
தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பதோடு, அது ஒரு வாழ்வியலாகவும் பன்னெடுங்காலமாக தமிழர்களிடத்தில் வளர்ந்தும் செழுமையுற்றும் வந்ததோடு, உலகின் பல்வேறு தேசிய இனங்களிற்கு செழுமையான வாழ்நெறியையும் கற்றுக்கொடுத்தது எனக் கூறுவது மிகையன்று. இவ்வாறாக, தமிழர்கள் வரலாற்றின் வழி பண்டுதொட்டு தமிழர்தாயக நிலப்பரப்புகளில் தொன்மையும் செழுமையுமிக்க தமிழ்மொழி பேசி ஒரு பொதுப்பண்பாட்டுடன் வாழ்ந்து வந்ததோடு தமிழர்களுக்கென அறிவுமரபு, உற்பத்தி முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பண்பாடுகள், மெய்யியல், கட்டடக்கலை, பொறியியல் நுட்பங்கள், சூழலியல் சார்ந்த பேண்தகமை வாழ்வுமுறை, மருத்துவம், இசை, ஆடற்கலை, ஓவியம் என அனைத்தும் தனிப்பாங்குடன் சிறப்புற அமைத்துக் காலந்தோறும் அவற்றை வளர்த்தெடுத்து வந்த வரலாறும் சேர்ந்ததே தமிழ்த்தேசிய நோக்குநிலை என்ற புரிதலானது “தமிழ்த்தேசியம் ஒரு வாழ்வியல்” என்ற தெளிவின்பாற்பட்டோருக்கு இருக்கும்.
இப்படி அத்தனை தளத்திலும் வளர்ந்துயர்ந்து வந்த தமிழர்களின் மீயாற்றல் கொண்ட அறிவுமரபைப் பற்றிய பார்வையானது, காலனியர் ஆட்சிக்குள் தளையுண்டு தமிழர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னரான காலத்தை மட்டும் நோக்கிப் பழகிய காலனிய அடிமை மனநிலை கொண்ட வரலாற்றாய்வாளர்களுக்கு இருப்பதில்லை. இதனால், பின் வந்த எம்மவர்களும் காலனியடிமை மனநிலைக்குள் தம்மையறியாமலே உழன்று காலனியர்கள் அறிமுகப்படுத்தியதாகத் தோற்றங்கொள்வனவற்றையேற்று வாழ்தலையே அறிவார்ந்து நாகரீகமாக வாழ்தல் என்று சிந்திக்கப் பழக்கப்பட்டனர்.
தமிழர்களின் அறிவுமரபு எத்தகையது?
தமிழர்கள் இவ்வுலகின் தோற்றத்தையும், அதன் அசைவியக்கத்தையும், அதில் உயிர் வாழ்வன பற்றியும் புரிந்துகொள்ளல் என்பதனூடாக இவ்வுலகைப் புரிந்துகொள்ள முயற்சித்ததன் விளைவான முற்றிய பேறாக சில கோட்பாட்டுப் புரிதல்களையடைந்து அதனூடாக இவ்வுலகை அறிவியற்கண்கொண்டு புரிந்துகொண்டார்கள். கருத்துமுதல்வாத கதையாடல்களை அடிப்படையாக வைத்து கட்டுக்கதைகளை மதக்கோட்பாடுகளாக நிறுவிய உலகில் இன்று நின்று நிலைக்கும் அத்தனை மதங்களும் பிற்போக்குத் தனமான அறிவுக்கொவ்வாத மூடநம்பிக்கைகளை மக்களிடத்தில் விதைத்தனவேயன்றி, தமிழர்களைப் போல பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகைப் புரிந்துகொண்ட முற்போக்கு அறிவுமரபு வேறெவரிடம் இருந்திருக்கவில்லை.
நிலம், நீர், தீ, வளி என்ற பூதங்கள் சேர்ந்தே உலகமும் இந்த உலகிலுள்ள உயிரினங்களும் இந்த உலகிலுள்ள பொருட்களும் அமைந்திருக்கின்றன எனவும், இந்த பூதங்கள் சேர்ந்திருக்கும் அளவையும் விதத்தையும் பொறுத்தே வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு தன்மையினைக் காட்டுகின்றன எனவும், எவ்வாறு இந்த பூதங்கள் இயற்கையில் சேர்ந்தனவோ அவ்வாறே இயற்கையாய் பிரிவுமுற்று இல்லாது போகும் எனவும் உலக இயக்கத்தை விளக்கிய தமிழர்களின் அன்றைய அறிவுமரபு உலகாய்தம் என கோட்பாட்டு வடிவுற்றது.
எடுத்துக்காட்டாக, 2 ஐதரசன் அணுக்களும் ஒரு ஒட்சிசன் அணுவும் இணைந்தமையால் வெளிப்பட்ட தன்மையே நீர் என்பதாகும் என்பதோடு அந்த அணுக்களின் சேர்வை அவ்விகிதத்தில் இணைந்திராவிட்டால் வெளிப்படும் தன்மை நீரல்ல என்பது போலவே, மாந்த உடலும் இந்த பூதங்கள் சேர்த்தியுற்றமையால் வெளிப்படுத்தும் தன்மையே உயிர் ஆகும் என்பதோடு இதில் வளி என்ற பூதம் வெளியேறினால் (சீவன் போதல்) அது அந்த குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்திருந்த போது வெளிப்படுத்திய தன்மையான உயிர் இல்லாது போகும் எனவும் பொருள்முதற் பார்வையில் அறிவார்ந்து உலகின் தோற்றத்தை ஆய்ந்தறிந்த மரபு தமிழர்களுடையதே.
