கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறையும் புறக்கணிப்புகளும் – திமிலதேவன்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் பின்னர் வடகிழக்கில் தேர்தல் அரசியல் மூலம் மாகாணசபைகள் நிறுவப்பட்டிருந்தாலும் நிருவாகத்திறமையின்மை, பிரதேசவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எனப் பலதரப்பட்ட சிக்கலுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது தமிழர் தாயகம். விடுதலைக்கான அரசியல் போராட்ட முனைப்புகள் பல வடிவங்களில் பேச்சளவிலேனும் அக்கறைகொள்ளப்பட்டாலும் தமிழர்களுக்கிடையில் புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

வடமாகாண சபையானது யாழ்ப்பாண வளர்ச்சிக்கானது மட்டுமானதா என்று ஐயுறவு கொள்ளுமளவிற்கு அது யாழ்ப்பாணத்தை நடுவப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது. முதன்மையான அனைத்துக் கட்டமைப்புகளும் வடமாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்படாமல் யாழ்மாவட்டத்திற்குள் மட்டுமே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்டம் தவிர்ந்த ஏனைய வடமாகாண மாவட்டங்களில் பலதரப்பட்ட துறைகளும் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்த கட்டுரையானது முழுக்க முழுக்க கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத் துறை குறித்த பார்வையே.

போதிய அளவு துறைசார் நிபுணர்களோ பொருண்மிய வசதியோ இன்றிய நிலையில்  கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் பலதரப்பட்ட விளையாட்டுச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவின் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பல விளையாட்டுகளுக்கு கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் இந்த வீரர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மட்டத்திலோ, வடமாகாண மட்டத்திலோ போதியளவு ஏற்பும் பாராட்டுகளும் கிடைக்கவில்லை. கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறையில் அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் மண்சார்ந்த அக்கறையின்மை, துறைசார் அறிவின்மை, மற்றும் அவர்களின் தொடர்பாடல் நேர்த்தியின்மைகளால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்குப் போதியளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை என கண்டறியப்பட்டாலும் குறிப்பிட்ட இந்த அதிகாரிகளை கண்காணிக்க வேண்டிய மாகாண சபை அதிகாரிகள் கண்டும் காணமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

தனிப் போட்டிகள்

2016ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் 42வது தேசிய விளையாட்டுப்போட்டியில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் (Pole Vault) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த யோ.சுகிர்தா 3.10 அ உயரம் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தார். (யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.அனித்தா 3.41அ பாய்ந்து முதலாமிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது) ஆனாலும் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை சுகிர்தாவின் பதக்கம் குறித்த செய்திகள் பெரியளவில் பேசப்படவில்லை. அதே காலப்பகுதியில் சிறிலங்காவின் தேசிய மட்டத்திலான போட்டிகளில் மேசைப்பந்துப் போட்டியில் பா.தனுசியா முதலாம் இடத்தினையும், Taekwondo போட்டியில் ச.தமிழ்மகள் 2ம் இடத்தினையும் பெற்றிருந்தார்கள். உதயநகரைச் சேர்ந்த பா.தனுசியா 2018ம் ஆண்டும் சிறிலங்கா தேசியரீதியிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

தவிர 2016ம் ஆண்டு இடம்பெற்ற சிறிலங்கா தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சதுரங்கப் போட்டியில் யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்டோருக்கான போட்டியில் (யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, காலி மற்றும் குருணாகல் சதுரங்க வலயங்கள் காணப்படுகின்றன) கிளிநொச்சியைச் சேர்ந்த தி.லோஜினி 1ம் இடத்தினையும் ப.கார்த்திகா 5ம் இடத்தினையும் பெற்று டீ பிரிவில் சிறிலங்கா தேசிய மட்டத்திலான போட்டியில் பங்குபெற்றுவதற்கான தகுதியைப் பெற்றுக்கொண்டனர்.  தவிர கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இன்னும் பல வீரர்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா தேசிய மட்டத்திலான சதுரங்கப் போட்டிகளில் பங்கெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குழுநிலைப் போட்டிகள்

