பிரதேசவாதம், சாதியம், மதம், குறுங்குழுவாதம் என்கின்ற கேடிலும் கேடான அகமுரண்களும் தமிழ்த்தேசிய இனவிடுதலையும் -மறவன்-

எப்போதும் புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும். ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கலாக தமிழ்த் தேசிய இனம் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இருக்கையில், தமிழீழ தேசிய இனத்தின் அடிப்படைச் சிக்கல்களாக அகமுரண்களான பிரதேசவாதம், சாதியம், மதம் என்பனவற்றுடன் அமைப்புச் சார்ந்த குறுங்குழுவாதம் என்பன காணப்படுகின்றன. ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திலுள்ள அகமுரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதுடன் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் தம்மாலான அத்தனை சூழ்ச்சிகளையும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவும் உலக வல்லாண்மையாளர்களின் உளவுக்கட்டமைப்புகளும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அவர்களிடம் குறிப்பாக இந்தியாவிடம் தமிழர் தாயகநிலப்பரப்பில் நிலவும் அகமுரண்பாடுகள் தொடர்பான மிகத் துல்லியமான தகவல்கள் உள்ளன. இந்த அகமுரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதன் மூலமாக அகமுரண்களை உட்பகையாக்கி தமிழினத்தைப் பிளவுபடுத்திச் சிதறடிப்பதன் மூலம் தமிழர் என்ற தேசிய உணர்வுடன் ஓர்மை பெற்ற ஒரு தேசிய இனமாகத் தமிழர் ஓரணியில் திரளுவதைச் சாத்தியமற்றதாக்கும் நோக்குடன் தெற்காசியாவிலுள்ள தேசிய இனங்களின் முதன்மைப் பகையான இந்தியாவின் உளவுக்கட்டமைப்புகள் செயற்படுகின்றன. இவ்வாறாகத் தமிழர்களிடத்தில் காணப்படும் அகமுரண்களைத் துருவித் துருவி ஆராய்ந்து அதனைத் தமிழர்களிடத்தில் கூர்மைப்படுத்தி தமிழர்களைச் சிதைக்க வாய்க்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தும் உறுதியோடு எம்மினப் பகைவர்கள் காத்திருக்கையில், தமிழர்களின் அரசியலோ அப்படியெந்த அகமுரண்களும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லையெனக் கூறுவதன் மூலம் தம்மை நாகரீகமடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டு பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் பிறரும் அறியார் என்ற கணக்கில் இந்த அகமுரண்பாடுகள் பற்றிக் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்கின்றது.

அகமுரண்களைக் களைந்து தேசிய இன விடுதலை நோக்கிப் புரட்சிகரமாக, தமிழ்த் தேசிய இனமாக ஓரணியில் அணிதிரள்வதை முதன்மைப்படுத்த வேண்டிய தமிழ்த்தேசிய அரசியலானது, மாறாக அகமுரண்களைக் களைய எந்தவொரு புரட்சிகரமான முன்னகர்த்தல்களையும் செய்யாமல் அவற்றைப் பூசி மெழுகிச் செல்வதையே தனது நீண்டகால வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த இடைவெளியில், அகமுரண்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் முதன்மைச் சிக்கலான தேசிய இன ஒடுக்குமுறையை மறக்கடிக்கும் வேலையை எம்மினப் பகைவர் தொடர்ந்து முடுக்கிய வண்ணம் இருக்கிறார்கள். எனவே, தமிழர்களிடத்தில் இருக்கும் அகமுரண்களைக் களைய வேண்டுமென்றால், அவை குறித்த உவத்தல் காய்தலற்ற அரசியல் பார்வையும் அவற்றைக் களைவதற்கான நேர்மையான அணுகுமுறையும் இருக்க வேண்டும். எனவே, இதுகாலவரையிலும் தமிழர்களிடத்தில் நிலவும் அகமுரண்களையும் அவற்றை எப்படிக் களைய வேண்டுமென்பதையும் இப்பத்தியில் சுருக்கமாகப் பார்க்க நேர்கிறது.

