அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்-

தமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ள இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை நலனுக்காக கொடுத்த முழு ஒத்துழைப்புடனும் சீனா, பாகித்தான் அடங்கலான நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் வணிக வெறியின் பாற்பட்ட உதவிகளுடனும் ஒடுக்கும் சிங்கள பேரினவாத அரசால் தமிழர்தேசம் மீது பல பத்தாண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனக்கொலை நடவடிக்கைகளின் கோர வெறியாட்டத்தின் உச்சமாக தமிழர்தேசத்தின் மக்கள் வகை தொகையின்றி கொன்று குவிக்கப்பட்டு தமிழர்தேசத்தின் நிழலரசும் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்தேசம் நாயுண்ட புலால் போல பிய்த்தெறியப்பட்ட கோர நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்டமையானது, மாந்தநேயமும் அறநோக்கும் கொண்ட எவராலும் மறக்கமுடியாத இருண்மையான வரலாறாக மாந்தகுல வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இப்படி நரபலிவெறியாட்டத்திற்கு உட்பட்டு உயிர்களையும் உடமைகளையும் இழந்து அவலச்சாவுகளும் குருதிக் காட்டாறும் என இனக்கொலைக்குள்ளகப்பட்ட பின்பு வெற்றுயிர் மட்டும் தப்பிப்பிழைத்து நிற்கின்ற இனமாக இனப்படுகொலையின் வெளிப்படையான வெறியாட்டத்தின் பேரழிவின் பின் நட்டாற்றில் தமிழர்தேசத்தின் மக்கள் தவிக்கவிடப்பட்டு நின்றனர்.

இப்படியான கொடுமையான இனவழிப்பிற்குட்பட்ட பின்பாக தமிழர்தேச மக்களிடத்தில் தமது தேசத்தைக் காத்துத் தம்மினத்தைக் காப்பாற்றியேயாக வேண்டிய முதிர்ச்சியான எண்ணவோட்டங்கள் முகிழ்த்திருக்க வேண்டும். அதுவரை தம்மிடம்  தொடர்ந்த அக முரண்களைக் களைந்து இனமாக ஒன்றுபட்டிருக்க வேண்டும். தமிழர்தேச அரசியாலனது இனப்படுகொலைக்குத் தான் உள்ளாக்கப்பட்டதற்குப் பின்பாக பல தளங்களில் செயற்பட்டு தாம் ஒரு தேசமாக இருப்பதை உறுதிசெய்திருக்க வேண்டும். இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட இனம் வரலாற்றில் மீளெழுச்சிகொள்ளும் போது இனக்கொலை அரச பயங்கரவாதமும் அதை உருவாக்கிய பேரினவாத பேயரசுகளும் அடியொட்ட அழிக்கப்படும் என்ற வரலாற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் ஓரணியின் ஒன்றுபட்டு நிற்க முடியாதவாறான சூழலை உருவாக்க முனையும் போது அதற்குப் பலிக்கடாவாகாமல் முதிர்ச்சியுடன் விடயங்களைக் கையாண்டிருக்க வேண்டும். இனப்படுகொலைக்குள்ளாகிய பின்பு இனப்படுகொலை அரசுடன் இணங்கிவாழ வழிதேடுவது என்பது இனத்தற்கொலைக்கு ஒப்பானது. சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரம் அது தான் கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தமிழர்களைத் தானியங்கியாகத் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனக்கொலைக்குள்ளாக்க வல்லது. தமிழர்கள் இனக்கொலைக்குள்ளான பின்பாக தமது தலைவிதியை தாமே முடிவுசெய்ய வல்ல உரிமையை மீட்டெடுப்பது மட்டுமே எஞ்சியுள்ள தமிழர்கள் தமிழர்தேசத்தைக் காப்பதன் மூலம் இந்தத் தரணியில் ஒரு மக்களாக கூட்டாக வாழ ஒரேவழியென முடிவெடுத்து தமது அரசியலை தமிழர்தேச மக்கள் முன்னெடுத்திருக்க வேண்டும்.

