
ஒரு இனத்தின் இருப்புக்கு அவர்களின் நிலம், மொழி, ஒத்த பண்பாடு என்ற வெளித்தெரியும் வாழ்வியல் தொடர்ச்சிகள் அடிப்படையாக இருப்பினும் அந்த இனத்தின் மனநிலையின் கூட்டுணர்வு தான், அந்த வாழ்வியல் தொடர்ச்சிகளின் இயங்கியல் தளமாக இருக்கும். இனம், மொழி, நிலம் என்ற மனநிலையின் கூட்டு தான் அந்த இனம் ஒடுக்குதலுக்கு உள்ளாகும்போது விடுதலைக்கான குரலாக மாற்றமடைந்து போராட்ட எழுகையாகின்றது. மரபுவழித் தேசிய இனமான தமிழர்களின் அந்த விடுதலை மனநிலையின் கூட்டுணர்வு தான் சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக வெடித்து விடுதலைப்போராட்டமாக எழுச்சிகொண்டது. ஆயினும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் கூட்டு மனநிலையின் மேல் விழுந்த அடியானது, தனியன்களின் மனநிலைகளில் சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிதைவுற்ற மனங்களின் இடைவெளிகளை ‘அடிமை’ மனநிலை மீளவும் நிரப்பிவிட்டது.
சிங்களப் பேரினவாதத்தின் ஒவ்வொரு கூறுக்கும் நாங்கள் அடிமையாகிக் கொண்டிருத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்த அடிமையாகுதல் என்ற பண்பு எமக்கு புதிதானதா என்ற வினாவினை எழுப்பின், அது அவ்வாறல்ல என்ற மறுமொழி கிடைக்கும். இலங்கை மேற்கு நாடுகளின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்து, பின்னர் விடுதலை பெற்றாலும் கூட, அந்தக் காலனியர்கள் தொலைநோக்கில் திட்டமிடப்பட்ட விடயங்கள் இன்றும் மறைமுகமாக நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றன என்று கூறலாம். எமது வாழ்வியல், கல்வி, தொழில், சடங்குகள், வழிபாடுகள் என ஒவ்வொரு பண்பாட்டுக் கூறிலும் எவ்வாறு காலனிய அடிமை மனநிலை விரவிக்கிடக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முயல்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.
காலனியமானது ஒரு நாடு இன்னொரு நாடொன்றின் மீது, தொடர்ச்சியான தனது கட்டுப்பாட்டினையும் ஆதிக்கத்தையும் வைத்திருக்கும் கருத்தியலின் செயல்வடிவம் என்று பொருள்கோடலாம். இந்தச் செயல்வடிவத்தின் பெருந்தாக்கமாக, ஏகாதிபத்தியம் என்ற சொல்லும் அதன் பின்னாலுள்ள அதிகாரத்தின் மையமும் உருவாகின. யோன் கொப்சன் என்பவரால் 1902 இல் எழுதப்பட்ட ‘Imperialism’ (ஏகாதிபத்தியம்) என்ற நூலின் பின்னர் இச்சொல் எங்கும் புழக்கத்தில் வந்தது.. அதிகாரம் ஓர் புள்ளியில் குவிக்கப்பட்ட இந்த காலனி ஆதிக்கத்தின் பின்னணியில் பொருண்மிய குவிப்பு என்ற கருத்தியல் பின்னணியில் இருப்பினும், அது பொருண்மியத்தையும் தாண்டி, மக்களின் இன அடையாளங்களின் மீதும் தனது வல்வளைப்பை நிகழ்த்தியது. ‘ஏகாதிபத்தியம்’ என்ற சொல்லானது, மறைமுகமான அரசியல், பொருண்மிய ஆதிக்கங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு ஏகாதிபத்தியம், பொருண்மிய ஏகாதிபத்தியம், இராணுவ ஏகாதிபத்தியம், அரசியல் ஏகாதிபத்தியம் போன்ற முதன்மையான வன்வளைப்புகளின் மூலம் காலனிய ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. இந்தக் காலனிய ஆட்சியாளர்கள் புவியியல் இரீதியாக நாடுகளுக்கு தன்னாட்சியைக் கொடுத்திருந்தாலும் மனநிலைசார்ந்த எந்த மாற்றங்களும் நிகழவில்லை என்பதை இன்றும் காலனிய அடிமை மனநிலையுடன் நாம் இருப்பதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். சிந்தனை முறையில் கூட காலனியம் இன்றுவரை எம்முள் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. பின்காலனித்துவம் சார்ந்த ஆய்வுகளை ஆளப்பட்டவர்கள் சார்பில் எழுதியவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படும் கூகிவா தியாங்கோ ‘காலனிய ஆட்சியாளர்களின் இராணுவ உதவியுடன் உற்பத்தியும் வளமும் சிதைக்கப்பட்டதுடன் காலனியப்படுத்தப்பட்ட நாட்டு மக்களின் சிந்தனைகளும் காலனியப்படுத்தப்பட்டன’ என்று கூறுகிறார். ஏட்வேர்ட் செயித் கிழக்கைச் சேர்ந்த மக்களைத் தாழ்ந்தவர்களாகச் சித்திரிக்கும் ஐரோப்பிய மையவாதத்தினைக் கேள்விக்குள்ளாக்குகிறார். ஐரோப்பிய மையவாதம் வெறுமனே ஆட்சிசார்ந்தது என்று அல்லாமல் மொழி, மற்றும் பண்பாட்டு காலனியாதிக்கங்களைப் பற்றி பேசுகிறார்.
