இசுரேலும் ஈரானும் போரிற்கு அணியமாகின்றனவா?-டாரியசு சகுராமாசேபி-

நடுகிழக்கு (Middle East), ஆசிய மற்றும் பசுபிக் வட்டகையில் (Asia and Pacific Region) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பார்வையைக் குவியப்படுத்துபவரும் சட்ட மற்றும் அரசியல் ஆய்வாளருமான நியூசிலாந்தைத் தளமாகக்கொண்டியங்கும் டாரியசு சகுராமாசேபி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்தக் கட்டுரையை RT செய்திகள் என்ற ரசிய செய்தி நிறுவனம் 19-12-2019 அன்று வெளியிட்டது. இதனைக் “காக்கை” இணையத்தின் மொழியாக்கப் பிரிவு மொழியாக்கி வெளியிடுகிறது.

—————————————————————————————————————————–

டொனால்ட் டிரம்பின் மீதான ஊழல் குற்றச்சாட்டு மீதான அறவுசாவல்கள் குறித்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாலானவை பார்வையைக் குவிக்கும் போது, நடுகிழக்கில் (Middle East) பாரிய மோதல்கள் வெடிப்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாண்டு நத்தார் ஒரு நினைவு அடையாளமாக மாறுமா?

ஏனைய விடயங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் ஊடக வெளிச்சத்தைத் திருடத் தொடங்குகையில், ஈரான் விடயம் ஊடகத்தில் அங்கங்கு வந்துபோவதாகவே உள்ளது. ஆனால், பின்னணியில் ஈரானுக்கெதிரான அழுத்தம் பல முனைகளில் ஏற்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய போர்க்கருவிகளையும் (WMDs) உயிர்கொல்லிகளையும் யேமனுக்கு எடுத்துச் செல்வதாக ஈரானின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டி அதன் மீது தடை விதிக்கப்பட்டமை அடங்கலாக ஈரானின் நிறுவனங்களிற்கெதிராக பொருண்மியத் தடைகளை அமெரிக்கா அண்மையில் ஏற்படுத்தியது. டொனால்ட் டிரம்பின் நிருவாகத்தைப் பகைப்பதற்கு அச்சப்படும் நாடுகள் ஈரானின் இந்த வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான வானூர்திகள் தமது வானூர்தி நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் என்பதால் இந்த நகர்வானது ஈரானின் பொருண்மியத்தை ஒட்டுமொத்த சரிவை நோக்கித் தள்ளுவதாகத் தென்படுகிறது.

கடந்தகால மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்க்குற்றங்களிற்காக சிரியாவின் ஆட்சி, ரசியா மற்றும் ஈரானிற்கு எதிராக அமெரிக்கா பொருண்மியத் தடைகளை விதிக்கும் சட்ட முன்மொழிவு வரைபை அமெரிக்காவின் பேராளர் அவை மூன்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. விளாடிமிர்புட்டினைக் காப்பாற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட கைக்கூலி என டொனால்ட் டிரம்பினை ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தும், இந்தச் சட்ட முன்மொழிவு வரைபிற்கு உடன்பாட்டை வெளிப்படுத்திய டிரம்பின் நிருவாகம் இதனை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் கூடுதலாகவுள்ளது (ஒபாமாவின் நிருவாகத்தைப் போலல்லாமல்).

ஈரானை அல்லது அதன் படைகளை நேரடியாகத் தாக்குவதற்கு அமெரிக்கா சற்றே தயக்கம் காட்டியிருந்தாலும், நடுகிழக்கில் உள்ள இன்னொரு வல்லாண்மையான இசுரேல் அமெரிக்காவின் சார்பில் அதனைச் செய்வதற்குக் கூடுதல் ஆர்வத்தையும் இயலுமையையும் காட்டுவது தென்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்னர், தனது படைகள் ஈரானிய படைகள் மற்றும் சிரிய இராணுவத்தின் மீது தொடுத்த தீவிரமான தாக்குதலில் ஆகக் குறைந்தது 21 போர் வீரர்களும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர் என இசுரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர், ஈராக்கிலுள்ள ஈரானிய ஆதரவுப் படைகளுக்கான போர்க்கருவிகளினைப் பதுக்கிவைத்த கிடங்கை இசுரேலியப் பாதுகாப்புப் படையினர் (IDF) தாக்கி அழித்தார்கள். அத்துடன், லெபனானிலுள்ள கிசுபுல்லா இயக்கத்தினரின் நிலைகள் மீது ஆளில்லா வான்வழித் தானியங்கி (Drone) மூலம் இசுரேல் தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இசுரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டதாக ஈரான் மீது குற்றஞ்சுமத்திய இசுரேலின் முதன்மை அமைச்சர் (Prime Minister) பெஞ்சமின் நெதன்யாகு, அப்படியான தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கும் அத்தனை வாய்ப்பான வழிவகைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி கூறினார். உண்மையில், தனது தலைமையைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தலைவனுக்கு இப்படியொரு பலியாட்டினை உருவாக்குவது வசதியளிப்பதாகவே இருக்கும். இப்படியொரு பலியாட்டினைக் காட்டித் தன்னைப் பாதுகாக்கும் தேவையை நாட்டு மக்களை உணரவைக்கலாம்.