பின்பு, தமிழர்களிடத்தில் ஒரு அறிவர் கூட்டம் உருவாகி அவர்களிடமிருந்த அறிவுத் தேடல்கள் ஒரு சிந்தனைப் பள்ளியாக அவர்களை ஒருங்கிணைத்தது. இப்படியான அறிவர்கள் சித்தன் எனவும், அண்ணல் எனவும் அறிவர்கள் என்ற பொருள் பொதிய நோக்கப்பட்டனர். இவர்கள் அடர்ந்த காடுகளிலும் உயர்ந்த மலைகளிலும் இருந்து பல ஆய்வுகளைச் செய்து தமிழர்களின் வாழ்விற்கு அறிவொளி ஏற்றினர். இதன் தொடர்ச்சியாக, பூதங்களின் சேர்க்கையால் உலகம் முதல் அத்தனை பொருட்கள் ஈறாக ஆக்கப்பட்டது என்ற பொருள்முதற் பார்வைக்குள் இன்னும் மேற்சென்று இவையனைத்தும் அணுவினாலானது என்றும் அந்த அணுக்கள் சேர்ந்திருக்கும் அளவிற்கும் அமைப்பிற்குமேற்ப தோன்றும் வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு தன்மையிடத்தவை என்றும் அணுவியல் கொள்கையை உருவாக்கிய மரபிற்கு தமிழர்கள் உரித்தானார்கள்.
அணு பிளவுறும் போது பாரிய (வெப்ப) ஆற்றல் வெளிப்படும் என்றும் (ஐன்ஸ்ரின் E=mc2) அப்படியொரு இயற்கையின் தற்செயல் நிகழ்வாக நிகழ்ந்த அணுப்பிளவொன்றின் போது ஏற்பட்ட பாரிய வெப்பவாற்றலால் வளித்துணிக்கைகள் தீப்பிடித்து அதன் பின்வந்த விளைவுகளாய் ஒடுங்கல் நிகழ்ந்து மழை பெய்து நீர் நிலைகள் உருவாகி….என உலகின் தோற்றம் பற்றி விளக்க அணுவியல் கொள்கையினை வைத்திருந்த அற்வுமரபு தமிழர்களுடையது.
இப்படியாக இயற்கையின் தற்செயல் நிகழ்வு, அணுவியற் கொள்கை போன்றவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் அறிவுக்கோட்பானது அறிவொளிச் சமயமாக அமைப்பாக்கம் கொண்டமையை ஆசீவகம் என அழைக்கிறோம். தமிழர்களிடத்தில் தோன்றிய முதற் சமயமே இந்த ஆசீவகம் தான். உலகில் தோன்றிய முதற் சமயக்கோட்பாடும் இதுதான்.
ஆசீவகம் என்றால் என்ன?
ஆசீவகம் என்ற சொல்லின் பொருள் என்னவென்ற புரிதல் இவ்விடத்தில் தேவையாகின்றது. இப்புரிதலையடைய, சில சொற்கள் குறித்த தெளிவு இன்றியமையாததாகவுள்ளது. கைம்மாறு கருதாத செம்மையான கவியினை “ஆசுகவி” என சிறப்பிக்கும் சொல்வழக்குத் தமிழில் உண்டு. அத்துடன், 8 இனை 2 ஆல் வகுத்தால் ஈவு 4 ஆகும். அதாவது தெரிந்த ஒரு கணியத்தை இன்னும் ஒரு தெரிந்த கணியத்தால் வகுத்தால் கிடைப்பது ஈவு என்றும் அதுவும் தெரிந்ததாய் அமையும் என்பதும் இங்கு நினைவூட்ட வேண்டியது. எனவே ஆசீவகம் என்ற சொல்லை சொற்பகுப்புச் செய்தால் ஆசு+ஈவு+அகம் என வரும். எனவே தெரிந்த கணியம் இரண்டை எடுத்து ஒன்றையொன்றால் வகுத்துப் பார்த்தால் கிடைக்கும் ஈவு என்பதும் தெரிந்த கணியமாகிவிடும். அப்படியாக விடயங்களைப் பகுத்துப் பார்ப்பதன் மூலம் தெளிவுறப்புரிந்துகொள்ளுதலால் ஈவு என்ற சொல்லும், அப்படியான அறிவுச் செயன்முறை இடம்பெறும் இடமென்பதால் அகம் என்பதும் சேர்ந்து ஈவகம் என்றுமாக செம்மையாக கைம்மாறு இல்லாமல் அந்த அறிவுச் செயற்பாடு நடைபெறுவதால் ஆசு+ஈவகம் (ஆசு+கவி போல) ஆசீவகம் என்ற பெயர் உருவாகிற்று என சொற்பிறப்பாய்வு மூலம் முடிவிற்கு வரலாம்.
இவ்வாறாக ஒவ்வொரு விடயத்தையும் பகுத்துப் பார்த்துக் கிடைக்கும் ஈவுகள் கொண்டு மேலும் துலக்கமாக நுண்ணாய்ந்துகொள்ளும் அறிவுமரபு தமிழர்களுடையதாகும். ஐந்திணை, ஐம்பால், மூவிடம், அறுதொழில் இவ்வாறாக அனைத்தையும் பகுத்துப்பார்த்து அதில் முழுமையடைந்து அதற்கு இலக்கணம் உருவாக்கும் அறிவுமரபையுடையவர்கள் தமிழர்கள் என்பதற்கு தொல்காப்பியமும் சான்று பகரும். இயற்கையோடியைந்து தமிழர்கள் அன்று வாழ்ந்த சங்ககாலம் எனும் இயற்கைநெறிக் காலத்தில் நிகழ்ந்த உற்பத்தியில் நிலமே உற்பத்திக் கருவியாயிருந்தது. இந்த நிலத்தை அதன் தன்மைக்கேற்ப ஐந்தாய் வகுத்து ஆய்ந்து அவற்றின் சிறப்பியல்புகளையும் வளங்களையும் அறிந்து அவற்றில் சிறப்புறு பொருண்மியவாழ்வை இயற்கையோடியைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதிலிருந்து நிலத்தைக் கூட பகுத்துப் பார்த்து இலக்கணம் வகுத்துத் தமது அறிவுமரபின் தொடர் பண்பாட்டை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள்.
