தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? – மறவன்-

1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய மாயையை அடியொற்றிய இனவெறிக்கருத்துடன் மகாவம்சவழிப் புரட்டின்பால் அமைந்த கீழ்நிலைக் கட்டுக்கதைகளுடன் உருவெடுத்த சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு தளமாய் அமைந்தது. அநாகரிக தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சி என்ற பெயரில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு கருத்தியல் அடித்தளமிடும் வரையில் கொழும்பு- 7 இனைத் தளமாகக்கொண்ட யாழ்ப்பாண சைவ வெள்ளாளிய மேட்டுக்குடிக் கனவான் (தம்மை மேலானவர்களாகக் கருதும் மனநோயே வெள்ளாளியம் எனக் குறிக்கப்படுகிறது. சாதியைக் குறிக்கவல்ல. அப்படியான மனப்போக்கைக் குறிக்கவே) அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தில் தமக்கான பங்குபிரிப்பு என்பதைத்தாண்டி வேறெந்த எண்ணவோட்டமும் இருக்கவில்லை. அந்த மேட்டுக்குடிக் கனவான்கள் அதிகாரத்தைச் சுவைப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சி தடையாய் அமைந்த போதுதான் தமது அதிகார அரசியல் ஆட்டங்காணுவதைக் கண்ணுற்றுத் தமக்கான பேரம்பேசலுக்கான ஒரு வாக்கு வங்கித்தளம் அமைக்கவே தமிழ்மக்கள் பக்கம் திரும்பிப்பார்க்கத் தலைப்பட்டார்கள்.

1911 இல் நடைபெற்ற படித்த இலங்கையருக்கான தேர்தலில் சேர்.பொன்.இராமநாதனை எதிர்த்து சேர்.மார்க்கஸ் பர்ணாண்டோ என்ற கரவா சமூகத்தைச் சேர்ந்த சிங்களதேசியத்தவர் போட்டியிட்டார். இதில் கொவிகம (வேளாண் நிலவுடமைக் குடி) என்ற சிங்கள ஆதிக்க சமூகத்தினர் கரவா சமூகத்தைச் சேர்ந்தவர் வெற்றியடையக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தமிழராயிருந்தும் ஆதிக்க சமூகத்தவர் என்பதால் சேர்.பொன்.இராமநாதனுக்கு வாக்களித்து அவரை படித்த இலங்கையருக்கான தேர்தலில் வெற்றிபெறச் செய்தனர்.

1915 இல் முசுலிம்களுக்கெதிராக சிங்கள மேட்தட்டாரின் வணிகநலன்களுக்கான போட்டிக்காக சிங்கள பேரினவாதத்தின் துணைகொண்டு ஏவிவிடப்பட்ட வெறியாட்டத்தில் குற்றமிழைத்தவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதான டி.எஸ்.சேனநாயக்கா அடங்கலான சிங்களத் தலைவர்களை விடுவிக்க சேர்.பொன்.இராமநாதன் பிரித்தானியாவுக்குக் கப்பலில் சென்று வாதாடி ஈற்றில் முஸ்லிம்கள் மீது வன்முறையை ஏவிய சிங்களத்தலைவர்களைக் காப்பாற்றியமைக்காக, அவரை சிங்களத்தலைவர்கள் குதிரையில் ஏற்றி கொழும்பை வலம்வந்து மதிப்பளித்தனர். அந்த வகையில் இந்த சைவ வெள்ளாளிய கொழும்பு- 7 கனவான் கும்பலின் அரசியல் எப்போதும் தமக்கான அதிகாரப் பங்குபிரிப்பிற்கானதாகவும் பிரித்தானிய காலனியர்களையும் அவர்தம் மனங்களை வென்றெடுத்தவர்களையும் மகிழ்விப்பதானதாகவும் மட்டுமே இருந்ததைத் தெளிவாக உணரலாம்.

இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரத்தை ஒற்றையாட்சியின் கீழ்க்கொண்டு வந்த பிரித்தானிய காலனியர்கள் அந்த ஆட்சியதிகாரத்தை சிங்கள பேரினவாதத்திடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற பின்பான முதற்கட்ட தமிழினக் குரோத நடவடிக்கையாக மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து தமிழர்களின் இன நூற்றுக்கூறில் மாற்றத்தை ஏற்படுத்தும் டி.எஸ் சேனநாயக்காவின் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவழித்து ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத கறையை ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற கொழும்பு வாழ் மேட்டுக்குடி அரசியல்வாதி ஏற்படுத்தினார். இதனால் வெட்கமும் அவமானமும் சீற்றமுமுற்ற தமிழ் அரசியல்த் தலைமைகள் 1949 இல் பின்னாளில் தமிழரசுக் கட்சி என்று பெயர்மாற்றத்திற்குட்பட்ட சமஸ்டிக் கட்சியைத் தந்தை செல்வா தலைமையில் தொடங்கினார்கள்.

 1952 இல் திருகோணமலையில் மாநாட்டைக் கூட்டிய தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசியல்த் தலைமைகள் தமிழர்களிற்கான கூட்டாட்சி (சமஸ்டி) அரசுமுறையையும் அதற்கான தமிழரின் தலைநகராகத் திருகோணமலையையும் அறிவித்துத் தீர்மானம் இயற்றியதுடன் தமிழ்த் தேசியம் தனது வாழிடத்தொடர்ச்சியை அரசியல் வடிவத்திற்குக் கொண்டு வந்து, “தமிழர் தேசம்” என்ற அரசியற் புரிதலின் தொடக்க முனைப்போடு தமிழ்த் தேசிய அரசியலிற்கு அடித்தளமிட்டனர்.

தமிழ்மக்களின் அரசியல் சிக்கல்களிற்குத் தீர்வுகாண சிங்களத் தலைவர்களுடன் பேசி எடுத்த அத்தனை முனைப்புகளையும் சிங்கள பௌத்த பேரினவாதத் தலைமை எள்ளிநகையாடி அதனை பேரின நரபலிவெறிகொண்டு அடக்கிவந்தமையின் கோரத்தனத்தனத்தைப் பட்டெறிந்துகொண்டமையினாலே தமிழர்களின் அக்காலத்தலைமை, அறவழிப் போராட்டத்தால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்பொடுக்குமுறையில் இருந்து தமிழரைக் காப்பாற்ற முடியாது என்ற முடிவிற்கு வந்தது. இவ்வாறாக 1956 இலிருந்து முதன்மை முரண்பாடாக கூர்மையடைந்து வந்த தமிழ்த்தேசிய இன முரண்பாடானது 1972 இன் பின்பாக பற்றிப் படர்ந்தெரிய தொடங்கும் வரை தமிழ்க் குமுகாயத்தில் எச்சசொச்சமாக இருந்த நிலக்கிழாரிய, நிலமானிய மனநிலை மற்றும் காலனிய அடிமை மனநிலை என்பனவற்றால் விளைந்த சாதிய, வகுப்புவாத மற்றும் பிரதேச அடிப்படையிலான பாகுபாடான எண்ணப்போக்குகளால் விளைந்த ஒடுக்குமுறைகளும் மேலாதிக்கப் போக்குகளும் அகமுரண்பாடாகவும் அடிப்படை முரண்பாடாகவும் தமிழ்த்தேசிய இனத்திற்குள் கேடுகெட்டதாகத் தொடர்ந்தே வந்தன. அவ்வாறான குமுகாய அடக்குமுறைகளுக்கெதிராக 1960களில் இடதுசாரிகள் நேர்மையாக கோயில் உள்நுழைவுப் போராட்டங்களையும், தேநீரகங்களிற்குள் பாகுபாடின்றி அமரும் போராட்டங்களையும், ஒரே இடத்தில் ஒன்றாக உணவருந்தும் போராட்டங்களையும் முன்னெடுக்கும் வரை இவற்றிற்கெதிராக எந்தவொரு செயல்வடிவத்தையும் தொடராத தமிழரசுத் தலைமைகள், இடதுசாரிகளின் இந்த குமுகாயப் புரட்சிகர நடவடிக்கைகளின் பால் ஒடுக்குமுறைக்குள் வாழத்தலைப்பட்ட இளைஞர்களும் ஏனைய புரட்சிகர இளைஞர்களும் ஈர்க்கப்பட்டு அந்த அரசியல்வழித்தடம் தொடர்வதைக் கண்ணுற்று தமது அரசியல் இருப்புக் குறித்து அச்சமடையத் தொடங்கியதாலேயே “தீண்டாமை ஒழிப்பு ஊர்வலங்கள்” என்பனவற்றை நடத்தினார்கள். உண்மையில் இந்தத் தீண்டாமை ஒழிப்பு ஊர்வலங்களைக் கூட தென்தமிழீழப் பகுதிகளிலிருந்தே தொடங்கும் முடிவைத் தமிழரசுக்கட்சி எடுத்தமைக்குக் காரணமே யாழ்ப்பாண சாதியாதிக்கவாதிகளின் சினத்தைத் தூண்டி அவர்களின் வாக்கு வங்கியை இழக்காமல், பட்டும் படாமலும் இப்படியான ஊர்வலங்களைச் செய்து தமக்குப் புரட்சிகரசாயம் பூசுவதும் தமது தமிழ்த்தேசிய அரசியல் நேர்மையையானதென தமிழர்களை நம்பவைப்பதுமேயாகும்.

