{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம்} – நெடுஞ்சேரன் –

இசுலாமிய அடிப்படைவாதம் குறித்துப் பேசாதவர்களும் அது குறித்து வாய் திறக்க வேண்டிய சூழலை உயிர்த்த ஞாயிறன்று நடந்த நரபலிக் கொலைவெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதத்தை தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நோக்கின் அது தமிழீழ விடுதலைக்கான மறவழிப்போராட்டம் தொடங்கிய அதே காலப்பகுதியிலேயே உலகளவில் பரவலடையத் தொடங்கிவிட்டது. பௌத்த அடிப்படைவாதத்தை மகாவம்ச புரட்டுகளின் அடியொற்றி அதனை சிங்கள பௌத்த பெருந்தேசியமாக அநாகரிக தர்மபால வளர்த்துவிட, பின்பு அது பிரித்தானிய வல்லாண்மையாளர்களின் நலன்களிற்குட்பட்டு அவர்கள் வெளியேறும் போது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து சிங்கள பௌத்த பேரினவாதமாக உருப்பெற்றது. கொழும்புத் தமிழ்மேட்டுக் குடிகள் தமது வர்க்கநலன் கேடாகாமலிருக்கத் தமக்கொரு அடையாளத்தைப் பேண வேண்டியிருந்த போது இந்து அடிப்படைவாதத்தையே அவர்கள் தமது ஒவ்வொரு அசைவிலும் கைக்கொண்டார்கள். வெள்ளையரிடமிருந்து சலுகைகளைப் பெற்றுத் தம்மைத் தரமுயர்த்திக் கறுப்புத்தோலுடன் வெள்ளையனாகத் துடித்த சிங்கள, தமிழ் மேட்டிமையாளர்கள் சிறித்துவ அடிப்படைவாதத்தை ஏதோ உலகின் நாகரிகவாதம் போலக் கருதினார்கள். இவ்வாறான தமது அடிப்படைவாதங்களின் அரிப்பை உழைக்கும் மக்களிடத்திலும் ஊட்டிவிடத் தமது பண வலிமையையும் அதிகார இயலுமையையும் இவர்கள் பயன்படுத்தினார்கள். சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கோரச் செயல்களின் விளைவாகவே சரியான திசைவழியில் அரசியலை உற்றுநோக்கும் போக்குத் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்படும் வரையிலும் தமிழர்களிடத்தில் அடிப்படை மாந்த உரிமையான தாய்மொழிக் கல்வி பற்றி எந்தவொரு கோரிக்கையும் எழவில்லை. ஏனெனில், ஆங்கிலேயர்களுடன் ஒட்டிப்பிழைத்த மேட்டுக்குடிகளுக்கு கல்வி ஆங்கில வழியில் இருப்பதே உவப்பாகவிருந்தது. ஏனெனில், அடிப்படை உழைக்கும் மக்களிடமிருந்து கல்வியைத் தொலைவில் வைத்து, கல்வியைத் தாம் மட்டும் நுகரவும் அதன் தேர்ச்சியின் வழியிலான பதவிகளைத் தம்மிடத்தில் மட்டும் வைத்துக்கொள்ளவும் ஆங்கிலக் கல்வியே அந்த மேட்டிமைச் சிறுமையாளர்களுக்கு உவப்பாயிருந்தது. உயர்கல்வியிலும் அரச பணிகளிலும் தமிழர்களின் மேலாண்மையை அகற்றித் தம்வசப்படுத்த சிங்கள பௌத்த பேரினவாதம் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததன் பின்விளைவாகவே தாய்மொழிக் கல்வியில் உழைக்கும் தமிழ் மக்கள் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இசுலாமியர்களில் 2/3 பங்கு சிங்கள தேசத்திலும் 1/3 பங்கு தமிழர் தேசத்திலும் வாழ்கிறார்கள். சிறிலங்கா தேசத்தில் வாழ்ந்த முசுலீம்கள் இரத்தினக்கல் வணிகம் போன்ற பெரும் பொருளீட்டு தரகு வணிகமாற்றுபவர்களாக இருந்ததோடு 1970 களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளின் பெற்றோலியப் பொருண்மியவிருத்தியின் விளைவான வணிக மேலாண்மையின் மூலம் பயன்பெறுவதன் மூலம் தமது பொருண்மியத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். சிங்கள முதலாளிகளுக்கு இப்படியாக பெருமளவில் பொருளீட்டி வந்த சிங்களதேசத்தில் வாழ்ந்த முசுலீம்கள் மீது ஏற்பட்ட பொறாமையுணர்வால் 1915 ஆம் ஆண்டில் சிங்கள தேசத்தில் வாழ்ந்த முசுலீம்கள் மீது பாரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்படி வன்முறையைத் தூண்டிவிட்டமைக்காகக் கைதான சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுதலை செய்வதற்காக பொன்னம்பலம் இராமநாதன் கப்பலில் பிரித்தானிய சென்று வாதாடி அந்தப் பேரினவாதக் கூட்டத்தினை விடுதலை செய்ததோடு சிங்களப் பேரினவாதிகளால் தூக்கிக்கொண்டாடப்பட்டார். இப்படியாக இந்துமேட்டுக்குடி அடிப்படைவாதிகளின் போக்கு வெள்ளையர்களிடம் நல்ல பெயர் வாங்கும் நோக்கிலானதாகவும் அதிகாரவர்க்கங்களுடன் ஒட்டி உறவாடுவாடும் அவர்கள் வர்க்கநலன் சார்ந்ததாகவுமே இருந்தது. இவ்வாறிருக்க, தமிழர்தேசத்தைச் சேர்ந்த இசுலாமியர்கள் வேளாண்மையையும், கடற்றொழிலையும் சிறு வணிகத்தை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால், சிங்களதேசத்தில் இருந்து பெரும்பொருளீட்டும் தரகு வணிகமாற்றிய இசுலாமிய தரப்பே தமது வர்க்க நலன் கருதி சிங்கள தேசியக் கட்சிகள் மூலமாகவே தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். அவர்களே சிங்களம் மட்டும்  சட்டத்துடன் உடன்பட்டு நின்ற இசுலாமியர்கள் ஆவர். தமது அதிகாரப் பேரம்பேசலுக்காகவே எண்ணிக்கைக் கணக்கிற்காக, தமிழர்தேசத்தைச் சேர்ந்த இசுலாமியர்களையும் முசுலீம் என்ற அடையாளத்திற்குள் இழுப்பதற்காக பணத்தையும் பதவிகளையும் வழங்கித் தமது நலன்களில் மட்டும் அவர்கள் தெளிவாய் இருந்தனர்.

சிங்களதேசத்தில் முசுலீம்களுக்கெதிரான வன்முறை வெடிக்கும் போது ஓடித்தஞ்சமடைய தமிழர்தேசத்தின் தென்தமிழீழமே அவர்களின் தெரிவாகவும் இருந்தது. சிங்களதேசத்து முசுலீம் தலைவர்கள் தமது பதவி இருப்புக்கு சிங்கள பௌத்த பேரினவாதிகளினால் அச்சுறுத்தல் நேர்கையில், தாம் சிங்களவர்களின் வழித்தோன்றலெனவும் தமது உடலில் ஓடுங்குருதி சிங்களக் குருதி எனவும் கூசாமல் கூறிவந்திருக்கின்றனர். எனவே, சிங்களபௌத்த பேரினவாதம் எவ்வளவுக்கு அவர்களைச் சீண்டினாலும், கேவலப்படுத்தினாலும், காறி உமிழ்ந்து முகத்தில் துப்பினாலும் அதைத் துடைத்துவிட்டு சிங்கள பௌத்த அதிகார வர்க்கத்திற்குக் கூழைக்கும்பிடு போட்டுத் தமது வர்க்கநலனைக் காப்பாற்றும் வேலையையே சிங்களதேசத்து முசுலீம்கள் செய்வார்கள். புத்தளம் மாவட்டத்தில் முசுலிம்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அந்த மாவட்டத்தின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இல்லாது செய்வதற்காக புத்தளத்தை சிலாபத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக்கியதோடு புத்தளம் பேருந்து நிலையத்தில் இருந்த முசுலிம்களின் வணிக மேலாண்மையை அழிக்க எந்த அடிப்படையிலும் பொருத்தமில்லாத இடத்தில் புதிதாய் ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து அதில் சிங்களவர்களுக்கு கடைகளும் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த இனவொடுக்கல் நடவடிக்கைகளிற்கெதிராகப் போராடிய முசுலிம்களை அச்சுறுத்துவதற்காக 1976-02-02 அன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் புகுந்து சிங்களக் காவல்துறை துப்பாக்கிகளால் சுட்டு வெறியாட்டம் ஆடியது. இதனை எதிர்த்து ஒரு வரி கூடப் பேசாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த முசுலிம்களும் கமீட் போன்ற ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த முசுலிம்களும் வாய்மூடி சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு நோகாமல் நடந்துகொண்டனர். இதற்கெதிராக தந்தை செல்வா மட்டுமே பாராளுமன்றத்தில் பேசி இதற்குக் காரணமானவர்களைத் தயக்கம் இன்றித் தட்டிக் கேட்டார். இதனால் அசுரப் போன்ற தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட இளையோர் தமிழரசுக் கட்சியில் தாம் வைத்திருந்த நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தினர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவழித்து அதற்குப் பரப்புரையும் செய்து வந்த அசுரப் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட நேர்ந்தால் தம்பி அசுரப் அதனை முன்னெடுத்துச் செல்வேன்” என்று கூறியும் வந்தார். சிங்களதேசத்து முசுலீம்களின் அதிகார மற்றும் பண பலத்தால் தமிழர் என்ற ஓர்மை அரசியலுக்குள் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமிழர்தேசத்து இசுலாமியர்கள் மத்தியில் அதற்கெதிரான கருத்தேற்றங்கள் விதைக்கப்பட்டன. இதன் விளைவுகளால், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து உரையாற்றி வந்த அசுரப் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இசுலாம் மக்களிடம் தமிழீழம் பேசி வாக்கு வாங்க முடியாததை உணர்ந்த, வாக்கரசியலில் இருந்த அசுரப்பும் தனது வாக்கரசியல் நலனுக்காக முசுலீம்கள் எனப் பிரித்துப் பேசலானார். 1983 இல் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்கள் மீதான சிங்கள வெறியாட்டத்தில் கல்முனையிலிருந்த அசுரப்பின் வீடும் தீக்கிரையாக்கப்பட்ட அளவிற்கு அசுரப் அன்று தமிழராகவே பார்க்கப்பட்டார். சியோனிச இசுரேல் இலங்கைத்தீவிற்குள் காலடி வைத்தபோது, அதற்கு வலுவான எதிர்ப்பை அசுரப் போன்ற அன்றைய இசுலாமிய இளைஞர்கள் காட்டியதைக் கண்ணுற்ற இந்தியாவானது, அன்றைய இருதுருவ உலக ஒழுங்கில் தனது எதிர்த்துருவ அரசியல் முகாம் இலங்கைத்தீவில் வலுவடைவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் அசுரப் போன்ற இசுலாமியர்களை அழைத்துப் பேசியமையும் ஒன்றாகவிருந்தது. கிழக்கு மாகாணத்தை தமிழர், முசுலீம், சிங்களவர்கள் என மூன்று நிருவாக அலகுகளாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைச் சிதைத்தழிக்கும் இந்தியாவின் கருத்தூட்டம் (இது ஏற்கனவே சார்க் மாநாட்டின் போது ராசீவ்காந்தியால் முன்வைக்கப்பட்டது) அசுரப்பிற்குள் மெல்லெனத் திணிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் அசுரப்பினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட சந்திரிக்காவின் தீர்வுப்பொதியிலும் பட்டெறிந்தது. இந்தியாவின் சூழ்ச்சிக்குள் பலியாகிய அசுரப் ஈற்றில் இந்திய கொடுங்கோல் படைகள் இலங்கைத்தீவில் இருந்து வெளியேறினால் முசுலீம்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் இந்தியப் படைகளை இலங்கையில் தங்குமாறும் இந்திய மேலாதிக்க நலனுக்காகவும் தமிழர்க்கு எதிராகவும் கூவத்தொடங்கினார். பாராளுமன்ற வாக்குப் பொறுக்கி அரசியலில் உள்ளோர் தமக்கான வாக்கு வங்கிக்காக மக்களைப் பிரித்துத் தமக்கானவர்களாக்குவதற்காக அடிப்படைவாதிகளிலும் தமது அதிகார நலனுக்காக பேரினவாதிகளுடனும் உலக கொடுங்கோல் வல்லாண்மையாளர்களிலும் தங்கியிருக்கத் தயங்கார் என்பதை இந்த இடத்தில் மீள்நினைவுகொள்ளலாம். தமிழர்களை சிதைத்தழிப்பதில் இந்தியச் சூழ்ச்சியாளரின் பங்கு சியோனிச நரபலிக் கூட்டத்தின் பங்களிப்பிலும் பன்மடங்கு கூடுதலானது என்பதைத் தமிழர்கள் புரிந்து செயற்படல் வேண்டும்.

