குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா-

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக நிலப்பரப்புகளை மீண்டும் வன்வளைத்து குர்திய மக்களை நூற்றுக் கணக்கில் படுகொலைசெய்து பல்லாயிரக்கணக்கான குர்தியர்களை மீளவும் ஏதிலிகளாக்கியுள்ள நிலையில் தொடரும் துருக்கியின் குர்தியர்கள் மீதான வெறியாட்டம் குறித்து ஊடகச் செய்திகள் நிரம்பி வழியும் இந்நேரத்தில் தேசிய இனவிடுதலை வேண்டி நிற்கும் தமிழர்கள் குர்தியர்களுடன் தாமும் உணர்வுடன் கலந்திருப்பதை வெளிப்படுத்திக்கொண்டு குர்தியர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை தமது வரலாற்றுடன் ஒப்புநோக்கிக் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்ளவும் மீள்நினைவுகொள்ள வேண்டியவற்றை மீள்நினைவுகொள்ளவும் வேண்டிய காலமிதில் இப்பத்தி வரையப்படுகின்றது.

பல்வேறு பழங்குடிக் குலக்கழுக்களாக குர்துமொழி பேசி, தமக்கென தம்முள் சிறு வேறுபாடுகள் கொண்டதும் பெருமளவில் ஒன்றித்த இயல்புகளைக் கொண்ட பண்பாட்டினையுடைய குர்திய இன மக்கள் வரலாற்று வாழ்நிலையில் அமைந்த தொடர்ச்சியான நிலப்பரப்பில் நீண்ட நெடுங்காலமாகத் தம்மைத் தாமே ஆண்டு வந்ததைத் தொடர்ந்து ஓட்டோமான் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட போதிலும் கூட நெடுங்காலமாக பழங்குடித் தலைவர்களால் பாரியளவு வெளித்தாக்கமின்றி ஆளப்பட்டு வந்தனர். ஓட்டோமான் பேரரசு 1800 களின் தொடக்கத்தில் குர்தியர்களின் வாழ்நிலை மீது தலையீட்டை அதிகப்படுத்தி அவர்கள் மீது அடிமைத்தளைகளை இறுக்கிய போது எதிர்த்து வீரத்துடன் போராடிய பழங்குடிக் குர்தியர்களின் 1806, 1831, 1842, 1855, 1880 களில் நடந்த போராட்டங்கள் ஓட்டோமான் பேரரசால் ஒடுக்கப்பட்டதற்குக் காரணமே பழங்குடியினரிடையே இருந்த குலக்குழுப் பற்று அவர்களை குர்திய தேசிய இனவெழுச்சி பெற்ற குர்திய தேசிய இனமாக அணிதிரட்டவிடாமையாகும். தேர்தல் அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட பெருஞ்சாதிக் கட்டமைப்பை இனக்குழுக்களாக திரிபுசெய்து தமிழின வரலாற்றைக் கேலிக்குள்ளாக்கிக் கட்டமைக்கப்பட்ட இடைவந்த சாதியுணர்வை அறிவுத்தெளிவு கொண்டு துறந்தாலேயன்றி தமிழர் ஓர்மை தழைக்கும் போதெல்லாம் அதைச் சிதைக்க இந்தியச் சூழ்ச்சியாளர்கள் இந்த இடைவந்த சாதிப் போலியுணர்வைப் பயன்படுத்துவார்களென்பதால் தமிழினப் பகைவர்களைத் தமிழகத்தில் தமிழர்களால் வெற்றிகொள்ளவியலாது போகும் என்பதுடன் இந்த இழிநிலை உலகளவில் தமிழர்களின் அரசியலை ஏதோவொரு வகையில் எப்போதும் வலுவிழக்கச் செய்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1900 களின் தொடக்ககாலப் பகுதியில் ஓட்டோமான் பேரரசின் ஆளுகையின் கீழுள்ள குர்தியர்கள், ஆர்மேனியர்கள் அடங்கலான தேசிய இனங்களுக்கு சமவுரிமை தருவதாகப் பேச்சளவில் சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த துருக்கியின் படித்த இளந்தலைமுறை அகன்ற துருக்கிக் கனவுடன் செயலாற்றி துருக்கியில் தொடங்கி மத்திய ஆசியாவரை பரவும் அகன்ற துருக்கியை அமைப்பதற்காக ஏனைய தேசிய இனங்களின் அடையாளங்களை அடியொட்ட மறுத்தும் அழித்தும் முழுமையான துருக்கியமயமாக்கலில் இறங்கினர். துருக்கியின் இரும்பு மனிதன் என்று துருக்கியர்களால் ஏற்றிப்போற்றப்படும் Mustafa Kemal ஆட்சிக்கு வந்த பின்பு உக்கிரமடைந்த துருக்கியமயமாக்கல் ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்யும் அளவிற்குச் சென்றது. கிறித்துவ மதத்தைத் தழுவும் 15 இலட்சம் வரையிலான ஆர்மேனியர்கள் கொன்றொழிக்கப்படும் அளவிற்கு ஆர்மேனியர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள். “இசுலாமிற்கு ஆபத்து” என்ற துருக்கியக் கொடுங்கோலர்களின் அறைகூவலை குர்தியர்களும் ஏற்று தமது இசுலாமியப் பற்றின் மூலம் கிறித்தவ ஆர்மேனியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து ஆர்மேனியர்கள் மீதான இனப்படுகொலையை குர்திய இளைஞர்களே முன்னின்று முன்னெடுத்தனர். ஆர்மேனியர்களின் மீதான இனப்படுகொலையில் தலைமைப் பங்கெடுத்த கொலைவெறிக் கூட்டமே “Hamidiye Alaylari” என்கிற குர்தியப் படைப்பிரிவுதான். இவ்வாறு குர்திய மக்களின் வரலாற்றில் மிகப்பெரிய கறை ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்ததால் உருவாகியது. இது அவர்களின் இசுலாமிய மதவெறியினால் மட்டும் நிகழ்ந்ததல்ல. குர்தியர்கள் வாழும் பகுதிகளில் கல்வி கற்ற ஆர்மேனியர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களை வெளியேற்றி குர்தித்தானை குர்தியர்கள் மீட்டிருந்தால் அதனை இன்னுமொரு கோணத்தில் அகல நோக்க வேண்டும். ஆனால் ஆர்மேனியர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி அகன்ற துருக்கிதேசம் படைக்க குர்திய இளைஞர்கள் செய்த கொடுஞ்செயல் அவர்கள் வரலாற்றில் அழிக்கமுடியாத கறையே. ஆனால் இப்படியாக ஆர்மேனியர்களை படுகொலை செய்த குர்தியர்களுக்கு குர்தியதேசிய இனவிடுதலை வேண்டி குர்தித்தான் அமைக்கப் போராடும் தார்மீக அருகதையில்லை என மறுத்துரைத்து அவர்களைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கி அவர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை மறுத்துரைப்பது துருக்கிய ஆளும் அதிகார வர்க்கத்திற்கும் அதனோடு ஒட்டி நிற்கும் அமெரிக்க வல்லாண்மைக்கும் நன்மையளிப்பதாகவே அமையும் என்பதுடன் து வரலாற்று இயங்கியல் பார்வைக்கும் முரணானது.