அமெரிக்க அதிகாரிகளுக்கும் இசுரேலிய அதிகாரிகளுக்கும் இடையில் பல சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் சந்திப்புகளில் முதன்மைக் கருப்பொருளாக ஈரான் பற்றிய விடயம் இருப்பது தென்படுகிறது. நெதன்யாகு அண்மையில் இந்த எச்சரிக்கையை விடுக்கும் போது, அமெரிக்காவின் கூட்டுப்படைத் தளபதியான ஜெனரல் மார்க் மில்லே இசுரேலில் தனக்கிணையான பதவியை வகிக்கும் அவிவ் கொகாவியினைச் சந்தித்து செயற்பாட்டு உத்திகள் மற்றும் வட்டகை அபிவிருத்திகள் (Regional Development) தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறார். அதற்கு ஒரு கிழமைக்கு முன்னர், வான்படை மற்றும் இராணுவ கூட்டுப் பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் வான்படைத் தளபதி இசுரேல் சென்றிருக்கிறார். அதற்கு வெகுகாலத்திற்கு முன்னரல்லாமல், நடுகிழக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினருக்கான கட்டளைத் தளபதி இசுரேலுக்குச் சென்று இசுரேலியப் பாதுகாப்புப் படையினரின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இசுரேலிய முதன்மை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வெளிப்படையாகவே ஈரானினைக் குவியப்படுத்திய தொலைபேசி உரையாடலை நிகழ்த்தினர். இசுரேலினால் மிக நல்வாய்ப்பாகப் பார்க்கப்படும் இசுலாமியக் குடியரசை உலுக்கிய அண்மைய போராட்டங்களைத் தொடர்ந்து தொடர்ச்சியான கூடுதல் அழுத்தத்தை ஈரானுக்குக் கொடுக்குமாறு டிரம்பினை நெதன்யாகு அவ் உரையாடலில் கேட்டிருந்தார்.

மேலும் எச்சரிக்கைகள் தொடர்கின்றன. சிரியாவில் “தனது சொந்த வியட்னாமை” ஈரான் முகங்கொடுக்க நேருமென இசுரேல் தெரிவித்துள்ளது. அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஈரான் நிலைகொள்வதை முன்கூட்டியே தடுக்க முன்நடவடிக்கை எடுப்பதாக இசுரேல் மேலும் அச்சுறுத்தியுள்ளது.

லெபனானிலிருந்து சரமாரியாக எறிகணைத் தாக்குதல்களினை நடத்துவதன் மூலம் இசுரேலின் “ரெல் அவிவ்” நகரம் தகர்க்கப்படும் என இசுரேலைப் போலவே அச்சுறுத்தும் பதிலளித்து இசுரேலின் அச்சுறுத்தலிற்கு எதிர்வினையாற்றியுள்ளது ஈரான். ஈராக் எல்லைக்கு அருகே சுரங்கப் பாதைகள் அமைக்க ஈரான் தொடங்கியுள்ளதாக வாதிடும் செய்தியை பொக்ஃச் செய்தி (FOX News) தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி உண்மையெனின் இது உறுதியாக இசுரேலினை அதிரவைப்பதொன்றாகவே இருக்கும்.

உறுதியாக, இசுரேலின் சட்டமா அதிபரான அவிச்சாய் மண்டெல்பிட் தான் கையூட்டு, முறைகேடு மற்றும் நம்பிக்கையை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மீது சுமத்துவதாகக் கடந்த மாதம் அறிவித்தமையை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டும். தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான உசாவல்களை மறைத்துத் தன்னை உள்நாட்டிலும் பன்னாட்டளவிலும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியாகவே இறுதியில் இந்த நெதன்யாகுவின் அறிக்கைகளும் இசுரேலின் இராணுவ நடவடிக்கை முயற்சிகளும் அமைகின்றன. நிலைமை அவ்வாறுதானெனின், ஈரானுடனான போர் அச்சுறுத்தல் என்பது வெறுமனே ஒரு திசைதிருப்பல் உத்தியே.

