கோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை- பாகம்- 1 – சேதுராசா-

மகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாக கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரச தலைவராக பதவியேற்ற பின்பாக, தான் வெற்றி பெறக் காரணமான சிங்களதேசத்தின் அக, புறக் காரணங்கள் மாறுதல்களுக்குள்ளாக முன்னரே பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தி அதில் 2/3 பெரும்பான்மையுடன் வென்று, முன்னைய மைத்திரி-ரணில் ஆட்சியில் சட்டமூலமாகிய 19 ஆம் திருத்தச் சட்டம் என்கிற சனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்கும் திருத்தச்சட்டத்தை நீக்குவதன் மூலம், “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்தையும் செய்யும் அதிகாரம்” என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன தான் கொண்டு வந்த நிறைவேற்றதிகாரத்தின் அதிகாரவலிமையைக் கோடிட்டுக் காட்டியவாறான அதிகாரத்தை அடைந்து, சிங்கள பௌத்த பீடங்கள் எதிர்பார்த்து கிடக்கும் துட்டகெமுனுவாகவோ அல்லது சிங்களக் கிட்லராகவோ வந்து விடத் துடிக்கும் கோத்தாபயவினை, அவருக்குக் குறுக்கப் பாய்ந்த பூனையாக அமைந்த 19 ஆம் திருத்தச் சட்டம் மார்ச் 2 வரை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதவராக்கி அதிகார மட்டுப்பாட்டைச் செய்தது.

பாராளுமன்றப் பதவிக்காலம் 4 1/2 ஆண்டுகளைக் கடந்த பின்பாகவே சனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கிய 19 ஆம் திருத்தச் சட்டமானது, சனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைத்தமையுடன் 2 தடவைகள் மட்டுமே சனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்கலாம் என்கிற நிலைமையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு, சனாதிபதியாகியும் 6 மாதங்கள் காத்திருந்து கலைத்த பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலகந்தழுவி வந்த கொரோனாவால் அது இன்னமும் தள்ளிப்போக, கொரோனாத் தொற்றைக் காரணங்காட்டி பாராளுமன்றத் தேர்தலை கோத்தாபய வெற்றி அலை அமுங்கிப்போக முன்பாக நடத்துவதைத் தவிர்த்து, கோத்தாபாய மீதான மயக்கம் சிங்கள மக்களிடத்தில் தெளிய வகைசெய்யும் வகையில் தேர்தலை இயன்றவரை தள்ளிப்போட ஐ.தே.க வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்கொண்ட முயற்சிகளுடனும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மூவரில் ஒருவரான பிறப்பால் தமிழரும் அமெரிக்க தூதரகத்துடன் ஒட்டான உறவில் இருப்பவருமான பேராசிரியர் ரட்ணஜீவன்  கூல் கொடுத்த குடைச்சலுடனும் மல்லுக்கட்டி ஒருவாறாக ஓகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியை தேர்தல் தேதியாக தேர்தல் ஆணைக்குழுவின் வாயால் கோத்தாபய அறிவிக்கச் செய்துவிட்டார்.

உயிர்த்த ஞாயிறன்று நிகழ்ந்த இசுலாமிய அடிப்படைவாத நரபலிவெறியாட்டத்தால் நாடு மிகவும் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், அப்படியான அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற கோத்தாபயவினாலேதான் இயலுமென சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டமையால் வரலாறு காணாதவாறு தனிச் சிங்கள வாக்கில் சிங்கள சனாதிபதியானார் கோத்தாபய. உயிர்த்த ஞாயிறால் எழுந்த கோத்தா அலையில் ஐ.தே.கட்சியின் நிலைத்த வாக்கு வங்கியாக இருக்கும் கிறித்தவ சிங்கள மேட்டுக்குடியினரும் கூட எடுபட்டுப்போனதன் விளைவாகவே கோத்தாபய தனிச் சிங்கள வாக்கில் சனாதிபதியாக முடிந்தது என்பதை இங்கு நோக்க வேண்டும்.

