படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை ஊக்குவித்தலும் படைப்புவெளியினை ஆளும் அதிகாரம் தன் கையில் எடுப்பதற்கான செயற்பாடுகளாகும். இன்றைய புகழ்வெளிச்சம் பெற்ற படைப்பாளிகளில் சிலர் இப்படியாக அதிகார வர்க்கங்களின் அருள் பெற்றவர்களாயுள்ளனர். ஆனால் புகழடைபவர்கள் எல்லாரும் அப்படியானவர்கள் என்று சொல்வதல்ல எமது நோக்கம். எனினும் இதுகுறித்த விழிப்பு மக்களிடம் இருக்கவேண்டும். வெறுமனே புகழ்வெளிச்சம் பெற்றதுக்காக, குறித்த படைப்பாளியின் முகத்துக்காக தகுதியற்ற படைப்பாளிகளை வளர்த்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆய்வின் அடிப்படை தெரியாதவன் ஆய்வாளன் எனவும் ஒரு கவிதை நூலை வெளியிட்டவுடன் இலக்கியர் எனவும் விருதுகள் கிடைப்பதைக் காண்கின்றோம். அந்த விருதுகளின் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிக்குள் தாங்களும் மாண்டுபோய் மக்களையும் மாளவைப்பதென்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மக்கள்ஈழவியாபாரிகளை போலவிருதுவியாபாரிகளிடத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். விருது வியாபாரிகள் படைப்பாளிகளை விருதுகளின் மூலம் தம்வயப்படுத்தி, தம் கைப்பாவைகளாக்கி விடுகின்றார்கள். தகுதிக்கு மீறிய விருது கிடைக்கும்போது மக்களும் படைப்பாளிகளும் அந்த படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் எச்சரிக்கையுடனிருத்தல் வேண்டும்.

ஈழத்து படைப்பு வெளியில் படைப்பவர் குறித்த முன்முடிவுகளை வைத்துக்கொண்டு அவரின் படைப்புகள் குறித்தும் முற்கற்பிதங்களுடன் நோக்குதல் வளர்ந்து வருகின்றது. எந்தவொரு படைப்பையும் படைப்பாளியின் முன்முடிவு குறித்த நோக்குநிலையில் நின்று ஒதுக்குவதும் சரி, வலுவூட்டுவதும் சரி ஏற்படையதாகாது. எமது திறனாய்வின் குறைபாடாகவே இதை நோக்க வேண்டும். சமூக வலைத்தளங்களின் கட்டுமீறிய வருகையின் காரணமாக விளம்பர உலகம் ஒவ்வொருவரின் அறையிலும் குந்திக்கொண்டு இருக்கிறது. அந்த விளம்பர நுட்பங்களாலும் இந்த நோக்குநிலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. படைப்புகளை எவ்வாறு நோக்கவேண்டும் என்ற அறிவியலை மயக்கி, படைப்பு குறித்த அடையாளத்தை மட்டும் நோக்கச் செய்துவிடுகின்ற விளம்பரங்களால் குறிப்பிட்ட படைப்பு படைப்பாகி விடாது. புகழ் வெளிச்சத்தின் பரிதிக்குள் ஆட்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் எல்லா படைப்புக்களும் படைப்புகளாகிவிடுமா என்ன?

எமது “காக்கை” இணையத்தளத்தின் படைப்புகள் தொடர்பான பார்வையைப் பொறுத்தளவில்………………..