இனக்கொலையின் பின்பாக தமிழர் முகங்கொடுக்க நேர்ந்த அத்தனை சிக்கல்களும் அல்லது இடர்களும் தமிழர்தேசத்தின் அரசியற் சிக்கலாகவே அணுகப்பட்டிருக்க வேண்டும். கொடுஞ்சிறையில் பயங்கரவாதிப் பட்டஞ்சூட்டி அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சிக்கல், காணாமலாக்கப்பட்டோர் சிக்கல், மீள்குடியேற்றச் சிக்கல், இராணுவமயமாக்கல், பொருளியல் சிக்கல், வேலையின்மை, சிங்களக் குடியேற்றங்கள், அரச பயங்கரவாதத்தின் தமிழர் மீதான ஒடுக்கல்கள், தமிழ்மொழி புறக்கணிப்பு, அன்றாடச் சிக்கல்கள் என தமிழர்தேச மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை சிக்கல்களும் தமிழர்தேசத்தின் அரசியற் சிக்கல்களாகவே நோக்கப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளை தமிழர்தேசத்தின் உரிமைச் சிக்கல்களிற்கான தீர்வுகள் என்ற அடிப்படையிலேயே அணுகியிருக்க வேண்டும். தமிழர்தேசத்தின் சிக்கல்களாகவே இவை ஊடகங்கள் வாயிலாகவும் அரசியல் தலைமைகள் மூலமும் அணுகப்பட்டிருக்க வேண்டும். இனக்கொலைக்குள்ளாகிய பின்பு தமிழர் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களையும் தமிழர்தேசத்தின் சிக்கலாகவும் அதற்கான தீர்வாக தமிழர்தேசத்தின் தன்னாட்சி உரிமையை வென்றெடுத்தல் என்பதை மட்டுமே தமிழர் முன்னிறுத்தியிருக்க வேண்டும். முன்னிறுத்த வேண்டும்…..

அதிகாரப் பரவலாக்கம், கூட்டாட்சி (Federalism), இறைமையப் பகிரல், ஒரு நாடு இருதேசம், பதின்மூன்றிற்கு மேற்சென்ற அதிகாரப் பரவலாக்கம் என்பன எல்லாம் தமிழர்தேச அரசியலை சீரழிக்க சிங்கள அரச பயங்கரவாதம் தமிழ் மக்களிடம் வாக்குப்பொறுக்கும் அரசியல் கட்சிகளிற்கு அவர்களை முன்னெடுக்குமாறு ஒப்புதலளித்த அரசியல் பம்மாத்துகளே. இனக்கொலைக்குள்ளாகிய தமிழர்கள் தமிழர்தேசத்தை காப்பதன் மூலம் மட்டுமே இவ்வுலகில் தமிழர்களாக வாழமுடியுமென்பதால், தமிழர்தேசத்தின் உரிமையான தன்னாட்சியுரிமையை வென்றெடுப்பதன் மூலம் மட்டுமே தமிழர்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கலாம் என்பதே முள்ளிவாய்க்காலின் பின்பாக அத்தனை தமிழர்களும் பேச வேண்டிய ஒரே அரசியலாக இருக்க வேண்டும். இந்த அரசியல் இலக்கை நோக்கி நகர்வதற்கான பொறிமுறைகளையும் மக்கள் திரள் அமைப்புகளையும் உருவாக்குவது மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலின் செல்நெறியாக இருக்க வேண்டும்.

எமது தமிழர் தாயகம், தமிழர் நாம் ஒரு தேசம், தமிழர்தேசத்தின் தன்னாட்சி உரிமை என்ற அரசியல் அடிப்படைகளைக் கொண்டே தமிழரின் உரிமை அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழர் இழந்த இறைமையை மீட்டெடுத்தலே இந்த மண்ணில் தமிழினம் உளதாயிருத்தலை உறுதிசெய்யும் என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான அரசியல் மட்டுமே தமிழர்களின் அரசியல் வேணவா. அதற்கே தமிழர்கள் ஆணையளித்தனர். எனவே தமிழர்களின் தன்னாட்சியுரிமையை வென்றெடுத்து இறைமையை மீட்டெடுத்தல் என்ற அரசியல் இலக்கை நோக்கி தமிழர்தேசம் முன்னெடுக்கும் அரசியலிற்குத்தான் பெயர் தமிழ்த்தேசிய அரசியல். இது தமிழர்களின் விடுதலைக் கருத்தியல். புற அரசியல் நிலைமைகள் தமிழர்களை விடுதலைக்குத் தகுதியானவர்களாக்கியது போல, தமிழர்களின் அகச் சூழலையையும் விடுதலைபெறத் தகுதியானவர்களாக புரட்சிகரமாக அணிதிரட்டும் சமூக அரசியல் இலக்கும் தமிழ்த்தேசிய அரசியல் வழிப்பட்டதே. உலகளாவிய போராடும் இனங்களோடு ஒட்டுறவைப் பேணி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் தமிழர்கள் நாம் பிணைந்துகொண்டு உலகளாவிச் செயற்பட வேண்டிய தேவையை உணர்த்துவதும் தமிழ்த்தேசியத்தின் உள்ளீடே.