சிங்களதேசமானது தமது ஆற்றல்வளத்திற்கு முடியாத விடயமாகவிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வது என்ற விடயமானது, ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் கூறுபோட்டு உலகின் வல்லாண்மை நாடுகளுக்கு விற்றுச்சுட்டே இயலுமான விடயமாகியது. எனவே, சிங்களதேசம் தமிழர்தேசத்தை அழித்தொழித்து இனப்படுகொலை செய்யும் போதே, தனது தேச இறைமையையும் விற்று முடித்துவிட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக, தமது நலன்களுக்கான பேரம்பேசல்களுக்குள் சிறிலங்காவை பணிந்திணங்கவைக்க கையிலெடுக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணை என்கின்ற விடயத்தைப் பன்னாட்டளவில் பாதிப்பில்லாமல் கையாளவென கிடந்த மீதியையும் சிறிலங்கா அரசு விற்றுச்சுட்டு விட்டது. நிலைமை இவ்வாறிருக்க இனி சிங்களதேசம் தன்னை வலுமிக்கதாக கட்டியெழுப்பி “சுதேசி” வேடம் போடுவதெல்லாம் வெறும் பம்மாத்துகளேயன்றி வேறொன்றுமில்லை. தமிழர்களை அழித்தொழிக்கவென வேண்டிய கடன்களும் வட்டிகளும் சிறிலங்காதேசத்தின் கட்டுப்பாட்டை மீறியே செல்கின்றது. வட்டிகட்ட கடன்வாங்கும் நிலைக்கு சிறிலங்கா வந்துவிட்டது. 2012 ஆம் ஆண்டு 9% ஆக இருந்த பொருண்மிய வளர்ச்சியானது (Economic Growth), 2014 ஆம் ஆண்டு 4.5% ஆக குறைந்ததோடு 2018 ஆம் ஆண்டு 3.3% ஆகவும், பின்னர் 2019 ஆம் ஆண்டு 2.3% ஆகவும் குறைந்துள்ளது. இந்த பொருண்மிய வளர்ச்சி நூற்றுக்கூறானது (Economic Growth Rate) 2020 இல் மேலும் வீழ்ச்சியடையுமென்று ஆசிய அபிவிருத்தி வங்கி தனது கணிப்பில் தெரிவித்துள்ளமையை இங்கு ஈண்டு நோக்க வேண்டும். இந்த நிலையில் சிறிலங்காவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்ல எந்தக் கொம்பராலும் முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் வெல்ல கண்ணை மூடிக்கொண்டு விற்றுச்சுட்டதன் விளைவுகளை சிங்களதேசம் இப்போதுதான் இன்னும் அதிகமாக எதிர்கொண்டுவருகிறது. அப்படியிருக்கையில், சனாதிபதித் தேர்தலை வென்ற வெற்றியலையில் பாராளுமன்றத் தேர்தலையும் வெற்றிபெறுவதை நோக்கி விரைந்தியங்க வேண்டிய தேவையை கோத்தாபய நன்குணர்ந்தே, அதுவரை சிங்கள மக்களின் மனநிலைகளை அதே அலைவரிசையில் பேணவே பல வேடங்களை அல்லும் பகலும் பாராமல் அரங்கேற்றி வந்தார்.

இந்த நிலையில், கொரோனாப் பெருந்தொற்று என்ற உலகப் பொதுச்சிக்கல் வந்து பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிடத்துடித்த கோத்தாபயவின் முனைப்பை முடக்கிப்போட்டது. கொரோனாப் பெருந்தொற்றின் தாக்கத்தினால், சிறிலங்காவின் பொருண்மியம் அதள பாதாளத்திற்கு செல்லும் நிலையில், அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழியேதுமில்லாமல், மக்களின் பார்வைகளைப் பாராளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது திசைதிருப்புவதையே நோக்காகக் கொண்டு கோத்தாபய செயற்பட்டு வருகின்றார்.

ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் எடுத்துக்கொண்டால், 8 மில்லியன் பேரே உழைத்து வருமானமீட்டுபவர்களாக இருக்கின்றனர். அவர்களில், 15% ஆனவர்கள் மட்டுமே அரச பொதுத்துறைகளில் பணியாற்றுகின்றனர். 43% ஆனோர் தனியார் துறைகளிலும் 33% ஆனோர் சொந்தத் தொழில்களும் செய்கின்றனர். இதனை இன்னும் நுணுகிப் பார்த்தால், உழைத்து வருமானமீட்டும் 80 இலட்சம் பேரில் 56 இலட்சம் பேரின் வருமானம் உறுதியற்றதன்மையுடையது. கொரோனாத்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் சமூக முடக்கத்தினால் வருமானமிழந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

இது மிகப்பெரிய பொருண்மிய நெருக்கடியை இலங்கைத்தீவில் ஏற்படுத்துகிறது. வெளிநாடுகளில் பணியாற்றச் சென்றோரில் பெரும்பாலானோர் பணிநீக்கத்தாலோ அல்லது பணி விலகலாலோ நாடுதிரும்புவதால், சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GDP) 8% ஆக இருக்கும் வெளிநாட்டில் பணியாற்றுவோரால் கிடைக்கும் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. சிறிலங்காவின் பொருண்மியத்தைத் தாங்கிப் பிடிக்கும் சுற்றுலாத்துறை, தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி போன்றவை கொரோனாவால் முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன. சிறிலங்காவிடம் இனிமேல் கடனைத் திருப்பச் செலுத்தும் ஆற்றல் இல்லை என்றும் சிறிலங்கா மீது இனிமேல் நம்பிக்கை இல்லையென்றும் கூறி சிறிலங்காவின் அரச திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக “ஜெய்கா” என்ற ஜப்பானிய பன்னாட்டு ஒத்துழைப்பிற்கான முகவர் அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து இந்த அமைப்பு விலகியிருப்பதானது, ஏனைய உதவி வழங்கும் பன்னாட்டு அமைப்புகளையும் சிறிலங்கா தொடர்பில் இதே கொள்கையைப் பின்பற்றவே தூண்டும். இதனால், சிறிலங்கா தேசமானது மீள முடியாத பொருண்மியச் சிக்கலில் வீழப்போகின்றது. கட்டுநாயக்கா வானூர்தித்தளம் விடுதலைப் புலிகளால் 2001 ஆம் ஆண்டு தாக்கியழிக்கப்பட்டமையால், சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி எதிர்க்கணியத்திற்கு (_) சென்று சிறிலங்காவானது பொருண்மிய இயங்குநிலையற்று கிடந்தபோதே (Bankruptcy), உலகநாடுகள் விரைந்தியங்கி விடுதலைப் புலிகளை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்து சிறிலங்காவைக் காப்பாற்றினர். அப்படியானதொரு இக்கட்டான நிலைமையை நோக்கியே சிறிலங்காவின் பொருண்மியம் சென்றுகொண்டிருக்கிறது.

உண்மை நிலைமை இப்படியாகவிருக்கையில், கொரோனாவை வெற்றி கொண்டு கிழித்தவராக தன்னை காட்டுவதிலேயே கோத்தாபய மும்முரமாக இருக்கிறார். இப்போது மக்கள் பாரிய பொருண்மிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதால், கோத்தாபய எதிர்பார்த்த வெற்றியலையை இன்னமும் எழுப்பத்தில் வைத்திருக்க வேண்டுமெனின், கோத்தாபய புதிது புதிதாக தனது சிங்கள மக்களை ஏமாற்றவே கருமங்கள் ஆற்றுவார். பொருண்மிய நெருக்கடிகளால் மக்கள் தெருவில் இறங்கும் நிலையிலேயே உள்ளனர். இதனால் எங்கும் கலவரங்களும், ஒத்துழையாமைகளும், ஆர்ப்பாட்டங்களுமென நாடு குழப்பமடையப் போகின்றது. இதைத் தடுத்து தனது அதிகாரவெறியை ஆட்சியில் தொடர கட்டமைப்புகளை இயலுமானவரை இராணுவப்படுத்தல் என்ற அணுகுமுறையையே கோத்தாபய கைக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

