தமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு : வாழ்வியல் -செல்வி-

(தாய்த்தமிழ்நாட்டில் கிந்திமொழித் திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்க தம் உயிரை ஈந்த மொழிப்போர் ஈகியரை நினைவுகூரும் இந்நாளில் (2020.01.25) இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது)

இனவியலின் தொடர்ச்சியின் முதன்மைக்கூறாக இருக்கின்ற மொழியினை, இன்று வெறுமனே தொடர்பாடலுக்குரிய ஊடகம் என்ற கருத்தியலுக்குள் சிக்கவைத்து, இனவியலின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் இனச்சிதைப்பின் முகவர்கள் “பின்நவீனத்துவம்” என்னும் போக்கினுள் ஒளிந்துகொண்டு, மொழிச்சிதைப்பினூடே மரபுச்சிதைப்பையும் இனச்சிதைப்பையும் நிகழ்த்த முனைந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் இருப்பு காலத்துக்குக் காலம் கேள்விக்குள்ளாகியபோதிலெல்லாம் தமிழ் மொழியின் படைப்புவெளியே அந்த இருப்பினைத் தக்கவைத்தது எனலாம். வாழ்வியலில் மொழியைப் பயன்படுத்துபவர்களுக்கு மொழி என்பது வெறும் தொடர்பாடலுக்கான ஊடகமாக இருக்கலாம். ஆனால் மொழிதலை வாழ்வியலின் கூறாகக் கொண்டு மொழியின் வழி ஒழுகும் மரபுவழித்தேசிய இனமான தமிழர்களுக்கு, மொழியும் மொழியாலமைந்த பண்பாடும் இனத்தின் இயங்கியலுக்கான அச்சாணியாக இருக்கின்றன. மொழி என்பது ஊடாடுவதற்கானது என்றால், அந்த மொழிசார்ந்த அரசியல் பன்னாட்டு வல்லாதிக்க காரணியாக இன்று வளர்ந்திருக்காது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களெல்லாம், நான்கு சொற்களை கோர்த்துவிட்டு நான்கைந்து தங்களோடொத்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மொழி பற்றி கருத்துச்சொல்லும் நிலையில் வந்துநிற்கிறோம். ஆயின் அவர்களைப் போன்ற ஆதிக்க அரசியலுக்கு ஒற்றைப்படையாக இயைந்துபோகும் புல்லுருவிகள் பலவற்றையும் தாண்டி, ஆதிக்க அரசியலின் அதிகாரத்தை நடுவில் குவிப்பது என்றதன் மேல் வரையப்பட்ட படைப்புப் போலிகளைக் களைந்து, மரபுவழி மொழியாக இன்றும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றது.

உலகில் தோன்றிய அனைத்து மொழிகளும் மாந்தனுடைய நிலவியல், பண்பாடு என்னும் தளங்களில் முகிழ்த்திருந்தாலும், தமிழ் மொழியானது தமிழினத்திற்கான பண்பாட்டினை எழுதுகின்ற கருவியாகவும் பண்பாட்டால் எழுதப்படுகின்ற கருவியாகவும் இரு வேறு சமதளங்களில் தன்னைப் தமிழர்களுடைய வாழ்வியலுக்குள் பொருத்திக்கொண்டது. மொழியினுடைய இருப்பு என்பது இனத்தினுடைய இருப்பிற்கானதாகவும் இனத்தினுடைய இருப்பு என்பது மொழியினுடைய இருப்பிற்கானதாகவும் இருவழித்தாக்கமாக ஒன்றுடனொன்று செய்வினையாகவும் செயற்பாட்டுவினையாகவும் இருக்கின்றன. மொழியின் அரசியல் என்பது போர்ப்பறை கொட்டிவிட்டுச் செய்யும் போர் அல்ல.