இந்தக் கட்டுரை மருத்துவம் குறித்த தமிழ்த்தேசிய நோக்கு என்னவென்பதாய் அமைந்தும், தமிழர்களின் அறிவுமரபின் வழிவந்த தமிழர்களின் மருத்துவம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காக தமிழர்களின் அறிவுமரபு எத்தகையது என்பதை விளக்க மேற்போந்த பத்திகள் தேவைப்பட்டது. தமிழர் மருத்துவமென்பது தமிழர்களின் அறிவுமரபின் விளைவாகவும் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும் கிடைத்த தமிழர்களின் அறிவு என்பதனால், தமிழர்களின் அறிவுமரபு குறித்து அடிப்படைப் புரிதலை ஏற்படுத்த மேற்போந்த பத்திகள் தவிர்க்கமுடியாததாகி விட்டது. அதனால் இது குறித்து இவ்விடத்தில் நிறுத்தி மருத்துவம் என்பது என்ன என நோக்கலாம்.
மருத்துவம்/ சித்த மருத்துவம்/ தமிழர் மருத்துவம்
மருத்துவவுணர்வு மாந்தர்கட்கு மட்டுமன்றி மரம் முதலிய ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக உயிரெல்லாவற்றிற்கும் இயல்பாய் எழுகின்ற இயற்கையுணர்வு. அவ்வுணர்வினாலேயே புல்லை உணவாகக்கொள்ளும் பழக்கமில்லாத நாய்கள் தமது உணவுச் செரிப்பிற்காய் அறுகம்புல்லைத் தேடி மருந்தெனக்கொள்வது தொடக்கம் எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்ற மாந்தன் அடங்கலான விலங்குகளின் தெரிவுகள் அமைந்துவிடும் இயல்பினதாயுள்ளன.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவை எத்தன்மைவாய்ந்த மருத்துவ ஆற்றல் கொண்டவை எனவும் அவற்றின் மருத்துவப் பயன்பாடு எதுவெனவும் எதனை எதனுடன் உண்ணுதல் தகும்/ தகாது என கண்டறிவதற்கு எம்முன்னோர்கள் எண்ணற்ற உயிர்களை விலையாகக்கொடுத்து, அவற்றிலிருந்து கிடைத்த பட்டறிவின் மூலம் கிடைத்த அறிவின் தொகுப்பாகவே மருத்துவ அறிவு மாந்தர்களிடத்தில் வளர்ந்தது. இப்படியாகவே மருத்துவக் குறிப்புகள் வாய்வழியாக வழிவழியாக பண்டுதொட்டு மாந்தர்களிடத்தில் கடத்தப்பட்டு வந்தது.
இப்படியாக மாந்தர்கள் தம்வாழ்விடங்களில் கிடைக்கக் கூடியவற்றின் மருத்துவ குணமறிந்து அதைப் பயன்படுத்திப் பிணிகளிலிருந்து விடுபட முயற்சித்திருக்கிறார்கள். இது மாந்தகுல வராலாற்றில் அனைவருக்குமான முகவுரையாக அமையும். ஆனால், பகுத்தாய்ந்து அறிந்து இலக்கணம் வகுத்து அதன் வழி மேலும் மேலும் செம்மையான வளர்ச்சியை உறுதிசெய்யும் தமிழர்களின் அறிவுமரபு எவ்வாறு மருத்துவ வளர்சியை எய்தியது என நோக்குவதே தலையாய செயலாக இங்கமைகிறது.
உலகாய்த கோட்பாட்டில் அறிவு முதிர்ச்சியைக் காட்டி, பின் அதன் வழித்தொடர் வளர்ச்சியாக, ஆசீவக சிந்தனை மரபில் தோன்றிய எண்ணற்ற அறிவர்கள் இயற்பியல், வேதியல், பொறியியல், மெய்யியல், மருத்துவம் என அத்தனை தளங்களிலும் தமது செழிப்புற்ற அறிவுமரபின் படி, அதாவது பகுத்தாய்ந்து இலக்கணம் வகுக்கும் அறிவுமுறைமையின் படி ஆய்வுகள் செய்தனர். அவ்வாறே, பட்டறிவால் எமது தமிழ் முன்னோர்கள் கண்டறிந்த மருத்துவ அறிவினைத் தொகுத்து அதனைப் பகுத்து ஈவு கண்டு தமிழர் அறிவுமரபில் அதனை மேற்கொண்டாய்ந்து பெற்றதே சித்தர்கள் (அறிவர்) பின்னாளில் தொகுத்துதவிய சித்த மருத்துவம் என்கிற தமிழர் மருத்துவம் என ஈண்டு நோக்க வேண்டும்.
மருத மலரின் பெயரை அடையாளப்படுத்தி வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் எனவும் முல்லை மலரினை அடையாளப்படுத்தி காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை எனவும் குறிஞ்சிச் செடியை அடையாளப்படுத்தி மலையும் மலைசார்ந்த இடத்தை குறிஞ்சி எனவும் நெய்தல் மூலிகைக்கருவை அடையாளப்படுத்தி கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் எனவும் பால் மிகுந்த வெப்பாலையை அடையாளப்படுத்தி பாலை எனவும் நிலங்களை ஐந்திணைகளாக வகுத்து நிலங்களின் தன்மையினை அறிந்து அதனுடன் இயைந்து வாழ வாழ்வியலை அமைத்தொழுகிய மிகவும் பண்பட்ட அறிவுமரபிற்குரியவர்கள் தமிழர்கள்.
இவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளை வகுக்கும் போதே அங்கு சிறப்புப் பெற்ற செடி, கொடி, வேர், மலர் என்பனவற்றின் பெயர் கொண்டு தமிழர் அழைத்தார்கள் என்பதை நோக்குங்கால், அந்த மரஞ்செடி, கொடிகளின் சிறப்பினை எப்படித் தமிழர் புரிந்துவைத்துள்ளார்கள் என்றும் அவர்களின் மருத்துவ அறிவுமரபு எவ்வளவு பழமையானது எனவும் விளங்கிக்கொள்ளலாம்.