“படைப்பின் உள்ளடக்கம் வினைத்திறனாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் படைப்பாளியின் கடமைகளிலொன்று. இரண்டு நிமிடங்களில் சில காட்சிப்படிமங்களுடனோ அல்லது அழுத்தமான சொல்லாடல்களினூடாகவோ சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டிய பேசுபொருளை தனது ஆற்றல் குறைபாட்டினால் இரண்டு மணித்தியாலங்களுக்கு சொல்வதென்பது மக்களின் மாந்த மணித்தியாலங்களை திருடுவதாகும். சொல்ல வந்த கருத்தினை ஆழமாகவும் அறிவியலுடனும் சொல்ல முடியாத படைப்பாளிகள் படைப்பாளிகள் அல்லர். படைப்பாளிகளாக நிலைக்க வேண்டுமெனில் அவர்கள் தமது அறிவுத்தளத்தை விரிவுபடுத்த வேண்டிய நெருக்குவாரத்துக்குள் இருக்கிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். எத்தகைய தளத்திலிருந்து படைப்பு எழுகின்றதோ அந்த தளம் தொடர்பான ஆழமான புலமை, சமூகம் குறித்த ஆழ்ந்த பார்வை, அந்த தளம் சார்ந்து ஏலவே பேசப்பட்டுவரும் சர்ச்சைகள், அந்த படைப்புத்தளம் குறித்த புதிதான கருத்துவெளிகள் தொடர்பான தெளிவு, அந்த சமூகம் சார்ந்த அரசியல் என்பன குறித்த முழுமையான அறிவுடன் படைப்பாளி தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும். அந்த தகுதிநிலையுடன் எவரிற்கான படைப்போ, யாருடைய நோக்கிற்காக குறித்த படைப்பு படைக்கப்படுகின்றதோ, குறிப்பிட்ட படைப்பு உற்பத்தி யாருடைய தளத்தில் நிகழ்கிறதோ, அந்த உற்பத்தி எங்கு மாற்றங்களை வேண்டி நிற்கின்றதோ அந்த மக்கள் சார்ந்து இலகுத்தன்மையுடன் இருக்கவேண்டும். படைப்பாளி தனது அறிவுச் செருக்கை திணிப்பதற்கு அவை நிகண்டுகளோ வாய்ப்பாடுகளோ அல்ல என்ற தெளிவும் படைப்பாளிக்கு இருக்க வேண்டும். ஆனால் தனது மொழிச்செழுமை குறித்தும் மொழி அறிவு குறித்தும் தன் சார்ந்த தேடல் எப்போதும் படைப்பாளிக்கு இருக்க வேண்டும். மக்களுக்கு விளங்கமுடியாத படைப்புகளே உயர்வானதென்று எண்ணி, எளிமையான படைப்புக்களை எள்ளி நகையாடும் தன்மையும் படைப்பு வெளியில் இருக்கிறது.”

இந்த அடிப்படைகளில், படைப்புகளை திறனாய்ந்து அது மக்களுக்கான தகுதியான படைப்புகளாகும் தன்மைவாய்த்ததாய் இருக்கும் பொருட்டு அப்படியான படைப்புகளை மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய கடமை எமக்குண்டு என “காக்கை” இணையம் வலுவாக நம்புகிறது. முறையான துறைசார் ஆய்வுகளுக்கும் சமூக ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய படைப்புகளை அறிமுகம் செய்வதன் அடிப்படையில், “போர்க்கால இலக்கியங்கள்” என்ற வரையறைக்குள் ஓரிடம் பிடித்துள்ள திருக்குமரன் அவர்களின் கவிதைகள் தொடர்பில் தமிழாய்வுத்துறையில் தொடர்ச்சியாக இயங்கிவரும் முனைவர் அரங்கராஜ் அவர்கள் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய திறனாய்வுரையை “காக்கை” இணையம் எழுத்தில் தருகிறது. முனைவர் அரங்கராஜ் அவர்களது திறனாய்வுகள் முடிந்த முடிபல்ல. ஆனால் திறனாய்வு மரபில் ஒரு சீரொழுக்கைப் பேணும் இவர் போன்றோரின் திறனாய்வுகள் தமிழ்மொழியியல் துறையில் பெறுமதி வாய்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜெகநாதன் அரங்கராஜ் அவர்களால் 26/08/2019, திங்கள் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் திருக்குமரன் கவிதைகள் குறித்து நிகழ்த்திய உரை.

