
முள்ளிவாய்க்காலில் மறப்போராட்டம் தேங்கிப் பத்தாண்டுகள் கடந்து விட்டது. இனப்படுகொலையின் இறுதி நாட்களில் மழலைகளாக இருந்தவர்கள் இன்று இளவட்டங்களாகி விட்டனர். எவருக்கும் தாயிடம் பால் குடித்த காலங்கள் நினைவிலிருக்காது என்றாற் போல இந்தப் புது இளவட்டங்களுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நரபலிக் கொலைவெறியாட்டங்களும் அதை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் மறவழிப்போராட்டங்களும் நினைவிலிருக்காது. ஆனாலும் அவர்களின் உற்றார்களில் எவரேனும் மண்ணிற்காக தம்மை ஈகம் செய்திருப்பர் அல்லது போரில் இறந்திருப்பர் அல்லது சிறைப்பட்டோ, சிறைமீண்டோ இருப்பர் அல்லது காணாமலாக்கப்பட்டிருப்பர் அல்லது உடல் உறுப்புகளை இழந்து வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளையும் துன்பத்தில் கழிப்பர். இந்த இளவட்டங்களிலும் குழந்தைப் பருவத்திலேயே கால், கைகளை இழந்தோரும் உளர். விடுதலைப் போராட்ட புரட்சிகர வாழ்நிலையில் இந்த இளவட்டங்கள் வாழவில்லையெனிலும், அவர்களைச் சுற்றி தமிழர்களின் மீதான இனக்கொலையின் ஒவ்வொரு பாதிப்பும் கட்புலனாகக் கூடிய வகையில்தான் உள்ளது. ஆனாலும், அது குறித்த உள்ளார்ந்த புரிதலோ அல்லது அதனை எண்ணியுணரும் தன்மையோ இல்லையெனவே தென்படுகிறது. எனது இனம் எனது மண்ணில் சிங்கள பௌத்த பேரினவெறியாட்டத்தாலும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சூழ்ச்சியாளர்களாலும் இனக்கொலைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது என்பதை எண்ணியுணர்ந்து வஞ்சினம் கொண்டு அது தான் தொடர வேண்டிய தடம் தொடர்வதாய் எந்தவொரு முனைப்பும் இதுவரையில்லை.
தமிழர் தாயகத்தில் தேர்தலில் போட்டியிடும் வாக்குப் பொறுக்கும் தேர்தல் கட்சிகள் குறித்த மதிப்பீடுகளே தமிழ்த்தேசியம் குறித்த பேசுபொருட்கள் என்பாதாகப் பொருள்கோடும் இன்றைய இழிநிலையில் இந்த இளவட்டங்களை அரசியற்படுத்தவோ அல்லது அவர்களைத் தெளிவூட்டவோ யாருமில்லை என்பதே களநிலைவரம். கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி எனப் பல கூத்தணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதைத் தாண்டி தமிழர்தேசம், தன்னாட்சியுரிமை, தமிழர் இறையாண்மை போன்ற புரிதல்களுடன் தமிழ்த்தேசிய அரசியல் விழிப்பூட்டல் என்பது மருந்துக்கேனும் நடைபெறாச் சூழலே தமிழர் தாயகத்தில் இன்று நிலவுகிறது. “மாற்றம்” குறித்துக் கிழமைக்கு கிழமை புண்ணுக்குப் புனுகு தடவுவது போல பத்தியெழுதுவோரும் மாற்றம் என்ற பெயரில் விக்கினேசுவரனுக்கு ஆட்சேர்த்து இந்தியாவுக்குக் கூட்டிக்கொடுக்கும் வேலையைப் பார்ப்பதை முன்னர் மாற்றம் என்ற சொல்லில் சொல்லி வந்த பின்பாக அவர்களளவில் அவர்களில் ஏற்பட்ட மாற்றமாக இப்போதெல்லாம் சமூகத்தின் மேற்கட்டுமானத்தினைச் சிரைப்பதை “மாற்றம்” என்று பொருட்படுத்திப் பத்தி எழுதி வருகின்றனர். உண்மையில் கடந்த பத்தாண்டுகளில் தமிழர்களைச் சூழவிருப்பனவற்றிலும் அவற்றைச் சுற்றி இருப்பனவற்றிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