“மருந்தாகித் தப்பா மரத்தாற்றல் செல்வம்
பெருந்தகை யான் கண் படின்” – திருவள்ளுவர்-
என்ற குறளின் மூலம், உலகிலுள்ள செடி, கொடி, மரங்கள் அனைத்தும் மருத்துவப் பயன்பாட்டிற்குரியனவே என ஈராயிரம் ஆண்டுகளிற்கு முன்பே தோன்றிய தமிழர்களின் வள்ளுவம் சொல்கிறது.
“மறுப்பது நோய் மருந்தெனவாகும்
மறுப்பதுள நோய் மருந்தெனச்சாலும்
மறுப்பதினி நோய் வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே” – திருமூலர் எண்ணாயிரம்-
இதன் பொருள் என்னவெனில், உடல், உள நோய்களை நீக்குவதும், நோய்வராதிருக்க உதவுவதும், உரிய அகவைக்கு முன்பு சாவு வராமல் தவிர்ப்பதுமான பொருள் மருந்தாகும் என்பதாகும். இவ்வாறாக பன்னெடுங்காலமாகவே தமிழர்கள் மருத்துவம் குறித்த செம்மையான பார்வையைக் கொண்டிருந்தனர்.
எமது பண்டைத்தமிழ் முன்னோர்கள் தங்கள் வாழ்வில் நேர்ந்த நிகழ்வுகளினாலும், தேடல்களாலும் பெற்ற பட்டறிவுத்தெளிவுகளைப் பாதுகாத்து அதனை வாழ்வியலில் கடைப்பிடித்து வந்த அறிவியல் மரபே தமிழர் மருத்துவமெனலாம். இந்தத் தமிழர் மருத்துவ அறிவு, பின்பு அறிவர்களாம் சித்தர்களால் வளப்படுத்தப்பட்டுப் பின்பு இவை கி. பி 5 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த (பதினெண் சித்தர்கள் என்பர்) சித்தர்களின் உழைப்பினாலே சித்தமருத்துவமாக புத்தெழுச்சி பெற்று அமைப்பாக்கம் அடைந்தது.
உண்மையில், தமிழ்த்தேசியம் எனும் தமிழர்களின் வாழ்வியற்கூறொன்று அமைப்பாக்கம் பெற்ற நிகழ்வாகவே சித்த மருத்துவம் அமைப்பாக்கம் பெற்றமையைச் சொல்ல வேண்டும். இதற்கு முன்பாக 4400 ஆண்டுகளாக தலைச் சங்கமும் 3700 ஆண்டுகளாக இடைச் சங்கமும் 1850 ஆண்டுகளாக கடைச் சங்கமும் என 9900 ஆண்டுகளாக சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த வரலாற்றால் தமிழர்களின் மொழி எனும் தமிழ்த்தேசியக் கூறு அமைப்பாக்கம் பெற்றமையை சுட்ட வேண்டும். இவ்வாறாக, தனது ஒவ்வொரு கூறுகளையும் அமைப்பாகி நின்று வளர்த்துச் சிறப்புற்ற பன்னெடுங்கால வரலாறு தமிழ்த்தேசியத்திற்குரியது. முன்னை நாளிலே அடந்த காடுகளிலும் மலைகளின் உச்சிகளிலும் சித்தரெல்லாம் வந்து மன்று கூடி மருத்துவ ஆராய்வு செய்து போந்தமையால் பல சித்த மருத்துவ நூல்கள் இன்று நூல்வடிவம் பெற வழிகோலின என கூறுவதே சரியாகவிருக்கும்.
முடிவாக, சித்த மருத்துவம் அமைப்பாக்கம் பெற்றமையை தமிழ்த்தேசியம் தமிழர் அறிவுமரபாக அமைப்பாக்கம் பெற்ற வரலாற்றுப்போக்காகவே நோக்க வேண்டும். எனவே, சித்த மருத்துவமாம் தமிழர் மருத்துவம் குறித்த பார்வையும் அதனை வளர்த்தெடுக்க செயலூக்கம் கொள்ள வேண்டிய தேவை பற்றியதான புரிதலும் தமிழ்த்தேசிய அரசியலை நெஞ்சில் சுமப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.
சித்தர்கள் (அறிவர்கள்) எப்படி தமிழர் இயற்கை மருத்துவத்தை வளர்த்தார்கள்?
- 96 வகையாக பகுத்து மாந்த உடற்கூறியலை (Human Anatomy) ஆராய்ந்தனர்.
- நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.
- மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.
- உலோகங்களை மருந்தாக்கிப் பயன்படுத்தும் அறிவியல்கொண்டு மருந்துகளை உருவாக்கினார்கள்.
- நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.
- வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர். போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.
- உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் ஓக (யோக) ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.
- அறுவை மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் இந்த சித்தர்களே. அறுவை மருத்துவத்தின் போது, நத்தைச்சூரி எனும் மூலிகைவேர் வலியுணர்வு நீக்கியாகப் பயன்படுத்தப்பட்டது. மறத்தினை வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்த தமிழ் மறவர்கள் போரில் விழுப்புண் எய்தியதும் அன்றிரவே செய்துகொள்ளும் அறுவை மருத்துவத்தினால், அடுத்த நாளே செருக்களங்காணப்போன தமிழர்களின் வரலாறு மறத்தாலும், (மருத்துவ)அறிவியலாலும், அறத்தாலும் மேன்மையுற்றதென்பதை இங்கு ஈண்டு நோக்க வேண்டும்.
சுரசம், சாறு, குடிநீர், கற்கம், உட்களி, அடை, சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய்,மணப்பாகு, நெய், இளகம், எண்ணெய், மாத்திரை, தேனுால், தீநீர், மெழுகு, குழம்பு, பதங்கம், செந்துாரம், நீறு அல்லது பற்பம், கட்டு, உருக்கு, களங்கு , சுண்ணம், சத்து, குருகுளிகை போன்ற அகமருந்துகளாகவும் கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, பொட்டணம், தொக்கணம் ,புகை, மை,பொடிதிமிர்தல், கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபரணம்,களிம்பு, சீலை, வர்த்தி, சுட்டிகை, பசை, களி, பொடி, முறிச்சல், கீறல், காரம், அட்டை விடல், அறுவை, கொம்பு கட்டல், உறிஞ்சல், குருதி வாங்குதல், பீச்சு போன்ற வெளிமருந்துகளாகவும் சித்த மருத்துவமெனும் தமிழ்மருத்துவம் பயன்பாட்டிலுள்ளது.