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினருக்கு வணக்கம்!

தமிழ்க் கவிதை மரபு என்பது உலகக்கவிதை மரபின் வரலாற்றியல் அமைவில் பேரிடத்தினைப் பெற்றது. பொதுவாகவே ஒரு கவிதையானது இருவேறு நிலைகளில் தமது கருத்தினைச் செலுத்தும் வகைமையில் இயற்றப்படும். ஒன்று பாடப்படுவோன் கவியின் கருத்தினை உணருதற் பொருட்டு பிறிதொன்று பாடப்படுவோன் அல்லாத பிறர் உணருதற் பொருட்டு. இதனை ஒரு சான்றின் வழி அறியலாம். ஒரு வள்ளலின் கொடைத்திறம் பற்றி பாடப்படும் கவியானது பாடப்படுவோனின் புரிதலோடு பாடப்படுவோனால் விளங்கிக்கொள்ளப்படுதலோடு பிறராலும் உய்த்துத் தூய்க்க இவ்வாறான நினைவுக் கவிகள் அமையும். பிறிதொரு வகைமை யாதெனில் பாடப்படுவோன் அக்கவியின் இன்சுவையினை நுகரும் ஆற்றல் அற்றோராதல் என்பதுவாம். ஆயினும் அக்கவியானது பிறர்க்கு உணர்வுநிலையினை அளிப்பதாக அமையும். அவ்வகையில் ஒரு குழந்தையைக் குறித்துப் பாடப்படும் கவியானது அக்குழந்தைக்கு விளக்கத்தை ஏற்படுத்தாதாயினும் அதனைக் கேட்கும் பிறர்க்கு மகிழ்வினை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதே நிலையிலேயே அவலத்திலுள்ளோர் குறித்தும், தென்புலத்தார் குறித்தும், தெய்வம் குறித்தும் இயற்றப்படும் கவிகளும் அமையும்.

அண்மைக்காலங்களில் தமிழ்க் கவிதையியலின் வரலாற்றுப் போக்குகள் குறித்து ஆராய்வோருக்கு ஈழத்துக் கவிதையியல் மரபு என்பது இன்றியமையாததாக அமைகின்றது. புறத் திணையின் போரியல் இலக்கணங்கூறும் நூல்களான தொல்காப்பியப் புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை முதலான இலக்கண நூல்களும் கலிங்கத்துப்பரணி முதலாய இலக்கியங்களும் உண்டெனினும் காலவெளியில் சோழப்பெருவேந்தன் காலத்திற்குப்பின் தமிழகத்தில் காணக்கிடைக்காத போரியலும் அதன் அவலங்களையும் விளக்கி இயற்றப்பட்ட கவிதை மரபானது ஈழத்துக் கவிதைகளுக்கு மாத்திரமே உரித்தாக அமைகிறது. அவ்வகையில் ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபினை ஆய்கின்றபோது கவிதையின் ஈர்ப்பு, உணர்வுத் தூண்டல், மெய்மை, காட்சிப்படுத்தல், சொற்செறிவு, பொருள் விளக்கம், காலங்கடந்தும் உண்மை வெளிப்படுத்தும்பாங்கு, காலங்கடந்த கருத்தியல் உயிரோட்டமுடைமை, மொழிநிலையில் ஐந்திலக்கண அமைதியினைப் பேணுகின்ற சிறப்பு என்பன உத்திக் கூறுபாடுகளோடு ஈழத்துத்தமிழ்க் கவிதைகளானது ஒப்புநோக்கி ஆராயவேண்டியதாகின்றது. அவ்வகையிலேயே திருக்குமரனின் கவிகளில் சிலவும் எம்மால் ஆராயப்பட்டுள்ளனவெனலாம்.

