன் மக்கள் நம்பிக்கையுடனும் வேண்டுதல்களுடனும் என்னுடன் உடன் இருந்தார்கள். அதுவே எனக்கு ஆன்ம பலத்தையும் ஆற்றலையும் தந்தது” எனக் கருத்துத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இவ்விரு குத்துச்சண்டை வீரர்களும் தமது நாட்டிற்காக மீண்டும் மோதும் வாய்ப்பு உருவாகியது. அந்தப் போட்டி ஏற்பாடாகியதைத் தொடர்ந்து, “கறுப்பனால் வெல்ல முடியாது. ஆரிய மேலாதிக்கக் குருதியோடும் சேர்மனியனை கறுப்பனால் வெல்ல முடியாது” என்றவாறு இழிவான செய்திகளை சேர்மனின் ஆரிய இனவெறியினர் பரப்பத்தொடங்கினர். இதனால், அமெரிக்காவின் கறுப்பினத்தவர்கள் சீற்றமடைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். போட்டியை முன்னிட்டு அப்போதைய அமெரிக்க அதிபரான Franklin Roosvelt, குத்துச்சண்டை வீரர் Joe Lousis இனை அழைத்து “சேர்மனினைத் தோற்கடிக்க உன் போன்றவர்களின் உடலுறுதி எமக்குத் தேவை” எனக் கூறினார். அந்தப் போரில் Joe Lousis வெற்றிபெற்றார். அந்த வெற்றியானது ஆரியமேலாண்மைக் கூச்சலுக்குக் கொடுத்த நெற்றியடியாகவே பார்க்கப்பட்டது.

இசுரேல் பாலத்தீன மக்களைப் படுகொலைகள் செய்து அந்த மக்களின் தாயகமண்ணை வன்கவரும் கொடுமைகளுக்கு எதிராக இசுரேலுக்கு பன்னாட்டளவில் அழுத்தம் ஏற்படும்வகையிலும் இசுரேலின் நரபலிவேட்டையை வெளிக்கொணரும் வகையிலும் 1976 ஆம் ஆண்டு இசுரேலில் நடைபெற்ற சதுரங்கச் சுற்றுப்போட்டித் தொடரை உலகின் பலநாடுகள் புறக்கணித்தன.

நலிவானவர்கள், யூதர்கள் மற்றும் ஏனைய விரும்பத்தகாதவர்களைக் களையெடுக்கும் வாய்ப்பாகவே கிட்லர் விளையாட்டினை நோக்கியதோடு 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை, ஆரிய மேலாண்மையை நிறுவவும் “சேர்மனியர்” என்ற பெருமிதத்தை சேர்மனியர்களின் உள்ளத்தில் ஆழமாக ஊன்றச் செய்யும் ஓர் அரங்காகவே பயன்படுத்தினார்.

பாலத்தீனியர்களுக்கு எதிராக இசுரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலைகளுக்கும் நரபலிவேட்டைகளுக்கும் பழிதீர்க்கும் பதிலடி நடவடிக்கையாக “கறுப்பு செப்டெம்பர்” என்ற போராட்ட அமைப்பு 1972 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அணித்தமாக இருந்த இசுரேலின் விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணி மீது மேற்கொண்ட தாக்குதலில் 11 இசுரேலிய விளையாட்டு வீரர்கள் பலியானார்கள்.

சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானித்தான் மீதான வன்கவர்வைக் கண்டித்து 1980 ஆம் ஆண்டு சோவியத் தலைநகரில் 1980 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியினை பெரும்பாலான மேற்குலக மற்றும் மேற்குலக சார்புநிலை நாடுகள் புறக்கணித்தனர். இதற்கான பதிலடியாக, 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை சோவியத் ஒன்றியமும் அதனது சார்புநிலை நாடுகளும் புறக்கணித்தன.

இசுரேலிய விளையாட்டு வீரர்கள் அரபுதேசங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு வருகைதர முடியாதவாறு அவர்களுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

1971 ஆம் ஆண்டில் சீனத் தலைவர் மாவோ சேதுங், அமெரிக்காவின் அதிபர் Richard Nixon ஐ அழைத்து அமெரிக்காவுடன் நாடுகளுக்கிடையிலான நட்புறவுகொள்ளும் அடையாளமாக அமெரிக்காவின் மேசைப்பந்து அணியை சீனாவுக்கு அனுப்பிவைக்கக் கோரியதைத் தொடர்ந்து, போட்டி நடைபெற்றதுடன், 20 ஆண்டுகளாகச் சீனா மீது அமெரிக்கா விதித்த வர்த்தகத்தடையை அமெரிக்கா விலக்கியது.