2015ம் ஆண்டு சிறிலங்கா தேசிய மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் 15 அகவைக்குட்பட்ட அணியினருக்கான கபடிப் போட்டியில் உருத்திரபுரம் சிவநகர்.அ.த.க பாடசாலை முதலாம் இடத்தினையும் 17 அகவைக்குட்பட்ட அணியினருக்கான போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 2ம் இடத்தினையும் பெற்றிருந்தனர். அதே நேரத்தில் 2003ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து உருத்திரபுரம் சிவநகர் பாடசாலை மாணவிகள் கபடிப் போட்டியில் சிறிலங்காவின் தேசிய மட்டத்திலான போட்டிகளில் வெற்றியீட்டி வருகின்றனர். 2018ம் ஆண்டு இதே உருத்திரபுரம் சிவநகர் அ.த.க பாடசாலை 17 அகவை பெண்கள் அணியினர் சிறிலங்கா தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினையும் 20 அகவை பிரிவினர் 3ம் இடத்தினையும் பெற்றிருந்த அதேவேளை 2018ம் ஆண்டு சிறிலங்கா தேசிய பெண்கள் கபடி அணிக்கு உருத்திரபுரம் சிவநகரைச் சேர்ந்த வீராங்கனைகள தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு சிறிலங்கா தேசிய மட்டத்திலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட Roll Ball ஆண் மற்றும் பெண் அணியினர் 3ம் இடத்தினைப் பெற்றிருந்தனர். தவிர 2017ம் ஆண்டு கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.துலக்சினி மற்றும் சி.திவ்யா ஆகிய வீராங்கனைகள் சிறிலங்கா தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு பங்களாதேசில் நடைபெற்ற பன்னாட்டளவிலான போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்தனர். தொடர்ந்து இந்த ஆண்டும் 2019 கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த தி.சோபிகா மற்றும் ந.வினுசா ஆகிய வீராங்களைகள் சிறிலங்கா தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு இந்தியாவில் இடம்பெற்ற பன்னாட்டளவிலான போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

Taekwondo மற்றும் Roll Ball போன்ற விளையாட்டுகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல வடமாகாணத்திற்கே புதிதான ஒரு விளையாட்டாகக் காணப்பட்ட போதிலும் இவ் விளையாட்டுகளில் சிறிலங்காவின் தேசிய மட்டத்திலான போட்டிகளில் தமது வெற்றிகளை பதிவு செய்த கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு உரிய கௌரவிப்பு வழங்கப்படவில்லை.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற சிறிலங்காவின் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் சிறிலங்கா தேசிய மட்டத்திலான குயு ஊரி போட்டியில் குழுநிலை 16ற்குள் முன்னேறிய இரண்டு வடமாகாண அணிகளில் கிளிநொச்சி மாவட்ட உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் அணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சிறிலங்கா தேசிய மட்டத்திலான குயு ஊரி போட்டித் தொடரில் குழு 16ற்குள் கிளிநொச்சி மாவட்ட அணியொன்று முன்னேறியது இதுவே முதற் தடவையாகும்.

அது தவிர கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வடகிழக்கு உதைபந்தாட்ட தொடரில் கிளிநொச்சி அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்ததும் இந்த தொடரில் கிளிநொச்சியைச் சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட வீரர்கள் கழகங்களால் வாங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த தேனுசன் தனது 16 ஆவது அகவையில் விளையாடியமையும் இந்த உதைபந்தாட்ட தொடரில் பங்குபற்றிய மிகக் குறைந்த அகவையுடைய வீரர் என்ற பெருமையும் கிளிநொச்சி மாவட்டத்தைத் சேர்ந்த தேனுசன் பெற்றுள்ளார். இருப்பினும் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட வீரர்களுக்கான களம் இன்னமும் வீரியமாக திறக்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்ட பயிற்சியாளர்கள்

வளங்கள் மிகவும் குறைந்த நிலையிலும் வீரர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி அவர்களை சிறிலங்காவின் தேசிய மட்டத்திலான போட்டிகளுக்கு அணியப்படுத்துவது என்பது இலகுவானதல்ல. அந்த வகையில் வீர வீராங்கனைகளுக்கு தன்னம்பிக்கையும் உள மற்றும் உடல் வலுவை மேம்படுத்தி அணியப்படுத்தலை மேற்கொண்டுவரும் பயிற்சியாளர்கள் போற்றப்பட வேண்டியர்கள். ஆனால் விளையாட்டு வீர வீராங்கனைகள் எதிர்கொள்ளும் அதே புறக்கணிப்புகளை கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் எதிர்கொள்வது சாபக்கேடானதே.

நிதியுதவிகள் (Sponsorship) கிடைக்காமல் துவண்டு போகும் கிளிநொச்சி வீர வீராங்கனைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பலதரப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாகாண மட்டத்திலும், சிறிலங்கா தேசிய மட்டத்திலும் வீர வீராங்கனைகள் பங்குபற்றிவரும் நிலையில் அவர்களுக்கான உரிய ஏற்புகளும் பாராட்டுகளும் இது வரை வழங்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து விளையாட்டுகளில் சாதனை புரிவோர்களுக்கான சரியான பொருண்மிய உதவிகளும், பயிற்சிக்கான கருவிகளுக்கான உதவிகளும், துறைசார் நிபுணர்களின் பயிற்சிகளும், ஊட்டங்கள் தொடர்பான வழிகாட்டல்களும் கிடைப்பதில்லை.

கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகள் மாகாண, சிறிலங்கா தேசிய அரங்கு மற்றும் பன்னாட்டு விளையாட்டு அரங்குகளில் வெற்றியீட்டித் திரும்பியதும் அவர்களை வாழ்த்துதல் என்ற பெயரில் மிகக் கேவலமான அரசியலை பிரதேச ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிறிலங்கா Roll Ball தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு பன்னாட்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றிகளைப் பெற்றுத் திரும்பிய வீராங்கனைகளை வாழ்த்துவதாக தெரிவித்து தனது சிறிதரன்- சந்திரகுமார் வாக்கு அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக அந்த வீராங்கனைகளைப் பயன்படுத்திச் செய்தி வெளியிட்ட கிளிநொச்சி மாவட்ட பிரதேச ஊடகவியலாளர் ஒருவர், குறிப்பிட்ட தனது முகநூல் பதிவில் கிளிநொச்சிக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளின் புகைப்படத்தினையும் இணைத்திருந்த மோசமான செயலினால் விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்சியடைந்தது மட்டுமல்லாது இனிவரும் காலங்களில் வீர வீராங்கனைகள் பொருண்மிய உதவிகளைக் கேட்டு தமது அரசியல்வாதிகளிடம் செல்லுவதற்கு அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொருண்மிய உதவிகளின்றியும், சரியான பயிற்சித் தளங்களின்றியும், பயிற்றுவிப்பாளர்களின் தன்னலமற்ற வழிகாட்டலினால் கடுமையான பயிற்சிகளைப் பெற்று பெற்றோர்கள், பாடசாலைகள் மற்றும் ஊர் மக்களின் உதவிகளுடன் தடைகளைக் கடந்து வெளியில் வரும் வீர வீராங்கனைகள் அவர்களுக்குச் சரியான நிதியுதவிகள் (Sponsorship) கிடைக்காத காரணத்தினால் தான் அரசியல்வாதிகளின் உதவிகளை நாடுகின்றனர். இப்படியிருக்க தங்களிடம் உதவி பெற்ற விளையாட்டு வீரர்களை குறிப்பிட்ட அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான அரசியல் மோதல்களுக்கு, ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் காணப்படக் கூடிய தங்களின் பரப்புரையாளர்களின் மூலம் பகடைக்காயாக்குகின்றனர்.

கிளிநொச்சியில் அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்றால் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தங்களை குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் சண்டைகளின் பகடைக்காயாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் திறமையான வீர வீராங்கனைகள் வீடுகளில் முடங்கிக் கிடக்க, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவம் அவர்களை தங்கள் படையணிகளுக்கு உள்வாங்கி அவர்களுக்கு மாதாந்த சம்பளமும் விளையாட்டு பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கின்றனர். குறிப்பிட்ட விளையாட்டுக்களுக்கான பயிற்சியினைப் பெறுவதற்குரிய வசதிகளோ பொருண்மிய பலமோ இல்லாத வீர வீராங்கனைகள் அரசியல்வாதிகளிடம் இருந்து உதவிகளைப் பெற்று பின்னர் பிரதேச ஊடகவியலாளர்களால் பொது வெளியில் அசிங்கப்படுவதிலும் பார்க்க இராணுவத்தின் உதவிகள் பருவாயில்வை என்று சொல்லுமளவிற்கு நிலைமை மிக மோசமானதாக மாறியுள்ளது.  இது கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டுத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதோடு எதிர்காலத்தில் எவ்வாறான சிக்கல்களை கிளிநொச்சி விளையாட்டு வீர வீராங்கனைகள் எதிர்கொள்ளவிருக்கின்றனர் என்பதையும் ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

தவிர, கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டுத்துறைகளுக்குள் இருப்பவர்களின் துறைசார் நிபுணத்துவமும் (Expertise), திறமையான தொடர்பாடல் முறையும்  (Effective communication skills) கேள்விக்குட்படுத்த வேண்டிய நிலையிலேயே காணப்படுகிறது.

கிளிநொச்சிக்கான உடனடித் தேவை

கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டுத்துறை உடனடியாக சரியான செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவருவதோடு தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு முறையான மேலாண்மைப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். தவிர கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாகாண மற்றும் சிறிலங்கா தேசிய மட்டங்களிலான போட்டிகளில் பங்குபற்றும் வீர வீராங்கனைகளுக்கான  அனைத்து வசதிகளையும் உதவிகளையும் பெற்றுக் கொடுக்க கூடிய ஆளுமையுள்ள, விளையாட்டை நேசிக்க கூடிய ஆளுமைகளை உள்ளடக்கிய அரசியல் சார்பற்ற குழுவொன்று உருவாக்கப்படல் வேண்டும்.

திமிலதேவன்

22-03-2019

 5,992 total views,  3 views today

(Visited 10 times, 1 visits today)