இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டுச் சிறைப்பட்ட ஈழத்தடிகள் -முனைவர் அரங்கராஜ்-

வரலாற்றுக்காலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் தேசிய இயங்கியல் பாதிப்படையும் போதும் அயல் வல்லாண்மை அரசுகள் தமிழரின் மேல் ஏறிய போதும் தமிழ்த் தேசிய இயங்கியலை ஒரு சிறு கூட்டம் வழி நடத்தி இன்றளவும் அதனைப் பாதுகாத்துத் தக்கவைத்துள்ளதெனலாம். இக் கூட்ட மரபு தமிழ்த் தேசியத்தின் அங்கங்களான தமிழ்மொழி, சமயம், பண்பாடு, தமிழ்நிலம் முதலானவை பாதிப்பிற்குள்ளாகும் போது அதற்கான எதிர்வினை பல நிலைகளிலும் மேற்கொண்டிருந்தமையினை தமிழரின் வரலாற்றுப் போக்குகலெங்கும் காணலாம். பல்லவர்காலத்தில் சிம்மவிசுனுவால் கிரந்த எழுத்து முறை தமிழில் கலக்க முற்பட்ட போதும், நாயக்கர் ஆட்சியின் பிறமொழிச் சூழலிலும் தமிழ் மரபினைப் பாதுகாத்தலில் இச்சிறு கூட்டமே பங்காற்றியது என்பதினை ஆய்வுகளின் வழியறியலாம். அவ்வகையில் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளிலும் தமிழத்தேசியச் சிந்தனையை வளப்படுத்தி அதன் இயங்கியலைச் செம்மை செய்தலில் இச்சிறு கூட்டத்தின் செல்வாக்கும் அதில் பங்காற்றிய தனிமனித ஆளுமைகளும் சிறப்பிடம் பெற்றன என்பதை அறியலாம். அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனிமனிதனாய் விழித்து தமிழ் தேசிய இயங்கியலை செம்மை செய்த தோழர் கரூர் ஈழத்துச் சிவாநந்த அடிகளாரைக் குறித்ததாக இக் கட்டுரை அமைகிறது.

ஈழத்துஅடிகள் என அழைக்கப்படும் ஈழத்துச்சிவாநந்த அடிகளார் 1930 ஆம் ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் உள்ள கரூருக்கு அருகில் சிவாநந்த ஆச்சிரமம் எனும் அறிவுதய கழகத்தினை நிறுவி நடத்தி வந்தார். இவர் ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக பேரா. அரணமுருவல், வெ. ஆணைமுத்து போன்றோர் கூறினார். ஆயினும் இவர் யாழ்ப்பாணத்தின் எவ்வூரினைச் சேர்ந்தவர் என்பதினை எம்மால் அறிதற்கியலவில்லை. யாழ்பாணத்தைச் சேர்ந்த பலரும் இவர் குறித்து அறிந்ததில்லை. ஆயினும் இவரது பெயரிற்கு பின் உள்ள பி.ஏ என்னும் பட்டத்தினை கொண்டு ஒருமாறு சில முடிவுகளை மேற்கொள்ளலாம். அந்நாளில் இவ்வாறான பட்டக் கல்வியை தென்னிந்தியாவில் சென்னை பல்கலைக்கழகமே வழங்கிற்று. அதனால் ஈழத்தில் உள்ளோர் சென்னைப்பல்கலைக் கழகத்திலேயே பட்டப்படிப்பினை மேற்கொள்வாராயினர் அல்லது இலண்டன் சென்றும் மேற்கொண்டனர். அதனடிப்படையில் கல்வியின் பொருட்டு ஈழத்திலிருந்து சென்னைக்கு போந்தஈழத்தடிகள் தமது கல்விக்காலத்தின் பின் இறைநெறியின் பாற் கொண்ட ஈர்ப்பால் கரூருக்கருக்கில் அறிவுதயக்கழகம் என்னும் ஆச்சிரமத்தினை நிறுவி யோகம் முதலாய பயிற்சிகளை மேற்கொள்வாராயினர் எனலாம். துறவுவயப்பட்ட அடிகளார் அன்றைய தமிழக சூழலில் நிகழ்ந்த சமூக அரசியல் நிலைகளில் பெரிதும் பங்குபற்றிவரலானார். ஈழத்திலிருந்து வந்தபடியாலும் கரூரில் வாழ்ந்த படியாலும் பொதுவுடமை சிந்தனையின் பாற்பட்டமையாலும் அவர் தோழர் கரூர் ஈழத்து சிவாநந்த அடிகள் எனக் குறிப்பிடப்படலானார் ஆயினும் மக்கள் அவரை ஈழத்தடிகள் என்றே அழைத்ததாக அவரது ஆவணங்களால் அறியமுடிகிறது.

அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருந்த இராஜகோபாலச்சாரியார் அவர்கள் (1937) தாம் முதலமைச்சரான பிறகு கட்டாய இந்திமொழிக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவேனென அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கெதிராக தமிழகத்து தமிழர்கள் விழிப்படையும் முன்னம் ஈழத்தடிகள் கட்டாய இந்தி அறிவிப்பிற் கெதிராக 12.02.1937 அன்று முதல் இந்தி எதிர்ப்பு அறிக்கையினை வெளியிட்டார். தமிழக வரலாற்றில் இந்தித் திணிப்பிற்கு எதிராக வெளியிடப்பட்ட முதல் அறிக்கையாக இது அமைகிறது.

இராஜாஜி முதல்வாரனவுடன் அவரது இந்தித்திணிப்பிற்கு எதிராக முதல் தந்தியடித்து முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினைத் தொடக்கினார். 1938ஆம் ஆண்டு இராஜாஜி சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தித்திணிப்பைக் கொண்டு வந்த போது அதனை எதிர்த்து 1.6.1938 அன்று சட்டமன்றம் இராஜாஜின் இல்லம் ஆகியவற்றின் முன்னால் முற்றுகைப் போராட்டம் நடந்த அடிகளார் திட்டமிட்டார். அதற்கான அறிக்கையினை எழுதி எடுத்துக்கொண்டு பெரியாரிடம் சென்று குடியரசு இதழில் அறிக்கையை வெளியிட்டுத் தருமாறு கேட்டார். அதில் ஆர்வம் காட்டாத பெரியார் அறிக்கையை வெளியிட மறுத்து விட்டார். மனம் சலிக்காத அடிகளார் ஈரோட்டில் அவரது நண்பர் சண்முக வேலாயுதம் மூலம் அறிக்கையை அடித்து தமிழகமெங்கும் பரப்பி விட்டார்.

மேற்கண்டதாய சூழ்நிலைக்கு முன்பு 26.12.1937 அன்று திருச்சியில் தமிழர் மாநாடு கூடியது இம்மாநாட்டில் பங்கு பற்றிய அடிகளார் அங்கு மாநாட்டு தலைமை தாங்கிய பசுமலை நாவலார் எஸ். எஸ் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ விசுவநாதம், டி.மி வேதாச்சலம், சி.டி நாயகம் முதலானோருடன் தமது போராட்ட நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினர் அப்பொழுதே அவர்கள் ஒருங்கிணையத் தலைப்பட்டனர். இந்நிலையில் 1.6.1938 அன்று முதல்வர் இல்லம் முன்பு மறியல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சி.டி நாயகம் (கூட்டுறவு இயக்க முன்னாள் துணைப்பதிவாளர், தியாகராயநகர் சர் தியாகராசர் மேனிலைப் பள்ளியின் நிறுவனர்) மறியலுக்கன பந்தல் அமைத்துக்கொடுத்தார். மறியல் தொடங்கி மூன்றாம் நாள் அவ்விடம் வந்த பெரியார் இப்போராட்டங்கள் தேவையற்றது எனக் குழப்பியதாகவும் அதற்குத்தாம் ஐயா தாங்கள் இவ் விடயத்தில் தலையிடாமல் இருப்பதே தமிழர்களுக்கும் தமிழுக்கும் பேருதவியாக அமையும் எனக்கூறியதாகவும் அதன் பின் பெரியார் சி.டி.நாயகம் இல்லத்திற்குச் சென்றுவிட்டதாகவும் அடிகளார் தமது இத்தி எதிர்ப்பும் போராட்டம் அன்றும் இன்றும்(1965) எனும் நூலில் குறிப்பிடுகின்றார். இந்நிலையில் அடிகளர் இந்தி எதிர்ப்பு போரினைத் தொடங்கிய வேளை உடன்நின்ற துறவிகளான அருணகிரி அடிகள், சன்முகானந்த அடிகள் ஆகியோரோடு அடிகளாரும் சிறையில் அடைக்கப்பட்டார் ஒன்பது மாதம் சிறைவாழ்க்கைக்குப் பிறகு விடுதலையானார். இந்தித்திணிப்பை தாம் கைவிட்டாக இராஜாதி அறிவித்திருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக பெரியார் அறிவித்தார். இதனை எதிர்த்த அடிகள் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்க பெரியாருக்கு உரிமையில்லை என்றும் இன்னும் கட்டாய இந்தித்திணிப்பு அரசாணை நீக்கப்படாமல் நடைமுறையில் உள்ளதென்றும் கூட்டிக்காட்டினார். அத்தோடு 4.11.1939 அன்று ஆளுனர் மாளிகை முற்றுகையிடப்படும் என அடிகளார் அறிவித்தார். அதன் பின்பே இராஜாஜி அரசால் கட்டாய இந்தி ஆணை நீக்கப்பட்டது. அடிகளார் சிறையில் இருந்தபடியால் வேறுவழியின்றி பேராட்டம் பெரியார் கைக்குச் சென்றது. இதனால் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை நிகழ்த்தி வெற்றிபெற்றதாக அவரது தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இதனை அடிகளார் ஏற்றதில்லை. அவர் இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும் எனும் தமது நூலில் செயலுக்கு ஒருவனும் அந்தச் செயலால் புகழ்பெற இன்னொருவனும் என்ற நிலை ஏற்படுவதென்றால் அது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் உண்டாக்கும் ஒருமறைக்க முடியாத களங்கமாகும் எனக் குறிப்பிடுகின்றார். ஈழத்திலிருந்து தமிழகம் போந்தது அடிகளார் எதனையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் துணிவுடனும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்க்கப்பெற்றவராக இருந்தமையினை இதன்வழி அறியலாம். இப்போராட்டத்தில் சா.சோமசுந்தரபாரதியார், மறைமலையடிகள் போன்ற பெருத்தலைவர்கள் அடிகளாரின் நண்பராயினர்.

