கோத்தாபயவை சனாதிபதியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி என்ன? -முத்துச்செழியன்-

இராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதன் பின்னணி

மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர இருப்பதாகக் கூறியதோடு, தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுகளைத் தொடர நோர்வேயினை டிசம்பர் மாத முதற் கிழமையில் மகிந்த ராயபக்ச அழைத்தார். போரினைத் தொடங்கி, புலிகளை அழிக்க முடிவெடுத்த இந்தியாவுக்கு மகிந்தவின் இந்த அழைப்பு எரிச்சலையூட்ட, மகிந்த டிசம்பர் இறுதிக் கிழமையில் உடனடியாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தான் வைத்திருந்த முழு வரைபையும் மகிந்தவுக்குக் காட்டி அமைதிப் பேச்சுகளிலிருந்து விலகி, முற்றுமுழுதான போரை முன்னெடுக்குமாறு இந்தியா மகிந்தவை நெரித்தது. இதனாலேதான் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என மகிந்த பல தடவைகள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

மகிந்தவிற்கு இந்தியா செல்லும் வரை புலிகளை அழிக்க முடியும் என்ற நம்பிக்கை கனவிலும் இருந்திருக்கவில்லை. இந்தப் போரினை முன்னெடுக்க முழு உலகத்தையும் பயன்படுத்தப் போகும் வரைபு வரை இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பிலேயே நடந்தது. இவ்வாறு தமிழர்கள் மீதான போரில், தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்ததால் துட்டகாமினி என்ற மகாவம்சப் புரட்டின் தலைமகனின் தரநிலை மகிந்த ராயபக்சவுக்குக் கிடைத்து விட, ஒரு பாசிச வெறி பிடித்த தமிழினக்கொல்லியாக தனது முழுநேரப் பணியைத் தொடர்ந்தார்.

ஆனால், போரின் பின்பான மீள்கட்டுமானப் பணி ஒப்பந்தங்கள் போரிற்காக கடுமையாகப் பங்களித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு அதிகம் கிடைக்கவில்லை. மாறாக, அத்தனை ஒப்பந்தங்களும் இந்தியாவுக்கே சென்றன. வணிகக் கணக்கில் நன்மையில்லை என இந்திய நிறுவனங்கள் கழித்து விட்ட ஒப்பந்தங்களே உண்மையில் சீனாவிற்கு வழங்கப்பட்டன. “துறைமுகம், வானூர்தி நிலையம், நெடுஞ்சாலை என அத்தனை ஒப்பந்தங்களையும் நான் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன். அவற்றுள் இந்தியா ஏற்காதவற்றை மட்டும் தான் சீனாவிற்குக் கொடுத்தோம். ஏனெனில் அப்படியான ஒப்பந்தங்களை சீனாவே ஏற்கக்கூடியது” என்று மகிந்த மிகத் தெளிவாகப் பலமுறை இந்திய ஊடகங்களிற்கான செவ்வியில் கூறியுள்ளார். போரின் பின்பான மீள்கட்டுமான ஒப்பந்தங்களில் இந்திய, சீன நிறுவனங்களே அதிக நன்மையடைந்தன. எனவே மேற்குலகு தனக்குவப்பான ஆட்சியான UNP இன் ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் உலகரங்கில் மகிந்தவின் ஆட்சியை நெருக்கடிக்கு உட்படுத்த தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியது. அதற்கு பொன்சேகாவையும் பயன்படுத்திப் பார்த்தது. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்தது. ஆனால், மேற்கின் இந்த முயற்சிக்கு 2014 இன் நடுப்பகுதி வரை ஒப்புதலளிக்காமல்  மகிந்த ராயபக்சவுடன் ஒட்டியுறவாடியே வந்தது இந்தியா. ஆனால், மேற்குலகின் தூதரகங்கள் மகிந்தவின் ஆட்சியை மாற்றத் தீயாய் வேலை செய்த போது, தனது கையை மீறி மேற்குலகினால் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தனது மூக்குடைந்து விடும் என்று பெரிதும் அஞ்சிய இந்தியாவானது, சீன நீர்மூழ்கிக் கப்பல் ஆபிரிக்காவுக்கான தனது வழமையான ஆண்டுப் பயணத்தின் போது வழமைக்கு மாறாக கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுச் சென்றதுடன் சிறிலங்காவில் மேற்கின் ஆட்சி மாற்றத்திட்டத்திற்கு ஒத்துழைத்தது.

