தியாகதீபம் திலீபனின் ஈகம் கற்பித்துச் சென்ற பாடமும் எம்முன்னால் உள்ள கடமைகளும் -மறவன் –

  1. தியாகதீபம் திலீபன் என்பவர் யார்?

தேசிய ஒடுக்குமுறையின் மெய்ந்நிலையை உணர்ந்து கொண்ட அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்ற இளையோர்கள் தமிழீழ தேசிய இன விடுதலைக்கும் நிகரமை (Socialism) சமூக மாற்றத்திற்கும் மறவழிப் போராட்டமே (Armed Struggle) ஒரேயொரு வழியாக எஞ்சி நின்றதனைப் புரிந்து கொண்டமையால், உருப்படியான செயற்றிட்டமெதுவுமின்றி உணர்ச்சிவயமான வெற்றுக் கூப்பாடுகளைப் போடும் பழமைவாத தமிழ் அரசியற் கட்சிகளையோ அல்லது தேசிய இன விடுதலையை முதன்மையானதாகக் கொள்ளாத மரபுவழி மார்க்சிய இடதுசாரிக் கட்சிகளையோ தமது தலைமையாக ஏற்காமல் புரட்சிகர விடுதலை அமைப்புகளில் தம்மை இணைத்துக் கொண்டனர். இவ்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குக் கிடைத்த அரும் பெரும் ஆற்றலே திலீபன் என்ற பெயருடன் புரட்சிகர விடுதலைப் போராளியாக, விடுதலைப் புலியாக தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் தலைமையில் புரட்சிக் கடமையாற்றினார்.

 

  1. தியாகதீபம் திலீபன் என்ன செய்தார்?

மறவழிப் போரை மீயுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்- இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகரமாகச் செயலாற்றிய லெப்.கேணல் திலீபன் தமிழீழ தேசிய விடுதலை என்ற உன்னதமான இலட்சியத்தில் பரந்துபட்ட மக்கள் திரளை அணி திரட்டி அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசியற் பணியில் அயராது உழைத்து வந்தார். தமிழீழ தேசிய விடுதலை, நிகரமை (Socialism) சமூகப் புரட்சி ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படையான அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக பல்வேறு நிருவாகக் கட்டமைப்புகளையும் துணை அமைப்புகளையும் தலைவரின் வழிகாட்டுதலில் தனது முயற்சியால் லெப்.கேணல் திலீபன் நிறுவினார்.

 

  1. இந்த உயரிய இலட்சியங்களை அடைவதற்காக அவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் எவை? அவற்றை எவ்வாறு நிகழ்த்திக் காட்டினார்?

              தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT)

              தமிழீழ மகளிர் அமைப்பு

              சுதந்திரப் பறவைகள் அமைப்பு

              தமிழீழ தேசபக்தர் அமைப்பு

              தமிழீழ விழிப்புக் குழுக்கள்

              தமிழீழ கிராமிய நீதிமன்றங்கள்

              சுதேச உற்பத்திக் குழுக்கள்

              தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை

              தமிழர் கலாசார சபை

              தொழிற்சங்கங்கள்

தமிழீழ தேசிய- சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச் செய்து துரிதப்படுத்தும் நோக்குடன் மக்களிடத்தில் தமிழ்த் தேசப் பற்றுணர்வையும் சமூகப் பிரக்ஞையையும் தட்டி எழுப்பிக் கட்டி வளர்த்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் மக்களை நேரடிப் பங்குதாரர்களாக மாற்றும் நோக்குடனே இவ்வமைப்புகள் லெப்.கேணல் திலீபனின் முயற்சியில் நிறுவப்பட்டன.