ஒரு மரபுவழித்தேசிய இனத்தின் முதன்மைப் பண்பாட்டின் மீது, வன்வளைப்புச் செய்து அதன் மீது தனது பண்பாட்டு அதிகாரத்தைத் திணித்தல் பண்பாட்டு ஏகாதிபத்தியம் எனப்படுகின்றது. இவ்வாறான பண்பாட்டுத் திணிப்பானது, இனம் சார்ந்த பண்பாட்டு அதிகாரத்தின் மீது வினாவையெழுப்பி, அந்தப் பண்பாட்டுக் கூறுகளை ஏளனப்படுத்தி, அந்தக் கூறுகளின் மீதான உலகக் கண்ணோட்டத்தை மாற்றிவிடுகின்றது. அதன் காரணமாக தன் சார்ந்த பண்பாடு தாழ்ந்தது என்ற மனநிலையும் அதற்கு நேர்விகிதசமனாக, மேற்கின் அல்லது ஆளுவோரின் பண்பாடு மேன்மையானது என்ற மனநிலையும் உருவாகின்றது. தமிழர்களைப் பொறுத்தவரையில் மரபுவழித் தேசிய இனமொன்றின் தொடர்ச்சியான செந்நெறி மரபினைக் கொண்டிருந்தாலும், மேற்கின் மீதான ஈர்ப்பினால் அந்த மரபுகளைத் தாங்களே கைவிடும் மரபு உருவாகிக்கொண்டிருக்கின்றது. உடை, உணவு, வழிபாடு, வாழ்க்கை முறைமை, வாழிடம் என தனது எல்லாப் பண்பாட்டு அடையாளங்களும் மேற்கின்வழி மாறிக்கொண்டிருக்கின்றமையைக் குறிப்பிடலாம்.
இனத்தின் பண்பாட்டு அடையாளங்களின் வழியே தான் அந்த இனத்தின் இருப்பும், இனத்தின் இருப்பின் வழியே பண்பாட்டு அடையாளங்களும் ஒன்றுடனொன்று இணைந்து இயங்கிக்கொண்டிருந்தாலே அந்த இனத்தின் தொடர்ச்சி பேணப்படும். ஆனால் பண்பாட்டு ரீதியான ஏகாதிபத்தியம் அந்த பண்பாட்டு அடையாளங்களின் மீது நெருக்கடியை உண்டுபண்ணியது. வலிந்து உருவாக்கப்பட்ட அந்தப் பண்பாட்டு நெருக்கடியில் கீழைத்தேச இனங்கள் சார்ந்த பண்பாடுகளின் தாழ்வு மனப்பாங்கு உருவாக்கப்பட்டது. அந்த தாழ்வுச்சிக்கல் காரணமாக மக்கள் அடையாளச் சிக்கலை உணரத் தொடங்கினர். உள்ளார்ந்த வாழ்வில் சாதி, மதம், சடங்குகள், பண்பாடு, மொழி என்ற அடையாளங்களை பேணுபவர்களாயும், பொதுவாழ்வில் இவற்றை விடுத்த ஒரு பொது வாழ்வியலுக்குள் வாழ்பவராகவும் காட்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.
தமிழர்களின் வாழ்வியல் மரபானது இயற்கையோடும் சடங்குகளோடும் பிணைந்ததாக ஆக்கப்பட்டிருந்தது. காலனியர்களால் கொண்டுவரப்பட்ட மதமாற்றமும் கல்விமுறை மாற்றங்களும் மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது.
காலனித்துவத்திலிருந்து விடுபட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டபோதும் கல்விநிறுவனங்களினதும் கல்வி கற்போரினதும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருந்தபோதிலும் கல்வித்துறையானது முற்றுமுழுதாக காலனிய மேற்கத்தைய சிந்தனைகளின் கீழைத்தேய வடிவமாகவே காணப்படுகின்றது. நமது வாழ்வியல் பற்றிய புரிதல்களைத் தரும் படிப்புக்கு மாறாக, மேனாட்டு அறிஞர்களையும் அவர்களது கூற்றுகளையும் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றோம். அந்தப் படிப்பில் நம் வாழ்வியல், நம் வரலாறு, நம் சிந்தனைகள் என்று எதைப் பற்றிய சிந்தனைகளும் இல்லை. மேற்கத்தையர்கள் எம்மைப் பற்றி எழுதிய அல்லது, அவர்கள் நாங்கள் எதைப் படிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அது பற்றிய கல்வி மட்டுமே எஞ்சியிருக்கிறது. அன்று அடிமைகளாக்கப்பட்ட எம் மூளைகள் இன்றும் எல்லாவற்றிற்கும் அவனது கருத்தியல்களையும் கொள்கைகளையுமே நம்பி நிற்கின்றன. மொழி, வரலாறு, பொருண்மியம், அறிவியல், சமூகவியல், கலை என எந்தத் துறையை எடுத்தாலும் மேற்கத்தைய கொள்கைகளையும் வரலாறுகளையும் அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளன. காலனியாதிக்கத்தினால் உருவாக்கப்பட்ட வரலாறு சார்ந்த திரிபுகள் இன்று வரலாறுகளாக எம்மால் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்காரன் அங்கிருந்து இங்கு வந்து எமது மொழியையும் சமூகத்தையும் சமூக இயங்கியலையும் ஆய்வுசெய்துகொண்டிருக்கிறான். நம்மில் எத்தனைபேர் நமக்கான ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்?
ஐரோப்பிய மையவாத நகலெடுப்பு விளைவின் எச்சமாக இருக்கும் யாழ்ப்பாண மையவாதத்தின் மையம் எதென்று நோக்கினால், ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலை செய்த அலுவலர்களைக் குறிப்பிடலாம். வளத்தோடும் நிலத்தோடும் வாழும் வன்னி, மட்டக்களப்பு மக்களை விட, வளமற்ற விளையாட்டுத்திடல் போன்ற நிலவமைப்புடைய யாழ்ப்பாணம் எந்தவகையில் பெரிதாகியது? பண்டைய எங்கள் வரலாறுகள் தமிழர் தாயகமெங்கும் தொல்பொருட்களாய் மறைந்துகிடக்க, நாங்கள் யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றிவருகிறோம். அடிமைத்தனத்தின் சின்னம் எங்களுக்கு தொல்பொருளாகி நிற்கிறது. ஆங்கிலேயன் தனது நிருவாக இலகுபடுத்தலுக்காக படித்த நடுத்தர வர்க்கமொன்றை உருவாக்குகிறான். அது ஆங்கிலேயனுக்கு கூலியாகி, கூலியென்பதை மறந்துவிட்டு, படிக்காத மக்களிடம் தாழ்வு மனப்பாங்கை உருவாக்கியது. ஆங்கிலம் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாகிவிடும் என்ற மொழி அடிமைத்தனம் இன்றுவரையும் எம்மிடையே தொற்றியிருக்கிறது. பல்கலைக்கழகத்திலோ பள்ளிக்கூடங்களிலோ தமிழ் சார்ந்த துறைபோகிய கருத்தமர்வுகள் முறையே வெள்ளைத்தோல் பேராசிரியராலும் தமிழ் பேராசிரியராலும் நிகழ்த்தப்பட்டால், வெள்ளைக்கு கிடைக்கும் கூட்டமும் கைதட்டும் தமிழுக்கு கிடைப்பதில்லை. ஆங்கில நூல்களுக்கும் அதுசார்ந்த கோட்பாடுகளுக்கும் வாசகர் வட்டங்கள் அமைக்கும் பல்கலைக்கழகங்கள் பழந்தமிழ் நூல்களுக்கான வாசகர் குழுக்களை ஏன் உருவாக்கவில்லை?