1970 களின் இறுதிப் பகுதியில் மத்திய கிழக்கின் பெற்றோலியப் பொருண்மியம் விரைவு வளர்ச்சியடந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிக்கு சென்ற இசுலாமிய இளையோர்கள் வகாபிய, சலாபிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு நாடு திரும்பும் போது தம்மையும் தமது சுற்றத்தையும் அரபுமயப்படுத்துவதில் தீவிரம் காட்டினார்கள். அத்துடன் இந்தக் காலப்பகுதியில் அரபு நாடுகளின் நிதியுதவி, அபிவிருத்தித் திட்டங்கள், நிவாரப்பணிகள் மற்றும் அரபிய நிதியுதவி மூலத்தில் இயங்கிய மதராசாக்கள் மூலமான வகாபிய பரப்புரைகள் என்பனவற்றால் இசுலாமிய அடிப்படைவாதம் இலங்கைத்தீவில் குறிப்பாக தென்தமிழீழப்பகுதியில் ஊன்றி வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக தம்மையும் தம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் அரபுமையப்படுத்தும் உளப்பிறழ்வு இந்த இசுலாமிய அடிப்படைவாதிகளிடம் ஆழமாகப் பதிந்ததோடு முசுலீம்களுக்கென ஒரு தனிநாடு போன்ற தனியலகை தமிழர்தேசத்தில் நிறுவும் தொலைநோக்குக் கீழ்மை எண்ணம் வெளித்தெரியாமல் உருக்கொண்டது. இப்படியான இசுலாமிய அடிப்படைவாதிகளைத் தான் சிங்களபௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான இனக்கொலையில் குறிப்பாக தென் தமிழீழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தியது. இதுவே முசுலீம் ஊர்காவல் படையாக தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்று குவித்து நரபலிவெறியாடியது

எப்பொழுதும் ஒரு அடிப்படைவாதக் கும்பலின் செயற்பாடு ஏனைய அடிப்படைவாதக் கும்பல்களிற்கு களமமைத்து வாய்ப்புக்கொடுப்பதாகவே அமையும். அடிப்படைவாதக் கும்பல்களின் ஒன்றின் வளர்ச்சி மற்றையதன் வளர்ச்சிக்கு உரமிடுவதாகவே அமையும். அடிப்படைவாதக் கும்பல்கள் ஏதோ ஒரு வகையில் ஆளும் அதிகார வர்க்கத்திற்கும் அரச பேரினவெறிக்கும் அறுவடையை கூடுதலாக்குவனவாகவே அமையும். அத்தோடு, அடிப்படைவாதக் கும்பல்களின் வளர்ச்சியின் விளைவுகளைப் பயன்படுத்தி ஊடுருவுவதன் மூலம் உலக வல்லாண்மையாளர்கள் தமது மேலாதிக்கத்தை அயல் நாடுகளில் உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். இப்படியாக வகாபிசம் மற்றும் சலாபிசம் போன்ற இசுலாமிய அடிப்படைவாதக் கருத்துகளும் தலிபானிய, ஜிகாத்திய குழுக்களும் யாருக்கு ஈற்றில் பயன்பட்டுப்போயின என்ற வரலாற்றை உற்றுநோக்குவதற்கு அவற்றின் உருவாக்கத்திலிருந்தான வரலாற்றைத் தெரிந்து தெளிவது இன்றியமையாதது என்பதால் அவை பற்றி சுருங்கக் கூறுவது இப்பத்தியின் நோக்கத்தை விளங்கக் கூடிய பார்வைப்புலத்தை வாசிப்போருக்கு ஏற்படுத்தும்.