உண்மையில் துருக்கியமயமாக்கலில் இருந்த துருக்கியின் ஆர்மேனியா மீதான பகை மோதல் என்பதை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி குர்தித்தான் அமைக்கும் செயலில் குதித்திருக்க வேண்டிய குர்தியர்கள் துருக்கியை மீட்டு இசுலாத்தைக் காப்பாற்றி விட்டு குர்தித்தானைப் பற்றி சிந்திக்கலாம் என்றே அன்றைய குர்தியத் தலைவர்கள் சிந்தித்தார்கள். குர்திய பழங்குடிகளிடையே இருந்த இந்தக் குலக்குழு உணர்வு அகன்ற துருக்கிக்கான அதன் துருக்கியமயமாக்கலிற்குப் பயன்பட்டதே தவிர தமது மொழியான குர்துவையும் பண்பாட்டையும் தமது தாயகமான குர்தித்தானையும் காப்பாற்றுவதற்குப் பயன்படாமல் அவற்றை அழிக்கவே துணைபோகின என்பதை இங்கு தெளிதல் வேண்டும். தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதி அரசியலும் இந்தியத்திற்கு பூச்சூடுவதுடன் தமிழினத்தை மெலினப்படுத்தவே வகைசெய்யும் என்பதை உணர வேண்டும். உண்மையில், துருக்கிஆர்மேனிய மோதலை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி குர்தித்தான் மீட்புப் போரினை குர்துகள் முன்னெடுத்திருந்தால் குர்தித்தானும் மலர்ந்திருக்கும் ஆர்மேனியர்களும் இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கார்கள். 1962 இல் இந்தியா மீது சீனா படையெடுத்த காலப்பகுதியில் தமிழினவுணர்வு தமிழ்நாடு தேசவுணர்வை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. திராவிட மடைமாற்றத்திற்கும் அப்பாற் சென்று சிந்தித்தால் அண்ணாத்துரையின் திராவிடநாட்டுக் கோரிக்கையை இன்னும் வலுவாக முன்னுந்தக் கூடிய காலமது. அப்படிச் செய்திருந்தால், தமிழ்நாடு வடகிழக்கு மாநிலங்களிற்கு குறிப்பாக நாகலாந்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களைத் தன்னும் பெற்று வலுவடைந்து காலவோட்டத்தில் தன்னாட்சியுரிமைக்கான பயணத்தில் இன்னும் முன்சென்றிருக்க முடியும். ஆனால் அப்படியான பொன்னான காலத்தில் இந்தியா மீது சீனா படையெடுத்த போது இந்திய இறையாண்மைக்காக திராவிட நாட்டுக் கோரிக்கையை ஒத்திவைத்ததாக சொல்விளையாட்டுக் காட்டிய அண்ணாத்துரை அரசியலை இந்தவிடத்தில் நினைவில்கொள்வதோடு இந்தியா பொருண்மிய அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் நெருக்கடிக்குள்ளாகும் நேரங்களினை தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்தை முன்னுந்த வேண்டிய கனிந்த காலமாகக் கொள்ள வேண்டுமென்பதில் தெளிய வேண்டும்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இனப்படுகொலைக்குள்ளாகி தமது அரசையும் இழந்து இனி இழப்பதற்கேதுமில்லை என்ற நிலையில் வாழும் ஈழத்தமிழர்கள் சிறிலங்காவானது இசுலாமிய அடிப்படைவாத கொலைவெறியர்களினால் ஏப்ரல் 21 இனைத் தொடர்ந்து பொருண்மிய அடிப்படையிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் நெருக்கடிக்குள்ளான போது சிங்கள பௌத்த பேரினவாத அரசு பாதுகாப்பினை காரணங்காட்டி முன்னெடுத்த செயற்பாடுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்துக் கொண்டு சிங்களத்துடன் கருத்தொன்றித்திருந்து பயங்கரவாதத்தைக் கண்டித்த மடைமைத்தனத்தை என்னவென்று சொல்லுவது? உண்மையில் பயங்கரவாதம் என்பது ஒடுக்குமுறையாளனின் கொழுத்த படை பலத்திற்கு ஈடுகொடுக்க பலவீனமான நிலையிலுள்ள ஒடுக்கப்படுவோரின் பலமிக்க அரசியல் கருவியே பயங்கரவாதம். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழினம் சிங்கள அரச இயந்திரத்தை அடித்துத் தகர்க்க ஒரு வெடிப்பை ஏற்படுத்த பயங்கரவாதம் என்ற அந்த ஒடுக்கப்படுவோரின் அரசியல் கருவி தேவைப்படும். இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழர்கள் அதனிலும் மேற்சென்று பயங்கரவாதத்திற்கு எதிராகப் பொங்கியமை அரசியல் அறிவிலித்தனமே அன்றி வேறொன்றுமில்லை. இப்படியாக இசுலாமிய அடிப்படைவாதத்தாலோ எந்நாட்டினது மேலாதிக்கத்தாலோ உலக வல்லாண்மையாளரின் தலையீட்டாலோ எந்த வகையிலெனிலும் சிறிலங்கா நெருக்கடிக்குள்ளாகும் நிலையை தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தினை முன்னெடுக்கக் கிடைத்த நல்வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். முப்பது ஆண்டுகள் வீரம் செறிந்த மறப்போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழர்களிடத்தில் இப்படியான பார்வை வற்றிக் கிடப்பது காலக்கொடுமையே என்பதை இங்கு நினைவில் கொள்க.