தென்னாபிரிக்காவின் வெள்ளைநிறவெறி அரசின் இழிவான ஆட்சியமைப்பினை உலகரங்கில் அம்பலப்படுத்தவும் வெள்ளைநிறவெறி அரசின் மீது பன்னாட்டழுத்தத்தை ஏற்படுத்தி அதன் கொடுங்கோல் நிறவெறியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோடு தென்னாபிரிக்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்கும் நடைமுறை உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது. 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தென்னாபிரிக்க வெள்ளைநிறவெறி அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நேர்த்தியான துடுப்பாட்டவீரரும் மிதவேகப் பந்துவீச்சாளருமான Basis D Oliveria என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த தென்னாபிரிக்கநாட்டவரான என்பவர், தென்னாபிரிக்காவில் நிலவிவந்த வெள்ளைநிறவெறி ஆட்சியினால் தமது நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பற்றவராக இங்கிலாந்திற்குக் குடியேறி, அங்கு துடுப்பாட்ட கழகங்களில் இணைந்து தனது தனித்திறனைக்காட்டி, இங்கிலாந்து அணிக்குத் தெரிவானார். ஆனாலும், தென்னாபிரிக்காவின் வெள்ளைநிறவெறி அரசைப் பகைக்க விரும்பாத இங்கிலாந்து அரசானது, 1969 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் வெள்ளைநிறவெறித் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் Basis D Oliveria இங்கிலாந்துக்காக விளையாட அனுமதி மறுத்தது.

அவுத்திரேலியா துடுப்பாட்ட அணியானது நிறவெறியில் எல்லோரிலும் பன்மடங்காக இருந்ததுடன், அவுத்திரேலியாவின் டொன் பிரட்மன் வெளிப்படையாக வெள்ளைநிறவெறியுடன் செயற்படுபவராக இருந்ததுடன் தென்னாபிரிக்க வெள்ளைநிறவெறி அரசிற்கான தனது ஆதரவு நிலைப்பாடாக அவுத்திரேலியாவின் விளையாட்டுத் திடலில் Basis D Oliveria விளையாடக்கூடாது என்ற முடிவில் இருந்தார். ஆனாலும், மாந்தத்தை நேசிக்கும் அறவுணர்வாளர்கள் நடத்திய போராட்டங்களால் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டவீரன் என போற்றப்படும் டொன் பிரட்மனின் நிறவெறி விருப்பு நிறைவேறவில்லை.

சிம்பாவேயில் 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை முன்னிட்டு நிகழ்ந்த நிகழ்வுகளினால் துடுப்பாட்ட அணியின் தெரிவுக்குழு வரை சிம்பாவே அரசின் அரசியல் மட்டுமே முடிவுசெய்ததால், சிம்பாவே அணியானது பன்னாட்டு துடுப்பாட்ட அவையிலிருந்து (ICC)  விலக்கிவைக்கப்பட்டது.

“தெற்காசியா மற்றும் கரீபியன் பகுதிகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் குடியேறி வாழ்பவர்கள் இங்கிலாந்து அணியுடனான துடுப்பாட்டப் போட்டிகளில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் பிரித்தானியாவுக்கு உண்மையாக இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியும்” என பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த Norman Tebbit தெரிவித்தார்.

1987 இல் சோவியத்தின் ஆப்கானித்தான் மீதான வன்கவர்வைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகித்தானுக்குமிடையில் பெரும் போர் மூளும் நிலை ஏற்பட்ட போது, பாகித்தானின் அன்றைய அதிபராக இருந்த ஜெனரல் சியா உல் கக் இந்தியாவின் செய்ப்பூரில் நடந்த துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்க நேரில் வந்து பாகித்தானின் போரைத் தவிர்த்து நட்புறவைப் பேணவிரும்பும் நெல்லெண்ண சமிக்ஞையை இந்தியாவுக்குக் காட்டினார்.

பின்பு பாகித்தானிக்கும் இந்தியாவுக்குமிடையில் முறுகல் உச்சநிலையிலிருந்த 2000 ஆம் ஆண்டில் டெல்லியில் பாகித்தானுக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்று வந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, இந்துத்துவ வெறியர்கள் விளையாட்டுத்திடலுக்குள் நுழைந்து ஆடுகளமான புற்தரையை சேதப்படுத்தினர். அதற்குப் பதிலடியாக, பாகித்தானின் கராச்சியில் இந்திய வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது விளையாட்டுத்திடலுக்குள் உள்நுழைந்தவர்கள் வீரர்களை கற்களால் தாக்கினர். அதைத் தொடர்ந்து இந்தியா- பாகித்தானிற்குமிடையில் விளையாட்டுகள் நடைபெறாமல் இருந்தது. இரு நாட்டிற்குமிடையில் பகையுணர்வைத் தளர்த்தும் நல்லெண்ண முனைப்பாக 2004 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கும் பாகித்தானுக்குமிடையில் துடுப்பாட்டப்போட்டி துவங்கிவைக்கப்பட்டு, பயண அனுமதிகளில் இரு நாடுகளும் காட்டி வந்த இறுக்கம் தளர்த்தப்பட்டு, இரு நாட்டுக்குமிடையில் இயல்பான போக்குவரத்து நடைமுறைகள் பேணப்பட்டன. பாகித்தானின் அதிபரான ஜெனரல் பர்வேஸ் முசரப் 2005 ஆம் ஆண்டில் நேரில் இந்தியாவுக்கு வந்து, இந்தியா- பாகித்தானுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியைப் பார்வையிட்டு, இரு நாடுகளுக்குமிடையிலான பதட்டச் சூழலைக் குறைத்தார்.