எதுவெப்படியமையிலும், தமிழர்களால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒற்றையாட்சியதிகாரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் வாழமுடியாதென்றும், ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் தமிழ்த்தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதன் மூலம் சிங்கள பௌத்த நாடாக்குவது மட்டுமே ஒற்றையாட்சியின் ஒரேநோக்கு என்பதும் புலப்பட்டுப்போக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டிருந்த தமிழர் தலைமை தமிழ்த்தேசத்தினதும் அதனது அரசியலான தமிழ்த்தேசியத்தினதும் வளர்ச்சிப்போக்கின் வரலாற்றுப் பெருநிகழ்வான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை 1976 இல் நிறைவேற்றியது. அன்றைய தமிழ்த்தலைமைகளால் தமிழர்தேசத்தைக் காக்க காத்திரமான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது என்று தமிழ் இளைஞர்கள் முடிவெடுத்தமைக்கு அன்றைய உலகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் புரட்சிகர முழக்கங்களும் காரணமாயின. இதனால் தமிழிளைஞர்கள் புரட்சிகரப் பாதையிலே தான் இனிப் பயணிக்கப்போகின்றனர் எனப் புரிந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை விரைந்து தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இப்படி அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது, அவர்களிடம் தமிழீழம் அமைப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தமிழீழம் அமைக்கப் போகும் புரட்சிகரப் பயணத்தில் நட்பாற்றல்கள் யார்? பகையாற்றல்கள் யார்? என்ற பார்வையும் அவர்களிடம் இருந்ததில்லை. அதனை முன்னெடுக்கத் தேவையான எந்த முனைப்பும் அவர்கள் காட்டவில்லை. எனவே, தமிழர்தேசத்தின் ஆட்சியதிகார அரசியலுக்கான வளர்ச்சிப்போக்கில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலத்தால் அமைந்துவிட, பொதுத் தேர்தலைப் பயன்படுத்தித் தமது இறைமையை மீட்டெடுக்கும் வேட்கையை தமிழ் மக்களும் உலகிற்குப் பறைசாற்றி விட்டனர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது செயலாக்க உறுதிமொழியாக வரிந்த தமிழ் இளைஞர்களின் மறவழி விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டைத் தளமாகப் பயன்படுத்தி, கிடைத்தவற்றைக் கொண்டு தம்மைக் கட்டியமைத்தார்கள். சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் எல்லைகடந்து நரபலிவெறியாட்டங்களை அத்தனை தளங்களிலும் முடுக்கி தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையில் இறங்க, அதை எதிர்த்துப் போராடும் புரட்சிகரத் தமிழிளையோரின் இயக்கங்களும் புரட்சிகர முன்னெடுப்பில் மீதீவிரமும் உறுதியும் கொள்ளலாயினர். ஆனால், சாதியொழிப்புப் போராட்டங்கள் என 1960 களில் சரியாகப் பயணித்த இடதுசாரிகளின் அரசியலானது தமிழர் தேசம் பற்றிய புரிதலில்லாமலும், தேசங்களின் தன்னாட்சியதிகாரமும் தேசிய இனவிடுதலையுமே உழைக்கும் மக்களின் ஒற்றுமையை ஈற்றில் வலுப்படுத்தி, உலகின் பேயாதிக்கக் கூட்டங்களின் எதிர்ப்புரட்சிகர சேட்டைகளை ஆட்டங்காண வைக்கும் என்ற புரிதலில்லாமலும், வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் தேசிய இனவிடுதலைகளைப் பெற்று தேசிய இனங்கள் தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து மீளாமல் உலகில் நிகரமை (சோசலிசம்) மலர்வதென்பது வாய்ப்பேயில்லாத வெற்று முழக்கம் என்ற புரிதலுமில்லாமலும் “தமிழீழ முதலாளி தமிழீழம் கேட்கிறான்” என்று சொட்டைத்தனமாக தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி தமிழர்கள் எதிர்கொண்ட முதன்மை முரண்பாட்டைக் கணக்கிலெடுக்காமல் அரசியல் செய்து இடதுசாரிகள் சிங்கள பௌத்த பேரினவாதமும் உலகப் பேயாண்மைகளும் நன்மையடையும் எதிர்ப்புரட்சிகர அரசியலைச் செய்தார்கள் எனவே வரலாறு பதிவுசெய்துள்ளது.