1918 இல் ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்ததைத் தொடர்ந்து துருக்கியமயமாக்கல் குர்தித்தான் என்கிற குர்தியர்களின் தாயகநிலப்பரப்புகளிலே முனைப்புப்பெற்றது. குர்துமொழியில் இயங்கிய பள்ளிகள் மூடப்பட்டன, குர்திய பண்பாட்டு அமைப்புகள் தடைசெய்யப்பட்டன, குர்துமொழியில் பேச எழுதத் தடை, குர்திய வரலாற்று நூல்கள் அழிக்கப்பட்டன. குர்தியர்கள் என்று ஒரு தனியான இனமில்லை என்றும் அவர்கள் மலைவாழ் துருக்கியர்களே என்றும் வரலாறு திரிபுசெய்யப்பட்டது. ஆனாலும், ஆர்மேனியர்களை விரட்டிய பின்னர் மீட்ட நிலங்களை தமதாக்க குர்திய நிலக்கிழார்கள் துருக்கிய அரசுடன் திரைமறையுறவுகொள்ள வேண்டியிருந்ததால், அரசியல் அதிகாரங்களில் இருந்த துருக்கிய நிலக்கிழார்கள் குர்தியர்கள் தேசிய உணர்வுகொள்ளாமல் பார்க்கும் துருக்கியின் அடிவருடிகளாகவே இருந்தார்கள். கொழும்பு- 7 இனைத் தளமாகக்கொண்டு அதிகார பங்குபிரிப்பு அரசியல் செய்த தமிழ் மேட்டுக்குடிகள் சிங்கள தேசத்தில் தமக்கிருந்த சொத்துகளைக் காப்பாற்றுவதற்காகவே தமிழர் தேசத்தின் எல்லைகளை வரையறுத்து தமிழர்களின் இறையாண்மை வரைகோட்டை வரையாமல் ஏமாற்று அரசியலின் உச்சக்கட்டமாக முழு இலங்கையிலும் 50 இக்கு 50 போன்ற கோரிக்கைகளை தமது சொத்துகளை சிங்கள தேசத்தில் காப்பாற்றிக்கொண்டு அதிகாரப் பங்கு பிரிப்பில் தமது வர்க்க நலன் பேணும் உத்தியாக பயன்படுத்திய க.கா பொன்னம்பலம் போன்றவர்களின் கீழ்மையே ஈழத்தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு அடித்தளமிட்டது என்பதை இவ்விடத்தில் தெளிக.

ஆனாலும், குர்தியர்களின் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு என்பவற்றை துருக்கியமயமாக்கலில் இருந்து காப்பாற்றும் முனைப்பு படித்த குர்து இளைஞர்களிடம் தோன்ற குர்தியர்களின் விடுதலைக்கான ஒன்றியம் (Union of Independence of Kurd) எனும் அமைப்பை நிறுவிப் போராடினர். இந்த அமைப்பின் செயற்பாடுகளின் விளைவாக 30 இக்கும் மேற்பட்ட கிளர்ச்சிகள் நடந்தன. துருக்கியின் அரச படைகள் விரட்டப்பட்டு, சிறைகள் உடைக்கப்பட்டு கைதிகள் மீட்கப்பட்டு முன்னகர்ந்த வெற்றிகரமான போராட்டங்கள் கூட குர்தியப் பழங்குடிகளின் பழங்குடிக் குலப்பற்றின் மிகுதியால் ஏற்பட்ட அகமுரண்களை கூர்மைப்படுத்திப் பகையாக்கிப் பிரித்தாளும் துருக்கிய ஆளும் வர்க்கங்கங்களால் முடக்கப்பட்டது. குர்திய உழைக்கும் பழங்குடிகளின் துருக்கிக்கெதிரான இயல்பான போராட்ட எழுச்சிகள் எல்லாமே ஈற்றில் தமது பழங்குடிக் குல அரசியல் முனைப்பால் பயனற்றுப் போயின. குர்திய பழங்குடித் தலைவர்களின் செயற்பாடுகள் குர்திய தேசிய இனவெழுச்சி கொள்வதைத் தடுக்கும் வண்ணமே உள்ளன. தமிழ்நாட்டின் சாதிக்கட்சித் தலைமைகளின் செயற்பாட்டால் பயனடைவது இந்திய வஞ்சகர்களே என்பது விளங்க வேண்டும்.