பிரதேசவாதம்

இலங்கைத்தீவானது காலனியர்களின் நேரடி ஆட்சியில் இருந்தபோது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் காலனிய ஆட்சியின் நிருவாகங்களில் பணியாற்றினார்கள். ஏனெனில், யாழ்ப்பாணமானது மலைகளோ, அருவிகளோ, பெரும் நீர்நிலைகளோ, சொல்லிக்கொள்ளுமளவிற்கு வளங்களோ அற்ற ஒரு நிலப்பரப்பாக இருப்பதுடன் ஏனைய தமிழ்ப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மக்களடர்த்தி மிக அதிகமான பகுதியாக இருந்தது. வேளாண்மையும் கடற்றொழிலும் மட்டுமே வருமானமீட்டும் வழிமுறையாக அன்றைய காலத்தில் இருந்த யாழ்ப்பாணத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குமளவிற்கு நீர்வளமும் அதிகமில்லாமல் வானம் பார்த்த நிலமாகவே யாழ்ப்பாணத்தில் வேளாண் நிலங்கள் இருந்தன. இதனால் காலனியர் காலத்தில் அவர்களின் ஊழியர்களாகப் பணியாற்றத் தேவையான ஊழியர்களை உருவாக்க அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வியைத் தாம் வருமானமீட்டி வசதி வாய்ப்பைப் பெறும் ஒரு வாய்ப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள கணிசமானோர் உள்வாங்கினர். இதனால் அதிகளவான மிசனரிப் பள்ளிக்கூடங்கள் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டன. வன்னி, மட்டக்களப்புப் பகுதிகள் நல்ல வளம் நிறைந்த பகுதிகளாக இருந்ததாலும் அங்கெல்லாம் மக்களடர்த்தி குறைந்தளவாக இருந்தமையாலும் மண்ணோடு இயைந்து நல்ல தற்சார்பு நிலையில் தேவைகளை அதிகப்படுத்தாமல் மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தமையால், அவர்கள் மிசனரிக் கல்வியில் அதிகளவு நாட்டம் காட்டவில்லை. விளைவாக, வெள்ளையர்களின் நிருவாகங்களில் அவர்கள் சொல்லிக்கொள்ளுமளவிற்கு ஊழியர்களாக இடம்பிடிக்கவில்லை. இதனால், வெள்ளையர்களின் நிருவாகங்களில் மிக அதிகளவில் பணியாளர்களாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இருந்தார்கள். இப்படியாக, அவர்கள் பணிசார்ந்து காலனியர்களால் அவர்களுக்களிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் வாழ்க்கை முறைகளால் அவர்கள் ஒரு வர்க்கமாகவே தம்மை நிலைநிறுத்தி இலங்கை முழுவதிலுமுள்ள காலனியர்களின் ஆட்சி நிருவாகங்களில் பணியாற்றினர். இப்படியாக, இவர்கள் பணியாற்றும் போது காலனியர்களின் ஆட்சி நிருவாக இறுக்கங்களை ஈவிரக்கமின்றி அந்தந்த மண்ணின் மக்கள் மீது திணித்ததுடன் இவர்களில் கணிசமானோர் அந்தந்த மண்ணின் மக்களை ஏய்க்கும் பாணியில் நடந்து கொண்டனர். காலனியர்களின் நிருவாகங்களில் ஊழியர்களாகப் பணியாற்றக் கிடைத்த அதிகாரங்கள் மூலம் அந்த மண்ணின் மக்களை ஏய்த்துப் பிழைத்தவாறு தமது வசதிவாய்ப்புகளையும் தமக்கான சலுகைகளையும் அதிகப்படுத்துவதிலேயே இவர்கள் அதிக ஆர்வங்காட்டினர். இவ்வாறாக, காலனிய ஆட்சிக்காலத்தில், தம்மை ஏனையோரிலும் பார்க்க மேலானவர்களாகக் காட்டியவாறு ஏனையோரின் இயல்பான மண்சார்ந்த செயற்கைத்தன்மையற்ற வாழ்க்கைமுறையை இழிந்ததாகப் பார்க்கும் மனநிலை இந்தக் காலனிய ஆட்சியின் ஊழியராகவிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தோரிடமிருந்து பின்னர் அது யாழ்ப்பாண மேலாதிக்க பொதுமனநிலையானது.

இப்படியான இந்த யாழ்ப்பாண மேலாதிக்க அணுகுமுறையே மட்டக்களப்பு, வன்னி, மலையகம் மற்றும் தமிழீழத்திற்கு வெளியேயான ஏனைய பகுதிகள் என்பனவற்றில் யாழ்ப்பாணத்தவர் பற்றிய பொதுமைப்படுத்திய நிழலுருவை ஏற்படுத்தியது. இப்படியாக, காலனியர் போன பின்பும் தொடரும் அவர்கள் பாணி அரசு முறையில் யாழ்மேலாதிக்கம் தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டது. சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர் தேசத்தைச் சிதைத்து (குறிப்பாக தென்தமிழீழம் மற்றும் வன்னிப் பகுதிகள்) தமிழர் தாயகத்தை வன்வளைத்து ஒட்டு மொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்க முற்படுகையில் யாழ்ப்பாணம்- கொழும்பு என இரு வீட்டு மனநிலையில் இருந்த யாழ்ப்பாண மேலாதிக்கர்கள், தொடர்ந்து தென்னிலங்கையில் தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உண்மையில், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர் மீதான ஒடுக்குமுறையில் அதிகம் நிலங்களை இழந்து கொடுமையான வன்வளைப்புகளுக்கு உள்ளாகியது தென்தமிழீழமும் வன்னிப் பெருநிலப்பரப்புமே. சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்துப் போராடும் உறுதியான புரட்சிகர வெளிப்பாடு அந்தந்தப் பகுதிகளில் அந்தந்த மக்களிடம் காணப்பட்டது. அதன் பின்பே, தென்னிலங்கையில் சிங்களக் காடையர்களின் கொடூரமான தாக்குதல்களுக்குள்ளாக்கி ஓட்டமெடுத்துத் தாயகம் திரும்பிய யாழ்ப்பாண மேலாதிக்கர்கள் தமது வர்க்க நலன் பாதிப்புறா வண்ணம் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கத் தலைப்பட்டனர்.

