புளுகு மூட்டைகளை அள்ளியேற்றிக் கட்டப்படும் போலி நிழலுரு பாராளுமன்றத் தேர்தலின் முன்பே புழுத்துப்போகாதா? -முத்துச்செழியன் –

கோத்தாபய இராயபக்ச அரசுக்கட்டிலிலேறிய நாள் முதல் ஊழலை ஒழிக்க வந்த ஆளுமையோன், துறைசார் ஆளுமைகளை பொருத்தமான அரச உயர்பதவிகளில் அமர்த்தி நாட்டை வினைத்திறனுடன் நேர்த்தியாக ஆளவந்தோன், அரசியல் கலக்காத இராணுவத் தன்மையுடன் கட்டளைகளை வழங்கிப் பெரும் மாற்றங்களை உண்டு செய்ய வந்த ஆற்றலாளன், எதற்கும் தலைசாய்க்காமல் எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே செய்யும் நேர்த்தியாளன், அபிவிருத்தி முதல் அத்தனை பணிகளிலும் பிறரின் தலையீட்டைத் தவிர்த்து தேசியமயமாக அத்தனையையும் முன்னகர்த்த இருக்கும் “சுதேசி”, இலங்கைத்தீவில் பாலாறும் தேனாறும் ஓடச் செய்யப் போகும் மீட்பன் போன்று எண்ணிலடங்காத புளுகு மூட்டைகள் செய்திகளாகத் திரிக்கப்பட்டுச் செய்தித்தாள்களினதும் இணையத்தளங்களினதும் முன்பக்கத்தைக் கொட்டையெழுத்தளவில் நிரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்தப் புளுகு மூட்டைகள் இன்னும் எத்தனை நாட்களில் புழுத்துப் போகும் என்பது நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் தாக்கத்தைச் செலுத்த வல்லது. உண்மையில், கோத்தாபயவின் இந்த கிங்கிணியாட்டம் பொதுத்தேர்தலை இலக்குவைத்த அரசியல் நகர்வாகவே இருக்கும்.

ஏனெனில் சயித் பிரேமதாசவினை தோற்கடித்து இராயபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் ஏறுவதற்கு வெற்றிகரமான தெரிவு வேறெதுவுமில்லை என்ற நிலையிலேயே மகிந்த இராயபக்சவின் ஆதரவுத்தளத்தை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட “பொதுசன பெரமுன” கட்சியாலும் இராயபக்ச குடும்பத்தினாலும் கோத்தாபய இராயபக்ச சனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். ஐந்தாண்டுகளாக இராயபக்ச குடும்பம் ஆட்சியிலில்லாததால் காய்ந்து போயிருக்கும் அவர்களின் ஆதரவாளர்களும் அரசியலாளர்களும் காத்திருந்து வந்த இந்த ஆட்சியில் தம்மை வளப்படுத்திக்கொள்ளவே செய்வர். அத்துடன், இந்த ஆட்சிக் காலத்தில் வீழ்த்தப்பட முடியாத அல்லது மேற்கினால் வீழ்த்தப்பட்டாலும் மீண்டெழக்கூடிய பொருண்மிய பலத்தை தமது பிள்ளைகளுக்கும், மக்கள் மருமக்களுக்கும் ஏற்படுத்தி அடுத்த ஐம்பது ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திற்கான அரச குடும்பமாக தமது குடும்பத்தை மாற்ற வேண்டுமென்ற வேட்கையில் மகிந்தவின் மனைவி சிரந்தி ராயபக்ச இருக்கிறார். எனவே, ஒருநாளில் சாமியாடித் தூயவானாக கோத்தாபய மாறியதாக ஒரு கற்பனையைச் செய்தால் கூட, இவர்கள் அனைவரையும் பகைத்துக்கொண்டு அவர் ஏற்படுத்த முனையும் தோற்றப்பாட்டை நடைமுறையில் செயற்படுத்தவியலாது.

அத்துடன் பொதுத்தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றும் தேர்தலின் பின்பு பணம் கொடுத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் அல்லது சில கட்சிகளை காசு கொடுத்து வாங்கியும் 2/3 பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவது தான் கோத்தாபயவின் இலக்கு. ஏனெனில், நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தி எல்லையற்றதாக முன்பிருந்த அதிகாரத்தை மட்டுப்படுத்தி பிரதமருக்கும் பாராளுமன்ற அதிகாரத்திற்கும் வலுச் சேர்க்கும் 19 ஆம் திருத்தச் சட்டத்தினை இல்லாதாக்கி முழுமையான நிறைவேற்றதிகாரத்தைச் சுவைக்கவே இராணுவப் பாணி அல்லது அரை இராணுவப் பாணி ஆட்சிமுறையை கோத்தபாய இராயபக்ச விரும்புவார். ஆனால், இது அவரின் அண்ணன் மகிந்த இராயபக்சவிற்கு இப்போதைக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே, மகிந்தவினை மீறி கோத்தாபய தனது அதிகார நலனுக்காக எதையும் செய்யத் துணியார். ஏனெனில், அவர் முற்று முழுதாக மகிந்தவின் ஆதரவுத்தளத்திற் கட்டப்பட்ட “பொதுசன பெரமுன”மூலமே ஆட்சிக்கு வந்தவர். எனவே, இவற்றையெல்லாம் மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. எனவே தான் தனக்கான ஆதரவுத்தளத்தைக் கட்ட திடீர் திடீரென அரச அலுவலகங்கள், மருத்துவமனை, செயலகம், திணைக்களம் என ஓடிக் களவேலையை களைப்பில்லாமல் பார்ப்பதாக ஒரு பாசாங்கைச் செய்கிறார். அவர் போடும் வேடங்களில் மித மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்துவது அவர் போடும் “சுதேசி” வேடம் என்பதாகும்.