ஆங்கிலத்தை உலகப் பொதுமொழியாக்குங்கள் என்று நேரடியாகச் சொன்னால் மரபுவழித் தேசிய இனங்கள் ஆங்கில மொழி எதிர்ப்பைக் காட்டும் என்று உணர்ந்தோ என்னவோ, சிங்களமொழித் திணிப்பிற்கு எதிராக ஈழத்திலும் கிந்தித் திணிப்பிற்கெதிராக தமிழ்நாட்டிலும் என்று மாற்றாரின் மொழித்திணிப்பிற்கெதிராக வெகுண்டெழுந்து போராடிய நாம், காலனியத்துவத்தின் விளைவான ஆங்கிலமொழி அடிமை மனநிலையிலிருந்து விடுபடவேயில்லை.
ஆங்கில மொழி மூலக் கல்வி கற்றவர்கள் என்ற போலிப்பெருமைக்காக ஆங்கில வழி கற்கைகளுக்கு பிள்ளைகளுக்கு திணிக்கும் பெற்றோர்கள், பிள்ளைகள் வெறும் புறொயிலர் கோழிகளாக வெளிவருவதை ஏனோ உணரத் தவறிவிடுகின்றனர். ஆங்கிலம் மீதுள்ள அடிமை மனநிலையால் தனக்கு வசப்படாத ஆங்கிலம் தன் பிள்ளைக்காவது வசப்படவேண்டுமென்று அவர்கள் மனம் நினைக்கின்றது. ஆனால், தாய்மொழி வழி கற்கையில் மட்டுமே மாணவர்கள் சிந்தனைத்திறனான கல்வியை மேம்படுத்த முடியும் என்பது மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டையும் ஈழத்தையும் எடுத்துநோக்கின், ஏதோ ஒரு வகையில் ஈழமும் தமிழும் அது பிறந்த மண்ணை விடவும் கொண்டாடப்படுகின்றதெனின், இங்கு நிலவும் தமிழ்மொழிவழிக் கற்கையையே காரணமாகக் கூறலாம்.
இந்தக் காலனியக் கல்விமுறைமை மரபார்ந்த பண்பாட்டு அடையாளங்களைத் தாழ்ந்தவை எனவும் அவை மூட நம்பிக்கைகள் எனவும் ஓரம்கட்டிவிட்டு, ஐரோப்பியப் பண்பாட்டு அடையாளங்களைத் திணிப்பதால் அடையாள நெருக்கடி ஒன்றுக்குள் எம் சமூகம் செல்வதோடு, மரபார்ந்த பண்பாடுகளை எம்மைக் கருவியாக வைத்தே அழிப்பதில் காலனியம் வெற்றிகண்டிருக்கிறது.
பண்பாட்டு அடிப்படையிலான மேலாண்மைக்குச் சான்றாக படைப்புவெளிகளில் காலனித்துவத்தின் எச்சங்களைக் கூறலாம். தமிழில் படைப்புகளுக்கும் மொழிக்கும் இலக்கணம் கூறும் நூல்கள் நிரம்பியிருப்பினும், மொழிசார்ந்த தமது அறிவுக்குறைபாட்டால், மேற்குச் சொன்ன படைப்புவெளிகளின் இலக்கணங்களைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, மற்றைய இலக்கணங்கள் பற்றி கிஞ்சித்தும் அறிவுமற்று சொந்த அரசியல், படைப்பு நயங்களுக்காகவும், புகழ்வெளிச்சங்களுக்காகவும் திறனாய்வுகள் என்ற போர்வையில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழிலக்கண விதி மீறுதல் என்பது மரபை உடைத்தல் என்று கொண்டாடப்படும் அதேவேளை ஆங்கில இலக்கண விதிகள் மீறப்படும் போது, அல்லது அதனை கண்டுகொள்ளாமல் படைப்புகள் வெளிவரும் போது, அவை கவிதை அல்ல, நாவல் அல்ல என்று இழிந்துரைப்பதன் பின்னால் காலனித்துவ அடிமை மனநிலை இருக்கின்றது.
அன்றாடம் நம் தொடர்பாடலுக்கு பயன்படுத்தும் சொற்களிலும் சொற்பயன்பாட்டிலும் எங்களை அறியாமலேயே எம்முள் வந்துவிட்ட காலனிய ஆதிக்கத்தின் எச்சங்களை உற்றுக் கவனிப்பின் விளங்கிக்கொள்ள இயலும். அதில் முதன்மையான விடயம் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் தமிழர்களை வேதக்காரர் என்று தனிக்குழுவினராகக் காட்டுதல், தமிழர்கள் என்றால் சைவர்கள் என்றும் கிறித்துவர்கள் என்றால் வெள்ளை முகமூடி அணிந்த தமிழர்கள் என்றும் கருத்துநிலை நிலவியிருக்கின்றது. தமிழர்களின் விழாக்கள் சைவத் தமிழர்களுக்குரியதாக மட்டுப்படுத்தப்பட்டும், வேட்டி சைவக் கோயில்களுக்கு உரியதானதென்றும் இனத்தை மதமாகப் பிரிக்கும் வேலையைச் செய்த காலனித்துவத்தின் ஆதிக்கம் இன்றும் கூட நிலவிவந்தாலும், சில ஆண்டுகளாக, அந்த நிலை மாறிக்கொண்டுவருவதையும் காணலாம்.