காலத்துக்குக் காலம் பல்வேறு மொழிகள் உட்புகுந்து தமிழ்மொழிச் சிதைப்பை மேற்கொள்ள முயன்று தோற்றிருக்கின்றன என்பது வரலாறு. ஆனால் அவை தோற்றிருக்கின்றனவே தவிர, அந்த முயற்சிகளின் எச்சங்கள் எம் மொழியை இன்றும் விழுங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக சமசுக்கிருதம் என்னும் மொழியின் ஊடுருவல் மதம் என்னும் மறை ஊக்கியினால் தமிழ்மொழி போல வேடமிட்டு உலவிக்கொண்டிருக்கின்றது. பெயர்களிலிருந்து அன்றாடம் புழங்கும் சொற்கள் வரை வரிக்கு ஒரு சமசுக்கிருத சொல் பயன்பாட்டிலிருக்கிறது. மொழிக்கலப்பு பற்றிய கதையாடல்களில் ஆங்கிலத்தின் தாக்கமும் கிறித்துவர்களின் தாக்கமும் அக்குவேறு ஆணிவேறாக ஆய்வுசெய்பவர்கள் தங்களைச் சூழவுள்ள சமசுக்கிருதப்பெயர்களை மறந்துவிடுகின்றனர். ஒரு சமூகத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியில் இவ்வாறான பண்பாட்டு ஊடுருவல்கள் நிகழ்வதென்பது தவிர்க்கமுடியாததாக இருப்பினும் ஊடுருவல்களை கண்டறியும் நுண்மான் நுழைபுலம் உள்ளவர்களாக நாம் இருப்பது காலத்தின் கட்டாயம்.

தனிச்சிங்களச் சட்டம் வந்தபோது மொழியுரிமைக்காகவும் போர்க்கருவி ஏந்தியது ஈழத்தமிழினம். எங்கள் நிலமும் எங்கள் மொழியும் எங்கள் உரிமை என்று எங்கள் கைகளிலிருந்த கருவிகளும் எதிரிகளை வீழ்த்தின. ஆயினும் கருவிகள் பேசாநிலைக்கு கொண்டுவரப்பட்டபோது, அந்த மொழியையும் உரிமையையும் காப்பதற்காக நாம் என்ன முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறோம்? சாயிபாபாக்களுக்கும் ஐயப்பனுக்கும் அனுமானுக்கும் முன்னால் நின்றுகொண்டு பிராமணனின் வாயிலிருந்து வரும் சமசுக்கிருதத்தை புனிதத்தின் மொழியாக்கி, அவனின் கால்களில் விழுந்து எழுகையில் இடையிலிருந்த அறுவை (வேட்டி) காணாமலாக்கப்பட்டிருப்பதைக் நோக்க தவறிக்கொண்டிருக்கிறோம். மொழி என்பது வெறும் தொடர்பாடலுக்கானது அல்ல. அதன் ஒற்றைப்பண்பாடு என்பது அந்த இனத்தின் வாழ்வியல் தொடர்ச்சியாலமைந்தது. வாழ்வியல் தொடர்ச்சி அறுபடும்போது அந்த மொழியின் இருப்பை இழப்பதற்கான அல்லது அதன் மீது கேள்வி எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மொழியின் அரசியல் தெரிந்த எதிரிகள் நன்கு அறிவார்கள். தமிழினத்திற்கெதிரான போரென்பது வாழ்வியலின் தொடர்ச்சியை அறுப்பதனூடே அல்லது அந்தத் தொடர்ச்சியினுள் ஊடுருவுவதனூடே மொழியையும் மொழி அழிப்பினூடாக இனத்தையும் அழிப்பதென்பதே ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றைப் பண்பாடு என்ற வல்லாதிக்க அரசியலின் நோக்கம்.

இனம் அழிந்துவிடும் என்று தோன்றினால் உடனடியாக அந்த அழிப்புக்கு எதிராக அணியமாகிவிடும் என்ற விடயத்தை நன்றாக உணர்ந்துகொண்ட வல்லாதிக்கம், மக்களின் அணியமாதலைத் தடுக்கும் வன்சுவராக மதம் என்பதை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றது. கண்ணுக்குப் புலனாகாத அந்தச் சுவர் மெல்ல மெல்ல வாழ்வியல் தொடர்ச்சியை அறுத்து, வாழ்வியல் தொடர்ச்சியாக வேறொரு போலியை உள்நுழைத்துக்கொண்டிருக்கின்றது. பிறப்பு முதல் இறப்பு வரையும் வழிபாட்டிடத்திலிருந்து அடுப்படி வரைக்கும் அந்த மதச்சுவர் ஊடுருவியுள்ளது. உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் வாழ்வியல் தொடர்ச்சியை அறுத்திருக்கும் மத வன்வளைப்புக்கு எதிராக குரல்கொடுக்கவேண்டிய மக்களின் குரல்களை பொருள்புரியாத சமசுக்கிருத மந்திரங்கள் நெரித்துக்கொண்டிருக்கின்றன. அந்த மந்திரக்குரல்களை அறுப்பதற்கான ஒரே கருவி எம்மிடமிருக்கும் மொழிதான்.