இராஜபக்ச ஆட்சி தூக்கியெறியப்பட்டு ரணில்மைத்திரி தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நிகழ்ந்தவை

இவ்வாறாக மைத்திரி-ரணில் தலைமையிலான மேற்குலகிற்கு உவப்பான ஆட்சிமாற்றம் நிகழ்ந்தேறியதைத் தொடர்ந்து, ராஜபக்ச குடும்பத்தில் ஒரு ஆளுமை மீண்டும் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியாக வரக்கூடாது என்பதனை முதன்மை நோக்காகக் கொண்டு மேற்குலகின் வழிகாட்டலில் அத்தனை விடயங்களும் நடந்தேறின. இதன் அடிப்படையிலேயே மேற்குலகின் வழிகாட்டலில், 19 ஆம் திருத்தச் சட்டம் வரையப்பட்டு சிறிலங்கா பாராளுமன்றத்தில் சட்டமூலமாக நிறைவேறியது. 2 தடவை மட்டுமே ஒருவர் சனாதிபதியாக இருக்கலாம் என சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் மகிந்தவுக்கும் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் சிறிலங்காவின் சனாதிபதியாக முடியாது என சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் கோத்தபாய மற்றும் பசிலுக்கும் மற்றும் 35 அகவைக்குட்பட்டவர் சனாதிபதியாக வர முடியாது எனச் சட்டத்திருத்தம் செய்ததன் மூலம் நாமலுக்கும் என 19 ஆம் திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்திலிருந்து மீண்டும் ஒருவர் சனாதிபதியாகாமல் பார்த்துக்கொள்ளும் நோக்குடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு சிறிலங்காவின் இராணுவ மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புகளில் எங்கெங்கெல்லாம் உள்ளதோ அவற்றின் முதன்மை குறைக்கப்பட்டு மாற்று அணிகளிடம் பொறுப்புகள் கைமாற்றப்பட்டது. அதனடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தில் கோத்தாபய ராஜபக்சவிற்கு நெருக்கமான படையணியான “கஜபா படையணி” இனது முதன்மை குறைக்கப்பட்டதோடு, கோத்தாபாய பெரிதும் நம்பும் இராணுவப் புலனாய்வுத்துறையின் பலம் பெரியளவுக்குக் குறைக்கப்பட்டதோடு, தேசிய புலனாய்வுச் சேவைகளில் இராணுவப் புலனாய்வுத்துறையின் வரவுகளும் பெரிமளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறாக, இராஜபக்ச குடும்பம் எந்த வழியிலும் தலை தூக்கிவிட முடியாதவாறு கட்டுப்படுத்தப்பட்டார்கள்.

மைத்திரிரணில் ஆட்சி கலைக்கப்பட்டதன் பின்னணி

படைகளை நிலைநிறுத்துவதற்கான உடன்படிக்கை (SOFA- Status of Forces Agreement), கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவை உடன்படிக்கை (ACSA- Acquisition and Cross- Servicing Agreement) மற்றும் Millennium Challenge Corporation (MCC) போன்ற அமெரிக்காவின் மீயுயர் செல்வாக்குப் பகுதியாக இலங்கைத்தீவை மாற்றும் திட்டங்கள் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு கடந்த மைத்திரி- ரணில் ஆட்சியில் ஒப்புதலளிக்கப்படும் தறுவாயில் இருந்தன. இந்த நிலையானது, சிறிலங்காவைத் தனது மாகாணங்களில் ஒன்றாக்க முனையும் அகண்ட பாரதக் கொள்கைவகுப்பாளர்களுக்கு கடுஞ் சினத்தை உண்டாக்கியது.