பொருண்மியம் அரசிய்லைத் தீர்மானிக்க, அந்த அரசியல் ஏனைய எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பது அடிப்படையானது. என்றாலும், மகாவம்ச புரட்டுகளால் சித்தங்கலங்கி வெறியேறிப்போன சிங்கள பௌத்த பேரினவாத வெறியேறி நிற்கும் சிங்களவர்களிடத்தில் ஆதரவைப் பெற தமிழர்களின் மீதான வரலாற்றுப் பகையுணர்வையும் முசுலீம்கள் மீதான வெறுப்புணர்வையும் சிங்களவர்களின் மனப்படிமங்களில் கிளறிவிட வேண்டும் என முடிவெடுத்து, அந்த ஒற்றை நோக்கில் செயலாற்ற ஆரம்பித்திருக்கிறார் கோத்தாபய. நாட்டின் பொருண்மியச் சூழல் முற்றிலும் எதிரான நிலையில் இருக்கும் போது, பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்து 2/3 பெரும்பான்மை பெற வேண்டிய சூழலில் இருக்கும் கோத்தாபயவிற்கு தமிழர்கள், முசுலீம்களை பந்தாடி, தற்கால துட்டகெமுனுவாக தன்னை சிங்கள மக்கள் நம்பும்படி செய்ய முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

அத்துடன், இனிவரும் நாட்களில் சிறிலங்காவை பொருண்மிய அடிப்படையில் மீட்டெடுத்து, ஏற்கனவே விற்றுச் சுட்டவற்றை மீளக்கைக்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல முடியுமென கோத்தாபய நம்பவில்லை. எனவே, தன்னிடம் இருக்கும் இறுதித் தெரிவாக ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அனைத்துக் கட்டமைப்புகளையும் சிங்கள இராணுவமயப்படுத்துவதை விரைந்து நடைமுறைப்படுத்தி, அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியை இலங்கைத்தீவில் நிலைநாட்டும் திட்டமே கோத்தாபயவிடம் உண்டு.

சிங்களதேசம் எத்தகையை துன்பச் சுமையில் இருந்தாலும், மறுநாள் உலகமே அழியப்போகின்றதென்றாலும், இன்றேனும் தமிழர்தேசத்தை அழித்தொழித்து ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கியே தீரும் முனைப்பில் தனது வேலைகளை முடுக்கும் என்றளவுக்கு சிங்களவர்களிடத்தில் மாகவம்ச கருத்தேற்றம் நஞ்சாய் ஊட்டப்பட்டு அது அவர்களின் குருதியின் ஒவ்வொரு அணுக்களிலும் ஊறிப்போய் இருக்கின்றது. எனவே, நிலைமை எவ்வாறெனினும், தமிழர்தேசத்தை அழித்தொழிக்கும் சிங்கள பௌத்த பேரினவெறி இன்னுமின்னும் வீறுகொள்ளவே செய்யும்.

சிறிலங்காவின் அனைத்துக் கட்டமைப்புகளும் இயலுமானவரை இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் அரசதுறைகளுக்குப் பொறுப்பதிகாரிகளாக கோத்தாபயவினால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கோத்தாபயவின் நம்பிக்கைக்குரிய இராணுவத்தின் படையணியாகிய “கஜபா றெஜிமன்ட்” இல் கட்டளையிடும் தரநிலையிலிருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளே  இவ்வாறு நியமிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவமயமாகும் சிறிலங்காவின் அரச கட்டமைப்புகள்

பெயர்தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் பதவிவிபரக் குறிப்புகள்
மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரட்னபாதுகாப்பு அமைச்சின் செயலர்,

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் பாரம்பரியத்தை முகாமை செய்வதற்கான சனாதிபதி செயலணியின் தலைவர்,

பாதுகாப்பானதும் ஒழுக்கமானதும் சட்டநெறிமுறைக்குட்பட்டதுமான நாட்டை கட்டியெழுப்புவதற்கான சனாதிபதி செயலணியின் தலைவர்,

