தமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது- இது கீழடியின் காலம்- –காக்கை-

60 ஆண்டுகள் தமிழர்களின் அற, மற வழிப்போராட்டங்களில் விடுதலை அரசியலை முழுமையாக உள்வாங்காதவர்களுக்கு முள்ளிவாய்க்காலின் பின்பிலிருந்து இற்றை வரையான 10 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நல்ல மீட்டல் வகுப்பினைக் காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்த மீட்டல் வகுப்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் செய்தியென்னவென்றால் “விடுதலைக்குக் குறுக்குவழி என்பது இல்லை. அப்படிக் குறுக்குவழிகளெனச் சொல்லப்படுபவை எல்லாம் குழிபறிக்கும் வழிகளே”. அத்துடன் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒருபோதும் தெற்காசியாவில் ஒரு தேசிய இனவிடுதலைப் போரை அழிப்பதற்குப் பின்நிற்காது என்பதுடன் அது துண்டு துண்டாய் ஆகும் போகும் உலகில் பல தேசிய இனங்கள் தேச அரசுகள் அமைக்கும் என்பதுடன் எந்தப் பேயரசுகளின் தயவிலும் தங்கியிராமல் தமிழ்நாடு என்ற தேசமும் தமிழீழம் என்ற தேசமும் விடுதலை பெற விரைந்தியங்குவதொன்றே தமிழரிற்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி என்ற விளக்கவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் படைத்துறை அடிப்படையிலும் மிகத் திறமையான திட்டமிடல்களினாலும் மக்களுக்கேயுரிய தமிழீழ அரச கட்டமைப்புகளினாலும் தமிழீழம் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசினால் கனவிலும் வெற்றிகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே மாவீரர்களின் ஈகத்தாலும் மக்களின் பங்களிப்பாலும் நிமிர்ந்து நின்றது. நிலைமை அவ்வாறிருக்கையில் தான், தெற்காசியாவில் தேசிய இனவிடுதலையை அடியொட்ட வெறுக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா தனது வரலாற்றுப் பகையான தமிழரினத்தின் மேல் தான் கொண்ட கொடும் பகையுணர்வின் மேலீட்டால் தமிழர் தனித்தேசம் அமைவதை எப்பாடுபட்டேலும் தடுக்கும் முனைப்புடன் தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையை திட்டமிட்டு, வடிவமைத்து மேற்குலகின் முழு ஒத்துழைப்பையும் சிங்கள தேசத்திற்குப் பெற்றுக்கொடுத்து முன்னெடுத்த தமிழினப்படுகொலைக்கு போர்ப்பொருண்மியமீட்டும் நோக்குடன் சீனா, பாகித்தான் போன்ற நாடுகளும் முழு ஆதரவு கொடுத்து பங்காற்றின.

உண்மையில் இந்த அழிவானது, உலகிலுள்ள தேசிய இன விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு பாரிய சோர்வைத் தந்திருக்கிறது. பல தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மறவழிப் போராட்டத்தின் மூலம் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதில் நம்பிக்கையிழந்து இடைக்காலத் தீர்வு, உள்ளகப் பொறிமுறையில் அதிகாரப் பரவலாக்கம், பகிரப்பட்ட இறைமை போன்ற காயடிப்புச் சூழ்ச்சிகளுக்குள் மாட்டிக்கொண்டது.

இனி மறவழிப் போராட்டத்தால் எந்தப் பயனும் கிட்டாது மாறாக மீளா அழிவுதான் கிட்டும் என்ற பரப்புரையை இந்தியாவின் உளவு அமைப்பு பல தளங்களில் ஊடகங்கள் அடங்கலான தனது கருத்தியல் அடியாட்கள் மூலம் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களின் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவிச் சென்று பரப்பியது. தமிழீழ விடுதலையின் புரட்சிகர அமைப்பின் தோல்வி என்பது எக்காலத்திலும் மறவழிப் போராட்டத்தின் தோல்வியாகாது என்பதை விடுதலைக்காகப் போரிடும் ஒடுக்குண்ட தேசிய இனங்களுக்குச் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தவிப்பு நிலையிலும் தமிழீழ மக்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில், தேசிய இனங்கள் விடுதலை பெற்ற தேசங்களை தெற்காசியாவில் நிறுவத் தொடங்குவதுடன் உடைந்து சிதறப் போகும் வரலாற்று ஓட்டத்தில் இருந்து தப்பிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே தமிழீழ விடுதலை அமைப்பினை போரில் வென்று தமிழர்களை அழித்தமையை இந்தியா கருதியது.

நாகலாந்தின் விடுதலை அமைப்புத் தான் மறவழிப்போரைக் கைவிட்டு பகிரப்பட்ட இறைமை போன்ற கதையளப்புச் சூழ்ச்சிக்குள் போவதற்கான காரணங்களை அடுக்குகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற முப்படைகளையும் கொண்ட மிக வலுவான விடுதலை இயக்கம் போரில் அழிக்கப்பட்டமையைத் தாம் கருத்தில் கொண்டும் தான் அந்த முடிவுக்குத் தாம் வருவதாகச் சொல்லி இருக்கிறது. எனவே, தமிழீழ மக்களின் விடுதலை அமைப்பு அழிக்கப்பட்டமைக்கான காரணத்தையும் அதில் முதன்மைப் பங்காற்றிய இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் பற்றிய தகுந்த தெளிவில் உலகளாவிய போராடும் மக்களுக்கும் குறிப்பாகத் தெற்காசியாவில் ஒடுக்குண்டிருக்கும் விடுதலை மறுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் இன்னும் குறிப்பாக இந்தியாவிற்குள் சிறைப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கும் சொல்ல வேண்டிய புரட்சிகரக் கடமை தமிழீழ விடுதலைக்காக மிகப்பெரிய ஈகங்களைச் செய்த தமிழீழ மக்களுக்கும் அதை முன்னெடுத்த புரட்சிகர அமைப்பின் எஞ்சியுள்ள ஆளுமைகளுக்கும் உண்டு.

 

ஆனால், மாறாக விடுதலைப் புலிகள் என்ற பெயரினைப் பயன்படுத்தி இந்திய உளவுத்துறை சில குறைக்கூட்டங்களிற்கு அறிவுறுத்தி தன்னை நக்கிப் பிழைப்பதே தமிழருக்குத் தீர்வு என்ற மாயையை ஊடகங்கள் வாயிலாக பரப்புகிறது. இதற்கு  விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து களமாடிய போராளிகளைப் பல வலைகள் வீசியும் அழுத்தங்கள் கொடுத்தும் இணங்க வைக்க முயன்ற இந்திய உளவு அமைப்பிற்கு அப்படியொரு போராளியைத் தன்னும் முழுமையாக தனது நலனுக்கேற்றாற் போல மாற்ற முடியாமலோ அல்லது பிரபாகரன் என்ற அந்த விடாப்பிடிக்காரனின் அமைப்பில் அவருடன் கடைசி வரை கூட இருந்த போராளிகளை இந்திய நிகழ்ச்சி நிரலில் முழுமையாக இயங்க வைக்க முடியாது என்ற புரிதலினாலோ, பூனைகளை அழைத்துச் சூடுபோட்டுப் புலியாகக் காட்டித் தனது நலனுக்கேற்ப புலிப்பெயரில் அறிக்கைவிடக் காத்திருந்த இந்திய உளவு அமைப்பிற்கு அப்படியொரு வாய்ப்பும் கிட்டாமல் போக, கேவலம் எலிகள் இரண்டைப் பிடித்து அதுவும் சுண்டெலிகள் இரண்டைப் பிடித்து புலிகளின் பெயரில் அறிக்கை விட்டு இந்தியாவிடம் தமிழர்கள் நக்கிப் பிழைப்பதே ஒரேவழியென புலிகளின் பெயரால் இந்திய உளவு அமைப்புப் பரப்புரை செய்து வருகிறது.