சீனா துடுப்பாட்டத்தில் பங்கெடுப்பதில்லை. ஆனால், துடுப்பாட்டம் என்ற விளையாட்டின் அரசியலில் சீனாவால் பங்களிக்காமல் இருக்க முடியவில்லை. மேற்கிந்தியதீவில் துடுப்பாட்ட போட்டிகளை நடத்தக்கூடிய விளையாட்டரங்குகள் அமைக்க சீன அரசு மேற்கிந்தியதீவுகளுக்கு 132 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளித்தது. ஆனால், பன்னாட்டு துடுப்பாட்ட அவையின் பத்தாண்டு பாதீடே வெறும் 70 மில்லியன் அமெரிக்க டொலர் தான் என்பதை இங்கு நோக்க வேண்டும். இவ்வளவு பாரிய பணத்தை சீனா மேற்கிந்திய துடுப்பாட்டத்திற்கு ஒதுக்குவதன் அரசியல் என்னவென்றால், சீனா வன்கவர்ந்துவிட நிற்கும் தாய்வான் நாட்டுக்கு ஆதரவாக தாய்வான் நாட்டோடு நெருங்கிய உறவுகொள்ளும் நாடுகளில் கரீபியன் பகுதி நாடுகள் முதன்மை வகிக்கின்றன. இதைத் தடுக்கவே, சீனா துடுப்பாட்ட விளையாட்டரங்குகளை மேற்கிந்தியதீவுகளில் அமைக்க நிதியளிக்கிறது.

வடகொரியாவின் அரச தலைவராக இருந்த Kim Jang- il என்பவர், விளையாட்டானது நாட்டின் உறுதிக்கு உரமூட்டுவதாகவும், நாட்டுக்கு உலகரங்கில் பெருமை சேர்ப்பதாகவும் கூறி விளையாட்டை ஊக்குவித்ததோடு, நாட்டு மக்கள் உறுதிமிக்க மற்றும் செயற்திறன்மிக்கவர்களாக உருவாவதற்கு விளையாட்டினை ஊக்குவித்தாக வேண்டும் எனக் கூறி அதற்கமைய செயற்பட்டமையால், உலக அளவில் ஒதுக்கிவிடப்பட்டுத் தனிமைப்பட்டு நிற்கும் வடகொரியாவானது உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட அணியான இத்தாலியை 1966 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி கொண்டது.

சிறிலங்கா துடுப்பாட்ட அணி குறித்து வெளியாகி வந்த அரசியல் செய்திகளை பட்டியலிட்டு நோக்குவதன் மூலம், சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு சிறிலங்கா துடுப்பாட்டம் எவ்வாறெல்லாம் துணையாக நிற்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

அவையாவன;

பிரித்தானியரின் காலத்தில் அங்கிலிகன் கிறித்துவ அவையினால் நிறுவி நடத்தப்பட்ட கல்லூரிகளின் மூலம் துடுப்பாட்டம் என்ற விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பாக அத்தகைய கல்லூரிகளில் கற்போர்கள் கல்லூரிக்காலத்தின் பின்பும் இணைந்து துடுப்பாட்டத்தில் ஈடுபடத்தக்க வகையில் உருவாக்கப்பட்ட துடுப்பாட்டக் கழகங்களாக Sinhala Sports Club (SSC), Tamil Union, Burgher Recreation and Moors Club என்பனவே இருந்தன. இந்தக் கழகங்களில் சிங்களவர், தமிழர், பறங்கியர் என இன அடிப்படையில் மேட்டுக்குடிகளே இடம்பிடித்துத் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு ஐந்துநாள் போட்டியில் ஆடும் தகுதிமிக்க அணியென்ற சிறப்பை (Test Cricket Status) 1981 ஆம் ஆண்டில் பெற்றுக்கொடுத்தவர் அன்றைய அமைச்சர் காமினி திசநாயக்கா. இவரே அஸ்கிரிய விளையாட்டுத்திடலையும் முன்னின்று அமைத்தவர். ஈழத்தமிழரின் மீதான பண்பாட்டு அடிப்படையிலான இனப்படுகொலையென (Cultural Genocide) வரலாற்றில் பதிவாகிய யாழ் நூலக எரிப்பென்பது காமினி திசநாயக்கா தலைமையிலேதான் நடைபெற்றது என சிங்களவர்களே பதிவுசெய்யும் அளவுக்கு தமிழின வெறுப்புணர்வு கொண்ட சிங்களக் காடையனான காமினி திசாநாயக்கவே சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் வளர்ச்சிக்குக் கால்கோள் இட்டதாக சங்ககார என்ற சிறிலங்காவின் துடுப்பாட்டவீரன் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லோட்ஸில் ஆற்றிய உரையில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சனத் ஜெயசூரியா, அர்சுன ரணதுங்க போன்ற சிறிலங்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்கள் சிங்கள பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அத்துடன் சனத் ஜெயசூரியா மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் துடுப்பாட்ட அணியிலிருந்து ஓய்வுபெற்று இரண்டாண்டுகளின் பின்பாக 2012 இல் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டார் என்பது உலகிற்கே புதிரான விடயம். அந்தளவுக்கு சிறிலங்கா துடுப்பாட்டம் என்பது சிங்கள அரசாங்கத்தின் அணிகளில் ஒன்றாகவே செயற்பட்டது.