கண்முன்னே எம்மினம் கதறக் கதற ஒட்டுமொத்த உலகத்தின் ஒத்துழைப்புடன் கொன்றொழிக்கப்பட்டதைக் கண்முன்னே கண்டும், உடலவயங்களை இழந்து வெந்து நொந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்முன்னே காண்கையிலும், பசி வயிற்றில் வெம்பாடு படும் தமிழ்க் குழந்தைகள் தெருவோரத்தில் வாழும் அவலநிலை கண்டும், சிறையில் வாடும் உறவுகளின் ஏக்கத்தையும் அவர்கள் சிறையிலிருப்பதால் வெளியே வாடும் அவர்களின் குடும்பங்களின் துன்பச் சுமையைக் கண்ணுற்றும், காணாமல் போன உறவுகளுக்காய் அலைக்கழிந்து திரியும் உறவுகளின் நிலைகண்டும், தமது தாயகநிலங்கள் வன்வளைக்கப்பட்டும் திரும்புமிடமெங்கும் சிங்களக் குடியேற்றங்களின் வன்வளைப்பும் அவர்களின் வன்வளைப்பின் எல்லைக் கற்களாம் புத்தர் சிலைகளும் காணுமிடமெல்லாம் முளைப்பதைக் கண்ணுற்றும், தமிழர் மொழி, கலை, பண்பாடு என்பன காலால் மிதிக்கப்பட்டுத் தமிழர்கள் கட்டாய ஒருமைப்படுத்தலிற்குள் (Forced assimilation) சிங்கள பேரினவெறியாட்டத்தினால் உட்படுத்தப்படுவதைப் பார்த்தும், நாம் தமிழர்கள் என்பதால் அழிக்கப்பட்டோம் இனி மேலும் அழிக்கப்படுவோம் என்ற  வரலாற்றை அறியக் கிடைத்தும் வெஞ்சினங்கொண்டு கிளர்ந்தெழுந்து புரட்சிகரச் செயலில் குதிக்கும் ஆர்வமும் வேட்கையும் இன்றி இன்றொரு தலைமுறை உருவாகியிருக்கின்றதென்றால், அது உலகிலுள்ள இளந்தலைமுறை குறித்து இதுவரை பட்டறிந்துகொண்ட பண்புநிலைக்கு முரணானதாகவே இருக்கின்றது. தம்மை தமது இனத்திற்காகவும் மக்களுக்காகவும் ஒறுத்துப் போராட முனையாத இளந்தலைமுறையொன்று ஆயிரமாயிரம் மாவீரர்களை ஈந்த இந்த மண்ணில் உருவாகியது எப்படி என்பதை ஆழமாக உசாவ வேண்டியது இன்றியமையாதது. இவ்வாறு தமிழ்த்தேசிய அரசியலிற்காக வெஞ்சினம் கொண்டு அணியமாகிப் போராட வேண்டிய இன்றைய இளந்தலைமுறை எப்படி சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்குப் போகத் தமிழ் மக்களிடம் வாக்குப் பொறுக்கும் பித்தலாட்டக்காரரிற்கு வாக்குப் பொறுக்குவதையும் அந்தப் பொறுக்கி வேலையை தமிழ்த்தேசியம் என்ற பெயரால் அழைத்து தமிழ்த்தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலையும் அதைக் குறித்து நிற்கும் சொல்லையும் மலினப்படுத்துகிறது என்பதையும் ஆராய வேண்டும்.