சிங்கள அரசின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை இராணுவ எந்திரத்தின் மீது ஒடுக்குண்ட தமிழ்த் தேசிய மக்களிடத்திலிருந்து எழுந்த புரட்சிகர இயக்கங்களானது கரந்துறை போர்முறையையைக் (Guerrilla Warfare) கைக்கொண்டு ஒடுக்கும் இராணுவத்தின் மீது பதுங்கித் தாக்குதல்கள் மேற்கொண்டு போர்க்கருவிகளைப் பறித்தெடுத்தன. நன்கு அரசியற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் தளமமைத்து மக்களின் கையால் உணவருந்தி மக்களின் வேவுத்தகவல்களைக் கொண்டு மக்களைக் காத்து மக்களின் மூலம் நகர்வுகளை இலகுபடுத்தி தொடர்ந்தேர்ச்சியாக அடக்குமுறை இராணுவத்திற்கு உளவியல் பீதியைக் கொடுக்கும் தாக்குதல்களைத் தொடுத்து எதிரி எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள நேரமும் இடமும் கொடாமல் வேகமாக நகர்ந்து தொடர்ச்சியாக தளங்களை மாற்றி மாற்றி அசையும் தளங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆளணியையும் வளங்களையும் கொண்டு நன்கு நவீனமயப்பட்ட இராணுவத்திற்கு இம்மை மறுமை தெரியாத அடிகொடுத்து ஒடுக்கும் இராணுவத்தை முகாம்களுக்குள் அடக்கிவிட்ட பின்பு தேடிச் சென்று தாக்கி நிலங்களை மீட்டெடுத்து, மீட்டெடுத்த நிலங்களில் நிழலரசாக மக்களரசை அமைத்து முறை செய்து காப்பாற்றும் இயங்கியல் வழியிலேயே கரந்துறைப் போராட்ட வடிவம் தமிழர்களின் புரட்சிகர மறவழிப்போராட்ட வரலாற்றை முன்னகர்த்தியது.