எனினும் புரட்சிகர இளைஞர்களின் அறிவார்ந்த புரட்சிகர முன்னெடுப்புகளை அமைப்பாக்கும் உலகறிவையும் நடைமுறைகளையும் அறிய வாய்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புரட்சிகர இளையோர்களிடத்தில் விடுதலை இயக்கங்கள் அமைப்பாகத் தோற்றம் பெற்றாலும், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான புரட்சிகர போராட்ட முன்னெடுப்புகள் தென்தமிழீழம் மற்றும் வன்னிப் பகுதிகளில் 1960 களின் பிற்பகுதியிலேயே தொடங்கி விட்டது. எனினும், யாழ்ப்பாண மையவாதம் தன்னைத் தமிழ்த் தேசியக் களத்திலும் நிலைநிறுத்தி நாளடைவில் தமிழ்த் தேசியம் என்ற போர்வையைத் தனக்கானதாகப் போர்த்தி வெளித்தோற்றத்திற்குத் தமிழ்த் தேசியர் போலும் உள்ளளவில் யாழ்ப்பாண மையவாதமாகவும் பல அணுகுமுறைகளைச் செய்தது. இவ்வாறாக, அமைப்புகள் எவ்வளவு புரட்சிகரமானதாக இருந்தாலு,ம், தன்னைத் தமிழ்த் தேசியமாகக் காட்டியவாறு யாழ்மையவாதம் தன்னை அங்கங்கே தக்க வைத்த வண்ணமே இருந்தது. இப்படியாக யாழ்மையவாதத்திற்கெதிராக அந்தந்த மக்களிடம் காணப்பட்ட அறம் சார்ந்த சினத்தினை யாழ்ப்பாண எதிர்ப்புநிலையாக்கி தமது ஆட்சி, அதிகார, பதவி நலன்கட்கு கேடாகும் போது மட்டும் பிரதேசவாதத்தை தமது அரசியல், அதிகார நயத்திற்காக யாழ்ப்பாணத்தைச் சாராத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் பயன்படுத்தினர். அத்துடன், யாழ்மையவாதத்தின் அணுகுமுறைகளிற்கு எதிராக இயல்பாக எழும் அறஞ்சார்ந்த எதிர்ப்புகளைத் தமிழ்த் தேசியத்தின் மீதான எதிர்ப்பாகச் சித்தரித்தவாறு யாழ்மையவாதத்தைக் கட்டிக்காப்பாற்றிக்கொண்டு யாழ்மையவாதிகள் தமிழ்த்தேசிய வேடம் தரித்து அலைந்தனர். மேலும், தமிழர் தாயகப்பகுதிகள் மீதான யாழ்மையவாத அணுகுமுறைகளுக்கு எதிராகக் கேள்வி கேட்போர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டு எதிர்முகாம்களுக்குள் யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளால் தள்ளப்பட்டனர். இராசதுரைக்கு முன்னரிருந்தே இந்தப்போக்குத் தொடரத்தான் செய்கிறது. தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழீழத்தின் மண்ணையும், மக்களையும், போராளிகளையும் எந்த வேறுபாடுமில்லாமல் நேசித்திருந்தாலும், ஒட்டுமொத்த தமிழீழ விடுதலைக்களத்தில் நீண்ட நெடுங்காலமாக நீடித்த யாழ்ப்பாண மேலாதிக்க அணுகுமுறை நேரடியாக மேலாதிக்கம் கொள்ளும் சூழலற்ற நிலையிலும், யாழ்மையவாத சிந்தனை அதாவது தம்மை மேலானவர்கள் என்ற சிந்தனை யாழ்ப்பாணத்தவர்களில் கணிசமானோரிடம் போராட்ட காலத்திலும் இல்லாமல் போகவில்லை.

கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, தோணிதாட்டமடு, புல்லுமலை, சித்தாண்டி, வந்தாறுமூலை, புனாணை, பெண்டுகல்சேனை, உடும்பன்குளம், சத்துருகொண்டான், அட்டப்பள்ளம், வீரமுனை என தென்தமிழீழத்தில் 1990 களின் முற்பகுதியில் சிங்கள, முசுலீம் காடையார்களால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான படுகொலைகளில் 20,000 இற்கும் அதிகமான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இப்படியாக, சிங்கள மற்றும் முசுலீம் காடையர்களின் நேரடிக் காடைத்தனத்தினை எதிர்கொண்ட தென்தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகப் பாரிய பங்களிப்பைச் செய்தார்கள். அவர்களின் இந்த இயல்பான வீர விடுதலை வேட்கையைக் கேவலப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் ஏமாற்று வலையில் வீழ்ந்ததாலேயே தென் தமிழீழ மக்கள் மிகப்பாரியளவில் விடுதலைப் போராட்டத்தில் பங்களித்தார்கள் என்ற எச்சைத்தனமான கதை கட்டல்களை அங்கிருக்கும் சில தமிழ்த்தேசிய விரோதிகள் செய்து வருகின்றனர். உண்மையில், இப்படியான எச்சைத்தனமான கதைகளைப் பரப்புபவர்களைக் காரணங்காட்டியே யாழ்மையவாதம் தனக்குத் தமிழ்த்தேசியப்போர்வையைப் போர்ப்பது இலகுவாகின்றது.

“வீரம் விளைநிலம்” என தமது மண்ணின் பெருமையையே வீரத்துடன் இணைத்துப் பெருமைகொள்ளும் மட்டக்களப்பு மக்கள் ஏழ்மையில் உளன்றவாறே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வலிமை மிகு ஆற்றல்களாக தமிழீழப் போர்க்களங்களில் முன்னணிப் போர்ப்படையாக விளங்கினர். எந்தவொரு வசதிவாய்ப்புமில்லாமல், குறிப்பாக ஒரு முன்பள்ளிக்குக் குழந்தைகள் செல்வதற்கே 5 கி.மீ தொலைவுக்கு நடந்துசெல்ல வேண்டிய நிலையே அங்குள்ள ஊர்களின் நிலவுகின்றது. தமக்கே வாய்த்துப்போன விருந்தோம்பல் பண்பும், நட்புக்காக உயிரையும் விடும் பண்பும்வீரத்தையே தமது சொத்தாக நினைக்கும் நெஞ்சுறுதியும் கொண்ட தென் தமிழீழ உழைக்கும் மக்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கெதிரான போரில் மிகப்பெரும் விலை கொடுத்தும் அவர்களின் வாழ்வில் சொல்லிக்கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை.