முதலாம் உலகப்போரின் முடிவில் துருக்கி பலவீனமடைந்ததைத் தொடர்ந்து குர்தித்தான் என்ற குர்தியர்களின் தாயகம் தனிநாடாகும் வாய்ப்புக் கிட்டியது. ஆனாலும், துருக்கி, பிரித்தானியா மற்றும் பிரான்சு போன்ற நாடுகளின் நலன்கள் அடிப்படையிலும் குர்திய நிலக்கிழார்களின் விருப்பின் அடிப்படையிலும் குர்தித்தான் தனிநாடாகாமல் குர்தித்தான் என்ற குர்தியர்களின் வரலாற்றுத் தாயகம் அதன் தெற்குப் பகுதி ஈராக்கிடமும் தென்மேற்குப் பகுதி சிரியாவிடமும் கிழக்குப் பகுதி ஈரானிடமும் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதி துருக்கியிடமும் சிறுபகுதி அசர்பைசானிடமும் என கூறுபோட்டுக் கொடுக்கப்பட்டது. இவ்வாறாக குர்தித்தான் என்ற குர்தியர்களின் தேசம் 5 நாடுகளின் எல்லைப் பிரிப்புகளுக்குள் கூறாகிக் கிடக்கும் வரலாற்று அவலம் நிகழ்ந்தது. துருக்கியில் 2 கோடி குர்தியர்களும் (துருக்கியின் மக்கள் தொகையில் 26.4%), ஈரானில் 70 இலட்சம் குர்தியர்களும் (ஈரானின் மக்கள் தொகையில் 12.7%), ஈராக்கில் 40 இலட்சம் குர்தியர்களும் (ஈராக் மக்கள் தொகையில் 21.8%) மற்றும் சிரியாவில் 15 இலட்சம் குர்தியர்களும் (சிரிய மக்கள் தொகையில் 12.7%) ஆக குர்தியர்கள் தமது தாயகம் கூறுபட்டுப் போனதுடன் அகப்பட்டுக்கொண்டனர். அந்தந்த நாட்டின் மொழிகளை தமது மொழிகளாக ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தந்த நாட்டின் அரசியல், பொருண்மிய, சமூக சூழலுக்குள் தம்மை மாற்றிக்கொள்ளுமாறு திணிப்புகளுக்குள்ளாகி தமது மொழியையும் பண்பாட்டையும் காக்க முடியாமல் அந்தந்த நாட்டின் சூழலுக்குள் உள்வாங்கப்பட்டனர். துருக்கியில் உள்ள குர்து மொழிப் பள்ளிகள் அழிக்கப்பட்டன. குர்து மொழியில் பேசினால் நாட்டிற்கு இரண்டகம் இழைக்க சூழ்ச்சி செய்வதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். குர்தியப் பண்பாட்டு விழாக்களுக்குத் தடை. தடையை மீறி நடந்தேறிய குர்துகளின் மரபான விழா மீது கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈராக்கில் சதாம் குசைனின் காலத்தில் வகைதொகையின்றி குர்துகள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இப்படியாக குர்தியர்கள் 5 நாட்டில் 5 மொழி பேசி, ஐந்து நாட்டுப் பண்பாடுகளுடன் ஐந்து வகையான அரசியல், பொருண்மியச் சூழல்களுக்குள் கூறாகி தாம் ஒருவர் என்ற மனநிலை அற்றுப் போகும் இடுக்கண்ணிற்கு உள்ளானார்கள்.

இவ்வாறாக ஒரு நாற்பது ஆண்டுகள் காலவோட்டத்தில் தமது மொழி தெரியாத, தமது வரலாற்றுப் பெருமைகள்தெரியாத, தமது தாயகமும் தேசமும் எதுவெனத் தெரியான, தமது தனிப்பாங்கான பண்பாடுகள் எவையென அறியாத அந்தந்த நாடுகளுக்குள் அரசியலுரிமையற்ற இரண்டாந்தர குடிமக்களாக வாழப்பழகிவிட்ட ஒரு குர்தியத் தலைமுறை உருவாகியிருந்தது. இந்த நிலையில் இனி குர்தியர்களால் எந்தச் சிக்கலும் இல்லை தம்முள் கரைந்துவிடுவார்கள் என்ற எண்ணம் மேலிட மெத்தனப்போக்குடன் இருந்த துருக்கி, ஈராக், சிரிய மற்றும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு வரலாற்றுப் பாய்ச்சல் ஒரு புதிய தலைவலியைக் கொடுத்தது. அங்காரப் பல்கலைக் கழகத்தில் அரசறிவியலில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டிருந்த Abdullah Ocalan என்பவரும் அவரது நண்பர்களும் 1972 இல் இணைந்து முன்னெடுத்த ஆய்வில் குர்தித்தான் குர்தியர்களின் தேசம் என்றும் துருக்கியில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன எனவும் குர்துமொழி பேசினாலே சிறைப்படும் நிலையிலும் துணிச்சலோடு முன்வைத்த ஆய்வறிக்கையானது அரசியல் வடிவம் கொண்டு குர்திய கல்விச்சமூகத்திடம் பெரு விழிப்பை ஏற்படுத்தியது. குர்தியர்கள் குர்தித்தானை மீட்க வேண்டும் என்று களங்காண முன்வந்த குர்திய இளைஞர்களுக்கு குர்து மொழி கூடத் தெரிந்திருக்கவில்லை. பல்கலைக்கழகங்களுக்குள் ஒன்று கூடி குர்தியர்களின் அரசியல் மீட்சி பற்றி ஆய்ந்து செயற்றிட்டம் வகுத்து குர்திய மக்களிடம் சென்று செயற்பட ஆரம்பித்தார்கள். தொடர்ச்சியாக அவர்கள் “குர்தியர் தொழிற்கட்சி” (PKK) என்ற கட்சியை 1978 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். பழங்குடி குழுப்பற்று மிகுந்திருந்த குர்தியர்களிடத்தில் உழவர்களையும் தொழிலாளர்களையும் அணிதிரட்டி குர்தியதேசிய இனவெழுச்சியை உண்டு பண்ணுவதில் தோற்றுப்போன அவர்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்த கல்விச் சமூகத்தில் குர்திய தேசிய இனவெழுச்சினை ஏற்படுத்துவதன் மூலம் அமைப்பை வலுப்படுத்திவிட்டு மக்களிடம் செல்வதுதான் சரியான அணுகுமுறை என்பதை உள்வாங்கி குர்திய தொழிலாளர் கட்சி அரசியல் பணியாற்றியது.