விடுதலைப் புலிகளின் கரந்துறைப் போராட்ட முறைமை மீட்டெடுத்த தமிழீழ நிலப்பரப்பின் எல்லைகளைக் காக்கவும் மீட்கவுமான மக்கள் இராணுவமாகியதே தவிர அது ஒரு முழுமையான அரச படைகள் போல எந்திரமாக மரபுவழிப்படையாகச் செயற்படவில்லை. மீட்கப்படாத தமிழீழ நிலங்களில் கரந்துறை முறையில் மக்களோடு போராளிகள் தண்ணீரும் மீனும் போல் இணைந்தும் சிறிலங்காப் பகுதிகளின் பொருண்மிய, இராணுவ மற்றும் அழித்தொழிப்புகளுக்கு அதே கரந்துறை உத்திகளையும் இராணுவ செயலுத்திகளையும் பயன்படுத்தி, மீட்கப்பட்ட நிலங்களுக்கும் மீட்கப்படாத மற்றும் வழங்கல்களுக்கான பகுதிகளுக்கிடையில் ஊடாடும் கரந்துறைப் போரியலிற்கேயான சிறப்பியல்பை உள்ளடக்கிய மிக வேகமாக நகரும் அணிகளாகவும் கரந்துறைப் போர்முறை உத்திகளை அதிகளவில் உள்வாங்கிய உத்திகளையே விடுதலைப் புலிகள் கடைசி வரை பயன்படுத்தினர். நிலமீட்புப் போரில் ஈடுபடும் அத்தனை தாக்குதல்களிலும் ஊடறுப்பு, பதுங்கியிருந்து தாக்கி நிலைகுலையச் செய்தல், மிகவேகமாக நகர்ந்து அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளல் என கரந்துறைப் போரியலின் அத்தனை போரியல் உத்திகளும் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் பயன்படுத்தப்பட்டன. மீட்டெடுத்த நிலங்களின் எல்லைகளை சிறிலங்காவின் மரபுவழி இராணுவத்தின் வன்வளைப்பிலிருந்து காக்க எல்லைகளில் நிலையெடுத்திருந்த மரபுவழிப்படையணி போல் அல்லது அதற்கு ஈடான கட்டமைப்புடன் இயங்கிய புலிகளின் படையணிகளும் தமிழீழ மக்கள் இராணுவத்தின் முன்னணிப் படைப்பிரிவுகளாகவே செயற்பட்டன. உலகளவில் இராணுவத்தினர் மட்டுமேயாற்றும் பல களமுனை விடயங்களை தமிழீழ மக்களே ஆற்றினர்.