இந்து என்ற பெருஞ்சமய உருவாக்கத்தின் பின்னணியில் காலனியர்களின் அரசியல் முதன்மையாகக் கவனிக்கவேண்டியது. இந்து என்ற ஒற்றைச் சமயத்தின் கீழ் அனைத்து வழிபாட்டு முறைகளையும் கொண்டு வந்து இன அடையாளங்களை மத அடையாளங்களாக மக்களிடத்தில் காவச் செய்து, இன்று உன் இனத்தின் அடையாளம் எது எனக் கேட்டால் மதம் சார்ந்த அடையாளங்களைக் கூறும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆயினும் உள்ளக நிலையில் சடங்குசார்ந்த தமது வழிபாடுகளைக் கைக்கொள்வோராகவும் புறநிலையில் இந்துத் தெய்வங்களினை வழிபடுவதிலும் அந்த வழிபாட்டுமுறைசார்ந்த பிற பண்பாட்டு நடத்தைகளை பின்பற்றவேண்டியவர்களாகவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய கட்டாய நிலைமை பண்பாட்டு அடையாளங்களில் நெருக்கடியை ஏற்படுத்தின. எடுத்துக்காட்டாக, சைவம், அசைவம் என்ற சொற்பயன்பாடுகளைக் குறிப்பிடலாம். சடங்குகளில் விலங்குகளைப் பலிகொடுத்தும், புலால் உணவுகளைப் படைத்து; வழிபட்ட மக்கள், இந்துப் பெருஞ்சமயத்தின் ஊடுருவலால் எந்தப் பண்பாடு தம்முடையது என்ற குழப்பத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
வேள்வி போன்ற சடங்குமுறைகள் நாகரிகமடையாத மக்களுடைய வாழ்வியல் முறைகள் என்ற புற விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து படிப்படியாக விலகி, இன்று சமசுக்கிருதமயப்பட்ட போலித் தூய்மைவாதத்தினைத் தமது அடையாளங்களாகக் காட்டுகின்றனர். காலனியர்கள் கிறித்தவம், இசுலாமியம், பௌத்தம் தவிர்ந்த ஏனைய வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி, இந்து என்ற ஒற்றைச் சான்றுக்குள் ஒடுக்கியதன் விளைவு இன்றைய இந்துமதம் சார்ந்த போலித்தூய்மைவாத மனநிலைகளுக்கான அடிப்படையாக இருக்கின்றது எனலாம். அதைவிடவும் அடித்தள மக்களின் வழிபாட்டு முறைகள் உயர் சமூகத்தவர்கள் தடைசெய்யும்போது, அங்கே உயர் சமூகமும் காலனியமும் காலனியம் என்ற கருத்தியலில் ஒன்றிணைந்து மண்ணிற்கான மக்களின் பண்பாட்டு வழிபாட்டு மரபுகளைத் தடைசெய்தனர்.
யாழ்ப்பாணத்தில் சடங்குமுறைசார்ந்த வழிபாடுகள் சமூகத்தின் அடையாளங்களாக இன்று ஆய்வுகளுக்காக எடுத்துக்கொள்ளும் வருந்தத்தக்க நிலைக்கு உள்ளாவதற்கான காரணமாக காலனிய அடிமை மனநிலையின் எடுத்துக்காட்டுகளான யாழ்ப்பாணிய மக்களே ஆகும். இனத்தின் அடையாளங்களாக விளங்கிய கண்ணகி வழிபாடு முதல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த சடங்குமறைகள் வரை காணாமல் ஆக்கப்பட்டதன் பின்னாலிருந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களின் தாக்கம் காலனிய அதிகாரத்தின் மறுவடிவமாகக் கொள்ளப்படலாம். இன்று கைகளில் சிவப்பும் மஞ்சளுமாக காப்புகள் என்ற போர்வையில் இந்துத்துவ அதிகாரத்தின் விலங்குச் சங்கிலிகளைக் காவிக்கொண்டு திரிபவர்களில் எத்தனைபேரிற்குத் தெரியும் அது அடிமைத்தனத்தின் அடையாளம் என்று? கிறித்துவ மதம் தனது மதப் பரப்புகை உச்சம்பெற்றபோது, அதற்கு எதிராக குரல்கொடுக்க வலுவில்லாத நிலையிலிருந்த எமது வழிபாட்டு முறைகள், கிறித்துவத்திற்கு நிகராக போட்டியிடக்கூடிய இன்னொரு மத நிறுவனமான இந்துத்துவாவின் பின்னால் ஒளிந்துகொண்டனர். காலனியர்களால் மதப்பரப்புகையும், கல்விமுறைமையும் ஒன்றிணைந்த தொகுதியாக மக்களிற்கு வழங்கப்பட்டபோது, தமது அடையாளங்களை இழந்துவிடுவோமோ என்ற பீதியில் இந்துத்துவாவின் பின்னால் மக்கள் சென்றபோது, மொழியானது மதத்தினால் காக்கப்படுவதாகக் காட்டப்பட்ட மாயையில் சமசுக்கிருதம் இலகுவாக உள்ளே நுழைந்து. மிசனரிப் பள்ளிக்கூடங்களுக்கு மாற்றாக இந்துக் கல்லூரிகள் இன்றும் இருப்பதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். மதம் சார்ந்த அடையாள எதிர்ப்பில் இனம் சார்ந்த அடையாளமும் மொழியும் சிதைவடைவதை மக்கள் உணரவில்லை. மதம் பிடித்த மனிதர்களால் அதை உணர்ந்துகொள்வதும் அத்தனை எளிதன்று. சிங்களவன் தமிழில் ஓர் எழுத்துப்பிழை விட்டால் கூட பொங்கி எழும் தமிழுணர்வு, கோயிலில் பூசாரி சமசுக்கிருதம் சொல்கையில் விழுந்து கும்பிட்டு காலில் கிடக்குமளவில் வந்து நிற்பதற்கு பின்னால், காலனியம் கட்டமைத்த மதம் சார் அரசியல் இருக்கின்றது என்பது வெளிப்படை உண்மை. காலனியம் கட்டமைத்த மதம் சார்ந்த அரசியலும் அவற்றின் அடையாளங்களும் தமிழர்களுடைய பண்பாட்டு அடையாளங்களாகிப்போகின. தமிழர்களின் பண்டிகைகள் இந்துக்களுக்கானதாகவும் கிறித்தவர்களுக்கு அந்த அடையாளம் இல்லை என்ற வரலாற்றுத் தவறொன்றை காலனியம் கலவரமின்றி நிகழ்த்திவிட்டிருக்கிறது. தமிழ் அடையாளங்களை உள்ளேயும் கிறித்தவ அடையாளங்களை புறத்திலும் கொண்டு, ஓர் பொதுப்பண்பாட்டுத் தளத்திற்குள் தமிழர்கள் செல்வதற்கு இந்த மத மாற்றங்களை காலனியர் பயன்படுத்திக்கொண்டனர்.