தமிழீழ நிழலரசும் புரட்சிகர வாழ்வும் என்றிருந்த போர்ச்சூழல் அரசசார்பற்ற நிறுவனங்களின் நேரடி ஊடாட்டத்தினுடனான சூழலாக மாறியிருக்கிறது. அரசசார்பற்ற நிறுவனங்கள் போரின் கொடிய வடுவைச் சுமந்து நின்ற மக்களின் மீட்பர்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்ருக்கிறது. தாராளமயப்போக்கு தமிழர்களின் அத்தனை வாழ்வியல் கூறுகளிலும் வியாபித்திருக்கிறது. அறிவின்பாற்பட்டு நுகர்வுத்தெரிவுகளை மேற்கொள்ளாமல் கண்டதையும் நுகரும் கட்டற்ற தாராளமய நுகர்வுப் பண்பாட்டிற்குள் தமிழ்ச் சமூகம் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்‘ளது. அனைத்தையும் தீர்மானிக்கும் அரசியலைத் தீர்மானிக்கவல்ல பொருண்மியம் குறித்தும் அதன் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள சமூக அடித்தளம் குறித்த பார்வையேதுமின்றியும் அது குறித்த விழிப்பு ஏதுமின்றியும் சமூக மாற்றம் குறித்து பேசுவது அறிவின்பாற்பட்டதல்ல. தேக்க நிலைக்கு வந்த தமிழர்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை தேக்கங்கள் சிதைத்து முன்னகர்த்துவதென்றால் இன்றைய சமூகச் சூழல் குறித்த அதில் நிகழும் எமது மக்களின் சமூக உறவுகள் குறித்த சரியான புரிதல்கள் இன்றியமையாதன. உற்பத்தி, விநியோகம், சந்தை, நுகர்வு என்ற பொருளியலின் கூறுகளை ஆழமான உடற்கூற்றாய்வுக்குட்படுத்தினால் மட்டுமே தமிழர்களின் இற்றைச் சமூக இருப்பினை அதன் உண்மைநிலையில் புரிந்துகொள்ளலாம். தமிழர்களின் உற்பத்திப் பொருளியல் என்பது வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. வேளாண் மற்றும் கடற்றொழில் போன்றவற்றைத் தவிர வேறெந்த உற்பத்தித்துறையும் தமிழர்களிடத்தில் சொல்லுமளவுக்கு இல்லையென்பதோடு இவற்றின் சந்தையையும் மாற்றார்களே தீர்மானிக்குமளவுக்கு தமிழர்கள் தமது வேளாண் மற்றும் கடல்சார் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையினையும் இழந்துள்ளனர். இப்போதெல்லாம் மாற்றாரின் குறிப்பாக தென்னிலங்கையின் உற்பத்திப் பொருட்களை கூவி விற்கும் முகவர்களாகவே தமிழிளையோர் தொழில்வாய்ப்பைப் பெறுகின்றனர். மாற்றாரின் பொருட்களை எமது மண்ணில் கூவி விற்றுத் தரகு பெறும் ஒரு இழிநிலைப் பொருண்மியப் பண்பாட்டிற்குள் எமது இளையோர் உள்வாங்கப்படுகின்றனர். உணவு, உடை, உறையுள், கல்வி, மருத்துவம், விளையாட்டு என எந்த நுகர்வுத்தெரிவும் அறிவின்பாற்பட்டில்லாமல் தாராளமயத்தின் விளம்பர உத்திகளுக்குள் இலகுவில் எடுபட்டுப் போகும் நுகர்வுப்பண்பாடே இன்று எமது மண்ணில் நிலவிவருகிறது.