ஒரு கவிஞன் போரியல் காட்சிகளைக் கண்டு கவிதை எழுதுதல் என்பது ஒருவகை. அவ்வகையிலேயே கலிங்கப்போரினை நேரிற்கண்டு செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியை இயற்றியதாகக் கூறுவர். ஒரு போராளியே கவிஞனாக இருப்பது போரின் தன்மையினையும், தான் அடைந்த துயரங்களையும், தமது இனம் அடைந்த இழப்புகளையும் கவிசெய்தல் மற்றொரு வகை. சங்கப்பாடல் மரபில் போரிலே தோல்வியுற்று எதிரியின் சிறைச்சாலையில் இருந்தபோது பெருஞ்சேரன் இரும்பொறை பாடிய பாடல் இதற்கு அமைவாகின்றது. முன்னவற்றிலும் பின்னவற்றில் கவித்துவத்தினைக் காட்டிலும் உண்மை மிகுந்திருக்கும். தமது வரலாற்றினைப் பதிவிசெய்யும் போக்குகள் ஒவ்வொரு அடியிலும் காணக்கிடைக்கும். இதனையே திருக்குமரனின் கவிதைகளில் காணலாம்.

சங்க இலக்கியம் முதலான பழந்தமிழ்த் தனிப்பாடல்களாகட்டும் சிலப்பதிகாரம் முதலான உரையிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்களாகட்டும் இவையாவுமே காட்சிப்படுத்துதலின் அடிப்படையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும். காட்சிப்படுத்துதல் என்பது கவிஞனின் எண்ணத்தை ஓவியமாக்கி கேட்போர் கண்முன் படம்பிடித்துக்காட்டும் நாடகத்தன்மையில் அமைவது. சான்றாக “சுடர் தொடீ கேளாய்” எனும் கலித்தொகைப் பாடல் பல காட்சியமைப்புகளைப் படிப்போர்க்குக் கண்முன் நிகழ்த்திக்காட்டக் கூடியது. இது ஒரு படைப்பாளனின் புலமைத்திறனை வெளிப்படுத்தக் கூடியது. எளிதில் படிப்போனின் மனதிற்சென்று படைப்பாளனின் கருத்தைக் காட்சியாகப் பதியவைக்கக் கூடியது. இதனையும் பாரதியின் கவிகளில் காணலாம். ஈழத்துக் கவிதை மரபில் திருக்குமரனின் கவிதைகளிலும் காட்சியமைப்பின் உயிரோட்டத்தினை நன்கு உணரலாம்.

இவரது ஒவ்வொரு கவிதையும் தனித்த சிறப்பியல்புகளையுடையது. சங்க இலக்கிய மரபின் இழையை இவர் கவிதையெங்கும் காணலாம். “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” எனும் பாரிமகளிர் கவிகளில் தன்நாடு பிறர்கைக் கொள்ளப்பட்ட துயரும் தமது அடிமைநிலையும் தமது இனத்தின் துயரும் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கும். மெல்லிய இழையோடும் இக்காட்சியமைப்பை “நீவந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்” எனும் திருக்குமரனின் கவிதையடிகளெங்கும் காணலாம். இதனையொப்பவே இவரது “எப்படித்தான் மறப்பேனின் இந்நாளை” எனும் கவிதை அடிகளும் வெளிப்படுத்தும். இருவேறுபட்ட காலச்சூழலில் மிகுகால இடைவெளியில் வேறுபட்ட போர்ச்சூழலில் போர்க்களத்திலே நேரடியான பாதிப்புக்குள்ளான தாக்கத்தினால் எழுந்த ஒப்புமைக் கவிகளாக பாரிமகளிர் கவியையும் திருக்குமரனின் கவிகளையும் கருதலாம்.