அள்ளுகொள்ளையாக வாக்குறுதிகளை உலகிற்கு வழங்கி ஒட்டுமொத்த உலக நாடுகளின் உதவிகளைப் பெற்றே தமது ஆற்றல்வளத்திற்கு மேலாகச் சென்று தமிழ் மக்களைப் போரில் சிறிலங்கா அரசு வென்றது. உண்மையில் படைத்துறை அடிப்படையிலும் மிகத் திறமையான திட்டமிடல்களினாலும் மக்களுக்கேயுரிய தமிழீழ அரச கட்டமைப்புகளினாலும் தமிழீழம் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசினால் கனவிலும் வெற்றிகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே மாவீரர்களின் ஈகத்தாலும் மக்களின் பங்களிப்பாலும் நிமிர்ந்து நின்றது. எனவே, தமிழீழ மக்களைக் கொன்று குவித்துத் தமிழீழ தேசத்தை அழித்தொழிக்க வல்ல தீய ஆற்றல்களைப் பெற தனது ஆற்றலுக்கு மீறி சிறிலங்கா அரசு உலகெங்கும் அலைந்து உலக வல்லாண்மையாளரிடம் ஒத்துழைப்புப் பெற்றது. தமிழர்களின் புரட்சிகரத் தலைமையையும் அதனால் காப்பாற்றப்பட்டு வந்த தமிழர்களின் தமிழீழ தேச அரசையும் அழிப்பதற்காக உலகெங்கும் ஒத்துழைப்புத் தேடி சிறிலங்கா அரசினால் போடப்பட்ட ஒப்பந்தங்களும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் எண்ணிலடங்காதவை. இவ்வாறாக, தமிழர்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்துத் தமிழர்களின் தேச அரசை அழித்தமையுடன் உண்மையில் சிறிலங்காவும் இனி மேல் மீள முடியாத பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகிவிட்டது. தனது இறைமையைத் தானே கூறுபோட்டு விற்றுத்தான் தனது வலுவினால் அழிக்க முடியாத தமிழீழ தேச அரசினை சிங்களம் தமிழின இனப்படுகொலைப் போரின் மூலம் அழித்தது. போர்க் கருவிகளை விற்று ஈட்டிய போர்ப் பொருண்மியம் ஒரு புறமிருக்க போரின் பின்பான மீள்கட்டுமான வேலைகளில் தமக்கான ஒப்பந்தங்கள் என பலவற்றை பட்டியற்படுத்திய பின்பே தமிழர் தேசத்தைப் போரில் ஒடுக்க உலக நாடுகள் முன்வந்தன. எனவே, போரின் பின்பாக அவர்கள் தமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவிற்கு உலக நாடுகள் அழுத்தங்கள் கொடுக்கின்றன. அப்படியான அழுத்தம் வழங்கும் செயற்பாட்டில் பகடைக்காயாக பயன்படுவதே தமிழர்களின் ஜெனிவா அரசியல். இவ்வாறாக உலகத்திற்கு ஒப்பந்தங்களைப் பிரித்துக் கொடுப்பதிலேயே தலையைப் பிய்த்துக்கொண்டு அலைய வேண்டிய நிலையில் தான் சிறிலங்கா தேசத்தின் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இதனால் சிறிலங்காவின் பாராளுமன்றில் இனி எப்போதும் கூச்சல்களும் குழப்பங்களும் மட்டுமே எஞ்சியிருக்கும். தமிழர்களைப் போரில் வென்று தமிழர் தேசத்தை முற்றாக சிங்கள தேசம் வன்கவர்ந்த போதே சிங்களதேசம் தனது இறைமையையும் விற்றுச் சுட்டு முடிந்தாயிற்று. உண்மையில், தமிழர்களைப் போரில் தோற்கடித்த அன்றே, சிங்களதேசம் உலக வல்லாண்மையாளர்களினால் தளைப்பட்டுவிட்டதென்பதோடு இனி அதிலிருந்து மீளுவதென்பது தமிழர்தேசம் தன்னாட்சி உரிமை பெறும் வரையில் வாய்ப்பற்றதொன்றாகவே இருக்கும் என்ற புரிதல் எமக்குத் தேவை. இவ்வளவு காலமும் தமிழர்கள் சிந்திய குருதியும் வியர்வையும் வீணாகிப்போனதாக மொட்டையாகச் சிந்திக்காது சிங்களதேசமும் தனது இறைமையை இழந்துதான் நிற்கிறதே தவிர அது பலம்பெற்று வெல்லப்பட முடியாத ஒன்றாக இருப்பதாகச் சொல்வது வெறும் புரட்டே.