அப்போதெல்லாம், அந்த மக்களின் வாழ்வியலடிப்படைகள் மற்றும் கல்விநிலை என்பவற்றை உயர்த்தவோ அல்லது அது தொடர்பான சிக்கல்களுக்காக பயனுள்ளவாறு எந்தச் செயல்களையுமாற்றாமலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சொல்லும்படியாக எந்தப் பங்களிப்பும் செய்யாமல் போக்குக்காட்டிக்கொண்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகம் அடங்கலான கல்விச்சமூகம் தமது பதவி, அதிகார நலன்களிற்கு யாழ்ப்பாண மேலாதிக்கத்தால் கேடுநேர்கையில் மட்டும் அதனை ஒட்டுமொத்த யாழ்ப்பாண வெறுப்பாக உமிழ்ந்து தமக்கான நயத்தைத் தேட முனைந்தார்கள். உண்மையில், இப்படியானவர்களும், யாழ்ப்பாண மேலாதிக்கர்களும் தென் தமிழீழத்தின் உழைக்கும் மக்களின் நலன்களிற்குக் கேடானவர்களே. 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வடக்கு- கிழக்கு என இரு அணிகளாகப் பிரிந்து அங்கு மிகக் கொடிய பிரதேசவாத கருத்து மோதல்கள் வெடித்தன. யாழ்ப்பாண மேலாதிக்க மனநிலை தாங்கியவர்களாகக் குற்றஞ்சொல்லப்பட்ட சபாரட்ணம், ரவீந்திரநாத், செந்தில்மோகன், ரகுராமன் போன்ற பேராசிரியர்கள் வடக்கு அணியாகவும் திருச்செல்வம், யுவி தங்கராசா, சித்திரலேகா போன்றோர் கிழக்கு அணியாகவும் நின்று அந்நேரம் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். உண்மையில் இது ஒரு அதிகாரப் போட்டிக்கான மோதல் என்பதை யாழ்மையவாத எதிர்ப்பாளராகக் காட்டியோர் அதுவரை குறிப்பாக அந்த மண்ணிற்கோ அல்லது பொதுவாகத் தமிழ்த்தேசியத்திற்கோ என்ன பங்காற்றினார்கள் என்பதைப் பார்ப்பதனூடாகவும் வடக்கு அணியாக நின்றோர் அந்த மண்ணில் நடந்துகொண்ட முறையையோ அல்லது அவர்களது சொந்த மாவட்டத்தின் செயற்பாடுகளுக்கேனும் அவர்கள் ஏதேனும் பங்களித்தார்களோ என்று பார்ப்பதனூடாக இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்