சிங்கள தேசத்தின் பாராளுமன்றிற்குப் போய் எதனைப் புடுங்கிவிடலாம் என எத்தன்மையான பம்மாத்தை இந்த இளைய தலைமுறைகளிடம் வாக்குப் பொறுக்கிகள் புகுத்திவிட்டார்கள் என்று நுட்பமாக அறிந்தாக வேண்டும். சிங்களதேசத்தின் பாராளுமன்றத்திற்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் குறைந்தளவிலான சலுகைகளை மக்களிடத்தில் பெற்றுக்கொடுப்பதைத் தாண்டி வெளியாருக்குத் தேவையான ஆட்சி மாற்றத்திற்குப் பங்களிக்க மட்டுமே இந்த வாக்குப் பொறுக்கிப் பாராளுமன்ற வாய்ப்புவாத அரசியலுக்கு இயலும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசியலையே முன்னெடுத்தது. அப்போதிருந்த ஒரே நன்மையென்னவெனில் தமிழர்கள் சிதறாமல் ஓரணியில் நின்றார்கள். இந்த நிலை தேவையானதாக இருந்ததே தவிர ஒரு துளியளவேனும் போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் வாக்குப் பொறுக்கும் தேர்தல் அறிக்கையில் தமிழரின் தன்னாட்சியுரிமை பற்றிக் குறிப்பிட்டமைக்கே 6 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்கை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த வகையில் தமிழர்களின் வேணவாக்களைக் கூட இந்த வாக்குப் பொறுக்கிகளின் தேர்தல் அறிக்கைகளில் ஒரு உப்புச் சப்புக்கேனும் குறிப்பிடமுடியா நிலையே இந்த பாரளுமன்ற அரசியலின் நிலைவரம்.

தமிழர்கள் பிளவுபடுவதற்கு கூட்டமைப்பிற்கு எதிராகத் தொடங்கப்பட்ட கட்சிகள் பயன்படும் என்பதனால் இதுவரை அவர்கள் மீது 6 ஆம் திருத்தச்சட்டம் பாயவில்லை என்பதைத் தாண்டி இது குறித்து மூளையைக் கசக்கிக்கொள்ள வேண்டியதில்லை. தமிழர்தேச அரசியலை முனைப்புறுத்த இந்த வாக்குப் பொறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எவ்வகையிலும் பயனளிக்காது என்பதை உணர்ந்த இளையோர்கள் மாற்றினைத் தேடித் தமிழ்த்தேசியப் பாதையில் வீறுநடை போடவே முனைந்திருப்பர். வாக்குப் பொறுக்கும் பாராளுமன்ற அரசியலுக்கு மாற்று என்பது தமிழர்தேசத்தின் தன்னாட்சியுரிமையை வென்று இழந்த இறைமையை மீட்டெடுத்தல் நோக்கிய தமிழ்த்தேசிய அரசியலாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, இன்னுமொரு வாக்குப் பொறுக்கும் அரசியல் என்பதாக இருக்க முடியாது.

உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலிலும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கூடுதலான பாதிப்பைத் தரக் கூடியவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு வாக்குப் பொறுக்க வருகின்ற வாக்குப் பொறுக்கிக் கட்சிகளே. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாத்தனத்தாலும் செயலற்ற தனத்தாலும் வெறுப்பும் சினமும் கொண்டெழும் இளையோர்கள் தமிழ்த்தேசிய அரசியலின் வழி (மக்கள் திரள் அரசியல் வழிமுறையோ அல்லது இயக்கவழிமுறையோ) செல்லவே புரட்சிகரமாக முனைவர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான வெறுப்பும் சினமும் அதிகமாக அதிகமாக, தமிழ்த்தேசியம் என்கின்ற தமிழர்தேசத்திற்கான அரசியலை நோக்கியே இளையோர்கள் செல்ல முனைவர். அப்படி நிகழின் அது 1980 களில் நடந்தது போன்றவாறான புரட்சிகரத் தமிழ்த்தேசிய அரசியலிற்கான பாய்ச்சலாகவே இருக்கும். அப்படிச் செல்ல விடாமல், பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியலிற்குள் அந்த இளைஞர்களை ஈர்த்து வாக்குப் பொறுக்க வைத்து அதனைத் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் மாற்று என்றும் சொல்லி அந்த இரு சொற்களையும் மலினப்படுத்தியவாறு புரட்சிகர இளைஞர்களை (வாக்கு) பொறுக்கிகளாக வைத்திருக்கவே தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில் பம்மாத்துவிடும் கயேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு பயன்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு கயேந்திரகுமார், விக்கினேசுவரன், சுரேசு பிரேமச்சந்திரன் ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது என்னவெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லை என்பதே. உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் சிறிலங்காவின் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட முடியாதது என்று இவர்களுக்குத் தெரியும். கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரைப் பதிவு செய்யவில்லை என்பதற்குப் பதில் கூறுவாரா அவரால் ஏமாற்றப்படும் இளைஞர்களுக்கு? உண்மையில் தமிழ்த் தேசியம் என்ற தமிழர்களின் உயிர்மைக் கருத்தியலை மலினப்படுத்துவதற்காகவும் மக்களை ஏமாற்றவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் பயன்படுத்துகின்றன. இவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கி பிழைப்புவாதம் செய்து தமது கட்சிகளை சிறிலங்காப் பாராளுமன்றத்திற்குள் நிலைநிறுத்துவதைத் தாண்டி ஏதும் செய்யார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பின் பணிந்து செல்லும் வாக்குப் பொறுக்கும் அரசியலிழி பண்பாட்டினால் வெறுப்படைந்து தமிழ்த்தேசிய புரட்சிகர அரசியல் வழி செல்ல முனைய வாய்ப்பிருந்த இளைஞர்களை தமக்கு வாக்குப் பொறுக்குவதையே மாற்று எனக் கூறி திசை திருப்பிய கயேந்திரகுமார் “தலைவரின் பேச்சு! விக்கியின் மூச்சு” என்று கூறி விக்கினேசுவரன் என்ற இந்தியக் கொடுங்கோலர்களின் சூழ்ச்சித் திட்டத்திற்காக தேன் தடவி இறக்கப்பட்ட விடத்திற்குப் பின்னால் தன்னை நம்பி ஏமாந்து வந்த இளையோர்களை ஒப்புக்கொடுத்த இழிசெயல் குறித்து தமிழிளையோர்கள் கேள்வி கேட்க வேண்டும். தலைவரையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப்படுத்தி விக்கினேசுவரன் என்ற இந்தியாவின் நேரடி இறக்குமதியான அடிவருடியின் பின் தமிழிளையோர்களைக் கூட்டிக்கொடுத்த கயமைத்தனத்தை செய்த கயேந்திரகுமார் ஒன்றில் ஏமாளியாக இருக்க வேண்டும். இல்லை ஏமாற்றுக்காரராக இருக்க வேண்டும். அன்று தலைவரின் மூச்சென்று கூறி விட்டு, இன்று மாயமான் என்கிறார்கள். உண்மையில், இந்த அரசியல் உதிரிகள் தமிழ்த்தேசியம் என்ற சொல்லை வாக்குப் பொறுக்கும் தமது சொந்த அரிப்பிற்குப் பயன்படுத்துவது அந்த உயரிய விடுதலைக் கருத்தியலை நெஞ்சில் தாங்கி மாண்டுபோன மாவீரர்களுக்குச் செய்யும் இரண்டகமாகும்.