கோத்தாபயவும் கோத்தாபயவினால் வழிநடத்தப்படப் போகும் சிங்கள பௌத்த பேரினவாத மனநிலையில் கட்டப்பட்டுக் கட்டுண்டு கிடக்கும் சிங்களதேசமும் வெற்றிகொள்ளமுடியாததொன்று என்ற நிழலுரு அண்டப்புளுகாகக் கட்டியமைக்கப்படுகிறது. இதில் பணத்திற்கு விலை போன இழிநிலை இதழியல் செய்யும் தமிழ் ஊடகங்களும் பெரும்பங்காற்றுகின்றன. உண்மையில் கோத்தாபய இராயபக்ச தமிழீழ நிழலரசின் நிருவாக நேர்த்தியையும் செயற்றினையும் பார்த்தும் கேள்விப்பட்டும் வியந்துபோன ஒருவராகவே இருந்தார். கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போர்க்கருவிகள் கொள்வனவு அடங்கலான பன்னாட்டு அலுவல்களைத் தலைமேற்றாங்கிய கே.பி.பத்மநாதன் போன்றவர்களிடமிருந்தும் சரண்டைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் எஞ்சிய ஆளுமைகளை உசாவியதிலிருந்தும் கிடைத்த தமிழீழ நிழலரசின் நிருவாக நேர்த்தி பற்றிய விடயங்களினால் வியப்படைந்த கோத்தாபய கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக அப்படியொரு நிருவாகமுறையைச் செய்து வெறெவரும் ஊழலோ அல்லது முறைகேடுகளோ செய்ய முடியாத ஆட்சி நிருவாக முறையை உருவாக்க விரும்பினார். தானும் தனது குடும்பமும் மட்டும் தான் சுருட்டிக்கொள்ள வேண்டுமே தவிர வேறெவரும் எதுவும் செய்யக் கூடாது என்பதே கோத்தாபயவின் நிருவாகப் பண்புநிலையென்பதை அவரது கடந்தகாலங்களை மீட்டிக்கொள்பவர்களுக்கு இலகுவில் புரியும்.

அதனடிப்படையில் கோத்தாபாயவினைப் பற்றிய அரசியற் செய்திகளை மீட்டுப் பார்ப்பது ஊடகங்களின் பொய்மைகளுக்குள் மாட்டுப்பட்டு நினைவிழந்து கிடப்போரை மீட்டெடுக்கத் தேவையானது என்பதால் அது குறித்து கீழ்வரும் பத்திகளில் நோக்கலாம்.

கோத்தாபயவின் தமிழினவெறுப்புக் கருத்துகளும் நடவடிக்கைகளும்

பிரித்தானியக் குடியுரிமை பெற்றவரும் தமிழீழ நிழலரசிற்கு வந்து போரினால் பிரித்தானியா செல்லமுடியாத சூழலில் வன்னி மண்ணில் இருந்து மருத்துவ உதவிகளைப் புரிந்துவந்தவரும் சனல்-4 இனால் வெளியிடப்பட்ட “கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள் அடங்கலான மாந்தகுலத்திற்கு எதிரான வெறியாட்டங்கள் குறித்துச் சாட்சியமளித்தவருமான தமிழ்வாணி என்பவரைப் பற்றியும் அவரது கருத்துகள் தொடர்பாகவும் “Headlines Today” என்ற ஊடகத்திற்குக் கருத்துரைக்கும் போது “தமிழ்வாணி ஏனையவர்களிலிருந்து வேறுபடும் தன்மையிலிருப்பதால் இராணுவத்தினருக்குக் கவர்ச்சியை உண்டு பண்ணும் வகையில் உள்ளார். அவர் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரா என நான் அறிய வேண்டும்” என எள்ளலுடன் ஒழுக்கக்கேடாகவும் கீழ்த்தரமாகவும் பதிலுறுத்தித் தான் 20 ஆண்டுகள் சிங்களப்படைகளில் பணியாற்றிய கொடுங்கோலன் என்பதை உறுதிசெய்துள்ளார் கோத்தாபய. இவர் தற்போது தான் ஒழுக்கமானவன் எனக் கூறி பெருமிதம் செய்கிறார் என்பது காலக் கொடுமையே.

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு” என்ற மலையகத்தைத் தளமாகக் கொண்டு செயற்படும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை “பறைத் தமிழா (Para Demala)” என ஒருமையில் இழிவுபடுத்தி இனவெறுப்புணர்வோடும் கோத்தாபயவின் அண்ணன் பசில் இராயபக்ச சிங்களத் திமிரோடும் ஏசியதானால் 2007 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக அதுவரை மகிந்த இராயபக்சவுக்கு வால்பிடித்துத் திரிந்து பிழைப்புவாத அரசியல் செய்து வந்த “இலங்கைத் தொழ்ழிலாளர் காங்கிரசு” அறிவித்தது. இதுவே இராயபக்ச குடும்பத்தினரின் தமிழர் குறித்த வீட்டு மொழியாக இருக்கும். எனவே, இம்முறை கோத்தாபயவிற்கு விழுந்தடித்து வாக்குச் சேர்த்த பிறப்பால் தமிழரான இழிந்தோரின் நிலையென்ன என்பதை அவர்கள் உணர்வார்கள். இதை உணர்ந்தும் பழகிப் போய் நக்கிப் பிழைப்பதை இன்னும் தொடர்வோர் வடக்கிலும் கிழக்கிலும் குறுநில மன்னர்களாக கோத்தாபயவினால் நியமிக்கப்படுவார்கள்.