உண்மையில் மட்டக்களப்பின் உழைக்கும் மக்கள் யாழ்ப்பாண மேலாதிக்கத்தால் அல்லலுறும் போதெல்லாம் அதைப் பற்றி வாய்திறக்காத இந்தக் கூட்டம் தமது அதிகார, பதவி நலன்களிற்கு கேடாகும் போது மட்டுமே வாய்திறந்தார்கள். வன்னியிலே போர் தீவிரமானதைத் தொடர்ந்து போர்க்களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் காப்பாற்ரிக்கொள்ள 1997 ஆண்டு மே மாதமளவில்ஜெயசிக்குறு நடவடிக்கைமுறியடிப்புச் சமரிற்காக மட்டுஅம்பாறை மாவட்டத்திலிருந்து போராளிகள் வன்னிக்கு வந்து 1200 இற்கு மேற்பட்ட போராளிகளை விதைத்துஜெயசிக்குறு நடவடிக்கையினை முறியடித்ததில் மிகப் பெரும் பங்காற்றித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றினார்கள். அமைதிப்பேச்சுக் காலத்திற்கு முன்பு வரை 2248 மட்டுஅம்பாறை மாவட்டப் போராளிகள் வடக்குக் களமுனைகளில் வீரச்சாவைத் தழுவினார்கள். இவ்வாறாக ஒப்பற்ற ஈகங்களைச் செய்துவிட்டு மட்டு- அம்பாறைப் போராளிகள் அந்நாளில் சிறப்புத் தளபதியாக இருந்தவரும் பின்னர் தடம்மாறி இரண்டகரான கருணா தலைமையில் கால்நடைவழியாக வன்னியிலிருந்து தென் தமிழீழத்திற்குப் பயணம் செய்தனர். அப்போது தமிழீழ வரலாற்றை ஆவணப்படுத்துவதில் திறன் மிகுந்த மணலாறு விசயன் ஆசிரியர் அவர்களும் பலத்த சிரமங்களினை எதிர்கொண்டு தலைவரின் ஒப்புதலுடன் அந்தப் போராளிகளுடன் சேர்ந்து தென்தமிழீழம் சென்றார். அவர் அப்படிப் பயணம் செய்யும் போது அந்தப் போராளிகளின் உணர்வுகளையும், மனக்குமுறல்களையும், அவர்கள் பட்ட துன்பங்களையும், அவர்களின் வெற்றிப் பெருமிதங்களையும், தமிழ்த்தேசியத்தின் பால் அவர்கள் கொண்ட பற்றுறுதியையும் அந்தப் போராளிகளின் வாய் மூலமாகக் கேட்டுப் பதிவு செய்திருந்தார். அந்த விடயங்கள் மணலாறு விசயன் அவர்களிற்கும் அந்தப் போராளிகளுக்கும் இடையிலான இயல்பான கலந்துரையாடலே தவிர அரசியல் நோக்கின்பாற்பட்ட ஆவணப்படுத்தல் அல்ல. அந்தக் கலந்துரையாடல்கள் நூலாகும் என அந்தப் போராளிகளில் பலர் அறிந்திருக்கவுமில்லை. அதில் அவர்கள் பலவாறு தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தனர். தம்மை ஏளனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கிய நிகழ்வுகள், மேலாதிக்க மனநிலைகொண்ட சிலர் தம்மைக் கீழானவர்களாகப் பார்த்தமை, தம்மை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமை என தமது மனக்குமுறல்களை அந்தப் போராளிகள் வெளிப்படுத்தியிருந்தனர்.  உண்மையான தென்தமிழீழ/ வன்னி மண்பற்றும் தமிழ்த்தேசியப் பற்றுறுதியும் கொண்டவர்கள் யாழ்ப்பாண மேலதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் போது அவர்கள் தமிழ்த்தேசியத்தினைக் கேள்விக்குட்படுத்துவதாக முத்திரை குற்றப்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. ஆனால், தொடக்க காலத்தில் தென்தமிழீழத்தில் யாழ்மையவாதத்திற்கெதிரான குரல்கள் ஒலிக்கையில் தமிழ்த்தேசியத்திற்காக கருணா அடங்கலான பலர் அதனைப் பொறுப்புணர்வுடன் கையாண்டு தமிழ்த்தேசியத்திற்குக் கேடாகாத வண்ணம் சரி செய்தார்கள் என்பதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பின்பு, கருணா தனது தனிப்பட்ட ஒழுக்கக்கேடு மற்றும் நடத்தைப் பிறழ்வுகள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கொள்வதற்காகவே அந்தப் பிரதேசச் சிக்கலைக் கையிலெடுத்துப் பின்னர் அது எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காது போக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எச்சைகளில் இன்பங்கண்ட எச்சையக மாறினான். உண்மையில் யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற சரியான அரசியல் சொல்லைப் பயன்படுத்துவதற்கு மாறாக வன்னிப்புலிகள், வன்னித்தலைமை போன்ற சொற்களைத் தன்னை நியாயப்படுத்த எழுதிய அறிக்கையில் பயன்படுத்தி தனது இரண்டகத்தை மறைக்கக் கருணா பிரதேச சிக்கலைக் கையிலெடுத்தார்.  கருணாவின் பிளவின் பின்னணியில் இந்திய உளவுத்துறையே பெரும்பங்காற்றியது. உண்மையில், மட்டக்களப்புப் பகுதியில் காணப்பட்ட யாழ்மேலாதிக்கத்தின் சிக்கல்களை பிரித்தாளும் பகைவரும், தன்னைத் தற்காத்துக்கொள்ள கருணாவும், தமது அதிகார, பதவி அடைவுகளிற்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய சில நிருவாக அதிகாரங்களில் இருந்தோரும் பயன்படுத்தினர். மட்டக்களப்பின் மீதான யாழ்மேலாதிக்க மனநிலையின் விளைவான செயற்பாடுகளை அரசியற் பார்வை கொண்டு அந்த மேலாதிக்க மனநோயை அனைத்து மட்டங்களிலும் களைந்து அந்தச் சிக்கலை அணுகியிருந்தால் இவ்வளவு பெரிய சிக்கலாக அதனை மாற்ற எந்தப் புற ஆற்றல்களாலும் இயலாது போயிருக்கும்.

ஈற்றில் கருணாவின் பிடியிலிருந்து வன்னியை மீட்க வன்னியிலிருந்து போராளிகள் சென்று (அதிலும் பெருமளவில் தென் தமிழீழப் போராளிகளே இருந்தனர்) மீட்ட போது மிகப் பாரிய கனரக போர்க்கருவிகளுடனும் 5000 வரையிலான போராளிகளுடனும் கருணா நிலைகொண்டிருந்தாலும்  ஒரு 50- 100 பேரைத் தவிர்த்து எந்தப் போராளிகளும் கருணாவிற்காகப் போரிட முன்வரவில்லை. எந்தக் கனரக போர்க்கருவிகளும் கருணாவின் பிடியிலிருந்த போராளிகளால் இயக்கப்படவில்லை. ஏனெனில், அந்தப் போராளிகளிடம் தீராத தமிழ்த்தேசியப் பற்றுறுதி இருந்தது. இப்படியாக, கருணாவிடமிருந்து மட்டுஅம்பாறை மாவட்டங்கள் மீட்கப்பட்ட பின்பு, அதனை ஏதோ மட்டுஅம்பாறை மாவட்டங்களிலிருந்த பெருமளவு போராளிகளை வன்னியிலிருந்து குறைந்தளவு போராளிகளுடன் சென்று மீட்டு வந்த வெற்றி போல யாழ்மையவாத மனநோய் பத்தி எழுத்தாளர்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்து எழுதித் தீர்த்தனர். “வீரம் விளைநிலம்எனத் தமது மண்ணைக் குறிப்பதையே பெருமையாகக்கொள்ளும் மண்ணின் தமிழ்த்தேசியப் பற்றுறுதி தாம் இப்படிக் கொச்சைப்படுத்தப்பட்டதைத் தாண்டித் தமக்குக் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் (தேர்தல் அடங்கலாக) தமது தமிழ்த்தேசியப் பற்றுறுதியைத் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளை விஞ்சியவாறு மட்டககளப்பு மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்தைப் புரிந்துகொள்வதற்கு யாழ்ப்பாண மேலாதிக்க மனநிலையால் இயலாது. இந்தச் சில்லறைத்தனமான யாழ்ப்பாண மேலாதிக்க மனநிலையை அகற்றித் தென்தமிழீழத்தைப் புரிந்துகொள்வதன் மூலமே இந்தப் பிரதேச அகமுரண்பாட்டைக் களையலாம். மாறாக, பூசி மெழுகுவதால் நாம் இன்னமும் சிக்கல்களுக்குள் தான் செல்வோம்.