காலனியம் கீழைத்தேய நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தபோதே, அதன் அதிகாரத்தையும் தன்னுடனேயே எடுத்துச்சென்றுவிட்டது. நாடுகளின் அதிகாரத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து, அந்த நாடுகளை மறைமுகமாக ஆள்வது அரசியல் ஏகாதிபத்தியம் என்று குறிப்பிடப்படும். அதுபோன்ற ஒரு மறைமுக ஆட்சியைத் தான் காலனியம் இன்றும் எங்களில் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது. தனித்தனி ஆட்சி அதிகாரங்களைக் கொண்டிருந்த தமிழர் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என்ற ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து, இலங்கையை இரு தனித்த தேசிய இனங்களின் முரண்களமாக ஆக்கிவிட்டிருக்கிறது காலனியம்.
இரு தனித்த தேசங்களை ஒரு நாடாக்கும்போது என்னென்ன முரண்கள் ஏற்படும் என்று அறியாதவர்களல்லர் காலனியர். மாறாக, அந்த முரண்களையும் அந்த தொடர் முரண்கள் காரணமாக தமது அதிகாரத்தின் ஆளளுகைக்குள் இலங்கை இருக்கும் என்ற தொலைநோக்கிலும் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றாக்கி, பெரும்பான்மைச் சிங்களவர்களிடத்து ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்து, அவர்களிடம் இருந்த பேரினவாத மனப்பான்மையைக் கூர்மைப்படுத்தி, அதன் தொடர் நிகழ்வுகளால் இன்று தமிழினம் முள்ளிவாய்க்காலில் தனது விடுதலையின் ஒரு களத்தினை முடித்துவிட்டு நிற்கின்றது.
பனோன் போன்ற பின்காலனித்துவ கோட்பாட்டாளர்களின் கருத்துப்படி, பின்காலனித்துவத்தின் கருத்தியல்கள் தான் தேசியவாதம் போன்ற எழுகை உளவியல்களுக்கு மக்களை இட்டுச் சென்றன என்கிறார்கள். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் இனம், தேசம், தேசத்தின் எல்லைகள் பற்றிய அக்கறை சங்ககாலம் தொட்டே இருந்துவந்திருக்கின்றன. ஆயினும் காலனித்துவத்திற்கு முன்னைய காலங்களில் மக்கள் தனித்த தேசங்களாக வாழுகையில் இன்னொரு தேசிய இனமான சிங்களவர்களுக்கு எதிரான விடுதலைப்போரொன்றினை நிகழ்த்தவில்லை. ஏனெனில் அங்கே தேசியம் என்ற குரலுக்கான தேவைப்பாடு இருந்திருக்கவில்லை. ஒரு இனம் இன்னொரு இனத்தை ஒடுக்கும்போதே அங்கே விடுதலைக்கான எழுகையின் தேவை எழுகின்றது. காலனியர்களின் அரசியல் பொறிக்குள் இரு இனங்களும் சிக்கி, முப்பது ஆண்டுகால வளர்ச்சியையும் இழந்துநிற்கின்றன. கொத்துக்குண்டுகளைக் கொடுத்தவனிடத்திலேயே சென்று, கொத்துக்குண்டுகளுக்கு பலியாகிப்போன மக்களுக்கான நீதியைக் கேட்குமளவிற்கு நாங்கள் அரசியல் அறிவிலித்தனம் கொண்டவர்களாக இருப்பதற்கான முதன்மைக் காரணம் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்ற காலனிய எச்ச அடிமைகளின் சொற்றொடரே.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சி மாற்றங்களையும் அதிகார தரப்பையும் இன்றும் தீர்மானிப்பவர்களாக காலனியர்கள் இருக்கிறார்களே தவிர, எமது வாக்குகள் அல்ல. அண்மையில் யார் பிரதமர் என்ற குழப்பங்களுக்கும் இலங்கையில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்படப்போகின்றது என்ற வதந்திகளுக்கும் பின்னால் காலனியத்தின் அரசியல் பொறி இருந்திருக்கவேண்டும்.
நாடுகள் இன்னொரு நாடொன்றின் மீது தமது வன்வளைப்பினை போர் மற்றும் கையகப்படுத்துதலினூடாகவும் மேற்கொள்ளலாம். ஆனால் எமது நாட்டை அப்படியொரு முறைமையில் வன்வளைப்புச் செய்வதற்குரிய தேவை காலனிய அதிகார நாடுகளுக்கு தேவைப்படவில்லை. மாறாக காலனிய நாடுகள் தங்கள் குடியேற்றநாடுகளினை தன் நாட்டிலிருந்தே ஆளக்கூடியவாறான அரசியல் நிலைமைகளை அங்கே உருவாக்கிவிட்டே அந்த நாடுகளை விட்டு புவியியல்ரீதியாக மட்டும் விலகிச் சென்றனர்.