மருத்துவத் தேவைக்காக கொழும்பில் தங்கியிருந்த முதியவர்கள், குழந்தைப் பேறிற்கான மருத்துவ உதவிகளுக்காக வந்து கொழும்பில் தங்கியிருந்த தாய்மார்கள், கல்வி, தேர்வுகள் என்பனவற்றிற்காக வந்து தங்கியிருந்தோர் அடங்கலாக கொழும்பில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களை 24 மணிநேரத்தில் வெளியேறும் படி 2007 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் காலக்கெடு விதித்து வலுக்கட்டாயமாக பேருந்தில் வவுனியாவிற்கு அனுப்பி வைத்தவர் அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபயவே.

சிங்களப் படைத்தலைமையகத்தில் போரின் நிலைமை குறித்துப் பேசுகையில் வெற்றிப் பெருமிதத்துடன் “பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும். ஆண்கள் குருதியினால் இந்துசமுத்திரம் சிவப்பாகட்டும்” என கோத்தாபய கூறியதாக சிங்கள ஊடகர்கள் மூலமாக செய்தி வெளிவந்து அன்றைய இணையத்தளங்களிலெல்லாம் செய்தியாகி தமிழர்களை ஆற்றொணாத் துன்பத்திற்குள்ளாக்கியமையை யாரும் மறக்க மாட்டார்கள்.

வன்னியில் பணியாற்றிய மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத்துறை அரச பணியாளர்கள் அனைவரும் இரண்டகர்கள் எனக் கூறி குருதி வெள்ளத்தில் கிடந்த தமிழர்களுக்கு மருத்துவம் பார்ப்பது இரண்டகம் என்ற ஒரு புதுவிதியை உலகக் கொடுங்கோலர்களுக்கான செயற்பாட்டுக் கோவைக்குள் செருகி விட்டவர் இந்த கோத்தாபய இராயபக்சவே.

போரின் பின்பான காலத்தில் இராணுவத்தினைத் தொடர்ந்து தமிழர் தாயகங்களில் பெரும் எண்ணிக்கையில் நிலைநிறுத்துவதை நியாயப்படுத்தவும் தமிழர்களை ஒரு அச்சமான பதட்டமான உளவியல் போக்கில் தொடர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் அடிமைத்தளைக்குள் வாழத் தலைப்பட்டுப் பழக்கப்பட்டவர்களாகவும் மாற்றும் இனவழிப்பு உளவியல் உத்தியாக “கிரிஸ் பூதம்” என்ற பெயரில் இராணுவத்தினரை இறக்கி பெண்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தது அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபயவே.

இதனாலே, தான் தலைமை தாங்கும் “பொதுபல சேனா” போன்ற சிங்கள பௌத்த பேரினவாத வெறியாட்ட அமைப்புகளின் செயற்பாடுகளுக்கான தேவை கோத்தாபாயவின் ஆட்சியில் இல்லை என்று கூறுவதன் மூலம் அந்த பேரினவாத வெறியாட்டங்களையெல்லாம் கோத்தாபயவே பார்த்துக்கொள்வார் என்ற பொருளில் ஞானசேர தேரர் கூறியுள்ளார்.

ஊடகங்களும் கோத்தாபயவும்

முழுமையான நிறைவேற்றதிகாரத்தை அனுபவிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள் கிட்லரின் நடைமுறைகளை ஊன்றிக் கற்பர். அந்த வகையில் ஊடகங்களை எப்படித் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென்ற கலையை கிட்லரின் ஊடகங்களின் மீதான அதிரடி நடவடிக்கைகள் பற்றி அறிந்து அதனை நடைமுறைப்படுத்தி வந்தவர் கோத்தாபய.

இறுதிக்கட்டப் போர் உக்கிரமாக நடைபெற்று வந்த காலத்தில் “Sirasa TV” இனைக் கைக்குண்டுகள் வீசித் தாக்கி விட்டு கழிவிரக்க அரசியல் செய்து மக்களின் மனதில் இடம்பிடிக்கவும் காப்புறுதிப் பயனைப் பெறவும் தம்மைத் தாமே “Sirasa TV” தாக்கி இருக்கிறது என எள்ளலாக கோத்தாபய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கோத்தாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது 17 ஊடகர்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன் பலர் நாட்டை விட்டோடித் தப்பினர். இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த காலத்திலேயே ஊடகர்களை அதிகம் சொல்லும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா மூன்றாமிடம் பிடித்ததாக ஜெனிவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு ஆய்வு நிறுவகம் தகவல் வெளியிட்டது.

தனக்கு மிக நெருக்கமான ஓய்வுபெற்ற இராணுவ மேஜர். ஜெனரல் சுனில் சில்வா என்பவரை 2008 ஆம் ஆண்டில் ரூபாவாகினியின் நிருவாகத்தில் முதன்மைப் பொறுப்பில் அமர்த்தியமை போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊடகங்களை இராணுவக் கட்டுப்பாட்டிற்கெடுத்து தனது முழு ஆளுகையினை ஊடகங்கள் மீது கோத்தாபய வைத்திருந்தார்.

தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது இராணுவம் தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளில் கோத்தாபய பாரிய ஊழல்களில் ஈடுபட்டு வந்ததாக 2006 ஆம் ஆண்டிலிருந்து “சண்டே லீடர்” லசந்த விக்கிரமதுங்கவும் சூரியாராச்சியும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர். லசந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார், சூரியாராச்சி மர்மமான முறையில் இறந்தார்.

கோத்தாபய மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்

தூதரகத் தேவைக்காக அமெரிக்காவின் “லொஸ் எஞ்சலிஸ்” என்ற இடத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டை அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வசதியாக வசிப்பதற்காகக் கோத்தாபய கொடுத்துள்ளார். இதனால் பல மில்லியன் உரூபாய்கள் நாட்டிற்கு இழப்பாகியுள்ளது

“இராயபக்ச விளையாட்டரங்கு” கட்டிய காலத்தில் அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சொத்துச் சுருட்டிய குற்றச்சாட்டு கோத்தாபய மீது உண்டு

முப்படைக்குமான போர்க்கருவிகள் கொள்வனவு செய்ததில் பலகோடிகளை கோத்தாபய சுருட்டியமைக்கு “இன்டர்போல்” அமைப்பும் சான்றுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முறை கேடாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி (தேசிய அடையாள அட்டை விடயத்தில்) 2005 இல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய பதவியேற்றது தொடங்கி போர்க்காலத்தில் உலகின் போர்ப் பொருண்மியமீட்டும் நடவடிக்கைகளின் போது தரகு பெற்றுக் கொழுத்ததாக கோத்தாபயவின் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உண்டு. அண்ணனை விஞ்சிக் கொழுத்துவிடுவாராவென அண்ணியாரினை அச்சப்பட வைத்தவர் இந்த கோத்தாபய.

கோத்தாபய அரச தலைவரானதும் தமிழர்தாயகப் பகுதிகளில் செய்த வேலைகள் எவை?

சிறிலங்கா அரசு இணையொப்புச் செய்து ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட நீர்த்துப்போன உப்புச் சப்பற்ற தீர்மானத்தைக் கூட எதிர்த்துப் போராடுவதற்கு ஜெனிவா சென்று அதனை எதிர்த்துப் போராடியளவுக்கு தமிழரிற்கென்று ஒரு பொரியேனும் கிடைக்கக் கூடாதென்னும் அளவிற்கு தமிழின வெறுப்புக்கொண்ட அனுராத யெகம்பத் என்ற அம்மணியை கிழக்கு மாகாண ஆளுநராக கோத்தாபய நியமித்துள்ளார். அவரும் பதவியேற்றவுடன் தமிழரை மிரட்டும் வகையில் அச்சுறுத்தலாகப் பேச ஆரம்பித்துள்ளார்.

கோத்தாபயவின் நெருங்கிய நம்பிக்கையாளரான மேயர் ஜெனரல் சந்திரசிறி மீள்குடியேற்றம் தொடர்பான வேலைகளில் அதிகாரமளிக்கப்பட்ட பொறுப்பாளராக இருந்தபோது அவருடன் மிக நெருக்கத்தைப் பேணியவரும் பின்பு மட்டக்களப்பின் அரச அதிபராக இருந்தபோது பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவருமான சாள்ஸ் என்ற அம்மணியை வடக்கின் ஆளுநராக ஊழலை வெறுப்பதாகப் படங்காட்டும் கோத்தாபய நியமித்துள்ளார். சிறிலங்காவின் காவல்துறையினரால் குற்றங்களைக் கட்டுப்படுத்த இயலாது என்றும் இராணுவத்தினராலேயே முடியும் என்று முன்னர் அரச அதிபராக வவுனியாவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பதவி வகித்த இந்த சாள்சு எனும் அம்மணி கருத்துவெளியிட்டு இராணுவத்தை தமிழர் தாயகத்தை வன்வளைக்க அழைப்புவிடுத்தவர் இந்த இராணுவத்துடன் நெருக்கமான அம்மணி என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

டக்ளசு தேவானந்தாவின் அன்புக்குரியவராக அறியப்பட்ட மகேசுவரி வேலாயுதம்  என்ற அம்மணி வடமராட்சி கரணவாய் கிழக்கில் உள்ள அவரது சொந்த வீட்டில் வைத்துச் சுடப்பட்டதனை நினைவுகூர்ந்து அவரின் பெயரில் உருவாக்கப்பட்ட “Maheswari Foundation” என்ற அமைப்பின் மூலம் மணல்கொள்ளை செய்து யாழ்ப்பாணத்தை இயற்கைப் பேரிடரிற்கு உள்ளாக்கி வரும் டக்ளசு கும்பலுக்கு அள்ளுகொள்ளையாக மணல் கடத்த வாய்ப்பளிக்கும் வண்ணம் சட்டங்களைத் தளர்த்தி இருக்கிறார் கோத்தாபய. தாளையடி, நாகர்கோவில், சாவகச்சேரி, தனங்கிழப்பு, கெருடாவில், கச்சாய், வேலணை போன்ற இடங்களில் மணல்கொள்ளைக்குச் சென்ற கோத்தாபயவின் யாழ்ப்பாணக் குறுநில மன்னனான டக்ளசின் கும்பலினை மடக்கிப் பிடித்து அவர்கள் மணல் கொள்ளையடிக்கக் கொண்டு சென்ற பாரவூர்தியும் ஊர்மக்களால் எரியூட்டப்பட்டது. இந்த கோத்தாபயதான் இயற்கை உரங்களை மட்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து மண்ணை வளமிக்கதாகப் பேணப்போவதாகப் பம்மாத்து விடுகிறார்.