அடிகளார் சிறைச்சாலையில் இருந்த காலகட்டத்தில் அவரது சிறைத்தோழராக சி.என் அண்ணாதுரை அமைந்தமையினை குறிப்பிடுவர். இருவரும் சிறையில் பல்வேறு கருத்தியல்கள் குறித்து கலந்துரையாடினர். ஆயினும் திராவிடக் கருத்தியலில் தம்மை இணைக்காது தமிழியக் கருத்தியலிலேயே தம்மை இணைத்துக் கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அடிகளார் தமது காவி உடையினைக் களைந்து வெள்ளுடை அணிந்தார். இதனை ஆசாமியான சாமி எனபெரியாரின் தொண்டர்கள் தங்கள் இதழ்களில் எழுதினர். கரூரில் இருந்த சிவாநந்த ஆசிரமத்தைக் கலைத்துவிட்டு அண்ணாதுரையின் அழைப்பின் பேரில் காஞ்சிபுரம் சென்று திராவிடநாடு இதழின் ஆசிரியராக அமர்ந்தார். தமிழினத்தின் வாழ்வு குறித்தும் மிகுந்த தொலைநோக்குச் சிந்தனையினையுடையவர் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் குறித்தும் மலையகத் தமிழர்களின் சிக்கல்கள் குறித்தும் திராவிடநாடு முதலாய இதழ்களில் ஆழமாக எழுதினார். பெரியாருடன் கருத்து மோதல்கள் இருப்பினும் அவரது குடியரசு, இதழில் அடிகளாரின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரலாயிற்று அன்றைய காலகட்டத்தில் குடியரசு திராவிடநாடு முதலாய சமூக அரசியல் இதழ்களில் மிகத்தரமான  தமிழியில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. மயிலை சீனி வேங்கடசாமி, அ.சாமிசிதம்பரனார், சாத்தன்குளம், இராகவன், கா. சுப்பிரமணியம் பிள்ளை ம.தசரதன் முதலாய் சிறந்த ஆய்வாளர்களோடு அடிகளாரும் எழுதிவரவானார்.