மொழியின் திண்ம வடிவமான படைப்புகள் எப்போதும் ஒற்றைப்பொருளில் படைக்கப்படுவதில்லை. அவற்றின் வடிவம் மொழியின் பல்தளங்களையும் உள்ளடக்கங்கள் மக்களின் இயங்கியலையும் சுட்டிநிற்பவை. மொழியில் படைப்பதால் மட்டுமே அவை மொழியைக் காக்கும் என்பது பொருளில்லை. அதன் பேசுபொருள் அந்த மொழியின் தொடர்ச்சியையும் அந்தமொழியின் இருப்பான இனத்தையும் பேசுவதாக இருக்கவேண்டும். ஆனால், பின்நவீனத்துவம் பேசும்படைப்பாளர்கள் மொழியினை வெறும் ஊடகமாகப் பயன்படுத்தி, அந்த மொழியின் தொடர்ச்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழில் பேசுபவர்களாகவோ, ஏசுபவர்களாகவோ, உரையாடுபவர்களாகவோ, வாதுரைப்பவர்களாகவோ, சொல்பவர்களாகவோ, செப்புபவர்களாகவோ, கூறுபவர்களாகவோ, நவில்பவர்களாகவோ, இயம்புபவர்களாகவோ, பறைபவர்களாகவோ, சாற்றுபவர்களாகவோ, விளம்புபவர்களாகவோ, ஓதுபவர்களாகவோ அன்றி, தமிழில் ‘சம்பாசிக்கின்றவர்களாக’ இருக்கின்றார்கள். தன்னையும் காத்து, தன் இனத்தையும் காக்கவேண்டிய தேவை தமிழுக்கு இருக்கின்றது.

ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்க்க முடியாமலிருப்பதற்காக தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் வரவேண்டும் என்று கூறுகிறார்கள். உயிரும் மெய்யுமாகி தொல்காப்பிய இலக்கணம் கூறும் வரைமுறைக்கேற்ப இருக்கும் செம்மொழி போதாமையாக இருக்கின்றது என்ற போலிக் கருத்துருவாக்கத்தை திணிக்க முயன்றுகொண்டிருக்கின்றனர். மேற்கின் சொற்களையும் பெயர்களையும் மொழிபெயர்ப்பதற்கு தமிழில் சொற்கள் இல்லை என்று கூறி சமசுக்கிருதச்சொற்களை உட்புகுத்துவதென்பது பலமொழிகளுக்கான தாயாக இருந்து வேர்ச்சொற்களைக்கொடுத்த மொழிக்கு இழுக்காகும். தமிழ்மொழி என்பது வெறும் மொழி அல்ல. அது வாழ்வியல். தமிழ் ஒரு அரசியல். தமிழ் என்பது மொழிகளின் தாய்மொழி. தமிழ் என்பது அறிவியல்.  தமிழ் என்பது பண்பாடு.

மாந்தனது வாழ்வியல் தொடர்ச்சியும் அவனது நடத்தையும் மொழியின் பயன்பாடும் இணையும் இடத்தில் மாந்தனது வெளிப்பாட்டு இயலுமைக்கு ஏற்றவகையில் மொழியானது பல வடிவங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. வடிவமென்பது மொழியின் தொடர்ச்சியை பேண்தகைமையாக்கும் ஒரு முறைமையாக இருக்கின்றமையால், அந்த வடிவங்களிலும், வடிவ ஊடுருவல்களிலும் மொழியின் சிதைப்பு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. மொழி வன்வளைப்பாளர்கள் ஊடுருவக்கூடிய இடமாகவும் வடிவமே காணப்படுகின்றது. சில வடிவங்கள் உள்நுழைக்கப்பட்டு, அவை அந்த மொழிக்குரிய இலக்கண விதிகளாக கருதப்பட்டு, அந்த இலக்கண விதிகளிலிருந்து அணுகி குறிப்பிட்ட படைப்புகளை படைப்புகளே அல்ல என்று கூறுமளவிற்கு அந்த வடிவப்போலிகள் உள்நுழைந்திருக்கின்றன. தமிழானது தொல்காப்பியத்தின்வழியாக படைப்புகளிற்கான இலக்கணங்களை அன்றே கூறிச்சென்றிருக்கின்றது. வல்லாண்மை அரசியலுக்கும் இன விடுதலை அரசியலுக்குமான விடுதலைப்போராட்டங்களில் மொழிகளைக் காணாமலாக்கச்செய்வதென்பது வல்லாண்மையாளர்களின் உத்தி. அந்த உத்தியிலே பல மொழிகளும் நடுவனிலிருந்து நீக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, இறுதியில் அந்த இனங்களும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. மொழி என்ற நடுவனிலிருந்தே தேசம், மரபு, பண்பாடு போன்ற இனவியல்கூறுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இனமொன்று தனது விடுதலைக்காகப் போராடும்போதோ அல்லது தன்னை ஒரு மரபுவழித்தேசிய இனமாக நிலைநிறுத்திக்கொள்வதற்கோ மொழி என்னும் சுடுகலனே களத்தில் முன்வரிசையில் அணியமாகி நிற்கும்.