இந்தியாவில் தன் காலனியாதிக்கத்தை நிறுவிய பின்பும் பிரிட்டனால் மத்திய கிழக்கில் வலுவான ஆற்றலாக இருந்த துருக்கிய ஒட்டோமன் பேரரசை தோற்கடிக்க முடியவில்லை.  அதனால் ஒட்டோமன் பேரரசைத் தோற்கடித்து விட்டு அங்கு தன் காலனியை நிறுவ தனது பொதுநலவாய உளவமைப்பு மூலம் வாகபிய இஸ்லாமிய கோட்பாட்டின் தந்தையான இப்னு அப்துல் வாகப் என்ற அரபு பழங்குடி தலைவனை கண்டுபிடித்தது. ஒட்டோமன் பேரரசினுடனான வகாபிகளின் நீண்ட போரின் விளைவாக வாகாபிசத்தின் நீட்சியாகவும் வாகாபிசத்தின் ஆட்சியதிகாரமுமாகவே தற்போதைய சவுதி அரேபிய மன்னனின் மூதாதையரான சவூத் என்பவரை பிரித்தானிய காலனிய ஆட்சி தனது முடிக்குட்பட்ட பிரதிநிதியாக ஆட்சிக் கட்டிலில் இருத்தியது. இப்படியாக வகாபிகளுக்கு ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து வளர்த்துவிட்டதே பிரித்தானிய வல்லாண்மையாளர்களே. அவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே இன்றைய வகாபிய சவுதி அரேபிய ஆட்சி. 2 ஆம் உலகப் போரின் பின்பாக பிரித்தானியாவின் வல்லாண்மைத் தலைமை அமெரிக்காவிடம் கைமாற அமெரிக்காவின் மேலாதிக்க நலனுக்குத் தேவையான ஆட்சியாக சவுதி அரேபிய ஆட்சி இன்றுவரை நீடிக்கிறது.

இரு துருவ உலக ஒழுங்கு நிலவிய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் பரமப் பகையான சோவியத்ரசியாவின் பக்கம் எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகள் சார்ந்துவிடக் கூடாது என்ற தனது புவிசார் அரசியல் நிலைப்பாட்டிற்கு அரசியல் ஆய்வறிவு எதுவும் இல்லாத பிற்போக்குவாதச் சிந்தனையில் கட்டுண்டிருந்த எண்ணெய் வளமிக்க இசுலாமிய நாடுகளை சோவியத்தின் பகைநாடுகளாக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றியடைந்தது என்றே சொல்லலாம். மதம் குறித்த மார்க்சின் பார்வைகளை எடுத்துக்காட்டி அது எவ்வளவுக்கு இசுலாமியத்திற்கெதிரானதெனப் பரப்புரைசெய்து இசுலாமிய நாடுகளை சோவியத்தின் எதிரிகளாகக் கட்டமைப்பதில் அமெரிக்காவின் புலனாய்வாற்றல் வெற்றிபெற்றது. விளைவாக, அன்றைய சோவியத் யூனியனின் பகுதிகளாக , முசுலிம்கள் அதிகம் வாழ்ந்த அசர்பையான், துர்மேனித்தான், தயிகித்தான் மற்றும் கியிகித்தான் ஆகிய பகுதிகளிலிருந்த இஸ்லாமிய தலைவர்களையும் அமெரிக்கச் சார்புநிலைக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கு இயலுமாயிருந்தது.