மண்ணும் மண் சார்ந்த சட்டங்களும் அந்த மக்களின் வாழ்வியலுக்கு இயைந்த வகையில் இருக்கவேண்டுமே தவிர, இன்னொரு நாட்டின் சட்டங்களின் நகல்கள் வேறொரு நாட்டில் நடைமுறைப்படுத்தல் உகந்ததாயிருக்காது. ஆனால், தனித்த தேசங்களாக இருந்த இனங்களை இணைத்ததோடு மட்டுமல்லாது தனது அரசியலமைப்பு முறைமையையும் திணித்துவிட்டு சென்றிருக்கின்றது காலனியம். இது காலனியர்களின் நிலம் என்பது பிரகடனப்படுத்தப்படாத கோட்பாடாக இருக்கின்றது.
போர்க்குற்ற உசாவல்களுக்கு வெள்ளையனை எதிர்நோக்கியிருக்கும் அடிமைத்தனம், வெள்ளைக்காரன் வந்தால் மட்டும் தங்கள் வாழ்வியல் அவலங்களை முற்றுமுழுதாகக் கொட்டும் மனநிலைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. வீட்டில் உலை வைக்கவில்லை என்று பக்கத்து வீட்டினருக்குச் சொன்னால் கூட மானம் போய்விடும் என்று வாழ்ந்த எமது சமூகத்தை, தெருவில் நின்று வீட்டு அவலங்களைக் கொட்டும்படி செய்த அரசசார்பற்ற நிறுவனங்களின் பின்னாலிருக்கும் காலனித்துவத்தின் அதிகார அரசியல் எமது அடுப்படி வரை சென்று மீள்கிறது. வெள்ளைக்காரனுக்கு சொன்னால் உதவி கிடைக்கும் என்ற ஒரு தளத்தை உருவாக்கிவிட்டு, இன்று எந்த வெள்ளைத்தோலைக் கண்டாலும் புலம்பும் மக்களாக எம்மக்களை உருவாக்கிவிட்டிருக்கும் இந்த அடிமைத்தளையிலிருந்து எம் மக்களை மீட்க, நிவாரண அரசியலை எதிர்த்தாகவேண்டிய தேவை இருக்கிறது. போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசுக்கு தண்டனை வழங்குவான் என்று வெள்ளையனை எதிர்பார்த்து, எம்மை அவனிடத்தில் அடகுவைக்குமளவுக்கு போன எம்மக்களின் அடிமைத்தனம் இன்னமும் புலம்பெயர்வதிலேயே குறியாக இருக்கிறது.
ஒரு நாடு இன்னொரு நாட்டின் பொருண்மியத்தினைக் கையகப்படுத்தி பொருண்மியரீதியாக குறிப்பிட்ட நாட்டினைத் தனக்கு அடிமையாக வைத்திருக்கும் பொருண்மியம் சார் ஏகாதிபத்தியமே உலக வல்லாண்மையாளர்களால் கைக்கொள்ளப்படும் கருவி. நிலங்களையும் வளங்களையும் மட்டுமல்லாது மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பொருண்மியத்தில் கூட காலனியர்கள் தங்களது நீட்சியை உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களது நுகர்வுத்தேவைகளை நீட்சித்தும் மடைமாற்றம் செய்தும் காலனியர்கள் தமக்குரிய சந்தையாக எமது தாயகத்தை மாற்றிவைத்திருக்கிறார்கள். எங்களது நுகர்வுத் தேவைகள் எம்மை வெள்ளைத்தோல் போர்த்தியவர்களாகக் காட்டவேண்டியிருக்கிறது. ஏகாதிபத்தியமும் காலனியர்களின் நாட்டு வன்வளைப்புக்களும் அவர்களது உற்பத்திக்கான சந்தை விரிவாக்க அடிப்படையிலேயே ஆரம்பத்தில் நிகழ்ந்தது. அவர்களுக்கான சந்தையாகவும் உற்பத்தித் தளமாகவும் ஆசிய ஆபிரிக்க நாடுகள் பயன்படுத்தப்பட்டன. கோதுமை முதல் இன்றைய முகப்பூச்சுகள் வரை காலனிய அடிமை நிலையின் நுகர்வுப்பழக்கத்திலேயே இருக்கிறோம். ‘பாடை மா’ என்று எம் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கோதுமை மா, இன்று எங்கள் அடிப்படைகளில் முதன்மையானதாக வீற்றிருக்கிறது. உழைத்து உரமேறிப்போய் அரிசிமாவில் 90 வயதுவரை வாழ்நாள் கொண்ட தமிழ்ச்சமூகம் இன்று 40 அகவையிலையே நீரிழிவு நோய் என்று என்று உணவுக்கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையை உப்பின்றி கழிக்கிறது.
கேஎப்சீயும் பீசாவும் உயர்வர்க்கத்தினருக்கானது என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, குடும்பத்தின் ஒரு வார செலவை ஒரு நாளில் தாரைவார்த்துவிட்டு நிற்பதற்கு பின்னாலிருக்கும் உளவியலைக் கட்டியமைத்தது எது? வெள்ளைக்காரன்ரை சாப்பாடு அது என்ற ஒரு அடையாளத்தைத் தவிர வேறென்ன இருக்கின்றது அதற்கு. ஆக மேற்கின் அடிமைகளான நாம் கறுப்புத்தோல் கொண்ட வெள்ளையர்கள் என்ற நினைப்பில் சுட்ட கோழிகளுக்கும் உலக சந்தைக்கும் எமது பணத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
ஒரு இனத்தினுடைய நுகர்வுப்பழக்கம் என்பது வெறுமனே பொருண்மியச்சிக்கல்களை மட்டும் ஏற்படுத்திவிடுவதல்ல. அது இனத்தின் தொடர்ச்சியான அடையாள இழப்பிற்கும் துணைபோகின்றது. இனத்தின் அடையாளங்களில் அவற்றின் அரசியல், கல்வி மட்டும் இருப்பதில்லை. அந்த இனத்தின் அன்றாட வாழ்வியலும் அதனுள் அடங்கும். வாழ்வியல் கோலங்களை மாற்றக்கூடிய திறன் நுகர்வுக்கும் நுகர்வுப்பொருட்களுக்கும் இருக்கின்றது. மிளகு உண்டவர்களை மிளகாய் உண்ணவைத்த காலனியர்களுக்கு அரிசிமாவைப் பிடுங்கிவிட்டு, கோதுமை மாவைக் கொடுப்பதென்பது அவ்வளவு கடினமான வேலையில்லை. எமது தேசிய உணவு நெல்லரிசிச்சோறு என்று படித்த எமக்கு இன்று வெதுப்பியையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய அளவிற்கு நுகர்வு முறைமை மாறியிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் சோறு வேண்டாம் என்று முணுமுணுக்கும் எம்மவர்களின் வாழ்வியல் முறைமையை மாற்றிய சமூகத்தின் அடிமை மனநிலை மாறினாலேயொழிய அந்த நுகர்வுப்பழக்கம் மாறிவிடாது.