இவ்வாறான மறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தவாறே, ஒரு தேச உருவாக்கத்திற்குத் தேவையான அத்தனை கட்டமைப்புகளையும் எமது மண்ணிற்கியைந்தும் தமிழர் மரபினடி தொடர்ந்தும் உலக அறிவியல் வளர்ச்சிப் போக்கினை உள்வாங்கியும் மக்கள் நலனிற்கான பொறிமுறைகளாக தமிழின விடுதலைக்கான புரட்சிகர அமைப்புத் தலைமையேற்று அமைத்தது. தமிழீழ தேசத்தின் காப்பரண்களாக தம்முயிர் ஈந்து உறுதியுடன் போராடும் தமிழின மறவர்கள்  சிங்கள பேரினவாதிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக நிற்பதைப் பார்த்துக்கொண்ட உலக வல்லாண்மைப் பேயரசுகள் தெற்காசியாவில் விடுதலை பெறுந்தறுவாயில் நிற்கும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க அந்தத் தேசிய இனத்தை ஒடுக்கும் அரசிற்கு போர்க் கருவிகளை வாரி வழங்கி அதில் போர்ப் பொருண்மியமீட்டுவதோடு, இனவழிப்புப் போரின் பின்பான பில்லியன் கணக்கில் பணம் புழங்கும் மீள்கட்டுமாணத்தில் தமக்கான வணிக ஒப்பந்தங்களை உறுதிசெய்வதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் தமது தாராளமய, தனியார்மய உலகமயமாதல் சந்தைத் தேவைக்கான புவிசார் முனையமாக்கிக் கொள்வதற்காக சிறிலங்கா போன்ற ஒடுக்குமுறை அரசிற்குக் கால் கட்டுப்போட்டு வாய்ப்புப் பார்த்தன. இவ்வாறுதான் தமிழர்கள் மீதான இனவழிப்பு 2009 இல் வெளிப்படையாக நடத்தி முடிக்கப்பட்டது. இராஜபக்சக்கள் எப்போதும் சொல்வது போல அதாவது “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என்றவாறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் அரசியலான தமிழரினப் பகையரசியலும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுக்கும் அரசியலும் தமிழினவழிப்பிற்குத் தலைமை  தாங்க, அதனுடன் மேற்கின் வல்லாண்மையாளர்களின் சந்தைத்தேவையும் சீனா போன்ற நாடுகளின் போர்ப்பொருண்மியமீட்டும் தேவையும் ஒருசேர தமிழினவழிப்பு வெளிப்படையாக நடத்தி முடிக்கப்பட்டு ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்கு மேலும் உந்துதலளிக்கப்பட்டுள்ளது. தமிழினவழிப்பின் கூட்டுப்பங்காளிகள் தமக்கு தமிழரை அழித்த பின் கிடைக்கச்செய்வதாக சிறிலங்கா அரசால் உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றும்படியான அழுத்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பான ஜெனிவா அரசியலில் பகடைக் காயாகப் பயன்பட்டுப் போகும் ஜெனிவாத் திருவிழா அரசியலில் இருந்து இன்னமும் மீளமுடியாமலே தமிழர்களின் உலக அரசியல் தொடர்கின்றது.

எனவே, தமிழர்களின் வாழிடத் தொடர்ச்சியாக வரலாற்று வழிவந்த தமிழர் தாயகம், தொன்மமான தமிழ்மொழி, தமிழர்களின் பொருண்மியம் மற்றும் நீண்ட நெடிய மேம்பட்ட பண்பாடு என்பனவற்றை சிதைத்தழிக்கவல்லவாறு, சிறிலங்கா அரச பயங்கரவாதமானது தனது ஒவ்வொரு அரச கட்டமைப்பையும், கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பைத் தொடர்ச்சியாகச் செய்யக் கூடிய வகையில் கட்டமைத்துள்ளது. இதனால், தமிழர்களின் தனித்த தேசியம் என்ற தமிழீழத் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை இல்லாதொழித்து, இலங்கைத்தீவை சிங்கள பௌத்த நாடாக்கலாம் என்று இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வழிநடத்தப்படும் சிங்களதேசமானது கங்கணம் கட்டிச் செயலாற்றி வருகின்றது.

இனப்படுகொலைச் செயற்பாட்டிற்கான வன்முறை வடிவங்கள் வெளிப்படையாக வெளித் தெரியாமல், அதே நேரம் அவற்றின் மூலம் அல்லது செய்வி எங்கிருந்து கருக்கிளம்பியது என்பதன் அடிச் சுவட்டினையும் இலகுவில் அடையாளம் காணமுடியாதவாறு மிகவும் நுணுக்கமாக இழைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தின் கட்டமைப்புக்கள் வழி வந்ததாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எதிர்ப்பேதுமின்றி நிகழ்ந்து வருகின்றது.