சித்த மருத்துவமென்பதா? தமிழர் மருத்துவமென்பதா?
தமிழர்கள் வாழ்ந்த நிலங்களிலும், காடுகளிலும், மலைகளிலும், நீர்ப்படுக்கைகளிலும் காணக்கிடைக்கும் மரம், செடி, கொடி மற்றும் அவற்றின் விதை, வேர், பட்டை, மலர் முதலானவற்றினை மருந்துப்பொருட்களாகக் கொண்டுள்ளதாக சித்த மருத்துவம் அமைவதோடு அதனது மூலச் சுவடிகள் யாவும் தமிழிலே எழுதப்பட்டிருக்கின்றமையாலும் தமிழறிவர்களாம் சித்தர்களின் ஆய்வுத்தேடலின் விளைவாய்க் கண்டறிந்த அறிவியற் கோட்பாட்டினை மூலக் கோட்பாடாய்க் கொண்டு தமிழர் அறிவுமரபில் சித்த மருத்துவம் அமையப் பெற்றிருப்பதாலும் தமிழர்களால் இவ்வுலகிற்களித்த அருமருத்துவவறிவியலாய் சித்த மருத்துவம் அமைவதாலும் சித்த மருத்துவத்தினைத் தமிழர் மருத்துவமெனச் சொல்வது சாலப்பொருந்தும்.
சித்தர்கள் கடவுளராயினரா? சித்தர்கள் சமாதி காலவோட்டத்தில் கோயில்களாகினவா?
பண்டு தொட்டுத்தமிழர்கள் தமக்காக தமது இன்னுயிர்களைத் தந்தோரை கல்லை வைத்தும் கல்லில் செதுக்கியவற்றை வைத்தும் வழிபடும் நடுகல் வழிபாட்டு மரபினராய் இருந்ததைப் போலவே தம்மைப் பிணிகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் காத்தருளிய அறிவர்களாம் சித்தர்களை நடுகல்லாக வைத்து வழிபட்டும் வந்துள்ளனர். இவ்வாறு சித்தர்கள் ஒன்றாக மன்றுகூடி ஆய்வுகள் செய்த இடமாகவே இன்று பழனி முருகன் கோயில் அமைந்துள்ள இடம் அமைந்திருந்ததோடு அங்கிருந்த மூதறிவாளனாம் பழனிச் சித்தரே பின்னாளில் முருகனாக வழிபடப்பட்டார் என்றும் செவிவழி வரலாறுகள் உண்டு.
கொள்ளை நோய்களைத் தமிழர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
அவரவர்கட்குண்டாகிப் பிறர்பாற்படராது அவரவரளவிலே நின்றொழியும் நோய் தனிநோயெனவும், அங்ஙனமின்றி ஒருவர் பாலுண்டாகி அவரையொட்டினர்பாலொட்ட வல்ல நோய் கொள்ளை நோய் எனப்பட்டது. பேரம்மை, சிற்றம்மை, தொழுநோய், சொறிசிரங்கு, வயிறுகழிதல் என்பன அப்படியான கொள்ளை நோய்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நோய் வந்த பின்பாக அதனைக் களைவனவாகக் கண்டறிந்த போக்கு மருந்தாவன பின்நாளில் நோய் வருமுன் தடுப்பனவான காப்பு மருந்துகளாக தமிழர்களின் உணவுப் பழக்கத்தோடு ஒட்டி உணவே காப்பு மருந்தாகிய அறிவு மரபு தமிழர்களுடையது.
தமிழர்கள் மிகத்தொன்மையானவர்களாக பழங்குடி இனக்குழும வரலாற்றிலிருந்து நீண்டகாலத்திற்கு முன்பே தேசிய இனமாகி இவ்வுலகில் இன்றும் நிலைத்து தேசிய இனமாக தேசங்களாக வாழ்ந்து வருவதால், எத்தனையோ கொள்ளைநோய்களை எதிர்கொண்டு அவற்றிலிருந்து அழிவுகள் போக அதிலிருந்து கற்றவற்றைக் கொண்டு எதிர்வந்த கொள்ளைநோய்களிலிருந்து தம்மைக் காத்தும் விடுவித்தும் கொள்ளும் திறன் வாய்க்கப்பெற்றிருந்தார்கள், பெற்றிருக்கின்றார்கள் என்பதனை இன்று தமிழர்களின் வாழ்க்கைமுறையில் சடங்குமுறையாகிவிட்ட அன்றைய அறிவுமரபின் விளைவுகளைக் கூர்ந்து நோக்கினால் தெளிவுறப் புரிந்துகொள்ளலாம்.
இப்படியான கொள்ளை நோய்கள் பலவற்றை எதிர்கொண்ட பட்டறிவினாலேயே தமிழர்கள் தம்மைத் தனிமைப்படுத்தும் வாழ்க்கைமுறை, சுகாதார நோக்கினாலான தவிர்க்க முடியாத பழக்கவழக்கங்கள் என்பனவற்றைத் தமது வாழ்வியலில் கொண்டிருக்கிறார்கள். இத்தகையை அறிவுமரபே பின்னாலில் வைதீகமயப்பட்டுப் போக அவை சடங்காக்கப்பட்டு தீட்டு/ துடக்கு என்ற பிற்போக்குச் சிந்தனையாகி எஞ்சிவிட, சிந்திப்போரெனத் தம்மை நினைப்போரினால் (காலனியத்திற்குப் பின்பே நாகரீகம் வந்ததென நம்பும் மடையர்கள்) வாழ்நிலையில் கடைப்பிடிக்க மறுக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் நோயெதிர்ப்பு ஆற்றல் வரப்பெறாத குழந்தைக்கும் உடல் நலிவாகி நிற்கும் ஈன்றெடுத்த தாய்க்கும் நோய்கள் இலகுவில் பற்றிக்கொள்ளும் என்பதற்காகவே குறிப்பிட்ட நாட்களைத் தனிமைப்படுத்தும் காலமாக தமிழர்கள் கடைப்பிடித்தனர். இதுவே பின்னாலில் தீட்டு/ துடக்குக் காலமென வைதீகமயமாகிவிட்டது. ஒரு இறப்பிற்குச் சென்று வந்தால், நீராடுவதோடு அவர் எடுத்துச் சென்ற அத்தனை பொருட்களும் நன்கு கழுவப்பட்ட பின்பே வீட்டிற்குள் எடுத்துவரப்படும் பழக்கமானது அந்நாளில் கொள்ளை நோயின் விளைவாகப் பலர் இறக்கநேரிட்டமையால் வழக்காறாகியது என்பதை நினைவுறுத்த வேண்டும்.