உண்மையில், மேற்குலகிற்கு உவப்பான கடந்த ஆட்சியில் நடந்த அனைத்திற்கும் ரணிலே பொறுப்பு என்பதும் மைத்திரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட உலகின் வியத்தகு கைப்பொம்மையாகவே இருந்து வந்தார் என்பதும் இங்கு சுட்டத்தக்கது. அத்துடன் பொருண்மிய அபிவிருத்தி தொடர்பான அனைத்து விடயங்களையும் ரணிலே கடந்த ஆட்சியில் கையாண்டிருந்தார். இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் பலதும் கடந்த ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்டே வந்தன. இதைத் தொடர்ந்து ரணிலை இந்தியாவுக்கு அழைத்த மோடி இந்தியாவின் திட்டங்கள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதனால் இதன் தொடர்ச்சியாகவே, தன்னால் சிங்கள மக்களிடத்தில் துட்டகாமினி ஆக்கப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர இந்தியாவின் ஆளும்வர்க்கங்கள் முடிவு செய்தன. இதன் தொடர்ச்சியாக மோடி அரசில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணிய சுவாமி என்ற பெயர் பெற்ற அரசியல் மற்றும் பல முறைகேடான வேலைகளுக்கான முகவர் நேரில் சிறிலங்கா சென்று மகிந்த ராயபக்சவைச் சந்தித்து தனது “Virat Hindustan Sangam” என்ற அமைப்பின் வாயிலாக மகிந்தவை இந்தியாவுக்கு அழைத்து மோடி உட்பட்ட மிக முதன்மையானோருடனான சந்திப்புகள் மகிந்தவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அத்துடன் மகிந்தவுடனான இந்தியாவின் ஒட்டான உறவு பல வடிவங்களில் வெளிப்படலாயின. “இந்தியா எமது நெருங்கிய உறவினன். சீனா எமது நீண்ட கால நண்பன்” என்று இந்தியாவில் வைத்துத் தனது கொள்கையை வெளிப்படையாக மகிந்த ராயபக்ச அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகவே, அன்றைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் தீடிரென 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அன்றைய பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு மகிந்த ராயபக்சவை பிரதமராக்கினார். எவரும் எதிர்பாராத இந்நடவடிக்கை உலகை அதிர்சிக்குள்ளாக்கியதோடு, மைத்திரியின் இந்தத் தடாலடியான முடிவின் பின்புலம் எதுவெனவறியாது நாட்டு மக்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. இராயபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் இனி ஏறவே கூடாது என தன்னாலான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்ட மேற்குலகு மைத்திரியின் இந்த திடீர் முடிவால் சினமடைந்ததுடன், வெறும் 50 நாட்களுக்குள் தனது முழு ஒத்துழைப்பையும் ரணில் தரப்பிரனருக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் மூலம் ரணில் பதவீநீக்கப்பட்டு மகிந்த ராயபக்ச பிரதமராக்கப்பட்டமையானது அரசியலமைப்பிற்கு முரணானது என்ற தீர்ப்பைப் பெற்று மீண்டும் ரணிலை பிரதமராக்கியது.

ரணிலை தூக்கியெறிந்து மகிந்தவை பிரதமராக்கியமை அரசியலமைப்பிற்கு முரணானதென ஆகியபின் நடந்தது என்ன?

அதன் பிறகு, மேற்குலகினால் காப்பாற்றப்பட்டு வந்த ரணில் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேறு எந்த தெரிவுகளும் இராயபக்ச தரப்பிற்கு இருக்கவில்லை. அத்துடன் அப்போது அவர்கள் பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி சனாதிபதித் தேர்தலுக்குத் தம்மை அணியப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. 19 ஆம் திருத்தச் சட்டத்தினால் இராயபக்ச குடும்பத்திற்கு இடப்பட்ட முட்டுக்கட்டைகளால் அவர்களுக்கு சனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் கூட பாரிய இன்னல்கள் இருந்தன. இராயபக்ச ஆட்சியிலேயே சிங்கள பௌத்த பேரினவெறியர்கள் முசுலிம்கள் மீது பாரிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். எனவே, மகிந்த இராயபக்ச மற்றும் கோத்தாபய ராயபக்ச ஆகியோரைத் தம்மைக் கொன்றொழித்த வரலாற்றுப் பகையாக நோக்கிய தமிழ் மக்களுடன் முசுலிம் மக்களும் சேர்ந்து ராயபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது.

எனவே, இராயபக்ச குடும்பத்தில் ஒருவர் சனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வருவதென்றால் அது தனிச் சிங்கள வாக்கினால் மட்டுமே நிகழ வேண்டியதைத் தாண்டி வேறெந்த வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே, தனிச் சிங்கள வாக்கில் ஒருவர் சிறிலங்காவின் சனாதிபதியாவது என்பது மிக மிக குறைந்த நிகழ்தகவுள்ள ஒரு  விடயமாகும். ஏனெனில், ஐக்கிய தேசியக் கட்சியானது சிங்களவர்களிடத்தில் ஒரு நிலைத்த வாக்கு வங்கியுள்ள கட்சியே. போரில் தமிழர்களை வென்ற துட்டகாமினி மன்னனுக்கொப்பான வரலாற்று நாயகனாக மகிந்த இராயபக்ச தேர்தலை எதிர்கொண்ட காலத்திலே கூட ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நிலைத்த வாக்கு வங்கியைக் கொண்டிருந்தது. எனவே, தனிச் சிங்கள வாக்குகளில் அதுவும் மேற்கின் சுட்டுவிரலசைவில் பணியாற்றக்கூடிய ஊடகங்களின் எதிர்ப்பரப்புரைகளையும் மேற்கு நாடுகளின் தூதரகங்கள் வாயிலான எதிர்ச் செயற்பாடுகளையும் தாண்டி இராயபக்ச குடும்பம் சனாதிபதித் தேர்தலில் வெல்வதென்பது மிகவும் நிகழ்தகவு குறைந்தவொரு விடயமாகவே இருந்தது.