ஒரு தனியனுடைய மொழியும் அவனது மொழியுரிமையும் அதிகாரவெளிகளுக்குள் அடக்கப்படுவதனூடாக அவனது வாழ்வியல் உரிமை மறுக்கப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்களமொழியைப் பேசிக்கொண்டு தமிழ் பண்பாட்டுடன் வாழும் பல ஊர்கள் இருக்கின்றன. மொழி என்பது அவர்களுக்கு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டும் அறிமுகமாகி, இன்று அது ஒரு பண்பாட்டு ஊடறுப்பிற்கானதாக மாறியிருக்கின்றது. சிங்களம் பேசும் தமிழர்களின் பண்பாடும் அவர்களது வாழ்வியலும் இன்று எவ்வாறு மடைமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதனை அவர்களது வாழ்வியல் மாற்றங்களிலிருந்து ஆய்வுசெய்யப்படவேண்டியவை. மொழி என்பது வெறும் தொடர்பாடல்தானே அதை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று கூறிக்கொண்டு, பன்மைத்துவ சமூகங்கள் என்ற பெயரில் இன அடையாளங்களை அழிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கும் வல்லாதிக்க அரசியலின் முகவர்கள் இனவழிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாதத்தின் இன அரசியலுக்குள் ஆயிரமாயிரம் மக்களையும் போராளிகளையும் தொலைத்துவிட்டு நிற்கும் எங்களுக்கு எங்கள் மக்கள் மெள்ள மெள்ள சிங்களவர்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையைக் கடந்துசெல்ல இயலாது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வாழப்போகும் மொழியின் உரிமை என்பது பேரினவாதம் தருவதல்ல. அதனை நாங்கள் உணருவது.

உரிமை மறுக்கப்படும்போது அந்த உரிமைக்கு எதிரான குரல்கள் மறுக்கப்பட்டிருப்பதனையும் அரச அதிகாரம் உறுதிசெய்துகொண்டே இருக்கும். அரச இயந்திரத்தின் கூலிகளாக மாற்றப்பட்ட ஊடகங்களும்  மொழியின் உரிமை என்ற விடயத்தைக் கண்டுகொள்வதாகவும் இல்லை. பௌத்த சிங்கள நாடு என்ற சிங்கள பேரினவாத வன்வளைப்பிற்குள் தமிழ்மொழி தொலைந்துபோகாதிருக்க வேண்டுமெனில், மக்கள் தம் மொழிகுறித்த பார்வையை இன்னமும் அகலிப்பவர்களாக இருத்தல்வேண்டும். ஓடியோடி பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை பெற்றோர்கள் தமிழ்மொழி கற்பிப்பதில் காண்பிப்பதில்லை. தமிழ் என்பது வெறும் தொடர்பாடலுக்கானது என்றால் ஆங்கிலமூலம் கற்பதில் பிள்ளைகளுக்கு சிக்கல் ஏற்படாது. ஆனால் அது வாழ்வியலாக, சிந்தனை மரபாக இருப்பதனாலேயே பிள்ளைகள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் விடையளிக்கிறார்கள். இங்கே நாங்கள் மாற்றியமைத்திருப்பது வெற்றுத்தாள்களை நிரப்பும் மொழியின் வரிவடிவங்களேயன்றி, அறிவியலின் சிந்தனை மரபை அல்ல.