சிங்கள இராணுவத்தின் எறிகணை செலுத்தும் பிரிவின் படையினனான அஜந்த மெண்டிஸ் என்பவன் சுழல் பந்துவீச்சாளராக சிறிலங்கா அணிக்குத் தெரிவாகி மிகக் குறுகிய காலத்திலே நடைபெற்ற அவனது திருமணவிழாவினை அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே முன்னின்று, உடனிருந்து நடத்திவைத்தார். ஒரு நாட்டின் சனாதிபதியானவர் துடுப்பாட்ட அணியின் ஒரு புதுமுக வீரரின் திருமணத்தை நேரில் சென்று நடத்திவைத்தமையை வேறெங்கும் காணமுடியாது. இது சிறிலங்கா இராணுவம்- சிறிலங்கா துடுப்பாட்டம்- சிங்கள அரசு என்பவற்றின் ஒட்டுறவின் முதன்மையைக் காட்டுகிறது.

மகிந்த ராஜபக்ச சனாதிபதியாக இருந்தபோது, தமது குடும்பப்பெயரிலேயே “ராஜபக்ச விளையாட்டரங்கு” என்ற பெயரில் துடுப்பாட்டத்திற்கான விளையாட்டுத்திடலை பெரும் பொருட்செலவில் அமைத்தார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் பங்கேற்க புறப்படுமுன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அப்போதைய அணித்தலைவர் மகேல ஜெயவர்த்தன, தாம் உலகக் கிண்ணத்தை வென்று அதில் கிடைக்கும் வருவாயை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்களுக்காக வழங்கப்போவதாகத் தெரிவித்தார். அப்போது சிறிலங்காவின் தமிழர் தாயகம் மீதான வன்கவர்வு தீவிரமடைந்திருந்த நிலையில், தமிழர்களைக் கொல்லவே தமது வெற்றிப் பணம் பயன்பட வேண்டுமென நேரில் சொல்லாமல் சொல்லிச் சென்று சிறிலங்காவின் துடுப்பாட்டம் என்பது இனப்படுகொலை துடுப்பாட்டம் என தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் மகேல ஜெயவர்த்தன.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதியாட்டத்தில் சிறிலங்காவின் ஆட்டத்தைப் பார்க்க, பலத்த நெருக்கடிகளின் மத்தியில் மகிந்த ராஜபக்ச நேரில் சென்றார்.

இந்தியாவில் IPL போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருந்த குமார் சங்ககார மற்றும் மகேல ஜெயவர்த்தன ஆகியோர் தமது மனைவிமாருடன், இந்தியாவில் புகலிடம் புகுந்துள்ள திபெத்திய தலைவர் தலய்லாமாவினைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த வேளையில், அந்தச் சந்திப்பைச் செய்யக் கூடாதென சிறிலங்கா அரசாங்கம் சங்ககாரவையும் மகேல ஜெயவர்த்தனவையும் அறிவுறுத்தியது. ஏனெனில், அப்படியான சந்திப்பு சீனாவை சீற்றமடையச் செய்யும் என்பதனாலாகும்.

தமிழர்களை வெற்றிகொண்டு முழு இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் முனைப்போடு அம்மணி சந்திரிக்காவும் அவரது மாமன் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் கங்கணம் கட்டி முழு அளவிலான போரை முன்னெடுத்து வகைதொகையின்றித் தமிழர்களைக் கொன்றொழித்து வருகையில், வன்னிக்குள் போராளிகளும் போராடும் மக்களும் அவதிப்படுகையில், கொஞ்சம் கூட மனச்சாட்சியில்லாமல், வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமல போன்ற நகரங்களில் வாழ்ந்த தமிழீழ மக்களில் கணிசமானோர் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணி உலகக் கிண்ணம் வெல்ல வேண்டுமென்று வேண்டிக் கிடந்ததோடு, சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு முழுநேர அடிமையாகி சிறிலங்கனாக இருந்தனர். சிறிலங்காவை பன்னாட்டளவில் பெருமைப்படுத்தவும், சிறிலங்கன் என்போர் வெற்றிக்குரியவர்கள் என்ற எழுகை உளவியலை ஏற்படுத்தவும் 1996 ஆம் உலகக் கிண்ணத்தை சிறிலங்கா வெற்றிபெற்றமையை அப்போதைய சனாதிபதி அம்மணி சந்திரிக்கா பயன்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழர்களில் பலரை சிறிலங்கனாக்க 1996 ஆம் ஆண்டில் சிறிலங்கா உலகக் கிண்ணத்தை வென்றமை பயன்பட்டது.

சிங்கள மக்கள் சிறிலங்கா துடுப்பாட்ட அணிவீரர்களை “Ape Kollo” (Our boys) என்றே அழைப்பர். தமது வீட்டுப்பிள்ளைகளாகவும், தமக்கான பிள்ளைகளாகவுமே அவர்கள் சிறிலங்கா துடுப்பாட்டவீரர்களை மனதிலிருத்தும் அளவுக்கு தமது சிங்களப் பெருமித அடையாளமாக அவர்கள் சிறிலங்கா துடுப்பாட்ட அணியைப் பார்க்கிறார்கள். இந்த இடத்தில், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து மறவழியில் தமது இன்னுயிர்களை எக்கணமும் துறக்க அணித்தமாக நின்று போராடும் புரட்சிகர இளையோரை தமிழர்கள் தம்மைக் காக்கும் காவல் தெய்வங்களாக அன்பைப் பொழிந்து அவர்களை பொடியங்கள் என அழைக்கும் வழக்கம் இன்று வரையுண்டு. “பொடியங்கள் விட மாட்டங்கள். சிங்கள அரசிற்கும் அதனது இராணுவத்திற்கும் பதிலடி கொடுப்பாங்கள்” என்று எமது தமிழ்மக்கள் போராளிகளை மனதிலிருத்துவதற்கு ஒப்பாகவே சிங்கள துடுப்பாட்ட அணி வீரர்களை சிங்கள மக்கள் மனதிலிருத்துகிறார்கள் என்பது ஒரு கூடுதல் செய்தி.