மேலும், இசுரேலின் பாதுகாப்புக் கொள்கையை எழுதும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இசுரேலிய இராணுவ ஜெனரல் ஒருவர் இசுரேலினால் ஈரானுடன் தனித்து மோத இயலவில்லை எனவும் இதுவே உண்மைநிலையாக இந்நாள் வழக்கமாகிவிட்டதெனவும் 2017 ஆம் ஆண்டு கூறினார். நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட “புதிய பென்ரகன் ஈரான் இராணுவ வலு அறிக்கை” இன் படி, ஈரான் ஒரு குறிப்பிடத்தக்க முதன்மையான இராணுவ ஆற்றலாக இந்த வட்டகையில் உருவாகிவிட்டது. இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் அதிவேக ஏவுகணைகள், கடற்படை ஆற்றல் மற்றும் லெபனான் மற்றும் ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமைப்புகளைத் தனக்குத் துணைப்படைகளாகப் பயன்படுத்துதல் போன்ற மூன்று விடயங்களில் ஈரான் தனது பார்வையைக் குவியப்படுத்துவதன் மூலம் தனது தற்போதைய ஆற்றலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் செயற்படுவதாக அந்த அறிக்கை மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது. இசுரேலினால் ஈரானுடன் நேரடியாகப் போரில் ஈடுபடமுடியாதிருந்ததெனவும் பாரியளவான அமெரிக்க உதவியில் தங்கியிராமல் ஈரானினை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இசுரேல் இருக்கின்றதென நிலவுகின்ற கருத்திற்கு வலுச் சேர்ப்பதாக இந்த அறிக்கை மேலும் அமைந்தது.

அமெரிக்கா உண்மையில் தன்னை இந்நிலையில் வைத்திருக்குமா இல்லையா என்பது தெளிவாக இல்லை என்பதே இது குறித்த இசுரேலின் சிக்கலாக உள்ளது. டிரம்பின் நிருவாகத்தின் கீழ் நடுகிழக்கில் அமெரிக்காவின் கொள்கையென்பது குழப்பமானதாகவும், நிலையற்றதாகவும், கணிக்கமுடியாததாகவும் தொடர்கின்றது. இந்த நிலையான மாற்றங்கள் இசுரேல் அடங்கலான நடுகிழக்கு அரசாங்கங்களிற்கு தொடருகின்ற சவாலை உருவாக்கியுள்ளது. ஏனெனில், எந்தத் திசையில் டிரம்பின் நிருவாகம் செல்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஈரான் அணுவாற்றல் கொண்ட நாடாக மாறுந்தறுவாயில் இருந்தால், இசுரேல் ஒரு தலையாக நடவடிக்கை எடுக்கும் என ஒரு மூத்த உளவுத்துறை நிபுணர் அண்மையில் கூறியிருக்கிறார். இறுதியில் இது தவிர்க்க முடியாததாகிவிடும். அத்துடன், ஈற்றில் அது அமெரிக்காவையும் ஒரு பாரிய போரில் ஈடுபடுத்தும்.

ஒரு போரிற்குக் கூடுதலான வாய்ப்பிருப்பதை அல்லது ஈரானை எதிர்க்க அமெரிக்கா இன்னுமின்னும் செயற்படும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, டிரம்பின் நிருவாகம் ஈரானினை முடிந்தவரை தண்டிக்கிறது என்பதை மறுக்க முடியாது. “ஒவ்வொரு கிழமையும் அமெரிக்கா ஈரானை ஒவ்வொரு புதிய சுத்தியலால் தாக்குவது போல உணர வைக்கின்றது” என இசுரேலிய அதிகாரி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் மீது மீயுயர் அழுத்தத்தை வழங்கும் பரப்புரை செய்யாமல் அமெரிக்காவானது இசுரேலினைத் தனித்து உலரவிட்டுள்ளது என்ற நிதிமூலதன ஊடக நிறுவனங்களின் (Corporate Media) குற்றச்சாட்டானது மிகவும் பொய்யானதும் கற்பனையானதுமாகும்.

மிக முதன்மையாக, ஈரான் பங்கேற்கும் எந்தப் போரும் இறுதியில் பேரழிவை விளைவிப்பதாயும் ஈடுசெய்ய முடியாத மாறுதல்களையும் உலகில் ஏற்படுத்தும் என்ற எனது துவக்ககட்ட ஐயமானது ஈரான், சீனா மற்றும் ரசியா ஆகிய நாடுகளிற்கிடையிலான கூட்டுக் கடற்படைப் பயிற்சி பற்றிய அண்மைய அறிவிப்பால் உறுதியாவதாய்த் தென்படுகிறது.

2019-12-19

 5,411 total views,  3 views today

(Visited 1 times, 1 visits today)