தமிழ் அடையாளம் எது என்ற கேள்விக்கு இந்து அடையாளங்களைத் தமிழடையாளங்களாகக் காட்டவேண்டிய அளவிற்கு மதத்தினுள் இனத்தையும் மொழியையும் தொலைத்திருக்கின்றோம். உருவாக்கப்பட்ட அந்த தமிழடையாள மாயைகளால் கத்தோலிக்கம் போன்ற பிற மதங்களை பின்பற்றும் தமிழர்கள் தமக்கென வேறு அடையாளங்களைப் பொருத்திக்கொண்டார்கள். இந்துமதத்தின் உத்தியும் அதுதான். தமிழடையாளங்களை இந்துமதத்தினுள் புகுத்தி அவற்றை இந்து அடையாளங்களாக மாற்றி, மக்களை மதங்களாகப் பிரித்தது. சமசுக்கிருதமொழியின் தூய்மையாக்கத்தினுள் தமிழின் வழிபாட்டு முறைகள் அமிழ்த்தப்பட்டன. இனமாக அடையாளங்காட்டக்கூடிய குறிகாட்டிகளுள் ஒன்றான தமிழர்களின் பெயர்கள் மெதுமெதுவாக சமசுக்கிருதமாக்கப்பட்டன. கத்தோலிக்கர்களின் பெயர்கள் வெள்ளைக்காரப்பெயர்கள் என்று பகுக்கத்தெரிந்த எமக்கு, சமசுக்கிருதத்தின் ஊடுருவலை அறியாத அளவுக்கு மதத்தாலமைந்திருக்கிறோம்.

தமிழில் பெயர் வைப்போம் என்று பலர் இன்று கிளம்பியிருக்கிறார்கள். அண்மையில் கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவர் சமூக வலைத்தளமொன்றில் தமிழில் பெயர்வைத்திருப்பதாக பதிவிட்டிருந்தார். ஆதனை பலரும் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அங்கே பதிவிட்டதில் ஓரிரு பெயர்களைத்தவிர ஏனையவை சமசுக்கிருதத்தை தழுவியவை. இந்துமதம், கிறித்துவ மதம் என்ற பெரும் மத அடையாளங்களைத் தாங்கிக்கொண்ட தமிழர்கள் தமது வாழ்வியலில் மதத்தை முதன்மைப்படுத்தி, மதத்தாலான வாழ்வியல் என்ற போலியான வாழ்வியலொன்றுக்குள் மூழ்கியிருக்கிறார்கள். ஆளடையாளங்கள் முதல் நிலஅடையாளங்கள், ஆவணங்கள் என எல்லாவற்றிலும் சமசுக்கிருதத்தினால் காவுகொள்ளப்பட்டிருக்கின்றன. சிங்களமயமாக்கலையும் பௌத்தமயமாக்கலையும் எதிர்க்கும் எம் இனவுணர்வு சமசுக்கிருதமாக்கல் என்ற பேசுபொருளை கடந்துசெல்கின்றது. கந்தரோடையும் நயினாதீவும் பெயரில்கூட தமிழ் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாங்கள் தான் ஊர்களுக்கும் கோவில்களுக்கும் பிள்ளைகளுக்கும் நாக்கினுள் நுழையாத சமசுக்கிருதப்பெயர்களை உள்வாங்கிக்கொண்டிருக்கிறோம். நிலமிழப்பு என்பது வெறுமனே அதன் பௌதீக அளவை மட்டும் இழப்பதென்பதல்ல. அந்த நிலத்துடனான மொழியையும் இழப்பது தான் நிலமிழப்பு. பிறிதொரு காலத்தில் பல தலைமுறைகள் கடந்துவரப்போகும் எங்கள் இனத்தின் பிள்ளைகள், தம் இனம் வாழ்ந்தார்கள் என்பதற்கான கூறுகளைத் தேடுவதற்கு கடினமாகவே இருக்கும். ஏனெனில் எம் அடையாளங்கள் சமசுக்கிருதங்களாகவே நிலத்தினுள் புதைந்துகொண்டிருக்கின்றன. மதத்தின் காவலர்கள் என தம்மைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணிகள், அந்த சமசுக்கிருதத்தை களையெடுப்பதை தொடங்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். இல்லாவிடின் என்றோ ஒருநாள் தோண்டப்படவிருக்கும் தொல்பொருட்குழிகளில் சமசுக்கிருத எச்சங்களைத்தான் வைத்திருக்கப்போகிறோமா என்று சிந்திக்கவேண்டும்.

