இனியுங் காலந்தாழ்த்தினால் நாம் எமது மண்ணில் எதுவுமற்றவர்கள் ஆவோம் -காக்கை-

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கைத்தீவு ஊரங்கினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியில் மக்களுக்காக பணியாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுவரும் அனைத்து இளையோருக்கும் காகம் இணையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வைரஸ் தொற்றிற்கு பின்னரான காலப்பகுதியில் சிங்களதேசத்தின் அரசியல் நகர்வு இலங்கைத்தீவில் எப்படியமையப் போகின்றது என்பது குறித்து பிறிதொரு கட்டுரையில் பார்க்கும் முன்னர் எதிர்வரும் காலங்களில் “தமிழர்களின் அரசியலுக்கும் இருப்பிற்கும்” தேவையான புலமையாளார்களின் ஒன்றிணைவு மற்றும் அதன் வழியான புலமைசார் அமைப்பாதலின் இன்றியமையாமை குறித்து தெரிவிப்பதோடு வேண்டுகைத் தொணியில் சிலவற்றை மிகச் சுருங்க இக்கட்டுரையில் இயம்புகிறோம்.

காகம் இணையம் தொடர்ச்சியாக துறைசார் புலமையாளார்களின் செயற்பாட்டுத் தேவை குறித்து வலியுறுத்திவருகின்றது. ஈழத்தமிழினம் தனது அறிவாற்றலையும் உலகின் வளர்சிக்கேற்றாற்போல் தனது இருத்தலுக்கான துறைசார் கட்டமைப்புகளையும் கட்டியெழுப்பாமல், அனைத்து அழிவுகளின் போதும் “இதுவும் கடந்து போகும்” என்ற மனநிலைக்கு தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டும் போக்குக்காட்டியவாறும் இனத்தின் எதிர்காலம் குறித்து எந்தவொரு அக்கறையுமின்றி செயலற்றுக் கிடப்பது மிகுந்த அவலமாய் இருக்கிறது.

குண்டுகளாலும் சுடுகலன்களாலும் வெளிப்படையாகச் செய்த இனக்கொலையை 2009 மே இல் நிறுத்திக்கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது, தமிழர்கள் எவரும் இல்லாத தனிச் சிங்களவர்களை மட்டும் கொண்டியங்குவதாய் சிறிலங்காவின் அத்தனை கட்டமைப்புகளும் இருப்பதை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு முழுமூச்சுடன் செயற்பட்டு வந்த சிறிலங்கா அரசானது, முள்ளிவாய்க்காலின் பின் 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அதில் பெரு வெற்றியுமீட்டியுள்ளது.

அனைத்துத் துறைகளின் பொறுப்புகளிலிருந்தும் தமிழர்களை படிப்படியாகவும் சூழ்ச்சியாகவும் ஓரங்கட்டிவிட்ட சிங்களதேசம், தமிழர்கள் இல்லாத அல்லது தமிழர்களின் பங்களிப்பில்லாத வகையில் அறிவியல், கணிதம், கணக்கியல், புவியியல், அரசியல், சட்டம், இராணுவம், தொழினுட்பம் என தனது அனைத்து துறைகளையும் கட்டமைத்துக்கொண்ட சிறிலங்கா அரசானது, தமது உளவுத்துறைகளுக்குத் தகவல் வழங்குனர்களாகவும், தமிழினத்தின் அரசியலை சுக்குநூறாக உடைக்கும் வகையில் ஆளுக்கொரு கட்சி தொடங்குவோராகவும் தமிழர்களில் சிலரை ஆக்கிவிட்டதோடு அவர்களுக்குத் தமிழ்த்தேசிய முகமூடியணிந்து தமிழர்களிடத்தில் அவர்களை நடமாடவிட்டிருக்கிறது.

சிறிலங்கா அரசின் திட்டங்களையும் செயற்பாடுகளையும் ஆய்வுசெய்து அதனை எதிர்கொண்டு முறியடிக்கும் வகையில் எமது மக்களைப் புரட்சிகரமாக அறிவார்ந்து அணியப்படுத்தவல்ல தலைமையும் தற்போது தமிழர்களிடத்தில் இல்லாது போயுள்ளது. வெறுமனே அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக உருவெடுத்துவரும் பெரும்பான்மையான தமிழிளையோர்கள் பட்டறிவும் புலமையுமிக்கோரின் தேவையான கருத்துகளைக் கூட உள்வாங்கும் மனநிலையில் இல்லாதிருப்பது தென்படுகிறது.