குமார் சங்ககாரவின் துடுப்பாட்ட அரசியல்

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக அறியப்படும் குமார் சங்ககார என்பவர் செய்யும் துடுப்பாட்ட அரசியல் மிகவும் ஆபத்தானது. அங்கிலிகன் திருஅவையின் மிகவும் மேட்டுக்குடிகள் கற்கும் கல்லூரியான கண்டி/திருத்துவக் கல்லூரியில் கல்விகற்ற இவர் மென்மையாகவும் கனவான் போலவும் பேசி காலனிய அடிமை மனநிலையில் சற்றும் தொய்வின்றி இருக்கும் அரசியற் புரிதலற்ற தமிழர்களிடத்திலும் இடம்பிடிக்கக் கூடியவர். இவர் போன்ற துடுப்பாட்டவீரரின் அரசியலை உற்றுநோக்கினால், அவை மிகவும் கேடான நுண்ணரசியலின் வெளிப்பாடென விளங்கிக்கொள்ளலாம். இவரின் கனவான் தன்மையிலான பேச்சுகளில் தமிழிளையோர் பலர் ஏமாந்துபோகிறார்கள். பேசும் போது “நான் தமிழ், சிங்களம், முஸ்மிம், பறங்கியர்…. நான் இந்து, இசுலாம், பௌத்தம், கிறித்தவம்” என பேசும் இவரின் பேச்சை ஆழமாகப் பார்த்தால் “இனப்படுகொலை சிறிலங்காஎன்ற உலகரங்கில் அறியப்பட வேண்டிய சிறிலங்காவினைசிறிலங்கா கிரிக்கெட்என உலகில் பேசுபொருளாக்கி இனப்படுகொலை சிறிலங்காவுக்கு வெள்ளையடிப்புச் செய்ய சிறிலங்காவுக்குத் தேவைப்படும் ஒருவராகவே சங்ககார இருக்கிறார். இவரின் கனவான் தோற்றமும் பேசும் மொழியில் அவர்காட்டும் கனவான் பாசாங்கும் சிறிலங்காவுக்கு வெள்ளையடிக்க பயன்படும் என்பது சிறிலங்காவின் அதிகார மையங்களின் கணிப்பாகும்.

2011 ஆம் ஆண்டு இவர் இங்கிலாந்தின் லோட்சில் ஆற்றிய நீண்ட உரையில், தமிழினவெறுப்புக் கொலையாளியான காமினி திசாநாயக்காவை துடுப்பாட்ட வளர்ச்சியின் தூண் என்றாற் போல வாயாரப் புகழ்ந்து உரையைத் தொடங்கியதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் அதனை போரில் வென்றமை சிறிலங்காவின் மகிழ்ச்சியான பக்கம் என்றும் சிலிர்ப்போடு பேசியதுடன், சிறிலங்கா கிரிக்கெட் அவையினுள் வெளிப்படைத்தன்மை, சிறந்த நிருவாகம், பொறுப்புக்கூறல் என்பன முறையாக இல்லை என்பதுடன் முறைகேடுகளும் இருக்கின்றன என சுட்டிப் பேசியதோடு, பன்னாட்டு துடுப்பாட்ட அவையானது (ICC) தமது உறுப்பு நாடுகளில் இத்தகைய சிக்கல் இருக்கும் போது அவற்றை உறுப்புரிமையிலிருந்து விலக்கிவைத்து அழுத்தம் கொடுக்கலாம் எனவும், ஆனால் சிறிலங்கனாக தமது கிரிக்கெட் அவைக்குள் இருக்கும் இத்தகைய சிக்கலை சரிசெய்யும் ஆற்றல் தமக்கு உண்டு எனவும் அடித்துக் கூறினார். உண்மையில், சங்ககாரவின் இந்த உரையானது சிறிலங்கா தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு அளவில் பல அழுத்தங்களை எதிர்கொண்ட நேரத்தில் ஆற்றப்பட்டது. பன்னாட்டு உசாவல்கள் “இனப்படுகொலை சிறிலங்கா” வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டுமென அறத்தையும் மாந்தத்தையும் நேசிக்கும் குரல்கள் எழுந்த நேரத்தில், சங்ககார வேண்டுமென்ற தமது சிரிக்கெட் அவையில் சிக்கல்கள் இருப்பதை பன்னாட்டரங்கில் வெளிப்படையாக பேசும் அளவுக்கு தனக்கு கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் சிறிலங்காவில் கிடைக்கின்றதெனக் காட்டவே இவ்வாறு பேசிப் பின் முடிவில் சிறிலங்காவுக்கு தனது சிக்கலை தானே தீர்க்கும் ஆற்றல் உண்டென கூறியதோடு வெளித்தலையீடு தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டி, இனப்படுகொலை குற்றச்சாட்டில் பன்னாட்டு உசாவலுக்கு சிறிலங்கா உட்பட வேண்டுமென எழுந்த குரல்களுக்கு கிரிக்கெட் அவைச் சிக்கலை கையிலெடுத்து நாசூக்காக சங்ககார தனது உரையில் பதிலளித்தார்.