எமது அறிவுச்சமூகம் என்ற பெயரை பெயரளவிலேனும் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் தமிழமுதம் என்ற கலை இலக்கிய விழா நிகழ்ந்தது. அவ்விழா சமசுக்கிருத கலப்பு பற்றியோ தமிழைத் தமிழாக பேசவேண்டும் என்ற அடிப்படை அறிவோ இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சமசுக்கிருத சொற்களால் புனையப்பட்டிருந்த பாடலொன்றுக்கு தமிழனாக வளர்ந்திராத உடலொன்று அரங்கில் அசைந்துகொண்டிருந்தது. மாணவர்களுடைய நோக்கமும் ஆர்வமும் செயல்முனைப்பும் பாராட்டுக்குரியதே. ஆனால், சரியான ஒன்றை பிழையாகச் செய்யும்போது, அங்கே நோக்கமும் சேர்த்தே கேள்விக்குள்ளாக்கப்படும். வரும் ஆண்டுகளில் மொழிக்கான விழாவாக முன்னெடுப்பார்கள் என நம்புவோம்.

பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்லாது கல்விசார் முன்னெடுப்புகளிலும் அவைசார்ந்த படைப்புகளிலும் தமிழ்மொழி குறித்த பார்வையைத் தெளிவாக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஆறுமுகநாவலரால் மேற்கொள்ளப்பட்ட ஆகமச் சைவ மீட்டுருவாக்கம் என்ற போர்வையிலான வைதீகமயமாக்கலால் தமிழ்மொழியானது சமசுக்கிருதத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டது. சைவத்தமிழ் என்று மணிப்பிரவாள நடையை உள்ளெடுத்து தமிழினை சைவத்தமிழென ஒடுக்கப்பட்ட தமிழ்மொழி, இன்றுவரையும் ஒடுக்கப்பட்ட அந்நிலையிலிருந்து வெளிவர போராடிக்கொண்டே இருக்கின்றது. யாழ்ப்பாணத் தமிழ் என்ற தூய்மைவாதத்தின்பால் எழுப்பப்பட்ட முரண்களுக்குள் ஒடுங்கிய மொழி இன்னமும் உயிர்ப்பதற்காகப்போராடிக்கொண்டே இருக்கின்றது.

காலனியாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மனநிலையும் மொழிநிலையும் இந்துத்துவ மனநிலையும் தமிழை இன்னமும் கலப்பு மொழியாக வைத்திருப்பதற்கான காரணங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்றன. மொழியின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்புகளுக்கும் அதிகாரங்களுக்கும் பணிந்துபோகாத மொழியைப் பேசும் நாம், மாற்றார் மொழிக்கு கும்பிட்டுக்கொண்டிருக்கின்றோம். நாள்தோறும் வாசிக்கின்ற செய்தித்தாள்கள் முதல் கண்ணில் காண்கின்ற எங்குமே சமசுக்கிருத கலப்பு புரையோடிப்போயிருக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் தமிழைத் தனித்தமிழாக எழுதக்கூடியவர்களாக எல்லோரையும் உருவாக்குதல் வேண்டும். குறிப்பாக ஒலி, ஒளி ஊடகங்களில் தமிழ்மொழியானது அறிவிப்பாளர்களின் வாய்க்குள் வன்புணர்வுக்குள்ளாகிக்கொண்டிருக்கின்றது.