30 ஆண்டுகள் அறவழியிலும் 30 ஆண்டுகள் மறவழியிலும் போராடி நிலமீட்புச் செய்து நிழலரசினை நிறுவியது வரை சென்ற பின்பு இனக்கொலைக்குள்ளாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களில் எஞ்சியோரும் வருகின்ற தலைமுறையும் இனி போராட்டம் குறித்த எந்த முனைப்பும் காட்டாதளவிற்கு முள்ளிவாய்க்காலின் பின்பான 10 ஆண்டுகாலவோட்டத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களால் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு விட்டதென்று எண்ணி எதிர்மறை உளப்போக்கில் சலிப்படைவோருக்கு குர்துமொழியே முறையாகத் தெரியாமால் குர்தித்தான் விடுதலைப் போராட்ட இயக்கத்தை தொடக்கி அதனை முன்னெடுத்த அப்துல்லா ஒசலான் தலைமுறையினரின் எழுச்சி நம்பிக்கைப் பேரொளியைப் பாய்ச்சும் என்பதுடன் அந்தச் சூழலில் துருக்கியின் இரும்புக்கோட்டைக்குள் அமைந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விடுதலை முனைப்பும் அவர்களின் ஆய்வின் நேர்மைத்திறனும் எங்கே எமது பல்கலைக்கழக இளவல்களிடம் தென்படவில்லையே எனும் கவலையையும் தமிழர்களிடத்தில் மேலிடச் செய்கிறது.

துருக்கியில் 1980 இல் General Lenan Evren தலைமையில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து குர்தியர்கள் மீது நரபலிவெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிரியாவுக்குள் மறைவிடம் தேடிய அப்துல்லா ஒகலான் அங்கிருந்து குர்திய தொழிலாளர் கட்சியை வழிநடத்தி “Operation August 15” என்ற பெயரிட்ட தாக்குதலை 1984 இல் துருக்கி இராணுவம் மீது நிகழ்த்தி எந்த ஒடுக்குமுறையாளனும் வீழ்த்தப்படக் கூடியவனே என்ற புதிய தென்பை குர்தியர்களுக்கு ஊட்டினார். வரட்டு மார்க்சியம் பேசி வெகுமக்களை அணிதிரட்டுவதில் சிக்கல்களை எதிர்நோக்கிய அப்துல்லா ஒகலான் நாம் குர்தியர்கள், நமது மொழி குர்து, நமது தேசம் குர்தித்தான் போன்ற முழக்கங்களுடன் குர்தித்தான் தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை 1985 இல் நிறுவி குர்து மக்களுடன் மிக நெருக்கமாகச் சென்று அரசியல் போராட்டத்தை மறவழியில் முன்னெடுத்தார். வளைகுடாப் போரின் போது ஈரான், ஈராக் போன்ற நாடுகள் முகங்கொடுத்த நெருக்கடி மற்றும் துருக்கி முகங்கொடுத்த பொருண்மியச் சிக்கல்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு ஈரான், ஈராக், சிரியா, துருக்கி என அனைத்து இடங்களிலும் ஒருசேரத் தாக்குதல் நடத்தும் அப்துல்லா ஒகலானின் முயற்சி தோல்வியையே கண்டது. ஏனெனில் நேட்டோவில் உறுப்புரிமை வகிக்கும் துருக்கி அமெரிக்காவின் உற்ற நண்பன். ஆகவே துருக்கியில் இருக்கும் குர்துகளைப் பொறுத்தவரை தம்மை ஒடுக்கும் துருக்கியின் நண்பன் அமெரிக்கா அவர்களுக்குப் பரமப் பகை. ஆனால் ஈராக்கில் இருக்கும் குர்தியர்களைப் பொறுத்தளவில் சதாம் குசைன் அவர்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்தான். அமெரிக்கா தனது நலனுக்காக ஈராக் மீது போர்தொடுக்கும் காலத்தை தமது தாயக நிலப்பரப்பை மீட்கும் நல்வாய்ப்பென ஈராக்கிலிருந்த குர்தியர்கள் முடிவுசெய்தனர். இதனால் ஈராக்கினுள் சிக்குண்டு கிடக்கும் குர்தியர்களின் வான்பரப்பின் மீது ஈராக் வானூர்திகள் பறக்கத்த்டை ஏற்பட்டதோடு அமெரிக்காவுடன் இணங்கி ஈராக்கினை பலவீனப்படுத்தித் தமது தாயக நிலப்பரப்புகளை மீட்கும் எண்ணமே ஈராக்கிலுள்ள குர்தியர்களிடம் இருந்ததென்பதோடு தனிப்படை வைத்திருக்குமளவுக்கு தனித்த ஆட்சியதிகாரம் உள்ள பகுதியை ஈராக்கில் அமைக்கும் அளவுக்கு குர்தியர்களுக்கு இது வாய்ப்பானது. இவ்வாறு வேறுபட்ட அரசியல் சூழல், ஏற்கனவே அந்தந்த நாடுகளுக்குள் நீண்ட காலம் வாழ நேர்ந்ததால் “நாம் ஒருவர்” என்ற மனநிலை அவ்வளவு வலுவாக வேறு வேறு நாடுகளில் வாழுவது கடந்து ஏற்படாமை போன்றவற்றால் ஒட்டுமொத்த குர்தித்தான் மீட்பு என்பது சிக்கலாகவே இருந்தது.