அதனாலேயே இறப்பு நடந்த வீட்டார் தனிமைப்படுத்தப்படுவதும் அவர்கள் சமையல் செய்தால் அவர்கள் கிருமித்தாக்கத்திற்கு உட்படலாம் என்பதால் அவர்கள் சமைப்பது மறுக்கப்பட்டு உற்றாரிடமிருந்து 30 நாட்களுக்கு அவர்களுக்கு உணவு வழங்கப்படும் நடைமுறை வழக்காறாகியது.
எவர் வீட்டிற்கு வெளியே சென்று வீடு திரும்பினாலும் கை, கால்கள் நன்கு கழுவி வாயையும் அலசிக் கொப்பளித்த பின்பே வீட்டிற்குள் வரும் நடைமுறை இப்படிப் பல கொள்ளை நோய்களை எதிர்கொண்ட பட்டறிவால் உருவாகியதே.
கிருமிநீக்கியாக இயற்கையில் கிடைக்கும் மஞ்சள், மாட்டுச் சாணம் கொண்டு குடியிருக்கும் இடத்தையும் சுற்றுச் சூழலையும் தூய்மைப்படுத்தும் வழக்கமும் இதனாலேயே ஏற்பட்டது.
அத்துடன் வெறும் புற நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, உணவுப்பழக்க வழக்கங்களிலும் தமது நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவல்லனவற்றை உணவாக உட்கொண்டு உணவே மருந்தென வாழ்ந்து இப்படியான தொற்றுநோய்களிலிருந்து தம்மைக் காக்கும் காப்பு மருத்துவத்தினை வாழ்வியலில் உணவாய் உட்கொண்டு வாழ்ந்த செம்மார்ந்த உணவுப்பண்பாடு தமிழர்களுடையதே. இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை உணவில் நாள்தோறும் சேர்க்கும் வழக்கம் தமிழர்களின் காப்பு மருத்துவம் குறித்ததும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்ததுமான அறிவின் வெளிப்பாடே.
தமிழர்களிடத்திலிருந்து கற்றுக்கொள்ள முன்வர வேண்டிய மருத்துவ உலகம்
எனவே, இன்று கொரானா என்ற கொள்ளைநோயின் பரவுகையைக் கட்டுப்படுத்த முடியாமலும் அதற்குத் தீர்வுகாணாமலும் பல்லிளிக்கும் ஆங்கில மருத்துவம் எனத் தவறாகச் சுட்டப்படும் நவீன மருத்துவம் பற்றிய உயர்ந்த பார்வையை உலகம் கீழிறக்கித் தமிழர்கள் எவ்வாறு கொள்ளைநோய்களை எதிர்கொண்டார்கள்?எப்படியான மருத்துவத்தினைக் கையாண்டார்கள் என மருத்துவ உலகம் கற்க வேண்டும். ஏனெனில் எத்தனையோ கொள்ளை நோய்களை தமக்கேயுரிய அறிவுமரபால் வென்றுகாட்டி நிற்கும் தமிழரிடத்திலும் தமிழ் மருத்துவத்திடமிருந்தும் வெளிப்படையாக அறிவைப் பெற்றுக்கொள்ள உலக மருத்துவம் முன்வர வேண்டும். தமிழர்களிடம் ஒரு அரசு இருந்திருந்தால், உலத்திற்கு தமிழர் பெயர்கொண்டு இதனைச் செய்து காட்டியிருக்கலாம். தமிழ்மொழியில் உள்ள மருத்துவ ஓலைச் சுவடிகளை இங்கிருந்து குறிப்பாக சேர்மனியரும் பொதுவாக மேலைநாட்டவரும் களவாடிச் சென்று பல அரிய தகவல்களைப் பெற்று மாத்திரைகளை உற்பத்தி செய்து இன்று வணிகமாற்றுகின்றனர். இதன் காப்புரிமையை பெற்றிருக்க வேண்டுமெனின், தமிழர்களுகென்று ஒரு அரசு அமைத்திருக்க வேண்டும்.
கொரானாவைத் தீர்க்கும் வழிமுறை உறுதியாக தமிழர் மருத்துவத்திடம் இருக்கும். தமிழ் மருத்துவம் பரிந்துரைக்கும் தீர்வை ஆய்வுவழி மெய்ப்பித்து அதற்குத் தமிழர்கள் காப்புரிமை பெற்று மீண்டுமொரு முறை இந்த கொரொனா பேரிடர் காலத்தில் உலக மாந்தர்களைக் காக்கும் வாய்ப்பமைய வேண்டுமெனின் தமிழர்களுக்கென்று அரசு இந்தத் தரணியில் அமைத்தேயாக வேண்டும்.
சித்த மருத்துவம் புலாலை (அசைவம்) மறுக்கிறதா?