சோவியத்ரசியா ஆப்கானில் மேலாதிக்கம் செய்தால் அது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடியளவிற்கு நிலைமைகளை இட்டுச் செல்லும் என அமெரிக்கா நன்கு கணித்திருந்தது. எனவே சோவியத் சார்புநிலையிலிருந்த நயிபுல்லாவின் ஆட்சியினை ஆப்கானிலிருந்து அகற்ற அமெரிக்காவின் உளவமைப்பு பல சூழ்ச்சிகளைச் செய்தது. தனது கோடிப்புறத்தில் சோவியத் பலம்பெறுவதை விரும்பாத பாகித்தானும் ஆப்கானில் நசிபுல்லா ஆட்சியைக் கவிழ்க்க முன்னைப்போடு அமெரிக்காவுடன் ஒத்திசைந்து களத்தில் இறங்கியது. தனக்குச் சார்பான நசிபுல்லா ஆட்சியினை ஆப்கானில் காப்பாற்றும் நோக்கோடு சோவியத் ஆப்கானிற்குப் படையனுப்பியது. சோவியத் இராணுவத்தை எதிர்த்துக் களமாடுவதற்காக பாகித்தானில் இசுலாமிய அடிப்படைவாதத்தில் ஊறியிருந்த மதராசாக்களில் மாணவர்களாக இருந்தவர்கள் அமெரிக்காவின் தலையீட்டிலான இராணுவப் பயிற்சியினைப் பாகித்தானில் பெற்று போரிடும் வலுவுள்ள இராணுவமானார்கள். அவர்களே தலிபான்கள் என அழைக்கப்பட்டார்கள். “தனிபான்கள்” என்றால் மாணவர்கள் என்று பொருள். இசுலாமிய கற்கைகளை கற்கும் மதராசாக்களில் மாணவர்களாகவிருந்தவர்களைக் கொண்டு கட்டியமைத்த போரிடும் ஆற்றலுள்ள இராணுவம் என்பதால் அவர்கள் தலிபான்கள் என அழைக்கப்பட்டார்கள்.  மேலும், அமெரிக்காவின் அன்றைய அதிபரான ரீகன் “தலிபான்” என்ற ஜிகாத்திய அமைப்பின் தலைவர்களை வெள்ளைமாளிகைக்கு அழைத்து அவர்களுக்கு “இசுலாத்திற்கெதிரான சோவியத்தை எதிர்த்துக் களமாடும் உண்மையான போராளிகள்” எனப் புகழாராம் சூட்டியதோடு அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சி ஒன்றிற்குச் செவ்வியும் வழங்கியிருந்தார். எனவே ஜிகாத்திகளை நன்கு போரிடும் வலுவுள்ள பயிற்றப்பட்ட இராணுவமாக உருவாக்கியதே அமெரிக்காதான்.  இவ்வாறாக இசுலாமிய அடிப்படைவாதம் எப்பொழுதும் அமெரிக்கா மேலாதிக்க நலனுக்கு நன்மைபயப்பதிலேயே சென்று முடியும். இவ்வாறாக அடிப்படைவாதிகள் ஜிகாத்திகளாகி அமெரிக்காவின் அயல்நாடுகளின் மேலாதிக்கத்திற்குப் பயன்பட்டுப் போன பின்பு, 1990 இல் சோவியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலக ஒழுங்கில் அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றைத் துருவப்போக்கு நிலவியதும் எண்ணெய் வள மத்தியகிழக்கு நாடுகளில் தனது மேலாதிக்கத்தை முற்றிலும் உறுதிசெய்வதற்காக அந்த நாடுகளில் தனது தலையீட்டுக்குரிய காரணத்தைத் தேடுவதில் முனைப்புற்ற அமெரிக்காவுக்கு ஜிகாத்திய தலிபான் இயக்கங்களைத் தனது எதிரியாகக் கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அமெரிக்க வல்லாதிக்கத்தைக் காரணங்காட்டி இசுலாமிய அடிப்படைவாத ஜிகாத்திய தலிபானிகள் வளரலானார்கள். ஒசாமா பின்லேடன் மற்றும் முல்லா உமர் போன்றோரின் வளர்ச்சியும் இதனடி தொடர்ந்ததே. ஜிகாத்திகளின் தலையீட்டைக் காரணங்காட்டி உலகவல்லாண்மையாளர்களின் மேலாதிக்க வேட்டை ஆரம்பமாயிற்று. அடிப்படைவாதிகளின் அடிப்படைவாதக் கருத்துகளை மெய்ப்பிக்கும் வாய்ப்பே அடிப்படைவாதிகளின் வெற்றி எனலாம். எனவே அடிப்படைவாதமும் உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்த வளர்ச்சியில் இருப்பனவே. எனவே அமெரிக்க தலைமையிலான உலக வல்லாண்மையாளர்களுக்கு சிக்கலைக் கொடுக்கக் கூடியவர்களாக வெளியிலே காட்டப்படும் இசுலாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளில் மிக மிகக் கூடுதல் நன்மையடைபவர்கள் அமெரிக்க தலைமையிலான உலக வல்லாண்மையாளர்களே. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பை மட்டுமே தமது அரசியலாக முன்வைத்துத் திரியும் சிவப்புகள் உண்மையில் அதற்குப் பயன்பட்டுப் போகும் இசுலாமிய அடிப்படைவாதத்தை இம்மை மறுமை இல்லாமல் எதிர்க்க வேண்டும்.