ராசீவ்காந்தி கொலை என்பது ஒரு பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சியாம். அதில் அந்த பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சிக் கண்ணியில் விடுதலைப் புலிகள் ஏதோ ஒரு இடத்தில் தொடர்புபடுகிறார்களாம். அதில் அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி பிரேமதாசாவுடன் ஏற்பட்ட உடன்பாடு மற்றும் சந்திரசுவாமி, சுப்பிரமணியசுவாமி போன்றோர் அடங்கலான தொடர்பும் அந்தக் கொலையில் உண்டாம். அந்தக் கொலையை முன்னின்று நடத்திய சிவராசன் என்பவருக்கு இந்திய அதிகாரவர்க்கத்துடன் தொடர்பு கண்டிப்பாக இருந்திருக்குமாம். மொத்தத்தில் விடுதலைப் புலிகள் ஒரு ஒப்பந்தக் கொலையில் பங்கெடுத்திருக்கிறார்களாம். இதனால் தான் தமிழர்களை இந்தியா அழித்ததாம்என்றவறான நச்சுக்கருத்தேற்றங்களை தாம்பத்தியப் பாதிரி யெகத் கசுபர் போன்ற வேடதாரிகள் மூலம் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தின் உளவுப்பிரிவு தொடர்ச்சியாகச் செய்துவருவதுடன் இப்படியான கருத்தேற்றங்களின் போது தமிழர்கள் எதிர்வினையாற்றும் முன்பே தமிழர்கள் இந்தியாவை நக்கிப்பிழைத்து இந்தியா ஆடும் தமிழரின் மீதான அத்தனை கொலைவெறியாட்டங்களையும் கைகூப்பி ஏற்கவேண்டுமே தவிர எதிர்த்துப் போராடக்கூடாது என்ற வகையிலான கூட்டுளவியலை தமிழரிடத்தில் ஏற்படுத்தும் பொறுக்கித்தனமான சிந்தனையுருவாக்கத்திற்கு இந்த லதன், குருபரன் போன்ற சுண்டெலிகள் இந்திய ஆளும்வர்க்கத்தின் இழிநிலையுளவமைப்புக்கு பயன்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து தகுந்த எதிர்வினையாற்றி இந்தியத்தின் நச்சுக் கருத்தேற்றத்தை முறியடிப்புச் செய்ய வேண்டிய காலக் கடமையை உணர்ந்து இப்பத்தி சில வலியுறுத்தப்பட வேண்டிய மிள்நினைவூட்டல்களை செய்யும் நோக்குடனும் பொறுக்கிக் கருத்தாடல்களைக் கட்டுடைப்புச் செய்யும் நோக்குடனும் எழுதப்படுகிறது.

மாந்தகுல எதிரி ராசீவ்காந்தி

காலனியர்களின் நம்பிக்கைக்குரிய முகவரான நேருவின் பேரன் ராசீவ்காந்தி என்பவர் செல்வக்கொழிப்பின் ஊதாரி வாழ்வில் உலகம் சுற்றி உல்லாசத்தில் திளைப்பதை வாழ்வாகக் கொண்டிருந்த போது அவரது தாயார் இந்திராவின் மறைவைத் தொடர்ந்து தமது குடும்ப ஆட்சியைக் காப்பாற்ற ஓடி வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நாள் முதல் இந்திய வன்வளைப்பிற்குள் ஒடுக்குண்டு கிடக்கும் பல வேறு தனித்த தேசிய இனங்களைச் சீண்டுவதும் ஒடுக்குவதுமாக நடந்த பன்னாட்டு வணிகத்திற்காக இயலுமானவரை ஊழல்கள் செய்தும் கூட்டிக் கொடுத்துத் தரகு பெற்றும் இழிநிலை ஆட்சிக்கு அடித்தளமிட்டார். இந்தப் பன்னாட்டு வணிகத்தின் ஊழல் மற்றும் தரகு வலையமைப்பில் இருக்கும் அமெரிக்க உளவு அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சவுதி நாட்டைச் சேர்ந்த பெரு வணிகனும் போர்க்கருவிகளை விற்றல் அடங்கலான மிகப்பெரும் கறுப்புச் சந்தை வணிகப்புள்ளியான அட்னன் கசோக்கி மற்றும் பணப் பரிமாற்றங்களை சிக்குப்படாமல் அறக்கட்டளைகள் மூலம் பன்னாட்டுத் திருட்டு வணிகருக்கு மாற்றுவதுடன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வெள்ளையாக மாற்றி வெளிநாடுகளில் முதலிட்டுக் கொடுப்பவருமான சந்திரசாமி என்ற அரசியல் தரகர் போன்றவர்களுடன் ராசீவ்காந்திக்கு ஒட்டான உறவுகள் உண்டு.