பருத்தி உடையில் வெயிலை சிரித்துக்கடந்தவர்கள் இன்று கழுத்துப்பட்டிக்குள் புழுங்கிச் சாகிறோம். வேட்டியில் உலாவந்த ஆண்கள் இன்று விலங்குத்தோல் போன்ற ஆடைக்குள் புதைந்து கிடக்கிறார்கள். காலம் மாற, மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் கூர்ப்படைந்து அல்லது மாற்றமடைந்துதானே ஆகவேண்டும். இன்றும் கற்காலம் போலோ அல்லது மேலாடை அணியாமலோ திரியமுடியாது என்ற கூற்றை நாம் இவ்விடத்தில் முன்வைக்கலாம். ஆனால் எமது வளர்ச்சி என்பது எமது புவியியல் சார்ந்ததாகவும் எமது அடையாளத்தைக் காட்டுவதாகவும் இருக்கவேண்டுமே தவிர, அது அடிமை மனநிலையின் திணிப்பாக இருக்கக்கூடாது. காற்சட்டை போட்டால் நாகரிகமடைந்தவர்கள் என்ற கருத்தியல் எம்மீது திணிக்கப்பட்டு, வேட்டிகளை இழந்துவிட்டோம். ஆனால் எமது இருப்பின் இயங்கியலின் அடிகளான வாழ்வியல் சடங்குகளிலாவது வேட்டியை நினைக்கும் மரபு சிறிதுகாலத்துக்கு முன்புவரை இருந்தது. ஆனால் இன்று பெண்களைப்போன்ற உடையணிந்த ஆண்மையற்ற ஆண்மகன்கள் போல மணமேடையில் குந்தியிருக்கும் ஆண்சமூகத்தை நினைக்கையில் அந்த அடிமைகளை கொன்றுதீர்த்தால் என்ன என்றே தோன்றுகிறது.
வாழிடமும் அதன் அமைப்பும் அந்த புவியியலின் தன்மையும் இனத்தின் அடையாளமும் மிகும்வகையிலேயே அமைக்கப்படும். இன்றைய தொல்பொருளாய்வுகளில் சாட்சியங்களாக இருக்கும் கட்டட அமைப்புக்களிலிருந்து, பயன்படுத்திய பொருட்களிலிருந்து அந்தத் தொல்பொருட்கள் எந்த இனத்தின் அடையாளங்கள் என்று இலகுவாகக் கண்டுபிடிக்கிறார்கள். ஏனெனில் அங்கே அந்த சாட்சியங்களை மதிப்பிடுவதற்கு அடையாளங்கள் உதவின. இன்றைய எமது வாழ்வியல் இயற்கையாலோ செயற்கையாலோ அழிந்துபோயின், 5000 ஆண்டுகளின் பின்பு ஆய்வுசெய்யும் ஆய்வாளர்கள், வெள்ளையனின் எச்சங்கள் ஈழத்தில் கண்டறிப்பட்டுள்ளன. ஆகவே வெள்ளையன் அங்கு வாழ்ந்திருக்கிறான் என்ற முடிவுக்கு மட்டுமே வரமுடியும். ஆந்த அளவிற்கு எமது கட்டடங்களும் பயன்படு பொருட்களும் வெள்ளையனைப் போலிப் பாவனை செய்வதற்கானதாக மாறிவிட்டிருக்கின்றன.
இனத்தின் இருப்பிற்கு அந்த இனத்தின் வாழ்வியல் கூறுகள் மிக முதன்மையானவை. வாழ்வியல் சார்ந்த சடங்குகளும் மரபுகளும் அதற்கான இயங்கியல் தளங்களாக இருக்கின்றன. ஆனால் அந்தச் சடங்குமுறைகளும் இன்று நிறுவனமயப்படுத்தப்பட்ட போலி மரபுகளாக மாறிவிட்டன. ஊர்கூடி நடந்த திருவிழாக்களும் மணவிழாக்களும் இன்று நேரலையிலும் திருமண மண்டபங்களிலுமாய் கொண்டாட்ட களையிழந்து வெறும் சடங்குகளாய் மட்டும் நின்றுபோயின. இதற்கு வெறுமனே காலனியர்களை மட்டும் குற்றம் சுமத்திவிட முடியாது. அந்தக் காலனிய அடிமைகளின் எச்சங்களான புலம்பெயர் தமிழர்களின் அடிமை மனநிலை நிலத்திலிருக்கும் மக்களின் அடிமை மனநிலையை இன்னும் ஒருபடி கூட்டுவதாகவே அமைகின்றது. காலனியர்களின் அடிமை மனநிலை எச்சங்களாக தொடரும் மனநிலைக்கும் அந்த மனநிலையுடன் அவனது நாட்டில் போய் அவனைப்போல நடக்க நினைக்கும் புலத்திலிருப்போரின் மனநிலைக்குமிடையில் பெரும் வேறுபாடு உண்டு. புலம்பெயர்ந்தோர் வெள்ளைக்காரன் பெரியவன் என்ற மனநிலையில் தங்களையும் வெள்ளையர்கள் போல பாவனை செய்யும் இழி செயல்களையும் செய்கிறார்கள். ஒரு மனிதனின் உடை என்பது அவன் வாழும் புவியியலால் வரையறுக்கப்பட்டாலும் அந்த உடைகளுக்குள்ளிருக்கும் இன அடையாளம் மாறிப்போகாது. புலம்பெயர்ந்தவர்கள் இங்கே மறுபடி வரும்போது, கறுப்புத்தோல் போர்த்த வெள்ளையர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் கேவலங்களும் நடந்தேறுகின்றன. சமூக வலைத்தளங்களில் தமிழன்டா.. பெருமைடா என்று வேட்டியுடன் படத்தை தரவேற்றிவிட்டு, ஈழத்துவீதிகளில் காற்சட்டையுடன் அலையும் அடிமை மனநிலைகளை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் குடிபுகுந்த எம்மவர்கள் ஆங்கிலத்தைப் பேசுவதனாலும் ஆங்கிலேயர்களின் உடை அணிவதனாலும் ஆங்கிலேயன் பெரியவன் என்ற அடிமை மனநிலையினாலுமே, இங்கு