எனினும், ரணில்-மைத்திரி ஆட்சியில் வலுக்குறைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுத்துறையினர் மீண்டும் தமது செயல்முனைப்பில் ஆர்வங்காட்டத் தொடங்கிய பாங்கு 2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அரசியலமைப்பிற்கு முரணாக மகிந்த ராயபக்சவைப் பிரதமராக்கியதன் பின்பு தென்படத் துவங்கியது. தமிழ்ப் போராளி அமைப்புகளில் முன்னர் இணைந்து போராடிப் பின் காலவோட்டத்தில் இராணுவப் புலனாய்வு முகவர்களாகப் பணியாற்றியவர்கள் தமது புலனாய்வு மேலாளரிடமிருந்து அவர்களின் தகவல்கள் மற்றும் செயற்பாடுகள் அடிப்படையில் தனிப்பட்ட கொடுப்பனவுகளைப் பெற்று வந்தனர். மைத்திரி- ரணில் ஆட்சிக் காலத்தில், பொலிஸ் நிருவாகத்தின் கீழ் வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஆகிய புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டதோடு சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பணிகளிற்கான SIS என்ற புலனாய்வு அமைப்பும் பெரிதும் பொலிஸ் நிருவாகத்தின் கீழிருந்து வருவோர்களாலே நிரப்பப்பட்டது. அத்துடன் கோத்தாபயவின் செல்வாக்கு கூடுதலாக இருக்கக் கூடியதான கட்டமைப்பாக இருந்த இராணுவப் புலனாய்வுத்துறைக்கான வளங்கள் குறைக்கப்பட்டு அவர்களிற்கான பணியிடுகைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அதனால் இராணுவப் புலனாய்வுப்பிரிவின் வெளி முகவர்களாக செயற்பட்டு வந்தோர்கள் தமது மேலாளர்கள் மூலம் பெற்று வந்த ஊதியம் ரணில்- மைத்திரி ஆட்சியில் தடைப்பட்டிருந்தது. ஆனால், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்பாக, இப்படியாக வருமானம் இல்லாமல் காய்ந்து போயிருந்த இராணுவப் புலனாய்வு முகவர்கள் மீண்டும் தமது மேலாளர்களால் தொடர்புகொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு கோத்தாபய மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறார் என்ற நம்பிக்கையும் ஊட்டப்பட்டது.

நிலைமை இவ்வாறிருக்கையில் தான் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.

கோத்தாபய ராயபக்ச தனிச் சிங்கள வாக்குகளில் சனாதிபதியாகியமை எவ்வாறு?

உயிர்த்த ஞாயிறன்று நிகழ்ந்த இசுலாமிய அடிப்படைவாத நரபலிவெறியாட்டத்தால் நாடு மிகவும் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், அப்படியான அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற கோத்தாபயவினாலேதான் இயலுமென சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டமையால் வரலாறு காணாதவாறு தனிச்சிங்கள வாக்கில் சிங்கள சனாதிபதியானார் கோத்தாபய. உயிர்த்த ஞாயிறால் எழுந்த கோத்தா அலையில் ஐ.தே.கட்சியின் நிலைத்த வாக்கு வங்கியாக இருக்கும் கிறித்தவ சிங்கள மேட்டுக்குடியினரும் கூட எடுபட்டுப்போனதன் விளைவாகவே கோத்தாபய தனிச் சிங்கள வாக்கில் சனாதிபதியாக முடிந்தது என்பதை இங்கு நோக்க வேண்டும்.

முசுலீம் ஆயுததாரிகளுக்கும் சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத்துறைக்கும் இடையிலான உறவின் வரலாற்றுப் பின்னணி

உண்மையில் சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத்துறையானது விடுதலைப் புலிகளையும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்கவும் அழிக்கவுமே 1990 இல் உருவாக்கப்பட்டது. இந்த இராணுவப் புலனாய்வுத்துறையினை அவர்கள் உருவாக்கும் போது இராணுவத்திலிருந்த முசுலிம்களே அதிகம் அதில் உள்வாங்கப்பட்டிருந்தனர். முசுலிம்களிடம் இருந்த இரு மொழியாற்றல் மற்றும் தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் சூழல் என்பனவற்றால் இவ்வாறு முசுலிம்கள் அதிகம் இராணுவப் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்பட்டனர். தென் தமிழீழத்தில் தமிழர்கள் மீது நரபெலி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து திராய்க்கேனி, வீரமுனை, உடும்பன்குளம் என தொடர்ந்த எண்ணற்ற தமிழினப்படுகொலைகளை 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்த்திய முசுலிம் ஊர்காவல் படையிலிருந்தே பலர் சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத்துறைக்கு உள்வாங்கப்பட்டனர். மேஜர்.ஜெனரல்.சாகீர், கேணல் முத்தலிப், கேணல் றிஸ்லி மீடின் போன்றோர் இராணுவப் புலனாய்வுத்துறையின் தூண்களாக விளங்கினர். விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை முடக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக முசுலிம் மதத் தலைவர்கள் அடங்கலாக முசுலீம் சமூக மட்டத்தில் பலர் இராணுவப் புலனாய்வுத்துறையினரின் ஊதியம் பெறும் முகவர்களாகினர்.