கோத்தாபய அரசு தலைவராகப் பதவியேற்றதும் தனது முதலாவது பாராளுமன்ற உரையில் ஆற்றிய உரையின் சுருக்கம் என்னவெனில்,

இந்த நாட்டில் ஆட்சிக்கு வருபவர் யாரெனத் தீர்மானிப்பதன் மூலம் இந்த நாட்டின் அரசியலைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வாய்ப்பு இனி எவருக்கும் வாய்க்காது என பெரும்பான்மை மக்கள் கடந்த சனாதிபதித் தேர்தலில் நிருபித்துள்ளனர் எனக் கூறுயதன் மூலம் தமிழர் தரப்புத் தான் ஒன்றுபட்டு ஓரணியாக நிற்பதால் கிடைக்கும் வாக்குப் பலத்தால் இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டுமெனத் தீர்மானிக்கும் காலம் முடிவடைந்து இப்போது தனிச் சிங்களத்தெரிவே இந்த நாட்டின் தலைவிதி என்றவாறாக மெத்தனப்போக்குடனும் பெரும் எள்ளலுடனும் கோத்தாபய தனது உரையில் கூறியுள்ளார்.

தனது இராயபக்ச குடும்ப ஆட்சியினைக் குடும்பப் பெருமைபோல கூசாமல் பேசிய வண்ணமே நாட்டின் பெரும்பான்மை மக்களின் வேணவாக்களை மதிக்க வேண்டுமாம், ஏனெனில் அது மட்டுமே இந்த நாட்டு மக்களின் இறையாண்மையைக் காப்பாற்றும் வழிமுறையாம் என்று சொல்வதன் மூலம் சிங்கள மக்களின் விருப்பின்படி தான் இங்கு எல்லாம் நடக்குமெனக் கூறி தமிழர்களை இரண்டாந்தரமல்ல மூன்றாந்தரக் குடிமக்களாக்கியிருக்கிறார்.

இந்த ஆட்சியில் ஒற்றையாட்சி என்பதை அனைத்து விடயங்களிலும் பேணி புத்தசாசனத்தை போசாக்கூட்டி வளர்ப்பாராம்.

கோத்தாபயவும் அவரது புலனாய்வுச் செயற்பாடுகளும்

தான் அரச தலைவராகியதும் இந்திய ஊடகருக்குக் கொடுத்த முதலாவது செவ்வியிலேயே தான் சிறிலங்காவின் புலனாய்வுத்துறைகளை அதுவும் குறிப்பாக இராணுவப் புலனாய்வுத்துறையை மீவலுப்படுத்தப் போகிறாராம் ஏனெனில் சிங்களக் காவல்துறையின் நிருவாகத்தின் கீழ் வரும் CID, TID, SIS போன்ற புலனாய்வு அமைப்புகள் விடயங்களைக் கையாளுவதில் போதுமானளவு ஆற்றலுடையவர்களில்லையாம். இவ்வாறாக நாட்டின் தேசிய புலனாய்வுத்துறை அடங்கலான அத்தனை புலனாய்வுச் செயற்பாடுகளையும் இயலுமானவரை இராணுவமயப்படுத்தும் கோத்தாபயவின் திட்டம் ஆட்சியினை இராணுவமயமாக்கும் அறிவிக்கப்படாத ஆணித்தரமான திட்டமாகவே தெரிகிறது.

கோத்தாபய இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் பனாகொடை முகாமைத் தலைமையகமாகக் கொண்ட “Signal Corps” இற்தான் கூடுதலான காலம் பணியாற்றினார். அது இராணுவ தொடர்பாடல் மற்றும் அதுசார்ந்த தகவல் பரிமாற்ற தொழினுட்பங்கள் என்பனவற்றிற்குப் பொறுப்பாக இருத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் என்பனவே அந்தப் பிரிவின் முதன்மை வேலை. இந்தப் பிரிவில் பணியாற்றிய பட்டறிவு வாய்ந்தவர்களே பின்னாளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உருவாக்கத்தின் போது முதன்மைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். அந்த வகையில், இவருக்கு அக்காலத்திலிருந்தே அறிமுகமும் நெருக்கமும் உடையவர்களே பின்னாளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தூண்களாகினர். சரத்பொன்சேகாவைத் தூக்கிச் சிறையிலடைத்த போது, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என 37 இராணுவ முதனிலையாளர்களும் கோத்தாபயவினால் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சார்ந்தவரில்லை. அந்த வகையில் சிறிலங்காவின் இராணுவத் தளபதியாகவிருந்த சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக இராணுவப் புலனாய்வுப் பிரிவில் ஒருவர் கூட செயற்படவில்லை. இதுவே, இராணுவப் புலனாய்வுப் பிரிவைத் தனது சொந்த அணியாகப் பார்க்கும் பார்வையை கோத்தாபயவிற்கு ஏற்படுத்தியது. சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாகவிருந்து போரை வழிநடத்தியபோதும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்பான வேலைகள் நேரடியாகக் கோத்தாபயவின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தனவென்பதும் அந்தக் காலப்பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட எண்ணிலடங்காத குற்றங்களிற்கும் கோத்தாபயவிற்கும் தொடர்புகள் கூடுதலாகவுண்டு என சிங்கள ஊடகர்கள் நிறையப்பேரே எழுதியும் வந்துள்ளனர்.