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்
தலைவர் பிரபாகரனைக் கொன்றவர் என சிங்கள ஊடகங்களால் தூக்கிக் கொண்டாடப்படுபவர்,
இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவத்தின் வன்னி தலைமையக பொறுப்பதிகாரியாக இருந்தவர்,
"கஜபா படையணி" யின் 53 ஆவது பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்தவர்
லெப்.ஜெனரல்.சவேந்திர சில்வாகொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய நடுவத்தின் தலைவர்,
பாதுகாப்பானதும் ஒழுக்கமானதும் சட்டநெறிமுறைக்குட்பட்டதுமான நாட்டை கட்டியெழுப்புவதற்கான சனாதிபதி செயலணியின் உறுப்பினர்
சிறிலங்காவின் இராணுவத் தளாபதி,
கோத்தாபய இராணுவத்தில் இருந்தகாலத்திலே அவரின் கட்டளையின் கீழ் பணியாற்றியவர்.
"கஜபா படையணி" இன் கட்டளையிடும் அதிகாரி,
58 ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தவர்
போர்க்குற்றச்சாட்டுகள் பலவற்றோடு தொடர்புடையவர்
மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லேசிறிலங்கா தேசிய புலனாய்வு சேவைகள் அமைப்பின் தலைவர்இந்தப் பதவி காவல்துறை தரப்பிலிருக்கும் ஒருவராலேயே நிரப்பப்படும் வழக்கத்தை மீறி, இராணுவத்தினனான இவரின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது
சிறிலங்கா இராணுவப் புலனாய்வின் தலைவராக இருந்தவர்.
ஊடகர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் முதன்மைக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்.
பல இரகசிய கொலைகளுக்கு காரணமானவர்
இராணுவப்புலனாய்வுப் பிரிவுடன் ஒத்தியங்கிய தமிழரைக் கூட நம்பாமல் விரட்டிவிட்டோ அல்லது காணமலாக்கியோ செயற்பட்டவர். எந்தவொரு தமிழனையும் நம்பமாட்டேன் என செயற்படும் தமிழின வெறுப்புணர்வில் எல்லா சிங்கள இனவாதிகளிலும் ஒரு படி மேற்சென்றவராகையாலே, இவர் முசுலீமாக இருந்தும் இந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கதுறைமுக அதிகார சபையின் தலைவர்போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல் என்ற பெயரிலான இராணுவத்திட்டத்தின் பொறுப்பதிகாரியான இவரால் பல போராளிகள் இராணுவத் தடுப்பில் இருக்கும் போது காணாமலாக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கட்டளையிடும் இராணுவ அதிகாரியாக இருந்தவ் காலத்தில் பல படுகொலைகளுக்குக் காரணமானவர்
மேஜர் ஜெனரல் (ஓய்வு) சஞ்சீவ முனசிங்கசுகாதார அமைச்சின் செயலாளர்சிறிலங்கா இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவராக இருந்தவர்
மேஜர்.ஜெனரல். (ஓய்வு) நந்தன மல்லவராய்ச்சிபலநோக்கு அபிவிருத்திச் செயலணியின் பணிப்பாளர் நாயகம்
வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு செயலணியின் தலைவர்
52 ஆவது பிரிவின் யாழ்மாவட்ட இராணுவத் தலைமையக கட்டளையிடும் அதிகாரியாக இருந்தவர்,
பதில் இராணுவத்தளபதியாக இருந்தவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) சுமேத பெரேராமகாவலி, வேளாண்துறை, நீர்ப்பாசனம் மற்றும் ஊரபிவிருத்திகள் அமைச்சின் செயலாளர்வடமராட்சியை நோக்கிய "விடுதலை நடவடிக்கை" தாக்குதலில் இருந்தே முதன்மையான இராணுவ நடவடிக்கைகளில் முதன்மைப் பங்கு வகித்தவர்,
கஜபா படையணியின் முதன்மை நிருவாகியாக இருந்தவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ்தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர்இராணுவப் புலனாய்வுத்துறையின் பொறுப்பதிகாரியாக இருந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை கடத்துதல், காணாமலாக்கல், இராணுவ முகாம்களில் இரகசியமாக அடைத்துவைத்தல் போன்ற அட்டூழியங்களைச் செய்தவர்,
யாழ்மாவட்ட இராணுவத்தளபதியாக இருந்தவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்பிரியசுங்கத் திணைக்களப் பணிப்பாளர்கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையக பொறுப்பதிகாரியாகவும், 57 ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் இருந்தவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) தர்சன கெட்டியாராய்ச்சிசிறிலங்கா புனர்வாழ்வு ஆணைக்குழுவின் தலைவர்சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிந்தனையாளர் குழாமில் முதன்மையானவர்,
புனர்வாழ்வு மற்றும் சிறை மறுசீராக்கம் தொடர்பான பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்,
யாழ்மாவட்ட இராணுவத் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியாக இருந்தவர்
மேஜர் ஜெனரல் (ஓய்வு) சந்திரசிறிசிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர்வடமாகாண ஆளுநராக இருந்தவர்,
யாழ்மாவட்ட இராணுவத்தளபதியாக இவர் இருந்தகாலத்திலே தான் யாழ்ப்பாணத்தில் இராணுவ வெறியாட்டம் அதிகமாக இருந்தது
52 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்தவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) சாந்த திசாநாயக்கநுகர்வோர் அதிகாரசபையின் தலைவர்"கஜபா படையணி" இனது பொறுப்பதிகாரியாக இருந்தவர்
வெலிக்கடை சிறையில் வைத்து 27 பேர் படுகொலையாகிய வழக்கில் கோத்தாபயவின் நேரடிக் கையாளாகச் செயற்பட்டவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) சுதன்ன ரணசிங்கதேசிய பேரிடர் முகாமை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட களமுனைகளில் பணியாற்றியவர்
மேஜர்.ஜெனரல் (ஓய்வு) கே.பி.எகொடாவெலகொரோனா தொடர்பான சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் தலைவர்"அவன்கார்டே" ஊழல் வழக்கில் கோத்தாபயவுடன் சேர்த்து கூட்டுக்குற்றவாளியாக குற்றஞ்சுமத்தப்பட்டவர்,
கெமுனு படையணியின் பொறுப்பதிகாரியாக இருந்தவர்
சனாதிபதி செயலகத்தின் முதன்மை உறுப்பினராக இருந்தவர்
எயார் மார்சல் (ஓய்வு) ரொசான் குணதிலகமேல் மாகாண ஆளுநர்சிறிலங்காவின் வான்படைத் தளபதியாக இவர் இருந்தபோதே, வான் குண்டுத்தாக்குதல்கள் மூலம் அதிகளவான படுகொலைகள் செய்யப்பட்டன. இறுதிப் போரில் சிறிலங்கா படைகள் வெற்றி பெற்றதில் இவரின் பங்கே பெரிது என சிறிலங்கா படைத்துறை மட்டத்தில் புகழப்படுபவர்.
அட்மிரல் (ஓய்வு) ஜெயநாத் கொலம்பேஜ்சனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர்சிறிலங்காவின் கடற்படைத்தளபதியாக இருந்தவர்.
ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ்பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான சனாதிபதி செயலணியின் உறுப்பினர்சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்,
கடற்படை அதிகாரி