சாதியம்

ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டு என்ற மாந்தகுல விரோதக் குளறுபடியுடன் கொழுந்துவிட்டெரிந்த சாதியவெறி ஆதிக்க நிலையிலிருந்த சாதியச் சமூகங்களைத் தவிர்ந்த ஏனையோருக்குப் பிறப்பின் அடிப்படையில் கல்வியை மறுத்து சாதி வெறியாட்டம் ஆடியது. சொல்லொணா சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அரசியல் விழிப்புப்பெற்ற புரட்சிகரப் போராளிகள் சாதி வேறுபாடின்றி 1920- 1960 காலப்பகுதிகளில் முன்னெடுத்த கோயில் உள்நுழைவுப் போராட்ட்டங்கள் மற்றும் இலங்கைத்தீவில் அறிமுகமான இலவசக் கல்வி, மற்றும் டொமினிக் ஜீவா, டானியல், தணியான் போன்ற எழுத்தாளர்களின் சாதி வன்கொடுமைகளிற்கெதிரான படைப்புகள் என ஒரு பெருமாற்றம் நிகழ்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த மறவழி விடுதலைப் போராட்ட காலத்தில் சாதிய முரண்கள் வெளிப்படாத ஒரு இறுக்கமான சூழ்நிலையிருந்தாலும், ஒரு வித சாதிய தீண்டாமை மனநிலை மக்களிடம் சாதி உளவியலாக நீடிக்கவே செய்கிறது. எனினும் கல்வியிலும் வேலைகளிலும் சாதியம் தலை தூக்க முடியாமையை தமிழீழ அரசு உறுதிப்படுத்தியமையை மிகப் பெரிய மாற்றமாகக் குறிப்பிட வேண்டும். அறவழிப்போராட்ட காலத்தில் தமிழ்த்தேசியம் நோக்கி தமிழர்கள் ஓரணியில் திரள்வதைத் தடுக்க சாதியச் சிக்கலில் உட்புகுந்து சாதிக்கொடுமைக்குள்ளாகும் மக்களை சாதிக்கொரு பௌத்த பீடம் வைத்திருக்கும் பௌத்த மதத்தினைத் தழுவினால் சாதியக்கொடுமைகளிலிருந்து விடுபடலாம் என ஏமாற்றி அவர்களைப் பௌத்தர்களாக்கிப் பின் சிங்களர்களாக்கலாம் எனும் திட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் சூழ்ச்சி செய்தது. தலித்தியம்என்ற இறக்குமதி செய்யப்பட்ட அடையாள அரசியல் அகமுரண்களை ஆகப்பெரிய முரண்களாக்கி தேசிய இன விடுதலை என்ற முதன்மை முரண்பாட்டை மறக்கடிக்கச் செய்யும் நோக்கிலேயே இந்திய மற்றும் சிங்கள உளவுக் கட்டமைப்புகள் சூழ்ச்சி செய்கின்றன. தேசிய இனவிடுதலை அடையாத வரை, தமிழ்த்தேசிய இனவிடுதலை நோக்கி தமிழர் ஒருமைப்பாட்டுடன் போராடக் கூடாது என்ற நோக்கில் சாதிய முரண்பாடுகளைக் தமிழர்களிடத்தில் கூர்மைப்படுத்தும் சூழ்ச்சிகளை தமிழனப் பகைவர் தொடர்ச்சியாகச் செய்யவே செய்வர்.

இப்போதும் சில முன்னணிப் பள்ளிக்கூடங்களில் அதிபர் நியமனங்களிலும் சில அதிகார மையங்களை அடைவதற்குத் தேவையான வாக்கெடுப்புகளிலும் சாதியம் இன்னமும் ஆதிக்கஞ் செய்கின்றது. இப்படியான இடங்களில் சாதியச் சிக்கலை கூர்மைப்படுத்தவும், மற்றும் தலித்தியம் பேசும் அடையாள அரசியல் செய்வோரை ஊக்குவிக்கும் சூழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அரசியலிலும் வாக்குகளில் சாதியத்தைப் புகுத்தும் வாய்ப்புகளும் தேடப்படுகின்றன. எனினும் தமிழ்நாட்டில் நிலவுவது போன்று சாதிய வாக்கு அரசியல் எக்காலத்திலும் தமிழீழ மண்ணில் வாய்ப்பேயில்லையென்றாலும், கடந்த உள்ளூராட்சி தேர்தல்களின் போது, யாழ் மாவட்டத்தில் சில பகுதிகளில் அவர்கள் வழமையாக வாக்களித்துப் பழகிய கட்சிக்கு வாக்களிக்காமைக்கு சாதியம் காரணமாகியமை தெட்டத் தெளிவாக உணரக் கூடியதாக இருந்ததுடன் அந்த நல்ல வேட்பாளரும் மனம் நொந்து தனது நெருக்கமான வட்டாரத்தில் இது பற்றி சொல்லியிருக்கிறார். இது இனிவரும் காலங்களில் மேலும் ஊக்குவிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே சாதியம் குறித்த சரியான அரசியல் புரிதலும் தமிழ்த்தேசிய அரசியலில் அதனை நேர்மையுடன் கையாளுவதும் தேவையாகின்றது.