இவர் பல நூல்கள் இயற்றிய போதும் அவற்றில் சிலமாத்திரமே எமக்குக் கிட்டுவதாயிற்று இந்து மதமும் தமிழரும், பெரியபுராண ஆராய்ச்சி, இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும் என்பன அவற்றுள் அடங்கும்.  சித்தாந்த சைவத்தின் பல கொள்கைகளில் உடன்பாடுடைய அடிகளார் வைதீகமதத்தினைக் கடுமையாக எதிர்த்தார். தமிழர்கள் இந்துக்கள் அல்லவென்றும் தமிழர்களுக்கென்று தனித்த வழிபாட்டு மரபும் மெய்யியலும் உண்டு என்றும் அதனின் அடிப்படையில் இந்தமதத்திலிருந்து வெளியேறி புதிய சமயத்தினை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார். தமிழும் தமிழர்களும் கலப்பற்று தனித்தமிழாகவும், தனித்தமிழர்களாகவும் இருக்கவேண்டும் என விரும்பினார். 1940களில் காங்கிரசார் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் வெள்ளையர் வெளியேறினால் வடவர்கையில் தமிழ்நாடு அகப்பட்டு தமிழும் தமிழனும் அழியும் நிலை ஏற்படும் ஆகவே தமிழர்கள் வெள்ளையரரசை எதிர்க்கக் கூடாதென்றார். காந்தியாரின் இராமராச்சியம் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளையுடையது, வர்ணாசிரமத்தினை அடிப்படையாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுச் செல்கின்றார். 1940ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழர் மத மாநாட்டில் கா. சுப்பிரமணியம்பிள்ளை முதலானோர்களுடன் இணைந்து பணியாற்றி தமிழர்கள் தங்களுக்கான தனித்த மதத்தினையும் மத அடையாளங்களையும் உருவாக்கிக்கொண்டு இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடுதல் தமிழினத்திற்கு நல்லதென அம் மாநாட்டின் வாயிலாக அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே ஏற்பட்ட கருத்தியல் மோதல்களானவை தமிழக, ஈழ தமிழ் அறிஞர்களிடையே ஒருபெரிய இடைவெளியினை ஏற்படுத்திவிட்டது. அதனை இன்றளவும் சில நிலைகளில் காணலாம். அத்தகைய சூழ்நிலையை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிசெய்து தமிழக – ஈழத்தமிழர்களிடையே நல்லுறவு நிகழ அடிகளாரின் அரும்பணிகள் பெரும்பங்கு வகித்தன எனலாம். முஸ்லீம்களுக்கு எதிராக சிங்களவரை ஆதரித்து இலண்டன் மாநகரம் சென்று வழக்காடி வென்றோம் என மார்தட்டிக்கொண்டும், சிங்களவரை மகிழ்வித்து தங்கள் வண்டியை நிரப்பிக்கொள்ள மலையகத் தமிழர்களை வெளியேற்ற ஆதரவுக் குரல்கொடுத்தும் தொலைநோக்குச் சிந்தனையைத் தொலைத்த நிலையில் இருந்த அன்றைய யாழ்ப்பாணத்துக் கல்விக் கடலில் கரைகடந்த கொழும்புக் கருவாக்காட்டுச் சீமான்களின் மிடுக்குகளுக்கும் எடுப்புகளுக்கும் நடுவில் யாழ்குடா நாட்டிலிருந்து தனியொரு மனிதனாய் தமிழகம் போந்து உலகத்தமிழரை ஒழுங்குகண்டு இயங்கியோரில் தனிநாயகம் அடிகளாருக்கு முன்னோடியாகஈழத்தடிகள் அமைகிறார் என்பது எமது துணிவு இவரது ஆய்வுக்கட்டுரைகள் பல திரவிடாநாடு இதழிலும், குடியரசு இதழிலும் வெளிவந்துள்ளன அவற்றைத் தொகுத்துக்கொண்டுள்ளேன். அவற்றினை விரைவில் தனித்தொகுப்புக்களாக வெளிக்கொண்டுவருதல் வேண்டும். இவரைக் குறித்து ஒரு நூல் வந்ததாகக் கேள்வியுற்று பலவிடயங்களில் தேடித்திரிந்தும் கிட்டுவதியலாததாயிற்று. இருப்பினும் இன்னும் தேடியபாட்டிலேயே உள்ளேன். முதலாம், இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்த அடிகளார் குறித்த  செய்திகள் 1970 களுக்குப் பிறகு அறியக் கூடுவதாக இல்லை. அவ்வாறான செய்திகள் கிடைப்பின் அவரது கட்டுரைப் பதிப்புகளின் முன்னுரையோடு அடிகளாரின்  வரலாற்றினையும் தொகுத்து தெளியிட அணித்தமாக உள்ளேன்.

Loading

(Visited 121 times, 1 visits today)