ஆனால், தமிழகத்தையும், தமிழீழத்தையும் வரலாற்றுத் தாயகமாகக் கொண்டு இரு தேசங்களாக தேச அரசுகளை நிறுவும் முனைப்போடு போராடி வரும் தமிழினம் பன்னெடுங்காலத்திற்கு முன்னர் அதாவது கடல்கோல் கொள்ள முன்பு ஏழ்தென்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்கொன்றநாடு,ஏழ்குளக்கரை நாடு, குமரி, கொள்ளம், பன்மலைநாடு என 47 நாடுகளாக வடக்கே வேங்கடமும் தெற்கே தென்குமரியுமென கிழக்கும் மேற்கும் கடல்சூழ குமரிக்கண்டமாய் வாழ்ந்து கடல்கோல் கொள்ளப்பட்ட பின்பாக மீண்டும் நாகரீகமமைத்து பின்பு அரசுருவாக்கம் நிகழ்ந்து சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, நாஞ்சில்நாடு, கொங்குநாடு என காலத்திற்குக் காலம் ஆட்சிப்புல அடிப்படையில் தமிழர் நாடுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழீழதேசமும் இதே வரலாற்றுப் பின்னணியையே கொண்டது. தமிழர்கள் தமக்கென செழுமையானதும் தொன்மமாமனதும் அறிவுக்கூறுகளைத் தன்னகத்தேகொண்டு மாற்றாரின் வன்வளைப்பிலும் மொழிச்சிதைவுக்குள்ளாகாமல் தனித்தியங்குமாற்றல் காத்து, செழிப்பான அறிவாழம் கொண்ட கலை, இலக்கியம், காப்பியம், இலக்கணம் படைத்து உயரிய வாழ்நெறியோடும் பண்பட்ட வாழ்வுமுறையோடும் அறிவதுகொண்டு புதியன படைத்து இயற்கையுடன் ஒன்றித்து அறம் போல் மறமும் போற்றி மொழி காத்து மானங்காத்து ஒப்பாரும் மிக்காருமில்லா வளர்வெய்தி வளர்ந்த தமிழினம் காலனியக் காலத்தில் அவர்கள் ஏற்படுத்திய எல்லைப் பிரிப்பில் கூட பெரியளவிற்கு தமிழர் என்ற ஒர்மைச் சிந்தனை சொல்லுமளவிற்கு குலையாது தமிழகத்திலும் தமிழீழத்திலும் வாழ்ந்து வந்தது. சி.வை.தாமோதரம்பிள்ளை என்ற ஈழத்தமிழரே Madras University இன் முதற்பட்டதாரி என்பதுடன் Madras உயர் நீதிமன்றத்தின் நீதியரசராகவும் இருந்தார். கிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட ஈழத்தடிகள் ஈழத்தவரே.

ஈழத்திலிருந்து தமிழகம் போந்து கல்வி பயிலும் மரபே அன்றைக்கிருந்தது. தமிழகத்தில் எழுந்த இந்தி எதிர்ப்பு உணர்வே கருத்தூடகங்கள் மூலமும் தமிழ்நாட்டுஈழ ஊடாட்டத்தினூடும் சிங்கள சிறி எதிர்ப்புப் போராட்டத்திற்கு கருத்தியலடிப்படையில் கால்கோளிட்டது. தனித்தமிழியக்கத்தை நிறுவிய மறைமலையடிகள் தனது மகளை ஈழத்தில் திருமணம் செய்துகொடுத்ததைத் தொடர்ந்து தனித்தமிழியக்கச் செயற்பாடுகளை ஈழம் வந்து முன்னெடுத்தார். தமிழினத்தினதும் தமிழ்மொழியினதும் பண்பாட்டுத்தொட்டிலாகவும் இயங்குதளமாகவும் ஈழத்தவர்களால் தமிழகமே நோக்கப்பட்டது. .கா பொன்னம்பலம் வகையறாக்களின் பிரித்தானிய ஆங்கில பல்கலைக்கழகங்களின் மீதான ஈர்ப்பு முனைப்புப்பெற்று அதற்கான சந்தைப்படுத்தல் அதிகமாகும் முன்னர் தமிழகஈழ அறிவுத்தள உரையாடல் மற்றும் சிந்தனை முறை ஒரு இழைப் பண்புடையதாயிருந்தது. பின்பு சிறிமா காலத்தில் தமிழில் கற்கைநெறிகள் கொண்ட பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதன் பின்னால், ஈழ- தமிழக அறிவுத்தளவுரையாடலும் தமிழ்நாட்டின் தாக்கமும் அந்த நெருக்கமான உறவும் தொடராமல் ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டின் அறிவுமரபுத் தளத்திலிருந்து தனிமைப்படுத்தி நாளடைவில் சிங்கள மேலாதிக்கத்திற்கு கேடில்லா வண்ணம் தமிழறிவுத் தளத்தைக் குறுக்கிக்கொள்ளும் வடுகச் சூழ்ச்சி அதிலிருந்ததாக ஈழத்தறிவர்களில் ஒருவரான மதிப்புமிக்க ஐயா எஸ்.பொ ஒரு பேராசிரியருடனான அவரது வழக்கமான உரையாடலில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதன் வரலாற்றுப் பின்னணியையும் அதன் இன்றைய விளைவுகளையும் நோக்குமிடத்து எஸ்.பொ வின் கூற்றின் மெய்மையுணர்ந்து இதனைச் சீர்செய்ய ஈழத்தமிழர் விரைந்தியங்க வேண்டியது காலத்தின் தேவையென்பதையும் உணர்த்துகின்றது.