இயற்கையோடியைந்து இயற்கைநெறிக்காலமாக வாழ்ந்த சங்க காலத்தில் இருந்த புலாலுணவுப் பழக்கமானது, தமிழர்கள் இயற்கையிலிருந்து சிறிது விலகி வாழமுற்பட்ட காலமாகிய சங்கமருவிய காலத்தில் வந்த சமண, பௌத்த தாக்கத்தினால் இல்லாது போய் புலால் மறுப்பு உணவுப்பழக்கமாகியது. எனவே, தமிழர்கள் இயற்கையோடியைந்து பண்பட்டு வாழ்ந்த சங்க காலத்திலேயே புலாலுண்பதும் அவற்றை கொற்றவை, முருகன் போன்ற தமது கடவுளருக்குப் படையல் செய்வதுமான வழிபாடு தமிழர்களுடையது. இவ்வாறே, புலாலுணவுப் பழக்கம் தமிழர்கள் மரபிலே இருப்பதுதான். இதனாலேயே, தமிழர் மருத்துவமாம் சித்த மருத்துவத்திலும் விலங்குகளின் உடலெச்சங்கள் நல்ல மருத்துவப் பயன்பாடுடையவையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மான்கொம்பு, நத்தை, ஆமை ஓடு, பறவை எச்சங்கள், விலங்குக்கொழுப்புகள் என்பன மருந்தாகவும் மருந்துருவாக்கற் செயன்முறையிலும் கூடுதலான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, சித்த மருத்துவத்தை வைதீகமயப்பட்டு நிற்கும் சைவமோ, கொல்லாமையையும் புலாலுண்ணாமையை வலியுறுத்தும் சமணமோ, கொல்லைமையை கொள்கையாகக்கொண்ட பௌத்தமோ கைக்கொள்ள முடியாது என நாம் இங்கு துணிந்து கூறவேண்டும். ஏனெனில், இது தமிழர்களின் மருத்துவம்.
சித்த மருத்துவம் என்பதும் ஆயுள்வேதம் என்பதும் ஒன்றா?

சித்த மருத்துவமென்பது ஆயுள்வேதத்தின் வழித்தோன்றியது என தான் முன்னர் கொண்டிருந்த கருத்தானது, பின்னர் செய்த ஆய்வுகளால் முரணாகியென்பதோடு சித்த மருத்துவமென்பதே தனிச்சிறப்புடைய மருத்துவமென்பதும் ஆயுள்வேதமென்றொன்று தனித்துவமாயில்லை என்ற தெளிவும் தனக்குக் கிடைத்தது என்று கொழும்பு ஆயுள்வேதக் கல்லூரியின் மருத்துவவாசிரியர் ஆ. கனகரத்தினம் 1949 இல் தான் எழுதிய நூலில் தெரிவித்துள்ளார்.
ஆயுள்வேதமென்ற சொல்லில் தமிழர்கள் பலர் மயங்கிக்கிடந்துள்ளனர். அறிவர்களாம் சித்தர்கள் தமிழில் எழுதிய மருத்துவக் குறிப்புகளை ஆங்காங்கு கண்டெடுத்து வடமொழியில் மொழியாக்கி அதனை ஆயுள்வேதமென்று பொதுப்பெயர் கொண்டழைத்தனர். சித்த மருத்துவமெனும் பெருங்கடலில் தமக்கு புரிந்த சிலவற்றை மட்டுமெடுத்து வடமொழியில் குறிப்புகளாக எழுதிவைத்தமையுடன் துளிர்விட்ட ஆயுள்வேதமெனும் சொல்லானது பின் வந்த நவீனத்தின் மொத்த உற்பத்தி நுணுக்கங்களை மருந்தாக்கல் முறைகளில் உள்வாங்கி இன்றைய ஆயுள்வேதமாக நிலைத்துவிட்டது. புலாலை மறுக்கும் பிராமணர் தமிழர்களிடத்தில் திருடிய மருத்துவக் குறிப்புகளில் புலால் வகைகள் கலவா வண்ணம் மருந்தாக்கி ஆயுள்வேத மருத்துவமெனப் பயன்படுத்துவதை ஒரு தகவலுக்காக இங்கு சுட்டலாம். சித்த மருத்துவம் என்ற கடலின் சிறுபகுதியைத் தான் ஆயுள்வேதமென்ற நடைமுறையாக்கி பயில்கின்றனர். அத்துடன் சித்த மருத்துவத்தின் நரம்பியல் மருத்துவமுறைகளான அடிமுறை, வர்மப் புள்ளிகள் பற்றியதும் செந்தூரங்கள் செய்வதுமான உயர்வான விடயங்களை ஆயுள்வேதத்தால் இன்னும் உள்ளீர்க்க முடியவில்லை.
ஈழத்திலும் இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளிலும் சித்த மருத்துவத்தின் நிலையென்ன?
தமிழர்கள் தாயகப் பகுதிகளிலும் மிகச் சிறப்பான பரம்பரை மருத்துவர்கள் உள்ளார்கள். அவர்கள் குழந்தைப்பேறுக்கு ஒருவர், விசக்கடிக்கு ஒருவர், முறிவு தறிவுக்கு ஒருவர் என சிறப்பு மருத்துவர்களாக பரியாரிகள் எனும் பெயரில் இன்றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டுமே சித்த மருத்துவமென அழைக்கப்படுகிறது. சிங்களப் பகுதிகளில் அவர்கள் ஆயுள்வேதமெனவே இதனை அழைத்துக்கொள்வர். யாழ்ப்பாண இராட்சியக் காலத்தில் பரராசசேகரம், செகராசசேகரம் எனும் இரு மருத்துவ நூல்கள் இயற்றப்பட்டு தமிழர் மருத்துவம் சிறுப்புற்றிருந்தமையை இங்கு ஈண்டு சுட்ட வேண்டும். அரசுருவாக்கம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதால் அகத்தியரின் மருத்துவக் குறிப்புகளை அடியொற்றி இந்த நூல்கள் நூலாக்கம் பெற்றிருப்பினும், தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மருத்துவக் குறிப்புகள் ஆங்காங்கே ஓலைச் சுவடிகளாகவும், வாய்வழியாகவும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்தமையை நினைவில்கொள்ள வேண்டும்.