அகன்ற பாரதக் கனவில் வெறிபிடித்து அலையும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் அண்டைநாடுகள் மீதான மேலாதிக்கத்திற்கானதே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையாக இருக்கிறது. தமிழர்களின் தேசிய இனச் சிக்கலையோ அல்லது இலங்கைத்தீவில் நடந்தேறும் வேறெந்தச் சிக்கல்களையோ இலங்கைத்தீவின் மீதான தனது மேலாதிக்கத்தை உறுதிசெய்யும் வாய்ப்பாக மட்டுமே இந்தியா நோக்கும். இவ்வாறு இந்தியா தனது மேலாதிக்கத்தைச் செலுத்தும்போது அதனை எதிர்த்துப் போராடும் உளநிலையற்ற அடிமைக் கூட்டத்தை உருவாக்க இந்துத்துவா என்ற பண்பாட்டு மேலாதிக்க அடிப்படைவாதம் இந்தியாவிற்குப் பயன்படுகிறது. அதனாலேயே இந்திய உளவு அமைப்புகள் இந்துத்துவத்தினை பரப்புவதனை தமது செயற்திட்டங்களில் முதன்மையானதாக வைத்திருக்கிறார்கள். கிறித்துவ மற்றும் இசுலாமிய அடிப்படைவாதங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்துத்துவா என்ற அடிப்படைவாதத்தைப் பரப்புவது இந்திய உளவமைப்புகளிற்கு இலகுவாக இருக்கிறது. மன்னாரில் திருக்கேதீச்சர முன்றலில் நடந்த நிகழ்வினை அண்மையில் இந்திய உளவமைப்புகளின் செயற்பாட்டுக் கள அமைப்புகளில் ஒன்றான விசுவ கிந்து பரிசத் எப்படிப் பயன்படுத்த முனைந்தது என்பதையும் “சிவசேனை” என்ற பெயரில் மறவன்புலவு சச்சி என்ற மறைகழன்றவரின் தலைமையில் இயங்கும் இந்துத்துவ வால் அமைப்பு திருக்கேதீசுவர நிகழ்வையும் அதைத் தொடர்ந்து சிங்களபௌத்த கொடும் வெறியனான பொதுபலசேனாவின் தலைவரான ஞானசாரதேரரின் விடுதலையில் அகமகிழ்ந்து சைவர்களின் சார்பில் அறிக்கைவிட்டமை போன்ற கேலிச்செயல்களினை நோக்கில் இந்துத்துவா என்ற இந்தியாவின் உளவுச் செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு கிறித்துவ மற்றும் இசுலாமிய அடிப்படைவாதங்களின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதை இலகுவில் விளங்கிக்கொள்ளலாம்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த இசுலாமிய அடிப்படைவாதிகளின் கொலைவெறியாட்டத்தின் பின்பான அரசியல் நகர்வுகளை நிரற்படுத்தி நோக்கினால் இந்த அடிப்படைவாதிகளின் வெறியாட்டம் எவர்களுக்குப் பயன்பட்டுப்போகின்றது என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம்.

  • நாட்டின் பாதுகாப்பு மிகுந்த அச்சுறுத்தலில் இருப்பதாகக் காட்டி அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றித் தங்குதடையின்றி தனது சிங்கள பௌத்த பேரினவெறியாட்டத்தையும் அரச பயங்கரவாதத்தையும் முன்னெடுத்துச் செல்ல சிங்களபௌத்த பேரினவாதிகளிக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
  • அமெரிக்க மற்றும் இந்தியா போன்ற கொடுங்கோலர்கள் பன்னாட்டுப் பாதுகாப்பு வலையமைப்பு என்ற போர்வையில் படைத்தளங்களை நிறுவும் சூழலை உருவாக்கவும் தமது இராணுவ உறவுகளை சிறிலங்காவுடன் வலுப்படுத்திக்கொள்ளவும் உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கத்தை சிறிலங்காவில் உறுதிசெய்யவும் நல்ல வாய்ப்பாக உயிர்த்த ஞாயிறுக் கொலைவெறியாட்டம் அமைந்திருக்கிறது.