சுரேசு பிரேமச்சந்திரன் தனது நலன்களுக்காக எந்த நிலைக்கும் தரமிறங்கக் கூடியவர் என்பதை தனது அரசியல் வரலாற்றில் காட்டத் தவறவில்லை. இந்தியக் கொடுங்கோலர்களிடம் இளைஞர்களைக் காவுகொடுக்க மண்டையன் குழுத்தலைவனாக செயற்பட்டவரென தமிழ் மக்களால் அறியப்பட்ட இவர் பின்பு சிங்கள அமைச்சர்களின் பின்னால் எலும்புத்துண்டுகளுக்காக அலைந்து திரிந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அமைச்சராக இருந்தபோது அவருக்கு கீழ் வாலாட்டிப் பணியாற்றியவர். தனது தம்பிக்குப் பதவி கேட்டு என்னை அணுகியவர் சுரேசு என அவர் இன்று ஏற்றிருக்கும் விக்கினேசுவரன் என்ற இந்தியக் கைக்கூலி அன்றே சொன்னார். தனது இருப்பிற்காக எந்த நிலைக்கும் தரந்தாழக் கூடிய சுரேசு பிரேமச்சந்திரன் என்ற பிழைப்புவாதியை தமிழ் மக்கள் ஏலவே அடையாளங் கண்டு புறமொதுக்கி விட்டனர். சம்மந்தன் ஏற்கனவே சந்திரிக்காவின் அதிகாரத்துடன் சல்லாபித்துத் திரிந்து பழக்கப்பட்டவர். சுமந்திரன் மெதடிச திருஅவையின் பதிலியாகவும் (Proxy) மேற்குலகின் அடிவருடியாகவும் நின்று தமிழ்மக்களை ஏய்க்கத் திரியும் சிறுமையாளனே.

இந்த வாக்குப் பொறுக்கிகள் தமிழிளையோரை வாக்குப் பொறுக்க வைப்பதுமட்டுமில்லாமல், இந்த வாக்குப் பொறுக்கிகளின் தர மதிப்பீட்டைத் தமிழ்த்தேசியம் குறித்த பேசுபொருள் என்றாற் போல புழக்கப்படுத்திதமிழ்த்தேசியம்என்ற தமிழர்களின் விடுதலைக் கருத்தியலைப் பொருள்கோடச் செய்கின்றனர். இனப்படுகொலைக்குள்ளான ஒரு இனத்தின் அரசியல் நாம் ஒருதேசம் என்ற ஒரு கட்டிறுக்கமான நிலையில் இருந்து தொடராமல், தமிழ்நாட்டில்  இயங்கும் தி.மு., அதிமு. என்ற கட்சிகள் செய்யும் எச்சை அரசியலிற்கும் கீழ்ச் சென்று சுமந்திரன், விக்கினேசுவரன், கயேந்திரகுமார் எனத் தொடருகின்றது என்றால், போரிடும் இனங்கள் தமிழர்களின் இன்றைய அரசியல் நிலைவரத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்து துப்புவார்கள் என்றே சொல்ல வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக ஓரடி கூட முன்னகராத தமிழர்தேசத்தின் அரசியலான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பது எவ்வாறு? கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி என்ற இந்த வாக்குப் பொறுக்கிக் கூத்தணிகளின் ஏமாற்றுகளால் ஏமாந்து இன்று அரசியல் உதிரிகளாக்கப்பட்டுள்ள தமிழிளையோர்களை அரசியல் விழிப்பூட்டி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கச் செய்து அவர்களை புரட்சிகரமாக அணியப்படுத்திச் செயலில் குதிக்க வழிகாட்டும் திசைவழியில் பயணப்படுவது எப்போது? வாக்குப் பொறுக்கி சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சலுகை வாங்கிப் பிழைப்பதை அரசியலாகக் கொண்டு அதற்குத் தமிழ்த்தேசியம் என பெயரிட்டு இழிவரசியல் செய்யும் நிலையை மாற்ற இக்கணத்திலிருந்தாவது முன்வர வேண்டாமா?

இணைப்பு

தமிழ்த்தேசியம் என்ற பெயரை மலினமாகப் பயன்படுத்தித் தாம் வாக்கிப் பொறுக்கிச் சிங்களப் பாராளுமன்றம் போகத்துடிக்கும் அரசியலிற்குள் இளைஞர்களை இழுத்துவிட்டு இழிவரசியல் செய்யும் சுமந்திரன், கயேந்திரகுமார், விக்கினேசுவரன் போன்றோரின் அரசியல் குறித்து “காக்கை” அரசியல் அடிப்படையில் எழுதிய புலனாய்வறிக்கைகள் இத்துடன் இணைக்கப்படுகிறது. வாசிக்கத் தவறாதீர்கள் என காக்கை உங்களை உரிமையுடன் வேண்டுகிறது.

http://www.kaakam.com/?p=1116

http://www.kaakam.com/?p=1286

http://www.kaakam.com/?p=1003

நெடுஞ்சேரன்-

2020-03-05

Loading

(Visited 18 times, 1 visits today)