உண்மையில் நீண்டகாலமாக தமிழகம் இந்தியாவின் ஆட்சியில் இருப்பதாலும் தமிழீழம் சிங்கள பௌத்த பேரினவாத ஆளுகையில் இருப்பதாலும் உண்மையில் தமிழகத் தமிழர்களிடம் நுகர்வுப் பண்பாடு மற்றும் பொருண்மியப்பண்பாட்டுத் தளத்தில் இந்தியத் தாக்கம் இருப்பது போலவே, ஈழத்தமிழர்களிடமும் நுகர்வுப் பண்பாட்டில் சிங்களத்தாக்கம் உள்ளது. இந்தியத்திற்கும் சிங்களத்திற்கும் இந்தத் தாக்கங்கள் எங்கிருந்து வந்தது என்ற வாதத்தைத் தாண்டி அவர்களின் ஆளுகைக்குள்ளிருப்பதால் தமிழர்களுக்கு இந்தத் தாக்கம் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது என்பதே இங்கு சுட்டப்படுகிறது. தமிழகத்தில் சப்பாத்தி, பாணிப்பூரியும் தமிழீழத்தில் சரம் (தமிழகத்தில் கைலி, லுங்கி என்றழைப்பர்) உடுத்தல் போன்றன இது குறித்து உரையாடுகையில் கண்முன்வருகிறது. அத்துடன் போர்த்துக்கேயரின் ஆட்சியில் வாழத்தலைப்பட்டமையால் யாழ்ப்பாணத்தவர்களிடம் நுகர்விலும் மொழி வழக்கிலும் போர்த்துக்கேயத் தாக்கம் மிகுந்திருக்கும். தமிழகத்தில் காலனித்துவ காலத்தின் முன்பு வடுகர் ஆட்சியாலும் இசுலாமிய படையெடுப்புகளாலும் பின் ஆங்கிலேயர்களாலும் பேச்சு மொழிநடையிலும் நுகர்வுற்பத்தி முறையிலும் மாற்றாரின் தாக்கங்கள் மிகுந்தன. அத்துடன் ஈழத்தில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் ஆறுமுகநாவலர் போன்றவர்களின் இழிவான செயற்பாடுகளில் இழிவான மணிப்பிரவாள நடையை தமிழில் புகுத்தியமை நடைபெற்றதால் பேச்சுவழக்கில் மணிப்பிரவாள நடை ஏற்படுத்திய தாக்கம் என சில வேற்றுமைகள் தென்பட்டாலும், உண்மையில் மாற்றாரின் தாக்கத்தினை இனங்கண்டு கழற்றியெறிய முன்வந்து தமிழர்கள் மேலும் தமிழ்த்தன்மையடையும் போது வெளித்தெரியும் சிறு பண்பாட்டு வேறுபாடுகளும் மறைந்துவிடும். அரசறிவியலின் படி நோக்கில், தமிழீழம் மற்றும் தமிழகம் ஆகியன தமிழர்களின் இரு தேசங்கள். இந்த இரு தேசங்களும் தேச அரசமைத்து தமிழகமும் தமிழீழமும் வரலாற்றில் தமிழர் நாடுகளாக மீட்கப்பட வேண்டும். தொப்புள் கொடியுறவு என்ற தாய்- பிள்ளையுறவென்பதைக் கடந்து தெற்காசியாவில் ஒடுக்கப்பட்ட இரு தேசத்தவர்களாக தமிழக மக்களும் தமிழீழ மக்களும் இருக்கின்றார்கள். தமிழக, தமிழீழ விடுதலைக்குத் தடையாக இருப்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா. சிங்கள ஆட்சியாளர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழீழத்தை கொடுத்தால் கூட இந்தியா அதனை ஏற்காமால் எப்பாடு பட்டேனும் தமிழர் நாடடைவதை தடுக்கும் என்ற டேவிட் ஐயாவின் கூற்றை மீள் நினைவுபடுத்துவதோடு தேசிய இனங்களின் சிறைக்கூடம் மட்டுமல்ல இந்தியா. ஆரிய மாயை இந்தியா தமிழரினத்தின் வரலாற்றுப் பகை என்பதை தமிழர்கள் மறக்கக் கூடாது.