சங்ககார லோட்சில் ஆற்றிய இந்த நீண்ட உரை பற்றி “இந்து” நாளிதளுக்காக அதனது ஆசிரியர் ராம் மகிந்த ராஜபக்சவிடம் கண்ட நேர்காணலில், “சங்ககார சிறில்னக்காவின் கிரிக்கெட் அவை பற்றியும் அதனது அரசியல் தலையீடுகள் பற்றியும் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன்வைக்கிறாரே… அதை எப்படிப் பார்க்கிறீர்கள் ” என மகிந்த ராஜபக்சவிடம் ராம் கேட்ட போது “அது அவருடைய கருத்து. சிலருக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அது அவரது கருத்துவெளிப்பாடு. நான் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், அந்த உரையில், விடுதலைப் போராட்ட வீரர்களாக பலர் காட்ட முனையும் விடுதலைப் புலிகளை சங்ககார உலக அரங்கில் பயங்கரவாதிகள் என பதிவு செய்துள்ளார். அதனால் நான் அதனை வரவேற்கிறேன்” என மகிந்த ராஜபக்ச பதிலளித்தார். இந்தப் பதிலில் இருந்து சங்ககாரவின் லோட்ஸ் உரையின் நுண்ணரசியலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த விடத்தில் பற்றி சொல்லிச் செல்ல வேண்டும். Trevor Grant என்பவர் “The Age” என்ற ஏட்டில் துடுப்பாடம் குறித்த ஆய்வுகள், செய்திகள், திறனாய்வுகள் போன்றவற்றை எழுதி வந்த புகழ்பூத்த துடுப்பாட்ட எழுத்தாளர் ஆவார். ஈழத்தில் தமிழர்கள் சிறிலங்கா அரசினால் இனக்கொலைக்குள்ளாக்கப்பட்டதைப் பற்றி செய்திகள் வாயிலாக அறிந்து மனம் நொந்து போய், அந்த இனக்கொலையைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முனைப்புக்கொண்டிருந்த அவர் பின்பு, இனக்கொலை நடந்தேறிய பின்பாக அதற்கு நீதி வேண்டுமென உலகரங்கில் குரலெழுப்பியதோடு, தனது துடுப்பாட்டம் சார்ந்த கட்டுரை எழுத்துகளைக் குறைத்து, சிறில்ங்கா அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை பற்றி எழுதிவந்தோடு, அவத்திரேலியாவில் புகலிடம் தேடிவந்த தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து அவர்களின் வழக்குகள் மற்றும் நாடுகடத்தப்படாமல் இருப்பதற்கான செயற்பாடுகள் என தொடர்ந்து தமிழர்களுடன் செயற்பட்டு வந்ததோடு, “சிறிலங்காவின் துடுப்பாட்டமானது சிறிலங்கா மேற்கொண்ட இனப்படுகொலையை மறைக்க இடமளிக்க மாட்டேன்” (I won’t let Sri Lankan cricket hide genocide” என உறுதியுடன் எழுதியும் முழங்கியும் வந்தார். அவரது இந்த பரப்புரையின் விளைவாகவே, இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக் அதேட்டன் என்பவர் “சனல்-4” இல் வெளிவந்த ஆவணப்படத்தை பார்த்து மிகவும் துன்பத்தில் தான் இருப்பதாகவும், இப்படியான சிறிலங்கா நாட்டின் துடுப்பாட்ட அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதற்கு இடங்கொடுக்கக் கூடாது” எனவும் “இலண்டன் ரைம்ஸ்” ஏட்டில் தனது கருத்தை வெளிப்படுத்தி “சிறிலங்கா துடுப்பாட்டத்தை புறக்கணிப்போம்” என்ற அரசியல் செயற்பாட்டுக்கு உறுதி சேர்த்தார். Trevor Grant இன் முழு முயற்சியிலேயே 2012 ஆம் ஆண்டு அவுத்திரேலியாவின் மெல்போர்ன் என்ற இடத்திற்கு துடுப்பாட்டப் போட்டியில் பங்கேற்க வந்த சிறிலங்கா அணிக்கு எதிராக “சிறிலங்கா துடுப்பாட்டத்தை புறக்கணி” என்ற முழக்கத்தோடு போராட்டம் நடைபெற்றது. காலஞ்சென்ற Trevor Grant அவர்களின் மாந்தநேயத்திற்கும் அறவுணர்வுக்கும் அரசியல் நேர்மைக்கும், தமிழர்கள் மீது அவர் காட்டிய அன்பிற்கும் தமிழர்கள் நாம் என்றும் நன்றியுடன் Trevor Grant இனை நினைவுகூருவதோடு அவர் எமக்காகத் தொடங்கி விட்டுச் சென்ற “சிறிலங்காவின் துடுப்பாட்டத்தை புறக்கணி” என்ற அரசியற் செயற்பாட்டை சோர்ந்து போகாமல் பன்னாட்டரங்கில் முன்னெடுக்க வேண்டும் என உறுதிகொள்ள வேண்டும்.