தொடர்ச்சியாக, தமிழினப்பகையுணர்வையும் முசுலீம் வெறுப்புணர்வையும் சிங்கள மக்கள் மனங்களில் கிளறிவிடுவதன் மூலம் தனக்குச் சார்பான சிங்கள பௌத்த இனவெறி அலையொன்றை பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எழுப்பும் முயற்சியிலேயே கோத்தாபய இப்போது தீவிரங்காட்டி வருகின்றார். அதன் அடிப்படையிலேயே, கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் பாரம்பரியங்களை முகாமை செய்வதற்கான சனாதிபதி செயலணி மற்றும் பாதுகாப்பான, ஒழுக்கமான மற்றும் சட்டத்தின் படி ஒழுகும் சமூகத்தைக் கொண்டதாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சனாதிபதி செயலணி என்ற இரு சனாதிபதி செயலணிகளை இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே அமைத்து அதற்கான அரசாணைகளை கோத்தாபய பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழர்களிற்கெதிரான பகை நடவடிக்கைகளை உலகிற்கு அச்சப்படாமல் வெளிப்படையாகச் செய்யக்கூடிய துணிந்த தலைவனாக சிங்கள பௌத்த பேரினவெறியர்களிடத்திலும், மகாவம்ச மனநிலையில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களிடத்திலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறார் கோத்தாபய.