பதவிக்கு வந்த மறுநாளிலிருந்து தனது தாயைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள் தம்மைத் தனித்த தேசிய இனமாக வளர்த்து வருவதோடு தமக்கான தனித்த தேசம் அமைக்கும் வாஞ்சையுடன் இருப்பதாலும் வட இந்திய நகரங்களில் சீக்கியர் மீது கொலைவெறியாட்டம் ராசீவ்காந்தியால் கட்டவிழ்த்து விடப்பட்டது. அத்துடன் வட கிழக்கிலுள்ள தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மீது என்றுமில்லாதவாறு ஒடுக்குமுறையை ராசீவ்காந்தி பதவிக்கு வந்து மிகச் சில மாதங்களிலே ஏவினார். உளவுத்துறை மூலம் காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காலித்தானில் பல சூழ்ச்சிகளைச் செய்து அந்த இடங்களில் குருதியாறு ஓடச் செய்து அந்த மக்களின் மனதில் அழித்தொழிக்கப்பட வேண்டியவனாக ராசீவ்காந்தி இடம் பிடித்தார். இதனால் ராசீவை அழித்தொழிக்கும் எண்ணத்தில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சீக்கியரின் காலித்தான் விடுதலை இயக்கங்கள் என்பன இருந்தன.

ராசீவ்காந்தி ஊழல் செய்வதற்காக வாங்கிய வானூர்தியில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்தமை, ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விசவாயு விபத்துக்கு காரணமான யூனியன் நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளை தப்புவிக்கச் செய்யப் பணம் பெற்றமை, 155mm Artillery எறிகணை செலுத்திகள் 410 சுவீடனிடமிருந்து தனது இத்தாலிய மனைவி சோனியாவின் இத்தாலிய உறவினர்களுடன் சேர்ந்து கொள்வனவு செய்ததில் கோடி கோடியாக ஊழல் செய்தமை என ராசீவின் ஊழல் செயற்பாடுகளைப் பட்டியற்படுத்தினாலே விடயமறிந்தவர்களுக்குப் புரியும் இப்படியொரு ஆட்சியாளரைத் தான் பன்னாட்டு வணிகக் கும்பல்களிற்குப் பிடிக்கும் என்பது.

ராசீவ்காந்தி என்ற கொடுங்கோலன் காலத்தில் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட நரபலிவெறியாட்டங்கள்

ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்படாமல் இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராசீவ்காந்தியும் தமிழர்களின் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் மேற்கொண்ட இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்குச் சில நாட்கள் முன்னரே தலைவர் பிரபாகரனை டெல்கிக்கு அழைத்து அசோகா விடுதியில் தங்க வைத்துக் கேவலப்படுத்தும் வகையில் சில்லறைத்தனமாக நடந்துகொண்ட பின்பு ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு ஒரு நாள் முன்பே ராசீவ்காந்தி தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் மறுத்தாலும் ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என மெத்தனமாகவும் தமிழர் மீது ஏளனமாகவும்  நடந்துகொண்டமையுடன் தனது இழிசெயலைத் தொடங்கிய இந்தியக் கொடுங்கோலர்கள் இறுதி நேரத்தில் தேர்தல் நடக்கும் வரை விடுதலைப் புலிகள் தலைமையில் இடைக்கால நிருவாகத்திற்கு பல நெருக்குதல்களின் பின்னர் உடன்பட்ட பின்னர் அப்பட்டமாக ஏமாற்றியவாறே விடுதலைப் புலிகளிடம் போர்க் கருவிகளைக் களைந்து ENTLF என்ற தன்னால் உருவாக்கப்பட்ட நரபலிக் கூலிப்படையிடம் கொடுத்துப் புலிகளை அழிக்க முனைந்தமை, சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படும் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான அத்தனை அரசியல்கைதிகளும் விடுவிக்கப்ப்படுவர் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெருமளவிலான அரசியல் கைதிகள் மீது பாராமுகமாகவும் தமிழர்களின் நிலங்களில் குறிப்பாக தென் தமிழீழத்தில் ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டும் காணாததுமாக இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணம் வடகிழக்காக இணைவது தொடர்பாக ஒப்பந்ததில் குறிப்பிட்டவாறு கிழக்கில் தேர்தல் நடக்க நேர்கையில் வடக்குகிழக்கை நிரந்தரமாகத் துண்டாடும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைய உதவுமென்ற சூழ்ச்சி எண்ணத்துடன் ஏற்றமை, ஈகி லெப்.கேணல் திலீபனை அணுவணுவாகச் சாகவிட்டு வேடிக்கை பார்த்தமை, முதன்மையான தளபதிகள் அடங்கலான 12 போராளிகளை ஒப்பந்தத்தின் படி பொறுப்பேற்காமல் சிறிலங்கா இராணுவத்தின் கொழும்புச் சித்திரவதைக் கூடங்களிற்கு கூட்டிச் செல்ல அனுமதித்ததால் அவர்கள் தாம் வரித்த உயர்ந்த இலட்சியத்தின் படி நஞ்சுக் குப்பி கடித்து வீரச்சாவடைய காரணமாகியமை, மக்கள் போராட்டத்தின் உன்னத வகையான தமிழீழ மக்களின் கரந்துறை போர்முறைக்கு (Guerrilla Warfare) ஈடுகொடுக்க வக்கற்ற நரபலி இந்திய வன்வளைப்புப் படைகள் கண்மூடித்தனமாக மக்கள் மீது எறிகணைகளை வீசி 29 மாதங்களில் 15,000 வரையான மக்களைக் கொன்று குவித்தும் 30,000 வரையான மக்களைக் காயத்திற்குள்ளாக்கியும் 3000 இற்கும் அதிகமான மக்களை உறுப்புகள் இழந்தவர்களாக்கியும் 2000 இற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரையான பெண்களை உலகின் மாந்த குல நாகரிகத்தின் ஏடறிந்த வரலாறுகளில் என்றும் இடம்பிடிக்காதளவில் இந்திய வன்வளைப்புப் படைகள் தமிழர்கள் மீது நரபலி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்தமை என எண்ணிலடங்காத சேட்டைகளைச் செய்த தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் நரபலியாட்டத்தின் மீதான தமிழர்களின் அறச்சீற்றமே ராசீவ்காந்தி என்ற கீழினப் பாசிச வெறியன் மீது பாய்ந்த புலிகளின் தற்கொடைத் தாக்குதல். இந்திய நரபலியாட்டம் தமிழீழத்தில் அரங்கேற்றிய வெறியாட்டத்தை மிகவும் நேர்த்தியாக விடுதலைப் புலிகள் ஆவணப்படுத்திச் “The Satanic Force- சாத்தானின் படைஎன்ற நூலாக்கி இருந்தார்கள். இந்த நூல் ராசீவ் அழித்தொழிக்கப்பட்ட பின்பு இந்திய உளவுத்துறையால் கைப்பற்றப்பட்டுத் தடை செய்யப்பட்ட நூலாகியது. அந்த நூலைப் படிப்பவர்களுக்கு ராசீவ் மீதான அழித்தொழிப்பு என்பது எவ்வளவு தெளிவுடனும் மேலிட்ட அறச்சீற்றத்துடனும் மிகுந்த அரசியல் தெளிவுடன் நிகழ்த்தப்பட்டது என்பது எளிதில் புரியும். இந்த அழித்தொழிப்புக் குறித்து விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான கிட்டுவிடம் கருத்துக் கேட்ட போது “நாங்கள் செய்யவில்லை. முடிந்தால் யார் செய்தார்கள் என இந்தியா கண்டுபிடிக்கட்டும்” என்று புலிகளின் புலனாய்வினர் செய்யும் இரகசிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் நேர்த்தியும் திறமும் குறித்த பெரு நம்பிக்கையில் ஏவல் நாயான இந்தியா மீது ஏளனமாக பதிலுறுத்தினார். அந்த வகையில் ராசீவ்காந்தி என்ற ஒருவனைப் பழிதீர்த்து விட்டால் விடுதலை கிடைத்துவிடுமென்பதற்காக இந்த அழித்தொழிப்பு நடத்தப்படவில்லை மாறாக “தமிழர்களை அழிக்க நினைப்பவர்கள் எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் அழிக்கப்படுவர்” என்ற செய்தியைச் சொல்வதுடன் இந்தியப் பகைவன் மீதும் ஆட்சிக் கட்டிலில் இருந்து மிரட்டும் கொடுங்கோலர்கள் மீதும் அதுகாலவரையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிழலுருவை அகற்றுமுகமாகவும் இது அமைந்தது. உண்மையில் இந்தியாவில் ஒடுக்குண்டிருக்கும் அத்தனை தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களிற்கும் ஒரு நம்பிக்கைப் பேரொளியைப் பாய்ச்சுவதாகவும் தமிழக மக்களிற்கு ஒரு வீரப்பேருணர்வு ஏற்படுவதற்கும் வழிகோலியிருக்க வேண்டியராசீவ் காந்தி அழித்தொழிப்புஎன்ற நிகழ்ச்சியை தமிழர் நாம் உரிமையுடன் அன்றே ஏற்று உலகத் தமிழர் அனைவரும் ஒருமித்துத் தமிழின விடுதலை முழக்கத்துடன் ஏற்றிருக்காமல் விட்டதை அல்லது அந்த முனைப்பில் தளபதி கிட்டு அளித்த பதிலை முறைப்படி எடுத்துச் செல்லாததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம்.