சிறிலங்காவின் தேசிய புலனாய்வு நிறுவனமாக முன்னர் NIB என அடையாளப்பட்டதும் பின்னர் பெயர் மாற்றலுக்குள்ளாகி SIS (State Intelligence Services) என அழைக்கப்படுவதுமான புலனாய்வு அமைப்பு சிறிலங்காவின் காவல்துறை நிருவாக அமைப்பின் கீழேயே இயங்கிவருகிறது. இதுவரை அதற்குப் பொறுப்பானவர்களும் காவல்துறையிலிருந்தவர்களிலிருந்தே தெரிவாகினர். ஆனால், கோத்தாபய அரசுத் தலைவராகி 3 கிழமைகளே ஆனநிலையில் இராணுவப் புலனாய்வுத்துறையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் சுரேசு சாலே என்பவர் SIS என்ற இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறையின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இரண்டு விடயங்களைக் காட்டுகிறது. ஒன்று, இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறையை இராணுவப் புலனாய்வுமயமாக்கும் வேலையை கோத்தாபய முடுக்கியுள்ளார். மற்றையது, முசுலிம் தீவிரவாதத்தை ஒழிப்பதைப் பெரும் வேலைத்திட்டம் போல் காட்டி அதனைத் தான் செய்து முடிக்கப்போவதாக அண்டப் புளுகு புளுகிச் சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்டு வந்த கோத்தாபய முசுலிமான பிரிகேடியர் சுரேசு சாலேயினை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவுக்கே பொறுப்பதிகாரியாக்கி விட்டார்.

இதனால் நாம் தெளிய வேண்டியது யாதெனில், முசுலிம் தீவிரவாதம் என்பது ஓரிரு நாளில் சிங்களப் புலனாய்வாளர்களால் ஒடுக்கக்கூடியதொன்றே. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஊதியம் பெற்ற முகவர்களாக பல இசுலாமிய அமைப்புகள் செயற்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றிகொண்டதன் பின்பு அவர்களைக் கணக்கிலெடுக்காமல் விட்ட பின்பாக அவர்கள் மெல்ல மெல்ல IS போன்ற தீவிரவாத அமைப்பிடம் சிக்கி வெறியாட்டம் ஆடத் துவங்கியதன் விளைவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். எனவே, மிக இலகுவாக அந்த இசுலாமிய தீவிரவாதக் குழுவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவால் முடியும். இருந்தும், அதை ஒரு பெரு வேலைத்திட்டமாகவும் தான் வந்தால் அதைச் செய்து காட்டுவார் என்றும் கோத்தாபய பம்மாத்துவிட்டதே உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த வெறியாட்டத்தினால் கொதித்துப் போயிருந்த சிங்கள மக்களின் வாக்குகளை அறுவடைசெய்வதேயன்றி வேறெதுவுமில்லை. உண்மையில், இந்தப் புலனாய்வு விரிவாக்கமெல்லாம் இராயபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட நலனுக்கும் ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கவுமே பயன்படும். இன்னும் சொன்னால், தமிழர்தேசத்தை வரலாற்றுத் தடம் தெரியாமல் அழிக்கவே இந்தப் புலனாய்வெல்லாம் வேலையாற்றும்.

புலனாய்வமைப்பைப் பலப்படுத்துவதென்பது தொடர்பாடல் முறைமைகளை முழுக்கட்டுக்குள் கொண்டுவந்து தகவல் சேகரிப்பை முழுமையாகக் கருவிமயப்படுத்தி, சேகரிக்கப்பட்ட தகவல்களை செயற்படு தகவல் நிலைக்கு மின்னணு தொழினுட்பம் மூலம் கொண்டு சென்று தொழிற்படும் பொறிமுறை மூலம் புலனாய்வமைப்பை வலுப்படுத்துவது என்பது ஒரு கட்டத்திற்கு மேல் சிறிலங்கா போன்ற நாடுகளிற்கு இயலாதவொன்றே.  ஏனெனில், ஒரு சில மேற்கு நாடுகள், சீனா, வடகொரியா, ரசியா தவிர ஏனைய அத்தனை நாடுகளும் இந்த விடயத்தில் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளது. எனவே இதற்கேற்படும் பெரும் செலவும் அமெரிக்க மேலாண்மைக் கட்டுப்பாடுகளும் சிறிலங்காவினால் தாங்கிக்கொள்ள முடிந்ததல்ல.