 

  1. தியாகதீபம் திலீபனின் போராட்ட வழிமுறையால் அவர் எவ்வாறு முதன்மைப்பட்டு நிற்கின்றார்?
  • இப்படி அமைதி வழி அறப்போராட்டங்கள் மறவழி அரசியற் போராட்டமாக முற்போக்கான புரட்சிகரமான மாற்றமாக மாறுதலடைந்த பின்னர் ஈகி திலீபன் என்ற உன்னதமான புரட்சிகரப் போராளி 265 மணி நேரங்களாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது தனது வயிற்றிலே போராட்டத்தைத் தொடங்கி, தமிழீழ மக்கள் கண்முன்னே பார்த்திருக்க, அணுவணுவாக உருகித் துடி துடித்து ஈகச் செம்மல் ஆனமை அதன் உண்மைப் பொருளில் அமைதி வழிப் போராகிவிடாது. அது மறவழி அரசியற் போரிற்கான அறைகூவலே.
  • இந்தியா பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் தம்மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் போரின் விளைவாக வந்த சமசுக்கிருதமயப்பட்டு இந்துத்துவமயமாகி விட்ட தமது வழிபாட்டு முறையின் விளைவினால் விளைந்த இந்தியா புனித பூமி என்ற சிந்தனையும் (தமது சாம்பலைக் காசியில் கரைக்கத் துடிப்பதைப் பெரும் பேறென்றெண்ணும் மனநிலை) அகிம்சைக்கு இலக்கணமான மிகப் பெரிய ஒப்புரவு நாடாக இந்தியாவைப் பார்த்துப் புளகாங்கிதமடையும் எம்மவர்களின் அறியாமை என எமது சமூகம் இருந்த காலத்தில், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரச பயங்கரவாதத்தின் “அகிம்சை” என்ற போலி முகத்திரையைக் கிழித்தெறிந்து உலகெங்கிலுமுள்ள தமிழர்களை விழிப்புப்பெறச் செய்ய மிக வலுவான போரியல் உத்தியாகவே லெப்.கேணல் திலீபன் ஒரு சொட்டு நீரும் அருந்தாத உண்ணா நோன்பைக் கையிலெடுத்தார். அவர் அந்த நேரத்தில் தேர்ந்தெடுத்த இந்த உத்தி ஆயிரம் கனரக போர்க்கருவிகளின் வலுவினை ஒத்தது. இது பல்லாயிரக் கணக்கான இளையோர்களை மறவழிப் போரில் இணையத் தூண்டியதோடு மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டம் மக்கள்மயப்பட்டு விட வழிகோலியது. இது இந்தியா பற்றிய அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த எமது மக்களுக்கு இந்திய அரச பயங்கரவாதத்தினையும் நாம் எதிர்த்துப் போராடினாலேயே தமிழீழம் சாத்தியம் என்ற தெளிவை ஏற்படுத்தி எமது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னும் முன்னோக்கி நகரச் செய்து வல்லாதிக்க எதிர்ப்பையும் எமது விடுதலைப் போராட்ட வேலைத் திட்டத்தின் செயற்திட்டத்தில் இடம்பெறச் செய்து மேலும் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதுமாக்கியது.

 

  1. மூன்று இலட்சம் மக்கள் கண்முன்னே பார்த்திருக்க உலகெலாம் பரந்து வாழும் தமிழர்கள் ஈகி திலீபனின் உண்ணாவிரத மேடையை நோக்கி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்க தன்னையே உருக்கி உருக்கி தனது வயிற்றிலேயே போராட்டத்தை ஆரம்பித்து உண்ணாவிரத மேடையிலிருந்து ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை சொல்லிய, சொல்ல வந்த செய்திகள் தான் என்ன?

வரலாற்றுப் புகழ்மிக்க அவரது இறுதி உரையில் “சகல ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்து சமதர்ம சோசலிச தமிழீழம் படைப்போம்”, “மக்களே எப்பொழுதும் விழிப்பாக இருங்கள்”, “எமக்கு ஒரு தெளிவான தலைவர் கிடைத்திருக்கிறார்”, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று புரட்சிகரமாக மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் லெப்.கேணல் திலீபன் அவர்கள்.