இப்படியாக பண்டங்களை நுகரும் பிண்டங்களாக தமிழர்கள் மாறி அத்தனை அடிப்படைத் தேவைகளுக்கும் மாற்றானின் உற்பத்தியிலும் சந்தையிலும் தங்கியிருக்கும் இழிநிலையில் இருந்தால் எமது சமூகக் கட்டமைப்பும் அதிலுள்ள அரசியலும் அவ்வாறான இழிநிலையிலேயே இருக்கும். இப்படிப் பண்டங்களை நுகரும் பிண்டங்களாக எதையும் கேள்விகளுக்கப்பால் நுகரும் தாராளமய எண்ணப்பிரள்வுகளுக்குள் மூழ்கியிருக்கும் சமூகத்திற்கு என்ன வகையான அரசியல் தேவைப்படும்? இப்படிக் கட்டற்று வாழ்வதற்கு ஏன் தனிநாடு? ஏன் அரசியல் அதிகாரம்? ஏன் தனித்த தேசம்? எனவே இப்படியாக தறிகெட்ட நுகர்வுப் பண்பாட்டில் தன்னிறைவு சார்ந்த பொருண்மியப் பார்வை எதுவுமின்றி வாழ்வதற்கு அவர்களுக்கு எல்லோருக்கும் திறந்துவிட்டு மாற்றாரின் பொருட்களைக் கூவிக் கூவி விற்று வாழ்வதற்கு தனித்த தேசம் தேவைப்படாது. தேவையிலிருந்தே உற்பத்தி பிறக்கின்றது. எனவே, சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பதிலிருந்து மாற்றங்கள் முன்னுந்தப்படுவதில்லை. அது தேவையா அல்லது தேவையில்லையா என்பதிலிருந்தே மாற்றங்கள் முகிழ்க்கும்.
எமது மண்ணின் தன்மைக்கும் வளத்திற்கும் பொருத்தமானதும் எமது சுற்றுச் சூழலைப் பாதிக்காததுமான உற்பத்தித் தெரிவுகளும் நுகர்வுத்தெரிவுமில்லாதவிடத்தும் எமக்கான சந்தையை நாம் தீர்மானிக்காமலுமிருக்குமிடத்து எமது பொருண்மியப் பண்பாடு மாற்றாரில் முற்றாகத் தங்கியிருக்கும் தறிகெட்ட பொருளியல் பண்பாடாகவே இருக்கும். விளைவாக, எமது மண்ணின் அரசியலும் அத்தைகைய தறிகெட்ட அரசியலாகவே இருக்கும். எமது மண்ணிற்கேற்ற எமது மண்ணின் உற்பத்தி, எமது காலநிலைக்கும் மூலவளங்களிற்கும் பொருந்தும் உடை, உறையுள் மற்றும் எதையும் திறனாய்ந்து அணுகும் எமது அறிவுமரபிற்கும் இன்றையநிலையில் புதுமை படைக்கவும் தொழிற்சந்தையில் நிலைத்து நிற்பதுக்கு உதவுவதுமான கல்வி, உடலினை உறுதிசெய்யும் மற்றும் பன்னாட்டளவில் எம்மை முதன்மைப்படுத்த வழிகோலும் என்ற இரு வகையிலான விளையாட்டுகள், காலனியடிமையாவதற்கு முன்பிருந்த எமது செழித்த பண்பாடு குறித்த புரிதல் மற்றும் பண்பாட்டு மீட்சிக்கான செயற்பாடுகள் என்றவாறு எமது, மண், எமது வளம், எமது மரபு, எமது பண்பாடு, எமது மொழி, எமது தாயகம், எமது தொழிலுரிமை, எமது வளங்கள் என்றவாறு எமது உரிமைகள் நோக்கிப் பயணிக்கும் உளநிலையும் அதன் வழியான வாழ்நிலையுமே எமக்கான அரசியல் அதிகாரத்தின் தேவையையும் இழந்த இறைமையை மீட்டெடுத்தேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையையும் உணர்த்தும். பண்டங்களை நுகரும் ஒரு மாந்த விலங்காக வாழ நினைப்போருக்கு தனித்ததேசம் தேவையில்லை. தனது வாழ்நிலையின் அத்தனை தெரிவிலும் தமிழனாக வாழ முனையும் தமிழனாக மட்டுமே வாழத் துடிக்கும் ஒருவரிற்கே இறைமைமீட்ட தனித்த தமிழ்த்தேசம் தேவைப்படும். அப்படியான வாழ்நிலை கொண்டவர்கள் அல்லது அப்படியான எண்ணவோட்டங்கள் கொண்டோருக்கே தமிழ்த்தேசம் தேவை. ஏனையோர் தமிழ்த்தேசமில்லாமலும் எப்படியும் பல்லிளித்து கண்டதையும் நுகர்ந்து எந்தப் பகுதியிலும் அவர்களளவில் நிறைவோடு வாழக்கூடியவர்கள் என்பதை முள்ளிவாய்க்காலின் பின்பான பத்தாண்டுகள் சொல்லிச் செல்கின்றன.
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் வாழ்க்கை இப்படித் தறிகெட்ட நுகர்வுப் பண்பாட்டோடும் தரங்கெட்ட பொருண்மிய வாழ்க்கைமுறையோடு இருக்கின்றதெனில் அதில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் பொருண்மிய வாழ்வும் அவர்களின் பண்பாடும் அவர்கள் தமது விடுமுறைக்காலங்களில் தாயகத்திற்கு வந்து இறக்குமதி செய்யும் அத்தனை மோசமான விடயங்களும் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் அத்தனை பேரையும் பெருங்கவலைக்குள் தள்ளுகிறது.
இனப்படுகொலைக்குள்ளான தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தாம் என்பதை தமது வாழ்வியலின் எந்தவொரு நிலையிலும் உணர்த்தாத (தேசிய எழுச்சிக்கான நிகழ்வுகளைச் சடங்காக்கியமை.. அதுவும் சடங்காக்கியமை தவிர) புலம்பெயர்ந்த எம்மவரின் வாழ்நிலை தமிழரின் அடுத்த தலைமுறை அரசியல் குறித்து எச்சரிக்கை மணியெழுப்பியமையையும் தாண்டிச் சாவு மணியொலிப்பாக மாறிவருகிறது. உலகின் போராடும் இனங்களின் புலம்பெயர்ந்தோரின் புலம்பெயர் அரசியல் பட்டறிவுகளை உள்வாங்காமல் ஒரு பெருங்கூட்டம் புலம்பெயர் நாடுகளில் உலவி வருவதோடு தமது விடுமுறைக்கு தாயகம் திரும்பி எமது மண்ணில் நிலவும் கேடான பல நுகர்வுப் பண்பாடுகளை இன்னுங்கேடாக்கி எமது சமூக அமைவினைத் தறிகெட்டதாக மாற்றி வருகின்றது.
சுடுகலன்கள் மூலமும் வேறு அரசியல் போராட்டங்கள் மூலமும் இஸ்ரேலினை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இருந்த பாலத்தீனம் பன்னாட்டளவில் இஸ்ரேலினை நெருக்கடிக்குள்ளாக்க இஸ்ரேலுக்கு எதிரான BDS (Boycott, Divestment & Sanctions) என்ற புறக்கணிப்புப் போராட்ட இயக்கத்தை 2005 ஆம் ஆண்டில் பன்னாட்டளவில் உருவாக்கியது. இஸ்ரேலுக்குப் போகும் பணம் பாலத்தீனியர்களை ஒடுக்குவதற்கும் கொன்று குவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்று எடுத்தியம்பி பன்னாட்டளவில் இஸ்ரேலினைத் தனிமைப்படுத்துவதை நோக்காகக்கொண்டு இஸ்ரேலியப் பொருட்களைப் புறக்கணிப்பதோடு கல்வி, பண்பாடு, விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் இஸ்ரேலைப் புறக்கணிக்கக் கோரி நட்பு ஆற்றல்களைத் தேடி இந்த அமைப்பு வேண்டுகோள்களை முன்வைக்கின்றது.
பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் மீது இஸ்ரேல் எப்போதெல்லாம் நரபலியாட்டத்தைச் செய்கின்றதோ அப்போதெல்லாம் அதை மறைக்க இஸ்ரேலியக் கலைஞர்களும் அறிவியலாளர்களும் எல்லா நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இஸ்ரேல் மீது நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துதல் நடைபெறுவதால் கல்வி, கலை, விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் இஸ்ரேலைப் புறக்கணிக்க இந்த அமைப்பு வேண்டுகின்றது.
(ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் பொருட்கள் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள் என்ற கணக்கில் அந்தப் பொருட்களைத் தேடித் தேடி நுகர்வதோடு, அவற்றை இறக்குமதி செய்தும் நுகர்ந்து சிறிலங்காவிற்கு நல்ல வருவாயைத் தேடிக் கொடுப்பதோடு இன்னுமொரு படி மேற்சென்று தமது அப்பன் வழியில் உற்பத்தி செய்தது போல அவற்றைத் தமது பொருட்கள் எனப் பெருமைப்படுத்திச் சொல்லி மற்றையவர்களையும் நுகர வைப்பார்கள். சந்திரிக்கா காலத்திலே நிகழ்ந்த தமிழர் மீதான அத்தனை படுகொலைகளையும் உலகம் மறக்கச் செய்து “இனப்படுகொலை சிறிலங்கா” என்பதற்குப் பதிலாக “சிறிலங்கா கிரிக்கெட்” என உலகளவில் சிறிலங்காவைப் பெருமைப்படுத்திக்கொள்வதில் ஈடுபாடு காட்டி சிறிலங்கா கிரிக்கெட் அணியின் வெறித்தனமான ரசிகர்களாக இருந்துகொண்டு விளையாட்டை அரசியலாக்காதீர்கள் என்று அடிப்படை அறிவியலிற்கே புறம்பாக சிறிலங்காவின் விளையாட்டு அரசியலுக்கு உலகளவில் பங்களித்த ஈழத்தமிழர்களின் அரசியல் பேதமையை நினைத்தால் பாலத்தீனச் சிறுவர்கள் கூட அருவெறுப்படைவார்கள்)
எமது மண்சார்ந்த உற்பத்திகளை இயலுமானவரை நுகர்வதோடு அந்தப் பொருட்களிற்கான சந்தை வாய்ப்பைத் தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்தித் தரும் வேலைகளைக் கூடச் செய்யாமல், உணவு, உடை, உறையுள், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திலும் மேற்குலகின் தாராளவாத நுகர்வுமுறைகளை உள்வாங்கி அதற்கு அடிமையுமாகி அப்படியான குறைச் சிந்தனையின் விளைவிலான நுகர்வு முறைகளைத் தாம் விடுமுறைக்கு தமிழர் மண்ணிற்குச் செல்லும் போது அங்கும் பரப்பி எமது மண்ணில் வாழும் எமது மக்களை மிகை நுகர்வுப் பண்பாட்டிற்குள் தள்ளி மாற்றார்களின் பொருளியலடிமைகளாக தமிழீழ மக்களைத் தொடர்ச்சியாக வைத்திருக்கும் செயற்பாடுகளினையே புலம்பெயர்ந்த தமிழர்களில் பெருமளவானோர் செய்கின்றனர். கொழும்பில் அடுக்குமாடி வீடு வாங்குவதையும் யாழ்ப்பாணத்தில் திருமண