இவ்வாறாக விடுதலைப் புலிகளை அழிக்கவென உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுத்துறையானது அதன் கட்டமைப்புசார் மற்றும் செயற்திறனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அழித்தல் என்ற ஒற்றைப்படை நோக்கு அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியிலேயே முசுலிம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று ஆயுதம் தரித்தனர். 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக விடுதலைப் புலிகளைத் தேடித் தேடி வேட்டையாடும் தேவை இல்லாது போனமையால், இராணுவப் புலனாய்வுத்துறையின் முகவர்களாக செயற்பட்டு வந்த முசுலிம்களின் தேவையும் இல்லாது போக, அவர்களை கண்டுகொள்ளாமல் இராணுவப் புலனாய்வுத்துறை தனது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியது. இதனால் அப்படி முகவர்களாக செயற்பட்ட முசிலிம் சமூகத்தின் பல மட்டத்தில் உள்ளோரும் வருவாய் இழந்து போயினர். அதிலும் குறிப்பாக, மைத்திரி- ரணில் அரசு காலத்தில் இராணுவப் புலனாய்வுத்துறையே கட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்பட்டதால், அதுவரை தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து இராணுவப் புலனாய்வு முகவர்களாக செயற்பட்ட முசுலிம்கள் வருமானத்திற்கு வேறு வழி பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இப்படியாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பாடலை ஏதோவொரு வகையில் பேணும் நிலையிலேயே முசுலிம் மதத்தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் தொடர்பான விடயங்களில் சிறிலங்கா பொலிசாரே தலையிடா வண்ணம் இராணுவப் புலனாய்வுத்துறை செயற்பட்டும் வந்தனர். இதனாலேயே, உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலில் பங்கேற்றவர்கள் ஆயுதம் தரித்துப் பயிற்சி பெறும் சூழலை உருவாக்கல் என்பது அவர்களுக்கு இலகுவானதாக இருந்தது.  இப்படியான ஒரு இசுலாமிய ஆயுதக் குழு முயற்சியொன்று நடைபெறுகின்றது என்பது இராணுவப் புலனாய்வுத்துறையின் சில புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரிந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது.

கோத்தா அலையை உருவாக்கி கோத்தாபயவை சனாதிபதியாக்கியஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்ஒரு உடனிகழ்வா (Coincident) ?

உண்மையில், கோத்தாபயவினை சனாதிபதியாக்கிய  உடனடிக் காரணமாகவும் ஒரேயொரு காரணமாகவும் அமைந்தது உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற குண்டுத்தாக்குதலே. எனவே, இப்படியான ஒரு நிகழ்வு உண்மையில் ஒரு உடனிகழ்வாக அமைந்து கோத்தாவுக்கு வாய்ப்பாக அமைந்ததா இல்லை இது நோக்கங் கருதி நடந்தேற அனுமதிக்கப்பட்ட நிகழ்வா என்பதனை புலனாய்வு செய்ய அந்தக் காலப்பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை வரிசைப்படுத்தி நோக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளின் தொகுப்பு

2016– சகிரான் காசிம் இலங்கையில் முசுலிம்கள் அல்லாதோர் மீது வெறுப்புணர்வைத்தூண்டி அவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தும் எண்ணத்தில் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா முசுலிம் பேரவையின் துணைத்தலைவராக இருந்த கில்மி அகமட் என்பவர் சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். (அவரது வாக்குமூலத்திலிருந்து)

வகாபிச தீவிரவாதக் கருத்துகளை உள்வாங்காத முசுலிம் பிரிவு ஒன்றின் மீது ஏற்பட்ட பகையுணர்வால் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமையால் சகிரான் காசிம் என்ற உரிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நிகழ்த்திய முதன்மைப் புள்ளியான தற்கொலை குண்டுதாரியானவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. 2017 ஆம் சகிரான் காசிம் தலைமறைவாகிறார்.

2017- ஏப்ரல்சகிரான் காசிம் தொடர்பான கோப்புகளை தாமே கையாளப் போவதாகவும் குற்றப்புலனாய்வுத்துறையை சகிரான் தொடர்பான விடயங்களைக் கையாளுவதிலிருந்து ஒதுங்கியிருக்குமாறும் எஸ்.ஐ.எஸ் (SIS) குற்றப் புலனாய்வுத்துறைக்குக் கடிதம் எழுதியது.