1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆயுள்வேதச் சட்டத்தின் கீழ் ஆயுள்வேதத்தின் ஒரு பிரிவாகவே சித்த மருத்துவம் கணக்கெடுக்கப்பட்டது. இது தமிழர்களின் மருத்துவத்திற்கு ஈழத்தில் நேர்ந்த அவலமெனக் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கெதிராக இன்று வரை எவரும் குரல்கொடுக்காமலும் போராடாமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கின்றார்களெனின் அதற்கான காரணம் தமிழர் மருத்துவமாம் சித்த மருத்துவத்தை தமிழ்த்தேசியத்தின் ஒரு கூறாக நோக்கும் பார்வை எம்மவரிடையே இல்லையென்பதே எனலாம்.
இதன் விளைவாகவே “சித்தாயுள் வேதம்” என்ற சொற்பயன்பாடு ஈழத்தமிழர்களிடத்தில் நிலவுகிறது. எனவே, நாம் சித்த மருத்துவத்தினை தாய்த் தமிழ்நாட்டின் அறிவுதவி கொண்டு ஈழத்தில் மீட்டெடுத்து அதன் சிறப்பெனும் பெருங்கடலில் ஒரு பகுதியைத் தாம் முண்டு விழுங்கி ஆயுள்வேதமெனக் கொண்டு அதைத் தம்முடையதாக சிங்களவர்கள் பேசிக்கொள்ளும் வரலாற்றுச் சிறுமைக்கு நல்லதொரு பாடங்கற்பிக்க வேண்டும்.
(அசோகன் காலத்தில் பௌத்த மதத்தைப் பரப்பத் தமிழ்நாடு வந்த பௌத்தத் துறவிகள் தமிழர்களின் மருத்துவ அறிவு கண்டு அதிர்ந்து வியந்து தமிழர்களிடத்திலிருந்து தம்மாலியன்ற மருத்துவத்தைக் கற்றுச் சென்றனர் என்பது வரலாறு)
ஈழத்தமிழர்களின் இன்றைய தலைமுறை மருத்துவத்தை எப்படிப் பார்க்கிறது?எப்படிப் பார்க்க வேண்டும்?
காலனிய அடிமை மனநிலைக்குள் முற்றாக மூழ்கியிருக்கும் ஈழத்தமிழர்களில் பலர் அன்றைய காலனிய காலத்தில் வருவாயீட்டும் சிறந்த தொழில்களாகக் கருதப்பட்ட பொறியியல், மருத்துவம், வழக்கறிவு போன்ற துறைகளையே தலைமேற் தூக்கிப் பிடித்து அவை மட்டுமே அறிவெனப் பொருள் கொண்டு அவற்றைக் கற்பதே சிறந்ததென்று நினைத்ததோடு, இந்தத்துறைகளில் கற்கும் வாய்ப்பற்றவர்களே ஏனைய துறைகளை நாடுவர் என்ற சிந்தையை விதைத்துவிட்டார்கள். இதனால், குமுதாய சிற்பிகளாக (Social Architects) உருவாவதற்கு ஆற்றலுள்ள, திறன்மிகுந்த இளையோர் சொல்லுமளவிற்கு முன்வருகிறார்கள் இல்லை எனச் சொல்லலாம். உண்மையில் மருத்துவத்தைக் கண்டு பிடித்தவர்கள் பேரறிவோர்கள் (சித்தர்கள்) எனிலும், அதனைப் பயன்படுத்தி மருத்துவம் செய்ய அத்தகைய வியத்தகு ஆற்றல் கல்விமுறையால் தேவையில்லை என நன்கு சிந்தித்தால் புரியும். அப்படியேதான், தமிழர்களின் மருத்துவர்களாக நாவிதர்கள் இருந்தார்கள், இவர்களே பரியாரி என்றும் அழைக்கப்பட்டார்கள். தமிழீழ நிழலரசு தான் எதிர்கொண்ட மிகப்பெரும் மறப்போரில் எத்தனையோ ஆயிரம் அறுவை மருத்துவத்தைச் செய்துள்ளது. தமிழீழ விடுதலைக்காக ஒரு கையில் சுடுகலனோடும் மறுகையில் மருத்துவக் கருவிகளோடும் தமது இளைமையில் களம் புகுந்த எத்தனையோ போராளிகள் மீயாற்றல் கொண்ட மருத்துவர்களாக உருவெடுத்துள்ளார்கள். தமிழீழ நிழலரசு சாக்காடுகளில் நின்று எப்படி மருத்துவர்களை உருவாக்கி மருத்துவத்தில் மேன்மை கண்டது என்பதை உற்றுநோக்கினால், ஏட்டுக் கல்வியும் இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற பாடங்களில் உயிர்மதிப்பெண் பெற்றால் மட்டுமே மருந்துகொடுக்கும் மருத்துவ வேலை செய்யலாம் எனும் மாயையும் அகலும்.
குமுதாயத்தில் எத்தனையோ துறைகளில் நுண்ணறிவினால் ஆழ்ந்த புலமையடையும் ஆற்றலாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, கொரானாவாவல் பல்லிளித்து நிற்கும் நவீன மருத்துவ உலகையும் அதன் பணியாளர்களாம் மருத்துவர்களையும் அறிவிற் சிறந்தவர்களாகப் பார்க்கும் குழந்தைத்தனத்திலிருந்து தமிழர்கள் மீண்டு குமுதாயம் சார்ந்த அத்தனை துறைகளிலும் (பொருண்மியம் அடங்கலாக) ஆழ்ந்து கற்க முன்வர வேண்டும் என்பதோடு, தமிழர் மருத்துவத்தை உலகறியச் செய்து இழந்த காப்புரிமைகள் பலதை மீட்க தமிழர்கள் தமக்கென அரசமைத்தே ஆக வேண்டுமென உறுதியெடுத்து ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக்குவோமாக.
இந்த கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை kaakaminfo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது எமது முகநூலிற்கோ அனுப்பலாம்
தொடரும்…
-சேதுராசா-
2020.04.09
குறிப்பு: சமுதாயம் – தூயதமிழ் “குமுதாயம்”
7,140 total views, 3 views today