  • இந்தக் கொலைவெறியாட்டத்தின் பின்பாக இசுலாமியர்கள் மீது மற்றைய சமூகங்களின் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு மற்றும் அதனைப் பயன்படுத்தி இசுலாமியர்களைக் கோரமாக சிங்களபௌத்த பேரினவாதம் ஒடுக்குவது போன்றன இசுலாமிய ஜிகாத்திய அடிப்படைவாத்திற்குள் இன்னமும் ஈர்க்கப்படாத இயல்பான இசுலாமியர்களையும் பொதுச்சமூகவெளியிலிருந்து மேலும் தனிமைப்படுத்தி ஜிகாத்திய அடிப்படைவாதிகளாக்குவதில் போய் நிற்கும். வெறுமனே தேசிய தௌகீக் யாமத் மற்றும் யமாத்தெய் மில்லத்து இப்ராகிம் போன்றவற்றைத் தடைசெய்வதால் இசுலாமிய ஜிகாத்திய அடிப்படைவாதத்தை ஒழிக்க முடியாது. இனிவரும் காலங்களில் இசுலாமியர்கள் பொதுச் சமூகவெளியிலிருந்து மேலும் மேலும் தனிமைப்பட்டு ஜிகத்திய இசுலாமிய அடிப்படைவாதத்தில் ஊறித்திளைப்பார்கள். இசுலாமிய அடிப்படைவாதம் இனிவரும் காலங்களில் தான் இன்னும் உருக்கொண்டு வளரும். இதைக் காரணங்காட்டிப் பௌத்த பேரினவாதமும் இந்தியாவின் தமிழீழதாயகத்தின் மீதான மேலாதிக்க அரசியலுக்கான இந்துத்துவ அடிப்படைவாதமும் மேன்மேலும் வளரும் கொடூரமும் நடைபெறுவதற்கான சூழலே உருவாகியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் சிங்களபௌத்த பேரினவாதம், இசுலாமிய அடிப்படைவாதம், கிறித்துவ அடிப்படைவாதம், இந்துத்துவ அடிப்படைவாதம், உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கம், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியக் கொடுங்கோலர்களின் ஆர்முடுக்கும் மேலாதிக்கம் என எல்லா கொடுமைவாதங்களிற்கும் உவப்பான களமாக இலங்கைத்தீவு உயிர்த்தஞாயுறுத் தாக்குதலைத் தொடர்ந்து மாறியிருக்கிறது. இதில் சிக்குண்டு சீரழிவது தமிழர்களின் தேசியைன விடுதலைக்கான அரசியலும் அதற்கான முனைப்புகளும் மட்டுமே. உண்மையில் தமிழர்தேசத்தின் இருப்பையும் தேசிய இனவிடுதலை அரசியலையும் சீர்கெடுக்கும் அத்தனை கொடுவாற்றல்களும் ஏதோவொரு வழியில் கூடுதல் நன்மையடை, மேலும் மேலும் இக்கட்டில் இருப்பது தமிழர்தேச விடுதலைக்கான தமிழ்த்தேசிய அரசியல் மட்டுமே எனத் தெளிந்து தமிழ்த்தேசிய அரசியல் குறித்த பார்வை எம்மவர்கள் மத்தியில் மேலும் செப்பனிடப்பட்டு அனைத்து அடிப்படைவாதங்களையும் மேலாதிக்கங்களையும் பேரினவாதத்தையும் ஒருசேர எதிர்க்கும் புரட்சிகர ஆற்றல்களாக தமிழ்த்தேசியர்கள் நகர வேண்டியது நிகழ்கால அரசியலில் இன்றியமையாதது என்பதுடன் இதுவே தமிழ்த்தேசிய இனவிடுதலை அரசியலை இனிவருங்காலங்களிலும் சரியான திசைவழி முனைப்புறுத்த தமிழர்கள் தம்மை அணியப்படுத்தத் தகுந்ததும் இனிமேலும் தட்டிக்கழிக்க முடியாததுமான கால எல்லையாகும்.

{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் (இசுலாம்+இந்து+கிறித்துவம்) + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம் (அமெரிக்க தலைமையிலான மேற்கு+ தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா+ சீனா)}

நெடுஞ்சேரன் – 

2019-06-21

 2,508 total views,  8 views today