2018- மார்ச்– “திகன” என்ற இடத்தில் முசுலிம்களுக்கெதிரான வெறியாட்டம் கட்டவிழ்க்கப்பட்டது.

2018- ஓகஸ்ட் மாதம் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் படி சகரான் காசிமினைக் கைது செய்ய பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல்களை மேற்கொண்டு வந்தது.

2018- ஒக்டோபர்– அரசியலமைப்பிற்கு முரணாக ரணிலை பதவிநீக்கம் செய்து மகிந்த ராயபக்ச பிரதமராக்கப்பட்டார்.

2018- நவம்பர்- 29 ஆம் தேதியன்று வவுணதீவில் 2 சிறிலங்காப் பொலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த 2 சிறிலங்காப் பொலீசாரிடமிருந்து துப்பாக்கிகளைக் கைப்பற்றும் நோக்கில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலை சகிரான் காசிமின் அணியினரே மேற்கொண்டனர் என்பது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின் நடந்த விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

2018- டிசெம்பர்– மாவனல்லவில் 4 இடங்களில் புத்தர் சிலைகள் அடித்துச் சேதமாக்கப்பட்டது தொடர்பில் 6 முசுலிம் இளைஞர்கள் கைதாகினர். இவர்கள் சகிரான் காசிமின் தலைமையின் கீழ் இயங்குபவர்கள் என்பது விசாரணையின் போது தெரிய வருகின்றது.

2019- சனவரிமாவனல்லவில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய வழக்கில் கைதாகியோர் விசாரணையின் போது வழங்கிய தகவல்களின் அடிப்படையில், புத்தளத்திலுள்ள வனாத்திவில்லு என்ற இடத்தில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அங்கு 50 கிலோவிற்கு மேற்பட்ட சி- 4 வகை வெடிமருந்து, 100 இக்கு மேற்பட்ட இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட வெடிப்பிகள், ரி.என்.ரி வெடிபொருள் தயாரிப்பதற்கான முதன்மை மூலப்பொருளான 120 லீற்றர் நைத்திரிக் அமிலம் போன்றன அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகப்பாரியளவிலான குண்டுத் தகர்ப்புகளை மேற்கொள்ளப் போதுமானளவு வளங்களை இந்த இசுலாமிய பயங்கரவாதிகள் கொண்டிருந்தார் என்பதைக் காடுகிறது. அத்துடன் அவர்களின் இலக்கு முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவெறியாட்டங்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே இருந்தது என்பது விசாரணையில் தெரிய வருகின்றது.

2019- ஏப்ரல் மாதம் முதலாவது கிழமையில் சகிரான் காசிமும் ஏனைய தற்கொலை குண்டுதாரிகளும் பாணந்துறையிலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ். அமைப்பின் சீருடை அணிந்து உறுதிமொழியேற்று அதனைக் காணொளிப்பதிவும் செய்தனர். இதில் குண்டுதாரிகளாக சென்ற இப்ராகிம் குடும்பத்து அண்ணன், தம்பி இருவரும் தமது குடும்பத்துடன் மக்கா செல்வதற்கு பயணச்சீட்டுகள் பதிவுசெய்து வைத்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனின், இந்தத் தாக்குதல் இலக்குகளும் தாக்குதலுக்கான காலமும் சடுதியாகவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

2019- ஏப்ரல்- 4ஆம் தேதி- சகிரான் தலைமையிலான குழுவால் கத்தோலிக்க தேவாலயங்களும் விடுதிகளும் தாக்கப்பட இருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் பெறப்பட்டன. இந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நிகழ்த்த இருந்தவர்களின் விபரமும் தாக்குதல் இலக்குகளும் இந்தியாவின் உளவமைப்பால் சிறிலங்காவின் உளவமைப்பிற்குத் தெரியப்படுத்தப்பட்டது.

2019- ஏப்ரல்- 16 ஆம் தேதி- காத்தான்குடியில் ஒரு உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருள் தொகுதி வெடித்தது. இது குண்டுதாரிகள் தமது வெடிபொருட்களும் வெடிப்பியும் இணைப்புகளும் சரியான முறையில் செயற்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய அடைமழை வேளையில் மேற்கொள்ளப்பட்ட வாய்ப்புப்பார்க்கும் நடவடிக்கையாகவே இருந்திருக்கிறது.

2019- ஏப்ரல்- 20 ஆம் தேதியன்று இரவு மீண்டும் இந்தியாவின் உளவு நிறுவனமானது இலங்கையில் தாக்குதல் செய்ய இருப்பவர்கள் தொடர்பாகவும் தாக்குதல் இலக்குகள் தொடர்பாகவும் சிறிலங்காவின் உளவு அமைப்பிற்குத் தகவல் அனுப்பி எச்சரித்தது.