இருக்கும் எம்மவர்களை தங்களின் சொல்கேட்க பிறந்தவர்கள் என்ற நினைப்பில் கருத்துரைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். எம்மில் சிலரும் வெளிநாடு மீதான உயர் மனநிலையில் அந்த புலன்பெயர்ந்தவர்களின் விசர்த்தனங்களுக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே சோற்றுக்கும் தோசைக்கும் புட்டுக்கும் டொலர்களைச் செலவழிப்பவர்கள், இங்கே வந்து உறவுகளை கேஎப்சிக்கு அழைத்துச் செல்வதன் பின்னாலிருக்கும் புகழ்வெளிச்சமும் அதன் பின்னாலிருக்கும் காலனியத் தாக்கமும் அது உண்டுபண்ணவிருக்கும் தொடர் நுகர்வு மாற்றங்களால் தமிழர்களது வாழ்வியலில் ஏற்படுத்தப்போகும் மாற்றமும் அக்கறையற்று கடந்துபோகக்கூடிய விடயங்களல்ல.
காலனியத்தால் நன்மைகள் விளைந்துவிட்டன. ஆங்கிலக்கல்வியைப் பெற்றுவிட்டோம் என்று அதனை நியாயப்படுத்தும் எம்மை, அந்த கல்வி விளைவினை நன்மையாகவே மட்டும் பார்க்கும் அளவிற்கு எமது அறிவைக் குறுக்கிவிட்ட கல்விமுறைமை ஒன்றிற்கு நாம் அடிமையாகிவிட்டோம். கால நீட்சியில் எமக்கான கல்விமுறைமை ஒன்று உருவாகியிருந்திருக்கக்கூடும். ஏனெனின் கல்வி கேள்விகளிலும் இலக்கியங்களிலும் தொழினுட்பத்திலும் நாங்கள் விஞ்சியிருப்பதற்கு எம் வரலாறு சாட்சியமாய் நிற்கின்றது. வெள்ளைக்காரன் வந்தான். எல்லோரும் படித்தார்கள். சாதியை ஒழித்தான் என்று மேம்போக்காய் கருத்துச்சொல்பவர்கள், அவன் வராதுவிட்டிருப்பின் எம் அறிவுடைமைத் தமிழ்ச்சமூகம் தன் அறிவின் எல்லைகளை இன்னமும் விரிவுபடுத்தியிருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை.
மரபுவழித்தேசிய இனங்களின் இருப்பினைச் சிதைப்பதற்கு அவர்களது வாழ்வியலைச் சிதைக்கவேண்டுமென நினைத்த காலனித்துவம் அவர்களிடத்தில் சாதியத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிளவுகளுக்குள் இலகுவாக நுழைந்துகொண்டது. தமிழர்களைப் படிக்க வைக்கவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவர்கள் இதனைச் செய்யவில்லை. சாதிய, பெண்ணிய அடையாள அரசியல்களை உட்புகுத்துவதற்கான தளங்களாக அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டனர். தேசிய, மத, சாதிய, மொழி அடையாளங்களை ஒரு புள்ளியில் கொண்டு வந்து அவற்றை வெறும் அடையாள அரசியலுக்குள் இறக்கிவிடத்திட்டமிட்டிருக்கலாம். ஆயினும் தேசியம் என்ற கருத்துருவாக்கத்தின் கோட்பாட்டாக்கத்திற்கு இந்த காலனியர்களின் அதிகாரம் தான் காரணமாகியது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும். சாதி, மதம் போன்ற அடையாளங்கள் அதிகாரக் கருத்தியல்களுக்காக நிறுவனமயப்படுத்தப்படும்போது, அவை தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளும். அந்த முரண்களைக் கூர்மைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை காலனியம் உருவாக்கிக்கொண்டே இருக்கும்.
விடுதலை பற்றி கதைப்பவர்கள் கூட மார்க்சிசத்தைத் தமது கருத்தியலாகத் தூக்கிப்பிடிக்காத அனைவரும் பிறபோக்காளர்கள் என்ற கோணத்தில் பார்க்கிறார்கள். விடுதலைக் கருத்தியல்களில் கூட மேனாட்டாரின் கருத்தியல்களே மேலானவை என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்களும் ஒரு விதத்தில் காலனி அடிமை மனநிலையிலிருந்து இன்னமும் விடுபடாமல் விடுதலைக் கதை பேசுவோரே.
முற்றுமுழுதான காலனிய அடிமை மனநிலையில் வாழ்கின்ற இந்த வாழ்வியல் தொடருமேயானால், இனமும் மொழியும் கேள்விக்குறிகளாகி தொக்கிநிற்கப்போகின்றன. காலனிய நீக்கம் என்பதன் தேவையை, இப்போது கூட உணராதுவிடின், முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்டெழுந்து திரும்பிப்பார்த்தால், தமிழர் என்ற இனத்தின் உடல் சார்ந்த புறத்தோற்றங்களின் சில எச்சங்கள் மட்டும் எம் நிலங்களில் எஞ்சியிருக்க, தொல்பொருட்களாய் தமிழ் இனமும் மொழியும் தமிழரின் வாழ்வியலும் புதைந்துபோயிருக்கும்.
-செல்வி-
5,807 total views, 3 views today