புதிய தலைமுறையொன்று மொழியின் படைப்புவெளிக்குள் நுழைந்திருக்கின்றது. அது மொழியின் வடிவங்களை மட்டுமல்லாமல், உள்ளடக்கங்களையும் மாற்றத்தொடங்கியிருக்கின்றது. மாந்தநேயம் என்ற போர்வையில் நடுநிலை வகிக்கின்றோம் என்று கூறி, மொழியின் அழிப்பு வேலையை அந்த மொழியை வைத்தே நிகழ்த்தத் தொடங்கியிருக்கின்றது.  சிறிது சிறிதாக உள்ளிருந்து அரித்து வேரை அழித்துவிடக்கூடிய புற்றுநோய். புற்றுநோய்க்காவிகளாக இயங்கும் அந்த இலக்கியப்போலிகள் மொழியாலமைந்த உணர்வுகளையும் கூட இனவெறி என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அடக்கிவிட்டு, நடுவுநிலைமை என்ற மொழிநீக்கல் செயலுக்குள் சென்றுவிடுகின்றார்கள். மொழிநீக்கம் என்பது எப்போதும் வன்முறையாக இருப்பதுடன் வன்முறையாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் இணைந்த எங்கள் வாழ்வும் மொழியின் வெளியெங்கும் படைப்புகளாக இருந்தாலும், அந்த வாழ்வியலையும் அதுசார்ந்த படைப்புகளையும் தங்கள் சொந்த புகழ்வெளிச்சங்களுக்காக மடைமாற்றுகின்ற படைப்புப்போலிகளை எங்கள் நாட்குறிப்புகளை எழுத நாங்கள் அனுமதிக்கக்கூடாது. நாளைய வரலாறுகளுக்கும் தொல்லியல் ஆய்வுகளுக்கும் சான்றுகளாக அமையவுள்ள இன்றைய படைப்புகள் இன்றைய வரலாற்றினை எழுதத் தகுதியுடையவர்களாலேயே எழுதப்படவேண்டும். இனத்திற்கானோர் சுடுகலன் ஏந்த சொல்வீரர்கள் எழுதுகலன்களை தம் கைகளில் எடுத்துக்கொண்டார்கள். தேசியத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அந்த எழுதுகலன்கள் தன் இனம் நோக்கியே திரும்பத் தொடங்கியிருக்கின்றன. இனத்துக்காக சுடுகலன்களை ஏந்தியவர்களின் முதுகில் இன்று இரட்டைச்சுமை ஏறியுள்ளது. ஒன்று அறிவிக்கப்படாத போரினால் நிகழ்த்தப்படும் மொழி ஒடுக்குமுறைகளிலிருந்து மொழியைக் காப்பது இரண்டாவது அதே மொழியை வைத்து மொழியை வேரறுக்கும் ஊடறுத்தல்களை அறுப்பது. சாவினை கழுத்திலேயே தாங்கிய வீரர்கள் அவர்களின் இரட்டை ஆளுமையினால் மொழியைக் காக்கும் வேலையையும் செய்யத்தொடங்கிவிட்டனர். அதிகாரத்தின் வேலிக்குள் பேசாநிலையில் இருந்துகொண்டே, சுடுகலனின் முனை குரல்வளையில் நீண்டாலும்கூட விடுதலைக்காக விதையாகிப்போனோரின் கனவுகளுக்காகவாவது, எமக்கான மொழியை நாம் காக்கவேண்டும். தமிழை பிழையாக எழுதும் அரச இயந்திரத்தினை எதிர்ப்பவர்கள் கூட, தாங்கள் செய்யும் சமசுக்கிருத ஊடறுப்பினை பேசாப்பொருளாக வைத்திருக்கிறார்கள். அந்தப்பேசாப்பொருட்களைப் பேசவைத்து, மொழி என்பது மொழிசார் குழுமத்திற்கான அரசியல், கலை, வரலாறு, குமுக நிலை போன்றவற்றை உள்ளடக்கிய பண்பாட்டுத்தளமாகவும் அடையாளமாகவும் இயங்கும் என்பதனை பதிவுசெய்யவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. ‘ஒரு இனத்தை அழிக்கவேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்துவிடு’ என்ற வல்லாண்மை அரசியலின் கோட்பாடுகளுள் சிக்காது தமிழையும் இனத்தையும் காக்க வேண்டுமெனில் ‘தமிழென ஒன்றும் தனித்தமிழென ஒன்றும் இருவேறு மொழிகள் அல்ல. தமிழதுதானே தனித்தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை’ என்ற தேவநேயப்பாவாணரின் மொழிக்காப்புக் கருத்தியலுக்கமைவாக தமிழைத் தமிழில் பேசும் தமிழர்களாவோம். மொழிக்காப்புப்பேணுவதென்பது வெறுமனே மொழியைச் செழுமையாக்குவது என்று பொருளாகாது. தமிழ் தனக்கும் தன் இனத்தும் எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும். இனத்துக்கான அரசியலொன்று எழுவதை மொழியால் உறுதியளிக்க வேண்டும்.

-செல்வி-

2020:01:25

 

 

 

 7,305 total views,  3 views today

(Visited 253 times, 1 visits today)