ஏதோ, இப்போது இந்த செயலணி மூலம் தான் தமிழர்களின் வரலாறுகள் இருட்டடிக்கப்பட்டும், திரிபுசெய்யப்பட்டும், தமிழர்தேசத்தை குறிப்பாக தென்தமிழீழத்தை சிங்கள பௌத்தர்களின் வரலாற்றுத் தாயகம் என வரலாற்றுப் புரட்டுச் செய்யப்போகிறார்கள் என்பது போல தமிழர்கள் இது குறித்துப் பேசுவது என்பது, தமிழர்கள் நீண்டகாலக் கோமாவுக்கு பின்னர் எழுந்து நின்று அரசியல் பேசுவது போன்ற செயலாகத்தான் இருக்கிறது.

உண்மையில், இது ஏதோ தொல்லியல் திணைக்களத்தால் மட்டும் நிகழ்த்தப்படுவதல்ல. ஒட்டுமொத்த சிறிலங்காவின் அரச இயந்திரமுமே தமிழினவழிப்பைத் தானியங்கியாகச் செய்யும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பு, தொன்மமான மொழி, பொருண்மிய வாழ்வு, தனித்தன்மையான பண்பாடு போன்ற தனித் தேசியமாக தமது தமிழர் தாயகத்தில் வாழத் தேவையான மூலகங்களை (Elements) சிதைத்தழிப்பதன் மூலம், தமிழ்த் தேசியத்தின் இருத்தலைத் தமிழர் தாயகப் பகுதிகளிலே இல்லாதொழித்து, ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்குவதற்கு சிறிலங்காவின் அரச இயந்திரமும் அதனது கட்டமைப்புகளும் எவ்வாறு நுணுக்கமாக இழைக்கப்பட்டு, தொடர்ச்சியான தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் சாத்தியமாக்கப்படுகின்றது என்பதை நுட்பமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

1957 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் மூலம் டி.எஸ். சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயகங்களில் சிங்களக் குடியேற்றமானது இடைவிடாது தொடர்ச்சியாக நடந்தேறியே வருகின்றது. வடக்கு- கிழக்குத் தமிழர் இணைந்த தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக எல்லைப் பகுதிகளை சிங்கள மயமாக்கி சிங்கள இடமாக்க, சிறிலங்காவின் தொல்லியல் துறை, மீள்குடியேற்ற அமைச்சு, மகாவலி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிறிலங்காவின் வனத்துறை, பெருந்தெருக்கள் அமைச்சு, ஊர்காவற்படை மற்றும் முப்படைகள் இணைந்து செயலாற்றுகின்றது. இவ்வாறு ஒட்டுமொத்த சிறிலங்காவின் அரச இயந்திரத்தின் அமைப்பு முறையே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக எப்போதுமே மேற்கொள்ளத்தக்கவாறே அமைந்துள்ளது.

கல்வி அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, ஊடக அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சு போன்ற அமைச்சுகள் அடங்கிய எல்லா மட்டங்களிலும் இந்த தமிழ் மொழி விரோதச் செயற்பாடுகள் விரவிக் காணப்படுகின்றன. எனவே கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த சிங்கள பௌத்த அரச இயந்திரம் தான் கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தமிழினவழிப்பை தன்னிச்சையாகத் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமே இருக்கும்.

பொருண்மிய அபிவிருத்தி அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, விவசாய அமைச்சு, ஊரக பொருளியல் அலுவல்கள் அமைச்சு அடங்கிய எல்லா மட்டங்களிலும் தமிழர்களின் பொருண்மியத்தைத் தமிழர்களிடம் இருந்து பறித்தல் என்பதை உறுதிப்படுத்தத் தக்கவாறான தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்றே வருகின்றன.

கலாசார அலுவல்கள் அமைச்சு, சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிங்கள தொல்லியல் துறை  அடங்கிய எல்லா மட்டங்களிலும் தமிழர்களின் உயரிய பண்பாட்டைச் சிதைத்தழிக்கும் நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன.

மகாவம்சம் போன்ற வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது.