மண்டபம் கட்டுவதையும் தாண்டி பணம் வைத்திருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் கூடுதலானோருக்கு வேறு எந்த முதலீடுகளும் தெரிவதில்லை. இவ்வாறாக உற்பத்தி, விநியோகம், சந்தை, நுகர்வு என்ற பொருளியலின் கூறுகளை ஆய்ந்து நல்லதொரு பொருண்மியப் பண்பாட்டை ஏற்படுத்தாமல் எமது மண்ணில் நிலைத்து வாழும் சமூகக் கட்டமைப்பினை ஏற்படுத்த முடியாது. பொருண்மிய சமூக உறவுகளில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தாமல் நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் எமது மக்களிற்கு ஏற்படாது. எனவே, மாற்றம் என்பது எங்கிருந்து ஊற்றெடுக்க வேண்டுமென்ற பார்வையும் செயற்பாடுகளும் இல்லாமல் தாராளமயப் போக்கில் நின்றுகொண்டு தனிநாடு பேசுவது போன்ற ஏமாற்று வேறேதும் இல்லை. 2009 இன் பின்பாக ஏற்பட்ட தேக்கத்தைச் சிதைத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதாவது தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த வேண்டுமாயின், சமூக அடிக்கட்டுமானத்தை மாற்றும் உண்மையான மாற்றம் குறித்த புரட்சிகரமான பார்வையும் செயலில் குதிக்கும் திறனும் தம்மை ஒறுத்து இந்த மண்ணிற்காக வாழும் வாழ்க்கையை ஏற்ற இளையோரை உருவாக்க வேண்டும். அவர்களைப் புரட்சிகரமாக உருவாக்க வேண்டும். அதற்கு வாக்குப் பொறுக்கும் அரசியலிற்கு வெளியே பாரியதொரு அரசியற் செயற்பாடு தேவைப்படுகிறது.
தமது கட்டுரைத் தொகுப்பை இந்தியத் தூதரகத்திற்கு கொண்டு சென்று காட்டி நல்லபிள்ளை பெயர் எடுத்துக்கொள்ளும் அகவை முதிர்ந்த சிறார்களும் “மாற்றம்” என்ற பெயரை இந்திய முகவர் விக்கினேசுவரனை தேர்தலில் வெல்ல வைக்கவும் பாராளுமன்ற வாக்குப் பொறுக்கிக் கட்சிகளின் செயற்றிறம் பற்றிய மதிப்பீடுகளை தமிழ்த்தேசியம் என்ற போர்வைக்குள் செய்வோரும் இந்தியக்கொள்கை வகுப்பாளர்களின் மனமாற்றத்திற்காக இந்தியாவில் குந்தியிருக்கும் மறைகழன்ற உளநோயாளிகளை பத்தி எழுத்தாளர்களாக நம்பும் இந்தத் துன்பமான காலகட்டத்தில், இளையோருக்கு அரசியல் விழிப்பூட்டி அவர்களைப் புரட்சிகரமான திசைவழியே பயணிக்கச் செய்து சமூக அடிக்கட்டுமானத்தில் ஒரு தகர்ப்பைச் செய்து முள்ளிவாய்க்காலோடு ஏற்பட்ட பத்தாண்டுப் பாரிய தேக்கத்தைச் சிதைத்து மாற்றத்தைக்காண்பது இன்றியமையாதது என்பதை உணர்ந்து களங்காண வேண்டி உடனடிக் கடமையை இனியும் தட்டிக் கழித்தால் அது தமிழர்களின் தமிழ்த்தேசிய அரசியலுக்குச் சாவு மணி அடிப்பதற்கு வழங்கும் ஒப்புதலாகத் தான் இருக்கும்.
-மான்விழி-
2019.07.23
6,018 total views, 3 views today