இனிமேல் தமிழர்களுக்கு தேவையானது

தமிழர்தேசமானது வெறுமனே சிறிலங்கா அரசின் அரச பொறிமுறைகளை மட்டும் நம்பியிராது, தனக்கான தேவைகளை நிறைவேற்ற சமாந்தமரமாக ஒரு அரச பொறிமுறையை செயற்பாட்டுத் தளத்தில் நிறுவவேண்டும். ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஆய்வு கூடங்களையும் நிறுவி தமிழர்கள் ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். வேண்டும். தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவங்களை ஆய்வு செய்யவும் அதிலிருந்து உற்பத்திகளை மேற்கொள்ளுமளவிற்கும் வளர்ச்சியைக்காண வேண்டும். இயற்பியல், வேதியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், பொருளியல், மெய்யியல் என பலதுறைகளிலும் ஈழத்தமிழ்ப் புலமையாளர்கள் இருந்தாலும், தமிழராய் ஒன்றிணைந்து குழுவாக ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய பொறிமுறைகள் இல்லாமை வருந்தத்தக்கதே.

சிங்களதேசமானது அறிவியல் துறையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து ஆய்வுகளை செய்வது மட்டுமல்லாது புத்தாக்க முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவரும் அதேவேளையில் தமிழர்கள் யாரையும் அதன் பொறிமுறைக்குள் உள்வாங்கமால் இருப்பதை உறுதிப்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுகிறது.

உயர் படிப்புகளுக்காகவும், தொழில்களுக்காகவும், புலமைத்தேடல்களுக்காகவும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத் தமிழர்களிடையே காணப்படும் பொருளியலறிஞர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், உயிரியல் ஆய்வாளர்கள், மற்றும் அத்தனை அறிவுத்தளங்களிலுமுள்ள புலமையாளர்கள், வணிகத்தில் வெற்றியீட்டியோர் என அனைத்து மட்டத்திலிருந்தும் அனைவரும் செயற்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைய வேண்டும். வாக்குப்பொறுக்கும் அரசியல் பித்தலாட்டங்களுக்கு எடுபடாத, இனமாக சிந்திக்க கூடிய கட்டமைப்பு விரைவாக கட்டப்படல் வேண்டும். தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்களிடையில் காணப்படும் அறிவோர்களையும் புலமையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களுக்கான தேவையுணர்ந்து செயலாற்றும் கட்டமைப்பாக இந்தக் கட்டமைப்பு அமைய வேண்டும். தமிழர்களுக்கென்று அரசில்லாமல், சிங்களதேசத்தின் தமிழரில்லாத தனிச் சிங்களபௌத்த நாட்டுருவாக்கச்  செயல்வீச்சுகளை எதிர்கொள்ள வேண்டுமெனின், ஆகக் குறைந்தது இப்படியான அறிவுத்தள அமைப்பாக்கத்தின் தேவையுணர்ந்து வரட்டுக் கௌரவங்களை மூட்டைகட்டிவிட்டு தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்காக அறிவுச் சமூகம் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

சிங்கள அரசு இனி எதையும் தரப்போவதில்லை. மறப்போராட்டத்திற்குத் தமிழர்கள் அணியமாகும் முனைப்புகள் ஏதும் செயலளவில் கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை. இப்போது செய்ய வேண்டியதெல்லாம் தமிழினத்திற்கான அடிப்படை அரசின் கட்டமைப்புகளை நாங்களே உருவாக்கிக் கொள்வது தான். பொருளியல், பொறியியல், தகவல் தொடர்பாடல், கணினியறிவியல், மருத்துவம் என இன்றைய உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஆய்வுகளைச் செய்யவது மட்டுமல்லாது உற்பதிகளை மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகளை நோக்கித் தமிழர்கள் நகர வேண்டும்.

தற்போது தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து கள்ளும் கருவாடும் சில வேளாண் உற்பத்திகள் என்பன (சிறியளவிலான) மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்றப்படி தமிழர்தாயத்திலிருந்து பணமானது சிறிலங்கா வர்த்தகர்களால் உறிஞ்சப்படுகிறது. அதாவது தமிழர்தாயகப்பகுதிக்கு புலம்பெயர் தமிழர்களால் கொண்டுவரப்படும் மிகப்பெரிய அளவிலான பணமானது சிங்களதேசத்தின் உற்பத்திகளை வாங்குவதற்கு செலவழிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தமிழர்தாயகம் உற்பத்தித்துறைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழர்களின் அரசியலானது பொருண்மிய வலுவிலேயே தங்கியிருக்கும். இதற்கு தமிழர்களில் புலமையாளர்களினதும் அறிவர்களினதும் பங்களிப்பு மிக முதன்மையாகத் தேவைப்படுகிறது.

இப்படியான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் உங்கள் கருத்துக்களை எமது முகநூலிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவியுங்கள். kaakaminfo@gmail.com

-காக்கை-

2020: 04:10

 3,511 total views,  3 views today

(Visited 6 times, 1 visits today)