2019- ஏப்ரல்- 21 ஆம் தேதி- காலை 6 மணியளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற இருக்கும் இலக்குகள் குறித்தும் அதனை நடத்த அணியமாகிவிட்ட தற்கொலைக்குண்டுதாரிகள் குறித்த விபரத்தையும் வழங்கி சிறிலங்காவின் புலனாய்வு அமைப்பை மீண்டும் எச்சரித்தது இந்திய உளவமைப்பு.

2019- ஏப்ரல்- 21 ஆம் தேதி- உயிர்த்த ஞாயிறுத் தொடர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. தேவாலயங்கள் 3 இன் மீதும் நட்சத்திர விடுதிகள் 3 இன் மீதும் தேசிய தௌபீக் ஜமாத் என்ற அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 250 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

2019- ஏப்ரல்- 21 ஆம் தேதியன்று இரவு 9.50 இற்கு இந்தக் குறிப்பிட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அடையாளங்காணப்பட்ட இந்த இலக்குகள் மீது நடத்தப்பட இருப்பதாக இலங்கையின் பாதுகாப்புத் தரப்புகளுக்குள் பரிமாறப்பட்டதான ஏப்ரல் 11 ஆம் தேதியிடப்பட்ட உட்சுற்றுத் தகவல் அறிக்கையொன்றைத் தனது ருவிட்டர் கணக்கில் அன்றைய அமைச்சர் கரின் பர்னாண்டோ வெளியிட்டிருந்தார்.

2019- ஏப்ரல் 22 ஆம் தேதியன்று தனது சொந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூரிலிருந்து அன்றைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாடு திரும்பினார். வழமையாக சிறிலங்காவின் சனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சரை தற்காலிகமாக நியமித்தே செல்ல வேண்டும். ஆனால் மைத்திரியின் இந்தப் பயணத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் மோசமான ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பலமுறை புலனாய்வுத் தகவல்கள் வந்த போதும் அன்றைய நாளில் மைத்திரி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்திருக்கிறார்.

2019- ஏப்ரல்- 23 ஆம் தேதி- உயிர்த்த ஞாயிறு தொடர்குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு தனது பரப்புரை ஊடகமூடாக உரிமை கோரியது. உண்மையில் இப்படியொரு பாரிய தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு நடத்தியிருந்தால் அதனது வழமையான பாணியில் உடனடியாக பெருமிதத்துடன் அந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கும். ஆனால், இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்து 2 நாட்களாக இந்தத் தாக்குதலுக்கு யாரும் எவரும் உரிமை கோரவில்லை. சிறிலங்காவில் உள்ள முசுலீம் சமூகத்திலிருந்து இப்படியான கொலைவெறி ஆயுதக் குழு உருவாகியுள்ளது என்ற உள்ளூர் பரிமாணத்தைக் காட்டினால் அது சிறிலங்காவிலுள்ள முசுலீம்களுக்குப் பாரிய அச்சுறுத்தலை விளைவிக்கும் என்பதால் ஐ.எஸ் அமைப்பினைத் தொடர்புகொண்டு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பெருமைசேர்க்குமாறு வேண்டப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவிலுள்ள இடைத்தொடர்பாளர் மூலமே சிறிலங்காவிலிருந்து இந்த வேண்டுகோள் ஐ.எஸ் அமைப்பிடம் வைக்கப்பட்டது எனவும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஐ.எஸ் அமைப்புடன் எந்தவிதமான நேரடித் தொடர்புகளையும் மேற்கொள்ளவில்லை என சிறிலங்காவின் உளவுத்துறை வட்டாரங்கள் தற்போதைய விசாரணைகளில் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றன.

2019- ஏப்ரல்- 26 ஆம் தேதியன்று சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட முற்பட்ட போது 3 தற்கொலை குண்டுதாரிகளும் அவர்களின் 9 குடும்ப உறுப்பினர்களும் குண்டை வெடிக்க வைத்து இறந்தனர். இதில் புலஸ்தினி ராஜேந்திரன் என்கிற தமிழ்ப் பெண் இசுலாமியராகி சாரா என்ற பெயரில் தற்கொலைதாரியாக மாறியிருந்தவரும் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனாலும், அவர் அதிலிருந்து தப்பி 2 மாதங்களின் பின்னர் இந்தியாவிற்கு கடல்வழியாகத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் புலஸ்தினி என்ற பெண் க.பொ.த சாதாரணதரத் தேர்வில் 8 ஏ என்ற பெறுபேறுடன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்றுவந்த பொழுதே இந்தத் தொடர்குண்டுத்தாக்குதலில் குண்டுதாரியாக இறந்த கஸ்துன் என்பவன் மீது காதல்வயப்பட்டு அவனைத் திருமணம் செய்துள்ளார். இந்தக் கஸ்துன் என்பவன் சகிரான் காசிம் தலைமையில் இயங்கிய தேசிய தௌபீக் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவன். இவன் அந்தப் பெண்ணை மதமாற்றுவதற்காக சிறிலங்கா தௌபீக் ஜமாத் என்ற அமைப்பின் தலைவரான ராசீக் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளான். ராசிக் என்பவன் சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு நீண்டகாலமாக முகவராக வேலை செய்பவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. ராசிக் தலைமையிலான இந்த சிறிலங்கா தௌபீக் ஜமாத் என்ற அமைப்பிலிருந்து சகிரான் காசிம் தலைமையில் தேசிய தௌபீக் ஜமாத் என்ற அமைப்பு பிரிந்து சென்றதாகக் கூறப்பட்டாலும் அவர்களுக்கிடையில் மிகவும் ஒட்டான உறவு இருப்பதை புலஸ்தினி என்ற தமிழ்ப்பெண் மதமாற்றப்பட்ட முறை கோடிட்டுக் காட்டுகிறது.