ஓர் இளம்பெண் ஒரு மூதாட்டியின் சிறிய வீட்டிற்கு வருகின்றாள். அவ்வீட்டின் தூணினைப்பற்றி நின்று நின்மகன் எங்குள்ளான் என வினவுகின்ற காட்சியமைவில் “சிற்றில் நற்றூண் பற்றி” எனும் புறப்பாடல் ஒன்று உண்டு. இக்காட்சியமைவை ஒத்த காட்சிப்படுத்தக் கூடிய கவியமைதி மரபுகளை திருக்குமரனின் கவிதைகளில் பல விதங்களில் உணரலாம். “தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு” எனும் கவியினை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

“இறுதிக்கால இரவுகள்” எனும் கவிதையின் போக்கு எதிர்காலத்தில் வருவோருக்கு ஈழத்தின் துன்பியல் வரலாற்றினை உரைக்கும் இலக்கிய ஆவணமாக அமையும் தகைமையுடையது. புறநானூற்றில் மகட்கொடாமைத்துறையில் அமைந்த பாடலொன்றுண்டு. அப்பாடலின் வழி தொல்குடித்தமிழ்க் குழுக்கள் அழிக்கப்பட்ட துயர நிகழ்வினை உணரவியலும். அந்த மபினைத் தொடர்ந்து அமைவதாக மேற்கண்ட பாடலடிகள் அமையக் காணலாம்.

புறப்பாடல்களைக் காட்டிலும் அகப்பாடல்களை இயற்றுவதற்கு உள்ளத்துணி தெளிவும் ஒரு படைப்பாளனுக்கு இன்றியமையாத குணமாகும். இத்துணிவினை சங்கப்பனுவல்களிலும் சில புலவர்களிடமும் மாத்திரம் காணவியலும். அதிலும் தங்களது அகம்சார்ந்த நிகழ்வுகளை அடையாளப்படுத்துதல் என்பது காலம் கடந்தும் சில நெருடல்களை வழங்குவதாக அமைந்துவிடும். தமிழ்மரபில் இதனை மிகத்துணிவோடு கையாண்டோர் மிகச் சிலரே. “யானே விரலி”, “புலவுநாறு கூந்தல்” முதலாய அடிகளை எழுதுவதற்கு காவற்பெண்டிற்கு இருந்த நேர்மைத்திறனும் துணிவும் திருக்குமரன் போன்ற கவிஞருக்கு உண்டெனலாம். இவரது “பனிப்புகை மனசுக்குள் படர்கிறது” எனும் கவிதையடிகள் இவரது அகவியற் கவிதைகளின் சிறப்பினை விளக்குவதாக அமைகின்றது.

திருக்குமரனின் கவிதைகளைப் பொறுத்தவரை ஆற்றொழுக்கான மொழிநடையினைக் காணலாம். சொற்கள் எளிதில் பொருள் விளக்கமுடையன. பேச்சுமொழியினை அடுக்கிவைத்துக் கவிதையென மொழியும் போலித்தன்மையற்ற ஓசைநயமுடையவை, தொடை அமைதி கொண்டவை என்பனவாக பல சிறப்புகளைக் கூறலாம். “Historical Setting in Akanaanuru” என சங்க அகப்பாடல்களில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் பதிவுசெய்தே செல்கின்றன. அதற்கான காரணமாக ஒரு போராளியே படைப்பாளனாக இருந்தமையினைக் குறிப்பிடலாம். “வாழத்தெரியாதவன்” என இவர்கள் தங்களையே எழுதிக்கொண்டாலும் பிறர்தூற்றினாலும் இவர் போன்ற படைப்பாளிகளை வரலாறு வாழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. இவரது படைப்புகள் மொழிநிலையில் ஐந்திலக்கண ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். கருத்தியல் ஆய்வுகள், இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுகள், சொல், தொடர் ஆய்வுகள், வரலாற்று மொழியியல் ஆய்வுகள் முதலான பல்வேறு நிலையில் இவரது படைப்புகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும்போது பல மேம்பட்ட கருத்தியல்களை வெளிக்கொணரலாம். இதற்கான பணிகளை கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முன்னெடுக்கும் என நம்பிக்கைகொண்டு எனது உரையினை நிறைவுசெய்கின்றேன்.

Loading

(Visited 184 times, 1 visits today)