அரசியல் தரகு மாமாக்களான சந்திரசாமி மற்றும் பன்னாட்டு கறுப்பு வணிகத் தாதாவான அட்னன் கசோக்கி போன்றோருக்கு உகந்தவராக வரவிருந்த ராசீவின் இழப்பு இழப்பாக இருக்கலாம். உண்மையில் ராசீவின் அழித்தொழிப்பைத் திரிபுபடுத்தும் நயவஞ்சக நோக்கிலேயே யெயின் கமிசன் அமைக்கப்பட்டது. சீக்கிய விடுதலைப் போராட்டங்களுக்குள் ஊடுருவி அவற்றை அழிக்கவெனப் போராளி வேடத்தில் இந்தியாவால் இறக்கிவிடப்பட்டு இந்தியாவின் Z+ பாதுகாப்பில் இருந்த மெகன்ட் தாசு சிங் என்ற கயவனை வைத்து அதில் அசாமின் ULFA, காலித்தான் விடுதலை இயக்கம், காசுமீரிய விடுதலை இயக்கம் போன்ற பல விடுதலை இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் ஒரு கதையைப் புனைந்துரைத்து இது ஒரு பன்னாட்டுச் சூழ்ச்சியெனக் காட்டி விடுதலைப் புலிகளை ஒரு தரகுக்கொலையாளிகளாகக் காட்ட முனைந்த இந்தியாவின் குரல்வளையைக் கடித்துத் துப்பி அதன் போலிப் பரப்புரைகளை கிழித்துத் தொங்கவிடுவதே அந்த மறவர்களின் ஈகத்திற்கு நாம் செய்யும் குறைந்தளவிலான நன்றிக்கடனாகும். எனவே, ராசீவின் கொலை தமிழர்களின் அறச்சீற்றத்தின் வெளிப்பாடு. அதில் நேரடியாகப் பங்கெடுத்தோர்கள் தாயக மண்ணிற்காக ஆகுதியாகிவிட்டார்கள். அந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை நெறிப்படுத்திய சிவராசனுக்கு அறிந்தவர் தெரிந்தவர் அல்லது அவரின் ஊர்க்காரர் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக தமிழ்நாட்டில் தங்கியிருந்தோர் என்பதற்காகக் கைதுசெய்யப்பட்டு வெறியாட்டத்துடன் நடத்திய உசாவல்களின் பின்பு அறத்திற்கு முரணாகக் குற்றவாளியாக்கப்பட்டுள்ள எழுவர்களும் இந்தியாவின் நோக்கறிந்து வழக்கறிஞர்களின் வழிகாட்டல்களில் தண்டனையை ஏற்று வெளிவரும் நோக்கோடு பொதுமன்னிப்புக்கேட்டுள்ள அந்த அப்பாவித் தமிழர்களின் விடுதலைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் கிளர்ந்தெழுவார்கள் என்பதை அறிந்த இந்தியா இதை ஒப்பந்தக்கொலையாகவும் பன்னாட்டுச் சூழ்ச்சியாகவும் திரிபுசெய்வதைத் தமிழர்கள் பல்லைக்கடித்துச் சகிப்பார்கள் என மகிழ்வுடன் கணித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. ராசீவின் அழித்தொழிப்பென்பது தமிழர்களின் அறச்சீற்றமே. ஆனால் அதை நிகழ்த்தியவர்கள் ஆகுதியாகி விட்டார்கள். இப்போது சிறைப்பட்டிருக்கும் உறவுகளுக்குச் சொல்லும்படியான தொடர்புகள்  இல்லை. 28 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவது என்பதற்கு இதை ஒப்பந்தக்கொலை என இந்திய உளவு அமைப்பின் தேவைக்கேற்ப நிறுவுவது எந்த வகையிலும் பயனளிக்காது.

2019:10:17