எனவே, தமிழரை அழிக்க தான் விரைந்தியங்குவதாகக் காட்டவே இந்த சனாதிபதியின் செயலணிகள் கோத்தாபயவினால் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இலகுவில் விளங்கிக்கொள்ள இயலும். இந்தச் செயலணியில், சிங்கள பௌத்த பேரினவெறிச் செயற்பாட்டாளர்களையும் பேச்சாளர்களையும் தனது தேர்தல் பரப்புரை நன்மை கருதியே கோத்தாபய இணைத்துள்ளார். 10,000 தொல்லியல் சான்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன எனவும் அவற்றில் வெறும் 1000 மட்டுமே அடையாளங்காணப்பட்டுள்ளன எனவும் மீதியை விரைந்து கண்டுபிடித்து அவற்றை  சிங்கள பௌத்தர்களின் புனித இடங்களாக்க வேண்டும் என்றவாறும் எல்லாவல மேதானந்த தேரர் என்ற சிங்கள கொடுமினவெறிப் பிக்கு அண்மையில் பேசியுள்ளார். கோத்தாபய காலத்தில் தான் இவற்றைச் செய்ய முடியுமென்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் விதத்திலேயே அவரின் பேச்சுகள் அமைகின்றன. இப்படியான பரப்புரைகளை மேற்கொள்ளவே, இந்த சனாதிபதி செயலணியை உருவாக்கி அதில் எல்லாவல மேதானந்த தேரர் போன்றவர்களை உறுப்பினர்களாக்கியுள்ளார் கோத்தாபய. புதிதாக இந்த செயலணி எதையும் செய்யப்போவதில்லை. இவை காலங்காலமாக தொடர்ச்சியாக நடந்தேறி வருவன தான். இந்தச் செயலணி அமைத்துத்தான் இவற்றைச் செய்ய வேண்டியளவுக்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசியந்திரம் அவ்வளவு தொய்வாகவெல்லாம் கட்டமைக்கப்படவில்லை. இது வெறும் பரப்புரை நோக்குக் கொண்டதே என்பதைத் தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டும்.

உண்மையில், தமிழர் தேசத்தின் தாயகப்பகுதிகளில் கிடைக்கும் அத்தனை சான்றுகளும் தமிழர்களின் நீண்டு நிலைத்த செழித்த வரலாற்றுச் சான்றுகளே. இங்கு அகழ்வாய்வில் கிடைக்கும் அதே தொல்லியற் சான்றுப் பொருட்கள் தான் தமிழ்நாடெங்கும் அகழ்வாய்வுகளின் போது கிடைக்கின்றன. எனவே, அகழ்வாய்வு முடிவுகளும் அதுவாகாத்தானே இருக்க முடியும். அதாவது, தமிழர்களின் செழித்த வரலாற்று வழி வாழ்நிலையையே தமிழர்களின் தாயகப் பகுதிகளில் நடத்தும் அகழ்வாய்வுகள் சான்றுபகரும். இது இவ்வாறிருக்க, சிங்கள பௌத்த பேரினவெறியர்களின் வரலாற்றுப் புரட்டுகளைக் கண்டு தமிழர்கள் பதைத்துப் போய், அகழ்வாய்வு என்றாலே பதறிப்போய் நிற்க வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? தமிழர்களிடத்தில் இருக்கும் குறை என்ன? அவர்களின் வரலாற்று அறிவில் என்ன சிக்கல் உள்ளது? தமிழர்களின் மெய்யியல் மரபு, வழிபாட்டு வரலாறு, தமிழர்கள் பின்பற்றிய மதங்களின் வரலாறுகள் பற்றிய புரிதல் ஈழத்தமிழர்களுக்கு அறவே இல்லையென்பது தான் இந்த நிலைக்குக் காரணமா? இவற்றை எப்படி ஈழத்தமிழர்கள் நாம் எதிர்கொள்ள வேண்டும்? வரலாற்றை எமக்கானதாக்க எம்மை எப்படி நாம் அணியமாக்க வேண்டும்? போன்றன குறித்த விடயங்களை அடுத்த கட்டுரையில் ஆழமாக நோக்குவோம்.

-சேதுராசா-

13.06.2020

 

 

 

 

 

Loading

(Visited 15 times, 1 visits today)