ஆட்சேர்ப்பின் மூலம் புலனாய்வுத்துறையை உடனே வலுப்படுத்துவதென்பது ஒருபோதும் வெற்றியளிக்காது. அப்படிச் செய்யின், அது இராணுவப் புலனாய்வினரின் நிருவாக மேந்தலைச் செலவுகளை கூட்டுவதைத் தாண்டி எதையும் அடையாது. எனவே, புலனாய்வு அமைப்பினைப் பலப்படுத்துவதென்றால், தமக்கு முன்னர் இருந்த முகவர்களை மீண்டும் செயற்பாட்டுத் தளத்திற்கு அருட்டுவதன் மூலமும் புதிய புலனாய்வு முகவர்களை இணைத்துக்கொள்வதன் மூலமும் புலனாய்வு அமைப்பைப் பலப்படுத்தும் வேலைகளிலேயே கோத்தாபய இறங்குவார் என கூறலாம். தனது முதலாவது செவ்வியிலும் முதலாவது பாராளுமன்ற உரையிலும் தான் இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்தப்போவதாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் கோத்தாபய.

போரின் பிந்தைய காலப்பகுதியில் புலனாய்வுத்துறையை நன்கு முகாமை செய்தவர் கோத்தாபய என்று அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் புகழாரம் செய்தமையையும் இங்கு நினைவில்கொள்ளல் தகும்.

எனவே, அலுவலகங்கள், நிறுவனங்கள், திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் ஆளுமைப் பொறுப்புகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர்கள் அல்லது செயற்படக் கூடியவர்கள் அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதுடன் அப்படியான எல்லா இடங்களிலிருந்தும் இராணுவப் புலனாய்வினருக்கு தகவல்களை வழங்கக்கூடிய வலையமைப்பு இவ்வாட்சியில் பலப்படுத்தப்படும் என உறுதியாகக் கூறலாம். கோத்தாபயவும் இதனை வெளிப்படையாகவே கூறிவிட்டார். இதைவிட கோத்தாபய எதையும் புதிதாகக் கிழிக்கப்போவதில்லை.

கோத்தாபயவிற்கு நெருக்கமான மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண என்ற முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் நம்பிக்கைக்குரிய புலனாய்வு அலுவலரும் தாய்லாந்தைத் தளமாகக் கொண்டு புலனாய்வு வேலைசெய்து விடுதலைப் புலிகளின் பன்னாட்டளவில் முதன்மைபெற்ற கே.பி.பத்மநாதன் என்பவரைக் கைதுசெய்து நாடுகடத்திக்கொண்டு வந்தவருமான சாம் என்ற புலனாய்வாளன் புலம்பெயர்ந்தோரிடத்தில் நெருக்கமான தொடர்புகளைப் பேண முயன்று தனது புலனாய்வு முகவர் வலையமைப்பைப் பலப்படுத்த முயல்வதாக தகவல்கள் வருகின்றன. எதனை இவர்கள் புதிதாகச் செய்யப்போகிறார்கள்? எல்லாவற்றையும் கடந்த பத்தாண்டுகளில் கண்டாயிற்றே.

பாராளுமன்றத் தேர்தலின் பின்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா என இந்தியாவின் ஒப்புதலோடு ஒப்பந்தங்களைப் பிரித்து வழங்கவே கோத்தாபாயவுக்கு நேரமிருக்காது. தலையைப் பிய்த்துக்கொண்டு அலையத்தான் போகிறார். அதனால் அவருக்கு “சுதேசி” வேடம் அதன் பின்பாகப் பொருந்தாது. அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி தமிழர்தாயகப்பகுதிகளில் இராணுவமயமாக்கலை இன்னும் தீவிரப்படுத்துவார். இதனை சிங்கள பௌத்த நாடாக்க தன்னாலியன்ற அத்தனையையும் செய்வார். சிறிலங்காவின் ஆட்சிக் கட்டிலில் அமருபவர்கள் இனிமேல் சித்தங்கலங்கியோ உடல்நிலை பாதிக்கப்பட்டோ தான் வெளிச்செல்வர். ஏனெனில், தமிழர்களைப் போரில் வெல்ல சிறிலங்கா கொடுத்த விலை என்பது சிங்களதேசத்தின் இறைமையே என்பதை மவாவம்ச மனநிலைச் சிங்களவர்கள் கோத்தாபயவின் இந்த ஆட்சியில் உணர்வார்கள். கோத்தாபய தொடர்பான போலி நிழலுருக்கள்  புழுத்துப்போகும். கோத்தாபய வெற்றிகொள்ளப்பட முடியாதவர் போல கட்டியெழுப்பப்படும் போலி நிழலுருவை தமிழ் மக்கள் தகர்ப்பார்கள். ஏலவே, மண்கொள்ளைக்குச் சென்ற ஊர்திகள் மக்களால் எரியூட்டப்பட்டாயிற்று.

எனவே இப்போதிருக்கும் வினாவென்னவெனில், புளுகு மூட்டைகளை அள்ளியேற்றிக் கட்டப்படும் போலி நிழலுரு பாராளுமன்றத் தேர்தலின் முன்பே புழுத்துப்போகாதா? பாராளுமன்றத் தேர்தல் வரை இந்தப் புளுகுகளை உண்மைபோல ஒப்பேற்றுவதே கோத்தாபயவின் இலக்கு.

-முத்துச்செழியன் –

2020:01:11

 5,138 total views,  2 views today