இவ்வாறாக மெல்போர்ன் விளையாட்டுத் திடலின் முன்பாக கூடி சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு Trevor Grant இன் வழிநடத்தலில் போராடிய தமிழிளையோர்கள் பற்றி சங்ககார தனக்கேயுரிய மேட்டுக்குடிக் கனவான்களின் கொடுப்புக்குள் சிரிப்பொன்றுடன் எள்ளிநகையாடலுடன் “எமக்குக் கிரிக்கெட் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆனால், அவர்கள் (போராட்டக்காரர்) வேறு ஏதோ நிகழ்ச்சிநிரலுக்காக கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள்” என்று செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதே சங்ககார தான் “நாங்கள் நாட்டின் தொழில்முறையற்ற தூதுவர்கள் (Unofficial Ambassadors)” என தமது துடுப்பாட்ட வீரர்கள் சார்பில் பேசினார். மெல்போர்னில் வைத்து மேலும் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்ககார “வெளிநாட்டவர்கள் சிறிலங்காவுக்கு வருகை தந்து அங்குள்ள நிலைமைகளைப் பார்த்து, சிறிலங்கா இப்போது எப்படி இருக்கிறது என அறிந்துகொள்ளுங்கள். அப்படி நீங்கள் வந்து பார்த்தால் தான் உங்களது சிறிலங்கா தொடர்பான பார்வையை மாற்றுவீர்கள்” என உலக சமூகத்திற்கு அறைகூவல் விடுத்து சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரன் என்ற நிலையிலும் பன்மடங்கு மேற்சென்று சிறிலங்காவின் தூதுவராக சங்ககார செயற்பட்டார்.

தமிழர்கள் ஈழமண்ணில் இனப்படுகொலைக்குள்ளானதால் வெஞ்சினத்தோடு இருந்த தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மண்ணில் சிங்கள துடுப்பாட்டவீரர்கள் IPL போட்டிகளில் பங்கேற்க இடமளியோம் என உறுதியுடன் போராடி அதில் வெற்றியும் பெற்றமையுடன் சிறிலங்கா அரசிற்கு தமிழர்கள் ஒரு செய்தியையும் சொன்னார்கள். அது குறித்து கருத்துத் தெரிவித்த குமார் சங்ககார “இந்தியா என்பது சென்னை மற்றும் தமிழ்நாட்டிலும் மிக மிக பெரியது. தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் ஏனைய பகுதிகள் எம்மை மிகவும் வரவேற்கின்றன” என தமிழர்களை தான் புறக்கணிப்பது போன்ற உடல்மொழியில் கூறினார். அத்துடன் அப்போது சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிறிலங்காவின் முன்னாள் அணித்தலைவர் அர்சுன ரணதுங்கா IPL போட்டிகளை சிறில்ங்கா துடுப்பாட்ட வீரர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த சங்ககார “தமிழ்நாடு தான் எமக்கெதிராக இருக்கிறது. தமிழ்நாடு வெறுமனே இந்தியாவில் ஒரு மாநிலம். எனவே, தமிழ்நாட்டின் எதிர்ப்பிற்காக நாம் இதனைப் புறக்கணிக்க முடியாது. இந்தியா- சிறிலங்கா என்பது இரு நாடுகள் தொடர்பானவை” எனப் பதிலளித்து தமிழ்நாடு தேசம் என்ன தான் 9 கோடி தமிழர்களை மக்கள்தொகையாகக் கொண்டு இருந்தாலும் இறைமைகொண்ட நாட்டினைக் கொண்ட 2 கோடி சிங்களவர்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்றும் இறைமையுடைய சிறிலங்காவுக்கு இறைமையுடைய இந்தியாவே நாடு-நாடு என்ற அடிப்படையில் நிகரானது என சொல்லாமல் சொல்லியதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் முகத்தில் காறி உமிழ்ந்து துப்பியும் சென்றிருக்கிறார்.

சங்ககார பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த போது, அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலரும் இன்றைய சிறிலங்காவின் சனாதிபதியுமான கோத்தாபாய இராயபக்ச சங்ககாரவை வாழ்த்திய செய்தியில் “நான் ஒரு விளையாட்டு வீரரையோ/ வீராங்கனையையோ, நாட்டின் இராணுவத்தினரின் முதன்மையின் கீழ்வைத்து எடை போட மாட்டேன் (இராணுவத்தினர் நாட்டுக்கு வழங்கும் சேவைக்கு ஒப்பானது ஒரு விளையாட்டு வீரனின் நாட்டுக்கான சேவை)” என குறிப்பிட்டிருந்தார்.