மலையக அடியைக்கொண்ட மக்கள் மீதான பார்வை

தமிழர்தாயகப் பகுதிகளில் மலையக அடியைக் கொண்ட எமது தமிழ் மக்களின் மீதான பார்வை குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மலையகத்தை அடியாகக் கொண்ட தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழுவதால் அவர்களில் ஒரு கணிசமானோர் அங்குள்ள மேலாதிக்க மனநிலைகொண்டோரால் ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுவதாக அண்மைக்காலமாகக் குற்றச்சாட்டுகள் பல வெளிவந்தன. உண்மையில் மலையக அடியைக் கொண்டவர்கள் அங்கு ஒரு பிரதேசவாதமாகவன்றி மலையக அடியைக்கொண்டவர்கள் ஒரு சாதியாகவே (மலையகத் தமிழர்களில் அதிக்க, இடைநிலை, மாற்றும் தாழ்த்தப்பட்ட சாதிப்படி நிலைகள் இறுக்கமாக உண்டு எனிலும் தமிழர் பகுதிகளில் உள்ள சாதியவாதிகளால் அவர்கள் இந்தியக்காரன்/ வடக்கத்தையார் என்ற ஒரு சாதிய அடையாளமாகவே நோக்கப்படுகின்றனர்) பார்க்கப்படுகின்றனர். வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாதுபோன்ற ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற மேட்டுக்குடிக் கூட்டத்தின் இழிந்த பார்வையும் பரப்புரையும் இன்று வரை சில மேலாதிக்க மனநிலை படைத்த தமிழர்களில் ஆதிக்கஞ் செலுத்துவதாகவே இருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபர் நியமனங்களில் இந்தப் பாகுபாடு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் இது தொடர்பான உண்மைத்தன்மை உவத்தல் காய்தல் இன்றி ஆய்வுசெய்யப்பட வேண்டும். (இந்தக் குற்றச்சாட்டு உண்மையா அல்லது சில காழ்ப்புணர்வுகொண்டோரின் அதிகாரம் நோக்கிய ஓட்டத்தில் விழுந்த சறுக்கல்களின் விளைவான காழ்ப்பு வெளிப்பாடா என்பதைக் கண்டறிய வேண்டும்). எனினும் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீதிகளைச் சீர்செய்தல் போன்ற அடிப்படை உட்கட்டுமாணங்கள் பற்றிய பாராமுகம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு உள்ளூராட்சிக் கட்டமைப்புகளிலும் அரச அதிகாரத்திலும் அந்த மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது ஒரு காரணமெனச் சிலர் பேசத் தொடங்கியதோடு அதனை நோக்கிய வாக்கரசியல் பயணத்திற்கு மலையக வம்சாவளி மக்கள் என்ற அடையாள அரசியல் முனைப்புப் பெறுவது கடந்த சில மாதங்களாக நோக்கக் கூடியதாகவுள்ளது. இது இப்படியிருக்க, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மலையக அடியைக் கொண்ட எமது மக்களைஇந்தியவம்சாவளியினர்என்ற அடையாளத்திற்குள் எண்ணிக்கைக் கணக்கெடுத்த இந்திய உளவுத்துறை கிளிநொச்சி மாவட்டத்தில் அதனை அடிப்படையாகக் கொண்ட விரிசல்களை ஏற்படுத்த வழிபார்த்து நிற்கின்றது. ஆனாலும் தமிழீழ நிழலரசில் வாழ்ந்து தமிழீழ விடிவுக்காக எண்ணற்ற ஈகங்களைச் செய்து அந்த மண்ணின் மக்களாக இருக்கும் மக்களின் அடி மலையகம் என்ற உணர்வில்லாமல் தமிழீழ மண்ணின் மக்களாக உணர்ந்த அந்த உழைக்கும் மக்களைஇந்திய வம்சாவளி/ மலையக வம்சாவளிஎன அணிதிரட்டுவதென்பது சாத்தியமற்றதொன்றே. எனினும் அதற்கான முனைப்பு அங்கு நடைபெறுகின்றது. சந்திரகுமார் இந்த முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தித் தன்னைப் பாகுபாட்டிற்குட்படும் மக்களின் மீட்பராகக் காட்டி வாக்குச் சேகரிக்கும் முயற்சியிலுள்ளார்.