ஈழ- தமிழக பொது அரசியற் செயற்பாட்டு வெளி உருவாக வேண்டிய காலகட்டமிது. இதனைத் தடுக்க மேற்குமயப்பட்ட அல்லது சிங்கள மயப்பட்ட தமிழ்பேசும் ஈழத்தினை பிறப்பிடமாகக் கொண்ட குறைக்கூட்டங்கள் முனைவர். அதேபோல இந்தியமயப்பட்ட தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் மாற்றார்களும் முனைவர். ஈழத் தமிழர்களிலும் தமிழகத் தமிழர்களிலும் தமது தமிழ்த்தன்மையினளவையும் தாம் மாற்றாரின் தாக்கத்தில் வாழும் உண்மை புரியாமல் மாற்றாரின் தாக்கத்தால் விளைந்தவையைத் தமது தனித்துவமென்று நினைக்கும் அறிவுகுன்றியோர் உளர். அவர்களும் இது குறித்து அறிவு பெற்று இப்பத்தி வலியுறுத்தும் விடயம் பற்றி தெளிந்துகொள்ளல் வேண்டும். உண்மையில் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி சொல்லும் செய்தி தமிழர்களின் தொன்மம் பற்றியது மட்டுமல்ல. அங்கு காணக்கிடைத்த பெயர்களில் ஒன்றானதிசன், தீசன்என்பனவற்றை நோக்கினால், இலங்கைத்தீவுக்கு பௌத்தம் இலங்கைத்தீவில் ஒரு பகுதியை ஆண்ட தேவநம்பியதீசன் காலத்தில் கி.மு.247 இல் வந்ததாக சிங்கள வரலாற்று நூல்கள் கூறுகின்றன. கீழடியில் இந்தப் பெயர் தமிழருடையதாக தமிழ் தொல் எழுத்தில் காணக்கிடைக்கிறது. எனவே, இலங்கைத்தீவிற்கு பௌத்தம் வரும்போதும் தமிழர்களே ஆண்டார்கள் தமிழர்களே அங்கு வாழ்ந்தார்கள். அதனை சிங்கள வரலாற்றுப் புரட்டு சிங்களம் எனப்பார்க்கிறது. ஆனால் கீழடி இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மைக்குத் தட்டிக்கழிக்க முடியாத சான்றைக் காட்டுகிறது. எனவே, தமிழ்மொழி வளர்ச்சி, தொல்லியல், கல்வெட்டியல், அறிவியல், தமிழர் மருத்துவம், கலை, பண்பாடு என அனைத்துத்தளங்களிலும் ஒரு குவியச் செயற்பாடும் இயங்குதளமும் ஈழத்தமிழருக்கும் தமிழகத் தமிழருக்கும் இடையில் பொதுவான அரசியல் தன்மை பெற்று இயங்க வேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் இனியும் தாமதிக்க முடியாதது என்பதை விளாங்கிக்கொள்ள வேண்டும். 5 வகையான தன்மை மாற்றங்களுக்குட்பட்ட அரசியல், சமூக, பொருண்மியச் சூழலில் வாழும் குர்தியர்களுக்கு தாம் ஒருவர் என்ற அரசியலில் நம்பிக்கையும் செயல்வீச்சும் உள்ளதென்றால், தமிழகமும்ஈழமும் இயன்றவரை பொது அரசியல் தளத்தில் இயங்குவது மிக இலகுவானதும் தேவையானதுமாகும்.

இப்படியாக குர்தியர்களின் போராட்டத்தை அழிப்பதற்காக அதன் தலைமையை கைது செய்யும் நோக்குடன் துருக்கி கொடுத்த அழுத்தத்தால் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட குர்தியர்களின் தேசியத் தலைவர் அப்துல்லா ஒகலான் பின் இத்தாலியில் அரசியல் தஞ்சம் புகுந்து பின் அமெரிக்காவின் அழுத்தத்தால் அங்கிருந்தும் வெளியேற்றப்பட வேறு நாட்டுக்குத் தப்பும் முயற்சியிலிருக்கும் போது கென்னியாவின் நைரோபியில் வைத்து துருக்கியின் தேசிய புலனாய்வுத்துறையும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ யும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 1999 இல் கைதுசெய்யப்பட்டு துருக்கியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்பு துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றதால் விலக்கிக்கொள்ளப்பட்ட மரணதண்டனை ஒகலானிற்கு வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

சிறையில் தமது தேசியத் தலைவர் இருக்கும் போதும் குர்தியர்களின் தன்னாட்சியுரிமைக்கான போராட்டம் தொடர்கிறது. ஐ.எஸ் இசுலாமியப் பயங்கரவாதிகளை எதிர்க்க அமெரிக்க ஆதரவு கொண்டு களம் கண்ட குர்தியர்களின் போராட்டத்தை எடுத்துக்காட்டாகக் காட்டி முள்ளிவாய்க்காலின் பின்னர் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் பாதம்பணிந்து அடிவருடிகளாக செயற்படுமாறு வழிகாட்டல்கள் கொடுத்த புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் அமெரிக்கப் படைகள் துருக்கியை விட்டு வெளியேறி தமக்கு ஐ.எஸ் மீதான தாக்குதல்களுக்குப் பயன்பட்ட குர்தியர்களை துருக்கியின் அரச பயங்கரவாதப் படைகள் கொல்லுவதற்கு வாய்ப்பளித்துச் சென்றதைப் பேசாமல் ஒழிந்துவிட்டார்கள். எனவே மேற்கின் தயவில் தமிழர் உரிமைபெறலாம் என விடுதலைக்குக் குறுக்குவழி சொல்லும் எண்ணத்தில் குழி பறிக்கும் வழியைச் சொல்லாமல், தமிழர்கள் தமக்கான அரசியலை தமிழகம்- ஈழம் என்ற அரசியல் பொதுத்தளத்தில் இயலுமானவரை கட்டியமைத்து தமிழீழம், தமிழகம் என்ற ஒடுக்குண்டிருக்கும் தமிழர் தேசங்களை மீட்டுத் தேச அரசமைக்கும் திண்ணத்துடன் போராடுவதே ஒரேவழியென உரக்கப் பறைக. இதுவே குர்தித்தானின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் தமிழர்களுக்கு அளிக்கும் வரலாற்றுப் பாடம்.

-சேதுராசா-

2019/10/24

Loading

(Visited 27 times, 1 visits today)