எனவே, மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் நெல்சன் மண்டேலா என்று முத்தையா முரளிதரன் சொல்லிவிட்டார், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி தான் தனது வாழ்வின் மகிழ்ச்சியான நாள் என முரளிதரன் சொல்லிவிட்டார். அதனால், அவர் இரண்டகர். அவரது படத்தை தமிழ்த்திரையுலகு தடைசெய்ய வேண்டும், அதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க முடிவுசெய்திருந்த விசய் சேதுபதி கண்டனத்திற்குரியவர் என்ற விவாதங்கள் இந்த நிகழ்வின் பின்னால் உள்ள அரசியல் கனதியை குறைத்தே நிற்கின்றன. உண்மையில், சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் “ஒரு நாடு ஒரு தேச விளம்பர அணி” அதனது வாளேந்திய சிங்கள வெறி அடையாளத்துடன் தமிழர் மண்ணில் திரைப்படம் வாயிலாக மட்டுமல்ல நாளேட்டில் செய்தியாகக் கூட வரக் கூடாது என்றளவில் சிறிலங்காவின் துடுப்பாட்ட அரசியலை புறக்கணித்து அதை இனப்படுகொலைத் துடுப்பாட்ட அணியென அம்பலப்படுத்த வேண்டும். இங்கு முரளிதரன் தனது உடன்பிறந்தவரின் வணிக நலனுக்கு கேடாகாமல் தடுக்க அவர் செய்த ஏய்ப்புகளிலிருந்து காப்பாற்ற, இராஜபக்சக்களின் அடிவருடியாக செயற்படுகிறார். உண்மையில் முரளிதரனுடன் அரசியல் பேசுவதென்பது நடிகை சகிலாவுடன் அரசியல் பேசுவதற்கொப்பானது. முரளிதரனுக்கு பந்துவீச்சைத் தவிர வேறெதுவும் தெரியாது. ஆனாலும், தமிழர்களை சிங்களவர்கள் நாடற்றவன் என்ற எள்ளலுடன் எவ்வளவு கேவலமாக நடத்துவர் என்பது முத்தையா முரளிதரனுக்கு நன்கு தெரியும். அவர் சிறிலங்கா அணிக்கு ஆட வந்த துவக்க காலத்தில் அவர் இலக்குகளை சாய்த்தாலும், இலக்கு வீழ்த்தப்பட்ட மகிழ்வில் அவரை சிங்கள வீரர்கள் தோளில் தழுவி கட்டியணைத்து வாழ்த்தாமல், கைலாகு மட்டுமே கொடுப்பர். ஆனால், சிங்கள வீரர்கள் தமக்குள் கட்டியணைத்து தழுவி மகிழ்வர். அத்துடன், முரளிதரன் உலகின் மிகச் சிறந்த முதலாவது பந்துவீச்சாளர் என உலகமறிந்த பின்பும் கூட, அஜெந்த மெண்டிஸ் என்ற இராணுவத்தினர் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடியதை வைத்து முரளிதரன் ஓரங்கட்டப்பட்டமையால் மனமுடைந்த முரளிதரன் தான் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இவையெல்லாம் முரளிதரனுக்கு நன்கு தெரியும். இங்கு முத்தையா முரளிதரனுடன் தொங்கிக்கொண்டு நிற்பதை விடுத்து, சிறிலங்கா கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற முழக்கத்துடன் செயலாற்ற வேண்டும்.

விசய் சேதுபதி இந்த முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “800” இனை அரசியல் நீக்கம் செய்து தமிழ் மக்களை ஏமாற்றி ஏய்க்கப் பார்த்தார். அடுத்த ஆண்டு தமிழ்த்திரையுலகில் கோலோச்சும் “தெலுங்கு லொபி” இக்கு வலுச் சேர்க்கும் தி.மு.க ஆட்சிக்கு வரும் எனக் கணித்து தமிழர்களின் குரலை அசட்டை செய்த விசய் சேதுபதி அம்பலப்பட்டுப்போய் நிற்கிறார். என்னவோ, தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாக ஒரு வரி கூட சொல்ல முடியாமல் அவரிடம் ஏதோ ஒரு பெரிய வன்மம் குடிகொண்டிருக்கிறது. சிலவேளை, அது மரபணுக்களில் உள்ளுறைந்துவிட்ட தமிழர்கள் மீதான வன்மமாகக் கூட இருக்கலாம். எனினும், விசய் சேதுபதியுடன் மட்டும் இங்கு தொங்கிக்கொண்டு நிற்க வேண்டியதில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தமிழ்மண்ணில் எந்தப் படைப்புகளும் வெளிவராது என்ற உறுதியான செய்தியையும் அந்தத் தெளிவான அரசியலையுமே நாம் முன்னெடுக்க வேண்டும்.

விளையாட்டின் அரசியல் உலக வரலாற்றுப் போக்கில் சொல்லிச் சென்றுள்ள கனதியான அரசியலையும், சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியைச் சுற்றிக் கிடக்கும் சிங்கள, பௌத்த பேரினவாத அரசியலையும் முழுமையாக விளங்கிக்கொள்ளக் கூடிய அளவில் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்காட்டி மேற்போந்த பத்திகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது. விளையாட்டின் அரசியல் குறித்து அடிப்படைப்புரிதல்கள் ஏதுமின்றி விளையாட்டுத்தனமாக அரசியல் வரட்சியுடன் அலையும் தமிழர்களில் பலர் தமது அறியாமைகளை உணர்ந்து திருந்தி “சிறிலங்கா துடுப்பாட்டத்தை புறக்கணிப்போம்” என்ற அரசியற் செயற்பாட்டுக்கு முன்னின்று பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இப்பத்தி முற்றுகிறது.

-அருள்வேந்தன்-

2020.10.22

 3,911 total views,  3 views today

(Visited 43 times, 1 visits today)