அதே நாள் அதன் அருகிலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 150 செலிக்னைட் குச்சிகள் மர்றும் உலோக போல்சுகளும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறாக செலிக்னைட் குச்சிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் சென்றமையிலிருந்து, அவர்களுக்கு தொடர்ச்சியான சி- 4 வெடிமருந்துகளோ அல்லது ரி. என்.ரி வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான வழங்கல்களோ தொடர்ச்சியாக கிடைக்கவில்லை என கூறமுடியும்.

2019- மே மாதம்- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைப் பின்னணியைக் கண்டறியவென பாராளுமன்றத் தெரிவுக்குழு பணியமர்த்தப்பட்டது.

2019- சூன் – 7 ஆம் தேதியன்று தடாலடியாக மந்திரி அவைக்கூட்டத்தைக் கூட்டி பாராளுமன்றத் தேர்வுக்குழுவினை மைத்திரி, ராயபக்ச தரப்பினர் எதிர்த்தனர். எனினும், 2019- ஒக்டோபர்- 26 ஆம் தேதி- பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை வெளியாகியது.

தாக்குதல் இலக்குகளும் தாக்குதல்தாரிகளும் முன்னரே அறியப்பட்ட விடயமாக இருந்தும் அவர்கள் ஏலவே இராணுவப் புலனாய்வினரின் செயற்படு வலையமைப்பெல்லைக்குள் இருப்பவராக இருந்தும், மாவனல்ல தாக்குதலைத் தொடர்ந்து வெடிபொருள் களஞ்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும், தாக்குதலுக்கான தயார் நிலை நன்கு இனங்காணப்பட்டும், எந்தவொரு தடுப்பு நடவடிக்கைகளுமின்றி இந்தத் தாக்குதல் நடந்தேற வழிவிடப்பட்டுள்ளது என மேற்கூறிய நிகழ்வுகளின் தொகுப்புத் தெளிவுறக் காட்டுகிறது. சகிரான் என்ற மதகுருவான இளைஞன் மதவெறி பேதலித்துப் போய் அதைத் தனது கொள்கை உறுதி என நினைத்து ஜிகாத் வழியில் அல்லாவிடம் போவதாக நினைத்து இப்படியான வேலைகளைச் செய்யும் நிலைக்கு வந்துள்ளார். ஆனால், அவர் ஐ.எஸ் அமைப்பிடம் யாரோ ஒருவர் மூலம் தொடர்புடன் இருப்பதாக நம்பியுள்ளார். அவர் மூலமே தனது ஜிகாத்திற்கான கட்டளைகள் வருகிறதென அவர் நம்பியிருக்கிறார். அந்த நபரே தாக்குதல் இலக்குகளை சகிரான் காசிமுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். சிங்கள பௌத்த வெறியர்களுக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருந்த இசும்லாமிய தீவிரவாத இளைஞர்களுக்கு இந்த இலக்கைத் தீர்மானித்த நபர் யார் என்பதும் அந்த நபர் சிறிலங்காவின் புலனாய்வு அமைப்பின் ஒரு சில மட்டங்களுக்கு எந்த வகையில் உதவுபவர் என்பதும் இன்னும் கண்டறியப்படாத ஒன்றாகவே உள்ளது.

இந்த உயிர்த்த ஞாயிறு தொடர்குண்டுத்தாக்குதல்கள் தடுக்கப்படாமல் கோத்தா அலை வீச வழி சமைத்தமை வெறும் ஒரு உடன் நிகழ்வு தானா? நிகழ்வுகளின் தொகுப்புகள் அப்படியில்லை என்றே சொல்கிறது.

-முத்துச்செழியன்-

Loading

(Visited 35 times, 1 visits today)