ஆம். அனைத்து அடக்குமுறைகள் என்னும் போது சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையுடன் தமிழர்களின் மீதான இந்திய அரச பயங்கரவாத ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, சமூக ஏற்றத் தாழ்வுகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை என அனைத்து விதமான ஒடுக்குறைகளையும் உடைத்தெறிந்து நிகரமை தமிழீழம் படைப்பதையே அவர் தனது கடைசி உரையில் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது நேரடி எதிரியான சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தெரிந்து வைத்திருக்கும் எமது மக்கள் இந்திய அரச பயங்கரவாதம் உட்பட்ட இனக்கொல்லிகள் குறித்துத் தெளிவடையாமல் இருப்பது தேன் தடவிக் கொடுக்கப்படும் நஞ்சினைக் கேட்டுப் பெற்று உவகையுடன் உண்டு நாசமாய் மடிந்து போவதாகிவிடும் என்பதாலே தமிழீழ மக்களை எப்பொழுதும் விழிப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழீழ விடுதலையை தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதால் இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெளிவுடனும் நெஞ்சுரத்துடனும் சிந்தித்த தலைவர் எமக்குக் கிடைத்திருக்கிறார் என்பதனால் எமக்குத் தெளிவான தலைவர் கிடைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் அரசியல் விழிப்புப் பெற்று புரட்சிகர ஆற்றல்களாக அணிதிரண்டு போராடினால் மட்டுமே அத்தனை ஒடுக்குறைகளையும் உடைத்தெறிந்து சுதந்திர தமிழீழம் படைக்க முடியுமென்ற அறுதியும் இறுதியுமான மெய்நிலையையே அவர் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று கூறி மக்கள்மயப்பட்ட போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார்.  தன்னை ஆகுதியாக்கி இந்தியா என்ற கொடிய அரக்கனின் “அகிம்சை” என்ற முகத்திரையைக் கிழித்தெறிந்து அதன் கோர முகத்தை துலாம்பரமாகக் காட்டிய லெப்.கேணல் திலீபன் தமிழீழ விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே என்ற தெளிவான செய்தியை மக்களிடத்தில் உய்த்துணரச் செய்து தமிழீழ விடுதலைக்கான பாதையின் முன்னோக்கிச் செல்வதற்கான மீதி வழியை எமக்கு உணர்த்திக் காட்டியிருக்கிறார்.

 

  1. எந்தக் கோரிக்கைகளை முன்வைத்து சொட்டு நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பு இருந்தார்?
  • மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
  • சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  • அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
  • ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
  • தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

 

  1. தியாகதீபம் திலீபனின் ஈகம் கற்பித்துச் சென்ற தமிழர்களின் அரசியலில் கோட்பாடுகளாக நிலைபெற்ற முதன்மை அரசியற் கருத்தாக்கங்கள் என்ன?
  • சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதம், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரச பயங்கரவாதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதியக் கொடுமைகள், பெண் ஒடுக்குமுறை போன்ற சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் தமிழினம் விடுதலை பெற வேண்டும்
  • என்றும் தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே.
  • தமிழின விடுதலையை வென்றெடுக்க மறவழி அரசியற்போரே ஒரேவழி

 

  1. நாம் என்ன செய்ய வேண்டும்?

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் ஈகங்களை நெஞ்சில் தாங்கியவர்களாக நாமும் அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்று எமது மக்களையும் அரசியற் தெளிவும் விழிப்பும் பெறச் செய்து ஒரு புரட்சிகர சமூகமாக அணியமாகி, அணிதிரண்டு அனைத்து ஒடுக்குமுறைகளையும் அடித்து நொருக்கி எமது விடுதலையை வென்றெடுக்க “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று கூவி, அவர் எங்கள் நெஞ்சுகளில் விதைத்துச் சென்றுவிட்ட, எங்கள் கைகளில் கொடுத்துச் சென்றுவிட்ட புரட்சிகரக் கடமையை நிறைவேற்றி, வீறுகொண்டு எழுந்து அடிமைத்தளை தகர்த்து, தமிழர்தேசத்தை விடுதலை பெறச் செய்து இனமானம் காக்க வேண்டும்.

 4,505 total views,  3 views today

(Visited 38 times, 1 visits today)