சிறிலங்கா அரச இயந்திரத்தின் கட்டமைப்புக்கள் கட்டமைக்கப்பட்ட விதமே, பாகுபாடுகளை இயல்பாகவே தமிழர்கள் மீது ஏற்படுத்துவதாக அமைவதால், சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்களவானோர் அகமகிழ்வாயும் நல்ல வாழ்க்கைத் தரத்துடனும் வாழ இயலுமாவதோடு, ஏறக்குறைய அத்தனை தமிழர்களும் அணுவணுவாகத் துன்பப் பூட்டுக்குள் சிக்கித் தவிப்பதாகவே தமிழர்களது வாழ்நிலையின் ஒவ்வொரு படிநிலையும் அமைந்துவிடுகின்றது. அதாவது பசி, பட்டினி, போசாக்குக் குறைவு, வேலையின்மை, உறுதியற்ற வாழ்நிலைச் சூழல், காத்திருப்புகள், உறுதியற்ற வாழ்வியல் கூறுகள் அதனால் விளையும் கூட்டு உளவியற் சிதைவு போன்றவற்றினால் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் பரிதவிப்பு நிலையில் தமிழர்கள் அல்லலுறுவதற்கு, சிங்கள அரச இயந்திரமும் அதன் கட்டமைப்புக்களும் கட்டமைக்கப்பட்ட விதமே காரணமாக அமைகின்றது. இப்படி சிங்கள அரச இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டமைப்பும் கட்டமைக்கப்பட்ட விதத்தால் ஓரங்கட்டப்பட்ட தமிழர்களின் இருப்புக் கேள்விக்குள்ளாகிவிடும் இடுக்கண்ணே இன்றைய அரசியல் நிலைவரமாகவுள்ளது.

இனப்படுகொலைக்குள்ளான தமிழர்கள் இன்று பலவகைகளில் கட்டாய ஒருமைப்படுத்தலுக்குள் (Forced Assimilation) உள்ளாக்கப்படுகின்றனர். தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் சிதைக்கப்படும் வகையில் ஒரு வகைப் பல்லினப் பண்பாட்டுச் சீரழிவு தமிழர்களிடத்தில் புகுத்தப்பட்டுத் தமிழரின் பண்பாட்டுத் தனித்தன்மைகள் இழக்கப்படும் வகையில் இந்தக் கட்டாய ஒருமைப்படுத்தலுக்குள் தமிழர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

சிறிலங்காவின் தொல்லியல் துறை, மீள்குடியேற்ற அமைச்சு, மகாவலி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிறிலங்காவின் வனத்துறை, பெருந்தெருக்கள் அமைச்சு, ஊர்காவற்படை மற்றும் முப்படைகள் இணைந்து சிங்கள தேசத்திடம் இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரம் கைமாறியதிலிருந்து முன்னெடுத்து வந்த சிங்கள பௌத்த பேரினவாதவெறி அரசியல் கோத்தாபாயவின் ஆட்சியில் இன்னும் வக்கிர வளர்ச்சிகொள்ளவிருக்கிறது. இன்று தமிழர்கள் முகங்கொடுக்கும் அன்றாடச் சிக்கல்கள், அடிப்படைச் சிக்கல்கள், தேசிய இனச்சிக்கல் என அனைத்துக்குமான தீர்வை “தமிழர் தேசம்” என்ற நிலைப்பாட்டிலிருந்தே நோக்க வேண்டும். தமிழர்தேசம் எதிர்கொள்ளும் சிக்கல்கல்களாகவே ஒவ்வொரு சிக்கலையும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்காமல் எந்தவொரு சிக்கலுக்குமான தீர்வையும் தமிழர்களால் அடையமுடியாது. எனவே, தமிழர்கள் நாம் ஒரு தனித்த தேசம் என்ற நோக்குநிலையிலிருந்து வெளிநின்று அல்லது அதற்கு எதிராக உள்ளிருந்தும் வெளியிருந்தும்  மேற்கொள்ளும் அத்தனை நகர்வுகளையும் தமிழர்கள் தாம் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டிலிருந்தே எதிர்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் அரச அதிகாரத்துடன் வக்கிர வளர்சியடைந்து தனது 72 அகவையை இன்று நிறைவுசெய்துள்ளது. தமிழர்கள் இந்தக் கரிநாளை எப்படிக் கடக்கப்போகிறோம்? தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற காறித்துப்புமளவிற்கான கவலையோடா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையோடா?

– மறவன்-

2020-02-04

 

 

 

 

 

 4,545 total views,  3 views today

(Visited 15 times, 1 visits today)