சிறிதரன் எங்கேனும் தவறிழைக்க மாட்டாரா அதை வைத்து அரசியல் செய்ய என்று அலையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கூட ஒரு அலைபேசி அழைப்பில் சிறிதரன் “வடக்கத்தையான்” என இழிவுபடுத்திப் பேசியமைக்கு அரசியல் இரீதியான கண்டனம் எதனையும் முறையாகத் தெரிவிக்காமைக்கு மேலாதிக்க மனநிலையின் தாக்கம் தான் காரணம் எனச் சொல்வதில் தவறில்லை. எனவே சிங்கள இனவெறியாட்டத்தினால் நேரடியாகப் பாதிப்புற்றுத் தமிழ் மண்ணே எமக்குக் காப்பரண் என்று ஓடி வந்து காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பின் தமது குருதியைப் பாய்ச்சித் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தமிழீழ மண்ணின் மக்களை ஓரவஞ்சனையில் நோக்கும் அல்லது விழிக்கும் எந்த வகையான சில்லறைத்தனங்களும் களையப்பட வேண்டும். இதனை அரசியல் விழிப்போடு அணுகாமல் பூசி மெழுகினால் எம்மைச் சிதைக்கும் வாய்ப்பாக எதிரி இதனையும் பயன்படுத்துவான் என்றுணர வேண்டும்.

மதம்

அண்மையில் மன்னாரில் திருக்கேதிசுவர கோயில் முன்னறலில் வளைவு உடைக்கப்பட்ட நிகழ்வும் அதைத் தொடர்ந்து “கிந்து விஸ்வ பரிசத்” போன்ற இந்திய உளவுக்கட்டமைப்புகளின் தளங்களில் ஒன்று எப்படி உள்நுழைந்து அறிக்கையிட்டுச் சூழ்ச்சி செய்ய முற்பட்டதென்றும் கத்தோலிக்க பாதிரியரின் மதம் சார் வன்மம் வெளிப்பட்டு நின்றதென்பதையும் உற்று நோக்கினால் தமிழர் என்ற இன அடையாளத்தைத் தவிர்த்து “இந்து” என்ற தமது மேலாதிக்கத்திற்குத் துணைபுரியும் மத அடையாளத்திற்குள் கொண்டுவரும் இந்தியாவின் சூழ்ச்சி பற்றியும் புரிந்துகொள்ளலாம். இது தொடர்பாக காகத்தில் ஏற்கனவே வெளியான முழுமையான விளக்கக் கட்டுரையைப் பார்க்க http://www.kaakam.com/?p=1472

தமது மரபு பற்றிய புரிதலில்லாமலும் மெய்யியல் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இன்றியும் தம்மை இந்துவாக அடையாளப்படுத்தித் தம்மைத் தூய்மானவர்களாக நினைத்து ஏனோயோரை இழிந்தவர்களாக நினைக்கும்இந்துஎன்ற கேடான அரசியல் சொல் பற்றிய புரிதல் தேவைப்படுவதுடன் கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறித்துவ அவைகளின் கருத்தியலில் சிக்குண்டு தமது மரபினடியைக் கொச்சைப்படுத்தாமல் விடயங்களைப் பார்க்கும் ஆற்றல்களை கிறித்துவ, கத்தோலிக்க மதம் தழுவியோர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது முற்போக்காற்றல்களின் கடமையாகும். மாறாக, இதனைப் பூசி மெழுகினால் மன்னாரில் நீண்ட கால இடைவெளியில் கருக்கொண்ட இந்த மதவெறியாட்டம் மாற்றாரின் உச்சியைக் குளிரச் செய்யும் விடயமாக பரவலடையும் வாய்ப்புகள் அதிகமாகி தமிழர்களுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குமான போர் என்பது மறக்கடிக்கப்பட்டு மத அடையாளங்கள் தலை தூக்கியாடும் இடுக்கண்ணே நிலவும்.

அமைப்புச் சார்ந்த குறுங்குழுவாதம்

இன்று அரசியலில் இருக்கும் அதாவது செயற்பாட்டில் இருக்கும் அமைப்புகளை ஒரு குறுங்குழுவாதக் கண்ணாடியணிந்து பார்த்து அந்தக் குறுங்குழுவாத மனநிலையிலிருந்து சேறடிப்புகளும் சொம்படிப்புகளும் தொடருவதால் ஒரு பொதுவான வேலைத்திட்டங்களில் கூட அமைப்புகள் இணைந்து செயற்பட முடியாமல், தமக்கு மாற்றான தரப்பு ஏதேனும் அரசியல் தவறோ அல்லது இரண்டகமோ இழைக்காதா? அதனை வைத்து நாம் அரசியல் நயம் அடைய முடியாதா? என காத்திருக்கும் நிலைக்கே இந்தக் குறுங்குழுவாத அணுகுமுறை உள்ளது. உண்மையில், சிங்கள- பௌத்த பேரினவாதத்தை மறந்த இவர்கள் தமது குறுங்குழுவாத சகதியில் காலங்கழிக்கின்றனர். தமிழீழத்திற்காகப் போராட வந்த இயக்கங்களில் ஏதேனும் ஒன்றில் ஒருவர் ஏதோவொரு காலப்பகுதியில் உறுப்பினராகவிருந்தார் என்பதற்காகவே ஐயுறவுடனும் இன்னும் மேற் சென்று பகைமையுடன் நோக்கும் குழுவாத அணுகுமுறையை எம்மினத்தை அழிக்கத் துடிக்கும் உளவமைப்புகள் இலகுவாகப் பயன்படுத்தி தமிழரை ஒரு ஆற்றல்மிக்க திரளாக அணிதிரள்வதில் இருந்து தடுக்கும் வேலைகள் நடக்கிறன. எனவே, இந்தக் குறுங்குழுவாத அணுகுமுறையில் இருந்து தமிழர்கள் வெளியே வந்தேயாக வேண்டுமென்பதை காலங்கடந்த இக்காலத்திலாவது உணர்ந்து சரி செய்ய வேண்டும்.

-மறவன்-

2019-04-14

Loading

(Visited 62 times, 1 visits today)